கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு
விட்டுக்கொடுத்து வெற்றியைப் பெறுவோம்
நாட்டிலேயே மிகவும் மூத்த அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ். இப்போது இருப்பவற்றில் பெரிய கட்சி பாரதிய ஜனதா – அத்துடன் மிகப் பெரிய பணக்காரக் கட்சியும்கூட. கடந்த (2019) மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் வென்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்தே, பதிவான மொத்த வாக்குகளில் 37.4%தான் பெற்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்கள் 19.5% வாக்குகள் பெற்றனர். பிராந்தியக் கட்சிகளும், மாநிலங்களுக்குள்ளே மட்டும் செயல்படும் அரசியல் கட்சிகளும் பல இருக்கின்றன, அவை மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்புதுடன் மாநிலங்களில் ஆளுங்கட்சியாகவும் திகழ்கின்றன.
இந்திய அரசியல் வரைபடம் பல வண்ணங்களால் ஆன கண்கவர் சித்திரம். பாஜகவின் லட்சியம் – மறைவானது ஒன்றுமல்ல – நாடு முழுவதும் ஒரே வண்ணத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது. பாரதிய ஜனதாவை எதிர்க்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் இலக்கும் ஒன்றிய அரசில் ஆளும் பாஜகவை அங்கிருந்து அகற்றிவிட்டு, அனைத்துவித சுதந்திரங்களையும் காக்கிற, முற்போக்கான பொருளாதார அணுகுமுறையுள்ள, அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் நல்லாட்சியைத் தர வேண்டும் என்பதே.
கடுமையான போட்டி
இதில் 2014 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு அடுத்துவந்த தேர்தல்கள் அனைத்திலும் பாரதிய ஜனதா தன்னுடைய கட்சியின் பெயரைச் சொல்லியோ, தேர்தல் அறிக்கையைச் சுட்டிக்காட்டியோ வாக்குகளைக் கோராமல் நரேந்திர மோடியின் பெயரைச் சொல்லியே வாக்கு கேட்டுவருகிறது. கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு மே 10இல் நடைபெறவிருக்கிறது, அந்த மாநிலத்தில்கூட, ‘கர்நாடகத்தை மோடியிடம் ஒப்படையுங்கள்’ என்றுதான் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பாஜகவைப் பொருத்தவரை ஒவ்வொரு தொகுதியிலுமே போட்டியிடுவது மோடிதான்; மோடிதான் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்றாலே போதும் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நம்புகிறது.
இன்றைய சூழலில் எதிர்க்கட்சிகளைப் பொருத்தவரை, அவர்கள் அனைவரும் விரும்பி ஆதரிக்கும்படியான பொதுவான தலைவர் / (பிரதமர் பதவிக்கான) வேட்பாளர் இல்லாததைப் போலத் தோன்றுகிறது. இந்த நிலை மாறலாம், ஆனால் நாம் இப்போதைய நிலையைத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது; வெளிப்படையாகத் தெரியும் இந்தப் பின்னடைவைத் தவிர எதிர்க்கட்சிகளுக்கு ஏராளமான வலுவான அம்சங்களும், சாதகங்களும்தான் வெற்றியை நோக்கி இட்டுச் செல்லக் காத்திருக்கின்றன. இந்த வலிமையான அம்சங்களை ஒன்று திரட்டி எப்படி வெற்றிபெறலாம் என்பதை ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
கர்நாடகம்: இந்துத்துவத்தின் தென்னக ஆய்வுக் கூடம்
04 Apr 2023
மிகத் தீவிரமான – ஆழமான யோசனைகளை விட்டுவிடுவோம்; எதிர்க்கட்சிகள் அனைத்துமே தத்தமது அரசியல் கட்சிகளைக் கலைத்துவிட்டு, ஒரே அரசியல் கட்சியாக – 1977இல் ‘ஜனதா’ உருவானதைப் போல – உருவெடுக்க முடியாது. இப்போதுள்ள எந்த அரசியல் கட்சியும், தனக்கு செல்வாக்குள்ள மாநிலங்களில் எல்லா இடங்களையும் பிற கட்சிக்கு விட்டுத்தராது. ‘வாக்குகள் சிதற வேண்டாம் – யோசித்துச் செயல்படுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தும்கூட, உத்தராகண்ட் (2022), கர்நாடகம் (2023) ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி களத்தில் நின்றது – நிற்கிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி கோவா மாநிலத்தில் (2022) போட்டியிட்டது. பாரதிய ஜனதாவுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே அணியில் இணைவது விரும்பத்தக்கது என்றாலும் அது நடைபெறும் என்பது நிச்சயமில்லை.
ஒரே மேடையில் எதிர்க்கட்சிகள் (ஓயுபி)
ஒரே கட்சியாக இணைவதற்கு மாற்று, ஒரே மேடையில் அல்லது அணியில் எல்லா எதிர்க்கட்சிகளும் இடம்பெற்று தேர்தலைச் சந்திப்பது (ஓயுபி). இந்த ஏற்பாட்டில் ஒவ்வொரு கட்சியும் தனக்குச் செல்வாக்குள்ள மாநிலத்தில் பிற கட்சிகளுக்கும் இடம் அளிக்கும், பிற மாநிலங்களில் தனக்கும் சில இடங்களைக் கேட்டுப் பெறும். இந்த திட்டத்தை விளக்க, நான்கு தனித் தனி வகைகளாக மாநிலங்களையும் மத்திய ஆட்சிப் பகுதிகளையும் பிரித்துக்கொள்வோம். அந்தந்த மாநிலம் அல்லது ஆட்சிப் பகுதியில் உள்ள மக்களவைத் தொகுதியின் எண்ணிக்கையை ஒரு வரிசையில் எழுதுவோம். அந்தந்த கட்சிகளின் வலிமைக்கேற்ப அவை வெற்றிபெறக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையை அவற்றிலிருந்து அறிவோம். எல்லா அரசியல் கட்சிகளையும்விட, பாஜக செல்வாக்கு மிக்க கட்சி என்ற உண்மையை ஏற்போம் - காரணம் மக்களவையில் அதற்கு 302 உறுப்பினர்கள் உள்ளனர்.
அட்டவணை:
காங்கிரஸ் ஆதிக்கம் | காங்கிரஸ் அல்லாத கட்சி ஆதிக்கம் | பாஜக தோழமைக் கட்சி ஆதிக்கம் | யாருக்கு ஆதிக்கம் என்பதில் தெளிவில்லை |
மத்திய பிரதேசம் 29 | உத்தர பிரதேசம் 80 | ஆந்திர பிரதேசம் 25 | மகாராஷ்டிரம் 48 |
கர்நாடகம் 28 | மேற்கு வங்கம் 42 | ஒடிஷா 21 | திரிபுரா 2 |
குஜராத் 26 | பிஹார் 40 | மணிப்பூர் 2 | ஜம்மு காஷ்மீரம் 6 |
ராஜஸ்தான் 25 | தமிழ்நாடு 39 | மேகாலயம் 2 | |
கேரளம் 20 | தெலங்கானா 17 | மிஜோரம் 1 | |
அசாம் 14 | தில்லி 7 | நாகாலாந்து 1 | |
ஜார்கண்ட் 14 | சிக்கிம் 1 | ||
சத்தீஸ்கர் 11 | |||
புதுச்சேரி 1 | |||
லட்சத்தீவு 1 | |||
டாமன் டையூ 1 | |||
தாத்ரா நாகர்ஹவேலி 1 | |||
சண்டீகர் 1 | |||
அந்தமான் நிகோபார் 1 | |||
கோவா 2 | |||
அருணாசல பிரதேசம் 2 | |||
இமாசல பிரதேசம் 4 | |||
உத்தராகண்ட் 5 | |||
ஹரியாணா 10 | |||
பஞ்சாப் 13 | |||
மொத்தம் 209 | 225 | 53 | 56 |
என்னுடைய கருத்துப்படி, எதிர்க்கட்சிகள் அனைத்தும் இடம்பெறும் ஒரே அணியை உருவாக்கினால், எதிர்க்கட்சிகளுக்குள் மிகப் பெரிய கட்சி என்ற வகையில் காங்கிரஸ் கட்சியால் 209 மக்களவைத் தொகுதிகளில் பாஜகவை எதிர்த்துப் போட்டியிட முடியும். சமாஜ்வாதி (எஸ்பி), திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), பாரதிய ராஷ்ட்ரீய சமிதி (பிஆர்எஸ்), ஆம் ஆத்மி கட்சி (ஆஆக) ஆகியவை அவரவருக்குள்ள செல்வாக்கின்படி 225 தொகுதிகளில் பாஜகவை எதிர்க்கும் முன்னணிக் கட்சிகளாக இருக்க முடியும். மூன்று மாநிலங்களில் இரண்டு அல்லது மூன்று பெரிய கட்சிகள் பாஜகவை எதிர்க்கும் ஆற்றல் உள்ளவையாக இருக்கின்றன. ஏழு மாநிலங்களில் 53 இடங்களில் வெற்றிபெறுவது, பாஜகவுக்கு மறைமுகமான தோழமைக் கட்சியாகக்கூட இருக்க முடியும்.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
மக்கள் மீது திணிக்கப்படும் மௌனத்தால் தீராது பிரச்சினைகள்
13 Apr 2023
முக்கியமான விதி
அடுத்த நடவடிக்கை: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அணியில் உள்ள எல்லா கட்சிகளும், மொத்தமுள்ள தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளில், பிரதான எதிர்க்கட்சி போட்டியிடட்டும் என்று விருப்பத்துடன் விட்டுக்கொடுக்க வேண்டும்; இந்தத் தொகுதியில் இவர் நிச்சயம் வெற்றிபெறுவார் என்பது தெரிந்தால் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரைத் தனக்குச் செல்வாக்குள்ள மாநிலத் தொகுதியிலிருந்து போட்டியிட முன்னணி எதிர்க்கட்சியும் அனுமதிக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது முன்னணி எதிர்க்கட்சி தன்னுடைய கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே தொகுதியை மறுக்கும் சூழலும் ஏற்படும்.
இங்கே இலக்கு ஒவ்வொரு கட்சியும் அதிகபட்சம் எத்தனை தொகுதிகளில் வெல்ல முடியும் என்பதல்ல – அதிகபட்ச தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களைத் தோற்கடித்துவிட வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளுமே இந்த விஷயத்தில் விட்டுக்கொடுத்துத்தான் வெற்றியை உறுதிசெய்ய வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளுமே பணிந்துதான் வெற்றியைப் பெற்றாக வேண்டும்.
இங்கே அரசியல் கணக்கு மிகவும் எளிமையானது. பாஜகவால் 150 மக்களவைத் தொகுதிகளை வெல்ல முடியும். எதிர்க்கட்சிகளில் காங்கிரஸால் மட்டும் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல முடியும். பிற எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகவே அரசியல் அலை வீசினாலும் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 40 தொகுதிகளில்தான் வெற்றிபெற முடியும், அப்படி அவையனைத்தும் சேர்ந்து 150 தொகுதிகளைக் கைப்பற்றவும் முடியும்; தோற்கடிக்கவே முடியாத கட்சியல்ல பாரதிய ஜனதா. நான் சுட்டிக்காட்டி இருக்கும் திட்டத்தை எதிர்க்கட்சிகள் விரும்பி ஏற்றுச் செயல்படுவது வெற்றிக்கு உத்தரவாதமானது.
தொடர்புடைய கட்டுரைகள்
மக்கள் மீது திணிக்கப்படும் மௌனத்தால் தீராது பிரச்சினைகள்
கர்நாடகம்: இந்துத்துவத்தின் தென்னக ஆய்வுக் கூடம்
எதிர்க்கட்சிகளின் இடத்தை வலுப்படுத்த ஒரு யோசனை
தமிழில்: வ.ரங்காசாரி
3
1
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Thiruvasagam 2 years ago
ப.சி. பழுத்த அரசியல்வாதி என்பதை உணர்த்திவிட்டார்! ஆனால் இப்படி ஒரு ஏற்பாடு அமைவதை பாஜக அனுமதிக்காது என்பதே நிதர்சனம்…!
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Vidhya sankari 2 years ago
அனைத்து மாநில, தேசிய கட்சிகளும் தன்னலம் கருதாது இணைந்து பாஜக வை ஆட்சியதிகாரத்தில் இருந்து அகற்றி இந்தியாவைக் காக்க வேண்டும் 🙏புண்ணியமாகப் போகும்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.