பேட்டி, அரசியல், ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு

வேலைதான் என் வழிபாடு: அண்ணா பேட்டி

15 Sep 2023, 5:00 am
0

மிழகத்தின் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அந்நாட்களில் பம்பாயிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘சங்கர்’ஸ் வீக்லி’க்கு அண்ணா அளித்த பேட்டியின் சுருக்கமான வடிவம் இது. அந்த நாட்களில் ‘இந்த வார மனிதர்’ என்ற தலைப்பில் வாரம் ஒரு ஆளுமையைப் பேட்டி கண்டுவந்த ‘சங்கர்’ஸ் வீக்லி’ 5.3.1967 தேதிய இதழில் வெளியிட்ட இந்தப் பேட்டியில், அரசியல் பார்வைகளைத் தாண்டி அண்ணாவின் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் தொடர்பிலும் கேள்வி எழுப்பியிருக்கிறார் செய்தியாளர். எல்லா விஷயங்களையும்போல தனிப்பட்ட விஷயங்களையும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் அண்ணா.   

முதல் முறையாக தென்னிந்தியா வேறொரு அரசியல் அடையாளத்தை முன்னிறுத்துகிறது. தமிழ்நாட்டு மக்கள் சிலோன், பர்மா, இந்தோனேசியா, மலேசியா நாடுகளுடன் நெருங்கிய உறவுள்ளவர்கள். இந்த வாய்ப்பை மத்திய அரசு சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் தெற்காசியாவில் நட்புறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வது எளிதாக இருக்கும். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தீவிரம் காங்கிரஸைவிட திமுகவுக்கு அதிகமாகவே இருப்பதை ஜீரணிப்பது காங்கிரஸுக்கு சிரமமாகவே இருக்கும். திமுகவின் தலைசிறந்த பேச்சாளர்களில் அண்ணாதுரை முதன்மையானவர். ஆற்றொழுக்கான அவருடைய மொழிநடை லட்சக்கணக்கானவர்களைத் திமுக பால் ஈர்த்திருக்கிறது.

ஆட்சியதிகாரத்துக்குப் பேச்சுத்திறமை மட்டும் போதாது. பேசியபடி நடந்துகொள்ளாவிட்டால் அதுவே பெரிய குறையாகிவிடும். மதறாஸ் மாநில வளர்ச்சிக்காக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு திட்டமிட்டுச் செயல்படும் கொள்கையை உருவாக்குவது புதிய அரசுக்கு உரைகல்லாக இருக்கும்; அது அண்ணாதுரையின் நிர்வாகத் திறமைக்கும் உரைகல்லாகத் திகழும். அவரால் மட்டுமே திமுகவுக்கு அறிவார்த்தமாகவும் சித்தாந்தரீதியாகவும் கொள்கைகளையும் வழிகாட்டுதல்களையும் அளிக்க முடியும். “வாழ்க்கையின் கடமை என்ன என்று நன்கு புரிந்துவைத்திருப்பவர்கள் சமூக ஒத்துழைப்பில் இறங்க வறுமை ஒரு தடையல்ல” என்று அண்ணாதுரை ஒரு முறை கூறியிருக்கிறார். “ஏழ்மை இருந்தாலும்கூட அவர்கள் எந்தவிதச் சலிப்பும் இல்லாமல் சமூக சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். உற்சாகம் இழக்க வேண்டாம், ஊக்கத்தைக் கைவிட வேண்டாம், உங்களுடைய இடர்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் உங்களால் முடிந்ததைக் கட்சிக்குக் கொடுங்கள்… இந்த நிலை நீங்க நடவடிக்கைகளை எடுப்போம்” என்று கூறியிருக்கிறார். “இது உங்களுடைய கட்சி, நான் உங்களில் ஒருவன்” என்று தொண்டர்களுக்கு அடிக்கடி நினைவுபடுத்திவருகிறார்.

கட்சித் தொண்டர்கள் அனைவராலும் விரும்பப்படுகிறவர், அவருக்கு இணையான இன்னொருவர் கட்சியில் இல்லை என்பது அவருக்குச் சாதகமான ஒரு அம்சம். ஆயிரக்கணக்கில் கூடும் இளைஞர்கள் அவருடைய உரையைக் கேட்டு பொங்கி ஆர்ப்பரிக்கிறார்கள். 1965ல் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் ஜப்பானுக்கும் நீண்ட பயணத்தை மேற்கொண்டார் அண்ணா. இந்திய மக்களிடையேயும் புரட்சிகரமான மாறுதல்களைச் செய்ய ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையோடு நாடு திரும்பினார். கடுமையான உழைப்பின் மூலம் அந்த மாற்றங்களை இங்கே கொண்டுவந்துவிட முடியும் அதற்கு கட்டுப்பாடும் விழிப்புணர்வும் அவசியம் என்று அவர் கருதுகிறார்.

உங்களை நாத்திகர் என்கிறார்கள்; இதற்கு உங்கள் பதில் என்ன?

அப்படியில்லை. எனக்கு ‘உண்மையான நம்பிக்கை’ உண்டு. என்னுடைய வேலையையும் சேவையையுமே வழிபாடாகக் கருதுகிறேன். எம் மக்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதே எனது நோக்கம். அதேசமயம், அவர்கள் ஆத்திகர்கள் என்ற போர்வையில் போலி வேடதாரிகளாகிவிடக் கூடாது என்ற கவலையும் உண்டு.

அப்படியென்றால் தமிழ்நாட்டில் உள்ள 25,000க்கும் மேற்பட்ட கோயில்களை நன்றாகப் பராமரிப்பீர்களா? ஆத்திகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பீர்களா?

என்னுடைய அரசு மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை அளிக்கும். ஆலய வாயில்களில் சோதனைச் சாவடிகள் இருக்காது என்ற உறுதியை அளிக்கட்டுமா?  அறநிலையத் துறைக்குப் பொறுப்பாக கேபினட் அமைச்சர் இருக்கிறார். அவர் ஆத்திகர்களின் உணர்வுகளை மதித்து நடப்பார். அனைத்து மத அமைப்புகளின் மடாலயங்களின் நலன்களையும் தேவைகளையும் அவர் கவனித்துக்கொள்வார். ‘சொர்க்கவாசல்’ என்ற தமிழ் திரைப்படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறேன். அதில் ஆத்திகம், நாத்திகம் பற்றி விரிவாக விவாதித்திருக்கிறேன். ஏராளமான கடவுள்கள் மீதும் சடங்குகள் மீதும் நம்பிக்கை வைப்பது தேவையில்லை என நான் நியாயம் என்று நம்பும் முடிவைக் கூறியிருக்கிறேன். உண்மையான கடவுள் பக்தி என்பது மனிதர்கள் மீது சக மனிதர்கள் மீது வைக்கும் நம்பிக்கைதான். கடவுள் பெயரைச் சொல்லி போலி அமைப்புகளும் மடங்களும் உருவாவதைக் கண்டித்திருக்கிறேன். நல்ல மத அமைப்புகளையும் அல்லாதனவற்றையும் ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். ஒரு மத அமைப்பின் தலைவரைச் சுயநலவாதியாகவும் பேராசை பிடித்தவராகவும் காட்டியிருக்கிறேன். இன்னொருவரை எளிமையானவராக, நேர்மையாளராக, கடவுள் பக்தி உள்ளவராகச் சித்தரித்திருக்கிறேன்.

நான் நாத்திகத்தைப் பிரச்சாரம் செய்வதாக தணிக்கை அதிகாரிகள் நினைத்ததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது காமராஜர் முதலமைச்சராக இருந்தார். அவரைத் திரைப்படம் பார்க்க அழைத்தேன். படம் அவருக்குப் பிடித்திருந்தது. ‘தணிக்கை அதிகாரிகளின் ஆட்சேபணைகள் ஏன் என்று புரியவில்லையே?’ என்று தயக்கமின்றித் தெரிவித்தார். நான் பகுத்தறிவாளன் என்பது உண்மையே. பகுத்தறிவற்ற சிந்தனைகளும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளும் மக்களிடமிருந்து மறைய வேண்டும் என்பதே என் லட்சியம். நல்ல நம்பிக்கையும் உண்மையான கடவுள் நம்பிக்கையும் இருப்பது நல்லது. அது அவர்களை பிற மனிதர்களுக்குத் தாங்கள் செய்ய வேண்டியது என்ன, தங்களுடைய பொறுப்புகள் என்ன என்பதை உணரவைக்கும். அவர்கள் மேலும் பண்பட உதவும்.

எத்தனைத் திரைப்படங்களுக்கு கதை-வசனம் எழுதியிருக்கிறீர்கள், ஏன் எழுதினீர்கள்?

மொத்தமாக ஆறேழு படங்களுக்கு மட்டுமே எழுதியிருக்கிறேன். மக்களுக்கு அறிவைப் புகட்ட வேண்டும் என்பதில் பேரார்வம் இருந்ததால் எழுதினேன். மக்களுக்கு எதையும் சொல்ல, திரைத் துறை நல்ல ஊடகம். மக்களுக்கு சேவை செய்வதில் அது வலுவான கருவி என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மாநில அரசின் செய்தித் துறையை வலுப்படுத்த பல திட்டங்கள் வைத்திருக்கிறேன். கடின உழைப்பு, நேர்மை ஆகியவை வேண்டும் என்ற லட்சியத்தை மக்களிடையே வேகமாகப் பரப்ப திரைத் துறை உதவும். ஓரிடத்தில் கள்ளச்சந்தை ஏற்பட்டால் அது இன்னொரு இடத்திலும் கள்ளச்சந்தையை ஏற்படுத்தும், அப்படிச் சம்பாதிக்கும் பணம், சம்பாதிப்பவரின் வாழ்க்கையையும், சமூகத்தையும் அழித்துவிடும் என்ற கருத்தை மக்களிடம் பரப்ப திரைப்படம்தான் நல்ல ஊடகம் என்று நம்பினேன்.

சமூகத்தில் நல்ல பாதிப்புகளை ஏற்படுத்தும் திரைப்படங்களை மட்டும்தான் தர நினைத்தேன். மதுவிலக்கு, கூட்டுறவு, விவசாயப் பண்ணை, ஜமீன்தாரி முறை ஒழிப்பு ஆகியவற்றை மக்களிடையே பரப்ப எடுக்கப்பட்டதுதான் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த ‘நல்ல தம்பி’. பணக்காரருக்கு ஏற்பட்ட பேராசையால் இறுதியில் அவருக்குத் துயரமே நேரிட்டது என்பதைக் கூறுவதுதான் ‘வேலைக்காரி’. சோஷலிசத்தின் அடிப்படை அம்சங்களைக் கூற அதில் முயற்சித்திருப்பேன்.  நம்முடைய உழைப்பைத்தான் நம்ப வேண்டும், நமக்குத் தெரியாதவற்றின் மீது நம்பிக்கை வைக்கக்கூடாது என்று அதில் கூறப்பட்டிருக்கும்.

பொதுக்கூட்டங்களில் ஒரே நாள் மாலையில் வெவ்வேறு தலைப்புகளில் உங்களால் பேச முடிகிறது என்று புகழ் பெற்றிருக்கிறீர்கள். எப்படித் தயார் செய்துகொள்கிறீர்கள்?

ஒருவர் நல்ல எழுத்தாளராக இருந்தால் முன்கூட்டியே பேச்சைத் தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கட்டுரையில் எழுதிய ஒரு பாராவே ஒரு மணி நேரம் பேசப் போதுமானது! மக்களிடம் சொல்வதற்கு எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன, பேசப்பேச, சொல்வதற்கான கருத்துகள் எனக்குள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

பொது மேடையில் எப்போதிருந்து பேச ஆரம்பித்தீர்கள்?

உயர்நிலைப் பள்ளிக்கூட படிப்பு முடியும் வரை ஒரு முறைகூடப் பேசியதில்லை. கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் பேசத் தொடங்கினேன்.

பெரிய கூட்டங்களுக்கும் சிறிய கூட்டங்களுக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் தருவீர்களா?

ஆமாம், ஆனால் பேச வேண்டிய பொருளும் முறையும் சற்று மாறுபடும். எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும் கேட்போருக்கு உரிய மரியாதை தருவேன். உதாரணத்துக்கு, பணமதிப்புநீக்கம் குறித்து கிராமவாசிகளிடம் பேச மாட்டேன். நான் பேசப்போகும் இடங்களில் உள்ளவர்கள் எதைக் கேட்க ஆர்வமாக இருப்பார்களோ அதையே பேசுவேன்.

இதையும் வாசியுங்கள்... 30 நிமிட வாசிப்பு

இந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம்

சி.என்.அண்ணாதுரை 12 Apr 2022

சோதிடர்களுடன் ஆலோசனை கலந்தது உண்டா அல்லது உங்கள் சார்பில் யாரையாவது அனுமதித்தது உண்டா? இது தொடர்பாக உங்களிடம் பேச யாரையாவது அனுமதிப்பீர்களா?

நிச்சயமாக மாட்டேன், எப்போதும் கிடையாது.

உங்களைக் கவர்ந்த ஆளுமைகளைப் பற்றிக் கூறுங்களேன்?

கல்லூரி நாள்களில் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், பெரியார் ஈ.வெ.ராமசாமி, ராஜாஜி. ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரைத் தனிப்பட்ட முறையில் எனக்குப் பழக்கம் இல்லையென்றாலும் அவர்களைப் பற்றி கேள்விப்பட்ட தகவல்கள் மதிப்புகொள்ளச் செய்கின்றன. கிராமப்புற பிரச்சினைகளைப் பற்றி தனியாக விவாதித்தபோது வினோபா பாவேயும் என்னைக் கவர்ந்தார். மாநிலங்களவையில் சக உறுப்பினராக இருந்த கே.சந்தானம் தேசியப் பிரச்சினைகளை எந்தவித மனத் தடையும் இல்லாமல் என்னுடன் விவாதிக்க விரும்புவதால் அவரும் என்னுடைய கவனத்தை ஈர்த்தவராக இருக்கிறார்.

உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் யார்?

சாமர்செட் மாம், பெர்னார்ட் ஷா, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், ஹெச்.ஜி.வெல்ஸ். பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற எனக்குப் பாடப் புத்தகமே ஆல்பிரட் மார்ஷல் எழுதியதுதான்.

திரைக்கதை வசனம் எழுத எப்போது தொடங்கினீர்கள்?

முதலில் என்னைக் கவர்ந்தது நாடகம்தான். எனக்கு 40 வயதாக இருந்தபோது, அதாவது 18 ஆண்டுகளுக்கு முன் நானே எழுதி நடித்தேன். பிறகு திரைப்படங்களுக்கு வசனம் எழுதத் தொடங்கினேன்.

சீட்டு விளையாடுவதில் உங்களுக்கு விருப்பம் என்று கேள்விப்பட்டோமே?

ஆமாம், ஒரு மாற்றத்துக்காக எப்போதாவது விளையாடுவேன், அதுவும் மிகச் சிலருடன் மட்டுமே. கடந்த மூன்று ஆண்டுகளாக விளையாடவே இல்லை.

நீங்கள் சைவம் சாப்பிடுபவரா, புகை பிடிக்காதவரா, என்னென்ன பழக்கங்கள் உண்டு?

எங்கள் குடும்பமே அசைவம் சாப்பிடுவதுதான். இளம் வயதிலேயே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். இது 15 ஆண்டுகள் தொடர்ந்தது. அசைவத்தை விட்டு சைவத்துக்கு மாறியதற்காகப் பரிசுகள்கூட வாங்கியிருக்கிறேன். தற்செயலாக பல ஆண்டுகளுக்கு முன் மீண்டும் அசைவத்துக்குத் திரும்பிவிட்டேன். பெரியாரைச் சந்திப்பதற்காக ரயிலில் ஹரித்வார் சென்றுகொண்டிருந்தேன். பலார்சா ரயில் நிலையத்தில் அரிசி சாதமும் காய்கறியும் கேட்டேன். அரிசி சாதமும், கறியும் வாங்கிவந்துவிட்டார்கள். பசியாக இருந்ததால் சாப்பிட்டுவிட்டேன். பிறகு அசைவத்திலேயே தொடர்ந்தேன். நான் மது அருந்துவதில்லை. புகையும் பிடிக்க மாட்டேன். புகையிலை பிடிக்காது. ஆனால், வெற்றிலையை விரும்பிப் போட்டுக்கொள்வேன். மூக்குப்பொடி போடுவது எனது நீண்ட நாள் வழக்கம்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

பொங்கலுக்கு ஒப்பான நாள் உலகில் ஏது?

சி.என்.அண்ணாதுரை 14 Jan 2022

இசை, நாட்டியம், நாடகங்களில் ஆர்வம் உண்டா?

ஆம், நிறைய.

எப்போதிலிருந்து எழுதத் தொடங்கினீர்கள்?

பள்ளிக்கூட நாள்களிலிருந்து.

சொந்தச் செலவுகளுக்காக வேலைக்குப் போயிருக்கிறீர்களா?

படிப்பு முடிந்ததும் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றினேன். ‘வேலைக்குப் போ’ என்று பெற்றோர் சொன்னதால் போனேன். பிறகு அந்த வேலையை விட்டுவிட்டேன். பிறகு தமிழில் வார இதழ் தொடங்கினேன். எனக்குச் சிறிது பணம் கிடைத்தது. அதை என்னைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுத்தேன். கைநீட்டி மற்றவர்களிடம் தர்மமாக வாங்காமல், குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவைகளுக்கு மட்டும் சம்பாதித்தால் போதும் என்று நினைப்பவன் நான். என்னைப் பின்பற்றுகிறவர்களும் நேர்மையாளர்களாகவே இருக்க வேண்டும் என்று சொல்லிவருகிறேன்.

உங்களுடைய குடும்பம் பற்றிச் சொல்லுங்களேன்?

என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரிடமிருந்தும் நான் பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கிற, அதிலும் குறிப்பாக என்னுடைய அன்னை, சித்தி ஆகியோரின் அரவணைப்பு எனக்கு மிகுந்த நிம்மதியையும் நிறைவையும் தருகிறது. பொது வாழ்க்கையில் ஈடுபட்ட என் போன்றவர்கள் சந்திக்கும் பல்வேறு துயரங்களையும் மறக்க அவர்களுடைய அன்பு ஒன்றே காரணமாக இருக்கிறது. எனக்காகப் பல துயரங்களை அவர்கள் ஏற்றிருக்கிறார்கள்.

சென்னை நகரை அழகுபடுத்த வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இருக்கிறது. அதற்கான திட்டங்கள் என்ன?

ஆம், இந்த நோக்கில் நிச்சயம் எல்லா நடவடிக்கைகளையும் எடுப்பேன். உடனடியாக எதையும் கூறும் நிலையில் நானில்லை.

திரையரங்குகளை அரசுடைமையாக்க நீங்கள் விரும்பினீர்கள் என்பது உண்மையா?

இல்லை. நகர மன்றங்களும் உள்ளாட்சி மன்றங்களும் அவற்றின் உரிமையாளர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றுக்கு நிர்வாகச் செலவுக்கு நிறையப் பணம் கிடைக்கும். இதைக்கூட உடனடியாகச் செய்யும் எண்ணமில்லை.

பேருந்துகளை ஏன் அரசுடைமையாக்க விரும்புகிறீர்கள்?

ரயில்வே துறை (மத்திய) அரசு வசம் இருப்பதைப் போல சாலைப் போக்குவரத்தும் மக்களுக்கு உரிமையானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்!

 

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள்!
இந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம்
பொங்கலுக்கு ஒப்பான நாள் உலகில் ஏது?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3

1





தேர்தல் முடிவுகள்தேவதைஓரிறை மதங்கள்இஸம்பணம்திப்பு சுல்தான்சிறுபான்மைச் சமூகத்தவர்மஹாராஷ்டிரம்அரசியல் ஸ்திரமின்மைதைராய்டு குறைவாகச் சுரப்பது ஏன்?ஜனரஞ்சகப் பத்திரிகைமுலாயம் சிங்டி.டி.கோசம்பிமலையாளிகள்காட்டுக்கோழி1963ஒரு ஜனநாயகவாதியின் ஆசைகள்கலைஞர் மு கருணாநிதிநிர்வாகம்கேஜ்ரிவால் கைது: நீதி முறைமைக்கே ஒரு சவால்எழுத்தாளர் கி.ரா.ராஜகோபாலசாமிராஜன் குறை கேள்விக்குப் பதில்அன்ஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்அமைச்சர் ஷாஜி செரியன்தகவல் தொடர்புத் துறைசட்டப்பேரவை தேர்தல்கூட்டத்தொடர்நல்வாழ்வுப் பொருளாதாரம்பரிபாடல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!