காங்கிரஸ் தேய்கிறதா? @ பாஜக எதிரணிக்குத் தலைமை ஏற்கும் வல்லமை காங்கிரஸுக்கு இருக்கிறதா?
"பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அம்ரீந்தர் சிங் விலகல். சித்துவுக்கும் அவருக்கும் மோதல் முற்றுகிறது", "உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜினாமா"... இப்படியான செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வருவதைப் படிக்கும் யாருக்கும் காங்கிரஸுக்கு என்ன ஆனது என்ற கேள்வி எழாமல் போகாது. இப்படித்தானே வங்கத்தில் தேர்தல் சமயத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்பிலான பரபரப்புச் செய்திகள் தொடர்ந்துவந்தன. ஆனால், இப்போது என்ன நடக்கிறது?
ஒரு கட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் அபிமானத்தை, ஒரு தலைவர் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டும் என்றால், தேர்தலுக்கு ஆறு மாதங்கள் இருக்கும்போதே அவர்களைப் பற்றி இப்படியான செய்திகளை வெவ்வேறு வடிவங்களில் மக்களிடம் கொண்டுசெல்வது என்பது இந்திய அரசியலில் ஒரு கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. அதேபோலத்தான் இன்னொரு கட்சித் தலைவரை ஒரு பெரும் பிம்பமாக உயர்த்துவதும்!
2014 மக்களவைத் தேர்தலுக்கு முன் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியைப் பற்றி குஜராத்தின் வளர்ச்சியைப் பற்றி எத்தனை கற்பனைக் கதைகள் வந்தன! இந்திய வரலாற்றில் இதுவரை எந்த மாநிலமும் உருவாக்காத, உருவாக்க இயலாத பொருளாதாரக் கல்விக் கட்டமைப்பை உருவாக்கிய நமது தமிழ்நாட்டின் தலைவர்களே அவற்றையெல்லாம் பார்த்து திகைத்தார்களே!
நாடு நம்பியது. என்ன ஆயிற்று?
இப்போது வெளியாகும் செய்திகளை அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கலகலத்துவிட்டது, காங்கிரஸ் அழிந்துவிட்டது என்பதையெல்லாம் மக்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை. காந்தி - நேரு இவர்கள் பெயரை எப்படி யாராலும் இந்திய அரசியலில் இருந்து புறந்தள்ள முடியாதோ அதுபோல காங்கிரஸ் கட்சியையும் இந்தியர்களிடமிருந்து யாராலும் ஒதுக்கித் தள்ளி கடந்துச் சென்று விட முடியாது. இந்தியா இருக்கும் வரை காங்கிரஸும் இருக்கும்.
உஸ்மான், சென்னை.
கோயங்கா நேர்க்காணல் சொல்லும் செய்தி @ நான் ஒரு தனியன்: ராம்நாத் கோயங்கா பேட்டி
கோயங்கா இந்த நேர்காணலில் சொல்லியிருப்பது பெரும்பாலும் உண்மை என்பது அதை அடுத்து வந்த காலங்கள் உணர்த்தியுள்ளன. ஜனசங்கம் உறுப்பினர்களில் 42 சதவிகிதம் உண்மையான உறுப்பினர்கள் என்று அவர் சொன்னது, மிக விரைவில் ஒன்றிய அரசு அவர்களது கைகளுக்கு வரும் என்று கட்டியம் கூறுவதாகவே அமைந்துள்ளது. தனி ஒரு நபராக மிகப் பெரிய நிறுவனம் ஒன்றைக் கட்டி எழுப்பியதும், நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் எல்லாம் வல்ல திருமதி காந்தி அவர்களின் அரசை எதிர்த்து நின்றதும், இன்றைய ஊடகர்கள் கோயங்கா அவர்களிடம் கற்க வேண்டிய பாடங்களாகும். கோயங்காவின் கண்டுபிடிப்புத்தான் அருண் ஷோரி. இந்த நேர்காணலை இப்போது மொழிபெயர்த்து, ‘அருஞ்சொல்’ செயல்படத் தொடங்கிய முதல் நாளில் பிரசுரித்ததின் மூலம், ஊடகராக வர விரும்புவோருக்கு யார் ஆதர்சமாக இருக்கத் தகுந்தவர் என்பதைச் சுட்டியுள்ளீர்கள்.
பிரபு
அருமையான கட்டுரை @ நீரிழிவு: பெண்கள் ஏன் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
எளிய விளக்கங்களுடன் வெளியாகியுள்ள மருத்துவர் கணேசனின் சர்க்கரைநோய் பற்றிய கட்டுரை அருமை. உணவுப் பழக்கமும் உடற்பயிற்சியும் எவ்வளவு அவசியம் சர்க்கரை நோயாளிகளுக்கு என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார்.
நீலனூர் கே கே தாஸ்
சமூகத்தின் மனநிலையும் மாற வேண்டும் @வன்புணர்வுக் காணொளிகள் மூலம் சம்பாதிக்க நிறுவனங்கள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன?
ஸ்டிங் ஆப்ரேஷன் செய்கிறேன் என்ற பெயரில் ஒருவரின் அறியாமையைப் பயன்படுத்தி, அவருடைய அந்தரங்கத்தில் நுழைந்து, புகழுக்குக் களங்கம் கற்பிக்கும் முயற்சிகளும் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிற குற்றங்களுக்குக் கொஞ்சமும் குறைவானது அல்ல. உண்மையில் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டுவதில் பாலியல் காணொளிகள் எந்த அளவு பங்காற்றுகிறதோ, அதனினும் மேலான காரணியாக அமைந்துவிடுகிறது சமூகத்தின் வசைச்சொல். பாலியல் காணொளிகளைக் கண் கொட்டாமல் பார்க்கும் இதே சமூகம்தான் வசைமாறியையும் வாரி வழங்குகிறது என்றால், முதலில் சமூகத்தின் மனநிலை மாற வேண்டும். அந்த மனநிலை வரும்வரை, பெண்கள் சிறுமிகள் இதுவும் அறியாமையில் செய்துவிட்ட பிழையே எனக் கடந்து அடுத்த கட்டத்துக்கு தன் வாழ்க்கையை நகர்த்திச் செல்ல அவர்களுக்கு ஆலோசனைகள் எல்லாத் தளங்களின் வழியாகவும் வழங்கப்பட வேண்டும். நமது ‘அருஞ்சொல்’லில் கூட தகுந்த நிபுணரைக்கொண்டு தொடர் ஒன்றை வெளியிடலாம்.
சரவணமணிகண்டன்
தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், அதிகாரிகள் - அரசியலர்கள் என்று கொள்கைகளை வகுப்பதில் பங்கு வகிக்கும் பலதுறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’ இதழை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளை aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள் அல்லது கட்டுரைகளின் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள்.
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.