கலை, கவிதை, அரசியல் 5 நிமிட வாசிப்பு

மாமத ராஜா

ஆசை
16 Aug 2023, 5:00 am
0

கொண்டுவர
வேண்டுமென்று
ஆடிய
பள்ளு பாடிய
ஆண்டிகள் பலர்

கொண்டுவந்தும்
மொண்டுகுடிக்காத
ஆண்டிகள் பலர்

கொண்டுவந்ததிலிருந்து
கொஞ்சமாய்க் குடித்துவிட்டுப்
பின்னே வருவோருக்கு
மிச்சம் வைத்துப்போன
ஆண்டிகள் பலர்

கடைசியில் வந்து
கூத்தாடிக் கூத்தாடிப்
போட்டுடைத்ததோ
ஒரு ராஜா

பானையை உடைத்தால்
யானை
என்று
வாக்கு தந்த ராஜா

அவர் உடைத்த
பானையிலிருந்து
வந்த யானையை
அவராலும்
அடக்க முடியவில்லை

வீடுவீடாய்ப்
புகுந்து
பானை உடைக்கிறது
அந்த யானை

உடைத்த பானை
ஒவ்வொன்றிலிருந்தும்
எழுந்தோடுகிறது
ஒரு குட்டி யானை

உடைத்த பானைக்கு
நீதி கேட்டால்
உடைத்த யானையையே
உடனே வழங்குகிறார்
ராஜா

கேட்டால்
பானைநீதி உடைந்துவிடும்
யானைநீதி உலகாளும்
என்கிறார்

‘யானை வளர்ப்போம்
யானை வளர்ப்போம்
பானை உடைப்போம்
பானை உடைப்போம்’
என்று ராஜா
கட்டளையிடும் முன்னே
அரசவைப் புலவர்கள்
பா வடிக்க

ராஜா ஆணையிடும் முன்னே
பானை தேசத்தை
யானை தேசமாக
அமைச்சரெல்லாம் அறிவிக்க

புதிய தேசத்தின்
புதிய சுதந்திர நாளில்
கோட்டை உச்சியில்
கொடியேற்றிவிட்டு
உரையாற்றுகிறார் ராஜா

'என்னருமை யானை தேச மாதாவின்
புத்திரர்களே 
உங்கள் அனைவரையும்
ஒரு ஏழை யானை தேச மாதாவின்
புதல்வன்
வணங்குகிறேன்'
என்று ஆரம்பித்தார்
அது ஒரு சமிக்ஞை

உடனே
திரண்டு வந்த
யானைகளின் உடம்பில்
வளர்க்கும் பிரஜைகள் யாவும் 
பழக்கியபடி
அங்குசத்தால் குத்திவிட
வரலாறு காணாத பிளிறல்
வரலாறு அழிக்கும் பிளிறல்

தொடர்கிறார் ராஜா
'எவ்வளவு தாழ்ந்து கிடந்தோம்
பழைய பானை தேசத்தில்
உலகின் அரசவைகளில்
உலகின் போர்க்களங்களில்
கொண்டுபோய் வைக்க
பானையைத் தவிர
வேறு என்ன இருந்தது
நம்மிடம்

‘ஓட்டைப் பானை
விரிசல் பானை
உடைந்த பானை
உடையும் பானை

‘இப்படித்தானே
கேலிசெய்தது உலகம் நம்மை
இப்படித்தானே
தூக்கிப்போட்டு உடைத்தது
உலகம் நம்மை

‘பானைகளின் தேசத்தில் 
பிறந்ததற்காக
வெட்கித் தலைகுனிந்து
வேதனையுடன்
உறங்காமல்
விழித்துக் கிடந்த நாட்கள்
எத்தனை எத்தனை

'பானைத் தாயின் மகன்கள்
என்று சொல்ல நாம்
கூசிக் குறுகிய நாட்கள்
எத்தனை எத்தனை

‘இந்த இழிவிலிருந்து
இந்த நரகத்திலிருந்து
நம்மை மீட்கும் ஒளி
வாராதா வாராதா
என்று ஏங்கி
நாம் கிடந்த நாட்கள்
எத்தனை எத்தனை

‘அப்போதுதான்
அப்போதுதான்
உங்களில் ஒருவன்
யானை தேசம்
பானை தேசமாக இருந்த
பல நூற்றாண்டுகளாய்
ஏங்கிய தவப்புதல்வன்
நான் வந்தேன்

‘இவ்வளவு நாள் 
நம்மை உறங்க விடாமல் செய்த
நம்மை வாட்டிவதைத்த
நம்மை இழிவுக்குள்ளாக்கிய
நம்மை மேலே மேலே 
செல்ல விடாமல் தடுத்த
நம் பொற்காலங்களைத் 
தனக்குள் போட்டு
மூடிவைத்துக்கொண்ட
இந்தப் பெரும் 
ஓட்டைப் பானையைத் 
தூக்கிப்போட்டு உடைத்தேன்

‘ஆகா உடைத்த பழம்பானையில்
எவ்வளவு பெருச்சாளிகள்
அவையெல்லாம் 
விட்ட மூச்சைப் பார்க்க வேண்டுமே
அதுதான் அந்தப் பெருச்சாளிகளின்
இறுதி மூச்சு

‘நான் உடைத்த பானையிலிருந்து
எவ்வளவு பெரிய யானை
வெளிவந்தது என்று கண்டீர்களா
உலகம் காணாத அவ்வளவு பெரும் யானை
அதை கேவலம் ஒரு ஓட்டைப் பானைக்குள்
அவ்வளவு நாளாய் வைத்திருந்தது யார்
என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்

‘உள்ளுக்குள் முடங்கியிருந்த 
அதன் ஓலமெல்லாம்
உடைத்து வெளிவந்ததும்
எப்படிப் பீறிட்டது
என்று கேட்டீர்களா

‘அது புதிய யானை தேசத்தின் 
புதிய முழக்கம்
உலகின் பாராமுகத்தை
எட்டி இடறும் முழக்கம்
நாமெல்லாம்
அம்முழக்கத்தின் வாய்கள்
அம்முழக்கத்தின் செவிகள்

‘உலகின் முதல் மொழியாம் தமிழ் மொழியில்
ஒரு புலவர் பாடினார்
பானைக்குள் மறைந்தது மாமத யானை
பானையை உடைத்தது மாமத யானை
எற்றும் இடமெல்லாம்
இற்று உடையும் பானை 

‘ஆம், ஒரு யானை
ஓரு கோடி பானை
அதிலிருந்து
கோடி கோடி யானை

‘உலகே அஞ்சுகிறது
நம்மைக் கண்டு இன்று 
நாம் வைத்திருக்கும்
உலகிலேயே மிகப் பெரிய
யானைப் படை கண்டு

‘யானைப் படை வீரராய் 
ஒவ்வொரு பிரஜையும் ஆன தேசம்
ஒவ்வொரு பிரஜைக்கும் 
ஒரு யானை கொடுத்த தேசம்
இன்றோ என்றோ 
உண்டோ உலகில்

‘உலக மொழிகளுக்கெல்லாம்
தாய்மொழியாம் தமிழ் மொழியில் 
பாடினார் ஒரு புலவர்
கான முயலெய்த அம்பினில் யானைக் 
காலில் இடறுண்டு சாவது மேல்
என்று

‘இன்று 
என் யானை தேசத்தில் ஒவ்வொரு பிரஜையும்  
யானைக் காலுக்காகத் தவம்கிடப்பதைக்
காணக் காண
விம்முகிறதே என் நெஞ்சம்’
ராஜா சற்றே குனிந்து 
கண்கலங்க
பிரஜைகளெல்லாம் யானைக் குரலில்
ஓலமிடுகின்றனர்

‘யானை தேச மாதாவின் பிரஜைகளே
நாமெல்லாம் களிமண் பானை
யானையின் கால்களுக்கு நம்மை
ஒப்புக்கொடுத்தால்தான்
யானையின் கால்களில்
நாம் நொறுங்கி உடைந்தால்தான்
நாம் ஒவ்வொருவரும் ஆக முடியும் யானை

‘யானை தேச மாதாவின் பிரஜைகளே
முன்னர் உங்களை ஆண்டவர்கள்
உங்களை வைத்திருந்ததுபோல் பானையாகவே
இருக்கப் போகிறீர்களா
இல்லை
எனது மாபெரும் யானைப் படையின்
மாபெரும் யானைகளாக இருக்கப்போகிறீர்களா’
என்று ராஜா முடிப்பதற்குள்
‘பானை உடைப்போம்
பானை உடைப்போம்
யானை ஆவோம்
யானை ஆவோம்’
என்று உரத்த குரலெடுத்துப் பாடினார்கள்
பிரஜைகள் எல்லோரும்
யானைகளே அரண்டு திமிறும்படி

‘என்னருமை யானை தேச மாதாவின் புத்திரர்களே
உங்களிடம் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன்
பானைகளாகப் பிறக்கலாம்
ஆனால் பானைகளாக இறக்கக் கூடாது
நாம் யானைகள்
யானை இறந்தாலும் தேசத்துக்கு
ஆயிரம் பொன்’
என்று சொல்லிவிட்டு
‘யானை தேச மாதாவுக்கு’
என்று ராஜா முழங்கியபோது
அம்முழக்கத்தின் அதிர்வில்
உடைந்து நொறுங்கின
எல்லா யானைகளும்

உடைந்த யானைச் சில்லுகளை மிதித்தோடி
‘ஜே’
என்று பிரஜைகள் எல்லாம்
பதில் முழக்கம் செய்தபோது
எல்லோருடைய தும்பிக்கைகளும்
விண்ணோக்கி உயர்ந்திருந்தன

முழு முற்றாய்த் தன் தேசத்தை
யானை தேசமாய் மாற்றிவிட்ட பெருமிதத்தில்
மேடையை விட்டு
நான்கு பெரும் கால்களால்
இறங்கிவந்தார் ராஜா
அவருக்கு அவரது
தும்பிக்கையே அங்குசம்
ஆனால்
அதை எப்போதும் இனி மறந்துவிடுவார்

 

தொடர்புடைய கவிதைகள்:

மாயக் குடமுருட்டி
மாயக் குடமுருட்டி: அவட்டை
மாயக் குடமுருட்டி: அண்ணன் பெயர்
மாயக் குடமுருட்டி: பாமணியாறு
மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாமணி
மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்
மாயக் குடமுருட்டி: அண்ணனின் தூண்டிலைத் திருடிய அப்பா
மாயக் குடமுருட்டி: கருப்பு சிவப்பாய் ஒரு ஆறு
மாயக் குடமுருட்டி: ஒளிதான் முதல் நினைவு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசை

ஆசை, கவிஞர், பத்திரிகையாளர், மொழியியலர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியராகப் பங்களித்தவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவர். தற்சமயம், ‘சங்கர்ஸ் பதிப்பக’த்தின் ஆசிரியர். ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’ ஆசையின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகள். தொடர்புக்கு: asaidp@gmail.com


3






மோடிக்கு சரியான போட்டி கார்கேகாங்கிரஸ் அழிந்துவிடுமாஆறு காரணங்கள்பானைஸ்டன்ட் ஜர்னலிசம்மதிப்பீடுdr ganesanஅபராதம்வைசியர்உள்நாட்டுப் போர் வின்னி: இணையற்ற இணையர்!சித்த மருந்துபணமதிப்பு நீக்க நடவடிக்கைகேஜ்ரிவால்மாநகராட்சிப் பள்ளிகள்சிந்தன்இந்துத்துவ நிராகரிப்பு அல்ல!மனைவி எனும் சர்வாதிகாரிநாய்கள் கலைஞர்கோடைசட்டப்பூர்வ உரிமைகும்மிருட்டின் தனிமனம்கட்டிடம்உயிர்மை நேயமே நம் சிந்தனை மரபுதிடீர் இறப்புதமிழ்நாட்டைப் பிரிக்கலாமா சமஸ் கட்டுரைபயிர்மதவாதம்தி டெலிகிராப்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!