இருக்கை அல்ல பிரச்சினை, இதயம்தான்
சமீபத்தில் கடலூரில் நான்கு மாடிகளில் அமைந்துள்ள ஒரு பெரிய துணிக்கடைக்குச் சென்றிருந்தேன். அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு உத்தரவுப்படி ஏன் இன்னும் இருக்கை வசதி செய்து தரவில்லை என்று அவர்களிடம் கேட்டேன். சரியான பதில் இல்லை. புகார் புத்தகம் கேட்டதற்குத் தனிக் காகிதத்தை வழங்கினர். அதிலும் எனது யோசனையை எழுதி மின்னஞ்சல் முகவரியைத் தந்தேன். இன்று வரை பதில் இல்லை. சந்துருவின் கட்டுரையைப் படித்த பிறகுதான் நீதிமன்றங்களிலேயே இதுதான் நிலை என்பதைப் புரிந்துகொண்டேன். இதில் வைத்ததே சட்டம் எனச் செயல்படும் தனியார் நிறுவனங்களில் இவையெல்லாம் என்று அமலுக்கு வரும்? ஆனாலும், நுகர்வோர்கள் தொடர்ந்து இந்தப் பிரச்சினையை விற்பனையாளர்கள் சார்பாக வலியுறுத்தத்தான் வேண்டும். சட்டம் மட்டுமே அரசு இயற்றும். செயல்படுத்துவதில் சமூகத் தணிக்கை, சமூகப் பொறுப்பு தேவை.
- நீலகண்டன்
பிரச்சினை திமுகவா அல்லது தமிழில் அர்ச்சனையா?
கட்டுரை ஆசிரியர் சந்துரு சரியான புள்ளியைத் தொட்டுக் காட்டுகிறார். திமுக ஆட்சியில் தொடர்வது என்பது எப்போதுமே சனாதன சக்திகளுக்கு ஏற்புடையதாக இல்லை. எதையாவது சொல்லி தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். இதற்குக் கடவுள், ஆலயம், ஆகமம் போன்றவை சிறந்த காரணங்கள். பெருவாரியான இந்து மக்களை இந்தக் காரணங்கள் நிமித்தம் திமுகவுக்கு எதிராக நிறுத்த முடியும் என்பதுதான் உள்கிடக்கை. தமிழ் இந்த நிலப்பகுதியில் உள்ள ஆலயங்களில் அர்ச்சனை மொழியாக இருக்க முடியாது என்று சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டும். திமுக எதிர்ப்பு என்ற தங்களது நிலைப்பாட்டிலிருந்தே சனாதனிகள் தங்களது ஆற்றலைப் பெறுகிறார்கள்.
- பிரபு
பாரதியின் வாழ்க்கையே மாயத்தன்மை கொண்டதுதான் - பா.வெங்கடேசன் பேட்டி
மிக அருமையான பேட்டி. பாரதி என்ற ஞானக் கிறுக்கனின் வலையில் கிறங்கி நிற்கும் பா.வெங்கடேசனின் வார்த்தைகள் உள்ளுறை உண்மையை வெளிக்கொண்டு வருகின்றன. மிக்க நன்றி. பாரதியின் கண்ணம்மாவையும் ‘முளை’ கதையின் மூலம் தரிசித்துவிட்டேன்.
- வீ.பா.கணேசன்
இந்திய விடுதலைக்குப் பின்னான உழவு மக்களின் பங்கு அளப்பரியது. இன்றைய சேவைத் துறை உலகம் தங்கள் கரங்களை உழவர் முன்னேற்றத்துக்கு நீட்டுவது தலையாய கடமை.
- கணேஷ்
மொழியியல் தத்துவத்தின் அடிப்படையில் மொழியாக்கம்
மொழியாக்கம் குறித்த செம்மையான கட்டுரை. சிறந்த மொழியாக்கம் என்று பெரும்பாலும் எவற்றை அடையாளப்படுத்தி வருகிறோம் என்றால், எவை மூலத்தின் ‘தொனி’யைக் கொண்டுவந்திருப்பதாக நம்புகிறோமோ அவற்றைத்தான். மொழியாக்கம் என்பது பொதுவாக ‘டிரான்ஸ்கிரியேஷன்’ (transcreation) என்பதில்தான் முடிகிறது. யாரோ சொன்னதுபோல, மொழியாக்கம் என்பது கல்லில் நார் உரிக்கும் பணி. மொழியாக்கத்தில் உள்ள சிக்கல்களை எளிமையாக அலசியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர்.
- பிரபு
தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் ¬– அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயைகூர்ந்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Abdul Kareem 3 years ago
இது போன்றதொரு கடையில் வேலை பார்ப்பவரிடம் இது பற்றிக் கேட்டபோது எதுவும் மாறவில்லை என்றே சொன்னார். இது மனிதத் தன்மையற்ற செயல், அது பற்றிய புரிதல் கடை முதலாளிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஏற்பட வேண்டும்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
udhaya kumar 3 years ago
இருக்கை வசதி ஏற்படுத்தாத கடைகள் குறித்த புகார்களை எங்கு அளிப்பது???
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.