கட்டுரை, தொடர், வரலாறு, சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு
எத்தியோப்பியா: பாப் மார்லிக்கு சிலை வைத்த நாடு
நான் பணிபுரியும் முதலீட்டுக் குழுமம் எத்தியோப்பியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. அண்மையில், அதன் போர்ட் மீட்டிங்கில் ஜூம் செயலி வழியாகக் கலந்துகொண்டேன். அந்தச் சந்திப்பில், புதிதாக ஒரு பெண் இயக்குநர் நியமிக்கப்பட்டிருந்தார். அவரை அறிமுகம் செய்துகொள்கையில், ஜூம் வழியே என்னைப் பார்த்தவர் ஆச்சரியப்பட்டார்.
“எத்தியோப்பியன் போலவே இருக்கிறாயே?”
எத்தியோப்பியாவில் பயணம் செய்கையில் எனக்கும் பல எத்தியோப்பியர்களைப் பார்க்கையில் இந்தியச் சாயல் இருப்பதுபோலத் தெரிவதுண்டு. அவர்களுக்கும் கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க மக்களுக்கும் மிகத் தெளிவான வேறுபாடுகள் உண்டு. பழுப்பு / மென்கருப்பு நிறத் தோல், நீளமான முகங்கள், கூர்மையான நாசிகள், மென்மையான கேசம் என்று.
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்
எத்தியோப்பியாவின் அறிமுகம் எனக்கு முதலில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் வழியாகத்தான் நிகழ்ந்தது. எத்தியோப்பியாவின் பெருமைமிகு மன்னரான ஹெய்ல் செலாசி, தனது நாட்டை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக, ஒரு விமான சர்வீஸ் நிறுவனம் தொடங்க ஐக்கிய நாடுகளிடம் உதவி கேட்டார். ஐக்கிய நாடுகளின் உதவி பெற்று, 1948ஆம் ஆண்டு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது.
அரசின் தொடர்ந்த ஆதரவோடு, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மிகவும் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றது. இதன் வெற்றியின் பின்ணணியில் சில முக்கியமான காரணிகள் உள்ளன. முதலாவது, எத்தியோப்பியாவின் தலைநகர் அட்டிஸ் அபாபாவில் ஒரு பெரும் சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்பட்டது.
அட்டிஸ் அபாபாவில் இருந்து ஆப்பிரிக்காவின் பல நகரங்களுக்கு சிறிய விமான சர்வீஸ்களை ஏற்படுத்தி, அங்கிருந்து ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா செல்லும் பயணிகள் அட்டிஸ் அபாபா வழியாகச் செல்லும் வகையிலான ஒரு விமான சர்வீஸ் வலைப்பின்னலை எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் உருவாக்கியது. இதை ஆங்கிலத்தில் அச்சாணி மாதிரி (Hub and Spoke Model) என்பார்கள்.
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தொடக்கம் முதலே தொழில்முறை நிர்வாகிகளால் மேலாண்மை செய்யப்பட்டுவந்தது. அதில் அரசின் தலையீடு இல்லாமல் அரசர் ஹெய்ல் செலாசி பார்த்துக்கொண்டார்.
ஆப்பிரிக்க நாட்டின் பயணிகள் பெரும்பாலும் பொருளாதார வசதிகள் குறைவானவர்கள். அவர்களுக்கு ஏற்றார்போல, விமான கட்டணங்களை மிகவும் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொண்டது. மற்ற வணிக விமான சர்வீஸ்கள் பயணிகளுக்கு 60 கிலோ லக்கேஜ் அனுமதி கொடுத்தால், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் 75 கிலோ அனுமதி கொடுத்தது.
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மிகவும் நவீனமாகவும், சிறப்பாகவும் பராமரிக்கப்படுவதால், அதன் சேவை மிகவும் சிறப்பாக இருக்கும். தொடங்கிய காலம் முதல் இந்த அணுகுமுறையில் கொஞ்சமும் மாற்றமில்லாமல் இருந்ததால், ஆப்பிரிக்காவின் மிகச் சிறந்த ஏர்லைன்ஸ் நிறுவனமாக இது விளங்கிவருகிறது. ஒரு அரசு வெற்றிகரமாக ஒரு ஏர்லைன்ஸ் நிறுவனத்தை எப்படி நடத்த முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் எனச் சொல்லாம்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
பாப் மார்லியும் ராஸ்டஃபரியும்
முதன்முறையாக நாங்கள் முதலீடு செய்திருந்த நிறுவனத்திற்குச் செல்லும்போது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மூலமாகச் சென்றேன். அட்டிஸ் அபாபாவில் இறங்கி, எங்கள் நிறுவனம் செல்லும் வழியில், ஒரு சதுக்கத்தில் வித்தியாசமான சிலையைக் கண்டேன். ‘எங்கேயோ பாத்தா மாரி கீதே என யோசித்தேன்… அட பாப் மார்லி!’
இவருக்கு அட்டிஸ் நகரின் மத்தியில் எதற்குச் சிலை? இவருக்கும் எத்தியோப்பியாவுக்கும் என்ன தொடர்பு? எனக் கேட்டேன்
எத்தியோப்பிய சகா எனக்கு இதன் பின்ணணியை விளக்கினார். 1930களில் ஜமைக்கா என்னும் கரிபியத் தீவுகளில் ராஸ்டா அல்லது ராஸ்டஃபரி என்னும் ஒரு புதிய மதப் பிரிவு மிகவும் பிரபலமாகத் தொடங்கியது. இவர்களுக்கென ஒரு மதகுரு, தலைவர் என இல்லாவிட்டாலும், இவர்கள் எத்தியோப்பிய அரசர் ஹெய்ல் செலாசியைக் கடவுளின் மறு அவதாரம் எனக் கருதி அவரைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.
ஹெய்ல் செலாசியின் இன்னொரு பெயர் ராஸ்டஃபரி. நான் இறைத்தூதர் இல்லை என மன்னர் ஹெய்ல் செலாசி மறுத்தாலும், அவரைப் பின்பற்றுபவர்கள் அவரை ஒரு இறைத்தூதராகவே மதித்தார்கள்.
இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது. 1920களில், மார்க்கஸ் கார்வே (Marcus Garvey) என்னும் கறுப்பின ஜமைக்க அரசியலர் ஓர் ஆருடம் சொன்னார். ”ஒருநாள் ஆப்பிரிக்காவில் ஒரு கறுப்பினத்தவர் மன்னராக பதவியேற்பார். அவரே ஆப்பிரிக்காவையும், உலகையும் கடைத்தேற்றும் இறைத்தூதர்” என்று.
இதில் 1930ஆம் ஆண்டு, ஹெய்ல் செலாசி எத்தியோப்பியாவின் மன்னராகப் பதவியேற்றவுடன், இவர்தான் கார்வே சொன்ன இறைத்தூதர் என ஜமைக்க மக்கள் நம்பத் தொடங்கினார்கள். அவர்கள் வழிபாட்டு முறைக்கே ஹெய்ல் செலாசியின் இன்னொரு பெயரான ராஸ்டஃபரி எனப் பெயரிட்டார்கள்.
இவர்களின் வழிபாட்டு முறைகள் இசைக் கச்சேரிகள், உரையாடல்கள், கஞ்சா புகைப்பது, சடாமுடி வளர்ப்பது, உப்பில்லா உணவு, மதுவிலக்கு (எனக்கு நம் நாட்டு காபாலிகர்கள் நினைவுக்கு வந்தனர்) போன்றவையாகும். ஏழ்மையில் இருந்த ஜமைக்க கறுப்பின மக்களுக்கு என ஒரு அடையாளமும், பெருமிதமும் தேவைப்பட்டது. அந்த இடத்தில் மன்னர் ஹெய்ல் செலாசி மிகக் கச்சிதமாகப் பொருந்திப்போனார்.
இந்த வழிபாட்டு அமைப்பில் மிக முக்கியமானவர் பிரபல ‘ரெக்கே’ பாடகரான பாப் மார்லி. 60களில் பாப் மார்லி ராஸ்டஃபரி பிரிவுக்கு மாறினார். அதுவரை ஒரு குறுங்குழுவாக இருந்த ராஸ்டாஃபரி, பிரபலமாகத் தொடங்கியது. ராஸ்டஃபரிக்கு மாறிய பாப் மார்லி, வழிபாட்டு முறைகளைப் பின்பற்றினார். “நான் மக்களுக்குச் சொல்வது இதுதான். அமைதியாக இருங்கள். எத்தியோப்பிய அரசர் ஹெய்ல் செலாசிதான் இறைத்தூதர் என்பதை உணருங்கள்” எனச் சொன்னார்.
அதன் பின்னர் அவர் எழுதிய பல பாடல்கள் கறுப்பின மக்கள் தங்கள் தாய் மண்ணான ஆப்பிரிக்காவுக்குத் திரும்புவதைப் பற்றியும், ராஸ்டஃபரி நம்பிக்கைகளையும் பற்றியதாகவும் இருந்தன. ஆனால், அவற்றை பாப் மார்லியின் ரசிகர்கள் பெரிதாகப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.
1960ஆம் ஆண்டு ஜமைக்காவுக்கு விஜயம் செய்த மன்னர் ஹெய்ல் செலாசியை தரிசிக்க ஆயிரக்கணக்கில் கறுப்பின மக்கள் கூடினர். ஆப்பிரிக்கா திரும்ப விரும்பும் மக்களுக்காக அரசர் ஹெய்ல் செலாசி 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார். ‘செஷமான்’ (Seshamane) என்று அழைக்கப்பட்ட அந்தக் குடியிருப்புக்கு, 1978ஆம் ஆண்டு பாப் மார்லி வந்து தங்கிப்போனார்.
மிகப் புதிய மதமாக உருவெடுக்கும் என நம்பப்பட்ட ராஸ்டாஃபரி வழிமுறை ஹெய்ல் செலாசியின் மறைவுக்குப் பின்னர் குறுங்குழுவாகச் சுருங்கிப்போனது. ஹெய்ல் செலாசியைப் பின்பற்றியவர் என்பதால் பாப் மார்லிக்கு அட்டிஸ் நகரில் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பிய உணவு
எத்தியோப்பியா சகா சொன்ன தகவல்கள் ஆச்சர்யமளித்தன. உலகில் எத்தனை எத்தனை விசித்திரங்கள்.
எத்தியோப்பிய நாட்டின் ஒரு முக்கியமான உணவுப் பொருள் ‘டெஃப்’ (Teff) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிறுதானியம். அந்தத் தானியத்தை அரைத்து மென்பொடியாக்கி. நீரில் ஊறவைத்து, ஈஸ்ட் சேர்த்து தோசை போல சுடுகிறார்கள். மென்மையான சுருள் போல சுருட்டப்பட்டு அவை இணை உணவுகளுடன் பரிமாறப்படுகின்றன. முறுகலாகவும் சுடப்படுகின்றன. இது எத்தியோப்பியாவின் ஆம்ஹரிக் மொழியில் ’இஞ்சிரா’ என அழைக்கப்படுகிறது.
இதன் முக்கிய அம்சம், இதில் ‘க்ளுட்டென்’ இல்லை என்பதே. உலக மக்களில் ஒரு சாராருக்கு, கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் உள்ள க்ளுட்டென் ஒத்துக்கொள்வதில்லை. அவர்களுக்கு இது ஒரு நல்ல மாற்று. மேலும் மற்ற தானியங்களைவிட இதில் புரதம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் சதவீதம் அதிகம். குறைவான க்ளைசீமிக் குறியீடு (Low Glycemic Index) கொண்டது. நீரிழிவு நோயாளிகளும் இதை அளவாக உண்ணலாம். இந்தக் காரணங்களால், இது உலகச் சந்தைகளில் மிக அதிக விலையில் (கிலோ 450 ரூபாய்) விற்பனையாகிறது.
எத்தியோப்பியாவில் அடுத்த புகழ்பெற்ற பொருள், காப்பி. அராபிகா என்னும் காப்பி வகை இங்கிருந்து உலகமெல்லாம் பரவியது. இன்று உலகின் ஏழாவது பெரும் காப்பி உற்பத்தியாளாரகத் திகழ்கிறது. காப்பி பெரும்பாலும் சிறு உழவர்களால் உற்பத்திசெய்யப்பட்டு, உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்படுகிறது.
ஐரோப்பா, அமெரிக்க நாடுகளுக்குப் பெருமளவு ஏற்றுமதிசெய்யப்படுகிறது. அரசின் ஏற்றுமதி வருவாயில் 10% காப்பி மூலம் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 1.5 கோடி மக்களின் வாழ்வாதாரமாக காப்பி விளங்குகிறது. ஜப்பானில் தேநீர் பருகுவது எப்படி ஒரு கலாச்சார நிகழ்வோ அதுபோல, இங்கே காப்பி பருகுவதும் கருதப்படுகிறது. தனிப்பட்ட முறையில், எனக்கு தான்சானியாவில் கிடைக்கும் காப்பி மேல் எனத் தோன்றுகிறது. ஆனால், எனக்கும் உணவு, நுகர்வு, சுவை இவற்றுக்கும் தொடர்பே இல்லை என்பதால், இக்கருத்தை உதறிவிடலாம்.
எத்தியோப்பிய மறுமலர்ச்சி நீர்த்தேக்கத் திட்டம்
எத்தியோப்பிய நாட்டின் வழியே எகிப்து வரை செல்லும் நைல் நதியின் குறுக்கே, எத்தியோப்பியா ஒரு பெரும் நீர்த்தேக்கத்தை (Grand Ethiopian Renaissance Dam) உருவாக்கியது, எத்தியோப்பியாவுக்கும், எகிப்துக்கும் இடையே பெரும் சச்சரவை உருவாக்கிய ஒன்றாகும். 5200 மெகாவாட் மின் உற்பத்தித் திறன்கொண்ட இத்திட்டம் எத்தியோப்பியாவின் மின் பற்றாக்குறையைப் பெருமளவும் தீர்க்க உதவும் எனச் சொல்லப்படுகிறது.
வேளாண்மைக்காகவும், குடிநீருக்காகவும் நைல் நதியை மட்டுமே நம்பியிருக்கும் எகிப்து நாட்டுக்கு, இந்த நீர்த்தேக்கம் பெரும் அச்சத்தைக் கொடுத்திருக்கிறது. எகிப்து, சூடான், எத்தியோப்பியா ஆகிய மூன்று நாடுகளும் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்திவந்தாலும், இன்று வரை மூன்று நாடுகளுக்கும் திருப்தி தரும் வகையிலான ஓர் ஒப்பந்தம் ஏற்படவில்லை.
இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் எத்தியோப்பியாவின் மக்கள்தொகை 12 கோடி. நைஜீரியாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு எத்தியோப்பியா. ஆப்பிரிக்காவின் மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்று சொல்லப்பட்டாலும், இங்கு நிலவும் அரசியல் ஸ்திரமின்மை, நாட்டின் பொருளாதாரத்தையும், நிர்வாகத்தையும் பெருமளவு பாதிக்கிறது.
விளைவாக நாடு அடிக்கடி பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறது. அடுத்த ஆறு மாதங்களில் என்ன நிகழும் என்பதை யாராலும் கணித்துச் சொல்ல முடிவதில்லை.
கச்சாப்பொருட்கள் பற்றாக்குறை, உள்நாட்டுக் கலவரங்கள், அந்நியச் செலாவணிச் சிக்கல் போன்றவற்றால், நாங்கள் முதலீடு செய்துள்ள தொழிலுக்கு பிரச்சினைகள் ஏராளம். ஆனாலும், உற்பத்தி நிறுவனங்கள் மிகச் சிலவே என்பதால், உற்பத்தி செய்யும் பொருளுக்கான தேவைகள் அதிகமாகவே உள்ளன. ‘நித்திய கண்டம்; பூர்ணாயுசு’ என அந்நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.
தொடர்புடைய கட்டுரைகள்
எத்தியோப்பியா காட்டும் உணவுப் பாதை
பக்கிரி பிள்ளையும் உப்புப் பருப்பும்
ருவாண்டா: நிலமெங்கும் ரத்தம்
ருவாண்டா: கல்லறையின் மீதொரு தேசம்
4
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.