கட்டுரை, விவசாயம், நிர்வாகம் 2 நிமிட வாசிப்பு
உழவர்களுக்கான சூரிய மின்சாரத் திட்டம்: அருஞ்சொல் எதிரொலி
என் தந்தை சிறு உழவர். ஒரு ஹெக்டேருக்குக் கொஞ்சம் குறைவான நிலம் வைத்திருந்தவர். அந்த நிலம் தரும் வருமானம் எங்களுக்கு ஒருபோதும் போதுமானதாக இருந்ததே இல்லை. இன்று வெளிநாட்டில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் பணியாற்றும்போதும், இந்திய உழவர்களின் பிரச்சினைகளை வாசிக்கும்போதெல்லாம் அவற்றை என்னுடைய வாழ்க்கையின் பின்னணியிலிருந்தே நான் உணர்கிறேன்.
நான் மிகவும் மதிக்கும் வேளாண் பொருளியர்களுள் ஒருவரான தேவேந்தர் ஷர்மா, 1970லிருந்து, 2015 வரையிலான ஒரு புள்ளிவிவரத்தை முன்வைத்தார். அந்த 45 ஆண்டுகளில், பள்ளி ஆசிரியரின் வருமானம் 320 மடங்கு (32000%) அதிகரித்துள்ளது. கல்லூரி ஆசிரியரின் வருமான 170 மடங்கு (17000%), அரசு ஊழியர்களின் வருமானம் 120 மடங்கு (12000%) உயர்ந்துள்ளது. ஆனால், உழவரின் வருமானம் 19 மடங்கு (1900%) மட்டுமே உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில், பண வீக்கம் 30 மடங்கு (3000%) உயர்ந்துள்ளது என்பதை நான் ஊகித்தேன்.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டில், இந்தியாவின் 50% மக்களின் வருமானம், மற்ற துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் வருமானத்தை ஒப்பிடுகையில், வெகுவாகப் பின் தங்கிப்போனது என்பதை உணர்ந்தேன். இந்தச் சூழலை என்று எப்படி மாற்றுவது?
குஜராத்தில், பன்னாட்டு நீர் மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் துஷார் ஷா ஒரு பரிசோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தார். இதன்படி உழவர்கள் தங்கள் நிலத்தில், பயிர்களைத் தாண்டி, சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து, மின் க்ரிட்டுக்கு அளித்து, அதன் மூலம் கூடுதல் வருவாயை ஈட்ட முடியும் என்பதை அவர் நிரூபித்திருந்தார்.
இதையும் வாசியுங்கள்... 9 நிமிட வாசிப்பு
விவசாயிகளுக்கான சூரிய மின்சாரம்: துஷார் ஷா பேட்டி
25 Oct 2021
இதை நான் ‘அருஞ்சொல்’ இதழின் முதல் நாளில் ‘உழவர் எழுக’ எனும் கட்டுரையாக எழுதியிருந்தேன். இந்தத் திட்டத்தைத் தமிழகமும் பரிசீலிக்க வேண்டும் என்று எழுதியிருந்தேன். தொடர்ந்து இதுகுறித்து ‘அருஞ்சொல்’ ஒரு தலையங்கத்தையும் வெளியிட்டது. அடுத்து, பேராசிரியர் துஷார் ஷாவின் பேட்டியையும் ‘அருஞ்சொல்’ வெளியிட்டது. இவையெல்லாம் மெல்ல தமிழக அரசின் கவனத்துக்குச் சென்றன.
ஊடகங்கள், அறிவுஜீவிகள் வழியாக நல்ல விஷயங்கள் வெளிவரும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இன்றைய தமிழக அரசு அதற்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்கிறது. அப்படித்தான் இந்தத் திட்டம் குறித்துப் பேசுவதற்கு வாய்ப்பு எனக்கு அமைந்தது. தமிழ்நாடு திட்டக் குழுவின் உதவித் தலைவரான ஜெயரஞ்சன், அதன் உறுப்பினரான விஜய பாஸ்கர் இருவரையும் நான் சந்தித்தேன். திறந்த மனத்துடன், இந்தத் திட்டம் குறித்துக் கேட்டுக்கொண்ட பேராசிரியர் ஜெயரஞ்சன், இதை எப்படிச் செயல்படுத்தலாம் என்று ‘டேன்ஜெட்கோ’வின் (Tangedco) மேலாண் இயக்குநர் முன்பு பேசுவதற்கான ஒரு வாய்ப்பை அளித்தார். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு திட்டக் குழு மற்றும் டேன்ஜெட்கோ மேலாண் இயக்குநர் ஆகியோர் முன்பு, தனது பரிசோதனையின் முடிவுகளையும் தன் பரிந்துரைகளையும் பகிர்ந்துகொண்டார் குஜராத் பேராசிரியர் துஷார் ஷா.
மாதங்கள் வேகமாக ஓடின.
சில வாரங்களுக்கு முன்பு திடீர் என்று ஒரு செய்தி. ‘டேன்ஜெட்கோ (Tangedco) மூலம் இந்த ஆண்டு 5,000 உழவர்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்தி செய்து, க்ரிட்டுக்குக் கொடுத்து, உபரி வருமானம் வரும் திட்டத்தை அறிமுகப்படுத்தப்போகிறது தமிழக அரசு’ என்றது அந்தச் செய்தி. இதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டது பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியது. உள்ளபடி இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், தமிழக எரிசக்தித் துறையில் சுற்றுச்சூழல் சார்ந்து ஒரு பெரும் மாற்றம் நிகழ்வதோடு, தமிழக உழவர்களின் வருமானத்திலும் பெரும் தாவல் நடக்கும். பெரிய மாற்றத்துக்கான முன்னெடுப்பு இது.
காந்தி சொல்வார், “இலக்குகளுக்கும் அவற்றை அடைய நாம் முன்னெடுக்கும் செயல்களுக்கும் இடையிலான உறவு என்பது விதைகளுக்கும், மரங்களுக்கும் இடையிலான உறவைப் போன்றது. எதை விதைக்கிறோமோ, அதுவே மரமாகி வளர்ந்து நிற்கும்!”
மக்கள் நலனை மையச் சிந்தனையாகக் கொண்டு, தொலைநோக்கோடு ஆக்கபூர்வமாகச் செயல்பட்டால், ஊடகங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்குத் தமிழில் இன்று ஒரு சிறிய - அதேசமயம் – மிக அரிதான முன்னுதாரணமாகச் செயல்பட்டுவருகிறது ‘அருஞ்சொல்’. இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாமாண்டில் ‘அருஞ்சொல்’ அடியெடுத்து வைக்கும் சூழலில், இதைத்தான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. தொடர்ந்து அதன் நல்விதைகள் பெருக வேண்டும். மண் பயனுற வேண்டும்!
தொடர்புடைய கட்டுரைகள்
உழவர் எழுக!
மின் வாரிய நஷ்டத்தை எப்படி அணுகுவது?
விவசாயிகளுக்கான சூரிய மின்சாரம்: துஷார் ஷா பேட்டி
1
3
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.