கட்டுரை, தொடர், வரலாறு, ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு
ஜூலியஸ் நைரேரே: தான்சானியாவின் தேசத் தந்தை
தான்சானியாவின் தேசத் தந்தை எனப் போற்றப்படும் ஜூலியஸ் கம்பாரகே நைரேரே, 1922 ஏப்ரல் 13ஆம் தேதி, தான்சானியாவின் மாரா பகுதியில் உள்ள பூட்டியாமா என்னும் கிராமத்தில் பிறந்தார். அவரது தாயாரின் பெயர் முகாயா யாங்கோம்பே. தந்தை பெயர் புரிட்டோ நைரேரே. தந்தை ஜனாக்கி என்னும் இனக்குழுவின் தலைவர்.
அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில் பல தனித்துவமான பழக்க வழக்கங்கள் இருந்தன. எடுத்துக்காட்டாக, நைரேரேவின் தந்தை புரிட்டோ பிறந்த காலத்தில், கம்பளிப்பூச்சிகள் பெருமளவில் நிறைந்திருந்தன. எனவே, அவருக்கு நைரேரே (கம்பளிப் பூச்சி) என்னும் பெயர் தரப்பட்டது.
நைரேரேவின் தந்தை
ஜூலியஸ் நைரேரேவின் தாயார் யாங்கோம்பே, தந்தை புரிட்டோவுக்கு ஐந்தாவது மனைவி. அதன் பின்னர், தந்தை புரிட்டோ மேலும் 17 பெண்களை மணந்துகொண்டார். முதலில் ஜூலியஸ் நைரேரேவுக்கு, ம்கெண்டி (நடப்பவன்) எனப் பெயர் சூட்டப்பட்டது. குழந்தை ம்கெண்டி தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. எனவே, ம்கெண்டி என்னும் பெயர் சரியில்லை என மாற்ற முடிவெடுத்தனர்.
அப்போது தான்சானியாவில் தொடர் மழைக்காலம். எனவே, ‘கம்பாரகே’ மழைக்கான கடவுளின் பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பெயர் பொதுவாகப் பெண்களுக்குச் சூட்டப்படும் பெயர். 21வது வயதில் கத்தோலிக்க கிறித்தவராக ஞானஸ்னானம் பெற்றபோது, தன் குலப் பெயரான ‘கம்பாரகே’வைத் துறந்து, ஜூலியஸ் என்னும் புதிய பெயருக்கு மாறினார். அவரது தந்தையான புரிட்டோ இறக்கும் வரையில் கிறித்தவ மதத்தை ஏற்க மறுத்திருந்தார். அவர் இறந்த பின்னரே, மகன் கம்பாரகே, கத்தோலிக்க கிறித்தவ மதத்துக்கு மாற முடிந்தது.
புரிட்டோ நைரேரே, தனது 22 மனைவிகளும், மாடுகளும் சூழ ஒன்றாக வாழ்ந்துவந்தார். மகன் கம்பாரகே நைரேரே புரிட்டோவின் ஏனைய குழந்தைகளைப் போலவே, மாடு மேய்த்தும், தோட்டத்தில் வேலை செய்தும் தன் இளமைக் காலத்தைக் கழித்தார். கூட்டுக் குடும்ப வாழ்க்கையும், கடினமான உழைப்பும் சிக்கனமும் அவருக்கு மிக இயல்பாகக் கூடிவந்தது.
ஜூலியஸ் நைரேரே, “எங்களது வாழ்க்கை முறை ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாக அமைந்தது. ஒருவர் இன்னொருவரின் நிலத்தை உழுதோம். வேறொருவருக்காக ஒன்றாகக் கதிர் அறுத்தோம். எங்கள் வீடுகளை எங்களது கூட்டு முயற்சியால் கட்டிக்கொண்டோம். எங்களுக்கான அரசுகளை நாங்களே உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதை இந்த வழக்கங்களால் நாங்கள் உணர்ந்திருந்தோம்” எனப் பின்னாளில் கூறினார்.
பின்னாளில் அவர் முன்னெடுத்த கூட்டுறவு முறையான ‘உஜாமா’ மற்றும் தன்னிறைவு என்பதன் அடிப்படை அவரது கிராமியக் கூட்டு வாழ்க்கை அனுபவத்தில் இருந்து உருவாகிவந்த ஒன்றாக இருந்திருக்கலாம். அந்தக் கிராமியக் கூட்டு வாழ்க்கையின் மிகப் பெரும் பரிசு என்பதே அனைவரும் இணைந்து கெடா வெட்டி, உள்ளூர் மது வடித்து உண்டு, குடித்துக் கொண்டாடுதலே.
இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் ஜூலியஸ் நைரேரேவின் தந்தை புரிட்டோ நைரேரே ஜனாக்கி இனக்குழுவின் தந்தை எனச் சொல்லியிருந்தோம் அல்லவா. அது தான்சானியாவின் இருந்த இனக்குழுக்களின் வழக்கமல்ல. தான்சானியாவில் இருந்த பல இனக்குழுக்களிலும் தலைவர் என்னும் வழக்கம் இருந்ததில்லை. குழுவின் மூத்தவர்கள் கூடித்தான் எல்லா முடிவுகளையும் எடுப்பார்கள். அப்படி எடுத்த முடிவுகளை மற்றவர்களிடம் தெரிவிக்க, பேச்சு வார்த்தைகள் நடத்த ஒவ்வொரு இனக்குழுவும் ஒருவரை நியமிப்பார்கள்.
தாமதமான பள்ளிக்கல்வி
தான்சானியாவை ஜெர்மானியர்கள் ஆக்கிரமித்த காலத்தில், அப்படி இனக்குழுவின் சார்பில் பேச வந்தவர்களையே இனக்குழுவின் தலைவர்களாக்கிவிட்டார்கள். அது நிர்வாகம் செய்ய வசதியாக இருந்ததே காரணம். நைரேரே இந்த முறைக்கு எதிராக இருந்தார். 1960ஆம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசுகையில், அவர் இனக்குழுத் தலைவர்களை “உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன. தான்சானியா விடுதலை பெற்றதும், நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் பிரதிநிதிகளாக இருப்பீர்கள்” என எச்சரித்திருந்தார். 1963ஆம் ஆண்டு, தான்சானியா விடுதலை பெற்று அதிபரானதும் இந்த இனக்குழுத் தலைவர்கள் என்னும் பதவியை ஒழித்தார். இது ஒரு முக்கியமான அரசியல் செயல்பாடாகும்.
பள்ளிக்கல்வியை மிகத் தாமதமாகத்தான் தொடங்கினார். நண்பர்களின் வற்புறுத்தல் தாங்க முடியாமல், தந்தை புரிட்டோ அவரை 12ஆம் வயதில் பள்ளியில் சேர்த்தார். தான்சானியாவின் தபோராவில் பள்ளிக்கல்வியை முடித்த அவர், கல்லூரிக் கல்விக்காக உகாண்டாவின் மக்கரேரே பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
இளம் வயதில், தன் இனக்குழுவின் பழக்க வழக்கங்களை தவறாமல் கடைபிடிக்கும் அமைதியான சிறுவனாக இருந்தார். பெரியவர்களின் பேச்சுக்கு அடிபணிந்து நடப்பது, அந்த வயதுக்கே உரித்தான சேட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது போன்றவை, அவருக்கு அவர் உறவினர்களிடையே மிக நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்திருந்தது. பின்னாளில், புரட்சிகரமான சிந்தனைகள் கொண்ட தலைவராக உருவாவார் என்பதற்கான எந்த அடையாளமும் அவரது சிறு வயதில் இல்லை.
ஆனால், பள்ளி, கல்லூரி காலங்களில், ஜூலியஸ் நைரேரே மெல்ல மெல்ல சிறந்த சிந்தனையாளாரகவும், பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் உருவாகினார், தபோரா அரசுப் பள்ளியில் படிக்கையில், ஜனாக்கி இனக்குழுவின் கலாச்சார வழக்கங்களைப் பற்றி எழுதிய நூல் இலக்கியப் பரிசைப் பெற்றது. பள்ளியில் பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளைப் பெற்றார். பள்ளி இறுதியில் ‘மிகச் சிறந்த மாணவன்’ என்னும் சான்றிதழோடு வெளியேறினார்.
மீண்டும் பள்ளிக்கல்வி
ஜூலியஸ் நைரேரேவின் தந்தை புரிட்டோ 1942ஆம் ஆண்டு இறந்தார். அதற்குச் சில ஆண்டுகள் முன்பே, ஜூலியஸ் நைரேரேவின் தாயார் முகாயா யாங்கோம்பே, தனது மாந்த்ரீகச் சக்தியினால், தந்தை புரிட்டோவிற்குச் சூனியம் வைத்துவிட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, கணவரது வீட்டிலிருந்து துரத்தப்பட்டிருந்தார். வேறு வழியின்றி அவர், தனது சகோதரன் வீட்டில் வாழ்ந்துவந்தார். கணவர் மரணம் கேட்டு, இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள வந்த முகாயா, மற்ற உறவினர்களால் தாக்கப்பட்டார். தந்தை புரிட்டோவின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள பள்ளியிலிருந்து வந்த நைரேரேவும் அனுமதிக்கப்படவில்லை.
மீண்டும் டபோராப் பள்ளிக்குத் திரும்பிய நைரேரே, கத்தோலிக்கராக ஞானஸ்னானம் பெற்று ஜூலியஸ் என்னும் கிறிஸ்த்தவப் பெயரைத் தன்னுடன் இணைத்துக்கொண்டார். தந்தை புரிட்டோ உயிருடன் இல்லாததால், அவர் கிறித்தவ மதத்தை ஏற்றதை வேறு எவரும் ஆட்சேபிக்கவில்லை. புட்டியாமா கிராமத்தின் முதல் கத்தோலிக்க கிறிஸ்த்தவர் நைரேரேதான்.
நல்ல மதிப்பெண்களைப் பெற்ற நைரேரே, கிழக்கு ஆப்பிரிக்காவின் ஆக்ஸ்ஃபோர்ட் என அழைக்கப்பட்ட உகாண்டா நாட்டின் மக்கரேரே பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வை எழுதி, நிதி உதவியையும் பெற்று அந்தப் பல்கலைக்கழகதினுள் நுழைந்தார். கல்லூரியிலும் கல்வி மற்றும் இதர விஷயங்களில் ஆர்வமுள்ள மாணவராக இருந்தார். கல்லூரியின் மாணவப் பிரதிநிதிக் குழுவில் உறுப்பினராக இருந்தார். தனது சிறப்பான பேச்சாற்றலால் மாணவர்களை எளிதில் கவர்ந்துவிடுபவராக விளங்கினார்.
பெண் அடிமைத்தன எதிர்ப்பு
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, தாங்கினிக்கா (அன்று தான்சானியாவின் பெயர் அதுதான்) திரும்பி ஆசிரியராகப் பணிபுரியத் திட்டமிட்டிருந்தார். எனவே, கல்வியியல், ஆங்கில இலக்கியம் போன்ற பாடங்களைப் பயின்றார். தாங்கினிக்காவில் இருந்தது பயில வந்த மாணவர்களுடன் இணைந்து, தாங்கினிக்கா ஆப்பிரிக்க நலச் சங்கம் டவா (Tangynika Africa Welfare Association – TAWA) என்னும் நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அதன் முதல் செயலராகப் பணியாற்றினார்.
மக்கரேரே பல்கலைக்கழகத்தில் பயின்ற தாங்கினிக்க மாணவர்கள், தாங்கினிக்காவின் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பெரும் பங்கு வகித்தார்கள். டவா சங்க உறுப்பினர்களின் விவாதங்களில் பெண் கல்வி, கிழக்கு ஆப்பிரிக்காவின் விடுதலை மற்றும் முன்னேற்றம் போன்ற தலைப்புகளில் மிகத் தீவிரமான வாதங்கள் நடந்தன. இந்தக் காலகட்டத்தில், ஜூகன்யா என்னும் புனைப்பெயரில், நைரேரே ‘தாங்கினிக்கா ஸ்டேண்டர்ட்’ என்னும் பத்திரிக்கைக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஆப்பிரிக்கக் கூட்டு வாழ்க்கையை, வாழ்க்கை முறையை உள்ளடக்கிய ஒரு சோஷலிஸ மாதிரியை அதில் அவர் முன்வைத்திருந்தார்.
நைரேரே 1944ஆம் ஆண்டு, கம்பாலாவின் (உகாண்டா) மக்கரேரே கல்லூரியில் பயிலும்போது பெண் அடிமைத்தனத்தை எதிர்த்து அவர் எழுதிய நூல், கிழக்கு ஆப்பிரிக்காவின் இலக்கியப் பரிசைப் பெற்றது. சமூகத்தில் பெண்கள் நிலையையும், அடிமைத்தனத்தையும், அவர்கள் ஆடுமாடுகள் போல பெற்றோர்களாலும், கணவர்களாலும் விற்கப்படும் அவலத்தையும் மிக ஆழமாக எழுதி விமரிசித்திருந்தார். 22 மனைவிகளைத் திருமணம் செய்திருந்த தன் தந்தையினால் பாதிக்கப்பட்ட தன் தாய் மற்றும் இதரத் தாய்களின் அவல வாழ்க்கையை நேரில் கண்ட அனுபவம் இதன் அடிப்படையாக இருந்திருக்கலாம்.
காத்திருந்த கடமை
மக்கரேரே பல்கலைக்கழகத்தில் ஆசிரியருக்கான படிப்பை வெற்றிகரமாக முடித்து, நைரேரே தாங்கினிக்கா திரும்பினார். ஊர் திரும்பிய அவருக்கு இரண்டு வேலை வாய்ப்புகள் காத்திருந்தன. அதைவிடவும் மிக முக்கியமான ஒரு கடமை அவருக்காகக் காத்திருந்தது.
அது, சூனியக்காரி எனப் பட்டம் சூட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட தன் தாயார் முகாயாவுக்காக ஒரு வீட்டைக் கட்டுவது. தந்தை புரிட்டோவின் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தாய் முகாயா, அவரது சகோதரருடன் வசித்துவந்தார். தனயன் நைரேரேவுக்கு இந்த அநீதியைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. தன் சொந்த ஊரான பூட்டியாமவுக்குத் திரும்பி, தன் கரங்களால் மண்ணை வெட்டிக் குழைத்து, தன் தாய்க்கான வீட்டைக் கட்டினார். மக்கரேரே பல்கலைக்கழகத்தில் பயின்ற ஒரு நவீன வாலிபன், தன் தாய்க்காக, உடல் உழைப்பில் ஒரு வீட்டைக் கட்டி எழுப்பியதை ஊரே வியந்து பார்த்தது.
ஜூலியஸ் நைரேரே தன் தாய் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். அவர் தான்சானியாவின் அதிபராக ஆன பின்னர் அவரது தாய் அவருடனே வசித்துவந்தார். அலுவல் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ளும் முன்பு, தன் தாயைச் சந்தித்து விடைபெறுவதை நைரேரே ஒரு வழக்கமாகவே வைத்திருந்தார். பூட்டியாமா என்னும் குக்கிராமத்தில் ஒரு விலங்கைப் போல அடித்து விரட்டப்பட்ட அந்த ஆப்பிரிக்கப் பெண், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிபரின் அன்னை என்னும் சமூகத்தின் உயரிய இடத்தில் அமர்ந்தார்.
நைரேரேவின் பேச்சுக்கள்
மக்கரேரே பல்கலைக்கழகத்தில் கல்வி முடிந்த பின்னர், நைரேரே, டபோரா திரும்பி, அங்குள்ள புனித மேரிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் இணைந்தார். கல்விப் பணியுடன், அரசியலிலும் ஈடுபட்டார். தாங்கினிக்கா ஆப்பிரிக்க குழுவில் (Tangynika African Association - TAA) இணைந்து அதன் தலைவராக உயர்ந்தார்.
புனித மேரிப் பள்ளியின் மிகச் சிறந்த ஆசிரியராக விளங்கினார். உயிரியல் மற்றும் வரலாற்றுப் பாடங்களை அவர் கற்பித்துவந்தார். நைரேரே, தான் படித்த டபோரா அரசுப் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் ஜான் ப்ளூமருடன் மிகவும் நட்புப் பாராட்டிவந்தார். நைரேரே படித்த டபோரா அரசுப் பள்ளிக்கும், தற்போது பணியாற்றிவரும் புனித மேரிப் பள்ளிக்கும் எப்போது ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவும், ஒவ்வொரு சனிக்கிழமையும் டபோரா அரசுப் பள்ளியில் பொது விவாதங்கள் நடக்கும். அந்த விவாதங்களில் நைரேரேவும், அவரது முன்னாள் தலைமையாசிரியர் ப்ளுமரும் எதிர் எதிர் அணியில் நின்று வாதிடுவர். அவ்விவாதங்களில் பெரும்பாலும் நைரேரேவுக்கே வெற்றி.
நைரேரேவின் பேச்சுக்களைக் கேட்கவென்றே மக்கள் கூடுவர். கிழக்கு ஆப்பிரிக்கா என்பது ஒரு வெற்றிபெறக்கூடிய அமைப்பு என்பது போன்ற அரசியல் தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. அந்த விவாதங்களில் சில தலைப்புகள் சுவாரஸ்யமாக இருந்தன. அதில் ஒன்று ‘நம் முன்னோர்கள் எல்லாம் சந்தோஷமாக வாழ்ந்துவந்தார்களா’ என்பது. அநேகமாக, நம்ம ஊர், முன்னோர்களெல்லாம் முட்டாள்களல்ல குரூப்பு இங்கிருந்துதான் கெளம்பி வந்திருக்கும்னு நெனைக்கிறேன்.
ம்வாலிமு நைரேரே
ஆசிரியராகத் தொடங்கிய அவரது வாழ்க்கையில், ஆசிரியர் என்னும் பெயர் அவருடன் ஒட்டிக்கொண்டு இறுதிவரை வந்தது. பின்னாளில் பொதுமக்கள் அவரை ம்வாலிமு (ஆசிரியர்) நைரேரே என்றே அழைத்தனர்.
பள்ளியைத் தாண்டி, கல்வியை மற்றவர்களுக்கும் போதிக்கும் சமூக நலப் பணியைச் செய்யத் தொடங்கினார். அவரைப் பொருத்தவரையில், ஒருவர் நல்ல கல்வி பெறுவது என்பது, சமூகம் அவருக்கு அளித்திருக்கும் செல்வம். அந்தச் செல்வத்தை, மற்றவர்களுக்கும் அளிக்க வேண்டியது அவர் சமூகத்திடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதுபோல எனப் பல கடிதங்களில் நைரேரே எழுதியிருக்கிறார்.
இந்தச் சமூகநலப் பணியின் ஊடாகத்தான், பின்னாளில் தாங்கினிக்கா ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் (Tangynika Africa National Union – TANU) என்னும் நிறுவனம் உருவாகத் தொடங்கியது. இன்றைய தான்சானியா நாட்டின் ஆளுங்கட்சியான மக்கள் புரட்சிக் கழகத்தின் (Chama Cha Mapundizi – CCM) மூதாதை.
மிகவும் வெற்றிகரமாகச் சென்றுகொண்டிருந்த ஆசிரியப் பணியில், ஒரு மகிழ்ச்சியான குறுக்கீடு நிகழ்ந்தது. அது இங்கிலாந்து சென்று உயர்கல்வி பயிலும் வாய்ப்பு. இங்கிலாந்தின் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் 1949ஆம் ஆண்டு முதுகலை சேர, நிதியுதவியுடன் கூடிய அனுமதி கிடைத்தது. 1949 ஏப்ரல் 9ஆம் தேதி, லண்டனுக்கு, முதன்முறையாகக் கப்பலேறிப் பயணித்தார். அங்கு படித்த காலத்தில், வீட்டில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட, நைரேரே, வயல்களில், ரயில் நிலையங்களில் வேலை செய்து பொருளீட்டி அனுப்பினார்.
தன் கல்வியை மிக வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, 1952ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி விமானம் வழியாகத் தான்சானியா வந்தார். கப்பலில் படிக்கச் சென்று வெற்றிகரமாக விமானத்தில் திரும்பி வந்த அவரை விமான நிலையத்தில் வரவேற்க பெரும் கூட்டம் கூடியிருந்தது. லண்டன் சென்று பட்டம் பெற்றுவந்த முதல் தாங்கினிக்கர் நைரேரே.
திரும்பிவந்த நைரேரே, தான் முன்பே நிச்சயித்திருந்த மரியாவைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார்.
திருமணச் சிக்கல்
ஜனாக்கி இனக்குழு போன்ற பெண் அடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த குடியில் பிறந்திருந்தாலும், அதிலிருந்து தம்மை விலக்கிக்கொண்டு, நவீன காலத்துக்கேற்ற சிந்தனைகளைக் கொண்டிருந்தார். 1953ஆம் ஆண்டு மரியா என்பவை மணந்தார். 22 மனைவிகளைக் கொண்டிருந்த தந்தையின் காலகட்டத்தைத் தாண்டி, ஒரே மனைவி என்னும் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தார்.
ஜூலியஸ் நைரேரே, மரியாவைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது, அவருக்கு ஒரு சிக்கல் இருந்தது. அது மரியாவைத் திருமணம் செய்துகொள்ள அவர் தர வேண்டிய வரதட்சிணை. தான்சானியா இனக்குழுக்களில், திருமணம் செய்துகொள்ள, மணமகன் மகளின் தந்தைக்கு தட்சிணையாக மாடுகளைத் தர வேண்டும். என்னதான் புரட்சி பேசினாலும், நடைமுறையில், தன் திருமணத்திற்கு வரதட்சிணை கொடுக்க வேண்டியிருந்தது.
மரியாவின் தந்தை 10 மாடுகள் கேட்டார். மரியா படித்த பெண் என்பதால், அவரது தாயார் 12 மாடுகள் கேட்டார். நைரேரேவிடம் மாடுகளும் இல்லை. பணமும் இல்லை. மாடுகளுக்குப் பதிலாக பணம் பெற்றுக்கொள்ள மரியாவின் தந்தை ஒத்துக்கொண்டார். 1200 ஷில்லிங் பணம் கடனாக வாங்கி, மரியாவை மணம் முடித்தார். பின்னர், அவரும் மரியாவும் இணைந்து பொருளீட்டிக் கடனை அடைத்தார்கள்.
வெற்றிகரமாக வெளிநாட்டுக் கல்வியை முடித்துத் திரும்பிய நைரேரே, புகு என்னும் ஊரில் மீண்டும் ஆசிரியப் பணியில் இணைந்து, திருமணம் செய்துகொண்டு சம்சார சாகரத்தில் மூழ்கினார்!
தொடர்புடைய கட்டுரைகள்
தான்சானியாவை அண்மையில் அறிதல்!
தான்சானியா: வரி நிர்வாகத்தின் முன்னோடி
தான்சானியாவின் வணிக அமைப்பு
1
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.