கட்டுரை, தொடர், பொருளாதாரம், சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு
கென்யாவோடு தொடருக்கு குட் பை
கென்யாவும், தான்சானியாவும் சகோதர நாடுகள்.
இரண்டு நாடுகளும் ஸ்வாஹிலி மொழி பேசுபவை. கிட்டத்தட்ட சம அளவு மக்கள்தொகை கொண்டவை. இரண்டுமே ஒரே சமயத்தில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றவை. ஆனால், சில முக்கியமான வேறுபாடுகள் உண்டு. விடுதலை பெற்றவுடன், ஜூலியஸ் நைரேரேவின் தலைமையில், தான்சானியா சோசலிஸப் பாதையில் சென்றது. கென்யா, முதலாளித்துவப் பாதையில் சென்றது.
ஸ்வாஹிலி என்னும் மொழிவழி தேசியத்தை முன்னெடுத்த நைரேரே, தான்சானியா நாட்டின் பல இனக்குழுக்களை ஒன்றிணைத்தார். கல்வி, வேலைவாய்ப்புகளைப் பரவலாக்கி, நாட்டின் பல மூலைகளுக்கு மக்கள் புலம்பெயரும் சூழலை உருவாக்கினார். இதனால், இனக்குழுச் சண்டைகள் இல்லாமல் ஒரு சமூகம் உருவானது. இலைமறை காயாக இருந்தாலும், அரசியல், சமூகத் தளங்களில், இதனால் எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்பட்டதில்லை.
ஆனால், தொடக்கத்தில் தான்சானியாவின் வளர்ச்சி மிகவும் மெதுவாக இருந்தது. கென்யா, முதலாளித்துவத் திசையில் சென்றதன் விளைவாக வேகமாக வளர்ந்தது. விடுதலை பெற்ற முதல் 10 ஆண்டுகளில், கென்யா 6.6% பொருளாதார வளர்ச்சியைக் கண்டது. இதன் காரணம் கென்யாவின் முதலாவது அதிபரான ஜோமோ கென்யாட்டா எனச் சொல்கிறார்கள். ஆனால், இந்தக் காலகட்டத்தில், பெருமளவு ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்தன என்கிறார்கள்.
இதே காலகட்டத்தில், இனக்குழுச் சண்டைகள் பெரிதாக வளர்ந்தன. ஜோமோ கென்யாட்டா, கென்யாவின் மிகப் பெரும் இனக்குழுவான கிக்யூ இனத்தைச் சேர்ந்தவர். பல அதிபர்கள் இந்த இனக்குழுவில் இருந்து வந்துள்ளனர். கென்யாவின் தேர்தல்களில் இனக்குழுச் சண்டைகள் மிகவும் சகஜம்.
விடுதலை பெற்ற 60 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைய கென்யாவையும், தான்சானியாவையும் எனது மதிப்பீட்டில் இப்படிச் சொல்வேன். பொருளாதார மதிப்பீட்டில் இன்று, கென்யா, தான்சானியாவைவிட 30% பெரிய பொருளாதாரம். ஆனால், சமூக - அரசியல் தளத்தில் ஒப்பிட்டால், தான்சானியா, கென்யாவைவிடப் பரவலான மேம்பாட்டை அடைந்துள்ள நாடு. இனக்குழுச் சண்டைகளற்ற நாடு எனச் சொல்லலாம்.
நைரோபி
நைரோபி என்றால், மசாய் மொழியில், ‘குளிர்ந்த நீரைக் கொண்ட ஊர்’ என்று அர்த்தம். நைரோபி என்னும் சிறு ஆற்றின் கரையில் அமைந்த ஊர் (நம்ம கூவம் மாதிரி). இதன் மக்கள்தொகை 50 லட்சம்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் மிக நவீன நகரம் என நைரோபியைச் சொல்லலாம். ஒப்பீட்டளவில் டார் எஸ் ஸலாமைவிட குறைந்த பரப்பளவு என்றாலும், நைரோபியில் மக்கள் நெருக்கம் இரு மடங்கு அதிகம். கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர்கள் உயரத்தில் இருப்பதால் பெங்களூரைப் போலவே குளுமையான நகரம்.
அட்டிஸ் அபாபாவுக்கு அடுத்தபடியாக, ஒரு பிராந்தியக் கட்டமைப்பாக கென்யாவின் முதல் அதிபர் ஜோமோ கென்யாட்டா, நைரோபியில் ஒரு நவீன விமான நிலையத்தை அமைத்தார். அவரைத் தொடர்ந்துவந்த அதிபர் ம்பாய் கிபாக்கி அதை மேலும் நவீனமாக்கினார். இன்று நைரோபியில் இருந்து விமானச் சேவை உலகின் எல்லா நாடுகளுக்கும் உள்ளது.
மிக முக்கியமாக, கென்யாவின் கொய்மலர்ப் பண்ணைகளின் (Cut flower farms) மலர்கள் உள்பட பல முக்கியமான வேளாண் ஏற்றுமதிப் பொருட்கள், இங்கிருந்து ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாட்டுச் சந்தைகளுக்கு நேரடியாகச் செல்லும் வகையில், மிகச் சிறந்த சரக்கு விமான சேவை உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியமான கட்டமைப்பாக விளங்குகிறது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
மொம்பாஸா
பிரிட்டிஷ் காலனிய அரசில், மொம்பாஸாதான் கிழக்கு ஆப்பிரிக்காவின் தலைநகரமாக இருந்தது. இது கடற்கரை ஓரம் அமைந்துள்ள நகரம். இதன் அமைவிடம் காரணமாக, கிழக்கு ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான வணிக நகரமாக விளங்கிவந்தது. 1907ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்பிரிக்காவின் தலைநகரம் நைரோபிக்கு மாறிய பின்னர், இதன் முக்கியத்துவம் குறைந்து, ஒரு துறைமுக நகரமாக விளங்கிவருகிறது. இதன் மக்கள்தொகை 35 லட்சம்.
உகாண்டா, ருவாண்டா, புருண்டி, தெற்கு சூடான் போன்ற துறைமுகங்கள் இல்லாத நாடுகளின் இறக்குமதி பெரும்பாலும் மொம்பாஸா துறைமுகம் வழியே செல்கின்றன.
இறக்குமதி வணிகத்தில் மொம்பாஸாவும், டார் எஸ் ஸலாம் துறைமுகமும் போட்டியிட்டாலும், உலகத் துறைமுகங்களுக்கான கப்பல் வசதி, போக்குவரத்துச் செலவு, இறக்குமதிக்கான துறைமுகச் செலவுகள் முதலியவற்றில், மொம்பாஸா துறைமுகம் டார் எஸ் ஸலாமைவிட முன்னணியில் இருக்கிறது. கடற்கரை நகரமாதலால், டார் எஸ் ஸலாமும், மொம்பாஸாவும் ஒரே மாதிரியான சீதோஷண அமைப்பைக் கொண்டவை.
கிசுமு
கிசுமு, கென்யாவின் மூன்றாவது பெரிய நகரம். விக்டோரியா ஏரியின் கரையில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள்தொகை 6 லட்சம். ஏரியின் ஓரமாக அமைந்துள்ள அழகான, அமைதியான நகரம். கென்யாவின் கிக்யூ இனக்குழுவுக்கு மிக முக்கியமான எதிர்த் தரப்பான லூவோ என்னும் இனக்குழுவினர் அதிகமாக வசிக்கும் பகுதி. கிசுமு என்னும் பெயரின் அர்த்தம் வணிக நகரம் என்பதாகும்.
கொய்மலர்த் தொழில்
கொய்மலர்த் தொழில் (Cut flower industry) கென்யாவின் முக்கியமான ஏற்றுமதிப் பொருள். நைரோபி, நகுரு போன்ற பகுதிகளில் பல கொய்மலர்ப் பண்ணைகள் உள்ளன. பெரும்பாலும் இந்தியர்களால் நடத்தப்படும், இந்தக் கொய்மலர்ப் பண்ணைகள் கென்யாவின் முக்கியமான வேளாண் தொழில் அமைப்பாகும். கென்யா உலகின் நான்காவது பெரிய கொய்மலர் ஏற்றுமதியாளராகத் திகழ்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும், இதனால், 2 லட்சம் கென்யர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், தோட்டக்கலைத் துறையில் பட்டம் பெற்ற தமிழரான வெங்கடேஷ் ஸ்ரீனிவாசகம் என்னும் வெங்கி, கென்யாவில் கொய்மலர்ப் பண்ணை ஒன்றில் தொழில்நுட்ப மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார். ஊடகங்களில் சினிமா, தன்னனுபவக் கட்டுரைகள், கொய்மலர்த் தொழில் பற்றிய தொழில் கட்டுரைகள் முதலியவற்றை எழுதிவருகிறார்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் மிகப் பெரும் பொருளாதாரமாகக் கென்யா விளங்கினாலும், எங்கள் நிறுவனத்துக்கு எப்போதும் பிரச்சினைகள் தரும் சந்தையாகவே உள்ளது. வணிகத்தை நடத்த மிகவும் சிரமப்படுகிறோம். உலகின் மிக முக்கியமான வணிகச் சின்னங்கள் இந்தச் சந்தையில் கிடைக்கின்றன.
கிழக்கு ஆப்பிரிக்காவின் மிக நவீனமான பல்பொருள் அங்காடிகள் உள்ளன. இங்கிருந்து பொருட்கள் தெற்கு சூடானுக்கு ஏற்றுமதியாகின்றன. ஆனாலும், நம்பிக்கையாகத் தொழில் செய்வதில் எங்களுக்குப் பெரும் பிரச்சினைகள் உள்ளன. 2-3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு நவீன அங்காடிக் குழுமம் மஞ்சள் கடுதாசி கொடுத்துவிடுகிறார்கள். அல்லது யாரேனும் பணம் தராமல் ஏமாற்றிவிடுகிறார்கள்.
கென்யாவில் எங்கள் வணிகம் குறைவென்பதால், என் பயணங்களும் குறைவானதால், கென்யாவைப் பற்றிப் பெரிதாக எழுத என்னிடம் அனுபவங்கள் இல்லை. பெங்களூர் போன்ற குளு குளு சீதோஷணம் இருந்தும், அங்கே எங்களால் வணிகரீதியாக நிலைக்க முடியவில்லை. அது தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தம்தான்.
மீண்டும் சுற்றுவோம்
இதோடு இந்தத் தொடரை முடித்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.
இந்தக் கட்டுரைத் தொடரின் தொடக்கத்தில் சொன்னதுபோல, எனது பணி வாழ்க்கையின் முக்கியமான பருவத்தில் தான்சானியாவில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது. பணி கிடைத்தவுடன், நண்பர்களின் வாழ்த்துகள், பரிந்துரைகள் என அனைத்திலுமே, ஆப்பிரிக்கக் கண்டம் தொடர்பான எதிர்மறைச் சித்திரங்களே கிடைத்தன.
கடந்த 10-15 ஆண்டுகளில், இரண்டு முக்கிய நிகழ்வுகள் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்துள்ளன. தகவல் தொடர்புத் துறையின் அபரிதமான வளர்ச்சியின் விளைவாக, ஆப்பிரிக்க மக்களுக்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள இடைவெளி குறைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் கொண்டுவரும் வெளிப்படைத்தன்மை, பல நாடுகளில் சமூக மேம்பாட்டிற்கு உதவியுள்ளன. ஓர் உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், கைபேசி வழியிலான வங்கிச் சேவைகள் பொதுமக்களுக்குப் பெரும் உதவியாக மாறியுள்ளதைச் சொல்லலாம்.
உலகின் மிக முக்கியப் பொருளாதாரச் சக்தியான சீனா, ஆப்பிரிக்க நாடுகளின் சாலை, விமான, கப்பல் போக்குவரத்துக் கட்டமைப்புகளில் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது. இதன் எதிர்மறை விளைவுகள் பற்றிய அச்சம் இருந்தாலும், இந்தக் கட்டமைப்புகளின் வழியாக வணிகச் செயல்பாடுகள் வேகமான பாய்ச்சலைச் சந்தித்துள்ளன. இதன் விளைவாக, நிலையான மக்களாட்சி நாடுகள், தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியைக் காண்கின்றன. இன்று உலகின் மிக அதிகமான இளைஞர்களைக் கொண்ட சமூகம் ஆப்பிரிக்க சமூகம்தான். அதேசமயம் கல்வி, தொழில், சுகாதாரம் போன்ற தொழில்களில் பின்தங்கி இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
பணிநிமித்தம் தென் ஆப்பிரிக்கா தொடங்கி வடக்கு முனையான எத்தியோப்பியா வரை பயணம் செய்யும் பொன்னான வாய்ப்புக் கிடைத்தது. பல்வேறு நாடுகளில் வணிகம் செய்கையில், வணிகம் தொடர்பான சாத்தியங்களையும், எல்லைகளையும், சிக்கல்களையும் உணர முடிந்தது.
பொதுவாகச் சுற்றுலா செல்கையில், ஒரு நாட்டினுள் நாம் பயணம் செய்யும் காலம் மிகக் குறைவு. அப்படியே சென்றாலும், பழகிய பாதைகளில் பயணித்து, சௌகர்யமான இடங்களில் தங்கி, முன்பே முடிவுசெய்த இடங்களைப் பார்த்துவிட்டு, கொசுறாக சாலைகளில், விமான நிலையங்களில் எதிர்கொள்ளும் அனுபவங்களைக் கொண்டு ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். ஆனால், ஆண்டுக் கணக்கில் வாழ்கையில், நமக்குக் கிடைக்கும் சித்திரம் இன்னும் கொஞ்சம் ஆழமானதாகவும், விரிவானதாகவும் இருக்கும் என நம்புகிறேன்.
மிக முக்கியமாக வருங்காலத்தில், உலகுக்கான உணவை உற்பத்தி செய்யும் இடமாக ஆப்பிரிக்க கண்டம் மாறும் வாய்ப்புகள் உள்ளன. மற்ற கண்டங்களில் நிகழ்ந்த, இயற்கை வளம் நீடித்து நிற்காத வகையில் சுரண்டிய வேளாண்மை போல அல்லாமல், நீடித்து நிற்கும் வகையில் உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை.
ஆப்பிரிக்கா பற்றிய எனது எண்ணங்களை, அனுபவங்களைப் பதிவுசெய்வது மிகவும் அவசியம் எனச் சொல்லி என்னைப் பணித்தவர் ‘அருஞ்சொல்’ ஆசிரியர் சமஸ். அவருக்கு என் வணக்கமும், நன்றியும். இந்தக் கட்டுரைத் தொடர் ஆயிரக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்ததும், ‘அருஞ்சொல்’ இதழுக்கு ஏராளமான எதிர்வினைகள் குவிந்ததும் நான் எதிர்பார்த்ததைக் காட்டிலும் ஏனைய சமூகங்களைப் பற்றி நம்மவர்கள் வாசிப்பதில் காட்டும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக எண்ணுகிறேன். இதுவரை வாசித்த நண்பர்களுக்கும், பின்னூட்டங்கள் வழியே உரையாடிய நண்பர்களுக்கும் நன்றி.
விரைவில் இன்னொரு தொடருடன் சந்திப்போம்!
தொடர்புடைய கட்டுரைகள்
ஜாம்பியாவும் கென்னெத் கவுண்டரும்!
காங்கோ: விதியே... விதியே என்ன செய்ய நினைத்தாய்?
உகாண்டா: இடி அமின் தேசத்தில் இட்லி, தோசை!
எத்தியோப்பியா: பாப் மார்லிக்கு சிலை வைத்த நாடு
1
4
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Mathan M 1 year ago
ஆப்பிரிக்காவை பற்றிய எனது எண்ணங்களை இந்த தொடர் முற்றிலும் மாற்றியமைத்துள்ளது தங்களது தகவல்களுக்கு நன்றி மற்றும் ஒரு தொடரில் சந்திப்போம்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.