கட்டுரை, அரசியல், பொருளாதாரம், தொழில் 4 நிமிட வாசிப்பு

புலம்பெயர் தொழிலாளர்களும் சமூக மாற்றமும்!

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
07 Mar 2023, 5:00 am
0

தொழில் நிமித்தமாக 2017ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரத்துக்குச் செல்ல வேண்டி இருந்தது ஒரு உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைப் பார்வையிடும் பணி. பாக்கோ என்று அழைக்கப்பட்ட அந்த உணவுத் தொழிற்சாலையின் முகப்பறைக்குச் சென்ற எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. 

அதை உருவாக்கியவர் பக்கிரிப் பிள்ளை என்னும் தமிழர். ‘பக்கிரிப் பிள்ளை அண்ட் கோ’தான் சுருங்கி பாக்கோ என மாறியிருந்தது. என்னை வரவேற்றவர் வாசி என்னும் பெண்மணி. தமிழர். தங்கள் முன்னோர்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து வந்தவர்கள் எனச் சொன்னார். 

அந்தத் தொழிற்சாலை பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தயாரிக்கும் ஒன்று. ஊறுகாய்கள், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் என. தொழிற்சாலையைப் பார்வையிட்டு முடிந்ததும் உணவு உண்ண அழைத்துச் சென்றார்கள். என் பெயரைக் கண்டு நான் சைவ உணவு உண்பவன் என முன்தீர்மானம் செய்து, சைவ உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். பரிமாறப்பட்ட உணவு வகைகளில் பெரும்பாலும் அந்தத் தொழிற்சாலையில் தயாரானவை.

புலப்பெயர்வின் சுவையான கதைகள்

பச்சரிசி சோற்றில் பருப்பும் நெய்யும் ஊற்றப்பட்டது. உணவு நாக்கில் பட்டதும், எனக்கு என் ஊர் நினைவுக்கு வந்துவிட்டது. புரட்டாசி மாத விரத காலத்தில், சனிக்கிழமைகளில் செய்யப்படும் எங்கள் ஊர் ‘உப்புப் பருப்பு’ என்னும் உணவு வகை. இதை யார் செய்தது என வாசியிடம் கேட்டேன். “அது என் பாட்டி சொன்ன ரெசிப்பி (recipe – உணவு முறை) என்றார் அவர்.”

பின்னர் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பல நினைவுகளைச் சொன்னார். அவரது கொள்ளுப்பாட்டனார், தென் ஆப்பிரிக்காவில் தங்கம் கிடைக்கிறது என்னும் ஆசையால் வந்தவர். வாசிக்கு சில தமிழ் வார்த்தைகள் மட்டுமே தெரியும். அவர் குழந்தைகளுக்கு அதுவும் தெரியாது. தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சி முடிந்து, இந்தியாவுடன் உறவுகள் மேம்பட்டவுடன் ஒருமுறை பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு வந்து சென்றிருக்கிறார். அவ்வளவுதான் அவருக்கும் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு.

இதேபோல் சுவையான கதைகளை உலகின் பல நாடுகளிலும் கேட்க முடியும். 1990களுக்குப் பின்னான உலகமயமாக்கலின் விளைவாக இன்று புலம்பெயர்தல் பெரும் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், மஹாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், தில்லி போன்ற முன்னேறிய மாநிலங்களில், வெளி மாநிலத்தவர்கள் வந்து குடியேறுவது மிகவும் சகஜமான ஒன்றாகிவிட்டது. தமிழ்நாட்டில் இருந்து மக்கள் உலகின் பல்வேறு நாடுகளில் குடியேறுவதும் மிக வேகமாக நடக்கிறது. 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

கேரளாவுக்குள் ஒரு ஜார்கண்ட்

மு.இராமநாதன் 16 Jun 2022

புலம்பெயர்தல் சிறு அளவில் இருக்கையில், அது சமூகச் சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை. ஆனால், ஒரு அளவைத் தாண்டுகையில், அவை உள்ளூர் சமூகங்களைப் பாதிக்கத் தொடங்குகின்றன. எடுத்துக்காட்டாக, மும்பையில், ‘சத் பூஜா’ என்னும் வட இந்தியப் பண்டிகை அன்று ஆயிரக்கணக்கில் உத்தர பிரதேசிகள் மற்றும் பிஹாரிகள், மும்பையின் நீர்நிலைகளில் குவிகிறார்கள். அதை உள்ளூர் அரசியல் கட்சிகள் வெறுப்புடன் எதிர்கொள்கின்றன. சில சமயங்களில் அது வன்முறையில் முடிகிறது.

புலம்பெயர்வோரின் புறச்சூழல்

புலம்பெயர் மக்கள் புறச்சூழலில் தங்களை உள்ளூர் சமூகத்துடன் எளிதில் இணைத்துக்கொள்வார்கள். ஆனால், மொழி, மதம், சாதி, திருமணம் போன்ற அகச்சூழல் விஷயங்களில், தங்களின் பிறந்த ஊர்ப் பழக்கங்களை அப்படியே கடைபிடிக்க நினைப்பார்கள். ஆனால், அவையும் காலப்போக்கில் மாறும். எடுத்துக்காட்டாக, மும்பையில் தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் தாராவியிலும், செம்பூரிலும் விநாயக சதுர்த்தி பெரும் பண்டிகையாக, விமரிசையாகக் கொண்டாடப்படுவதைச் சொல்லலாம்.

தமிழ்நாட்டுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த தெலுங்கு, கன்னட மொழி பேசுபவர்கள் இன்று தமிழ்வழிக் கல்வி பயில்வது மிகவும் சகஜம். அதேபோல்தான், இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் அவர்கள் வாழும் மாநிலத்தின் மொழியையும், கலாச்சாரத்தையும் உள்வாங்கி வாழத் தொடங்குகிறார்கள். ஆனால், 19 - 20ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த புலம்பெயர்தல்களுக்கும், அண்மைக்காலத்தில் நிகழ்ந்துவரும் புலம்பெயர்தல்களுக்கும் முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.

முந்தைய நூற்றாண்டுகளில், தகவல்தொடர்பும் வணிகமும் இன்றுபோல் அதிகமில்லாததால், புலம்பெயர்ந்த மக்கள், உள்ளூர் சூழலில் அமிழ்ந்துபோகும் சாத்தியங்கள் அதிகமாக இருந்தன. அதன் விளைவுகள் பாரதூரமானவை. எடுத்துக்காட்டாக, குஜராத்தில் இருந்து 19ஆம் நூற்றாண்டில் உகாண்டா புலம்பெயர்ந்த மரக்கறி உணவினர் அசைவம் உண்பவர்களாக இன்று மாறியிருக்கிறார்கள். அங்கே மாட்டுக்கறி விலக்கப்பட்ட ஒன்றல்ல.

ஆனால், இன்று உலகம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் காணொலித் தொழில்நுட்பத்தால் இறுகப் பிணைக்கப்பட்டுவிட்டது. அயல்நாட்டில் வசிக்கும் ஒருவர், காதுகளில் இயர் ஃபோன்களை மாட்டிக்கொண்டு, கைப்பேசிக்குள் இறங்கினால், தன் சொந்த ஊர் என்னும் மெய்நிகர் உலகில் நுழைந்துவிட முடியும். தன் சொந்த ஊரில் நடக்கும் சிறு சிறு பிரச்சினைகளையும் அறிந்து எதிர்வினையாற்ற முடியும். 

இன்று இந்தியாவில், ஒரு மாநிலத்தில் தேர்தல்கள் நடக்கும்போது, இன்னொரு மாநிலத்தில் போராட்டங்களை உருவாக்கி தேர்தல் நடக்கும் மாநிலத்தில் உள்ள மக்கள் மனநிலையைப் பாதிக்க முடியும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள், ஊடகங்களில், சமூக ஊடகங்களில், அரசியல் சமூகப் பிரச்சினைகளை விவாதிக்க முடியும். இந்த வலைப்பின்னலால், உலகின் எந்த மூலையிலும் நடக்கும் பிரச்சினைகள் உடனுக்குடன் உலகெங்கும் பரவிவிடுகின்றன.

அரசாங்கம் என்னும் வினையூக்கியின் கடமை

நிகழ்காலத்தில், தமிழ்நாட்டில் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மிகப் பெரிய அளவுக்கு புலம்பெயர்ந்து வருகிறார்கள். அதில் கனிசமானவர்கள், காலப்போக்கில் இங்கேயே நிரந்தரமாகக் குடியேறுவார்கள். இது தவிர்க்க இயலாதது.

இதன் காரணங்கள் இரண்டு: முதலாவது, தமிழ்நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி வெகுவாகக் குறைந்துவிட்டது. அதாவது பிறப்பு சதவீதம், இறப்பைவிடக் குறைந்துவிட்டது. இதனால், பல துறைகளுக்கும் தேவையான உழைக்கும் மக்கள் கிடைப்பது குறைகிறது. 

இரண்டாவது காரணம், கல்லூரிக்குச் செல்லும் மக்கள்தொகை அதிகரித்திருப்பது. கல்லூரிப் படிப்பை முடித்த மாணவ / மாணவியர் உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளுக்கு வரத் தயங்குகிறார்கள். ஆனால், வட மாநிலங்களில் மேற்சொன்ன இரண்டு காரணிகள் இல்லை. அங்கே தேவைக்கு அதிகமாக மக்கள்தொகை அதிகரித்துவருகிறது. வேலையின்மை பெரும் பிரச்சினையாக உள்ளது.

தவிர்க்க முடியாத இந்தக் காரணிகளால் நிகழும் புலப்பெயர்வையும், அதனால் உருவாகும் பிரச்சினைகளையும் அரசாங்கம் முன்கூட்டியே திட்டமிட்டு எதிர்கொள்வதே சிறந்த வழியாகும். தமிழ்நாடு தொடர்ந்து உயர் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க வேண்டும் என்றால், புலம்பெயர் தொழிலாளர்களின் வருகையை வரவேற்பதே சரியான வழியாகும்.

இங்கே குறுகிய மனநிலையைக் கொண்ட அணுகுமுறை உதவாது. ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என நம் மூதாதை சொல்லிச் சென்ற வார்த்தைகளே இத்தளத்தில், இக்காலத்தில் நம்மை வழிநடத்த வேண்டும். தமிழ்நாட்டுக்கு வரும் வெளி மாநிலத்தவர், தமிழ்நாட்டின் பொருளாதார உற்பத்திக்கும் மேம்பாட்டுக்கும் பெரும் பங்களிப்பைச் செய்கிறார்கள் என்பதை அரசும், சமூகமும் உளமார அங்கீகரித்தல் முதல் படி.

வெளிமாநிலத்தவர் இங்கு வருகையில், அவர்கள் மிக எளிதாக நம் சமூகத்துடன் ஒன்றும் வகையில், அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை தொழிற்சாலைகள் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். அவர்கள் பிள்ளைகள் எளிதில் கல்வி கற்கும் வகையில், புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர், கோயமுத்தூர், சென்னை போன்ற நகரங்களில், அவர்கள் இல்லம் தேடிச் சென்று கல்வி வழங்குவதை ஒரு முன்னெடுப்பாகச் செய்ய வேண்டும். 

தமிழ் தெரியாத குழந்தைகள் பள்ளி வருகையில், அக்குழந்தைகள் பாகுபாடின்று நம் கல்வி நிலையங்களில் எளிதில் இணைந்து கற்கும் வகையில் ஆசிரியர்கள் செயல்பட அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம், வெளிமாநிலத்தவர்கள், நம் சமூகத்துடன் விரைவாக ஒன்றிணைந்து வாழத் தொடங்குவார்கள். 

இதில் சிக்கல்கள் என்ன?

இதில் முதலாவது சிக்கல் இரயில்வே, தபால், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் போன்ற ஒன்றிய நிறுவனங்களில் வட மாநிலத்தவர்கள், தமிழர்களின் வாய்ப்பைத் தட்டிச் செல்வதைத்  தமிழ்நாடு மிகக் கடுமையாக எதிர்க்க வேண்டும். தமிழே தெரியாத வட மாநிலத்தவர், தமிழ்நாட்டு மாணவர்களைவிட தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேறி வருவதெல்லாம் ஒன்றிய அரசு பணி நியமனங்களில் நடக்கும் ஊழலையே சுட்டுகின்றன.

தமிழ்நாடு அரசு மனிதவள மேம்பாட்டுத் துறையில், ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகளைச் சரியாக அறிந்து மக்களுக்குத் தெரிவிக்கும் ஒரு தனி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு, ஒன்றிய அரசு நிறுவனங்களின் பணியாளர் தேர்வு, தமிழ்நாட்டு மக்களுக்கு நலன்களுக்கு ஊறு விளைவிக்காத வகையில் முறையாக நடக்கிறதா எனக் கண்காணித்து வர வேண்டும். அதில் முறைகேடுகள் எதுவும் நிகழ்ந்தால், அவற்றை அரசின் மூலமாக தலையிட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனை உறுதிசெய்ய வேண்டும்.

ரயில்வே நிறுவனத்தின் டிக்கட் விற்பனையாளர்கள், முன்பதிவு செய்யும் ஊழியர்கள், அனைவரும் தமிழை நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருப்பதைத் தமிழ்நாடு அரசு தலையிட்டு உறுதிசெய்ய வேண்டும். அதேபோல தபால் தந்தி அலுவலகங்களிலும் முதல்நிலைப் பணியாளர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருப்பது கட்டாயம். விமான நிலையங்களில் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினருக்கும் தமிழில் பேசுவதற்கான பயிற்சிகள் தரப்பட வேண்டும். இதில் ஒன்றிய அரசு சுணங்கினால், தமிழ்நாடு அரசே முயற்சிகள் எடுத்துச் செயல்படுத்த வேண்டும்.

இரண்டாவது சிக்கல், அரசு வங்கிகளில் பிற மாநிலத்தவர்கள் பணிபுரிதல். வங்கிகள் வணிகச் சேவை நிறுவனங்கள். பொதுமக்களிடம் இருந்து சேமிப்பைப் பெற்று, தேவைப்படும் தனிமனித / வணிகச் செயல்பாடுகளுக்குக் கடன் வழங்கி தங்கள் பிழைப்பை நடத்தும் நிறுவனங்கள். தங்களின் நுகர்வோரைக் கண்டறிந்து, அவர்களின் மனம் மகிழும் வகையில் தங்கள் சேவைகளை அளிக்க வேண்டும் என்பதே அவர்களின் வணிகக் குறிக்கோளாக இருக்க முடியும்.

ஆனால், தமிழ்நாட்டில் தேசிய வங்கிகளில், குறிப்பாக சிறு நகர, ஊரக வங்கிகளில், தமிழ் தெரியாத வங்கி மேலாளர்கள் பலர் வாடிக்கையாளர்களிடம் அகங்காரத்துடன் நடந்துகொள்ளும் பல நிகழ்ச்சிகள் ஊடகங்களில் பதிவாகி உள்ளன. தேசிய வங்கிகளும், தனியார் வங்கிகளும் இந்தியா முழுவதும் தொழில் செய்வதால், வெளி மாநிலத்தவர் இங்கே வருவது தவிர்க்க இயலாதது. அப்படி வரும் வெளி மாநிலத்தவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் வழியே எளிதில் தமிழ் கற்றுக்கொள்ளும் பாடங்கள் காணொலிப் பயிற்சிகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கித் தரலாம்.

எல்லா வங்கிக் கிளைகளிலும், தமிழ்வழிச் சேவைகள் உண்டு என்னும் அறிவிப்புப் பலகை இருக்க வேண்டும். தமிழில் சேவைகளை மறுத்தால், புகார் செய்ய கட்டணமில்லாத் தொலைபேசி எண் அதில் இருக்க வேண்டும்.  வங்கிகளின் தானியங்கி காசு வழங்கும் இயந்திரங்களில், தமிழ் கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதை ஒரு முக்கியமான விதியாக மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு காலாண்டிலும், தமிழ்நாடு நிதியமைச்சர், வங்கிகளின் செயல்பாட்டுக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார். அந்தக் கூட்டங்களில், வங்கிகளின் பொருளாதார இலக்குகள், அவற்றை அடையும் வழிகள் விவாதிக்கப்படுகின்றன. அதே கூட்டங்களில், நுகர்வோர் சேவை தொடர்பான பிரச்சினைகளும், இலக்குகளும் விவாதிக்கப்பட வேண்டும். இது, தங்கள் நுகர்வோரை மதிக்க வேண்டும் என்னும் சேவை மனப்பான்மையை வங்கி நிர்வாகத்தினுள் மிக அழுத்தமாகக் கொண்டு சேர்க்கும்.

இதையும் வாசியுங்கள்... 18 நிமிட வாசிப்பு

1232 கிமீ: ஒரு கொடும் பயணம்

வினோத் காப்ரி 21 Feb 2022

இறுதியாக…

தமிழ்நாட்டில் மக்கள்தொகை தொடர்ந்து குறைவதாலும், உயர்கல்வி கற்று அதற்கேற்ற வேலைகளைத் தேடும் தமிழர் மனநிலையாலும், உடல் உழைப்புக்கான பணியாளர்கள் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன. இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முன்னேறாத மாநிலங்களில் இருந்து குறைவான ஊதியத்தில் உழைப்பாளர்கள் வருவது தவிர்க்க முடியாத ஒன்று. இது உலகெங்கும் நடக்கும் ஒரு சமூக மாற்றம். தமிழர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணி நிமித்தம் புலம்பெயர்வதும் இதே காரணங்களுக்காகத்தான்.

இங்கே குறுகிய அணுகுமுறை, நீண்ட கால நோக்கில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். சமூக் கொந்தளிப்புகளை உருவாக்கும். ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும். எனவே, புலம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வரும் உழைப்பாளிகளின் அடிப்படை உரிமைகள் (குறைந்தபட்சக் கூலி, ஓய்வூதியம், ஈ.எஸ்.ஐ) போன்றவை பாதுகாக்கப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும். அவர்களின் குழந்தைகள் கல்வி பெறத் தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டும். அவர்கள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் மதிப்பு சேர்ப்பவர்கள்.

அதேசமயத்தில், தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய நிறுவனங்களில், பின் வழியே, தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகளை பிற மாநிலத்தவர்கள் பறித்துச் செல்வதை, கண்கொத்திப் பாம்பு போல அரசு கவனித்து, தடுக்க வேண்டும். அதற்காக, தமிழ்நாடு அரசு மனிதவள மேம்பாடு, தனி அலகை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் இயங்கும் வங்கிகள், ரயில்வே, தபால் தந்தி அலுவலகங்கள் போன்றவற்றில், சேவையை நேரடியாக வழங்கும் முன்களப் பணியாளர்கள் தங்கள் சேவைகளைக் கட்டாயமாகத் தமிழில் வழங்குவதை அரசு, ஒன்றிய அரசு மற்றும் வங்கி நிர்வாகங்களுடன் இணைந்து செயல்பட்டு உறுதிசெய்ய வேண்டும்.

“தமிழன் யாருக்கும் தாழாமல் யாரையும் தாழ்த்தாமல், யாருக்கும் எஜமானாக இல்லாமல் யாருக்கும் அடிமையாகவும் இல்லாமல், யாரையும் சுரண்டாமல் யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழ வேண்டும்” என்னும் அண்ணாவின் வாக்கியம் தமிழ்நாட்டை வழிநடத்த வேண்டும்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

கேரளாவுக்குள் ஒரு ஜார்கண்ட்
இனவாதம் பேசுகிறதா தமிழ்நாடு?
இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை
1232 கிமீ: ஒரு கொடும் பயணம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


3

3





அப்பாவின் சுளுக்கிகலோரிகறுப்பர்–வெள்ளையர்விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்காது கேளாமை ஏன்?மூலக்கூறுகளின் இணைந்த கைகள் வாங்கித்தந்த நோபல்!டெபிட் கார்டுmedia housesஅமெரிக்கப் பயணம்சத்திய சோதனைதனிமை விரும்பிஉற்பத்தி வரிசிறுதானியம்உலகள்ளூரியத்துக்கான அறைகூவல்அல் அக்ஸாபஸ் பாஸ்ஜனநாயகக் கடமைதேபஷிஷ் முகர்ஜி கட்டுரைகர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி: ‘ஈ-தினா’ கணிப்புபயணி தரன் கட்டுரைதிரைப்படங்கள்திருநாவுக்கரசர் சமஸ் பேட்டிசனாதனம்கடலை நன்கு அறிந்திருந்தார்கள் சோழர்கள்: விஜய் சகுஜஅரசு இயந்திரம்சியுசிஇடி – CUCETஅமெரிக்க காங்கிரஸ்ராகுல்: கண்ணுக்குப் புலப்படாத நான்காவது குதிரைஎலும்பு முறிவுவிவசாயிகள் போராட்டம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!