கட்டுரை, பொருளாதாரம், சர்வதேசம், தொழில் 7 நிமிட வாசிப்பு

அதானி விவகாரத்தில் என்ன நடக்கிறது?

சி.பி.கிருஷ்ணன்
06 Feb 2023, 5:00 am
0

ஹிண்டென்பர்க் என்ற அமெரிக்க நிறுவனத்தின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் சாம்ராஜ்யம் வரலாறு காணாத வகையில் மிகப் பெரிய செங்குத்தான சரிவை சந்தித்துள்ளது. 2023 ஜனவரி 24ஆம் தேதி அந்தக் குற்றச்சாட்டு வெளியானபோது அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.19.2 லட்சம் கோடியாக இருந்தது. 2023 பிப்ரவரி 3ஆம் தேதி முடிவில் அதன் மதிப்பு ரூ.10 லட்சம் கோடி சரிந்து 9.2 லட்சம் கோடியாக குறைந்துவிட்டது. இத்தகைய ஒரு சரிவை இவ்வளவு குறுகிய காலத்தில் எந்தப் பெரிய பன்னாட்டு வியாபார குழுமமும் சந்தித்ததாக தெரியவில்லை. 

ஹிண்டென்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு 129 பக்க அறிக்கையாக செய்தி ஊடகங்களில் வெளியான பிறகு 2023 ஜனவரி 26, 27 ஆகிய இரு நாட்களில் மட்டும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.4 லட்சம் கோடி அளவிற்கு சரிந்தது. அந்தக் குற்றச்சாட்டை அதானி குழுமம் முற்றிலுமாக மறுத்து 413 பக்க அறிக்கையை ஜனவரி 29ஆம் நாள் வெளியிட்டது. அதற்குப் பிறகும் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3 வரையிலான 5 நாட்களில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு மேலும் ரூ.6 லட்சம் கோடி சரிந்துவிட்டது. 

அதானி குழுமம் இந்தியாவை தலைமையகமாகக் கொண்ட பன்னாட்டு கம்பெனி. அதன் வியாபாரம் பல நாடுகளில் நடைபெறுகிறது. 2014ஆம் ஆண்டு ரூ.50,000 கோடி சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் வரிசையில் எங்கோ இருந்த கெளதம் அதானி 2022ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இன்று அவர் 17வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரின் இந்த வீழ்ச்சியைப் பல நாடுகள் ஆச்சரியத்துடன் உற்றுநோக்குகின்றன. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

அதானி: காற்றடைத்த பலூன்

கார்த்திக் வேலு 03 Feb 2023

ஹிண்டென்பர்க்கின் அறிக்கை

அப்படி என்னதான் ஹிண்டென்பர்க் நிறுவனம் கூறிவிட்டது?

  • நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக 6 நாடுகளுக்கு நேரடியாக சென்று, ஆயிரக்கணக்கான ஆவணங்களை ஆராய்ந்து, அதானி குழுமத்தின் முன்னாள் பொறுப்பாளர்கள் பலருடன் உரையாடி உறுதிசெய்துகொண்ட பிறகுதான் இந்த அறிக்கையை வைக்கிறோம்.
  • அதானி குழுமம் பல ஆண்டுகளாக மோசடி கணக்கு காட்டி, தங்களின் பங்குகளைச் செயற்கையாக விலை உயர்த்திக் காட்டியுள்ளன.
  • அதானி குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்கள் - அதானி என்டர்ப்ரைஸஸ், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி டோடல் கேஸ், அதானி க்ரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி போர்ட்ஸ், அதானி வில்மார் – மூலம் தனது பங்கு மதிப்புகளைக் கடந்த மூன்று ஆண்டுகளில் மோசடியாக 819% உயர்த்திக் காட்டியதன் மூலம் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு இந்தக் குறுகிய காலகட்டத்தில் ரூ.1,62,000 கோடியிலிருந்து ரூ.9,72,000 கோடியாக 6 மடங்கு உயர்ந்துவிட்டது.
  • அதானி குழுமத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் 22 பேரில் 8 பேர் கெளதம் அதானியின் குடும்ப உறுப்பினர்கள். கெளதம் அதானியின் இளைய சகோதரர் ராஜேஷ் அதானி வைர வியாபாரத்தில் வரி ஊழல், கையெழுத்து மோசடி போன்ற குற்றங்களுக்காக 2004-2005 ஆண்டுகளில் குறைந்தது இரு முறை கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் பின்னாளில் அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்படுகிறார். 
  • கெளதம் அதானியின் மைத்துனர் சமீர் வோரா இதே வைர வியாபார ஊழலில் ஈடுபட்டதாகவும், மீண்டும் மீண்டும் பல முறை கண்காணிப்பாளர்களுக்கு தவறான கணக்கு சமர்ப்பித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவர். இவர் பின்னாளில் அதானி குழுமத்தின் ஆஸ்திரேலியா பிரிவிற்கு செயல் இயக்குநராக பதவி உயர்வு பெறுகிறார்.
  • கெளதம் அதானியின் மூத்த சகோதரார் வினோத் அதானி மொரிஷியஸ் நாட்டில் மட்டும் 38 போலி கம்பெனிகளைச் சொந்தமாகவோ, நெருக்கமானவர்கள் மூலமாகவோ கையாள்கிறார். இவ்வாறு சைப்ரஸ், யுனைடெட் அராப் எமிரேட்ஸ், சிங்கப்பூர், கரீபியன் தீவுகள் இப்படி பல நாடுகளில் போலி கம்பெனிகளை ரகசியமாக வினோத் அதானி நிர்வகிக்கிறார் என்று எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது. 
  • வினோத் அதானி இந்தக் கம்பெனிகள் மூலம் அதானி குழுமத்தின் பங்குகளைச் செயற்கையாக ஊதிப் பெருக்குவது, அதானியின் தனியார் கம்பெனிகளிலிருந்து, பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள பொதுக் கம்பெனிகளுக்கு பணத்தைச் செலுத்தி இவை ஆரோக்கியமாக இருப்பதான தோற்றத்தை உருவாக்குவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.
  • இந்தியாவில் உள்ள விதிகளின்படி பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்ட கம்பெனிகளின் பங்குகளில் குறைந்தபட்சம் 25% கம்பெனியைத் தொடங்கியர்கள் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. ஆனால், அதானி என்டர்பிரைஸஸ், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி டோடல் கேஸ், அதானி பவர் ஆகிய 4 கம்பெனிகள் இந்த விதியைக் கடைபிடிக்கவில்லை என்று அறிகிறோம். அப்படிப்பட்ட கம்பெனிகளைப் பங்குச் சந்தை பட்டியிலிலிருந்து நீக்குவதற்கு வழி வகை உள்ளது.
  • அதானி என்டர்ப்ரைஸஸ் மற்றும் அதானி டோடல் கேஸ் நிறுவனங்களின் தனித்துவமான தணிக்கையாளர் ஷா தந்தனா என்ற மிகச் சிறிய நிறுவனம். அதற்கென்று தனியாக வலைப்பக்கம்கூட தற்போது இல்லை. அதில் 4 பார்ட்னர்களும், 11 ஊழியர்களும் மட்டுமே பணிபுரிகின்றனர். அதானி நிறுவனங்களின் அறிக்கையை முதலில் கையெழுத்திட்டபோது தணிக்கையாளர்களின் வயது 23 - 24தான். அதானி என்டர்ப்ரைஸஸ் நிறுவனத்திற்கு மட்டும் 156 துணை நிறுவனங்கள் உள்ளன. அதானி குழுமத்தின் முக்கிய 7 நிறுவனங்களுக்கு மொத்தமாக 578 துணை நிறுவனங்கள் உள்ளன. இத்தனை பெரிய பகாசூர அதானி நிறுவனங்களை இத்தனை சிறிய தணிக்கையாளர் நிறுவனம்தான் தணிக்கை செய்துள்ளது. எனவே, அதானி குழுமத்திற்கு உண்மையில் எந்த நிதிக் கட்டுப்பாடும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
  • அதானியை விமர்சனம் செய்யத் துணியும் பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் பலர் பல்வேறு வழக்குகள் மூலம் மவுனமாக்கப்பட்டுள்ளனர்; சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, அவருக்கு எதிராக முதலீட்டாளர்களோ, பத்திரிகையாளர்களோ, பொதுமக்களோ ஏன் அரசியலர்களோகூட பேசுவதற்கு பயப்படுகிறார்கள். அதன் காரணமாகவே அவரால் பட்டப் பகலில் எந்தச் சட்டத் திட்டத்தையும் மதிக்காமல் மிகப் பெரிய ஊழலில் ஈடுபட முடிகிறது.
  • இந்த ஆய்வறிக்கையின் முடிவில் நாங்கள் 88 கேள்விகளைக் கேட்டுள்ளோம். அதானி ”தான் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிப்பதாக” கூறிவருகிறார். அப்படியானால் இந்தக் கேள்விகள் அவருக்கு எளிமையான கேள்விகள்தான். அவரின் பதிலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

மோடி சொல்ல விரும்பாத ஒரு சாதனைக் கதை!

சமஸ் | Samas 04 Jun 2015

அதானியின் அறிக்கை

இதற்கு அதானி குழுமம் ஜனவரி 29ஆம் நாள் 413 பக்க மறுப்பு அறிக்கைக் கொடுத்துள்ளது. 

  • ஹிண்டென்பர்க் நிறுவனத்தின் அறிக்கை ஆதாரமற்றது, தவறான தகவல்களைக் கொண்டுள்ளது, உள்நோக்கம் கொண்டது, முரண்பட்ட நலனைக் கொண்டது, பொய்யானது எண்ணற்ற முதலீட்டாளர்களின் நலனுக்கு எதிராக தான் லாபம் அடையப்பார்க்கிறது.
  • அதானி என்டர்ப்ரைஸஸ் மிகப் பெரிய அளவில் பங்குச் சந்தையில் மூலதனம் திரட்ட முற்படும்போது இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த நேரத்தில் இந்த அறிக்கை வெளியிடப்படுவதே அதன் தீயநோக்கத்தைக் காட்டுகிறது.
  • இது ஏதோ ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான தேவையற்ற தாக்குதல் மட்டுமல்ல; இது இந்தியாவின் மீது, இந்திய நாட்டின் சுதந்திரத்தின் மீது, அதன் ஒற்றுமை மீது, இந்திய நிறுவனங்களின் தரத்தின் மீது தொடுக்கப்படும் திட்டமிட்ட தாக்குதல் ஆகும்.
  • இவர்களின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இருந்தாலும் நாங்கள் நல்ல நிர்வாகத்தை, வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிப்பவர்களாதலால் எங்கள் பதிலைக் கொடுக்கிறோம்.
  • 88 கேள்விகளில் 65 கேள்விகளுக்கான பதில் அதானி கம்பெனிகளின் ஆண்டறிக்கைகளில் உள்ளன. அவை இன்றளவிலும் எங்கள் கம்பெனிகளின் வலைப்பக்கங்களில் உள்ளன. 18 கேள்விகள் எங்களைப் பற்றி அல்ல; எங்கள் பங்குதாரர்களைப் பற்றியும் மூன்றாவது நபர்கள் பற்றியும் உள்ளன. 5 கேள்விகள் ஆதாரமற்றக் குற்றச்சாட்டுக்கள். 
  • நாங்கள் இந்த நாட்டின் எல்லா சட்டத் திட்டங்களையும் மதித்து நடக்கிறோம். எங்கள் பங்குதாரர்களின் நலனை பாதுகாப்பதற்காக மிக உயர்வான நிர்வாகத்தை வழங்குகிறோம்.

என்று பொதுவாக அதானி குழுமத்தின் மறுப்பு அறிக்கை கூறுகிறது. ஆனால், இந்த அறிக்கையின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படாததால்தான் அவர்களின் பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது.

இந்தியா மீதான குற்றச்சாட்டா?

அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டை இந்தியாவின் மீதான குற்றச்சாட்டு, இந்திய சுதந்திரத்தின் மீதான குற்றச்சாட்டு என்று சித்தரிப்பதை எப்படி ஏற்க முடியும்? இதில் என்ன ஆதாரம் உள்ளது? இது மக்களை திசை திருப்பி, ஆட்சியாளர்களின் உதவியுடன் தப்பிக்கும் முயற்சியே ஆகும்.

அதானி குழுமத்தின் முதலீடு பற்றிக் கேள்வி எழுப்பியதற்காக ‘த வயர்’ ஆங்கில மின்னிதழ் மீது அதானி குழுமத்தால் 100 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுக்கப்பட்டது; அதேபோல் ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’ தழ் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது. இது ஹிண்டென்பர்க் வைக்கும் இத்தகைய குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என்பதையே காட்டுகிறது.

அதானி குழுமம் சமீபத்தில் வெளியிட்ட 20,000 கோடி ரூபாய் புதிய முதலீட்டில் அந்தக் குழுமத்தின் இரண்டு நிறுவனங்களே முதலீடு செய்தன என்று எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக அது ரத்துசெய்யப்பட்டுவிட்டது. அதானி குழுமத்தின் மீது சர்வதேச அளவில் நம்பிக்கை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஸ்விட்சர்லாந்து நாட்டைத் தலைமையகமாகக் கொண்ட முதலீட்டு வங்கி க்ரெடிட் சூய்ஸ் அதானி குழுமத்தின் பத்திரங்களை அடமானம் வைத்துக்கொண்டு கடன் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்துள்ளது.

அரசு நிறுவனங்களின் முதலீடு

அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்துள்ளது. “எங்களின் இந்த முதலீடு எங்கள் மொத்த சொத்தான 41 லட்சம் கோடி ரூபாயில் 1%கூட இல்லை; எனவே, இதனால் எல்ஐசி பாதிக்கப்படாது” என்று எல்ஐசி சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் கம்பெனிகளில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் சட்டபூர்வமாக தடுக்கப்பட வேண்டும்.

ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உள்ளிட்ட அரசு வங்கிகளும், ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகளும் 80,000 கோடி ரூபாய் அளவிற்கு அதானி குழுமத்திற்கு கடன் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ரிசர்வ் வங்கி இப்போதுதான் விவரங்களைக் கேட்டுள்ளது. இதில் பங்குகள் மீதான கடன் எவ்வளவு என்றும் விவரம் தெரிய வேண்டியுள்ளது.  

“2022 டிசம்பர் 31ஆம் தேதி வரை அதானி குழுமத்திற்கு ஸ்டேட் வங்கியின் மொத்த கடன் ரூ.27,000 கோடி. எங்கள் வங்கியின் மொத்த கடனான 31 லட்சம் கோடி ரூபாயை ஒப்புநோக்கும்போது இது 0.88% மட்டுமே. அதானி குழுமத்தின் பங்குகளுக்கு எதிராக ஸ்டேட் வங்கி கடன் எதுவும் கொடுக்கவில்லை. எனவே, இதுபற்றி கவலை கொள்ள தேவையில்லை” என்று ஸ்டேட் வங்கியின் சேர்மன் தினேஷ் குமார் காரா கூறுகிறார். 

பொதுத்துறை வங்கிகள் கார்ப்பரேட்டுகளுக்கு கடன் கொடுக்க ஆட்சியாளர்களால் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பது வெளிப்படை. ஒரு நிறுவனத்தின் பங்குகளுக்கு எதிராக கடன் கொடுப்பது என்பது எப்போதுமே ஆபத்தானது. அரசு வங்கிகள் அவ்வாறு கடன் கொடுப்பது தடைசெய்யப்பட வேண்டும். எல்ஐசி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு இந்த நிகழ்வால் பாதிப்பு ஏற்படாமல் பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசைச் சார்ந்தது. 

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு

பல பங்குச் சந்தை ஊழல்களை நாடு கண்டுள்ளது. அப்போதெல்லாம் செபி என்ன செய்துகொண்டிருந்தது என்பது விடை தெரியாத கேள்வி. சமீபத்தில் நடைபெற்ற சித்ரா ராமகிருஷ்ணா ஊழல் பற்றி எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட சாதாரண முதலீட்டாளர்களுக்கு எந்தவிதமான நஷ்டஈடும் கொடுக்கப்படவில்லை. இப்போதும் சாதாரண பங்குதாரர்கள் பாதிக்கப்படும்போது செபி என்ன செய்கிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

எதிர்கட்சிகள் இந்த ஊழல் குற்றச்சாட்டைப் பற்றி தீவிர விசாரணையும், நடவடிக்கையும் வேண்டும் என்று ஒரே குரலாக கோருகின்றன. ஆனால், ஒன்றிய அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுபற்றி விவாதம் நடத்தக்கூட அனுமதிக்கவில்லை. அதன் காரணமாக இரு அவைகளும் முடங்கிப்போயுள்ளன. “நாடாளுமன்றத்தில் விவாதம் அனுமதிக்கப்பட்டால் தாங்கள் அம்பலப்பட்டுவிடுவோம் என்று பயந்துதான் இந்த அரசு விவாதத்தை முடக்குகிறது” என்று ஒன்றிய அரசு மீது பகிரங்கக் குற்றச்சாட்டை எதிர்கட்சித் தலைவர்கள் வைக்கின்றனர்.

நாட்டு மக்கள் அனைவருக்குமே இன்று இந்தக் கேள்வி எழுந்திருக்கிறது: அதானி விவகாரத்தில் என்ன நடக்கிறது?

எனவே, ஹிண்டென்பர்க் அறிக்கை வைத்துள்ள குற்றச்சாட்டைப் பற்றி உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் உயர்மட்ட குழு ஒன்று அமைத்து விசாரித்து உண்மை கண்டறியப்பட வேண்டும். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுவே இந்தப் பிரச்சினைக்கு உண்மையான தீர்வாக அமையும்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

அதானி: காற்றடைத்த பலூன்
மோடி சொல்ல விரும்பாத ஒரு சாதனைக் கதை!
சித்ரா ராமகிருஷ்ணன் முறைகேடுகளின் கதை
சித்ரா ராமகிருஷ்ணா விவகாரம் என்னவாகும்?
எல்ஐசி: விலை பேசப்படும் கடவுளின் விரல்!
இந்திய பங்குச்சந்தை எப்படி ஏறுகிறது?
எளியோர் மீதான கடும் தாக்குதல்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சரியான ஒரு முன்மாதிரி இல்லை, ஏன்?
இந்தியா தேடிக்கொள்ளும் ஆபத்து

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சி.பி.கிருஷ்ணன்

சிபி கிருஷ்ணன், இணைச் செயலாளர் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், தொடர்புக்கு: cpkrishnan1959@gmail.com


2

2





கணினி அறிவியல் என் பள்ளி எனக்குக் கொடுத்த கொடை கடினமான காலங்கள்ஊட்டச்சத்துக் குறைபாடுஉன் எழுத்து கொண்டாடப்படலைன்னா நீ எழுத்தானே இல்லை: பசவராஜ் பொம்மைசூழலியலாளர்கள் கவலைமாணவர் நலன்75 ஆண்டுகள்குமாரி செல்ஜாவிளைபொருள்மாவுச்சத்துராஜ்ய சபாசோரம்தங்காஉத்தாலகர்மக்களவை பொதுத் தேர்தல் - 2024தாமிரம்அசோக் வர்தன் ஷெட்டிநச்சரிப்பு காதல் இல்லைஎன்எஸ்ஏபி திட்டம்காவியம்நினைவுச் சின்னங்கள்மற்றமைஹார்னிமன்எதிர்மறைப் பிம்பம்விக்தர் ஹாராகொலஸ்ட்ரால்சார்க்தலைமைச் செயல் அதிகாரிபிராந்தியச் சமநிலை அறிவிப்புக்கு வேண்டும் முன்னுரிபற்கூச்சம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!