கட்டுரை, ஆரோக்கியம், இன்னொரு குரல் 10 நிமிட வாசிப்பு
அரசு மருத்துவமனையில் என் பிரசவ அனுபவம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நிலவிய சுகாதாரச் சீர்கேடு தொடர்பில் ‘அருஞ்சொல்’லில் வ.ரங்காசாரி எழுதிய, ‘மழை நாளில் மருத்துவமனை சித்திரவதைகள்’ கட்டுரையை வாசித்தேன். நோயாளியைப் பார்க்கச் சென்ற ஒரு நபராக, அம்மருத்துவமனையைப் பற்றிய தன்னுடைய அனுபவத்தை அவர் எழுதியிருக்கிறார். நான், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு நபராக என்னுடைய அனுபவத்தை எழுத விரும்புகிறேன்.
⁋
என்னுடைய பெயர் ஃபாத்திமா நஷிகா. சென்ற ஜூலை 20 அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டேன். காலை 11 மணி. மகப்பேறு பிரிவுக் கட்டிடத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். என்னுடன் வந்திருந்த என் தாயும், கணவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கட்டிடத்துக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள். என்னுடைய விவரங்களைப் பதிவுசெய்துவிட்டு, ரத்த மாதிரியையும், கொரனாவுக்கான பரிசோதனையையும் செய்துவிட்டு, காத்திருக்கச் சொன்னார்கள். என்னைப் போல 20 பெண்கள் காத்துக்கொண்டிருந்தனர்.
மதியம் மணி ஒன்றானது, இரண்டானது. மருத்துவரோ, செவிலியரோ யாரும் எங்களிடம் வந்து எதுவும் பேசவில்லை. நாங்கள் செவிலியரிடம் எப்போது எங்களைப் பரிசோதிப்பீர்கள் என்று விவரங்கள் கேட்டாலும், ‘போமா, போய் உட்காருமா, கூப்பிடும்போது கூப்பிடுவோம்’ என்று அதட்டலான பதில் மட்டும்தான் கிடைத்தது. இப்படியே மணி கடந்து இரவு எட்டானது.
எப்போது வேண்டுமானலும் பிரசவ வலி வரலாம் என்ற நிலையில் நாங்கள் இருந்தோம். அதிலும் நான், பிரவசத்துக்குக் கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிந்து ஒரு வாரம் ஆகியும் வலி வராத நிலையில் சேர்ந்திருக்கிறேன். இரவு எட்டு மணிக்குப் பிறகு செவிலியர்கள் எங்களை இன்னொரு கட்டிடத்துக்குக் கூட்டிச் சென்றார்கள். அது பிரசவ வார்டு. அந்தக் கட்டிடத்தின் தரைத் தளத்தில் இருபது படுக்கைகள் இருந்திருக்கும். அனைத்திலும் பிரவச வலியில் துடித்துக்கொண்டிருக்கும் பெண்கள் இருந்தனர்.
எங்கள் இருபது பேருக்குத் தேவையான கட்டில்கள் தரைத் தளத்தில் இல்லை அடுத்தத் தளத்துக் அழைத்துச் சென்று படுக்கை தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எங்கள் அனைவரையும் அதே தளத்தில் தரையில் அமரச் சொன்னார்கள்.
எப்போது மருத்துவர் வருவார், எப்போது படுக்கை வழங்கப்படும், எப்போது சிகிச்சை பார்ப்பார்கள்… எந்தத் தகவலும் இல்லை. செவிலியரிடமுமோ, மருத்துவரிடமோ சென்று கேட்டால், ‘போமா, போய் உக்காருமா, கூப்பிடும்போது கூப்பிடுவோம்’ என்றார்கள்.
நீங்கள் சற்று கற்பனைசெய்து பாருங்கள். நாங்கள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் பிரசவ வலி வரலாம் என்ற நிலையில் இருப்பவர்கள். கூடவே, பிரசவ வலி குறித்த பயம் எங்கள் உடல் முழுவதும் பரவியிருந்தது. அப்படியான நிலையிருந்த எங்களைக் காலையிலிருந்து எந்தத் தகவலும் சொல்லாமல் காத்திருக்கச் செய்துவிட்டு, இரவிலும் படுக்கைத் தராமல், பரிசோதனைச் செய்யாமல், எந்த விவரங்களும் சொல்லாமல் தரையில் படுக்கச்சொல்வது என்பது எவ்வளவு மோசமான ஒரு செயல்பாடு? வேறு வழியில்லை. வெளியில் அம்மாவிடம் போர்வை வாங்கிக்கொண்டு வந்து தரையில் விரித்து சுருண்டு படுத்தேன். என்னைப்போல, சக பிரசவப் பெண்களும் கிடைத்த இடத்தில் போர்வையை விரித்துப் படுத்துக்கொண்டனர்.
இரவில் சிறுநீர் கழிக்க, கழிப்பறைக்குச் சென்றேன். விளக்கு எரியவில்லை. கதவுகள் உடைந்திருந்தன. கழிப்பறையின் தளத்தில் நீர் தேங்கியிருந்தது. நைட்டியை முழங்கால் வரையில் சற்று தூக்கிப் பிடித்துக்கொண்டு, உடல் வேதனையுடன் மொபைல் பிளாஷ் உதவியுடன் உள்ளே சென்றேன். அவ்வளவு அசுத்தம். கண்ணீர் முட்டிவிட்டது. எல்லோருமே காரணமாக இருக்கலாம். ஆனால், எனக்கு அழுகையை அடக்க முடியவில்லை.
அழுதபடி நின்றுகொண்டே சிறுநீர் கழித்தேன். வெளியே என் இடத்துக்கு வந்து கணவருக்கு போன் செய்து அழுதேன். ஆறுதல் சொன்னார். “நான் தலைமை மருத்துவரைப் பார்த்து புகார் அளிக்கிறேன். நீ இப்போது அனுபவிப்பது மருத்துவமனையில் நிகழும் அவலத்தை அல்ல. நம் நாட்டின் அவலத்தை. இந்தச் சூழலில்தான் நம் குழந்தை வளரப்போகிறது. நாம் இதற்கெல்லாம் ஈடுகொடுக்கத்தான் வேண்டும்” என்றார்.
இப்படி அவர் சொல்ல காரணம் உண்டு. நானும் என் கணவரும் கலந்து பேசி முடிவெடுத்துதான் அரசு மருத்துவமனையில் வந்துசேர்ந்தோம். நான் கருவுற்றிருக்கிறேன் என்பது உறுதியான தினத்திலே நாங்கள் முடிவுசெய்துவிட்டோம், ‘நாம் அரசு மருத்துவமனையில்தான் பத்து மாதங்களும் பரிசோதனைசெய்துகொள்ள வேண்டும்; அங்குதான் குழந்தை பெற்றுகொள்ள வேண்டும்!’
தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்க்க பணமில்லாமல் இல்லை. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் செல்வது, அரசுப் பள்ளியில் குழந்தையைச் சேர்ப்பது என்பதெல்லாம் விழுமியங்கள் அடிப்படையில் எடுத்த முடிவு. இது நமக்கான அமைப்பு, மக்களுடைய சொத்து என்று உறுதியாக நம்புகிறோம்.
கருவுற்ற முதல் வாரத்திலே என் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆரம்பச் சுகாதார மையத்தில் மருத்துவரைச் சந்தித்து என் பெயரை ஆவணத்தில் பதிவுசெய்துகொண்டேன். மாதாந்திரப் பரிசோதனை அங்குதான். அங்கிருந்த செவிலியர்களும் சரி, மருத்துவரும் சரி மிகுந்த அக்கறையுடன் கவனித்தார்கள்.
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார மையங்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு எப்போதுமே கூடுதல் முக்கியத்துவம் வழங்கிவருகின்றன என்று என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். எனக்கும் அப்படித்தான் அனுபவம் இருந்தது. நான் ஒரு வாரம் பரிசோதனைக்கு செல்லாவிட்டால், சுகாதார மையத்திலிருந்து செவிலியர் போன் செய்து காரணம் கேட்பார்கள்; அக்கறையோடு விசாரிப்பார்கள். அந்த அளவுக்குத் தொடந்து நம்மை கண்காணிப்பார்கள். இவையெல்லாம் எனக்கு என் பிரசவ நாள் குறித்து கூடுதல் நம்பிக்கை அளித்தது.
எனக்கு குறித்தத் தேதியைத் தாண்டியும், வலி வரவில்லை. எனவே, என்னை எங்கள் மாவட்டத் தலைமை மருத்துவமனையான திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர் பரிந்துரைத்தார். அந்தப் பரிந்துரைச் சீட்டை வாங்கிக்கொண்டுதான், நானும் என் கணவரும் என் தாயும் பெட்டிப் படுக்கையுடன் தலைமை மருத்துவமனைக்கு வந்தோம். அன்றைய தினம்தான் இவ்வளவும்.
⁋
அந்த இரவு முழுவதும் தூங்கவில்லை. தூங்க முடியவில்லை. கடிகாரத்தையே பாத்துக்கொண்டிருந்தேன். காலை ஐந்து மணிக்கு எங்கள் அனைவரையும் செவிலியர் அழைத்தார். அனைவரும் எழுந்து வரிசையில் நின்றோம். பெண் மருத்துவர்கள் எங்களைப் பரிசோதித்தனர். சிலரைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, சிலரை இன்னொரு பரிசோதனை அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் நானும் ஒருத்தி.
அந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அனைவரும், பிரசவ தேதி தாண்டியும் வலி வராதவர்கள். அதனால், எங்களுக்கு மருந்து வைத்து செயற்கையாக வலியைத் தூண்டுவார்கள். இது வழக்கமான ஒரு நடைமுறை. தானாக வலிவந்து குழந்தை பிறப்பதைவிடவும், மிகக் கடுமையான வேதனை மிகுந்தது செய்கையாக வலியைத் தூண்டி குழந்தையைப் பெற்றெடுப்பது. அதிலும் வலி வராவிட்டால், அறுவை சிகிச்சைதான்.
பொதுவாக, பண நெருக்கடியைத் தாண்டி, பிரசவத்துக்கு மக்கள் அரசு மருத்துவனைக்கு நாடுவதற்கு ஒரு காரணம், அங்கு முடிந்த அளவுக்கு சுகப் பிரசவத்துக்கு முயற்சி செய்வார்கள் என்பதுதான். அரசு மருத்துவமனைகள் இந்த நம்பிக்கையைக் காக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் இதை எதிர்பார்க்க முடிவதில்லை.
என் பிறப்புறுப்பில் டியூப் மூலம் மருத்து செலுத்தினார்கள். சற்று நேரத்திலேயே வலி ஆரம்பமாகிவிட்டது. என் எலும்புகள் விலகத் தொடங்கின. நரக வலி. என்னைப் போல் மருந்து வைக்கப்பட்ட மற்றப் பெண்களும் வலியில் கத்தத் தொடங்கினர். அந்த அறையே எங்களின் கதறலால் நிறைந்திருந்தது.
அப்போதும் எங்களுக்குப் படுக்கை வழங்கப்படவில்லை. காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டோம். எனக்கு காலையில் ஆறு மணிக்கு ஆரம்பித்த வலி மதியம் மூன்று மணி வரையில் நீண்டது. நான் வலி தாங்கமுடியால் துடிப்பதை என் அம்மா மருத்துவரிடம் தெரிவித்தார். அதன் பிறகு செவிலியர்கள் என்னைப் பிரசவ அறைக்கு சக்கர நாற்காலியில் அமரவைத்து அழைத்துச் சென்றார்கள்.
படுக்கைகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு படுக்கையிலும் கர்ப்பிணிகள் படுத்திருக்க அவர்கள் போட்டிருந்த நைட்டி அவர்களின் வயிற்றுக்கு மேல் தூக்கப்பட்டிருந்து. மருத்துவர்கள் வழிகாட்ட மருத்துவ மாணவ, மாணவிகள் பிரவசம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
குழந்தையின் அழுகை கேட்கும்போது தாயின் கதறல் அடங்கும். என் கதறல் அடங்கியது. மருத்துவர் என் குழந்தையை எடுத்து என் முகத்துக்கு நேரே காட்டி என்ன குழந்தை என்று கேட்டார். பெண் என்றேன். அந்தக் குழந்தையை என் வயிற்றின் மேல் போட்டு எடுத்தார்கள். அப்போதுதான் எனக்கு நிம்மதி மூச்சு வந்தது.
என் உடலைச் சுத்தப்படுத்திவிட்டு, வேறு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். என் அம்மா அங்கு குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தாள். அந்த அறையில் எனக்குப் படுக்கைத் தரப்பட்டது. உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள்.
திருநெல்வேவில் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டுக்குள் குழந்தைகளைப் பார்க்க ஆண்களுக்கு அனுமதியில்லை. பிரவசவித்த தாய்மாருடன் உதவிக்கு ஒருவர் மட்டுமே இருக்க அனுமதி. என்ன காரணம் என்றால், பொதுவாக அரசு மருத்துவமனைகளில் பிரவச வார்டில் குழந்தைத் திருட்டுக்கான ஆபத்து அதிகம். அதைத் தடுக்கும் பொருட்டு இவ்வளவு கட்டுப்பாடும்.
அன்றிரவு என் அம்மா என் கட்டிலின் கீழ் போர்வையை விரித்துப் படுத்துக்கொண்டாள். என்னருகில் குழந்தைப் படுத்திருந்தது. ஒரு நாளுக்குப் பிறகு நான் கட்டில் கிடைத்துத் தூங்குகிறேன். அந்த இரவு நல்லபடி கழிந்தது.
⁋
அடுத்த நாள் எங்களை வேறு கட்டிடத்துக்கு மாற்றப் போவதாகச் சொன்னார்கள். தினமும் அங்கு நூற்றுக்கணக்கில் பிரசவம் நிகழ்கிறது. இதனால் படுக்கைக்குத் தட்டுப்பாடு. எனவே, பிரசவமானவர்களைப் பிரவசம் முடிந்த மறுதினம் வேறு கட்டிடத்துக்கு மாற்றிவிடுவார்கள். இங்குதான் அடுத்த பிரச்சினை ஆரம்பமானது.
வேறு கட்டிடத்தில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை நான்காவது தளத்தில் இருந்தது. அந்தக் கட்டிடத்தில் மின் தூக்கி வேலை செய்யவில்லை. நாங்கள் படியில் ஏறிதான் அந்த அறைக்குச் செல்ல வேண்டும். எப்படி முடியும்? முன்தினம்தான் பிரவசம் நடந்திருக்கிறது; எங்கள் பிறப்புறுப்பில் தையல் போட்டிருக்கிறார்கள்; இதற்கு மேலும் நாங்கள் எப்படி நான்கு மாடிக்கு படிகளில் ஏற முடியும்?
எங்களை சக்கர நாற்காலியில் கொண்டுசெல்லுங்களேன் என்று நான் மன்றாடினேன். முடியாது என்று செவிலியர்கள் மறுத்தார்கள். எங்களுக்கு சக்கர நாற்காலி தரும் வரையில் நான் உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறி தரையில் படுத்தேன். சற்று நேரம் கழித்து செவிலியர்கள் வந்து எங்களை அனைவரையும் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்வதாகக் கூறினார்கள். நாங்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டோம்.
இது நான் முதல் நாள் அட்மிஷன் போட்டு இரவு எட்டு மணி வரையில் காத்திருந்த கட்டிடம்தான். அப்போது தரைத் தளத்தில் காத்திருந்தேன். இப்போது நான்காவது தளம். ஒப்பிட்டளவில் இந்த அறையில் வசதிகள் பரவாயில்லை. கழிப்பறை சுத்தமாக இருந்தது. அனைவருக்கும் படுக்கை வழங்கப்பட்டிருந்தது. செவிலியர்களும் சற்று கவனித்துக்கொண்டார்கள்.
இன்னொரு விஷயத்தையும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். வெளியே தங்கியிருப்பவர்களின் நிலைமையும் பரிதாபத்துக்குரியதுதான். எங்களுக்காவது ஒரு இடத்தில் சுத்தமாகவும், ஒரு இடத்தில் அவலமாகவும் எப்படியோ கழிப்பறை என்று ஒன்று இருந்தது. ஆனால், வெளியில் காத்திருப்பவர்களுக்கு அப்படி ஒன்று இல்லவே இல்லை. பல ஏக்கர்களுக்குப் பரந்து விரிந்த அந்த மருத்துவமனையில் பொதுக் கழிப்பிடம் என்று எதுவும் இல்லை. பெண்களுக்கு என்று ஒரு கழிப்பறை இருக்கிறது. அது பயன்படுத்துவே முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது. ஆண்களுக்கு அதற்கும் வழி இல்லை.
எனில், நோயாளிகளைப் பார்க்க வருபவர்கள், நோயாளிகளின் உதவிக்காக மருத்துவமனை வளாகத்தில் இரவில் தங்குபவர்கள் என்ன செய்வார்கள்? நீங்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வளாகச் சுவரைப் சுற்றிப் பாருங்கள். சிறுநீர்த் தடமாக இருக்கும்.
⁋
ரங்காசாரி கட்டுரையோடு, அதை ஒட்டி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதன்மையர் டாக்டர் தேரணிராஜன் எழுதியிருந்த எதிர்வினையையும் நான் வாசித்தேன். அவர் சொல்கிறபடி, ‘அரசு மருத்துவமனை சுத்தம் கூட்டுப்பொறுப்பு’ என்பது சரிதான். மக்களும் பொறுப்புணர்வு இல்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்பது உண்மைதான். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பெருந்தொகையான மக்களோடு அன்றாடம் அல்லலுறுகிறார்கள் என்பதும் உண்மைதான். இதே அளவுக்கான இன்னொரு உண்மை என்னவென்றால், இவ்வளவு பெருந்தொகை மக்களைக் கையாளும் அளவுக்கு நம்முடைய மருத்துவக் கட்டமைப்பு விரிவாக்கப்படவில்லை என்பது.
விளைவாக என்னவாகிறது என்றால், ‘இங்கே இப்படித்தான், இவ்வளவுதான்’ என்கிற மனநிலை எங்கோ நம் அரசு மருத்துவமனைகளில் படிந்திருக்கிறது என்பது மறுக்கவே முடியாத உண்மை. இதற்கு நாம் கூட்டாகத்தான் போராட வேண்டும். அரசு மருத்துவமனைகள் நமக்கானவை, அரசு மருத்துவர்கள் நம்மவர்கள் என்பதால், விமர்சனங்களை மூடிவைப்பதில் அர்த்தம் இல்லை. மக்கள்தான் இதுகுறித்துப் பேச வேண்டும். ஏனென்றால், மருத்துவர்களால் இதுகுறித்துப் பேச முடியாது.
இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொண்டது மனநிறைவாகவும், மகிழ்ச்சியானதாகவும் எனக்கு இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் என்னுடைய உறவினர்கள் குழந்தைகள் பெற்றபோது அவர்களைப் பார்க்க அங்கு சென்று இருக்கிறேன். படுக்கை வசதி, சுத்தம் இதெல்லாம் இருந்தாலும், அங்கு ஒருவிதமன இறுக்கமான சூழலை நான் உணர்ந்தேன். ஒவ்வொன்றுக்கும் பணத்தை வாரியிறைக்க வேண்டும். ‘எப்போது என்ன சொல்வார்களோ, வீட்டுக்குப் போனால்தான் நிம்மதி’ என்று மனம் கலங்கியபடி இருக்கும். உயிர் தொடர்பான அச்சம் இருக்கும். சிகிச்சையை நோயாளியின் தேவையின் அடிப்படையில்தான் முடிவெடுக்கிறார்களா, தங்களுடைய பணத் தேவையின் நிமித்தம் எடுக்கிறார்களா என்ற சந்தேகம் இருக்கும். இவையெல்லாம் எனக்கு இல்லை.
தவிர, பொதுவாக மருத்துவக் கல்லூரியுடன் இணைந்திருக்கும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் மேம்பட்ட நிலையில் இருக்கும் என்று கூறப்படுவதுண்டு. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளைவிடவும் இங்கு மருத்துவக் கட்டமைப்பு தரமான முறையில் உள்ளது என்றே சொல்லலாம். நான் அனுமதிக்கப்பட்ட அன்றைய தினம், ஒரு பெண்ணை ஆம்புலன்ஸில் அழைத்துவந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு எட்டாவது மாதம்தான் நடக்கிறது. அதற்குள் நீர்க் குடம் உடைந்து, திருநெல்வேலியில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனைகள் அவரைக் காப்பாற்றுவது சிரமம் என்று கைவிரித்துவிட்ட நிலையில், கடைசியாக அவரை இங்கு கொண்டுவந்துள்ளனர். அரை மணி நேரத்தில் தாயும் சேயும் நலம் என செய்தி. இப்படி எவ்வளவோ நல்ல கதைகளும் உண்டு. இப்போதும்கூட என் உறவுப் பெண் ஒருவருக்கு, பிரசவத்துக்குத் திருநெல்வேலி அரசு மருத்துவமனையே பரிந்துரைத்திருக்கிறேன்.
பிரச்சினை என்னவென்றால், நாம் நடத்தப்படும் விதம்தான். சிகிச்சை என்பது மருத்துவம் பார்ப்பதில் மட்டும் இல்லை, நோயாளிகளை எப்படி நடத்துகிறோம் என்பதிலும் இருக்கிறது. கண்ணியமற்ற முறையில் நடத்தப்படுவதுதான் வருத்தம் அளிக்கிறது. இது நம்முடைய அமைப்பிலேயே இருக்கிறது. அது மாற வேண்டும்!
3
1
பின்னூட்டம் (6)
Login / Create an account to add a comment / reply.
Raja 3 years ago
நெஞ்சை சுட்ட பதிவு. இந்தியா வல்லரசு ஆக பகீரத பிரயத்தனம் செய்கிறது. நினைத்து பார்க்க முடியாத அளவு கோடிக்கணக்கான பணத்தை கொட்டி ஆயுதங்களும் படைகளும் நிரப்பப்படுகின்றன, வாங்கப்படுகின்றன. ஆனால் இந்த நாட்டின் எளிய குடிமக்கள் அதிலும் ஒரு புதிய உயிர் பிறக்கும் இடத்திலேயே இத்தனை வசதி குறைவுகள், துன்பங்கள். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அடிப்படை தேவைகளான உணவு, உடை, மருத்துவம், சுகாதாரம், உறைவிடம் போன்றவற்றில் பெரும்பாலான மக்கள் மிக மோசமான நிலையில் தான் உள்ளனர். யாருக்கான விடுதலையை நம் முன்னோர்கள் போராடி பெற்றார்கள் என்ற அளவில் அவநம்பிக்கை மேலிடுகிறது. பேசாமல் ஆங்கிலேயர்களே ஆண்டு கொண்டு இருக்கலாம் என்று தோன்றும் அளவு நாடு போகும் பாதை கவலை அளிக்கிறது. இது எதோ ஒரு கட்சியை மட்டும் சுட்டி காட்டி தப்பித்து கொள்ள இயலாது. சமூகமாக அனைவருமே இந்த சூழ்நிலைக்கு பொறுப்பேற்று கொள்ள வேண்டும். அதில் ஒருவனாக இந்த பதிவை எழுதிய ஃபாத்திமா நஷிகாவிடம் மனதார மன்னிப்பு கேட்கிறேன். மன்னிப்பு கேட்பது என்பது எளிதான தப்பித்துக்கொள்ளும் செயல்தான். ஒவ்வொருவரும் தன்னளவில் மாறுவதே அடிப்படை மாற்றத்திற்கு வழிவகுக்கும். சாமான்யமான தனி மனிதர்களே வரலாற்றை மாற்றி எழுதி இருக்கிறார்கள், மனிதர்களின் தலைவிதியை நிர்ணயித்து இருக்கிறார்கள். இன்றும் மட்டுமல்ல எதிர்காலத்திலும் அப்படியே..தனி மனிதர்கள் தான் மாற்றத்தை உண்டு பண்ணுவார்கள். எனவே எதோ அரசியல் கட்சியை அல்லது அதிகாரிகளை காரணம் காட்டுவதை விட தன்னளவில் மாற்றத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தால் மட்டுமே சமூகமும் மாற்றம் பெறும். அதுவரை சில பல வசதிகள் கூடுமே தவிர இப்படியேதான் தொடரும்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
V NEELAKANDAN 3 years ago
அரசுக் கட்டமைப்பைத்தான் பயன்படுத்துவேன் என்ற தம்பதியரின் உறுதிப்பாட்டுக்குத் தலைவணங்கி நன்றி கூறுவோம். குறை, நிறைகளை நியாயபூர்வமாக எடுத்துக் கூறியுள்ளார். கட்டமைப்பு போதாமைகளைத் தாண்டி மனித அணுகுமுறை மிகமிக முக்கியமானது, இயலாமையையும் இனிய வார்த்தைகளில் பொறுமையாகக் கூறி நம்பிக்கை ஏற்படுத்துவதும் முக்கியம். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊழியர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்பது நிதர்சனம். அதனினும் செவிலியர்கள் பற்றாக்குறை மிகமிக அதிகம். பணிச் சுமை ‘சிஸ்டர்’களையும் இயல்புக்கு மாறாக நடந்து கொள்ளச் செய்கிறது. தற்போது ஒரு புதிய பிரச்சனை, இடஒதுக்கீடு பெறாத உயர் சாதியினரில் வருமானம் குறைந்தவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு பிரச்சனை நீண்ட தாமதம் ஆகிறது. இதன் விளைவு மருத்துவ மனைகளில் குறிப்பாகத் தமிழக அரசு மருத்துவ மனைகளில் எவ்வளவு மோசமாக பாதிக்கிறது என்பதை யாருமே உணரவில்லை. தமிழக அரசு மருத்துவமனைகள் நிரந்தர மருத்துவர்கள் போலவே ஏறத்தாழ கூடுதல் எண்ணிக்கையில் மருத்துவ உயர்கல்வி பயிற்சி மருத்துவர்களைக் கொண்டு தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. வழக்கு தாமதத்தால் அந்த இயல்பு ஓட்டத் தொடர்ச்சியில் ஒரு முழு வருட எண்ணிக்கையிலான பயிற்சி மருத்துவர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது வருட பயிற்சி மாணவர்கள் எப்போதுமே இருக்கும் நிலையில் தற்போது புதிய முதல் வருட மாணவர்கள் முழுமையாக இல்லை. அவர்களுக்குத் தேவையான பயிற்சி கிடைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, இரண்டாவது மற்றும் மூன்றாவது வருட பயிற்சி மருத்துவர்களே அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் ‘லிட்ரலி’ என்று சொல்வார்களே அப்படி உண்மையாகவே அனைவரும் ஓய்வின்றி 7 x 24 பணியாற்றி வருகின்றனர். அது மட்டுமின்றி அனைவருமே ஒரு மன அழுத்தத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில் மருத்துவமனை பணிகள் மட்டுமின்றி கூடுதலாக தடுப்பூசி முகாம் மற்றும் மழைக்கால சிறப்பு முகாம்கள் பணிகளுக்கும் அனுப்பப்படுகின்றனர். இதை எல்லாம் பட்டியலிடுவதால் தாய்மை நிலையில் அனுமதிக்கப்பட்ட சகோதரி அலைக்கழிக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது. நிர்வாகம், நீதிமன்றம் மற்றும் குறிப்பாக மருத்துவமனை அதிகாரிகள் இந்தப் பிரச்சனைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்பு. எதிர்நோக்கிக் காத்திருந்த தாயைத் தன் குரலால் வாழ்த்திய இம்மண்ணின் புது வரவை அரசு பொது மருத்துமனையில்தான் கேட்க வேண்டும் என்ற சகோதரியின் மனஉறுதிக்கு மீண்டும் ஸ்வாகதம்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
V NEELAKANDAN 3 years ago
அரசுக் கட்டமைப்பைத்தான் பயன்படுத்துவேன் என்ற தம்பதியரின் உறுதிப்பாட்டுக்குத் தலைவணங்கி நன்றி கூறுவோம். குறை, நிறைகளை நியாயபூர்வமாக எடுத்துக் கூறியுள்ளார். கட்டமைப்பு போதாமைகளைத் தாண்டி மனித அணுகுமுறை மிகமிக முக்கியமானது, இயலாமையையும் இனிய வார்த்தைகளில் பொறுமையாகக் கூறி நம்பிக்கை ஏற்படுத்துவதும் முக்கியம். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊழியர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்பது நிதர்சனம். அதனினும் செவிலியர்கள் பற்றாக்குறை மிகமிக அதிகம். பணிச் சுமை ‘சிஸ்டர்’களையும் இயல்புக்கு மாறாக நடந்து கொள்ளச் செய்கிறது. தற்போது ஒரு புதிய பிரச்சனை, இடஒதுக்கீடு பெறாத உயர் சாதியினரில் வருமானம் குறைந்தவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு பிரச்சனை நீண்ட தாமதம் ஆகிறது. இதன் விளைவு மருத்துவ மனைகளில் குறிப்பாகத் தமிழக அரசு மருத்துவ மனைகளில் எவ்வளவு மோசமாக பாதிக்கிறது என்பதை யாருமே உணரவில்லை. தமிழக அரசு மருத்துவமனைகள் நிரந்தர மருத்துவர்கள் போலவே ஏறத்தாழ கூடுதல் எண்ணிக்கையில் மருத்துவ உயர்கல்வி பயிற்சி மருத்துவர்களைக் கொண்டு தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது. வழக்கு தாமதத்தால் அந்த இயல்பு ஓட்டத் தொடர்ச்சியில் ஒரு முழு வருட எண்ணிக்கையிலான பயிற்சி மருத்துவர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது வருட பயிற்சி மாணவர்கள் எப்போதுமே இருக்கும் நிலையில் தற்போது புதிய முதல் வருட மாணவர்கள் முழுமையாக இல்லை. அவர்களுக்குத் தேவையான பயிற்சி கிடைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, இரண்டாவது மற்றும் மூன்றாவது வருட பயிற்சி மருத்துவர்களே அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் ‘லிட்ரலி’ என்று சொல்வார்களே அப்படி உண்மையாகவே அனைவரும் ஓய்வின்றி 7 x 24 பணியாற்றி வருகின்றனர். அது மட்டுமின்றி அனைவருமே ஒரு மன அழுத்தத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில் மருத்துவமனை பணிகள் மட்டுமின்றி கூடுதலாக தடுப்பூசி முகாம் மற்றும் மழைக்கால சிறப்பு முகாம்கள் பணிகளுக்கும் அனுப்பப்படுகின்றனர். இதை எல்லாம் பட்டியலிடுவதால் தாய்மை நிலையில் அனுமதிக்கப்பட்ட சகோதரி அலைக்கழிக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது. நிர்வாகம், நீதிமன்றம் மற்றும் குறிப்பாக மருத்துவமனை அதிகாரிகள் இந்தப் பிரச்சனைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்பு. எதிர்நோக்கிக் காத்திருந்த தாயைத் தன் குரலால் வாழ்த்திய இம்மண்ணின் புது வரவை அரசு பொது மருத்துமனையில்தான் கேட்க வேண்டும் என்ற சகோதரியின் மனஉறுதிக்கு மீண்டும் ஸ்வாகதம்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
V balasubramaniam 3 years ago
Nasika s experience is reality in G H S.But service is btter than private nursing homes.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 3 years ago
தனிப்பேச்சில் ஒரு நாவலாசிரியர் சொன்னார், தமிழிலில் துறைசார் நாவல்கள் அந்ததந்தத் துறையில் உழல்பவர்களாலேயே எழுதப்படும்போது பல நுட்பமான பிரச்சினைகள் வெளிப்படும். பல்லாயிரம்பேர் வந்துசெல்லும் அரசு மருத்துவமனைகளில், அனைவரும் சுட்டிக்காட்டும் பிரச்சினை இது; ஒருவர் ஏன் அரசுமருத்துவமனைகளை விரும்புவதில்லை எனக்கேட்டால் அவர் சொல்லும் பதிலும் இது. அனுபவங்கள் பலவிதமென்றாலும் எழுதும் முனைப்பு இருப்பவர்களாலேயே இதன் சில பக்கங்கள் வெளித்தெரிகின்றன. வசதிக்குறைவு, ஓயாத உழைப்பு தரும் உடல் அசதி, மக்கள்தொகை தரும் மன அழுத்தம் இவற்றுடன் போராடும் மருத்துவரோ மற்ற ஊழியரோ தனி மனிதராக இதைச் செய்ய முனையாதது இவற்றுடன் அரசு/சூழல் எதிர்ப்பைச் சம்பாதிக்க நேரிடும் என்பதாகவும் இருக்கலாம். பொதுச்சமூகம் ஊகிக்கக்கூடிய நெடுங்காலம் விரவிக்கிடக்கும் இப்பிரச்சினைகளுக்கு கேட்டுப்பெறும் ஒரு சமூகமும், இலவசப்பயனாளிகளைக் கண்ணியக்குறைவுடன் நடத்தாத ஊழியர்களும் மிக முக்கியம். மாவட்டத்துக்கு ஒரு மருத்துவமனை என்பது நிறைவேறிக்கொண்டிருக்கும் கனவென்கையில் இத்தகைய உட்கட்டமைப்புப் பிரச்சினைகள் கையிலெடுக்கப்பட்ட வேண்டும்; மருத்துவர்/மருத்துவ ஊழியர் சங்கங்கள் சூழலைச் சரியாக்க கூட்டாக கோரிக்கைகள் எழுப்ப வேண்டும். உடல்தானம், உடலுறுப்பு தானம் ஊக்குவிக்கப்பட வேண்டும். கோவிட் தொற்றுக்காலத்தில் நகைகளை விற்று மின்விசிறி வாங்கிக்கொடுத்த தம்பதிகளைப்போல பொதுச்சமூகமும் தம்மால் இயன்ற பங்களிப்பை நல்கவேண்டும். ஊழியர்களுக்கு மென்திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்ட வேண்டும். கட்டுரையாளரும் அவர் கணவரும் பின்பற்றும் விழுமியங்கள் வணங்கத்தக்கது. பக்கம் சாராது நல்ல விவரணைகளுடன் எழுதப்பட்ட கட்டுரை.
Reply 16 0
Login / Create an account to add a comment / reply.
Murugiah kansabapathy 3 years ago
நிதர்சனமான உண்மை. மக்கள் அனைவரும் அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் என்று பயன்படுத்த ெதாடங்கினால் நிலைமை முன்னேறலாம். தன்நிலையில் பிடிமானமாக இருந்த சகோதரிக்கு பாராட்டுகள்
Reply 8 0
Login / Create an account to add a comment / reply.