இன்னொரு குரல் 5 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் இல்லாத இனவெறியா?

சேஷாத்ரி தனசேகரன்
02 Jun 2022, 5:00 am
1

தமிழில் விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயவுசெய்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.

சில நாட்களுக்கு முன்னதாக, ராமேஸ்வரம் நகராட்சியில் பணிபுரியும் வெளிமாநிலத்தவர்கள் தங்களை நகராட்சியில் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்கிற அறிவிப்பு பேசுபொருளானது. இந்த அறிவிப்பு தொடர்பாக வாசகர் ஒருவரின் கேள்விக்கு ‘கேள்வி நீங்கள் - பதில் சமஸ்’ பகுதியில் பதில் வெளியானது. அந்த பதிலுக்கு வந்த எதிர்வினை நேற்று  ‘இன்னொரு குரல்’ பகுதியில் பிரசுரம் ஆனது. அந்த எதிர்வினைக்கான மறுவினையை  இங்கே தருகிறோம். 

சமஸ் எழுதிய ‘தமிழர்களுக்கு ஏன் இவ்வளவு இனவெறி?’ கேள்வி – பதிலுக்கு, அரவிந்தன் கண்ணையன் எழுதியிருக்கும் எதிர்வினையைக் கண்டு திகைத்துபோனேன். ‘அமெரிக்கர்கள் மிகவும் பரந்த மனது உடையவர்கள்!’ என்று சொல்லி அதற்கு ஆதாரமாக அங்கு நடக்கும் தீபாவளிக் கொண்டாட்டத்தையெல்லாம் குறிப்பிட்டிருந்தார் அரவிந்தன் கண்ணையன். கூடவே தமிழகத்தைச் சாடியும் இருந்தார். எனக்கு ஒரு சந்தேகம், ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ (BLACK LIVES MATTER) இயக்கம் எல்லாம் அமெரிக்காவில்தானே நடந்தது!

இன்றைக்கும் அமெரிக்காவில் பெயர் மற்றும் நிறம் காரணமாக தங்கும்   விடுதிகளில்கூட ஆட்களை அனுமதிக்காத அளவுக்கு நிறவெறி தோய்ந்த இடங்கள் உண்டு. இந்திய மாணவர்களை எப்படியெல்லாம் ஏசுவார்கள் என்று அரவிந்தன் கண்ணையனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். என்றாலும், தனக்கு வாழ வைக்கும் தேசத்தை அவர் விட்டுக்கொடுப்பாரா என்ன?

தன்னுடைய எதிர்வினையில், ‘ஐரோப்பாவில் வசிப்பவர்கள் தங்களுடைய குடியுரிமையின் மூலம் ஐரோப்பாவில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கும் வசதி உண்டு!’ என்று கூறுகிறார் அரவிந்தன் கண்ணையன். உண்மைதான்! ஆனால், எந்த நாட்டிற்குக் குடிபெயர்ந்தாலும், அந்த நாட்டின் காவல் துறை அல்லது வரி அலுவலகத்துக்கு செய்தி அனுப்ப வேண்டும். ஏன் நீங்கள் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்குச் சென்றாலும்கூட ‘அட்ரஸ் நோட்டிஃபிகேஷன்’ கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் தங்கியுள்ள பிற மாநிலத்தவருடைய தகவல்களை அப்படித்தான் சேகரிப்பதற்கு நகராட்சி அலுவலகம் அறிக்கை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது?

ஒருவர் வரி செலுத்துவதாக இருக்கட்டும், அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக இருக்கட்டும் ‘மூவ்மென்ட் ரெஜிஸ்டர்’ மிகவும் முக்கியமாகிறது. தொழிலாளர்களின் அடிப்படை தேவையைத் தெரிந்து நிறைவேற்றவும், கரோனா போன்ற பேரிடர் காலத்தில் அவர்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான நலத் திட்டங்களைப் பாதுகாக்கவும்கூட இத்தகு விவரங்கள் உள்ளாட்சி நிர்வாகத்துக்கும் அவசியம். இது முழுக்க நிர்வாகரீதியிலான நடைமுறைதான். இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது என்று புரியவில்லை.

மேலதிகம், ராமேஸ்வரம் நகரமானது பூகோளரீதியாக இலங்கைக்கு மிக அருகமையில் உள்ளது. சமீபத்தில்கூட இலங்கை கல்பிட்டியில் உள்ள உச்சிமுனை தீவை சுவிட்ஸர்லாந்து நிறுவனம் ஒன்றிற்கு 30 வருடக் குத்தகைக்கு விட்டுள்ளது இலங்கை அரசு. மேலும், திரிகோணமலை மற்றும் ராமேஸ்வரத்திற்கு மிக நெருக்கமாக உள்ள மாதோட்டா துறைமுகத்தில் சீனர்கள் நடமாட்டம் அதிகம். இப்படிப்பட்ட சூழலில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் என்ற பெயரில் யார் ராமேஸ்வரத்தில் இருக்கிறார்கள் என்று பாதுகாப்பு கருதியும்கூட ஓர் அரசு நடவடிக்கை எடுக்கலாம். இந்திய அரசுக்குத்தான் இப்படியான கவலை இருக்க வேண்டுமா, மாநில அரசுக்குக் கூடாதா?

தமிழ்நாட்டின் நிர்வாக நிமித்தமான சாதாரண வெளிமாநிலத்தவர்கள் தொடர்பான விவர சேகரிப்பை இனவெறியுடன் ஒப்பிட்டு, அமெரிக்கர்களின் தாராளச் சிந்தனையைப் போற்றிப் பேசும் அரவிந்தன் கண்ணையன், ‘அமெரிக்காவில் உள்ள மெக்ஸிகன் மக்களைக் குறிவைத்து நடக்கும் அரசியல்’ தொடர்பில் பேச வேண்டும் என்று எண்ணுகிறேன். மெக்ஸிகர்கள் அமெரிக்காவுக்கு ஆபத்து என்ற பேச்சுக்குக் கிடைத்த ஆதரவுதானே ட்ரம்ப்புடைய வெற்றிக்கு அடிப்படையாக உருவெடுத்தது? உலகம் சுருங்கிவிட்டது! எல்லோருக்கும் எல்லாமும் தெரியவும்செய்கிறது. இதையெல்லாமும் மீறி, ‘அமெரிக்கா எவ்வளவு புனித பூமி தெரியுமா!’ என்று அரவிந்தன் கண்ணையனால் எழுத முடியும். ஆனால், அதை நகைப்போடுதான் வாசகர்கள் கடப்பார்கள்.

ஒரு தேசத்தின் குடியுரிமையை அந்த தேசம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று அரவிந்தன் கண்ணையன் கூறுவதெல்லாம் சரிதான்; ஆனால், மைய அரசு மட்டும்தான் தேசத்தின் பிரதிநிதியா என்ன? மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் அரசின் ஒரு பகுதி இல்லையா? இந்தக் குடியுரியுமையைத் தன் வசப்படுத்துவதால் என்ன இழப்பு நேர்ந்துவிடப்போகிறது?

நாட்டின் எந்த மூலைக்கும் இத்தகு ஏற்பாடு அவசியம். இது தொடர வேண்டும்!

தொடர்புடைய கட்டுரைகள்

தமிழர்களுக்கு ஏன் இவ்வளவு இனவெறி?
இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை
திராவிட அரசியலின் இனவாதம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சேஷாத்ரி தனசேகரன்

சேஷாத்திரி தனசேகரன். நார்வே நாட்டின் வட துருவப் பகுதியான ட்ரோம்ஸோ நகரத்தில் வசிக்கிறார். ஆராய்ச்சியாளர். வட ஆர்க்டிக் நார்வே பல்கலைகழகத்தில் உடல்நலத் தகவியல் துறையில் பணிபுரிந்துவருகிறார். அரசியல், தகவியல் துறை சார்ந்து எழுதுபவர். தொடர்புக்கு: seshathiri.d@gmail.com


4

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Raja   2 years ago

சிறப்பாக எழுதப்பட்ட பதில் வாசகர் குரல். அரவிந்தன் கண்ணையன் எதோ அமெரிக்காவில் அனைவரும் பரந்த மனம் உடையவர்கள் என்ற அவரின் கருத்தை என்னவென்று சொல்ல! இனவெறியால் சுட்டு தள்ளப்பட்ட, தள்ளப்படும் உயிர்களை மறந்து விட்டார். இவர் வீடு, சொத்துக்கள் வாங்க அமெரிக்கா உதவி செய்தது என்பதற்காக எதோ அனைவருமே பரந்த மனம் உள்ளவர்கள் என்று வக்காலத்து வாங்குவது சிரிப்பை வரவழைக்கிறது. வெறும் பதினெட்டே பதினெட்டு வயது பையன் இத்தனை வெள்ளை இன வெறியுடன் 10 பேரை சூப்பர் மார்க்கெட்டில் கொல்வதை பரந்த மனம் என்று சொல்லலாமா?  தான், தன் குடும்பம் என்பதை தவிர எந்த பிரச்சனையிலும் தலையிட்டு கொள்ளாமல் நெடுங்காலமாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் பெரும்பாலான மனநிலையை அரவிந்தன் கண்ணையன் அவரின் பதிவில் பிரதிபலிக்கிறார். அதற்கு மேல் அவரின் கருத்துக்களை பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை.  

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

பாஜக பெரும்பான்மை பெறாது: சமஸ் பேட்டிவழிகாட்டிபுதுக்கோட்டை சுவாமிநாதன்துப்புரவுத் தொழிலாளர் சங்கம்இன ஒதுக்கல்சட்டத் திருத்தம் அருஞ்சொல்அமர்ந்தே இருப்பது ஆபத்துமுற்போக்கு வரிராயல்டிசச்சிதானந்த சின்ஹாதகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா?ஹிந்துத்துவர்ஜியோ முனைதனிப் பெரும் கட்சிஎன்னால் என்னுடைய சாதியை மாற்றிக்கொள்ள முடியாதுமுகத்துக்குப் ‘பரு’ பாரமா?மனுதர்ம சாஸ்திரம்பாலியல் வல்லுறவுமாநிலப் பெயர்வித்யாசங்கர் ஸ்தபதிஎதிலும் சமரசம்சிறு மருத்துவமனைபிராந்தியச் சமநிலை அறிவிப்புக்கு வேண்டும் முன்னுரிஅஸ்ஸாம் கலவரம்சமூகப் பொருளாதாரச் சிந்தனைஅதிபர்நீதிநிலம் கையகப்படுத்துதல் எனும் சவால்தண்டிக்கப்படாத செயல்கள்தமிழ்நாடு அரசு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!