கட்டுரை, கல்வி, நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு

உயர்கல்விக்கு நிபுணர்கள் உதவி அவசியம்

ஜெய்மோகன் பண்டிட்
22 Sep 2024, 5:00 am
1

ந்திய உயர்கல்வி நிறுவனங்கள் இப்போது புதிய சவால்களைச் சந்திக்கின்றன. தரமுள்ள உயர்கல்வியை அளிக்கவும் உலக அளவில் பிற நிறுவனங்களுடன் போட்டி போடவும் அமைப்பில் சில தடைகள் நிலவுகின்றன.

கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் செலவுகள் அதிகரித்துவிட்டன, நிதிநிலைமையில் ஸ்திரநிலையை ஏற்படுத்துவது சிக்கலாகிவருகிறது, கல்வி நிலைய அடித்தளக் கட்டமைப்பு, உயர்படிப்புகளில் ஆராய்ச்சி, பேராசிரியர்கள் நியமனம் ஆகியவற்றுக்கு அதிகம் செலவிட வேண்டியிருக்கிறது. பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் புதிதாக வேலை செய்வதற்கான திறமைகள் இல்லாமல் இருப்பதால் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையே தொடர்பில்லாமல் இருக்கிறது.

உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருக பின்வரும் நடவடிக்கைகள் அவசியம்: அனைத்துப் பிரிவு மாணவர்களும் கல்வி நிலையத்தில் சேரும் வாய்ப்புகள் பெருக வேண்டும், பாடத்திட்டம் அவ்வப்போது புதுப்பிக்கப்பட வேண்டும், கற்பித்தலில் புதிய வழிமுறைகள் கையாளப்பட வேண்டும், கல்வியில் தரம் கூட, கற்றுத்தரும் ஆசிரியர்கள் – ஆசிரியரல்லாத நூலகர், ஆய்வுக்கூட உதவியாளர், தொழில்நுட்பர்கள் ஆகியோரும் தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், ஆராய்ச்சிகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் போதிய நிதியுதவி கிடைக்க வேண்டும், தொழில் துறையுடன் வலிமையான கூட்டுச் செயல்பாடுகள் தொடர வேண்டும்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

புதிய கல்விக் கொள்கை

ஒன்றிய அரசு வகுத்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020, இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்காக, எளிதில் மாற உதவும் சட்டகத்தை உருவாக்கியிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகள்: கல்வி வளர்ச்சிக்கு ஏதேனும் சில துறைகளில் என்றில்லாமல் – பன்முகத் துறைகளையும் ஊக்கப்படுத்தும் அணுகுமுறை தேவை, உயர்கல்வி நிலையங்களில் ஆராய்ச்சிகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும், மாணவர்கள் கற்றுக்கொள்ள எண்ம (டிஜிட்டல்), இணையவழி (ஆன்-லைன்) வழிகளையும் பயன்படுத்த வேண்டும்.

உயர்கல்வி படித்து வெளியேறும் பட்டதாரி மாணவர்கள் உடனடியாக நல்ல வேலையில் சேர பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும், தொழில் – வர்த்தகத் துறைகளின் நவீனத் தேவைகளுக்கேற்ற பாடங்களும் பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள் சர்வதேச கல்வி நிறுவனங்களின் தகுதிகளைப் பெற வேண்டும்.

நல்ல கல்வி நிறுவனம் என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளாலும் தரப்படுத்தப்படும் அளவுக்கு வலுப்படுத்தப்பட வேண்டும். உயர்கல்வியைக் கற்றுத்தரும் ஆசிரியர்கள் குழாம், திறமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், அவர்களுக்கு உரிய அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும். இவ்விதம் உயர்கல்வியை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த வேண்டும் என்றால், மூன்றாவது தூண்போல, ‘நிபுணர்கள் உதவி’ அவசியப்படுகிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

உயர்கல்விக்கு 3 சீர்திருத்தங்கள்

வி.ராம்கோபால் ராவ் 11 Aug 2024

கல்வித் துறையில் புதிய மாற்றம்

இதுவரை உயர்கல்வி நிறுவனங்களுக்குக் கற்றுத்தரும் பேராசிரியர்களும், கல்லூரி நிர்வாக ஊழியர்களும் இரு பெரும் தூண்களாகத் திகழ்ந்தார்கள். நிதிநிர்வாகம், நூலகம், ஆய்வகம் ஆகியவற்றை நிர்வகித்தவர்கள் ஆசிரியரல்லாத துறை ஊழியர்கள் என்றே அழைக்கப்பட்டனர். உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து அரசும் சமூகமும் அதிகம் எதிர்பார்ப்பதால் இப்போது புதுப்புது பொறுப்புகளும் வேலைகளும் - ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள் என்று இரு தரப்புக்குமே பெருகிவிட்டன.

கற்பித்தலுக்கு உதவியாக இருக்கும் நூலகர், ஆய்வக உதவியாளர்கள் ஆகியோருக்குப் புதிய பொறுப்புகளை நிறைவேற்ற போதிய திறனோ, பயிற்சியோ, திறன் வளர்ப்புக்கான வாய்ப்புகளோ இல்லாததால் திணறுகின்றனர். கற்றுத்தரும் ஆசிரியப் பணியை மட்டும் மேற்கொள்ள வேண்டிய பேராசிரியர்களும் துறைத் தலைவர்களும் பல்வேறு நிர்வாக வேலைகளையும் செய்துதர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. அது அவர்களுடைய நேரத்தையும் திறமையையும் வீணாக்குகிறது.

மனிதவள ஆற்றல் துறை

உயர்கல்வி நிறுவனங்களில் மனிதவள ஆற்றல் துறை, வியூகங்களை வகுக்க வேண்டிய முக்கியத் துறையாகிவிட்டது. திறமையுள்ளவர்களை அடையாளம் கண்டு பணியில் சேர்ப்பது, அவர்கள் வேறு நிறுவனங்களுக்குச் சென்றுவிடாமல் தக்கவைப்பது, தொழில்ரீதியாக அவர்கள் மேலும் திறன்களைப் பெறுவதற்கான உதவிகளைச் செய்துதருவது, நிர்வாகத்தைத் திறமையாக நடத்துவது ஆகியவை மனிதவள ஆற்றல் துறையின் பொறுப்பாகிவிட்டது.

பணியிடத்தில் கண்ணியமான, சுமுகமான சூழல் நிலவுவதை அது உறுதிசெய்ய வேண்டும், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்களின் உடல் – மன நலன்கள் காக்கப்பட வேண்டும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கடமை மனிதவள ஆற்றல் துறைக்கு இருக்கிறது.

கல்வி நிலையத்தில் எந்தெந்தப் பணிகளுக்கு எவ்வளவு பேர் தேவை, அவர்களை எப்படி கண்ணியமாக நிர்வகிப்பது, தொழில்நுட்பங்களை எப்படி ஒருங்கிணைப்பது, கல்விப்புலத்தில் நிறுவனத்தின் இலக்குகளை எட்ட எப்படி ஆதரவாகச் செயல்படுவது, ஆராய்ச்சி, சமூகங்களுடன் தொடர்புகளை எப்படி வளர்ப்பது என்று மனிதவள ஆற்றல் துறைதான் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இந்துத்துவமாகும் இந்திய அறிவியல்!

ராமச்சந்திர குஹா 11 May 2024

நூலகர்கள் கடமை

புதிய சூழலில் நூலகர்களின் கடமை அதிகமாகிவிட்டது. புத்தகங்களுடன், எண்ம வடிவிலான தரவுகளையும் திரட்டி ஆசிரியர்கள் – மாணவர்கள் இருதரப்பாரும் பயன்படுத்த உதவ வேண்டும். ஆராய்ச்சிகளுக்கு உதவும் தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டு சேர்க்க வேண்டும், ஆராய்ச்சித் துறையில் புதிது புதிதாக வரும் தேவைகளுக்கும் ஈடுகொடுக்க வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்கள் இப்போது இணையவழிகளை அதிகம் நம்பியிருக்கத் தொடங்கியுள்ளன, எண்ம தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்துகின்றன. கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா அனலிடிக்ஸ் என்று ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இத்துறையில் உதவ தகவல் தொழில்நுட்பத்தை நன்கு அறிந்த அறிஞர்களால்தான் உதவ முடியும். உயர்கல்வி நிறுவனங்கள் எண்மத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இஆர்பி (ERP) என்ற மென்பொருள் கணினி நிபுணர்கள் அவசியம்.

நிதி, கணக்குப்பதிவேடு

உயர்கல்வி நிறுவனங்கள் அரசிடமிருந்து பெறும் நிதியுதவிக்குக் கணக்கு காட்டவும் நிறுவனத்தின் வெவ்வேறு துறைகளுக்குத் தேவையின் அடிப்படையில் நிதியைப் பிரித்து வழங்கவும் நிதி - கணக்குப்பதிவு ஆகியவற்றில் சிறந்தவர்களுடைய சேவை அவசியப்படுகிறது.

அரசு, தனியார் துறை, ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி தரும் தன்னார்வ அறக்கட்டளைகள் ஆகியவை விதிக்கும் விதிகளைப் பின்பற்றவும், அவை தரும் நிதியுதவி எப்படிச் செலவாகிறது என்பதைத் தெரிவிக்கவும் நிதி – கணக்குப்பதிவு நிபுணர்கள் பங்களிப்பு அவசியம். நிதி வரவைப் பெருக்க புதிய வழிகளைக் காணவும், தொழில் – வர்த்தக நிறுவனங்களின் சந்தைத் தேவைகளுக்கேற்ற ஆராய்ச்சி - கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு நிதி பெறவும் நிதித் துறை நிபுணர்கள் வழிகாட்ட முடியும்.

பொறியியல், கட்டுமானம்

உயர்கல்வி நிறுவனங்கள் பசுமை வளாகங்களாக இருப்பது அவசியம். அத்துடன் தங்களுக்குத் தேவைப்படும் மின்னாற்றலை வளாகத்திலிருந்தே புதுப்பிக்கத்தக்க சூரியஒளி – காற்று ஆகியவற்றிலிருந்து தயாரிக்கும் அலகுகள் வளாகங்களில் நிறுவப்பட வேண்டும். கல்வி நிறுவனக் கட்டிடமும் அதிக வெளிச்சம், காற்று ஆகியவற்றுக்கு இடம் தந்து, வெப்பத்தை அதிகம் ஈர்க்காமல் தடுக்கும் வகையில் கட்டப்பட வேண்டும். எனவே, கட்டுமானப் பொறியாளர்கள், ஆற்றல் உற்பத்தியாளர்கள் பங்களிப்பும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அவசியம்.

ஆசிரியர்கள், மாணவர்களின் சுகாதாரத்தைப் பேணவும் சூழலுக்கு உகந்த சுற்றுப்புறமும் உயர்கல்வி நிறுவனங்களில் அமைவது கட்டாயம்.

வேறு துறை நிபுணர்கள்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு வெவ்வேறு துறைகளின் நிபுணர்களின் ஆலோசனைகளும் உதவிகளும் அவசியம் என்ற நிலை சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் பணிச்சுமை – பாடச் சுமைகளிலிருந்து விடுபட உடல் – மனநல ஆலோசனைகள் அவசியம். நிறுவனத்தின் கொள்கைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆசிரியர்களும் மாணவர்களும் செயல்பட நிபுணர்களின் ஆலோசனைகள் உதவும்.

மாணவர்களை ஒழுக்கமாக நடக்க வைப்பது, தவறுகளைச் செய்தால் விதிப்படி திருத்துவது, பல்கலைக்கழக – உயர்கல்வி நிறுவனச் சட்டங்களையும் ஆராய்ச்சி – கண்டுபிடிப்பு சட்டங்களையும் மீறாமல் பார்த்துக்கொள்ள சட்ட நிபுணர்களின் ஆலோசனைகள் அவசியம். உயர்கல்வி நிறுவனத்தின் கல்வி, ஆராய்ச்சி, உற்பத்தி போன்றவை தொடர்பாக தெளிவான தரவுகள் தொடர்ச்சியாக பெறப்பட்டு பதிவுசெய்யப்பட வேண்டும்.

வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதானால் அவரவர் நாட்டு விசா விதிகளையும் நடைமுறைகளையும் தெரிந்தவர்கள் நிர்வாகத்துக்கு அவசியம். வெளிநாட்டு மாணவர்கள் உடை, உணவு, இருப்பிட வசதிகளைப் பெற்று நன்கு படிக்கவும், நம்முடைய பண்பாட்டைப் புரிந்துகொள்ளவும் உரிய சேவைகள் அளிக்கப்பட வேண்டும். கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல்களிலேயே நல்ல வேலைகள் கிடைக்க, அதை வாங்கித்தரும் திறனுள்ளவர்கள் அமர்த்தப்பட வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஏன் நமக்கு அர்னால்ட் டிக்ஸ் தேவைப்படுகிறார்?

சமஸ் | Samas 12 Mar 2024

பாலின சமத்துவம்

உயர்கல்வி நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்பட ஆசிரியத் துறை, மாணவர்கள் சேர்க்கை ஆகிய இரண்டிலும் பாலின சமத்துவம் பேணப்பட வேண்டும். இதற்கும் பயிற்சி பெற்ற நிபுணர்கள் ஆலோசனைகள் அவசியம். அனைத்து தரப்பினரும் இணக்கமாகச் சேர்ந்து பயிலவும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் உவப்பான சூழல் நிலவினால் மாணவர்களின் புத்தாக்க ஆற்றல் பெருகும், முடிவெடுத்தலில் திறன் கூடும். இது கல்விப்புலத்தில் சமத்துவமும் நீதியும் கிடைக்க உதவுவதுடன் உலகளாவிய கல்விச்சூழலை வளாகத்தில் நிலைபெறச் செய்யும்.

புதிய சவால்கள்

இப்போதெல்லாம் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் உளவியல்ரீதியாக பாதிக்கப்படுவது அதிகரித்துவருகிறது. பாடம், படிப்பு, தேர்வு ஆகியவை சுமைகளாகிவருகின்றன. அத்துடன் குடும்பச் சூழல், சமூகச் சூழல் போன்றவையும் மாணவர்களை பாதிக்கின்றன. எனவே, உளவியல் ஆலோசகர்களும் உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் மனச் சுமைகளிலிருந்து விடுபடவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க எந்தவிதமான விளையாட்டுகளை, பயிற்சிகளை அளிக்கலாம் என்பதை அமல்படுத்த விளையாட்டுத் துறையில் அனுபவம் மிக்கவர்கள் தேவை. அது மாணவர்களிடையே ஒருங்கிணைந்து செயல்படும் ஆற்றலை வளர்ப்பதுடன் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்க்கும்.

அங்கீகாரம், தரப்படுத்தல்

இப்போதெல்லாம் உயர்கல்வி நிறுவனங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எந்த நிலையில் தரப்படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இதற்கென்ற பல முகமைகள் செயல்படுகின்றன. அவை விதிக்கும் நியதிகளுக்கு ஏற்ப கல்வி நிலையங்களை சீர்படுத்துவதும், தரத்தை உயர்த்துவதும் அதில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களின் உதவியோடு செயல்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது.

இவை பெருமைக்குரியவை மட்டுமல்ல, அந்தக் கல்வி நிறுவனத்தில் எவை நிறை – எவையெல்லாம் குறை என்று மற்றவர்கள் அறிய தரப்படுத்தல் உதவுகிறது. தரப்படுத்தப்படும் நிறுவனங்கள் குறைகளை நீக்கி வளம்பெறவும் இது அவசியம்.

இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு

தமிழக உயர்கல்வியின் யதார்த்தங்கள்

தங்க.ஜெயராமன் 03 Feb 2022

சட்ட நிபுணர்கள், ஆராய்ச்சிப்புல நிர்வாகிகள், தகவல் தொடர்பு மேலாளர்கள், தரத்தை உறுதிப்படுத்துவோர், அரசின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க உதவும் ஆலோசகர்கள், ஆசிரியர்கள், பிற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை இறுதிசெய்ய நிபுணர்கள், அரசின் கொள்கைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யும் அனுபவஸ்தர்கள், ஆராய்ச்சிப் பிரிவுக்குத் தேவைப்படும் நிதியை உரிய காலத்தில் பெற்றுத்தருபவர்கள், நிறுவனம் தொடர்பாக தகவல் தொடர்புகளை மேற்கொள்வோர், பழைய மாணவர்களுடனான தொடர்பை வளர்ச்சிக்குப் பயன்படுத்துவோர் என்று பல்வேறு நிபுணர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அவசியப்படுகின்றனர்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் பாடங்களைக் கற்றுத்தரும் ஆசிரியர்கள், நிறுவன நிர்வாகத்தை நடத்த உதவும் தனிப்பிரிவு ஊழியர்கள் என்ற இரண்டு தூண்கள் மட்டும் இனிபோதாது. நிபுணர்கள் என்ற மூன்றாவது தூண் நிறுவப்பட்டால்தான் ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாக ஊழியர்கள் மீதான புதிய பணிச்சுமைகள் கணிசமாகக் குறையும். கல்வி நிறுவனத்தை நவீனப்படுத்த, சர்வதேச நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்க, எண்மமயப்படுத்த, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூன்றாவது தூண் அவசியம்.

© த பிரிண்ட்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

உயர்கல்விக்கு 3 சீர்திருத்தங்கள்
இந்துத்துவமாகும் இந்திய அறிவியல்!
ராஜஸ்தான் முன்னேறுகிறது, குஜராத் பின்தங்குகிறது
ஏன் நமக்கு அர்னால்ட் டிக்ஸ் தேவைப்படுகிறார்?
ஆசிரியர்களும் கையூட்டும்
சமத்துவம், துயரம், பன்மைத்துவம்
உயர்கல்விப் பாடத்திட்டத்தில் பன்மைத்துவம் அழிகிறதா?
உள்ளூர் மொழி வழி உயர் கல்வி வரவேற்புக்குரிய முன்னெடுப்பு
தமிழக உயர்கல்வியின் யதார்த்தங்கள்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

1






திராவிட அரசியலின் இனவாதம் - ஒரு எதிர்வினைசிறுபான்மைச் சமூகம்புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுமா?பெட்ரோல் டீசல் விலை உயர்வுஅவரவர் முன்னுரிமைடாட்டா குழும நிறுவனங்கள்பாலு மகேந்திராவிஜயநகர அரசுகாலத்தின் கப்பல்காந்திய சோஸலிஷம்மதன்லால் திங்க்ராஆத்ம நிர்பார் பாரத்இமயமலை யோகிஜம்மு காஷ்மீர்திறன் வளர்ப்புதலைமைச் செயல் அதிகாரிபாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்சமத்துவமின்மை: இரு அடையாளங்கள்உமர் காலித்ஜான் க்ளாவ்ஸர்மணிப்பூர்உண்ணாவிரதம்போக்குவரத்துக் கொள்கைஅசாஞ்சேநிறுவன வரிசெலன்ஸ்கிதேர்தல் களத்துக்கு எதிரணி தயார்மண்டல்சவுக்கு சங்கர் அருஞ்சொல் தலையங்கம்‘அந்தரங்க’த்தைப் பணமாக்கும் சமூக ஊடகம்!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!