கட்டுரை, சட்டம், கல்வி 4 நிமிட வாசிப்பு

சமத்துவம், துயரம், பன்மைத்துவம்

ப.சிதம்பரம்
17 Jul 2023, 5:00 am
0

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மையமாக இருப்பது 1636இல் தொடங்கப்பட்ட ஹார்வர்ட் கல்லூரி. கடந்த நான்கு நூற்றாண்டுகளில் புதிதாக மேலும் பல உயர்கல்விக்கூடங்களும் கல்லூரிகளும் இத்துடன் இணைக்கப்பட்டன. ஆனால், அந்நிறுவனத்துக்குப் புகழ் மகுடமாகத் திகழ்வது இளங்கலை, முதுகலைப் பட்ட வகுப்புகளை நடத்தும் கல்லூரிதான். அதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. 2022இல் மட்டும் இக்கல்லூரியில் சேர 60,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர், 2,000க்கும் குறைவானவர்களே சேர்த்துக்கொள்ளப்பட்டனர். 

அமெரிக்க உச்ச நீதிமன்றமே கூறியபடி, “ஹார்வர்டில் சேருவது எளிதான செயல் அல்ல; அதற்கு முன்பு வரையிலான தேர்வுகளில் மிகச் சிறப்பாகப் படித்துத் தேறியிருக்க வேண்டும், இம்மாணவரைச் சேர்த்துக்கொள்வது கல்வி நிலையத்தின் மதிப்பைக் கூட்டும் என்று கல்விமான்கள் எவராவது உளமார பரிந்துரைக் கடிதம் தந்திருக்க வேண்டும், அல்லது பெருந்துயரங்களை எல்லாம் கடந்துதான் அக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை ஒரு மாணவன் பெற வேண்டும், சில வேளைகளில் உங்களுடைய இனம் எது என்பதையும் பொருத்தது அது.”

தொடக்க காலத்தில் கல்லூரியில் சேர அமெரிக்க வெள்ளையின மக்களிடையேயும் கறுப்பின மக்களிடையேயும்தான் போட்டி இருந்தது. ஹார்வர்ட் வணிக மேலாண்மைக் கல்லூரியில் நான் சேர்ந்தபோது அந்தப் பிரிவில் மட்டும் 750 பேர் படித்தனர். கறுப்பின அமெரிக்கர்கள் சிலராகவும், ஆசியர்கள் (நான்கு பேர் இந்தியர்கள்) மிகச் சிலராகவும், ஓரிரு ஆப்பிரிக்கர்களும் இருந்தனர். 

இப்போது இந்தக் கல்லூரியில் சேர வெள்ளையர்கள், கறுப்பர்கள், ஆசியர்கள், மத்திய – தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் (ஸ்பானிய மொழி பேசுகிறவர்கள்), ஆப்பிரிக்கர்கள், மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இக்கல்லூரியில் சேர இடம் கேட்டு, ‘நியாயமான அனுமதிக்காக குரல் கொடுக்கும் மாணவர்கள்’ என்ற அமைப்பு வழக்கு தொடுத்திருக்கிறது; ஹார்வர்ட் கல்லூரியின் தலைவர் - இதர நிர்வாகிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. 

இன்னொரு வழக்கு, மிகவும் பழமையான வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்துக்கு (யுஎன்சி) எதிராக இதே காரணத்துக்காகத் தொடரப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 43,500 விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்து வருகின்றன, 4,200 பேர் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் இல்லாத இனவெறியா?

சேஷாத்ரி தனசேகரன் 02 Jun 2022

துயரம் எதிர் சமத்துவம்

இந்த இரு வழக்குகளிலுமே முக்கியமான பிரச்சினை, மாணவரின் இனத்தை கல்லூரியில் சேருவதற்கான தகுதியாகக் கருதலாமா என்பதுதான். கல்வியில் பின்தங்கிய இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இனப் பிரச்சினை என்பது 1776 ஜூலை 4இல், 13 பிரிட்டிஷ் காலனிகள் தங்களை சுதந்திர நாடு என்று அறிவித்துக்கொண்டபோது தொடங்கியது. அதுவே பிறகு பெரிய உள்நாட்டுப் போராக (1861-1865) மாறியது.

இனம் ‘எதிர்’ அரசமைப்புச் சட்டம் தரும் சமத்துவ உறுதிமொழி பிரச்சினை, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் 1896 முதல் பல்வேறு வழக்குகளாகத் தொடர்கிறது. அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் ‘பதினான்காவது திருத்தம்’ என்ற உரைகல்லில் வைத்து இந்தப் பிரச்சினை அடிக்கடி இழைத்துப் பார்க்கப்படுகிறது.

“ஐக்கிய அமெரிக்க நாட்டின் மக்களுடைய உரிமைகளைக் குறுக்கவோ, நீக்கவோ முயலும் எந்தச் சட்டத்தையும் எந்த (மாநில) அரசும் இயற்றக் கூடாது; அமெரிக்கக் குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டப் பாதுகாப்புகளை நீக்கும் எந்தச் சட்டத்தையும் இயற்றவும் கூடாது; எந்த அரசும் அமெரிக்கக் குடிமகனின் வாழ்வுரிமை, சுதந்திரமாகச் செயல்படும் உரிமை, சொத்துரிமை ஆகிய எதையும் உரிய சட்டத் துறை நடவடிக்கைகள் மூலம் அல்லாது பறித்துவிடக் கூடாது; தன்னுடைய அதிகாரத்துக்குட்பட்ட எல்லையில் சட்டப்படியான சமமான பாதுகாப்பை எந்த அரசும் எந்தத் தனிநபருக்கும்கூட மறுக்கக் கூடாது” என்கிறது அந்தத் திருத்தம்.

இந்த அடிப்படை உரிமைகள் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14, 21 ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ளன.

பதினாலாவது திருத்தத்தின் வரலாறானது அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும் இடையிலான இன உறவு எப்படி உருவாகி வளர்ந்தது என்பதை எதிரொலிக்கிறது. அமெரிக்க உச்ச நீதிமன்றம் 1896இல், ‘தனி ஆனால் சமம்’ என்ற கருத்தை முன்வைத்தது. பிரௌன் எதிர் கல்வி வாரிய வழக்கில் (1954) அந்தக் கருத்து அப்படியே தலைகீழாக புரட்டப்பட்டு, ‘தனி என்பது சமமாகிவிடாது’ என்றது. 

“இன அடிப்படையில் பாரபட்சமான சட்டங்கள் மிகக் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு, அரசின் நலன் காக்க வேண்டிய கட்டாய சூழலில் மட்டும் செயல்படலாம் என்றும் அதுவும்கூட சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கம் எதுவோ அதை நிறைவேற்றுவதற்காக மட்டும் செயல்படுத்தலாம் என்றும் அனுமதிக்கப்பட்டது. அதற்குப் பிறகு கலிபோர்னியா பல்கலைக்கழக நிர்வாகக் குழு உறுப்பினர் எதிர் பாக்கி (1978), கிரட்டர் எதிர் போலிங்கர் (2003) வழக்குகளில், மாணவர் சமுதாயம் பன்மைத்துவம் கொண்டதாக இருப்பது அரசின் நலனுக்கு அவசியம் என்பதால் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு அவர்களுடைய இனத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்” என்று தீர்ப்புகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் அனுமதி (தேர்வு) தொடர்பான பல்கலைக்கழக தீர்ப்பு ஒன்றையும் இதற்காக தள்ளிவைத்தது நீதிமன்றம்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

பிளவுபட்ட இரண்டு ஜனநாயகங்கள்

ப.சிதம்பரம் 04 Jul 2022

இருபதாண்டுகளுக்குப் பிறகு, சட்டத்தின் அதே வாசகம் தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டது. அமெரிக்கப் பெரும்பான்மையினமான வெள்ளையர்கள் தொடுத்த வழக்கில் இப்படிச் சட்டம் திருத்தி எழுதப்படவில்லை, சிறுபான்மை இன மாணவர்கள் சார்பிலான மாணவர் அமைப்பு தொடுத்த வழக்கில்தான் அப்படியானது, அந்த வழக்கைத் தொடுத்தவர்களில் ஆசிய அமெரிக்கர்களும் இருந்தனர் என்பதுதான் நகைமுரண்!

குடியரசு எதிர் ஜனநாயக கட்சி

ஹார்வர்ட், யுஎன்சி பல்கலைக்கழக வழக்குகள் ‘ஆறு நீதிபதிகளுக்கு மூவர்’ என்ற அமர்வில், பெரும்பான்மை நீதிபதிகளால் முடிவுசெய்யப்பட்டது. அந்த நீதிபதிகளைப் ‘பழமைவாதிகள்’, ‘தாராளர்கள்’ என்று முத்திரை குத்துகின்றனர். ஆறு பழமைவாத நீதிபதிகள் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், நீதிபதிகள் தாமஸ், அலிடோ, கோருஷ், கவனாக், பாரட். இவர்கள் குடியரசுக் கட்சி அதிபர்களால் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள். 

தாராளர்களான நீதிபதிகள் சோடோமேயர், காகன், ஜாக்சன் ஆகியோரை குடியரசுக் கட்சி அதிபர்கள் தங்களுடைய பதவிக்காலங்களில் நீதிபதிகளாக நியமித்திருந்தனர். மேலோட்டமாகப் பார்த்தால், நீதிபதிகளிலும் பழமைவாதிகள் எதிர் தாராளர்கள் போலத் தோன்றும். ஆனால், குடியரசுக் கட்சி நியமனர்கள் எதிர் ஜனநாயகக் கட்சி நியமனர்கள் என்பதே உண்மை.

இதேபோன்ற 6:3 என்ற பெரும்பான்மையில்தான் திட்டமிட்ட தாய்மை எதிர் கேசி வழக்கில், 1973இல் ரோ எதிர் வேட் வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தலைகீழாகப் புரட்டிவிட்டது. ரோ எதிர் வேட் வழக்கில், கருக்கலைப்பு செய்வது தாயின் உரிமை என்று முன்னர் தீர்ப்பு கூறப்பட்டிருந்தது. கேசி வழக்கில் எடுக்கப்பட்ட புதிய முடிவை 60% அமெரிக்கர்கள் ஏற்கவில்லை என்பது அவர்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பு பின்னர் தெரிவித்தது.

ஹார்வர்ட், யுஎன்சி பல்கலைக்கழக வழக்குகளின் தீர்ப்புகள், தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதிகளிடம் தேர்வு அதிகாரத்தை (அரசியல் தலைமை) ஒப்படைப்பதில் உள்ள ஆபத்துகளை வெளிப்படுத்தியுள்ளன. நாட்டின் அதிபராக இருப்பவருடைய கட்சியின் சித்தாந்தத்தை அப்படியே ஏற்கும் எவரையும் நீதிபதியாக அதிபர் நியமித்துக்கொள்ள அமெரிக்க அரசமைப்புச் சட்டம் இடம் தருகிறது. 

அரசமைப்புச் சட்டம் தொடர்பான அடிப்படைக் கொள்கைகள், அரசமைப்புச் சட்ட வரலாறு, தார்மிக விழுமியங்கள், முன்னுதாரணங்கள், பொதுக் கருத்து உருவான வரலாறு, நடப்புக்கால சமுதாயப் பண்பு, பெரும்பான்மை மக்களுடைய விருப்பம் என்று அனைத்துமே இப்படி உயர் பதவிக்கு நியமிக்கப்படும் நீதிபதிகள் சிலர் எடுக்கும் முடிவுகளால் சர்வ அலட்சியமாக வீசி எறியப்படுகின்றன.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

ஜனநாயகக் காவலருக்கான காத்திருப்பு

ப.சிதம்பரம் 09 May 2022

நீதிபதிகளின் முன்கணிப்புகள்

இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒரு பாடம் இருக்கிறது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைப் பிரதமரிடம் ஒப்படைத்தால் (முதலில் அப்படித்தான் இருந்தது), மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் சூழலில் அது மிகவும் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். அதேவேளையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளிடம் மட்டும் அந்த அதிகாரத்தை ஒப்படைப்பதும் ஏற்கக்கூடியதல்ல; காரணம் அவர்கள் ஏற்கெனவே சிலரை மனதளவில் தேர்வுசெய்துவிடுகின்றனர் அல்லது சிலர் நியமிக்கப்படுவதை விரும்புகின்றனர். 

நீதிபதியாக இருப்பதற்கே தகுதியற்றவர் நியமிக்கப்படுவது அபூர்வமாக நடக்கலாம், ஆனால் நீதிபதியாக அனைத்துத் தகுதிகளும் உள்ளவர் புறக்கணிக்கப்படுவது பல முறை நிகழ்ந்திருக்கிறது. தகுதியுள்ளவர்களை நீதிபதிகள் அடங்கிய தேர்வுக்குழு பரிந்துரைத்தாலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் நிராகரித்துவிடுகின்றனர், அல்லது ஒப்புதல் தர காலவரம்பின்றி தாமதப்படுத்துகின்றனர். அது மட்டுமல்லாமல் நீதிபதிகள் அடங்கிய தேர்வுக் குழுக்கள் மூலமான நியமன முறையால் நாட்டின் அனைத்துப் பகுதிக்கும் அனைத்து சமுதாயங்களுக்கும் உரிய பிரதிநிதிதித்துவம் கிடைக்காமலேயே போய்க்கொண்டிருக்கிறது.

சமத்துவம் என்பது நாம் விரும்பக்கூடிய தகுதி நிலை, அப்படியில்லை என்பதே துயரமான யதார்த்தம், பன்மைத்துவம் நிச்சயம் அவசியம். இந்த மூன்றையும் சமநிலைப்படுத்த, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஆழ்ந்த விசுவாசம் உள்ளவர்கள் நீதிபதிகளின் தேர்வுக் குழுவில் இருப்பது கட்டாயம்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

பிளவுபட்ட இரண்டு ஜனநாயகங்கள்
ஜனநாயகக் காவலருக்கான காத்திருப்பு
அமெரிக்காவில் இல்லாத இனவெறியா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3






அருஞ்சொல் உருவான கதைஹரிஹரசுதன் தங்கவேலு கட்டுரைசண்முகநாதன் சமஸ் பேட்டிதொல்.திருமாவளவன்வரி வசூல்உதயசூரியன்சமமற்ற பிரதிநிதித்துவம்சேதம்கட்டமைப்புப் பொறியாளர்திருவாரூர் தேர்நிர்வாகிகள்கழிவறைகனகசபைகூட்டணியாட்சிதொல்லியல்மூக்குபத்ம விருதுகள் அருஞ்சொல்வின்னி அண்ட் நெல்சன்ஒன்றிய அரசின் அதிகாரங்கள்நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்ராஜ்பவனங்கள் காரியபவனங்களாக மாறிவிட்டன?தென்னிந்தியர்கள்வீட்டுக் காவல்இருவேறு உலகம்இளையராஜா இசைக் கல்வி மையம்: ஒரு முக்கியமான முன்னெடதேர்வுஅருஞ்சொல் சமஸ் பேட்டிதில்லிஅருஞ்சொல் பேரறிவாளன் அற்புதம் அம்மாள்சமஸ் முக ஸ்டாலின்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!