கட்டுரை, அரசியல், வரலாறு, சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

பாலஸ்தீனத்தை ஏன் கைவிடுகிறீர்கள்?

கார்த்திக் வேலு
21 Oct 2023, 5:00 am
2

லகின் பெரிய விவகாரங்களில் ஒன்று இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல். இந்தப் பிரச்சினையின் ஆணி வேர் என்ன?  எப்போது இது ஆரம்பித்தது? எதை நோக்கி இது செல்லும்? இந்த விவகாரத்தைப் பின்னின்று இயக்கும் கரங்கள் எவை? இந்த வரலாற்றை ஐந்து அத்தியாயங்கள் கொண்ட தொடராக ‘அருஞ்சொல்’ வெளியிடுகிறது. ஒவ்வொரு கட்டுரையையும் தனித்த விஷயங்களில் கவனம் குவிக்கின்றன என்பதால், இந்தக் கட்டுரைகளைத் தனித்தும் வாசிக்கலாம்; தொடராகவும் வாசிக்கலாம். 

பாலஸ்தீன மக்கள் கொஞ்சம் தாமதமாகவே ஒரு சிக்கலைப் புரிந்துகொண்டார்கள்.  அது அனைத்து அரபு நாடுகளும் அவர்களின் தேவை மற்றும் அவர்களின் பார்வை சார்ந்தே நடந்துகொள்கிறார்கள் என்கிற புரிதல்.  தங்களை முதன்மையாக தாங்கள்தான் பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.

யாசர் அராபத், 1964இல் ‘பாலஸ்தீன விடுதலை இயக்க’த்தை (PLO) துவங்கினார்.  பாலஸ்தீனத்தின் முதல் உலகளாவிய முகமானார்.  பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆரம்பக் காலத்தின் இஸ்ரேலை வீழ்த்த வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிந்தது.  ஆனால், போகப்போக நடைமுறை நிதர்சனங்களை ஏற்று தனது அணுகுமுறையில் சமரசங்களைச் செய்துகொண்டது. 

அமைதிக்கு விலை உயிர்

இஸ்ரேல் உருவாகியது முதல், அதை எற்றுக்கொள்ளாத அரபு நாடுகள் 1967இல் ஒன்றுசேர்ந்து அதைத் தாக்க முடிவெடுத்தன. இஸ்ரேலைச் சுற்றி மூன்று புறமும் படைகளையும் தளவாடங்களையும் குவித்தன.  எகிப்தின் அதிபர் நாசர் இஸ்ரேலை அழிப்பதே தங்கள் நோக்கம் என்று அறிக்கை விட்டார்.  இஸ்ரேல் சூழ்நிலையின் ஆபத்தைக் கணித்து அரபு படைகளை முந்தித் தாக்கியது (pre-emptive strike). 

அரபு படைகளைத் தாக்கிப் பெரும் ராணுவ வெற்றியை ஈட்டியது. இஸ்ரேல் ஒட்டுமொத்த பாலஸ்தீனப் பகுதியையும் ஆக்கிரமித்தது போதாதென்று எகிப்து, ஜோர்டன் போன்ற நாடுகளின் சில பகுதிகளையும் பிடித்துக்கொண்டது. 

இந்தத் தோல்விக்குப் பிறகு அரபு நாடுகள் கூடி புகழ்பெற்ற ‘கார்ட்டோம் தீர்மான’த்தை (Khartoum Resolution) நிறைவேற்றினர்.  ‘இஸ்ரேலை ஏற்க மாட்டோம்; இஸ்ரேலுடன் பேரம் பேச மாட்டோம்; இஸ்ரேலுடன் அமைதி இல்லை’ (Three No’s) எனும் மூன்றே வரிகளைக் கொண்ட புகழ்பெற்ற தீர்மானம் அது.

அதாவது, சண்டை மட்டுமே ஒரே வழி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்ற நிலைப்பாடு.  எனவே, இந்த விவகாரத்தில் எல்லா தரப்புமே ஏதோ வகையில் அமைதியை வேண்டுவதான ஒரு பிம்பம் பிழையானது.  அரபு லீக்கின் இந்த நிலைப்பாடு 2002 வரை தொடர்ந்தது.  அப்படியும் இதை மீறி அமைதிக்கு முயன்றவர்கள் துயர்மிகு முடிவை எதிர்கொண்டனர்.  

இதில் 1978இல், எகிப்து – இஸ்ரேலுக்கு இடையே நடந்த அமைதி ஒப்பந்தத்தில் (Camp David) கையெழுத்திட்ட அன்வர் சதாத் ஓரிரு வருடங்களில் எகிப்தில் உள்ள தீவிரவாத அமைப்பினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அன்வருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது, ஆனால் ஆள் காலி.

இஸ்ரேல் தரப்பிலும் இதே கதைதான்.  அமைதி நோக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைப் பாலஸ்தீனர்களுக்குத் திருப்பி அளிக்கும் ஓஸ்லோ உடன்படிக்கையில்  (Oslo Accord) யிட்சாக் ரபீன் கையெழுத்திட்டார்.  மிக முக்கியமான உடன்படிக்கை இது. அமைதி திரும்ப பிரகாசமான வாய்ப்பிருந்த புள்ளி இது. ஆனால், அவரும் ஒரு வலதுசாரி யூத மாணவனால் கொல்லப்பட்டார். 

இவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.  பிஎல்ஓ தலைவரான அராபத் மறைவும் சந்தேகத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. என்ன நோய் என்றே கண்டுபிடிக்க முடியாமல் நான்கே வாரங்களில் உடல்நலம் குன்றி உயிரிழந்தார். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இஸ்ரேல்: யூதர்களைப் புரிந்துகொள்ளல்

கார்த்திக் வேலு 17 Oct 2023

திறந்த வெளிச் சிறை

இதன் பிறகான காலகட்டத்தில் இஸ்ரேலிய அரசியலில், வலது அரசியலர்களின் கை ஓங்கியது.  2005 காலகட்டத்துக்குப் பிறகு இது தீவிர வலதாக மாறியது.  இன்றிருக்கும் நெத்தனயாஹூவின் அரசு இதுவரை இஸ்ரேல் கண்டதிலேயே தீவிர வலதுசாரி அரசு.  அதேபோல பாலஸ்தீன விடுதலை போராட்டம் இன்னும் தீவிரமான வன்முறையைக் கைக்கொள்ள ஆரம்பித்தது. 

பிஎல்ஓவின் மென்போக்கை நிராகரித்து உருவானதே ஹமாஸ்.  இன்று ஹமாஸைவிடவும் தீவிரவாத நிலைப்பாட்டைக் கடைபிடிப்பது காஸாவில் இருக்கும் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு. காலம் செல்லச் செல்ல எப்படி இந்தப் பிளவும் தீவிரமும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதை நாம் கண்ணுக்கு நேரே காண்கிறோம்.  

இதற்கிடையில் பாலஸ்தீன மக்களிடம் இருந்தே நேரடியான எதிர்ப்பு அலையாக உருவாகிவந்தது.  இதை மக்கள் எழுச்சி (Intifada) என்கின்றனர்.  அனைத்து தரப்பாலும் கைவிடப்பட்ட பாஸ்தீன மக்கள் தாங்களே நேரடியாக களத்தில் இறங்கி ராணுவத்துடன் மோதினர்.  இதுபோன்ற மக்கள் எழுச்சி இரண்டு முறை வெடித்தது, அது 1987 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில்.  

வேதனைக்குரிய வகையில் இதில் அதிகம் உயிரிழந்தது பாலஸ்தீன மக்கள்தான்.  வேறெதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் பாலஸ்தீன மக்கள் எதிர்ப்பைக் காட்ட உயிரையே ஆயுதமாக்கினர்.  இஸ்ரேலியர் மீதான தற்கொலை தாக்குதல்கள் (Suicide Bombing) ஆரம்பித்தன.  இதுபோன்ற தாக்குதல்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 50 என்று எகிறியது.  இந்தத் தாக்குதல்களை இஸ்ரேலிய ராணுவம் தாக்குப்பிடித்தாலும் இது இஸ்ரேல் மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் உருவாக்கியது. 

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் வசிப்பிடங்களை முற்றிலும் பிரித்து வைக்கும் முயற்சி இந்தக் காலகட்டத்தில்தான் தீவிரம் கொண்டது. இஸ்ரேலியக் குடியிருப்புகளைச் சுற்றி 8 மீட்டர் உயரம் கொண்ட பிரம்மாண்டமான கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டன.  பாலஸ்தீனப் பகுதிகளில் மட்டுமே கிட்டத்தட்ட 300 ராணுவ சோதனைச் சாவடிகள் உள்ளன. பாலஸ்தீன மக்களின் அன்றாட வாழ்வு என்பது ஒரு மாபெரும் திறந்த வெளிச் சிறையாகத்தான் இருக்கிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

அமெரிக்காவின் பங்கு

இந்தப் பிரச்சினையில் அமெரிக்காவின் பங்கும் மிக முக்கியமானது. உலகிலேயே அமெரிக்காவிடம் இருந்து மிக அதிகபட்சம் நிதி உதவி பெறும் நாடு இஸ்ரேல்.  இஸ்ரேல் உருவான சமயத்தில் இருந்து இதுவரை அமெரிக்கா இஸ்ரேலுக்கு, இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.13 லட்சம் கோடி நிதி அளித்திருக்கிறது.

இஸ்ரேல் அமைப்புகளுக்கு அமெரிக்காவில் இருக்கும் பல அமைப்புகளில் இருந்தும் நேரடி நிதி வருவதுண்டு.  கணக்கெடுப்புகளின்படி உலக அளவில் சுமார் ஒன்றரை கோடி யூதர்கள் இருக்கிறார்கள்.  இதில் 40% பேர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.  எனவே, அமெரிக்க அரசியலில் யூதர்கள் லாபி இருப்பதும் உண்மை.  ஆனால், இதுபோன்ற லாபிகள் (AIPAC) வெளிப்படையானவை, அமெரிக்கச் சட்டங்கள் இதை அனுமதிக்கின்றன.

ஆனால், இன்னொரு ஆச்சரியகரமான விஷயம் உண்டு.  இன்று இஸ்ரேலுக்கு வரும் ஆதரவு அமெரிக்க யூதர்களைக் காட்டிலும் எவாஞ்சலிக்கல் கிறிஸ்துவ (Christian Zionists) அமைப்புகளிடம் இருந்தே வருகிறது.  அவர்களில் நிலைப்பாட்டின்படி இஸ்ரேல் நிலப்பகுதி கடவுளால் யூதர்களுக்கு வழங்கப்பட்டது, எனவே அங்குள்ள நிலங்கள் அனைத்தும் அவர்களுக்குச் சொந்தமே என்பது. 

அமெரிக்காவில் எந்தக் கட்சியைச் சார்ந்த அதிபர் ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு விஷயத்தில் மட்டும் அவர்கள் கையை வைக்க முடியாது. ஒன்று, துப்பாக்கி உடமை சட்டங்கள், மற்றொன்று இஸ்ரேல் ஆதரவு. 

அமெரிக்காவில் உள்நாட்டு அரசியல் நிதர்சனம் இது.  இதுபோக மற்றுமொரு புவியரசியல் சார்ந்த குறிக்கோளும் அமெரிக்காவுக்கு உள்ளது.  இஸ்ரேல் என்பது அரபு நாடுகளின் மத்தியில் இருக்கும் தனது வலது கை என்று அமெரிக்கா கருதுகிறது.  இஸ்ரேலுக்கு அமெரிக்காவைவிட பெரிய துணை கிடைக்கப்போவதில்லை. 

இஸ்ரேல் ராணுவ பலத்திலும் தொழில்நுட்பத்திலும் இஸ்ரேலுக்கு இணையாகவே அமெரிக்காவுக்கு நன்மை உண்டு.  அரபு நாடுகள், ஒற்றை அரபு சக்தியாக ஒன்றாக திரண்டுவிடாதபடி இருக்கும் முட்டுக்கட்டையாகவும் இஸ்ரேலை அமெரிக்கா பார்க்கிறது. 

துணை தேசியங்கள்

அரபு நாடுகளில் தரப்பிலும் பல போதாமைகள் உள்ளன.  மொத்த அரபு நாடுகளும் ஒரு நாடாக இருக்க வேண்டும் என்றுதான் ஆரம்பக் கால கோரிக்கையாக இருந்தது.  ஆனால், சீக்கிரமே அவை உடைந்து தனித்தனி நாடுகளாகிவிட்டன.  எல்லா நாடுகளுமே அரபு இனக்குழுவை, ஒரே மதப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் அவை ஒவ்வொன்றும் அவரவருக்கான தனித்துவமான கலாச்சார இணைவுகொண்டவை (shared reality) என்று உணர்ந்துகொண்டன.  சிரியா, ஜோர்டன், சிரியா இடையே பொதுமை இருந்தாலும் இவை அனைத்துமே தமக்குள் அடங்கிய தனித்தக் கலாச்சார அடையாளங்களைக் கொண்டுள்ளன.

இந்நாடுகள் தாங்கள் ஒற்றை தேசியத்துக்கு மாறாக பல்வேறு துணை அல்லது தனி தேசியங்கள் என்பதை உணர்ந்துகொண்டன.  எனவே, பாலஸ்தீனம் என்னவோ ஒட்டுமொத்த அரபு நாடுகளின் சிக்கல் போன்று அவர்கள் ஆரம்பத்தில் வடித்துக்கொண்ட சித்திரத்தின் நிதர்சனம் இன்று முற்றிலும் வேறாக உள்ளது.  இல்லையென்றால் பாலஸ்தீனத்தை விட்டுவிட்டு மற்ற எல்லா நாடுகளும் ஒன்றிணைந்து இருக்கலாமே. 

ஒரு பிரச்சினை இரண்டு தரப்புக்கும் இடையிலான (Bi-lateral) பிரச்சினை என்று இருக்கும்போது அதில் தீர்வுக்கான சாத்தியக்கூறு அதிகம்.  அந்தப் பிரச்சினையில் நேரடியாக சம்பந்தம் இல்லாதவர்கள் (multi-lateral) பின்னே அணித் திரளும்போது அது பூனைக் குட்டிகள் உருட்டி விளையாடும் நூல்கண்டு போல பிரித்தெடுக்கவே முடியாத சிக்கலாகிவிடும். 

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினை இப்படியான ஒரு நிலைக்கு எப்போதோ நகர்ந்துவிட்டது.  பெயருக்குதான் இது இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினையே ஒழிய இதில் உலக நாடுகள் அனைத்தும் துண்டைப் போட்டு வைத்திருக்கின்றன.  இந்தப் பிரச்சினையைக் காரணம் காட்டிக்கொண்டு அவரவர் நாடுகளில் பல்வேறு புது பிரச்சினைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இஸ்ரேல்: இஸ்லாமும் பாலஸ்தீனமும்

கார்த்திக் வேலு 19 Oct 2023

பாதிப்பு யாருக்கு?

இதில் ஒட்டுமொத்த பாதிப்புக்கு ஆளாவது ஒரு சராசரி பாலஸ்தீனியர்தான். இஸ்ரேலுக்கு எப்படியோ தனக்கான நாடு என்று உறுதியாகிவிட்டது. அந்த நிலத்தில் தொழில்நுட்பரீதியாக, ராணுவரீதியாக தன்னை வலுவான நாடாக நிறுவிக்கொண்டுவிட்டது.  அமெரிக்கா எப்போதும் பின்னுக்குத் துணை நிற்கிறது.  போர்ச் சூழலில் வாழ்ந்தாலும் மக்கள் சுபிட்சமாகவே, சந்தோஷமாகவே இருக்கிறார்கள். 

ஆனால், பாலஸ்தீனம் அப்படி அல்ல.  தன் நாட்டில் சரியான அரசு இல்லை. நிலையான நிர்வாகம் இல்லை உள்கட்டுமானம், கல்வி, வேலைவாய்ப்பு எதுவுமே திருப்திகரமாக இல்லை. பாலஸ்தீனத்தைவிட்டு வெளியேறவும் முடியாது.  தங்கள் பகுதியில் இருந்து ஹமாஸ் போன்ற அமைப்புகள் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு வரும் குண்டுகள் அவர்கள் தலையில்தான் விழுகின்றன. 

அவர்களுக்கான வலுவான அரசியல் தலைமை இல்லை.  யார் யாரோ அவர்களுக்காக பேசுகிறார்கள், போராட்டத்தில் இறங்குகிறார்கள், ஆனால் அது எதுவுமே பாலஸ்தீனியர்களுக்குச் சிறிதும் நன்மை பயப்பதாக இல்லை.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இரண்டு தனித்தனி நாடுகளாகத்தான் இருக்க முடியும்.  ஒரு நாட்டின் இருப்பு இன்னொரு நாட்டின் இருப்பை அச்சுறுத்துவதாக இருக்கக் கூடாது. இஸ்ரேல் செய்துகொண்டிருக்கும் பெரும் பிழை பாலஸ்தீனப் பகுதிகளில் யூதக் குடியிருப்புகளைத் தொடர்ந்து அனுமதிப்பதுதான்.  அந்தக் குடியிருப்புகளை அகற்றிவிட்டு யூதர்களைப் பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து வெளியேற்ற வேண்டும். 

அமெரிக்கா இஸ்ரேலின் முக்கியமான கூட்டாளியாக இந்தக் குடியிருப்புகளைக் கண்டும் காணாமல் போவது அதைவிட தவறு.  இந்தக் குடியேற்ற காலனியத்தை (Settler colonisation) உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. 

ஊடகங்களின் செயல்பாடுகள்

அரபு நாடுகள் உதவுகிறோம் என்கிற பெயரில் பாலஸ்தீனத்தைப் பணயம் வைத்து சூதாடுகின்றன.  பாலஸ்தீனத்துக்குப் போராடுகிறோம் என்று சொல்லும் இந்த நாடுகள் பாலஸ்தீன அகதிகள் வந்தால் ஏற்பதில்லை.  கேட்டால் பாலஸ்தீன மக்கள் பாலஸ்தீனத்தைவிட்டு வெளியேறினால் அந்தத் தனி நாட்டுக்கான கோரிக்கை வலுவிழக்கும் என்கிறார்கள். 

அப்போது பாலஸ்தீன மக்கள் அங்கேயே அடைபட்டுச் செத்தாலும் பரவாயில்லை, வேறு நாடுகளுக்குப் போனால் பிரச்சினை இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.  பாலஸ்தீன மக்களைப் பிணையக் கைதிகளாகப் பார்க்கும் நிலைப்பாடு இது.  ஹமாஸ் போன்று இஸ்ரேலின் இருப்பையே கேள்வி கேட்கும் தரப்புகளைப் பிற நாடுகள் ஆதரிக்கக் கூடாது. 

முக்கியமான மேலை நாடுகளின் ஊடகங்களில் குறிப்பாக அமெரிக்க ஊடகங்களில் இஸ்ரேல் தரப்பைத் (அதி நியாயமானாலும்) தெவிட்டத் தெவிட்ட பேசிய அளவுக்கு, பாலஸ்தீன தரப்பு எதிர்கொள்கிற, அந்தத் தப்பிக்கவே முடியாத சிறை வாழ்க்கையைப் பற்றிப் பேசப்படுவதில்லை.  தீவிரவாத செயல்பாடுகளுடன் பாலஸ்தீன தார்மிகத்தை இணை வைப்பது பிழை. 

இது ஒரு லட்சியவாத நோக்காக தோன்றலாம், ஆனால் இவ்வித லட்சியவாத நோக்கில்லாமல் இதுபோன்ற இடியாப்பச் சிக்கலில் இருந்து நாம் வெளியேற முடியாது.  இதைத் தாமதிக்கும் ஒவ்வொரு ஆண்டும் இன்னும் பிறந்தேயிராத பாலஸ்தீனக் குழந்தை ஒவ்வொன்றுக்கும் நாம் மாபெரும் அநீதி இழைக்கிறோம் என்றே பொருள்படும்.

அமெரிக்கா உள்பட எல்லா நாடுகளுக்கும் பல்வேறு உள்நாடு மற்றும் புவியரசியல் சார்ந்த நிர்பந்தங்கள் உள்ளன.  ஆனால், அதையெல்லாம் தாண்டித்தான் நாம் அமைதியை நோக்கி நகர முடியும். அன்வர் சதாத்தும், யிட்சாக் ரபீனும் அப்படி நகர்ந்தார்கள்.  அத்திசையில் நடக்க எத்தனிக்கும் யாரையுமே நாம் ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும். 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இஸ்ரேல்: யூதர்களைப் புரிந்துகொள்ளல்
இஸ்ரேல்: கிறிஸ்துவத்தின் எழுச்சியும் யூதத்தின் சரிவும்
இஸ்ரேல்: இஸ்லாமும் பாலஸ்தீனமும்
பாலஸ்தீனம்: காலனியம் பற்ற வைத்த நெருப்பு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கார்த்திக் வேலு

கார்த்திக் வேலு, எழுத்தாளர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கிறார். அரசுத் திட்டங்கள், வெளியுறவுத் துறை விவகாரங்கள் தொடர்பில் எழுதுகிறார். தொடர்புக்கு: writerkayvee@gmail.com


3

2

1




பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Gowri Shankar M   1 year ago

மிகவும் பயனுள்ள தொடர்.... 2500 வருட காலம் பிரச்சினையை நேர்த்தியாக கூறியதற்கு நன்றி... தீர்வு கிடைகட்டும்.... அமைதி பிறக்கடும்... Role of Religions, Kingdoms, ruler's, colonization, Industrialisation, World wars to present state of world has be covered well... Gives an huge insight for readers... 🙏

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   1 year ago

நல்ல தொடர், மிக நன்றி.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

மாஸ்டர்நீர் மேலாண்மைதமிழர்கள்வினயா தேஷ்பாண்டே பண்டிட் கட்டுரைதமிழ் இலக்கியங்கள்இளமையில் வழுக்கை ஏன்?பழகுதல்எஸ்.அப்துல் மஜீத் கட்டுரைராகுலைப் பாராட்டுகிறார் இராணிஎழுத்துஉத்தர பிரதேச தேர்தல்இனக் கலவரம்இந்திய ரிசர்வ் வங்கிசீன ராணுவம்உரத்து குரல்கொடுசண்முகநாதன் சமஸ் பேட்டிதுளசிதாசன்எல்டிஎல்டபுள் என்ஜின் ரயில்அருஞ்சொல் கூட்டுறவு நிறுவனங்கள்முரசொலி மாறன்தெற்காசிய வம்சாவளிநேஷனலிஸம்மாட்டிறைச்சிபரிசோதனைகள்மருத்துவ மாணவர்கள்அன்பாகப் பழகுதல்எத்தியோப்பிய உணவுகொலீஜியம்பொருளாதார வளர்ச்சி: உண்மையும் கனவும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!