கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

உமர் அப்துல்லா ‘முதிர்ந்த’ அரசியலர்

நீலம் பாண்டே சஜீத் அலி
20 Oct 2024, 5:00 am
0

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு-காஷ்மீர் பிரதேச முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான உமர் அப்துல்லா (54), நன்கு பக்குவப்பட்ட முதிர்ந்த அரசியல் தலைவராகிவிட்டார். இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாடு தொடர்பாக 2008இல் நாடாளுமன்ற விவாதத்தின்போது உணர்ச்சிக் கொப்பளிக்கப் பேசிய உமர் அப்துல்லா, பெரும்பாலான இந்திய முஸ்லிம்களின் உள்ளக் குமுறலை அப்படியே கொட்டினார்; “நான் முஸ்லிம், நான் இந்தியன் – இந்த இரண்டிலும் நான் வேறுபாடு எதையும் பார்க்கவில்லை” என்றார். தன்னுடைய அரசியல் வரலாற்றில் மிகச் சிறப்பான பேச்சு அது என்று அவரே பின்னர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

என் கௌரவம் உங்கள் கையில்…

இந்த ஆண்டு ஜம்மு - காஷ்மீர் (இப்போது ஒன்றிய ஆட்சிக்குள்பட்ட யூனியன் பிரதேசம்) பிரதேச சட்டமன்ற பொதுத் தேர்தலில் கந்தர்பால் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பிறகு (செப்டம்பர் 4) பொதுக்கூட்டத்தில் வாக்காளர்களிடையே பேசினார்: “இன்றைக்கு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன் – என்னுடைய தலைப்பாகை, என்னுடைய கௌரவம், இந்தத் தொப்பி அனைத்தையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்” என்றார். இந்தக் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டியது வாக்காளர்களாகிய உங்களுடைய பொறுப்பு என்று சொல்லாமல் புரியவைத்தார்.

நாடாளுமன்றத்தில் 2008இல் பாஜகவைக் கடுமையாகச் சாடி அனல் பறக்கப் பேசியதற்கும், 2024இல் கந்தர்பாலில் உணர்ச்சி பொங்கப் பேசியதற்கும் உள்ள வேறுபாடுதான் - உமர் அப்துல்லா முதிர்ச்சி அடைந்துவிட்டார் என்பதைக் காட்டுகிறது. கந்தர்பாலில் உமர் பேசிய காணொலி, காஷ்மீரத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பரவியது (வைரலானது). உமர் அப்துல்லா அரசியலில் நன்கு அனுபவப்பட்டு முதிர்ந்தும் கனிந்தும் பக்குவப்பட்டுவிட்டார் என்று அனைவரும் மகிழ்ந்தனர். மக்களவைக்கு ஜூன் மாதம் நடந்த பொதுத் தேர்தலின்போது பாரமுல்லா தொகுதியில் பொறியாளர் ரஷீதிடம் தோற்ற பிறகு உமர் அப்துல்லா அடக்கத்தையும் கைவரப் பெற்றிருக்கிறார் என்று பாராட்டினர்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

முதல் பேட்டி

தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் (6), சுயேச்சைகள் (4), மார்க்சிஸ்ட் (1), ஆஆக (1) ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார். அப்போது நிருபர்கள் அவரைச் சந்தித்து, “அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு அளித்த சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்குமாறு ஒன்றிய அரசிடம் கோருவீர்களா?” என்று கேட்டனர். “அதை நீக்கியவர்களிடமே கேட்டால் எப்படித் தருவார்கள்?” என்று உடனே பதில் அளித்தார். “யூனியன் பிரதேசமாக உள்ள நிலையை மாற்றி முழுமையான மாநில அந்தஸ்தைக் கோருவீர்களா?” என்று கேட்டபோது, “தேர்தல் பிரச்சாரத்தின்போதே பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவ்வாறு வாக்குறுதி தந்துள்ளனர். கனவானான மோடி, தனது வாக்குறுதியைக் காப்பாற்றுவார் என்று நம்புவோம்” என்றார். இந்த இரு பதில்களுமே அவர் எந்த அளவுக்குப் பக்குவப்பட்டிருக்கிறார் என்பதை மேலும் உணர்த்துகின்றன.

‘பாஜக கூட்டணியால் ஆளப்படும் ஒன்றிய அரசுடன் உங்களுடைய உறவு எப்படி இருக்கும், ஆளுநருடன் எப்படிச் சுமுகமாக இணைந்து செயல்படுவீர்கள்?’ என்றும் நிருபர்கள் கேட்டனர். “மாநிலத்தின் நலனுக்காக உழைக்க வேண்டிய முதல்வர், ஒன்றிய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டால் எதையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாது, ஆளுநருடனும் தேவைக்கேற்ப, அரசமைப்புச் சட்டம் இடம்கொடுக்கும் வகையில் ஒத்துழைத்துச் செயல்படுவோம்” என்றார். ‘அரசியல் வேறு – அரசு நிர்வாகம் வேறு’ என்ற புரிதல் உமரிடம் நன்றாகவே இந்தப் பதில்களில் வெளிப்பட்டுள்ளன.

மாறிவிட்ட உடல் மொழி

தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், உமர் பற்றிக் கூறியதாவது: உமரின் உடல் மொழியிலேயே மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. 2009இல் அரசியலுக்கு வந்தபோது துடிப்பான இளம் தலைவராக இருந்தார், மாநிலத்தில் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினார். ஆனால், தொடர்ச்சியாக வெவ்வேறு சம்பவங்களில் போராட்டங்களும் ஊரடங்கு உத்தரவுகளுமாக அந்தக் காலம் அமைந்தது, அவர் விரும்பிய வகையில் எதையும் செய்ய முடியாமல் போனது.

வாஜ்பாய் காலத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட இளம் தலைவராக இருந்தார். இளைஞர், மென்மையானவர், நாசூக்கானவர், பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசுவார் என்பது அவரின் அடையாளமாக இருந்தது. இப்போது உருது சரளமாகப் பேசுகிறார், தேவைப்பட்ட இடங்களில் காஷ்மீரியிலும் உரையாடுகிறார். மக்களுடன் நேரடியாகப் பேசும் அளவுக்கு நிறைய அனுபவம் வந்திருக்கிறது. ‘காஷ்மீருக்கிருந்த தனி அந்தஸ்து நீக்கப்பட்டதை ஏற்கவே முடியாது’ என்ற நிலையில் அவர் உறுதியாக இருப்பதைக் காஷ்மீரிகள் மிகவும் வரவேற்கிறார்கள்.

‘ஜம்மு - காஷ்மீர் எப்போதுமே அப்துல்லாக்களுக்கே சொந்தம், இந்தத் தேர்தல் முடிவும் அதைத்தான் உறுதிசெய்திருக்கிறது’ என்று மக்பூல் என்ற கட்சித் தொண்டர் தெரிவித்தார். ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா என்று மூன்று தலைமுறைகளாக காஷ்மீர் தலைமைப் பதவி அவர்களையே சுற்றிவருகிறது.

காஷ்மீர் சிங்கம்

குப்கர் சாலையில் உள்ள பரூக் அப்துல்லா வீட்டுக்குள் உமர் நுழைந்தபோது அங்கே திரண்டிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். ‘தேகோ தேகோ கோன் ஆயா – ஷேர் ஆயா, ஷேர் ஆயா’ என்று முழங்கினர். (பாரு பாரு யார் வருவது – காஷ்மீரத்தின் சிங்கம் வருகுது).

2009ஆம் ஆண்டில் தனது 41வது வயதில் காஷ்மீர் மாநில முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றபோதும் தொண்டர்கள் இதேபோலத் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பிரிவினைவாதிகளாலும் தீவிரவாதிகளாலும் பீடிக்கப்பட்ட மாநிலத்தைத் தனது புதிய அணுகுமுறையால் உச்சத்துக்குக் கொண்டுசெல்வார் உமர் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. ஆனால், மாநில அரசியலோ பல்வேறு தரப்பினரின் சுயநல நடவடிக்கைகளால் மீண்டும் அலைக்கழிக்கப்பட்டு கரடு-முரடான பாதையில் பயணப்படுவதாக மாறியது.

குலாம் நபிக்குப் பின்…

மக்கள் எதிர்ப்பு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகிய பிறகு உமர் அப்துல்லா முதல்வர் பதவியேற்றார். தொடக்கத்தில் மாநிலம் கொந்தளிப்பில் இருந்தது. தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணி அரசு 2009, 2010 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்கள், போராட்டக்காரர்கள் சேராமலிருக்க அரசு விதித்த ஊரடங்குகள் என்று அமைதியில்லாமல் கழிந்தது. அதற்குப் பிறகு 2 ஆண்டுகள் அமைதியாக இருந்தன, அப்போதுதான் மாநிலத்துக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரித்தது.

ஷோபியான் சம்பவம்

உமர் அப்துல்லா முதல்வராகப் பதவியேற்றதும் சந்தித்த முதல் சோதனை, ஷோபியான் சம்பவம். ஷோபியான் என்ற இடத்தில் ஓடையில் இரண்டு இளம் பெண்களின் சடலங்கள் கிடைத்தன. இந்திய பாதுகாப்புப் படையினர்தான் அந்த இளம் பெண்களை வல்லுறவு கொண்டுவிட்டு கொன்றுவிட்டனர் என்று காஷ்மீரிகளிடம் வதந்தி பரப்பப்பட்டது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று முதலில் அறிவித்த உமர், நீதி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அந்த விவகாரத்தை அவர் கையாண்ட விதம் காஷ்மீர் முஸ்லிம்களுக்குத் திருப்தியைத் தரவில்லை. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் போராட்டங்கள் வெடித்தன. போராட்டக்காரர்களை அடக்க காவல் துறையினர் எடுத்த நடவடிக்கையில் பலர் காயம் அடைந்தனர். ‘தடயவியல் ஆய்வில், வல்லுறவு நிரூபணமாகியிருக்கிறது’ என்று காவல் துறையினரே பின்னர் தெரிவித்தனர். இதையடுத்து கிளர்ச்சி மேலும் தீவிரம் அடைந்தது. பிறகு அந்த விசாரணையை ‘மத்தியப் புலனாய்வுக் கழகம்’ (சிபிஐ) மேற்கொண்டது. அந்தப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆள்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது.

பாலியல் வல்லுறவு நடந்ததாக, பாகிஸ்தானிலிருக்கும் குழுக்களின் தொடர்பால் அறிக்கை தந்த 2 மருத்துவர்கள் மீது பின்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், உண்மை வெளியாவதற்குள் போராட்டம் பல கட்டங்களாக - பெரிதாகிக்கொண்டேபோனது. 2009இல் தவறாக அறிக்கை தந்த அந்த இரண்டு மருத்துவர்களும் 2023இல் மாநில அரசால் மருத்துவ சேவையிலிருந்து நீக்கப்பட்டனர்.

2012 முதல் 2014 வரையில் அமைதியாகவே இருந்தது காஷ்மீர். ஆனால், நாடாளுமன்றத்தின் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அப்சல் குரு, திஹார் சிறையில் தூக்கில் போடப்பட்டதால் காஷ்மீரில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பத்து நாள்களுக்குத் தொடர்ந்து ஊரடங்கு அமல்செய்யப்பட்டது. இருந்தாலும் நிலைமை கட்டுமீறாமல் உமர் பார்த்துக்கொண்டார் என்று மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான அகமது அலி ஃபயாஸ் தெரிவிக்கிறார்.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு

சமஸ் | Samas 22 Sep 2021

குலீத் சௌக் மோதல்

பிரச்சினைகளைக் கையாள்வதில் உமர் எப்போதும் சரியான வழிகளையே கையாள்வார் என்று இன்னொரு மூத்த தலைவர் தெரிவித்தார். ஜம்முவிலிருந்து 238 கி.மீ. தொலைவில் உள்ள, இந்துக்கள் அதிகம் வசிக்கும் குலீத் சௌக் என்ற இடத்தில் வகுப்புக் கலவரம் ஏற்பட்டது. உமர் உடனே அங்கு ஊரடங்கை அமல்படுத்தினார். அந்த இடத்துக்குச் செல்ல பாஜக தலைவர் அருண் ஜேட்லி டெல்லியிலிருந்து விமானத்தில் வந்தார். அவர் அங்கே செல்லாதபடிக்கு விமான நிலையத்திலேயே அவரைத் தடுத்துவிட்டார் உமர். ஜேட்லி மட்டுமல்ல எந்த அரசியல் தலைவரும் அங்கே செல்ல முடியாதபடிக்குத் தடுத்தார் அவர் என்று நினைவுகூர்ந்தார்.

கோபம் தந்த வெள்ளம்

ஆனால் 2014இல் காஷ்மீரத்தில் ஏற்பட்ட வெள்ளம் உமருக்குச் சோதனையாக அமைந்தது. வெள்ளச் சேதங்களைத் தடுக்கவும் மீட்பு – நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் முடியாமல் மாநில அரசு திணறியது. இதனால் மக்களுக்கு உமர் அரசின் மீது தாங்க முடியாத கோபம் ஏற்பட்டது. அதை அவர் எதிரிலேயே காட்டினர்.

இருந்தாலும் அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் ஜம்மு - ஸ்ரீநகர் 300 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணியும் அவ்விரு நகரங்களுக்கும் ரயில் பாதை இணைப்புப் பணியும் வேறு சில அடித்தளக் கட்டமைப்பு பணிகளும் தொடங்கப்பட்டன. ஜம்மு – ஸ்ரீநகர்களைச் சுற்றிய வட்டப் பாதை திட்டங்களும் தொடங்கப்பட்டன, ஆனால் ஒன்றிய பாஜக ஆட்சியில் அவை விரைவு பெற்றன என்கிறார் ஃபயாஸ்.

2009 முதல் 2014 வரையில் முதல்வராக இருந்த உமர், 2015 முதல் 2018 வரையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். 1998இல் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியிலிருந்து முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உமர், ஒன்றிய அரசில் 2000 முதல் 2002 வரையில் தொழில் – வணிகத் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.

தேசிய மாநாட்டுக் கட்சி பத்திரிகைத் தொடர்பாளர் இம்ரான் நபி தர்: உமர் அப்துல்லா அச்சமின்றியும் துணிச்சலாகவும் பேசுகிறார், இன்றைய பெரும்பாலான அரசியலர்களிடம் இந்தக் குணம் இல்லை. அவர் எப்போதும் வெளிப்படையாகவே பேசுவார், எதைச் சொல்ல வேண்டுமோ அதை நேரடியாகவும் தெளிவாகவும் சொல்வார், இதனாலேயே மக்களுக்கு அவரைப் பிடிக்கிறது. காஷ்மீர் விவகாரம் மட்டுமல்ல நாட்டின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் தெளிவாகப் பேசக்கூடியவர். இந்தியாவில் இப்போது முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து ஆணித்தரமாகப் பேசுகிறார். இதனாலேயே முஸ்லிம்கள் அனைவரும் அவரை விரும்புகின்றனர். அனைத்து முஸ்லிம்களின் பிரதிநிதியாக அவரைப் பார்க்கின்றனர்.

“முன்பு தனி அந்தஸ்து பெற்ற மாநிலத்தின் முதல்வராக இருந்தார், இப்போது அதிகாரங்களும் உரிமைகளும் குறைக்கப்பட்ட, மத்திய ஆட்சிக்குள்பட்ட பகுதியின் முதல்வராகிறார். மாநிலத்தின் வரலாற்றிலேயே வலுவற்ற சட்டமன்றம் இதுதான். பல சோதனைகளைச் சந்தித்தவர் உமர். அவற்றிலிருந்து வெற்றிகரமாக வெளிவந்தவர். நேர்மையானவர், அநீதிக்கு எதிராகப் பேசத் தயங்கமாட்டார். பாஜக அரசுக்கு எதிராகவும் காஷ்மீர் விவகாரத்தில் அந்த அரசு நடந்துகொள்ளும் விதம் தொடர்பாகவும் கண்டித்துப்பேசத் தயங்காதவர் அவர்” என்றார் தர்.

நம்பிக்கை துரோகம்

‘காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்து நீக்கப்பட்ட 2019இல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் உமர். பொது பாதுகாப்புச் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை ரத்துசெய்தது நம்பிக்கை துரோகம் என்று கடுமையாக கண்டித்தார். வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதால் அவர் குலைந்துவிடுவார் என்று எதிர்பார்த்தார்கள், விடுதலை பெற்று வெளியே வந்தபோது முன்பைவிட உறுதி வாய்ந்தவராகவே தொடர்கிறார். மாநிலத்துக்கும் உமருக்கும் ஏற்பட்ட மாற்றங்கள் தேசிய மாநாட்டுக் கட்சியின் பிரச்சாரங்களிலும் எதிரொலித்தன’ என்கிறார் இன்னொரு தலைவர்.

நெட்ஃபிளிக்ஸ் ரசிகர்

‘நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியில் உமருக்கு ஆர்வம் அதிகம். நாள் முழுக்க அரசியல் வேலையில் ஈடுபடுகிறார், மாலை அல்லது இரவில் தொலைக்காட்சியின் நெட்ஃபிளிக்ஸ் கதைகள் திரைப்படங்களையும் பார்க்கிறார். அதில் வரும் கதைகளைத் தொடர்களை எங்களுக்கும் பேச்சினூடே சொல்வார். காலையில் எழுந்ததும் அன்றைய முக்கியப் பத்திரிகைகளை வாசித்துவிடுவார், அதில் சிலவற்றைக் குறித்து கட்சித் தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் விவாதிப்பார். சில வேலைகளை அவற்றின் அடிப்படையிலேயே பிரித்தும் தருவார்’ என்கிறார் கட்சியின் மற்றொரு தலைவர்.

அப்பாவிடம் மரியாதை

‘உமர் அப்துல்லா விருப்பப்படிச் செயல்பட அவருடைய தந்தை பரூக் அப்துல்லா இடம்தருவார். தந்தை சொல்வதை அதிகம் எதிர்க்காமல் கேட்டுக்கொள்வார் உமர். மதிப்பு குறைக்கப்பட்ட சட்டமன்றத்துக்கான தேர்தலில் இனிப் போட்டியிடமாட்டேன் என்றுதான் உமர் முதலில் அறிவித்திருந்தார். பரூக்தான் அவரைப் போட்டியிடுமாறு கட்டளையிட்டார் என்கிறார் ஒரு தலைவர்.  

படகாம், கந்தர்பால் என்ற இரு தொகுதிகளில் போட்டியிட்டார் உமர். படகாம் தொகுதிக்கு 9 முறை நடந்த பொதுத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி 8 முறை வென்றிருக்கிறது. 1972இல் அது போட்டியிடவில்லை. 2008 முதல் 2014 வரையில் உமர் வெற்றிபெற்ற தொகுதி கந்தர்பால்.

உமர் பேட்டி

“இந்தத் தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஐந்தாண்டுகளில் மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம். மாநிலத்தின் நன்மைக்காக ஒன்றிய அரசுடன் உறவை வளர்ப்போம்” என்றார் உமர் அப்துல்லா.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

© த பிரிண்ட்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

உங்களை எச்சரிக்க வந்திருக்கிறேன் - உமர் அப்துல்லா உரை
நீதி.. அதுவே தீர்வும்கூட.. காஷ்மீரிகளுக்குச் சுதந்திரம்!
கிலானி - ஒரு வாழ்க்கை, ஒரு கேள்வி
காஷ்மீர்: ஜனநாயகத்தின் கடைசி தூணும் சரிந்துவிட்டது!
காஷ்மீர்: நீதியின் வீழ்ச்சி
காரிருள்தான் இனி எதிர்காலமா?
காஷ்மீருக்கு வேண்டும் சுயாட்சி
சோனம் வாங்சுக் ஏன் உண்ணாவிரதம் இருக்கிறார்?
காஷ்மீர்: தேர்தல் அல்ல, மாபெரும் பொறுப்பு
காஷ்மீர் சட்டமன்ற மறுவரையறைத் திட்டம் ஆபத்தான விளையாட்டு
மோடி அரசின் தோல்விக்குச் சான்று அமித் ஷாவின் காஷ்மீர் பயணம்
370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

1






வீழ்ச்சியில் பெருமிதம்தனித்த உயிரினங்களா அரசு ஊழியர்கள்?ராகுலுக்குப் பயன்படக்கூடிய ‘ஆலோசனைகள்’கடுமையான வார்த்தைகள்மசாலாநடவுவினோத் கே.ஜோஸ் மனம்திகைப்பூட்டும் பணக்கார இந்தியா!ஔரங்ஸேப்ஆசை பேட்டிவலதுசாரிக் கட்சிநடைமுறையே இங்கு தண்டனை!ஊட்டிலூலா: தலைவனின் மறுவருகைஇனிப்புச் சுவைஒரு கோடிப் பேர்இலக்கியத் தளம்அமெரிக்க நாடளுமன்றம்யூனியன் பிரதேசம்வேலைபத்மா சுப்ரமணியம்தெலங்கானாபெருமாள்முருகன் கட்டுரைசோழர் காலம்அய்யாவுபேரழிவுக்கு யார் பொறுப்பு?புதிய தொழில்நுட்பம்கொப்புளம்சமூகவியல் துறை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!