கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு
நிலவின் ‘இருண்ட பகுதியோ’ மணிப்பூர்?
எழுதிய கட்டுரைகளையெல்லாம் வேகமாக புரட்டியபோது, மணிப்பூர் மாநிலம் குறித்து அடிக்கடி எழுதாமல் விட்டுவிட்டேனே என்று என்னை நானே கடிந்துகொண்டேன். கடைசியாக 2023 ஜூலை 30இல் எழுதியிருக்கிறேன். அதற்குப் பிறகு 13 மாதங்கள் உருண்டோடிவிட்டன. அப்படி கவனிக்காமல் விட்டது, என்னைப் பொருத்தவரை மன்னிக்க முடியாத குற்றம்; எனக்கு மட்டுமல்ல அனைத்து இந்தியர்களுக்குமே இப்படி நீண்ட காலமாக ஒரு மாநிலத்தில் கலவரம் மூண்டு பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பது பெருங்குற்றம்தான்.
கடந்த ஆண்டு நான் எழுதியபோதே, ‘எதிர்காலம் மிகவும் ஆபத்தானதாக இருக்கும்’ என்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன. ‘இன அழிப்புக்கான தொடக்கம் இது’ என்று எழுதியிருந்தேன். இப்போது கிடைத்துள்ள அனைத்துத் தகவல்களையும் சேர்த்துப் பார்க்கும்போது, இம்பால் பள்ளத்தாக்கில் குகி – ஜோமி இனத்தவர் ஒருவர்கூட வசிக்கவில்லை, குகி - ஜோமிகள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதியில் ஒரு ‘மெய்தி’ இனத்தவரும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது; மணிப்பூர் மாநில முதலமைச்சரும் பிற அமைச்சர்களும் தங்களுடைய அலுவலகங்களில் ‘பலத்த பாதுகாப்புடன்’ இருந்தபடிதான் வேலை செய்கிறார்கள், ஒருவரால்கூட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை என்றும் எழுதியிருந்தேன்.
எந்த இனமும், மணிப்பூர் மாநில காவல் துறை மீது நம்பிக்கை வைக்கவில்லை, இந்தக் கலவரத்தில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்று அரசு தரும் தரவுகளையும் ஒருவரும் நம்பவில்லை என்றும் எழுதியிருந்தேன்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
மூவர்தான் முழுக் காரணம்
நான் எழுதிய அனைத்தும் அப்படியே உண்மையாகிவிட்டது என்பது வருத்தம் தருகிறது. மணிப்பூரில் நடந்துள்ள சம்பவங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அரசுகளும் நிர்வாகிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயக மரபு. உயர்ந்த அதிகாரத்திலும் பொறுப்பிலும் உள்ள மூவர், இவற்றுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்:
நரேந்திர மோடி, பிரதமர்: என்ன ஆனாலும் சரி மணிப்பூருக்குப் போக மாட்டேன் என்று அவர் சபதம் செய்துவிட்டதைப் போலத் தெரிகிறது. ‘மணிப்பூர் பற்றி எரியட்டும், மணிப்பூரில் இனி கால்வைக்க மாட்டேன்’ என்பதாகவே அவருடைய அணுகுமுறை தெரிவிக்கிறது. பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற 2024 ஜூன் 9க்குப் பிறகு இத்தாலி (ஜூன் 13-14, ரஷ்யா (ஜூலை 8-9) ஆஸ்திரியா (ஜூலை 10), போலந்து (ஆகஸ்ட் 21-22, உக்ரைன் (ஆகஸ்ட் 23-24), புரூணை (செப்டம்பர் 3-4), சிங்கப்பூர் (செப்டம்பர் 4-5) ஆகிய நாடுகளுக்குச் செல்ல அவருக்கு நேரம் கிடைத்தது.
இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களில் அமெரிக்கா, லாவோஸ், சாமோஸ், ரஷ்யா, அஜர்பைஜான், பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் செல்ல பயணத் திட்டம் தயாராக இருக்கிறது. மணிப்பூர் செல்ல அவருக்கு நேரமோ, உடலில் தெம்போ இல்லாமல் போய்விடவில்லை; துயரத்தில் சிக்கியுள்ள அந்த மாநிலத்துக்கு ஏன் போக வேண்டும் என்ற அவருடைய எண்ணம்தான், போகாமலிருக்கக் காரணம் என்பதில் ஐயமே இல்லை.
மணிப்பூருக்கு போய் நேரில் பார்க்கக் கூடாது என்பது அவருடைய பிடிவாதம். இந்தப் பிடிவாத குணத்தை குஜராத்தில் மிகப் பெரிய வகுப்புக் கலவரம் நடந்தபோது, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு கிளர்ச்சி நடத்தியபோது, விவசாயிகள் ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லிக்கு அருகில் நெடிய முற்றுகைப் போராட்டம் நடத்தியபோது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஒத்துவைப்புத் தீர்மானங்களைக் கொண்டுவந்தால் ஒன்றைக்கூட ஏற்காதீர்கள் என்று அமைச்சரவை சகாக்களுக்கு ஆலோசனை கூறி செயல்படுத்தியபோதெல்லாம் பார்த்துவருகிறோம்.
அமித் ஷா, ஒன்றிய உள்துறை அமைச்சர்: மணிப்பூர் மாநிலத்தில் நிகழும் அரசின் ஒவ்வொரு செயலும் அமித் ஷாவின் உத்தரவில்லாமல் நடப்பதில்லை, அதிகாரிகள் நியமனம், இடமாறுதல், கலவரத்தைத் தடுக்க பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்தல் என்று எல்லாமே அவருடைய கட்டளைப்படிதான் நடக்கின்றன. இப்போது மணிப்பூர் மாநில அரசே அவர்தான்; அவருடைய நேரடி பொறுப்பில்தான் மணிப்பூர் வன்முறை பெரிய அளவில் வெடித்துப் பரவியிருக்கிறது.
மணிப்பூர் மக்கள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் தங்களிடையே இப்போது மோதிக்கொள்ளவில்லை, ராக்கெட்டுகளையும் டிரோன்களையும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். கடந்த வாரம் இரண்டு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மூடப்பட்டன, இணையதளத் தொடர்பு ஐந்து மாவட்டங்களில் நிறுத்தப்பட்டது, இம்பால் நகர வீதிகளில் மாணவர்களுடன் காவல் துறையினர் நேருக்கு நேர் மோதுகின்றனர். மணிப்பூரில் ஏற்கெனவே இருக்கும் 26,000 பாதுகாப்புப் படையினர் போதாமல், மேலும் இரண்டு பட்டாலியன்கள் (2,000 ஆடவர் – மகளிர்) மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அவசர அவசரமாக அனுப்பப்பட்டுள்ளனர்.
என்.பிரேன் சிங், மணிப்பூர் முதல்வர்: தான் விரித்த வலையில் தானே சிக்கி, இப்போது சூழ்நிலைக் கைதியாக அடைபட்டுக்கிடக்கிறார். அவராலும், அவருடைய அமைச்சரவை சகாக்களாலும் இம்பால் பள்ளத்தாக்குக்குக் காவலர்கள் புடைசூழக்கூட செல்ல முடியவில்லை. குகி – ஜோமி இனத்தவர் அவர் மீது அதிகபட்ச வெறுப்பில் உள்ளனர். தங்களைப் பாதுகாப்பார் என்று நம்பிய மெய்தி இனத்தவரும்கூட அவருடைய செயலற்றத்தன்மை கண்டு வெறுக்கத் தொடங்கியுள்ளனர்.
மணிப்பூரில் அரசு நிர்வாகம் நடப்பதற்கான அறிகுறியே இல்லை. அவருடைய திறமையற்ற, பாரபட்சமான நிர்வாகம் காரணமாக மக்களிடையே அமைதியின்மை அதிகமாகிவிட்டது. இப்போது அவர்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் மையமாகப் பார்க்கப்படுகிறார். அவரைப் பார்த்தாலே மக்கள் கோபப்பட்டு வன்முறையில் ஈடுபடுகின்றனர். பல மாதங்களுக்கு முன்னதாகவே அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். அவர் முதல்வராக நீடிப்பதற்குக் காரணமே மோடி – ஷா இரட்டையர்களின் அகம்பாவம் மிக்க, ஒருபோதும் தவறை ஒப்புக்கொண்டுவிடக் கூடாது என்ற ஆணவப் போக்குதான்.
பிளவு நடைமுறையாகிவிட்டது
மணிப்பூர் இப்போது அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும், நடைமுறையில் இரண்டாகப் பிளந்துவிட்டது. சூரசந்த் பூர், பெர்ஸ்வால், காங்போக்பி ஆகிய மாவட்டங்கள் குகி மக்களுடைய முழுக் கட்டுப்பாட்டில் உள்ளன. எல்லைப்புற ஊரான மோரி உள்ளிட்ட தெங்னௌபால் மாவட்டம் இப்போது குகி - ஜோமி இன மக்களுடைய முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குகி – ஜோமி தவிர நாகர்களும் அதைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
குகி - ஜோமி தனியாகவே நிர்வாகம் செய்கின்றனர். குகி - ஜோமி பகுதிகளில் மெய்தி இன அரசு ஊழியர்களோ அதிகாரிகளோ கிடையாது. அவர்கள் இம்பால் பள்ளத்தாக்கில் பாதுகாப்பான இடத்துக்குப் போய்விட்டார்கள். மெய்திக்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலத்தில் வசிக்க குகி – ஜோமி விரும்பவில்லை, 60 உறுப்பினர்கள் மொத்தமுள்ள மணிப்பூர் சட்டமன்றத்தில் மெய்திக்கள் மட்டும் 40 பேர். மணிப்பூரின் பிரதேச எல்லையை அப்படியே தக்கவைக்க வேண்டும் என்று மெய்திக்கள் விரும்புகின்றனர். இரு சமூகங்களுக்கும் இடையில் பகைமை மிகவும் ஆழமாகவும் உச்சமாகவும் மாறிவிட்டது.
இப்போது யாரும் - யாருடனும் பேசுவதில்லை. அரசுக்கும் இனக்குழுக்களுக்கும் இடையிலும், அல்லது இனக் குழுக்களான மெய்தி – குகி, ஜோமி இடையிலும் பேச்சே இல்லை. நாகர்களுக்கும் மணிப்பூர் அரசு மீதும் ஒன்றிய அரசின் மீதும் வரலாற்றுரீதியாகவே அதிருப்தி தொடர்கிறது, இந்த மோதலில் தங்களையும் ஒரு கட்சியாக சேர்க்க அவர்கள் விரும்பவில்லை.
ஒளிக்கீற்றுகூட இல்லை
மணிப்பூர் இப்போது பரஸ்பர சந்தேகம், அவநம்பிக்கை, வஞ்சகம், இன மோதல் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருக்கிறது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டி அரசை நடத்துவது எப்போதுமே எளிதாக இருந்ததில்லை. பாஜக தலைமையிலான ஒன்றிய – மாநில அரசுகளின் அலட்சியம் காரணமாகவும், திறமையற்ற நிர்வாகம் காரணமாகவும் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது.
மணிப்பூருக்கு நேரில் செல்வது, சந்திரனின் மறுபக்கத்துக்கு ராக்கெட்டில் செல்வதைப் போல ஆபத்துகள் நிறைந்தது என்று பிரதமரே உணர்ந்திருக்க வேண்டும், அதனால்தான் போகாமல் இருக்கிறார்!
தொடர்புடைய கட்டுரைகள்
வடகிழக்கு: புதிய அபிலாஷைகள்
மணிப்பூர்: அமைதியின்மை தொடர யார் பொறுப்பு?
எரியும் மணிப்பூர்
மூன்றே மூன்று சொற்கள்
ராஜ தர்மம்: குஜராத்தும் மணிப்பூரும்
மோடியின் இன்னோர் அவமானகரத் தோல்வி
மோடி அரசின் அலட்சியமே மணிப்பூர் எரியக் காரணம்
மணிப்பூர் பிரச்சினையின் பின்னணி என்ன?
தமிழில்: வ.ரங்காசாரி
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.