கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி, இந்தியாவின் குரல்கள் 5 நிமிட வாசிப்பு

வடகிழக்கு: புதிய அபிலாஷைகள்

சமஸ் | Samas
24 May 2024, 5:00 am
0

நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ச்சியாகப் பேட்டிகளும் அளித்துவருகிறார். இந்திய அரசியல் களத்தைப் பற்றி விரிந்த பார்வையைத் தரும் இந்தத் தொடரின் எந்தப் பதிவையும் தனித்தும் வாசிக்கலாம்; தொடர்ந்தும் வாசிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம். 

ணிப்பூர் தலைநகர் இம்பால் விமான நிலையத்தில் இறங்கியபோது நான் சந்தித்த ஓட்டுநர் கேட்ட கேள்விதான் வடகிழக்கை எப்போது நினைத்தாலும் என் நினைவில் வரும். “வாருங்கள், இந்தியாவிலிருந்துதானே வருகிறீர்கள்?”

அடுத்தடுத்த நாட்களில் ஊரைச் சுற்றியபோது அங்குள்ள சூழல் துலங்கியது. நகரத்தின் பிரதான சந்தையிலேயே மணிப்பூர் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சுவரொட்டிகளைப் பார்த்தேன். மணிப்பூரிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை நாகாலாந்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பிரசுரித்திருந்தது. அங்குள்ள பேராசிரியர் ஒருவர் கருத்தரங்கில் கேட்டிருந்தார், “ஏன் நாகாலாந்து தொடர்பாக இந்தியாவிடம் விவாதிக்கிறீர்கள்?”

நாகாலாந்திலும் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக சுதந்திர தினம் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு என்று தனிக் கொடி, தனி அரசமைப்புடன் கூடிய ஏற்பாட்டுக்குத் தயார் என்றால் சுமுகமாக உறவு கலக்கலாம் என்று டெல்லியிடம் பேசுகிறார்கள். இவர்கள் கனவில் உள்ள ‘நாகாலிம்’ இப்போதைய நாகாலாந்தின் எல்லைக்குட்பட்டது இல்லை; பக்கத்து மாநிலங்களான அஸாம், மணிப்பூர், அருணாசல பிரதேசம் இவற்றின் சில பகுதிகளோடு மியான்மரின் சில பகுதிகளையும்கூட உள்ளடக்கியது.

இன்றைய வடகிழக்கில் உள்ள எட்டு மாநிலங்களிலும் இப்படித் தனித்தனி சூழல்கள் உண்டு. ‘நாம் அனைவரும் ஒரே மாநிலத்தவர்கள்’ எனும் ஒற்றுமையுணர்வேகூட இன்னும் இங்கே முழுமையாக உருப்பெறவில்லையோ என்ற எண்ணம் அங்கு சென்றபோது வந்தது. இருநூறுக்கு மேற்பட்ட பழங்குடி சமூகங்கள் வாழும் நிலமான இந்த பிராந்தியத்தில், அவரவர் சார்ந்த பழங்குடி சமூகப் பிணைப்பே முதன்மையானதாக இருக்கிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

நண்பர் ஒருவர்தான் சொன்னார், “இங்கே உள்ள ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும் மனதின் ஆழத்தில் ஒரு கனவு இருக்கும். தான் சார்ந்த பழங்குடி சமூகத்தினர் வாழும் பகுதிகள் எல்லாம் இணைந்த ஒரு நாடுதான் அந்தக் கனவு. சில பழங்குடி சமூகங்களின் கனவு நாடு ஒரு மாவட்டம் அளவுக்கான பிராந்தியத்துக்குள் சுருண்டிருக்கும்; சில பழங்குடி சமூகங்களின் கனவு பக்கத்துக்கு நாடுகளையெல்லாம் கேட்கும் அளவுக்கு எங்கெங்கோ விரிந்திருக்கும். இதெல்லாம் இன்று சாத்தியத்துக்கு அப்பாற்பட்டது என்று புரிபடும் சூழலில், மெல்ல ஒரு மாநில அடையாளத்துக்குத் தயாராகிறார்கள். இந்த இடத்திலிருந்து அவர்கள் சிந்திக்கும்போது அவர்களுக்கு டெல்லி எங்கோ ரொம்ப தூரத்தில் இருக்கிறது!”

நெடுங்காலமாக டெல்லியும் வடகிழக்கு மாநிலங்களை ரொம்ப தூரத்தில்தான் வைத்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். வளர்ச்சியின் சுவடுகளே தெரியாமல்தான் இருந்தது. ஒன்றிய அரசு தரக்கூடிய நிதிதான் இந்த மாநிலங்களின் பெரும்பான்மை ஆதாரம்.

நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில்தான் புது வெளிச்சம் விழுந்தது. ‘கிழக்கைப் பார்ப்போம்’ எனும் முழக்கத்தோடு இந்த பிராந்தியத்தின் மீது கவனத்தை அவர் குவித்தார். அடுத்து, வாஜ்பாய் காலத்தில் வடகிழக்கின் முன்னேற்றத்துக்கு என்றே தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு என்றே பிரத்யேக நிதி ஒதுக்கீடும் திட்டங்களும் செயலாக்கப்பட்டன. இப்போது மோடி ஆட்சியின் காலகட்டத்தில் வடகிழக்கு பெரும் மாற்றங்களை எதிர்கொள்கிறது.

பாஜகவுக்கு நல்ல அறுவடை தரும் பிராந்தியங்களில் ஒன்றாக இன்று வடகிழக்கு மாறிவிட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கக் கூடியதுதான். வடகிழக்கைப் பொறுத்தமட்டில் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சிக்கு இணக்கமாக முடிவு எடுப்பது தொடர்ச்சியான மரபு என்றாலும், காங்கிரஸ் முன்பு பெற்ற வெற்றிகளோடு பாஜகவின் வெற்றிகளை சமப்படுத்த முடியாது. 

அஸாம், திரிபுரா நீங்கலாக ஏனைய மாநிலங்கள் எதிலும் இந்துக்கள் பெரும்பான்மை கிடையாது. சொல்லப்போனால், பழங்குடிகள் மிகுந்த இந்த பிராந்தியத்தில் கிறிஸ்வர்கள் எண்ணிக்கை அதிகம். உதாரணமாக, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர் மாநில மக்கள்தொகையில் கிறிஸ்தவர்கள் முறையே 75%, 87%, 88%, 41.29% என்ற அளவுக்கு உள்ளனர். அஸாமில் 34% பேர் முஸ்லிம்கள். ஆனால், இன்று இங்கேயுள்ள எட்டு மாநிலங்களுக்கான 25 மக்களவைத் தொகுதிகளில் 18 பாஜக கூட்டணி வசம் உள்ளது. எப்படி?

காங்கிரஸை பாஜக விழுங்கியது; அது மட்டுமே காரணம் என்று சொல்லிட முடியாது. இங்கே பல தசாப்தங்களாக சங்க பரிவாரங்கள் திட்டமிட்டு உழைத்தன; மோடி ஆட்சிக்கு வந்ததும் பயன்படுத்திக்கொண்டனர் என்றார் அரசியல் செயல்பாட்டாளரான ராம்லால். பிஹாரிலிருந்து வந்து அஸாமிலேயே தங்கிவிட்ட வியாபாரியான இவர், இங்கே எப்படியெல்லாம் சங்க பரிவாரங்கள் பணியாற்றுகின்றன என்பதை விவரித்தார். 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி

சமஸ் | Samas 16 Apr 2024

மூன்று வேலைகளைச் செய்திருக்கின்றன சங்க பரிவாரங்கள். ஷாகாக்கள், விவேகானந்தா பள்ளிகள், பால்வாடிகள், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாக்கள், டியூஷன் சென்டர்கள், படிப்பு வட்டங்கள், தொழில் பயிற்சி மையங்கள் மற்றும் மருத்துவமனை எனப் பல வடிவங்களில் மக்கள் இடையே சென்று பணியாற்றுகின்றனர். கதைகள், சடங்குகள், திருவிழாக்கள் வழியாகப் பழங்குடி சமூகங்களை ஒன்றாக அணித்திரட்டி படிப்படியாக இந்து குடைக்குள் அணைக்கின்றனர். வங்கதேசத்திலிருந்து வந்து இங்குள்ள மாநிலங்களில் குடியேறியவர்களில் முஸ்லிம்களை மட்டும் தனித்து அடையாளப்படுத்துவதன் வழியாக ஒரு பொது எதிரியாக அவர்களை உருவாக்கி இதன் வழியாக ஏனைய எல்லோரையும் இணைக்கின்றனர். மூன்று விஷயங்களுமே களத்தில் பாஜகவுக்கான அடித்தளத்தை உருவாக்கிவிட்டிருந்தன.

மோடி ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் தலைவர்களை அப்படியே நிறம் மாற்றி காங்கிரஸின் இடத்தில் பாஜகவை அமர்த்தும் வேலையை பாஜக ஆரம்பித்தது. 

காங்கிரஸில் அதிருப்தி அடைந்து பாஜக பக்கம் வந்தவரான ஹிமந்தா பிஸ்வா சர்மா இங்கே பெரும் தடாலடிகளில் இறங்கினார். 2016இல் அஸாமில் பாஜக ஆட்சிக்கு வர அவரும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தார். அருணாசல பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் முதல்வர் பெமா காண்டு, கூண்டோடு கட்சியை பாஜகவில் இணைக்க அங்கேயும் ஆட்சி மாறியது. 2017இல் மணிப்பூரில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியில் அமர முன்னாள் காங்கிரஸ்காரரான பிரேன் சிங் முக்கியமான காரணியாக இருந்தார். 2018இல் கால் நூற்றாண்டு கால இடதுசாரி ஆட்சியை பாஜக தூக்கிவிட்டு அங்கே அமர்ந்தது. 

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

சமஸ் | Samas 15 Apr 2024

இப்படி பாஜகவால் நுழைய முடியாத இடங்களில் அங்கே ஏற்கெனவே உள்ள மாநிலக் கட்சிகளுக்கு ஆதரவு அளித்து தன்னுடைய கூட்டாளியாக அவர்களை ஆக்கிவிட்டிருக்கிறது. சிக்கிம், மேகாலயா, நாகலாந்து, மிஸோரம் எங்கும் இப்படித்தான் பாஜக தன் கூட்டணியின் மூலமாக அதிகாரத்தில் பங்கெடுக்கிறது.   

காங்கிரஸுக்கு இயல்பான கோட்டை இது. ஆனால், ஆளும் இன்றி வியூகமும் இன்றி பரிதவிக்கிறது. “ராகுல் ஒருவரால் என்ன செய்ய முடியும்? இந்த மக்கள் மீது உண்மையான அக்கறை அவருக்கு இருக்கிறது. மணிப்பூர் கலவரத்துக்குப் பின் இங்கு வந்து சூழலைப் பார்த்த ராகுல் கண்ணீர் வடித்தார். பிரதமர் மோடி தேர்தல் நிமித்தமாக வடகிழக்குக்கு வந்தபோதுகூட இங்கே வரவில்லை. மணிப்பூர் கலவரத்தை மிக மோசமாகக் கையாண்டது பாஜக. வடகிழக்கின் எல்லா மாநிலங்களுமே துயரத்தோடுதான் இதைப் பார்த்தன. ஆனால், ராகுல் ஒருவரால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார் பிரேம்குமார். பாஜகவுக்குப் பின்னணியில் எத்தனை அமைப்புகள் இருக்கின்றன என்கிற கேள்வியோடு இணைத்துப் பார்க்க வேண்டியது இது.

வடகிழக்கின் பெரும்பான்மை மக்களிடம் தங்களுடைய தனித்த பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பதற்றம் இருக்கிறது. வெளிமண்ணிலிருந்து வருபவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக அணுகும் முறை அநேகமாக எல்லா மாநிலங்களிலேயுமே இருக்கிறது. “இங்கே எந்த வளர்ச்சியும் இல்லை. இயற்கை  எவ்வளவோ செழுமையைக் கொட்டிக்கொடுத்திருந்தும் எங்கள் பிள்ளைகளைப் பிழைப்புக்காக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி என்று அனுப்பிக்கொண்டிருக்கிறோம். காட்டில் ராஜா மாதிரி இருப்பவர்கள் அங்கே அடிமைகளைப் போல சொற்பக் கூலிக்கு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். வெளியிலிருந்து வருபவர்களோ இந்த நிலத்தில் எங்களுக்குள்ள அரசியல் உரிமைகளையும் அபகரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உண்டாக்கும் அச்சம்தான் இன்றைக்கு உள்ளூர் அடையாளத்துடன் மாநிலமாக எல்லோரும் சிந்திக்க வழிவகுக்கிறது” என்று சொல்கிறார்கள். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பெரிய கட்சி எது?

சமஸ் | Samas 29 Mar 2024

உள்ளூர் பழங்குடிகளைக் கடந்து பெருத்துவிட்டிருக்கும் வெளியூர் மக்களின் மக்கள்தொகையும் அவர்கள் கைகளில் அரசியல் - பொருளியல் அதிகாரம் போய்விட்டிருப்பதும் ஆழமான கசப்பை இங்கே உருவாக்கிவிட்டிருக்கிறது.

மோடி இங்கு பாஜகவை வெற்றிகரமான வாகனம் ஆக்க முயற்சிக்கிறார். அடிக்கடி இங்கே அவர் செல்கிறார். இதுவரையிலான பிரதமர்களிலேயே மாறுபட்ட ஒருங்கிணைப்பு அணுகுமுறையை மோடி முயற்சிக்கிறார் என்பதை உள்ளூர் பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டினர். “தேர்தல் அறிவிப்புக்குச் சில நாட்களுக்கு முன் வடகிழக்கு வந்திருந்தார் மோடி. கவனித்தீர்களா?” என்று கேட்டார்கள்.

அசாம் வந்த மோடி ஜோர்ஹாட்டில் அஹோம்கள் ஆட்சியின் வீரத்துக்கு உதாரணமாகப் பேசப்படும் லச்சித் போர்புகானின் 125 அடி வெண்கலச் சிலையைத் திறந்துவைத்தார். 1671 ‘சராய்காட் போரில்’ முகலாயர்களை எதிர்த்துப் போரிட்டு அஸாமைக் காத்தவர் அவர். இது ஒரு குறியீடு.

கூடவே அசாமில் ₹17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அறிவித்த மோடி, சிவசாகரில் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான அறிவிப்பை வெளியிட்டார். டின்சுகியாவில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையையும், சுமார் ₹3,992 கோடி செலவில் கட்டப்பட்ட 718 கிமீ நீளமுள்ள பரௌனி-குவஹாத்தி பைப்லைனையும் திறந்து வைத்தார். அடுத்து, பிரதமர் ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்தின் கீழ் சுமார் ₹8,450 கோடி செலவில் கட்டப்பட்ட சுமார் 5.5 லட்சம் வீடுகளை அவர் திறந்துவைத்தார். 

மேலும் மாநிலத்தில் ₹1,300 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். “இந்த பிராந்தியம் வளர்ச்சியில் பிந்தங்கியிருக்க காங்கிரஸ் கடந்த காலத்தில் காட்டிய அலட்சியமே காரணம்” என்றவர், “2013இல் சுமார் 27 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டன, ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கொள்கைகளால் இதுபோன்ற வேட்டையாடும் சம்பவங்களின் எண்ணிக்கை 2022இல் பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது என்று கூறினார்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்

சமஸ் | Samas 03 May 2024

அடுத்து அருணாசல பிரதேசம் சென்ற மோடி, கடல் மட்டத்திலிருந்து 13,000 அடி அளவுக்கு உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சேலா சுரங்கப்பாதையைத் திறந்துவைத்தார். அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ₹55,600 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். கூடவே “இவ்வளவும் எப்போதோ காங்கிரஸால் செய்திருக்கப்பட வேண்டியவை. காங்கிரஸ் காட்டிய அலட்சியமே இந்த பிராந்தியம் சிக்கி சீரழிய காரணம்!” என்றார். 

எல்லா இடங்களிலுமே இந்தியாவின் தவிர்க்க முடியாத அம்சம் வடகிழக்கு என்பதையும் பாஜகதான் முனைப்போடு எல்லாவற்றையும் செய்கிறது என்பதையும் மோடி நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். “இங்கே பாஜக அமைத்த கூட்டணியின் முழக்கம், ‘டெல்லி தூரம் இல்லை!’ பிரம்மாண்ட பாலங்கள், விரிந்த சாலைகள், புதிய ரயில் பாதைகள் என்று பல ஆயிரம் கோடிகளை இந்த அரசு இங்கே கொண்டுவந்து கொட்டியுள்ளது. இவையெல்லாம் இளையோரிடம் புதிய சலனங்களையும் அபிலாஷைகளையும் உருவாக்குகின்றன. அடுத்து தொழில்களும் பெருகினால், வடகிழக்கின் போக்குகள் முற்றிலும் மாறுபட்டதாக அமையலாம்!” என்கிறார்கள்.

சரி, இந்தத் தேர்தல் எப்படி இருக்கும்? “அது எப்போதும்போலத்தான். இங்கே மாநிலத் தேர்தல் அளவுக்கு மக்களோடு மக்களவைத் தேர்தல் பிணைந்தது இல்லை. இப்போது டெல்லியில் உள்ள கட்சி என்கிற அளவில் பாஜகவுக்கு ஒரு முன்னகர்வு இருக்கும். ஆனால், மணிப்பூர் உருவாக்கியுள்ள கோபம் இதன் மீது எப்படி தாக்கம் செலுத்தும் என்பது முடிவுகள் வந்தால்தான் தெரியும்!”

வரட்டும், பார்ப்போம்!

-‘குமுதம் ரிப்போர்ட்டர்’, ஏப்ரல், 2024

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


4






ஐடி துறைசமத்துவ மயானங்கள் அமையுமா?குடலிறக்கம்உடல்யூட்யூப் சேனல்ஆரவாரம்சோழசூடாமணிஅணு உலைகாங்கிரஸ் வானொலிGSTசாருகான்ஷிராம்வியக்க வைக்கும் ஹரப்ப நகரம் ‘பனவாலி’ஆட்சி மீது சலிப்புஉற்பத்தி வரிபணி மாற்றம்முகம் பார்க்கும் கண்ணாடிஐந்து மாநிலங்கள்ராமேஸ்வரம் நகராட்சிமக்களவை பொதுத் தேர்தல் - 2024தெலங்கானாதேசத் துரோகிசம்பா5ஜி அருஞ்சொல்பேராசிரியர் கே.சுவாமிநாதன்நீதிபதியின் அதிகாரம்கிக்குபுவிவிடிகாஷ்மீர் விவகாரம்சுவாரசியமான தேர்தல் களம் தயார்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!