கட்டுரை, அரசியல், கலாச்சாரம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

மோகன் பாகவத் பேச்சின் உட்பொருள்

ப.சிதம்பரம்
20 Oct 2024, 5:00 am
0

ப்போது எதைப் பேச வேண்டும் என்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அனைத்திந்தியத் தலைவர் மோகன் பாகவத் சமர்த்தர்; அவர் எப்போதாவதுதான் பொதுவெளியில் பேசுகிறார் ஆனால், பேசத் தேர்வுசெய்யும் நாளும் – பொருளும் மிகவும் புத்திசாலித்தனமாவை. அவர் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளும் சிறப்பானவை – அவருடைய பேச்சின் ஆங்கில மொழிபெயர்ப்பைத்தான் வாசிக்கிறேன்.

அவருடைய கருத்துகளைப் பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது – நானும் எப்போதும் அவர் கருத்தை ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால், அவருடைய பேச்சுகள் கவனிப்புக்கு உரியவை – அதிலும் 2014க்குப் பிறகு – என்பதில் அனைவரும் ஒத்துப்போவோம்.

அவருடைய வார்த்தைகள் அனைத்துமே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ வாசகங்களாகவே பார்க்கப்படும். அதற்குக் காரணம் அந்த அமைப்பின் இயல்பும் வடிவமைப்பும், அதன் தலைவர் (சர்சங்கசாலக்) என்ற அவருடைய பதவிப் பொறுப்பும். ஆர்எஸ்எஸ் அமைப்புக்குள் அவருக்கு எல்லையற்ற அதிகாரம் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவேதான், அவருடைய பேச்சு மிகவும் தீவிரமாகக் கவனிக்கப்பட்டாக வேண்டும், அதிலும் சமீப காலமாக அவர் பேசுவது அப்படிப்பட்ட தன்மை வாய்ந்தவை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

குளிர் தென்றல்

மக்களவை பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, 2024 ஜூன் மாதம் மோகன் பாகவத் பேசியது முக்கியத்துவம் வாய்ந்தது. ‘அகந்தையை உதறித்தள்ளுங்கள், அடக்கத்தைக் கடைப்பிடியுங்கள்’ என்ற அறிவுரை அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது. மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு அவர் பேசிய முதல் பொது உரை அது:

  • தேர்தல் பிரச்சாரத்தில் பேசப்படும் உண்மைக்கு மாறான தகவல்களும் அவதூறுகளும் அரசியல் கட்சிகள் கடைப்பிடித்தாக வேண்டிய கண்ணியத்தை மீறுகின்ற செயலாகும்.
  • தேர்தலில் உங்களுடன் போட்டி போடுகிறவர் எதிர்க் கருத்தை ஆதரிப்பவர் அவ்வளவுதான் – அவர் உங்களுடைய ‘எதிரி’ அல்ல; அவரைப் ‘போட்டியாளர்’ என்றுகூட அழைக்காமல், ‘மாற்றுக் கட்சி’ அல்லது ‘எதிர்க்கட்சி’ வேட்பாளர் என்றே அழையுங்கள்; மாற்றுக் கட்சிக்காரர்களின் கருத்துகளும் பரிசலீக்கப்பட வேண்டும்.
  • ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மையான தொண்டர் எப்போதும் கண்ணியத்தைக் கடைப்பிடிப்பார். ‘இந்த வேலையை நான் செய்தேன்’ என்ற அகந்தை அவரிடம் எப்போதும் இருக்காது.

இந்தப் பேச்சு, பிரதமர் நரேந்திர மோடியை இலக்காக வைத்தே பேசப்பட்டது, அவருடைய தேர்தல் பிரச்சாரம் குறித்தே இப்படிப் பேசியிருக்கிறார் பாகவத் என்றார்கள்.

பாகவத்தின் அடுத்த முக்கியப் பேச்சு ஜூலை மாதம் நிகழ்த்தப்பட்டது. “ஒரு மனிதன், அபாரமான சக்தியுள்ள மாமனிதனாக ஆசைப்படுகிறான்; பிறகு அவனே தேவனாக விரும்புகிறான், கடைசியில் கடவுளாகவே மாறிவிட நினைக்கிறான்” என்றார். தன்னுடைய பிறப்பு மற்றவர்களைப் போல சாதாரணமானதல்ல என்பதாக மோடி குறிப்பிட்டார்; அவர் தாயாரின் கருவில் உருவானது, வளர்ந்தது, பிரசவித்தது எல்லாமே சாதாரணமானதல்ல – அவதாரம் என்று கூற விரும்புகிறாரா? இப்படிப் பேசியதன் மூலம் மோடி வரம்பை மீறிவிட்டார் என்று உணர்த்துகிறாரா பாகவத்?

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஆர்எஸ்எஸ் கண்டனத்தின் முக்கியத்துவம்

சஞ்சய் பாரு 16 Jun 2024

பனிக்காற்று 

மூன்றாவது முக்கியமான பேச்சு, ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கிய பிறகு 100வது ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் விஜயதசமி தொடர்பாக 2024 அக்டோபர் 12இல் பேசியது. அவருடைய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பைத்தான் வாசித்தேன். அதில் ஏமாற்றம் அடைந்தேன் – ஆனால் வியப்படையவில்லை. ஆர்எஸ்எஸ்ஸால் நிறுவப்பட்ட, பழமையான சித்தாந்தங்களில் ஊறிய கருத்துகளுக்கே அவர் திரும்பியிருந்தார். தர்மம், சன்ஸ்கிருதி, தனிப்பட்ட ஒழுக்கம், தேச ஒழுக்கம், அறம் வெற்றிபெற்ற மங்கலகரமான நாள், சுயபெருமை ஆகிய வார்த்தைகள் உரையில் நிறைந்திருந்தன.

இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையிலான போர் பற்றிக் குறிப்பிட்டிருந்தார், ஆனால் 43,000க்கும் மேற்பட்ட (பாலஸ்தீனர்) மரணங்கள் குறித்து ஏதும் கூறவில்லை; ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்துப் பேசினார் – ஆனால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிக்கவில்லை; மணிப்பூர் குறித்துப் பேசுகையில் அங்குள்ள சூழ்நிலை ‘மன உளைச்சலைத் தருவதாக மட்டும் குறிப்பிட்டார்.

பாகவத் பேசியதன் எஞ்சிய பகுதி, மோடி பேசுவதைப் போலவே இருந்தது: பாரதம் என்பது எப்படிப்பட்ட வலிமையான நாடாக உருவாகிவருகிறது, நாம் கடைப்பிடிக்கும் சகோதரத்துவத்தை உலக நாடுகள் எப்படி ஏற்றுவருகின்றன, பாரதம் தொடர்பான பிம்பம், ஆற்றல், புகழ், நிலை ஆகியவை உலக அரங்கில் எப்படித் தொடர்ந்து மேம்பட்டுவருகின்றன என்று பேசினார். இன்னும் மேலதிகமாக அவர் பேசியது: நாடு மேற்கொண்டு வளர்ச்சி வேகம் பெற்றுவிடாமலிருக்க ‘சீர்குலைவு முயற்சிகள்’ மேற்கொள்ளப்படுகின்றன.

சுதந்திரமான கருத்துகளை ஆதரிக்கும் நாடுகள் என்று பெயரெடுத்தவை பிற நாடுகளைத் தாக்கிச் சீர்குலைக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சட்ட விரோதமாகவும் வன்செயல்கள் மூலமும் பதவியிலிருந்து அகற்றவும் போராட்டங்களை ஊக்குவிப்பவை என்றார். பாரதத்தின் புகழைக் குறைக்க திட்டமிட்டே பல பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். அவற்றுக்கான ஆதாரங்கள் எதையும் அவர் கூறவில்லை.

வங்கதேசம் குறித்துப் பேசியபோது, எந்தவிதச் சீண்டலும் இல்லாமலேயே இந்துக்கள் மீது கொடூரமான தாக்குதல்களை மேற்கொள்வது குறித்து விரிவாகப் பேசினார். இந்துக்கள் உள்பட அனைத்து சிறுபான்மைச் சமூக மக்களும் வங்கதேசத்தில் மரண பயத்தில் வாழ்வதாகக் குறிப்பிட்டார். வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக ஊடுருவும் மக்களால் இந்திய மாநிலங்களில், ஊடுருவியர்களின் எண்ணிக்கை அதிகரித்து மக்கள்தொகைகளுக்கு இடையே அசமத்துவம் ஏற்படும் ஆபத்தைப் பற்றிப் பேசி எச்சரித்தார். உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் இந்துக்கள் ஒற்றுமையில்லாமலும், வலிமையில்லாமலும் வாழ்ந்தால் தீயவர்களால் தாக்கப்படும் ஆபத்து நிச்சயம் என்றார்.

பார்ப்பவரின் கண்ணோட்டப்படி

பாகவத் பேசியதில் ‘இந்து’ என்று அவர் குறிப்பிட்ட இடங்களில் எல்லாம் ‘முஸ்லிம்’ என்ற வார்த்தையைப் போட்டு முடிவுரையை எழுதுங்கள், அப்படிச் செய்தால் ஒவ்வொரு வகுப்புக் கலவரத்தையும் பேச்சாளர் நியாயப்படுத்துவதாகவே தெரியும்.

பாகவத் பேசியதை அப்படியே இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள், பட்டியலினத்தவர் நிலைகளுக்கும் பொருத்திவிட முடியும். அதேபோல அமெரிக்காவில் கறுப்பர்கள், உலகப் போருக்கு முன்னர் இருந்த ஜெர்மனியில் யூதர்கள், சொந்த மண்ணிலேயே பாலஸ்தீனர்கள், பெரும்பான்மை மதத்தவரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மைச் சமூக மக்கள், உலகின் எல்லா நாடுகளிலும் வாழும் பெண்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும். இங்கே தாக்குகிறவர் யார் – தாக்கப்படுபவர் யார் என்பது அவரவர் கண்ணோட்டத்தைப் பொருத்தது.

இதையும் வாசியுங்கள்... 45 நிமிட வாசிப்பு

பாசிஸம்: அருந்ததி ராய் முழுப் பேட்டி

கரண் தாப்பர் 25 Mar 2022

நவீன மொழியில் தேர்ச்சி 

நவீன அரசியல் உரைகளில் கையாளப்படும் வார்த்தைகளை ஆர்எஸ்எஸ் அமைப்பும் நன்கு கற்று தேர்ச்சிபெற்றிருப்பது மோகன் பாகவத்தின் உரைகளிலிருந்து தெரிகிறது: டீப் ஸ்டேட், வோக்கிஸம், கல்ச்சுரல் மார்க்சிஸ்ட், ஃபால்ட் லைன்ஸ், ஆல்டர்நேடிவ் பாலிடிக்ஸ் ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார். (டீப் ஸ்டேட் – அரசு நிர்வாகத்தைச் சிலர் மட்டும் நடத்துவது; வோக்கிஸம் – சமூக அநீதிகளைக் களைய நடத்தப்படும் சமூக – அரசியல் இயக்கம்; கல்ச்சுரல் மார்க்சிஸ்ட் – சமத்துவம், பன்மைத்துவத்துக்கு எதிரான பழமைவாத கூக்குரல், ஆல்டர்நேடிவ் பாலிடிக்ஸ் – மாற்று அரசியல்).

நகர்ப்புற நக்ஸல்கள் குறித்தும் நாட்டைத் துண்டு துண்டாக (துக்கடா - துக்கடா கும்பல்) பிரிக்க நினைக்கும் பிரிவினைவாத கும்பல்கள் குறித்துப் பேசவில்லை. அரபு வசந்தம் (சர்வாதிகாரத்துக்கு எதிரான மக்களுடைய எழுச்சி) குறித்துப் பேசிய அவர் வங்கதேசத்தில் ஷேக் ஹஸினா அரசுக்கு எதிராகத் தொடங்கிய மாணவர் கிளர்ச்சி இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். அதேபோன்ற தீய முயற்சிகள் நம்முடைய நாட்டிலும் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

நீண்ட காலமாக ஆட்சியிலிருந்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக மக்கள் திரண்டு போராடியதிலோ, எதிர்க்கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்துவிட்டு ஆளுங்கட்சி தேர்தலை நடத்தி பெற்ற வெற்றியை எதிர்த்து மாணவர்கள் கிளர்ச்சி செய்த வங்கதேச சம்பவங்களிலோ என்ன தீமைகள் இருக்கின்றன என்று வியக்கிறேன்.

ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் தங்களுடைய கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்த்துக்கொண்டுவிட்டதுபோலவும் இரு அமைப்புகளுக்கு இடையிலான பிளவு சரிசெய்யப்பட்டதைப் போலவும் தெரிகிறது. மோடியின் பேச்சைக் கட்டுப்படுத்த எவர் ஒருவரும் முன்வராத நிலையில், எதிர்க்கட்சிகள் மீது வசைமாரிப் பொழிவார்; விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார அசமத்துவம், ஒட்டுண்ணி முதலாளியம், சமூக ஒடுக்குமுறைகள், வகுப்பு மோதல்கள், அநீதி ஆகியவை நீடிக்க தனது அதிகாரத்தை மேலும் தீவிரமாக அமல்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பார். எனவே, மோடியின் தீவிரமான பேச்சுகளுக்கும் செயல்களுக்கும் உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

ஆர்எஸ்எஸ் கண்டனத்தின் முக்கியத்துவம்
மணிப்பூர்: அமைதியின்மை தொடர யார் பொறுப்பு?
அடுத்த ஆர்எஸ்எஸ் தலைவரும் பிராமணர்தானா?
மனுஸ்மிருதி: கவலை தரும் பல்கலைக்கழகம்!
இந்து சாம்ராஜ்யாதிபதியும் இந்தியாவின் இறக்கமும்
பாசிஸம்: அருந்ததி ராய் முழுப் பேட்டி
வங்கதேசம்: இது சக்கரவர்த்திகளுக்கான காலம் இல்லை

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






மேலும்குரியன் வரலாறுபொருளாதார சீர்திருத்தங்கள்தாய்மையைத் தள்ளிப்போடும் இத்தாலிய மகளிர்!அயோத்தியில் ராமர் கோயில்காங்கிரஸ் தோல்விடெல்லி லாபிஹிண்டன்பர்க்திட்டங்களும் ஆளுநர்களின் செயல்களும்சிதம்பரம் நடராஜர் கோயிலும் தீட்சிதர்களும்வேலையின் தரம் வழிபாட்டுத் தலம் அல்லஆட்சிப் பணிதென் இந்தியர் கடமைகிலானிபாரதிய ஜனசங்கம்பாலசுப்ரமணியன் பொன்ராஜ் கட்டுரைபாஜக அரசியல்பிரிவு 348(2)ஆண் பெண் உறவுவீதி வேடிக்கையல்ல ராகுலின் பாத யாத்திரைபெருந்தன்மைநாட்டுப்புறக் கதைசாவர்க்கர் பெரியார் காந்திசொன்னதைச் செய்திடுமா இந்தியா?வைக்கம் வீரர்Pulsesமோடியின் பரிவாரம்நாடகீய பாத்திரம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!