கட்டுரை, அரசியல், பொருளாதாரம், நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு
வேலைவாய்ப்பு பெருக எதையுமே செய்யவில்லை
பிரதமர் நரேந்திர மோடியின் முழு உரையையும் ஆங்கிலத்தில் படிக்க முடிந்ததே என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் - நன்றி ‘எகனாமிக் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழுக்கு!
அவர் இந்தியில் பேசியிருந்தார், மொழிபெயர்ப்பு துல்லியமாக இருக்கும் என்று நம்புகிறேன். உலகத் தலைவர்கள் அரங்கில் பேசிய மோடி, தனது தலைமையிலான அரசை பாராட்டிக்கொண்டார்; ‘கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் 90%க்கு நெருக்கமாக வளர்ந்திருப்பதாக’ தெரிவித்தார். மிகவும் பாராட்டப்பட வேண்டியதுதான் – அது உண்மையாக இருக்கும்பட்சத்தில். அது தொடர்பாக ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்கள் என்னிடம் இருக்கின்றன:
ஆண்டு | நிலையான விலையில் ஜிடிபி |
31.03.2014 | ரூ.98,01,370 கோடி |
31.03.2024 | ரூ.1,73,81,722 கோடி |
ஜிடிபியில் வளர்ச்சி ரூ.74,88,911 கோடி, வளர்ச்சி வீதம் 77.34% - வளரும் நாட்டுக்கு இந்த வளர்ச்சிகூட நல்ல அளவுதான்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
ஆனால், அந்த வளர்ச்சி வீதத்தை, தாராளமயக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியதிலிருந்து முதல் இரண்டு பத்தாண்டுகளில் (தசாப்தம்) ஏற்பட்ட வளர்ச்சியுடன் ஒப்பிட்டால்தான் வளர்ச்சிவேகம் எப்படிப்பட்டது என்று தெரியும். 1991 - 1992 முதல் 2003 - 2004 வரையில் ஜிடிபி வளர்ச்சி இரட்டிப்பானது. மீண்டும் 2004 - 2005 முதல் 2013 - 2014 வரையில் (ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பத்தாண்டுகளில்) ஜிடிபி மீண்டும் இரட்டிப்பானது.
மோடியின் ஆட்சிக்காலத்தில் ஜிடிபி இரட்டிப்பாகாது என்று கணித்தேன், அதை நாடாளுமன்றத்திலும் சொன்னேன்; பிரதமர் இப்போது அதை தனது உரை மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது, ஆனால் இதைவிட மேலும் அதிகமாகவும் வளர்ச்சி அடையச் செய்திருக்க முடியும்.
வேலைவாய்ப்பின்மை பெரிய சுமை
“இன்றைய பாரத மக்களுடைய மனங்களில் நம்பிக்கை நிரம்பியிருக்கிறது” என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். சில நாள்களுக்கு முன்னால் படித்த செய்தி நினைவுக்கு வந்தது. ஹரியாணா மாநில அரசில் மாதம் ரூ.15,000 ஊதியம் தரக்கூடிய, ஒப்பந்த அடிப்படையிலான, துப்புரவுப் பணியாளர் வேலைக்கு மொத்தம் 3,95,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் முதுகலைப் பட்டதாரிகள் 6,112, பட்டதாரிகள் 39,990, பன்னிரண்டாவது வகுப்பு வரையில் படித்தவர்கள் 1,17,144 - மற்றவர்கள் தனி.
நிச்சயம் இது ‘மக்களுடைய மனங்களில் நம்பிக்கை நிறைந்திருப்ப’தைக் காட்டவில்லை. ‘ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள்கூட அரசு வேலை தரும் பாதுகாப்புக்காக இப்படி விண்ணப்பிக்கிறார்கள்’ என்று மோடி அரசை ஆதரிப்பவர்கள் இதற்கும் விளக்கம் தரக்கூடும். அவர்களுடைய பகல்நேர இன்பக் கனவைக் கலைக்க நான் விரும்பவில்லை.
முன்னேறத் துடிக்கும் இளைஞர்களும் பெண்களும் ‘ஆட்சியில் தொடர்ச்சி’, ‘அரசியலில் நிலைத்தன்மை’, ‘பொருளாதார வளர்ச்சி’ ஆகியவற்றுக்காக தங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றும் பிரதமர் பேசினார். ஆனால், தேர்தலில் கிடைத்த முடிவோ இதற்கு எதிரானதாகத்தான் இருந்தது என்று அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் கிடைத்த இந்தத் தேர்தலில் மக்கள், ‘ஆட்சிமுறையில் மாற்றம்’, ‘அரசமைப்புச் சட்டப்படியான நிர்வாகம்’, ‘சமத்துவமான வளர்ச்சி’ ஆகியவற்றுக்கே வாக்களித்திருக்கிறார்கள்.
இந்த இரண்டு வகை குறிக்கோள்களும் நெருங்கவே முடியாத இருவேறு துருவங்கள்: ‘தொடர்ச்சி எதிர் மாற்றம்’, ‘அரசியல் நிலைத்தன்மை எதிர் அரசமைப்புச் சட்டப்படியான ஆட்சி’, ‘பொருளாதார வளர்ச்சி எதிர் சமத்துவத்துடன் கூடிய வளர்ச்சி’. தன்னுடைய இலக்குகளுக்கு ஆதரவாக மக்களுடைய அங்கீகாரத்தைப் பெற பிரதமர் மோடி முயல்வதைப் போல, பாஜகவின் நிர்வாக முறையும் நோக்கமும் பிடிக்கவில்லை என்று நிராகரித்த மக்களுடைய சார்பிலும் வலுவான வாதங்களை முன்வைக்க முடியும். அரசின் இலக்குகளைத் திருத்தி சரியான பாதையில் செல்ல வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்.
மறுஇலக்கு அவசியம்
இந்தக் கட்டுரையில் வேலைவாய்ப்பின்மை குறித்து மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறேன். அனைத்திந்திய அளவில் வேலைவாய்ப்பின்மை விகிதம், சிஎம்ஐஇ தரவின்படி 9.2%. பொருளாதாரத்தில் தாராளமயம் கொண்டுவந்து 33 ஆண்டுகள் முடிந்துவிட்டதால் நம்முடைய பொருளாதாரக் கொள்கையில் மாற்றம்செய்வது அவசியம் என்று 2024 மக்களவை பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. வேலைவாய்ப்புகளைப் பெருக்க இரண்டு முக்கிய யோசனைகளை காங்கிரஸ் தெரிவித்திருந்தது:
- கல்லூரியில் பட்ட வகுப்பு முடிப்பவருக்கும் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் பட்டம் பெறுபவருக்கும் ஓராண்டுக்குக் கட்டாயத் தொழில் பழகும் வாய்ப்பை அரசின் நிதியுதவியுடன் அளிப்போம் என்று கூறப்பட்டிருந்தது. இது லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை செய்வதற்கான தொழில் பயிற்சிகளை அளிப்பதுடன், உடனடி வேலைவாய்ப்புக்கும் வழிசெய்யும்.
- தொழிலாளர்களைக் கூடுதலாக வேலைக்கு அமர்த்தவும் தரமான வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்குக் கிடைக்கவும் ரொக்க ஊக்குவிப்புடன் கூடிய வேலையமர்த்தல் கொள்கையைப் பெருநிறுவனங்களுக்கு அளித்த தேர்தல் அறிக்கை, அதை அமல்செய்தால் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரியிலிருந்து சலுகைகள் காட்டப்படும் என்று கூறியது.
இந்த யோசனைகளைக் கடன் வாங்கி, நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்தபோது பெருமகிழ்ச்சி அடைந்தேன். மோடி தலைமையிலான அரசு 2024 ஜூன் 9இல் பதவியேற்றது. முதல் 100 நாள்களுக்குள் புதிய செயல்திட்டத்தைத் தயாரித்து அறிவிப்போம் என்றும் அப்போது அறிவித்தது. செப்டம்பர் 17 வந்தால் 100 நாள்கள் நிறைவடைகிறது.
வேலைவாய்ப்பு தொடர்பாக பட்ஜெட்டில் அறிவித்த இரண்டு திட்டங்களை உடனடியாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற உணர்வு இந்த அரசிடம் இதுவரை வெளிப்படவில்லை. அதேசமயம், வக்ஃப் நிலங்களை அடையாளம் காணும் திருத்த மசோதாவிலும், ஒன்றிய அரசின் உயர்பதவிகளுக்கு (இடஒதுக்கீடு ஏதுமில்லாமல்) இடைநுழைவு நியமனங்கள் மூலம் ஆள்களை நியமிக்கும் மசோதாவிலும் அதிக வேகத்தையும் முன்னுரிமையையும் காட்டியது. பிற அரசியல் கட்சிகளின் (தோழமைக் கட்சிகள் உள்பட) எதிர்ப்பு காரணமாக இரண்டுமே இப்போது இடைநிறுத்தத்துக்கு ஆளாகியுள்ளன.
சோகச் செய்திகள் அதிகரிப்பு
இதற்கிடையில் வேலைவாய்ப்பு தொடர்பாக மேலும் சில துயரமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்திய நிறுவனங்கள் 2023, 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் ஏற்கெனவே வேலையில் இருந்தவர்களையே ஆயிரக்கணக்கில் வேலையிலிருந்து நீக்கிவருகின்றன. ஸ்விக்கி, ஓலா, பேடெம் போன்றவை அதில் சில. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் தங்களுடைய ஊழியர் எண்ணிக்கையைச் சரியான விகிதத்துக்குத் திருத்தப்போவதாக (ஆள் குறைப்பு) அறிவித்துள்ளன.
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் கட்டுரை எழுதிய இரண்டு கல்வியாளர்கள், ஐஐடி மும்பையில் படித்த மாணவர்களில் 75% பேருக்குத்தான் வளாக நேர்காணல்களில் வேலைவாய்ப்பு கிடைத்தன என்ற கவலை அளிக்கும் தகவலைத் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, இந்திய ஐஐடி மாணவர்களுக்குத் தரப்படும் ஊதியமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேக்கநிலையிலேயே இருப்பதும் தெரியவருகிறது. ஐஐடிக்களில் படித்தவர்கள் தவிர பிற பொறியியல் – தொழில்நுட்பக் கல்வி நிலைய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது ஏமாற்றம் தரும் வகையில் வெறும் 30% ஆக சரிந்திருக்கிறது.
நகர்ப்புற இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை 17% ஆக இருப்பதாக இந்தியா குறித்து (2024 செப்டம்பர்) உலக வங்கி வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்திய அரசின் தெளிவற்ற தொழில் – வர்த்தக கொள்கை காரணமாக தோல் பொருள்கள் தயாரிப்பு, ஆடைகள் தயாரிப்பு ஆகிய துறைகளில் ஏற்றுமதி மூலமான வருவாய் அதிகரிக்காமலிருக்கிறது. இவ்விரண்டும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளாகும்.
தொழிலாளர்களை அதிகம் பணிக்கமர்த்தும் பல துறைகளில் சீனம் உற்பத்தியை நிறுத்திவிட்ட நிலையில், அதை ஈர்க்கும் வகையில் இந்திய அரசு எதையும் செய்யாமல் இருக்கிறது என்று உலக வங்கியின் அறிக்கை இந்திய அணுகுமுறையைக் குறை சொல்லியிருக்கிறது. உள்நாட்டுத் தொழில்களைக் காக்க வேண்டும் என்ற பழமைவாதக் கொள்கையாலும், தடையற்ற சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தங்கள் என்றாலே இந்த அரசுக்கு வேம்பாகக் கசப்பதாலும் இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி, ஏற்றுமதி, வேலைவாய்ப்புகள் ஆகியவை பெருகவில்லை என்று அறிக்கை தெரிவிக்கிறது.
அலங்காரமான மேடைப் பேச்சுகளாலோ, போலியான புள்ளி விவரங்களாலோ வேலையில்லாத் திண்டாட்டத்துக்குத் தீர்வு கண்டுவிட முடியாது. மோடி அரசுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக வேலையில்லாத் திண்டாட்டம் பெரிதாகிக்கொண்டேவருகிறது; ஜூன் 9இல் பதவியேற்ற அரசு இதுவரை இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எதையுமே செய்யவில்லை.
தொடர்புடைய கட்டுரைகள்
இந்திய வளர்ச்சிக்கு 7 தடைக் கற்கள்
வேலைவாய்ப்பு பெருக என்ன செய்யலாம்?
‘வளமான’ பாரத பட்ஜெட் இதுவல்ல!
சந்தேகப்பட வைக்கிறது ‘வக்ஃப்’ மசோதா!
இடைநுழைப்பு நியமனங்கள் தீர்வாகிவிடாது
அரசு நிர்வாகங்களில் தனியார் துறையினர் நியமனம், சரியா?
தமிழில்: வ.ரங்காசாரி
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.