கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு மட்டும்தான் தயாராக உள்ளது

ப.சிதம்பரம்
01 Apr 2024, 5:00 am
1

ச்சரிக்கும் சமிக்ஞைகள் தெளிவாகத் தெரிகின்றன. எதிர்காலத்தில் என்ன வரப்போகிறது என்று எதிர்க்கட்சிகளால் உணர முடிகிறது; ஆனால் அற்பமான விஷயங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரும் ‘அரசியல் ஆலோசகர்கள்’, அவரவர் கட்சித் தலைவர்களை அதற்கேற்ற எதிர் நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கின்றனர். களம் செல்லத் தயாராக இருக்கும் படைகள் உடனடியாக அனுப்பப்படவில்லை - தமிழ்நாட்டைத் தவிர. 

வங்கத்தில் ‘இந்தியா’ கூட்டணி இன்னமும் முழுமை அடையவில்லை; பிஹாரில், எதிர்க்கட்சிகளின் தயார் நிலையைக் குலைக்கும் வகையில் நிதீஷ்குமார் வழக்கமான தனது குட்டிக்கரணத்தைப் போட்டார் - ஆனால் அவருடைய சீர்குலைவு முயற்சி தோற்றுவிட்டது.

மகாராஷ்டிரத்தில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி எந்தத் தொகுதி யாருக்கு என்பதை இன்னமும் தங்களுக்குள் விவாதித்துக்கொண்டிருக்கும் வேளையில், எதிர்க்கட்சி முகாம்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களைக் குறிவைத்துக் கவர்ந்து செல்கிறது பாஜக.

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதியும் காங்கிரஸும் தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டன, ஆனால் களத்துக்கு இன்னமும் படைகளை முழுமையாக அனுப்பவில்லை; தில்லியிலும் ஜார்க்கண்டிலும் சேனைகள் தயார், ஆனால் ‘தளபதிகள்’ சிறைக்குள் தள்ளப்பட்டுவிட்டார்கள். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தமிழ்நாடு மட்டுமே தயார்

தமிழ்நாட்டில் மட்டும்தான் ‘இந்தியா’ கூட்டணி எல்லா வகையிலும் தயாராகி, களம் புகுந்துவிட்டது – ‘நல்ல தொடக்கம் வேலையில் பாதியை முடித்துவிடும்’ என்ற முதுமொழிக்கேற்ப சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது.

இந்த விவரணைகள், மொத்தமுள்ள 29 மாநிலங்களில் 7 பற்றியது. கர்நாடகம், தெலங்கானா, குஜராத், ராஜ்தான், ஹரியாணா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸும் பாஜகவும்தான் நேருக்கு நேர் மோதுகின்றன. ஒடிஷாவிலும் ஆந்திர பிரதேசத்திலும் நேர்மையான போர்க்களமாகத் தெரியவில்லை, ஏதோ தங்களுக்குள் எழுதிக்கொண்ட நாடகத்தை மாநில ஆளுங்கட்சிகளும் பாஜக கூட்டணியும் அரங்கேற்றுவதைப் போலத் தெரிகிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

எண்ணும் – எழுத்துமாக எத்தனை வகை கஞ்சிகள்!

ப.சிதம்பரம் 25 Mar 2024

பாஜகவின் பண பலம்

பாஜக தனது படைக்கலத்தை முழுதாகத் திறந்துவிட்டுள்ளது. சட்ட விரோதமாக திரட்டிய தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலமான பெரும் நிதிக் குவியல், அதன் படை பலத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ‘தேர்தல் நன்கொடை பத்திரம் என்பது சட்ட அங்கீகாரம் பெற்ற லஞ்சம்’ என்று நான் முன்னர் எழுதியது இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது. 

பல நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கப் பிரிவு இயக்குநரக – வருமான வரித் துறை சோதனை, கைது நோட்டீஸ்களுக்குப் பிறகு பெருந்தொகை ஆளுங்கட்சிக்கு தேர்தல் நிதியாக நன்கொடை வழங்கப்பட்டுள்ளது; அதை அடுத்து அந்த ஒழுங்கு நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தல், நிறுத்திவைத்தல், முழுத் திருப்தி ஏற்பட்டுவிட்டால் ஒரேயடியாகக் கைவிடுதல் என்று நிறுவனங்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து பதில் உபசரணைகள் செய்யப்பட்டுள்ளன. 

இதற்கிடையில், அந்த நன்கொடைப் பத்திரங்கள் பணமாகவும் மாற்றப்பட்டு ஆளுங்கட்சியின் கருவூலத்தில் சேர்க்கப்பட்டுவிட்டன. சில நிறுவனங்களுக்கு உரிமங்கள், சிலவற்றுக்கு பெரிய அரசு ஒப்பந்தங்கள்கூட வழங்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான தேதிகளே முழுக் கதையையும் சொல்லிவிடுகின்றன. இந்தப் புள்ளிகளையெல்லாம் ஒரு கோடு இழுத்து சேர்த்தாலே எல்லாம் அம்பலமாகிவிடும். 

இப்படிக் குவித்த தேர்தல் நிதி மூலம் அன்றாடம் நாட்டின் எல்லா செய்தித் தாள்களிலும் ஆளுங்கூட்டணிக்கு சார்பாக அலையலையாகத் தேர்தல் விளம்பரங்கள்; தொலைக்காட்சிகளில், பெரிய விளம்பரப் பலகைகளில் கண்ணையும் கருத்தையும் கவரும் காணொலிக் காட்சிகள் என்று அமர்க்களப்படுகிறது. மற்ற கட்சிகள் அருகிலேயே வர முடியாத இடத்தில் இருந்துகொண்டு, அசுர பலத்தோடு களத்தை ஆக்கிரமித்துள்ளது பாஜக.

ஆள் இழுப்பு

அடுத்த நடவடிக்கை ‘தாமரையின் காந்த இழுப்பு’. இதற்கு அக்கட்சி தனிக் காப்புறுதியே செய்துவிட்டதைப் போலத் தெரிகிறது! பிற அரசியல் கட்சிகளில் தலைமையின் அரவணைப்பின்றி மனம் வெதும்பிப்போகும் மூத்த தலைவர்களை - மக்களிடம் செல்வாக்குள்ளவர்களை, தங்களுடைய கட்சிக்குள் இழுத்து அவர்களுக்குப் போதிய ‘சன்மான’மும் தேவைப்பட்டால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் தந்து அரவணைக்கிறது. 

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் மட்டும் 400க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் அதில் 50க்கும் மேற்பட்டவர்கள் இப்படித் தேர்தல் காலத்தில் கட்சி மாறியவர்களாகவே இருப்பார்கள் என்றும் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆட்டம் காணும் அரசுகள்

ஆளும் பாஜகவின் படைக்கலனில் சக்திவாய்ந்த இன்னொரு ஆயுதம், அரசியல் எதிரிகளைக் கைதுசெய்வது - காவலில் வைப்பது. இந்த இலக்கில் இதுவரை சிக்கியிருப்பது இரண்டு மாநிலங்களின் முதல்வர்கள், ஒரு துணை முதல்வர், பல மாநில அரசுகளின் அமைச்சர்கள், முதல்வர்களின் குடும்ப உறுப்பினர்கள், பிற தலைவர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 

நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு இப்போது இரு அவைகளிலும் சேர்த்து 383 உறுப்பினர்கள், மாநில சட்டப்பேரவைகளில் 1,481 உறுப்பினர்கள், சட்ட மேலவைகளில் 163 உறுப்பினர்கள் உள்ளனர். 

இவர்களில் சிலர் பாஜக அல்லாத கட்சிகளில் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி, பாஜகவில் சேர்ந்தனர்; பிறகு அதன் பிரம்மாண்டமான தார்மிக சலவை இயந்திரத்தில் ஊறவைத்து, சுழற்றி, அலசி, பிழிந்து ஊழல் கறை நீங்க தூய்மையாகத் துவைக்கப்பட்டவர்கள். 

இந்த 2,027 பேரில் எவர் மீதாவது இப்போது அரசு இயந்திரங்கள் ஊழல் விசாரணைகளை நடத்துகின்றனவா என்று தெரியாது; அப்படி ஏதேனும் இருந்தால் அது அபூர்வத்திலும் அபூர்வமாகவும் - பரம ரகசியமாகவும்தான் இருக்கும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

தேர்தல் என்பது மக்களாட்சித் திருவிழா

ப.சிதம்பரம் 11 Mar 2024

சச்சரவு ஆளுநர்கள்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்கள் தொடர்ந்து தலையிட்டு நிர்வாகத்துக்குத் தொல்லை தருகின்றனர். மாநில அரசு தயாரித்துத் தந்த உரையை சட்டப்பேரவையில் முழுதாக வாசிக்க மறுத்துவிட்டார் தமிழ்நாடு ஆளுநர்; அவை நடவடிக்கையிலிருந்து ஒருமுறை வெளிநடப்பும் செய்தார். மாநில முதல்வர் ஆலோசனை வழங்கிய பிறகும்கூட அமைச்சருக்குப் பதவிப் பிரமாணம் செய்ய மறுத்துவிட்டார். 

கேரளம், தமிழ்நாடு, வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள் அந்தந்த மாநில முதல்வர்களுடன் ஏதாவது ஒரு பிரச்சினை தொடர்பாக வீணான வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுகின்றனர். 

தமிழ்நாடு – புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவர் கிட்டத்தட்ட சில மாதங்களாகத் தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்தார்; மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே ஒருநாள்கூட தாமதிக்காமல் ஆளுநர் பதவியிலிருந்து விலகிவிட்டு, ஆளுங்கட்சியில் மீண்டும் உறுப்பினராகி - மக்களவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறார்! 

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்கள், மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதைத் தாமதப்படுத்துகின்றனர் அல்லது நிராகரிக்கின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் பாஜக ஆளும் மாநிலங்களில் இல்லை!

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பெரிய கட்சி எது?

சமஸ் | Samas 29 Mar 2024

அரசமைப்புச் சட்டத்துக்கு துரோகம்

இன்னொரு ஆயுதம், மாநில அரசுகளை ஆட்டம் காண வைப்பது. ‘தேசியத் தலைநகரப் பிரதேசம் (என்சிடி) தில்லி’ அரசின் நிர்வாகம் செயல்பட முடியாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது; தில்லி முதல்வரும் அமைச்சர்களும் இடும் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டியதில்லை என்று  அதிகாரிகளுக்கு இடப்பட்ட கட்டளை மூலம் இது நிறைவேற்றப்படுகிறது. 

கேரளம், வங்கம் போன்ற மாநிலங்களுக்கு ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி நிதி கிடைக்காமல் தடுக்கப்படுகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அரசுகள் தங்களுடைய தேவைகளுக்குக் கடன் வாங்க முடியாமல் ஏதாவதொரு விதி மீறலை சுட்டிக்காட்டி, ‘கடன் வரம்பு’ வலியுறுத்தப்படுகிறது. இன்ன காரணம் என்று தெரிவிக்காமலேயே தமிழ்நாட்டுக்குப் பேரிடர் நிவாரண நிதி மறுக்கப்படுகிறது.

மாநிலக் காவல் துறைத் தலைவர்கள் நியமனத்தில், ஒன்றிய அரசின் தேர்வாணையம் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது ஒன்றிய அரசு.

மாநில அரசுகளின் நிதியளிப்பில் நடைபெறும் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசுகளுக்குள்ள அதிகாரமும் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, ஒன்றிய அரசுக்கு இணக்கமான ‘அதிகார மையங்கள்’ பல்கலைக்கழகங்களில் உருவாகி, மாநில அரசுகளுக்கே சவால் விடுகின்றன. மாநிலங்களின் செயல்பாட்டுச் சுதந்திரம் தொடர்ந்து இவ்விதங்களில் அரிக்கப்படுகிறது.

நீண்ட கால செயல்திட்டம்

ஆர்எஸ்எஸ் - பாஜக இரண்டுமே செயல்திட்டம் வகுத்துக்கொண்டு அதை நிறைவேற்றத் தொடர்ந்து உழைப்பவை. ‘இந்த முறை (2024) மக்களவைப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை வலுவுடன் வெற்றி பெற்ற பிறகு, ரகசிய செயல்திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்க வேண்டும்’ என்று ஆர்எஸ்எஸ் தலைவர்கள் நினைக்கின்றனர். 

அந்தச் செயல்திட்டங்களாவது: ‘ஒரே நாடு – ஒரே (சமயத்தில்) தேர்தல்’, அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் (யுசிசி), குடியுரிமைச் திருத்தச் சட்டம் (சிஏஏ), அரசின் தேவைக்கு நிலங்களை அதிக எதிர்ப்பின்றி எளிதாகக் கையகப்படுத்த ‘நிலக் கையகப்படுத்தும் சட்டத் திருத்தங்கள்’, பெரும் பண்ணை வேளாண்மைக்கு உறுதுணையாக, ‘வேளாண்மை சட்டங்கள்’, வழிபாட்டிடங்களை மீட்க உரிமை கோருவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை விலக்க புதிய சட்டம்... இன்னும் சில, பாஜகவின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெறக்கூடும்.

இதுதான் அவர்களுடைய ‘கடைசி’ தீவிரத் தாக்குதலாக இருக்கவும் கூடும்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

தேர்தல் என்பது மக்களாட்சித் திருவிழா
தேர்தலில் கிடைக்குமா சுதந்திரமும் வளர்ச்சியும்?
எண்ணும் – எழுத்துமாக எத்தனை வகை கஞ்சிகள்!
இந்தியாவின் பெரிய கட்சி எது?
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
நேர்மையாக, நியாயமாக நடக்குமா 2024 தேர்தல்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

5






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Thamilvelan    8 months ago

"மாநிலக் காவல் துறைத் தலைவர்கள் நியமனத்தில், ஒன்றிய அரசின் தேர்வாணையம் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது ஒன்றிய அரசு." Your statement is not correct. This is due to the guidelines issued by the supreme court in the Prakash Singh Case of 2006

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

மதிப்புக்கூட்டு வரிஇந்தி அரசியல்காஷ்மீர் இந்துக்கள் படுகொலைஉள்துறை அமைச்சர்பிம்பம்ரயில் ஊழியர்கள்பஞ்சாப் முதல்வர்ஆண்களை அலையவிடலாமா?அர்விந்த் கெஜ்ரிவால்நெல் சாகுபடிவிடைஅச்சத்துடனா?தொழிலாளர் கட்சிவின்னி: இணையற்ற இணையர்!மாநிலவியம்இந்தியக் கடற்படைதுயரம் எதிர் சமத்துவம்மாதிரி பள்ளிகள்பிரியங்கா காந்தி அரசியல்வேற்சொற்களின் களஞ்சியம்மிஸோகுறுங்காவியம்ரயில் எரிப்புஅசோகர் அருஞ்சொல் மருதன்பணிச்சூழல்மென் இந்துத்துவம்பேரிடர் மேலாண்மைதமிழ் வைணவர்கள்மறுபிறவிபல்பீர் சிங் ராஜேவால்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!