கட்டுரை, அரசியல், பொருளாதாரம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

நிதியமைச்சர் பேசினார், ஆனால் கவனித்தாரா?

ப.சிதம்பரம்
04 Aug 2024, 5:00 am
0

மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 - 2025 நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் வரவு - செலவு திட்ட அறிக்கையை ஜூலை 23இல் அளித்தார். அடுத்த நாளிலிருந்தே அதன் மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதங்கள் நடந்தன. மக்களவையில் ஜூலை 30லும் மாநிலங்களவையில் ஜூலை 31லும் பதில் அளித்தார் நிதியமைச்சர்.

நிதியமைச்சரின் பதிலுரை மூன்று விரிவான அடிப்படைகளின் பேரில் இருந்தது:

1. ஒவ்வோர் இனத்திலும் அரசு செலவை அதிகப்படுத்தியிருக்கிறது

நிதியமைச்சரின் கூற்றுப்படி, செலவை அதிகப்படுத்துவது நல்ல நிர்வாகத்துக்கு உரைகல். இதன் விளைவாக மக்களின் அனைத்து தரப்பினரும் வளர்ச்சியையும் நல்வாழ்வையும் பெறுகின்றனர். தனது வாதத்துக்கு ஆதரவாக புள்ளி விவரங்களை அடுக்கினார்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி ஆண்டான 2013 – 2014இல் எவ்வளவு செலவிடப்பட்டது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் இரண்டாவது பகுதியில் 2019 – 2020 முதல் 2023 - 2024 வரையில் எவ்வளவு செலவிடப்பட்டது என்று கூறி ஒப்பிட்டதுடன், 2024 - 2025இல் எவ்வளவு செலவிடப்படும் என்பதைக் கூறி முடித்தார். எண்களின்படி பார்த்தால், ஆண்டுக்காண்டு அது அதிகரித்துக்கொண்டேதான் வரும்.

உதாரணத்துக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2013 - 2014இல் வேளாண் துறைக்கும் அதைச் சார்ந்த பிற துறைகளுக்கும் ரூ.0.30 லட்சம் கோடி செலவிடப்பட்டது, இப்போது ரூ.1.52 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. 2023 – 2024இல் ஒதுக்கப்பட்டதைவிட ரூ.8,000 கோடி மேலும் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆக கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் ஒதுக்கீட்டை அதிகரித்துக்கொண்டுவந்திருக்கிறோமே தவிர குறைக்கவில்லை என்றார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இங்கே குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், அவர் கூறிய ஒதுக்கீட்டு அளவு ‘நடப்பு விலை’ அடிப்படையில், ‘நிலையான விலை’ அடிப்படையில் அல்ல. ஒதுக்கீடு அதிகம் என்பதை அரசின் மொத்த செலவில் எத்தனை சதவீதம், அல்லது மொத்த ஜிடிபியில் எவ்வளவு சதவீதம் என்று கூறினால்தான் அது பொருத்தமாகவும் இருக்கும், உண்மையான அதிகரிப்பைப் புரிந்துகொள்ளவும் உதவும்.  

அத்துடன், 2023 - 2024 நிதிநிலை அறிக்கையில் பல்வேறு இனங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுதாக செலவிடப்படவில்லை, அது ஏன் என்றும் அவரால் விளக்கப்படவில்லை:

துறைகள் பட்ஜெட் மதிப்பீடு திருத்திய மதிப்பீடு
வேளாண்மை 1,44,214 கோடி 1,40,533 கோடி
கல்வி 1,16,417 கோடி 1,08,878 கோடி
சுகாதாரம் 88,956 கோடி 79,221 கோடி
சமூக நலம் 55,080 கோடி 46,741 கோடி
அறிவியல் துறைகள் 32,225 கோடி 26,651 கோடி

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

‘கொடுக்கல் – வாங்கல்’ அரசு!

ப.சிதம்பரம் 28 Jul 2024

2. வேலையில்லாத் திண்டாட்டம் இல்லவே இல்லை!

‘அரசின் கொள்கை சாக்ஷம், ஸ்வாதந்திரம், சமார்த்தம்’ (பொருள் ஆற்றல், சுதந்திரம், திறமை) என்றார் நிதியமைச்சர். வேலை வழங்கல் தொடர்பாக ‘நன்கு அறிமுகமான’ சில புள்ளி விவரங்களை வாசித்தார். குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியாகும், தொழிலாளர் எண்ணிக்கை ஆய்வறிக்கையின்படி வேலையில்லாத் திண்டாட்டம் 3.2% குறைந்துவிட்டது (என்றார்). எஸ்பிஐ ஆய்வறிக்கை 2014 முதல் 2023 வரையில் 1250 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கிறது (என்றார்). இவை ‘அரசினால்’ தயாரிக்கப்படும் அறிக்கைகள்.

இந்த அறிக்கைக்கு முரணான தகவல்களை, ‘சிஎம்ஐஇ’ தரவுகள் அளிக்கின்றன. நடப்பு வேலையில்லாத் திண்டாட்டம் 9.2% என்று அவை தெரிவிக்கின்றன. இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை ‘ஐஎல்ஓ’ அறிக்கையின்படி 83%.

சில நூறுகளும் சில ஆயிரங்களும் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை ஏன் லட்சக்கணக்கானவர்கள் எழுதுகிறார்கள் என்று நிதியமைச்சர் பதிலில் விளக்கவில்லை. உதாரணத்துக்கு:

  • 60,244 காவலர்கள் பணியிடத்துக்கு உத்தர பிரதேசத்தில் 48 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுதினர். அவர்களில் 16 லட்சம் பேர் மகளிர்.
  • உத்தர பிரதேசத்தின் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 7,500 பணியிடங்களுக்கான தேர்வை 24,74,030 லட்சம் பேர் எழுதினர்.

வேலையில்லாத் திண்டாட்டம் அப்படி வெகுவாகக் குறைந்திருந்தால் காலியிடங்களுக்குப் போட்டிபோடும் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை இத்தனை லட்சமாக – பொருத்தமின்றி ஏன் அதிகரிக்க வேண்டும்? இவ்விரண்டு தேர்வுகளில் மட்டும் 1:80, 1:329 என்ற விகிதத்தில் போட்டி இருந்தது. பொறியியல், நிர்வாகவியல் பட்டதாரிகள், வழக்கறிஞர்கள், முதுகலை பட்டதாரிகள்கூட சாதாரண காவலர் அல்லது எழுத்தர் தேர்வுக்கு ஏன் இத்தனை லட்சத்தில் போட்டி போடுகின்றனர்?

பிரதமரும், ஒன்றிய அரசின் இதர அமைச்சர்களும் இதைத் தெரிந்துகொள்ள இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் ‘நடந்து செல்ல வேண்டும்’ என்ற யோசனையை முன்வைக்கிறேன். நிதியமைச்சர் தனது நடைப்பயணத்தைத் தான் பிறந்த மதுரையில் தொடங்கி, பள்ளிப்படிப்பை மேற்கொண்ட விழுப்புரத்தில் தொடர்ந்து, பிறகு கல்லூரியில் படித்த திருச்சியில் முடித்துக்கொள்ளலாம் என்று – வேடிக்கையாக - கூற விரும்புகிறேன்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

‘வளமான’ பாரத பட்ஜெட் இதுவல்ல!

ரத்தின் ராய் 28 Jul 2024

3. எங்களுடைய பணவீக்க விகிதம் உங்களுடையதைவிட பரவாயில்லை

நிதியமைச்சர் பதிலுரையில் கூறினார், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஹார்வர்டிலும் ஆக்ஸ்போர்டிலும் படித்த தலைவர்களால் நிர்வகிக்கப்பட்டது. தொழில் துறைக்கு வழங்கிய ரொக்க ஊக்குவிப்பு திட்டத்தை எப்போது விலக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது, அதனால் 2009 முதல் 2013 வரையில் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டியது.” (புத்திசாலித்தனமாக அவர் எவர் பெயரையும் கூறவில்லை, கூறியிருந்தால் இப்போதைய அரசுக்கே அது தருமசங்கடமாகியிருக்கும்).

நிதியமைச்சர் ஒரு வகையில் நுட்பமாக - சரியாகவே – பேசியிருக்கிறார், ஆனால் அது பொருத்தமே இல்லாத பேச்சு. மக்கள் இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ் வாழவில்லை, மோடி தலைமையிலான அரசின் (2.1) கீழ் வாழ்கின்றனர். தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை 30%, 46%, 59% என்று ஆண்டுக்காண்டு உயர்ந்த ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர்.

மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் 3.4% ஆக இருக்கும் காலத்தில் வாழ்கின்றனர். நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 5.1% ஆக இருக்கிறது. உணவுப் பொருள்களின் விலையுயர்வு மட்டுமே 9.4% ஆக இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக எல்லாவிதப் பிரிவுகளிலும் ஊதியம் உயராமல் தேங்கிவிட்ட காலத்தில் வாழ்கின்றனர். ஏப்ரல் - மே 2024 மக்களவை பொதுத் தேர்தலில் வாக்களித்த மக்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய மோடி அரசுக்கு எதிராகத்தான் வாக்களித்தனர்.

பணவீக்க விகிதத்தை எப்படிக் குறைக்கப் போகிறார் என்று நிதியமைச்சர் எதையும் விளக்கவில்லை. அரசே நிர்ணயிக்கும் பண்டங்களின் விலையையும் குறைக்கவில்லை. ஏற்கெனவே விதித்த வரிகளையும் கூடுதல் வரிகளையும் குறைக்கவில்லை. குறைந்தபட்ச ஊதியத்தையும் உயர்த்தவில்லை. பொருளாதாரத்தின் சரக்கு - சேவைகளை அளிக்கும் (சப்ளை) பிரிவுகளுக்கு ஊக்கமூட்டும் அறிவிப்புகளையும் செய்யவில்லை.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பொருளாதாரத்தை மீட்க வழி பாருங்கள்

ரேணு கோஹ்லி 30 Jun 2024

“இந்தியாவில் பணவீக்க விகிதம் தொடர்ந்து குறைவாகவே இருக்கிறது, நிலைத்தன்மை கொண்டிருக்கிறது, 4% என்ற அரசின் இலக்கை நோக்கிச் செல்கிறது” என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கூறிய வார்த்தைகளை நிதியமைச்சரும் அப்படியே மேற்கோள் காட்டி, மேற்கொண்டு விவாதத்துக்கு வழியில்லாமல் அதை முடித்துவிட்டார். இது தொடர்பாக முக்கியமான ஒரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை: பணவீக்க நிர்வாகம் இந்த அரசில் சிறப்பாக இருக்கிறது என்றால், இந்திய ரிசர்வ் வங்கி ஏன் 2024க்குப் பிறகு வட்டி வீதத்தை தொடர்ந்து 13 மாதங்களாகக் குறைக்காமல் 6.5% ஆகவே வைத்திருக்கிறது?

சாமானிய மக்களிடம் பட்ஜெட்டுக்கு வரவேற்பு இல்லை. அரசைத் தொடர்ந்து ஆதரிப்போரிடையேகூட உற்சாகமான குரல்கள் எழவில்லை. அவர்களுமே சந்தேகத்துடனும் எச்சரிக்கையுடனும்தான் பேசுகிறார்கள். நிதியமைச்சர் ஒருவர் மட்டும்தான் இதையெல்லாம் உணராமல் இருக்கிறார். நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்னால் என்ன நிலையில் இருந்தோமோ, அதே நிலையில்தான் நானும் நிதித் துறையில் ஆர்வம் உள்ள மேலும் பலரும் இருக்கின்றோம்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

‘கொடுக்கல் – வாங்கல்’ அரசு!
காண முடியாததைத் தேடுங்கள்!
‘வளமான’ பாரத பட்ஜெட் இதுவல்ல!
விஷச் சுழலை உடையுங்கள்
குறைகிறது விளிம்புநிலை விவசாயிகளின் வருமானம்
பொருளாதாரத்தை மீட்க வழி பாருங்கள்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






வேளாண் துறைஆட்சி மன்றங்கள் அச்சுறுத்துகின்றனவா?இந்தி ஊடகங்களின் பிராமண நினைவேக்கம்டிடி கிருஷ்ணமாச்சாரிஇந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம்!மகிழ்ச்சி சரிஆள் கடத்தல்கன்சர்வேடிவ் கட்சிஎம்ஐடிஎஸ்அருஞ்சொல் ஜாட்தலைவர்‘தி டெலிகிராப்’ நாளிதழுடன் வளர்ந்தேன்ஆதிக்கம்ரத யாத்திரைவணிக் குழுஆண்களை அலையவிடலாமா? தொடர்ந்து மறுக்குது அரசாங்கம்ப.சிதம்பரம் சமஸ் அருஞ்சொல்தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்நடுத்தர வருமானம்உயர் ரத்த அழுத்தம்அமெரிக்க அதிபர் தேர்தல்பெருங்குற்றவாளிஆண்ட்ரூ சாரிஸின் சுட்டல்மனித உரிமைசென்னை மாநாகராட்சிசுதேசி கல்விமுறைமனுதர்ம சாஸ்திரம்பிரஷாந்த் கிஷோர்வர்ணமற்றவர்களும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!