கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

மோடியிடம் எந்த மாற்றமும் இல்லை!

ப.சிதம்பரம்
30 Jun 2024, 5:00 am
0

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜூன் 9இல் பதவியேற்றது. தொடக்கம் முதலே மகிழ்ச்சியில்லை. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளத்துடன் ஆட்சியையும் துறைகளையும் பங்குபோட வேண்டியிருந்தது. மக்களவைத் தலைவராக யாரை நியமித்துக்கொள்வது என்பதற்குக்கூட கூட்டணித் தலைவர்களிடம் ஆலோசனை கலந்து ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. கடந்த 22 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தின் - நாட்டின் தலைமைப் பதவியில் இருக்கும் மோடிக்கு, இது பழக்கமில்லாத புதிய அனுபவம்!

பல பின்னடைவுகள் 

புதிய அரசு பதவியேற்ற முதல் 20 நாள்களிலேயே ஆட்சிக்குப் பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) ஊழல்களாலும் முறைகேடுகளாலும் நிர்வாகச் சீர்கேட்டாலும் உடைந்து நொறுங்கியதுடன் மருத்துவம் பயில விரும்பும் லட்சக்கணக்கான மாணவர்களின் கனவுகளில் மண்ணை அள்ளிப்போட்டது. மேற்கு வங்கத்தின் ஜல்பாய்குரியில் மிகப் பெரிய, – மோசமான ரயில் விபத்து நடந்தது. ஜம்மு – காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்கிறது. தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் 39%, 41%, 43% உயர்ந்துவிட்டன.

‘சென்செக்ஸ்’ – ‘நிஃப்டி’ ஆகிய பங்குச் சந்தைகளில் வரலாறு காணாத அளவுக்குப் புள்ளிகள் உயர்ந்தன, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்தது. நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் 15% அதிகமானது. தேர்தல் பிரச்சாரத்தின்போது நாவடக்கத்துடன் பேசாமல் ஆணவமாகப் பேசியதைக் கண்டித்தார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசியத் தலைவர் (சர்சங்கசாலக்) மோகன் பாகவத். ‘பாஜக தலைமை’ அதைக் கேட்டு கூனிக் குறுகியதே தவிர பதிலுக்குச் சண்டைக்குப் போகாமல் நாசூக்காக ஒதுங்கிக்கொண்டது. பல மாநிலங்களில் பாஜகவுக்குள், கட்சித் தலைமைகளுக்கு எதிராக கலகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் மக்களவைத் தலைவர் தேர்வு, கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவரின் உரை என்ற இரண்டைத் தவிர முக்கியமான - பொருள் பொதிந்த நிகழ்வுகள் ஏதுமில்லை. வழக்கமாகச் செய்ய வேண்டிய செயல்களைக்கூட சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலேயே அரசு செய்தது. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க, அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த உறுப்பினரைத்தான் இடைக்கால பேரவைத் தலைவராக (சபாநாயகர்) தேர்ந்தெடுப்பது மரபு.

கேரளத்திலிருந்து எட்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர் கே.சுரேஷ் இருக்கும்போது, ஒடிஷா மாநிலத்திலிருந்து ஏழாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக உறுப்பினர் பர்த்ருஹரி மஹதாப் இடைக்கால சபாநாயகராக பதவிப் பிரமாணம் செய்ய நியமிக்கப்பட்டார். ஆறு முறை பிஜு ஜனதா தளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மஹதாப், இந்த முறைதான் பாஜக சார்பில் தேர்வானார்.

தவிர்க்கக்கூடிய இந்தச் சர்ச்சைக்குரிய முடிவை பாஜக தலைமை ஏன் எடுத்தது? மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை வலு கிடைக்காவிட்டாலும், ‘எங்கள் தலைவருடைய (பிரதமர்) நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை’ என்று காட்டவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதாவது ‘நான் செய்வதுதான் முடிவு, இல்லாவிட்டால் மாற்று முடிவை ஏற்க மாட்டேன்’ என்ற வீம்பு. இன்னொன்றும் இதற்குக் காரணமாக இருக்கலாம், எப்போதும் ஏதாவது விஷமம் செய்துகொண்டே இருப்பது கிரண் ரிஜிஜுவின் வழக்கம்.

இந்த முறை அவர்தான் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான அமைச்சர்; இந்தப் பதவி தனக்குக் கிடைத்திருக்கிறது என்பதைக் காட்ட, அவர்கூட இந்த யோசனையைத் தெரிவித்திருக்கலாம். பிஜு ஜனதா தளத்திலிருந்துவந்த மஹதாபுக்கு இடைக்கால மக்களவைத் தலைவர் பதவி என்ற மரியாதை வழங்கப்பட்டது, பிற கட்சிகளிலிருந்து மேலும் பலர் வந்தால் கௌரவிக்கப்படுவார்கள் என்று காட்டுவதற்காகவும் இருக்கலாம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

எதிர்க்கட்சிகளுக்கு இது நல்ல வாய்ப்பு

ப.சிதம்பரம் 23 Jun 2024

சலிப்பைத் தரும் அதே வாக்குறுதிகள்

மக்களவைத் தலைவர் தேர்தல் நடைமுறை எதிர்க்கட்சிகளை அதிருப்திப்படுத்துவதில் முடிந்தது என்றாலும் கூட்டத் தொடரின் எஞ்சிய பகுதியையாவது பாதிப்பில்லாமல் நடத்த வேண்டும் அரசு. மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லா, 49 ஆண்டுகளுக்கு முன்னால் – ஆம் – 50 ஆண்டுகள் அல்ல – அமல்படுத்தப்பட்ட நெருக்கடிநிலைக்காக காங்கிரஸ் கட்சியைக் கண்டிக்கும் கசப்பான தீர்மானத்தை இந்த நேரத்தில் கொண்டுவராமல் இருந்திருக்கலாம்.

இப்படியே போனால் வரலாற்றை போதிக்கும் வகையில், 1947இல் காஷ்மீரில் ஊடுருவியதற்காக பாகிஸ்தானைக் கண்டிக்கலாம், 1962இல் அசாமில் ஊடுருவியதற்காக சீனாவைக் கண்டிக்கலாம், 1971இல் இந்தியாவை அச்சுறுத்த இந்துமாக் கடலுக்கு ஏழாவது கடற்படைப் பிரிவை அனுப்பிய அமெரிக்காவைக் கண்டிக்கலாம். நெருக்கடிக்காக காங்கிரஸைக் கண்டிக்கும் தீர்மானம் தேவையில்லாத ஒரு சீண்டல்.

கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவரின் உரை என்பது, அவை தொடங்கியபோது நிகழ்ந்த கண்ணியக் குறைவான செயல்களை மறக்கச் செய்யும் வகையில் நல்லவிதமாக தொடங்க ஒரு வாய்ப்பு, ஆனால் அதுவும் வீணாக்கப்பட்டது. மக்களவையின் அமைப்பும் தன்மையும் மாறிவிட்டதைக் குடியரசுத் தலைவர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருக்கலாம்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இது மோடி 3.0 அல்ல, மோடி 2.1

ப.சிதம்பரம் 16 Jun 2024

தனிக்கட்சியாக ஆண்ட பாஜக பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவாக பெற்று, கூட்டணி ஆட்சியாக நடத்தியாக வேண்டியிருப்பதையும் எதிர்க்கட்சிகள் அதிக தொகுதிகளில் வென்றிருப்பதையும் பத்தாண்டுகளுக்குப் பிறகு ‘அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்’ அவைக்குக் கிடைத்திருப்பதையும் பாராட்டும் விதமாகவே பதிவுசெய்திருக்கலாம். இப்படிப்பட்ட பெருந்தன்மையான பதிவுகள் எதுவுமே குடியரசுத் தலைவர் உரையில் இல்லை என்பது ஏமாற்றத்தையே தருகிறது.

தேர்தலுக்கு முன்பும், தேர்தலின்போதும் பாஜக பாசுரமாக படித்த பல சாதனைகள்தான் குடியரசுத் தலைவர் உரையிலும் மீண்டும் இடம்பெற்றன. ஆனால், இந்தச் சாதனைகளையெல்லாம் ஏற்காமல்தான் பொதுத் தேர்தலில் மக்கள் கணிசமான தொகுதிகளில் தோல்வியைத் தந்து பாடம் புகட்டினர். இப்போது ஆட்சியில் இருப்பது ‘பாஜக அரசு’ அல்ல, ‘பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு’. இந்தக் கசப்பான உண்மையை குடியரசுத் தலைவர் உரை அங்கீகரிக்க மறுத்துவிட்டது. ‘கூட்டணி’ என்ற வார்த்தையே உரையில் இல்லை. ‘கருத்தொற்றுமை’, ‘பணவீக்கம்’ (விலைவாசி உயர்வு), ‘நாடாளுமன்றக் குழு’ ஆகிய வார்த்தைகளும்கூட உரையில் இல்லை!

பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த வார்த்தைகள் உள்ளன, ஆனால் மற்ற பிரிவினர் – குறிப்பாக மதச் சிறுபான்மையோர் – தனித்துக் குறிப்பிடப்படாமல், ‘அனைத்து சமூக, மத குழுக்கள்’ என்று அடையாளமிடப்பட்டனர். மணிப்பூர் பற்றி எரிவது பற்றியோ அங்கே பலர் இறந்தது குறித்தோ குடியரசுத் தலைவர் உரையில் ஏதுமில்லை. ‘அக்னீவீர்’, ‘பொது சிவில் சட்டம்’ குறித்தும் பெரிய மனதுடன் ஏதும் குறிப்பிடாமல் விட்டுவிட்டனர்! இறுதியாக இந்தியாவை ‘விசுவ குரு’ என்று அழைப்பதை விடுத்து ‘விசுவ பந்து’ என்று வர்ணித்துள்ளனர்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?

ப.சிதம்பரம் 09 Jun 2024

காவேரிதான் சிங்காரி

பாஜகவின் பார்வையில் எதுவும் மாறவில்லை, மக்களுடைய மனநிலைகூட மாறியதாக அது கருதவில்லை.

எனவே, அதே அமைச்சரவை - அதே அமைச்சர்கள், முக்கிய துறைகளிலும் அதே அமைச்சர்கள், அதே மக்களவைத் தலைவர், பிரதமருக்கு அதே முதன்மைச் செயலர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத் துறைக்கு அதே தலைமை அதிகாரிகள், சட்டத் துறையிலும் அதே தலைமை அதிகாரிகள், வேறு பல துறைகளிலும் அப்படியே தொடர்கிறது.

சமூக ஊடகங்களிலும் - அரைகுறையாகப் படித்தவர்கள், திசைத் திருப்புவதில் வல்லவர்கள், சாணியைக் கிளறி ஆராய்பவர்கள், தேர்தலிலும் விவாதங்களிலும் தோற்பவர்கள் - அப்படியே மீம்ஸ் போட்டுத் தொடர்கின்றனர் என்று பலர் தெரிவித்தனர். மக்களுடைய தேர்தல் தீர்ப்புக்குப் பிறகும் - எதுவும் மாறவில்லை என்பது அச்சமாகவே இருக்கிறது.

ஒன்றிய அரசின் நிதிநிலை தயாராகிவருகிறது. மக்களுடைய முதல் இரண்டு முக்கியக் கவலைகள் 1. வேலையில்லா திண்டாட்டம், 2. வேகமாக உயர்ந்துவரும் விலைவாசி பற்றியது. ‘சிஎஸ்டிஎஸ்’ மக்களிடம் திரட்டிய கருத்துகளின்படி பாஜக அரசை அதிகமாக வெறுத்தவர்கள் - விலைவாசி உயர்வுக்காக 29%, வேலையில்லாத் திண்டாட்ட அதிகரிப்புக்காக 27% என்று தெரிகிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

சாதி, சமத்துவமின்மை: இரு அடையாளங்கள்

ப.சிதம்பரம் 27 May 2024

புதிய அமைச்சரவையை அமைத்ததிலும் குடியரசுத் தலைவர் உரையிலும் - இந்த இரு விவகாரங்களைத் தீர்ப்பதில் அரசுக்கு அக்கறை இல்லை என்பது வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும் 2024 - 2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின்போதாவது மோடி தலைமையிலான அரசு விழித்துக்கொள்ளுமா? நாடாளுமன்ற நடைமுறைகளின்படி, கண்ணியம் காப்பதற்காக நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

எதிர்க்கட்சிகளுக்கு இது நல்ல வாய்ப்பு
இது மோடி 3.0 அல்ல, மோடி 2.1
2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?
சாதி, சமத்துவமின்மை: இரு அடையாளங்கள்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி







ஸெரெங்கெட்டிஇந்தியாவின் குரல்இன்டியாப்ராஸ்டேட் புற்றுநோய்சமஸ் கி.ரா.ஆரோக்கியத் தொல்லைகள்நாதகநமஸ்தே ராஜஸ்தான்ஏஞ்சலா மெர்க்கல்வருடங்கள்முற்காலச் சோழர்கள்திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கைதொன்மைஉயிரிப் பன்மைத்துவம்தான்சானியா: கல்விதூத்துக்குடி வெள்ளம்ஸ்விக்கி ட்ரான்ஸியன்ட் ஃபெசிலிட்டிஷாங்காய் ரகசியம் என்ன?பதினெட்டாம் பெருக்குஅமேத்திசரிதானா இந்தத் திட்டம்?சித்தாந்தம்அமினோ அமிலங்கள்நாடாளுமன்ற ஜனநாயகம்2023 தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்மகாராஜா ஹரி சிங்கடன்தில்லி செங்கோட்டைமல்லிகார்ஜுன் கார்கேவரிச் சட்டம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!