கட்டுரை, அரசியல், சட்டம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

சட்டம் தடுமாறலாம், இறுதியில் நீதியே வெல்லும்

ப.சிதம்பரம்
03 Apr 2023, 5:00 am
1

ட்டப்படி நீதி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டவை நீதிமன்றங்கள். சில வேளைகளில் நீதி வழங்கலில் தடுமாற்றங்கள் இருப்பதுபோலத் தெரியலாம், அடிக்கடி திருப்பங்களும் வளைவுகளும் கொண்ட வழக்குகளின் பாதையின் இறுதியில் நியாயம் வழங்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் நீதிமன்றங்களை நம்பியிருக்கலாம் வழக்காடிகள். இந்த முன்னுரையோடு, நாட்டின் கவனத்தை சமீபத்தில் ஈர்த்துள்ள வழக்கு பற்றியும், அது அரசியல் அரங்கின் இரு தரப்பையும் சேர்ந்த எதிரெதிர் முகாம்களில் ஏற்படுத்தியுள்ள கொந்தளிப்புகளையும் சற்றே விளக்குகிறேன். 

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரைச் சேர்ந்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவதூறு வழக்கொன்றில் (இந்திய தண்டனையியல் சட்டம் 499இன் கீழ் தொடரப்பட்டது), காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை விதித்து இந்த ஆண்டு மார்ச் 23இல் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை வழங்கிய பிறகு, இந்தத் தீர்ப்பின்படி சிறையில் அடைக்கப்படுவதை உடனடியாக நிறுத்திவைத்து, பிணை விடுதலைக்கு விண்ணப்பிக்க அவகாசம் தந்து உத்தரவிட்டார் நீதிபதி. இருப்பினும் மார்ச் 24இல் ராகுலின் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ‘தகுதி நீக்கம்’ செய்யப்படுவதாக அறிவித்து, அவருடைய வயநாடு மக்களவைத் தொகுதி ‘காலி’ என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் பாதையைப் பார்ப்போம்:

13.04.2019: கர்நாடக மாநிலத்தின் கோலாரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

16.04.2019: பூர்ணேஷ் மோடி, எம்.எல்.ஏ. (பாஜக), “மோடி சமூகம் முழுவதையும் ராகுல் காந்தி தன்னுடைய பேச்சால் அவதூறு செய்துவிட்டார்” என்று குஜராத்தின் சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்து வழக்கு தொடுத்தார்.

07.03.2022: தான் தொடர்ந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க வேண்டாம் என்று கோரி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு செய்து தடை ஆணையும் பெற்றார் மனுதாரரான பூர்ணேஷ் மோடி.

07.02.2023: அதானி தொழில் குழுமங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மக்களவையில் பேசினார் ராகுல் காந்தி.

16.02.2023: தான் தொடுத்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று அளித்த மனுவை குஜராத் உயர் நீதிமன்றத்திலிருந்து திரும்பப் பெற்றார் பூர்ணேஷ் மோடி.

21.02.2023: ராகுல் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் விசாரணை தொடர்ந்தது.

17.03.2023: விசாரணை முடிந்தது, தீர்ப்பு அறிவிக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது.

23.02.2023: ராகுல் காந்தி அவதூறு செய்துவிட்டார், சட்டப்படி அவருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது என்று சூரத் மாஜிஸ்திரேட் தனது 168 பக்கத் தீர்ப்பில் அறிவித்தார். சிறிது நேரம் கழித்து, அவருடைய சிறைத் தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்திவைத்து அவரே உத்தரவிட்டார்.

24.03.2023: ராகுல் காந்தியின் தகுதியிழப்பை, மக்களவைச் செயலகம் அறிவிக்கையாக வெளியிட்டது.

சாதாரணமான ஒரு வழக்கு, மூன்று ஆண்டுகளாக அங்கும் இங்கும் அலைந்து தாமதப்பட்டப் பிறகு, திடீரென வேகம் பெற்று, மின்னல் வேகத்தில் இறுதிக்கட்ட விசாரணை நடந்து - முப்பது நாள்களுக்குள் தண்டனையைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணையில் ஏன் இப்படித் திடீர் அவசரம் காட்டப்பட்டது என்பது புதிராக இருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஜனநாயகத்தைச் சூழும் அதிகார இருள்

ப.சிதம்பரம் 27 Mar 2023

ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடுத்தவர், தான் தொடுத்த வழக்கு விசாரணையையே நிறுத்திவைக்குமாறு முதலில் ஏன் தடை வாங்கினார்? பிறகு மக்களவையில் அதானி குழுமம் குறித்து ராகுல் காந்தி பேசிய ஒன்பது நாள்களுக்குப் பிறகு, தடை கோரிய தனது மனுவை விலக்கிக்கொண்டு விசாரணையை விரைந்து நடத்துமாறு ஏன் வலியுறுத்தினார்?

அவமதிக்கப்பட்டது யார்?

தான் சார்ந்த ‘மோடி’ என்கிற சமூகம் / சாதி, ராகுலின் பேச்சால் அவதூறுக்கு ஆளானதாக மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார். ‘மோடி’ என்றொரு சமூகம் இருக்கிறதா அல்லது ‘மோடி’ என்ற பின்னொட்டைப் பெயரில் கொண்டவர்கள் அனைவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களா, சாதியினரா என்று எனக்கு உண்மையிலேயே தெரியாது; ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் 2023 மார்ச் 28 இதழில் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறது. ‘மோடி’ என்ற பெயர் குறிப்பிட்ட சமூகத்தவரையோ சாதியையோ குறிக்கும் சொல் அல்ல. குஜராத் மாநிலத்தில் ‘மோடி’ என்ற பின்னொட்டை இந்துக்கள் மட்டுமல்ல முஸ்லிம்களும் பார்ஸிகளும் கொண்டுள்ளனர்.

வைஷ்ணவர்கள் (வாணியர்கள்), போர்பந்தரைச் சேர்ந்த கார்வாக்கள் (மீனவர்கள்), லோஹணர்கள் (வர்த்தகச் சமூகத்தவர்) இந்தப் பின்னொட்டைக் கொண்டுள்ளனர். ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓபிசி) பட்டியலில் ‘மோடி’ என்றொரு பெயரே கிடையாது. பீஹார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் மத்தியப் பட்டியலிலும் ‘மோடி’ என்றொரு சமுதாயமோ, சாதியோ கிடையாது.

குஜராத் மாநிலத்தில் ஒன்றிய அரசுக்கான பட்டியலில் ‘மோடி கான்சி’ என்றொரு பிரிவு இடம்பெற்றுள்ளது. அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் சாதி அடையாளத்தைத் துறந்த நான், எந்தவித சாதி அடையாளத்தையும் அங்கீகரிப்பதும் கிடையாது; எனவே, 13 கோடி மக்களைக் கொண்ட மோடி சமூகத்தையே - சாதியையே ராகுல் தன்னுடைய பேச்சால் அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டே தலைசுற்றலை ஏற்படுத்துகிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

புதிய ராகுல்

யோகேந்திர யாதவ் 17 Mar 2023

தண்டனை, தீர்ப்பு நிறுத்திவைப்பு

அந்தப் பேச்சு அவதூறானது என்பது மனுதாரரின் வாதம். இந்திய தண்டனையியல் சட்டம் 500 பிரிவின் கீழ் இந்தக் குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனை என்பது 2 ஆண்டுகள் சிறை, அல்லது ரொக்க அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படலாம். இந்திய தண்டனையியல் சட்டம் அமலுக்கு வந்த 1860ஆம் ஆண்டு முதல் இதுவரையில் எந்த வழக்கிலும் இந்த அளவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதே இல்லை.

சாதாரணமாக, மூன்றாண்டுகள் அல்லது அதற்கும் குறைவான காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலே, தண்டனையும் சிறை வாசமும் உடனடியாக அமலுக்கு வந்துவிடாமல் இருக்க மேல்முறையீடு செய்வதற்கு உதவியாக பிணை விடுதலையும் (ஜாமீன்) வழங்கப்படும். இந்த வழக்கில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறிய மாஜிஸ்திரேட், சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து தானே உத்தரவிட்டிருக்கிறார்.

1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கூறு 8(3)இன் படி, “இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் தண்டனை பெறும் எந்த உறுப்பினரும், தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்தே பதவி வகிக்கும் தகுதியை இழக்கிறார்…” இந்த வழக்கில் ராகுல் தண்டிக்கப்பட்டார், உடனே சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று  அறிவிக்கப்படவில்லை, அது மட்டுமல்லாமல் தீர்ப்பை எதிர்த்து முறையிட கால அவகாசமும் உடனடியாகத் தரப்பட்டிருக்கிறது. அப்படியானால் 2023 மார்ச் 23லேயே பதவி இழப்புக்கு அவர் எப்படி ஆளாவார்? இது விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய கேள்வி.

ஏற்கெனவே, பலரும் இந்தக் கேள்வியை எழுப்பி விடைக்காகக் காத்திருக்கின்றனர். ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ இதில் சந்தேகமே ஏற்படவில்லை. 24 மணி நேரத்துக்குள், இந்தக் கேள்வியை அவர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொண்டார்களா - இல்லையா தெரியாது, சட்டப்பூர்வமாக அவர்களுக்குத் தெளிவான பதில் கிடைத்ததா - இல்லையா தெரியாது, மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியின் பதவியைப் பறித்து தகுதியிழப்புச் செய்துவிட்டது. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ராகுலாக இருப்பதன் முக்கியத்துவம்

சமஸ் | Samas 01 Mar 2023

தகுதியிழப்பை யார் செய்ய முடியும்?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 102(2)(ஈ), “நாடாளுமன்றம் இயற்றிய எந்தச் சட்டத்தின்படியும் ஓர் உறுப்பினர் ‘தகுதியிழந்தால்’, உறுப்பினராகத் தொடர்வதிலிருந்து ‘நீக்கப்படுவார்’ என்கிறது; தண்டிக்கப்பட்டுவிட்டாலே உறுப்பினர் ‘தகுதியை இழந்துவிடுவார்’ என்று கூறவில்லை.” அப்படியானால் தகுதியை இழந்துவிட்டார் என்று கூறும் உத்தரவு இதற்கு அவசியம். அப்படி தகுதிநீக்கம் செய்யும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்ற வெளிப்படையான கேள்வியை (மக்களவையின் முன்னாள் தலைமைச் செயலர் பி.டி.டி.ஆச்சாரி உள்பட) பலர் கேட்டுள்னர். அரசமைப்புச் சட்டத்தின் 103வது கூறில் இதற்குப் பதில் இருக்கிறது: “தகுதி நீக்கம் தொடர்பாகக் கேள்வி எழுந்தால், அதை குடியரசுத் தலைவரின் முடிவுக்கு அனுப்ப வேண்டும்; அவர் தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை கலந்து அதன் கருத்தின் அடிப்படையில் முடிவெடுப்பார்” என்கிறது.

ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி தகுதியிழப்பு விவகாரத்தில், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அது கொண்டு செல்லப்படவில்லை; தேர்தல் ஆணையத்திடமும் ஆலோசனை கலக்கப்படவில்லை. அப்படியானால் இந்த முடிவை எடுத்தது யார்? மக்களவைத் தலைவரா (சபாநாயகர்), அல்லது மக்களவைச் செயலகமா? யாருக்கும் தெரியாது.

வின்ஸ்டன் சர்ச்சில் வார்த்தையில் சொல்வதானால், ‘இந்த வழக்கும் இதன் முடிவுகளும் புதிர்கள் நிறைந்த மர்மம்’.

 

தொடர்புடைய கட்டுரைகள்

ஜனநாயகத்தைச் சூழும் அதிகார இருள்
புதிய ராகுல்
ராகுலாக இருப்பதன் முக்கியத்துவம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

5






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Meera V   2 years ago

17.03.2023: விசாரணை முடிந்தது, தீர்ப்பு அறிவிக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. 23.02.2023: ராகுல் காந்தி திகதி 23.03.2023 என்று இருக்க வேண்டுமோ

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

பாலியல் வன்கொடுமைநாட்டின் எதிர்காலம்சடலம்தேசியத் தலைநகர அதிகாரம் யாரிடம்?ஹரித்ராநதிமேலும் ஜனநாயகப்படட்டும் புத்தகக்காட்சிகள்ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் அளித்த பேட்டி!பாலு மகேந்திரா ஆனந்த விகடன் பேட்டிநாள்காட்டி20ஆம் நூற்றாண்டுகுடும்ப நுகர்வுச் செலவு ஆய்வறிக்கைகிலானிவறுமை - பட்டினிலீ குவான் யுகாஸாஇந்துத்துவமா?காதல்பார்க்கின்சன் நோய்க்கு நவீன சிகிச்சை!அறிவியல் தமிழ்அறிவுலகம்தமிழ் மொழிபென் ஸ்டோக்ஸ்பற்களின் பராமரிப்புபிரேசில் அதிபர்பி.ஆர். அம்பேத்கர்‘வலிமை’யான தலைவர் பொய் சொல்வதேன்?குட்டிக் குலையறுத்தான் சாமிபரம்பொருள்சொந்த நாட்டை விமர்சிப்பது அன்பின் வெளிப்பாடுவிஜயகாந்த் கதை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!