கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு
மக்கள் மீது திணிக்கப்படும் மௌனத்தால் தீராது பிரச்சினைகள்
இன்றைய சூழ்நிலையை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்றால், பிரதமர் மோடியின் வார்த்தைகளைவிட செயல்கள் அதை உரத்து உணர்த்துகின்றன என்பதை இந்திய மக்கள் தெரிந்துகொண்டுவிட்டனர். மக்களை மிகவும் துன்புறுத்துகிற பிரச்சினைகளைப் புறக்கணிக்கிறார், அல்லது பயனில்லாத வார்த்தைகளால் பேசுகிறார், உண்மையான பிரச்சினைகள் மீது மக்களுடைய கவனம் சென்றுவிடாமல் வார்த்தைகளால் விளையாடி திசை திருப்புகிறார்; அரசின் உண்மையான உள்நோக்கம் என்ன என்பதைத் தெரிவிப்பதாக அவருடைய செயல்கள் ஒருபோதும் இல்லை.
நிறுவனங்கள் மீது தாக்குதல்
இந்திய ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடிக்கும் மூன்று அடிப்படைத் தூண்களை, பிரதமரும் அவருடைய அரசும் திட்டமிட்டு தாக்கி வலுவிழக்கச் செய்வதையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பார்த்துவருகிறோம் – அவை முறையே - நாடாளுமன்றம், அரசு நிர்வாக இயந்திரம், நீதித் துறை; ஜனநாயகத்தின் மீதும் ஜனநாயகத்துக்குப் பொறுப்பேற்கும் கடமைகள் மீதும் அவருக்குள்ள ஆழ்ந்த அலட்சியத்தை வெளிப்படுத்தும் விதத்திலேயே இச்செயல்கள் நடந்துவருகின்றன. முதலில், நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்தவற்றைப் பார்ப்போம்.
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகுந்த கவலையை அளிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சமூகப் பிளவு, வருடாந்திர நிதிநிலை அறிக்கை மீதான விவாதம், தொழிலதிபர் அதானி மீதான ஊழல் புகார்கள் ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் பேசிவிடக் கூடாது என்பதற்காக நாடாளுமன்றக் கூட்டத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அரசுத் தரப்பு முதல்முறையாக ஈடுபட்டதை சமீபத்தில் பார்த்தோம்.
மக்களுடைய பிரச்சினைகள் மீது விவாதங்களை நடத்துவதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருந்ததால், இதற்கு முன்னால் அரசுத் தரப்பு எடுத்திராத நடவடிக்கைகளைக் கையாண்டது – எதிர்க்கட்சியினரின் பேச்சுகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கியது, விவாதம் நடைபெற முடியாமல் அமளி செய்து தடுத்தது, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாக்கியது, நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள முடியாமல் மின்னல் வேகத்தில் நீக்கியது. இவற்றின் விளைவாக 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிதி மசோதா எந்தவித விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் நிதி மசோதா இப்படி அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் பிரதமர் தனது தொகுதியில் பல்வேறு திட்டங்களை, செய்தி ஊடகங்கள் விரிவாக விளம்பரப்படுத்தும் வகையில் தொடங்கிவைத்தார்.
மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), வருவாய்ப் புலனாய்வுத் துறை அமல் பிரிவு இயக்குநரகம் (இ.டி) ஆகியவற்றை நரேந்திர மோடி தலைமையிலான அரசு தவறாகப் பயன்படுத்துவது அனைவருமே அறிந்தவைதான்; இவ்விரு அமைப்புகள் புலனாய்வு செய்யும் வழக்குகளில் 95% எதிர்க்கட்சிகளுக்கு எதிரானவைதான், பாஜகவில் சேருவோர் மீதான வழக்குகள் மட்டும் மாயமாக எப்படியோ நீர்த்துவிடுகின்றன; தேசப் பாதுகாப்புக்கான சட்டம் - பத்திரிகையாளர்கள், சமூகத் தொண்டர்கள், புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் மீது தவறாகப் பயன்படுத்தப்படும் விதம் இதுவரையில் நடந்தே இராதது; பிரதமருக்கு நெருக்கமான தொழிலதிபர் மீதான நிதி மோசடிப் புகார்கள் புறக்கணிக்கப்படும் அதே வேளையில், உண்மைக்காகவும் நீதிக்காகவும் பாடுபடுவதாக பெருமை பொங்கப் பேசுகிறார் பிரதமர்; இந்தியாவிலிருந்து தப்பியோடிய தொழிலதிபர் மெகுல் சோக்ஸிக்கு எதிரான ‘தேடுதல் சுற்றறிக்கை’யை விலக்கிக்கொள்கிறது சர்வதேசக் காவல் துறை (இன்டர்-போல்); பில்கிஸ் பானு வன்புணர்வு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றவர்கள், விடுதலை பெறுவதுடன் பாஜக தலைவர்களுடன் மேடையைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
ஓய்வுபெற்ற சில நீதிபதிகளை ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தும் ஒன்றிய சட்ட அமைச்சர், அவர்கள் அதற்காகத் ‘தகுந்த விலை கொடுக்க நேரிடும்’ என்று எச்சரிக்கும் அளவுக்கு நீதித் துறையின் நம்பகத்தன்மையைச் சிதைக்கும் முயற்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. மக்களைத் தவறாக வழிநடத்தவும், அவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கவும், அதன் மூலம் பதவியில் இருக்கும் நீதிபதிகளை மறைமுகமாக எச்சரிக்கவும் இப்படிப்பட்ட தொனியில் வேண்டுமென்றே பேசப்படுகிறது.
தாக்குதல் – அச்சுறுத்தல்
ஊடகங்களின் சுதந்திரம், அரசியல் அச்சுறுத்தல்களாலும் வேறுவகை தாக்குதல்களாலும் பறிக்கப்படுகின்றன; அரசுக்கு எதிராக எழுதக் கூடாது என்பதை ஊடகங்கள் ஏற்கும் வகையில், சமரசம் செய்துகொள்ளப்பட்டு நீண்ட காலமாயிற்று; பாஜக நண்பர்களின் பண பலத்தால் ஊடகங்கள் விலைக்கும் வாங்கப்படுகின்றன, செய்தி சேனல்களில் மாலை நேர விவாதங்களில் அரசுக்கு எதிராகப் பேசுவோர் பெருங்கூச்சலிட்டு அடக்கப்படுகின்றனர் அல்லது மவுனம் சாதிக்க வைக்கப்படுகின்றனர்.
இத்துடன் திருப்தி அடையாமல், தனக்குப் பிடிக்காத அல்லது தன்னை பாதிக்கும் செய்தியை ‘பொய்ச் செய்தி’ என்று முத்திரை குத்தி, அத்தகைய செய்தியை வெளியிடுவோருக்கு சட்டரீதியிலாக எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் செய்ய, தகவல் தொழில்நுட்ப விதிகளையும் சமீபத்தில் திருத்தியிருக்கிறது அரசு. அரசை விமர்சிப்பதற்காக தண்டனையியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெளிவுபடுத்த நேர்ந்திருக்கிறது, இதை அரசாங்கம் காது கொடுத்து கேட்கிறதா என்ன? தங்களுடைய ‘பெருந்தலை’வரை விமர்சித்து செய்தி வெளியிடும் எந்த ஊடகம் மீதும் அடுக்கடுக்காக வழக்கு தொடுக்க, பாஜக – ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் வழக்கறிஞர்களின் பெரிய படையே காத்திருக்கிறது.
மக்களை மௌனப்படுத்திவிட முடியுமா?
ஆணையிட்டு திணிக்கப்படும் மௌனத்தால் இந்தியாவின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் தன்னுடைய அரசின் நடவடிக்கைகள் குறித்து நியாயமாக எழுப்பப்படும் கேள்விகளுக்குக்கூட பதில் அளிக்காமல் மௌனமாக இருக்கிறார் பிரதமர்.
வேலையில்லா திண்டாட்டம் – விலைவாசி உயர்வு குறித்து தன்னுடைய நிதிநிலை அறிக்கையில் ஏதும் குறிப்பிடாமலேயே விடுகிறார் நிதியமைச்சர் – ஏதோ அந்த இரண்டும் நம் நாட்டிலேயே இல்லை என்பதைப் போல! பால், முட்டை, காய்கறிகள், சமையல் எரிவாயு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை வாங்க முடியாமல் அன்றாடம் திண்டாடும் கோடிக்கணக்கான மக்களுக்கு அவருடைய மௌனம் எந்த வகையிலும் உதவிசெய்யாது; இதுவரை இருந்திராத அளவுக்கு உயர்ந்துவிட்ட வேலையில்லாத் திண்டாட்டத்தால் வாடும் வாலிபர்களுக்கும் இந்த மௌனம் பயன் தராது. 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று வாக்குறுதி தந்த பிரதமர், அதில் தோல்வி கண்ட பிறகு வெகு வசதியாக இப்போது மௌனம் காக்கிறார்.
இடுபொருள் செலவுகள் உயர்வால் ஏற்பட்டுவிட்ட சாகுபடிச் செலவு அதிகரிப்பாலும், விளைந்த பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காமலும் விவசாயிகள் படும் துயரம் இங்கேயே – இப்போதே கண் முன்னே நிலவுகிறது.
பாஜக – ஆர்எஸ்எஸ் தலைவர்களால் தூண்டிவிடப்பட்டு அலையலையாக எழும் வன்செயல்களையும் வெறுப்புணர்வையும் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறார் பிரதமர்; அவர்களையெல்லாம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பது இருக்கட்டும், ஒரு முறையாவது - அமைதியாக இருங்கள், ஒற்றுமையைக் கடைப்பிடியுங்கள் என்றுகூட சொல்லத் தவறுகிறார்; மதப் பண்டிகைகள் எல்லாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக என்றில்லாமல், மற்றவர்களை மிரட்டுவதற்காகவும் தாக்குவதற்காகவும் என்றாகிவிட்டது – ஒரு காலத்தில் இவையெல்லாம் அனைத்து சமூகத்தவரிடையேயும் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் மட்டுமே கொண்டுவந்தன. மதம், உணவு, சாதி, பாலினம், மொழி அடிப்படையில் மக்களைப் பாகுபாட்டோடு நடத்துவதும் அச்சுறுத்துவதுமே இப்போது பரவிவருகிறது.
சீனத்துடனான எல்லை விவகாரத்தில், ஊடுருவலே இல்லை என்று பிரதமர் தொடர்ந்து மறுத்துக்கொண்டிருக்கிறார்; நாடாளுமன்றத்தில் அதுபற்றி விவாதம் நடத்தவிடாமல் அரசுத் தரப்பு தடுத்துக்கொண்டேவருகிறது; வெளியுறவு அமைச்சரோ, சீன விவகாரம் என்றாலே அடிவாங்கியவரின் மனநிலையைக் கடைப்பிடிக்கிறார், இதனால் சீனம் மேலும் துணிச்சல் பெற்று இந்திய எல்லைக்குள் அடிக்கடியும் மேலும் பல இடங்களிலும் ஊடுருவும் எண்ணங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறது.
இனிவரும் நாள்கள் முக்கியம்
பிரதமர் எவ்வளவுதான் – எப்படித்தான் முயன்றாலும் இந்திய மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள், அமைதியாக இருக்க வைக்கவும் முடியாது. அடுத்த சில மாதங்கள் நம்முடைய ஜனநாயகத்துக்கு மிகவும் சோதனையான காலம். நாட்டின் முக்கிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், எல்லா அதிகாரங்களையும் தவறாகப் பயன்படுத்துவதில் மோடி அரசு தீவிரமாக இருக்கிறது; பாரத இணைப்பு யாத்திரையில் மேற்கொண்டதைப் போல, தனது செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல காங்கிரஸ் கட்சி அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும். இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் அதன் லட்சியங்களையும் காக்க, ஒத்தக் கருத்துள்ள அனைத்து அரசியல் சக்திகளுடனும் இணைந்து செயல்படும்.
நம்முடைய போராட்டமானது மக்களுடைய குரல்கள் நெரிக்கப்படாமல் காப்பாற்றப்படுவதற்கானது; தன்னுடைய புனிதமான கடமை எது என்பதை காங்கிரஸ் கட்சி நன்கு உணர்ந்திருக்கிறது, அதற்காக ஒத்தக் கருத்துள்ள எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்றத் தயாராக இருக்கிறது.
தொடர்புடைய கட்டுரைகள்
நவதாராளமயத்தால் அதானி குழுமம் அசுர வளர்ச்சி!
ஒரு தலைவன், ஒரு பயணம், ஒரு செய்தி
சட்டம் தடுமாறலாம், இறுதியில் நீதியே வெல்லும்
தமிழில்: வ.ரங்காசாரி
4
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Abi 2 years ago
தங்கள் கட்டுரை தமிழில் வருவது மகிழ்ச்சி. Congress புத்துயிர் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவதாக...
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.