கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 5 நிமிட வாசிப்பு
புத்தாண்டில் எப்படி இருக்கும் நம் பொருளாதாரம்?
ஆங்கிலப் புத்தாண்டு 2023 பிறந்துவிட்டது. கடந்த ஆண்டின் நெடிய நிழல் இன்னமும் மறையவில்லை. உலக அளவில் 2008இல் ஏற்பட்ட மிகப் பெரிய நிதி நெருக்கடி 2009ஆம் ஆண்டின் பொருளாதாரப் போக்கை பெரிதும் வழிநடத்தியது. 2020இல் ஏற்பட்ட ‘கோவிட்-19’ பெருந்தொற்று 2021 பொருளாதாரத்தை வழிநடத்தியது. எனவே, 2022ஆம் ஆண்டின், வழக்கத்துக்கு மாறான பல்வேறு நிகழ்வுகளின் இணைப்பு 2023 நிதியாண்டின் போக்கைத் தீர்மானிக்குமா? உலக நாடுகள் அனைத்தின் பொருளாதாரத்திலும் அதன் விளைவுகள் உணரப்படும், இந்தியாவால் விதிவிலக்காக இருந்துவிட முடியாது.
இந்திய அரசு, இத்தகைய முன்னறிவிப்புகளை எப்போதுமே ஏற்க மறுத்துவருகிறது; பாஜக தலைமையிலான அரசைப் பொருத்தவரையில் ‘இந்தியா விதிவிலக்கானது!’ இந்திய அரசு மட்டும்தான், 2023இல் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று நம்புகிறது; விலைவாசி உயர்வு மிதமாகிவிடும் என்கிறது; வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை சரிந்துவிடும் என்று எதிர்பார்க்கிறது; அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி வீதத்தை அதிகரித்துக்கொண்டே வந்தாலும் இந்தியாவுக்கு வரும் நிகர அன்னிய முதலீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறது; ரஷ்யா – உக்ரைன் போர் நீடித்தாலும் உலக வர்த்தகம் பெருகும் என்று நம்புகிறது; இதே பாணியில் சிந்திப்பதானால், ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்காமல் ஆட்டம் இழந்தாலும், ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத்தருவார் என்று உறுதியாகவே நம்பிவிடலாம். “எண்ணங்கள் குதிரைகளானால், இயலாதவர்கள்கூட உலகைச் சுற்றிவரலாம்” என்றொரு பழமொழி உண்டு.
சில அறிக்கைகளின் தகவல்கள்
நாட்டை நிர்வாகம் செய்யும் தலைவர்களும், மூத்த அரசு அதிகாரிகளும் பொருளாதார நிலை குறித்து தாங்களே தயாரித்த அறிக்கைகளையும் உலக அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகளையும் மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தியப் பொருளாதார நிலை குறித்து சில அறிக்கைகளிலிருந்து எடுத்த தகவல்களின் சாரம் இதோ:
கண்ணோட்டம்: உலக அளவில் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்று பார்க்கும்போதும், பொருளாதாரச் சந்தை விரிவடைய உள்ள வாய்ப்புகளை ஆராயும்போதும், இழப்புகளும் தொய்வுகளும் ஏற்படவே வாய்ப்புகள் அதிகம் என்பது புரிகிறது. பிற நாடுகளில் ஏற்படும் நிகழ்வுகளால் இந்தியப் பொருளாதாரமும் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகளே அதிகம் என்பதுடன் உலக அளவில் விலைவாசி உயர்வு மேலும் உச்சத்தை எட்டும் என்றே தரவுகள் தெரிவிக்கின்றன (பொருளாதார நிலை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி 2022 டிசம்பரில் வெளியிட்டிருக்கும் அறிக்கை).
பணவீக்க விகிதம்: பணவீக்க விகிதம் (விலைவாசி உயர்வு விகிதம்) ஓரளவுக்குக் குறைந்திருக்கலாம் ஆனால் நிச்சயமாக, இனிமேல் உயராது என்று அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. அதேசமயம், விலைவாசி உயர்வு மேலும் பல பண்டங்களுக்கும் பரவியிருப்பதுடன் அப்படியே நீடிக்கிறது. விலைவாசியை நிலைப்படுத்தும் முயற்சியில் முதல் மைல்கல் சாதனையை எட்ட அரசு தயாராகிவருகிறது. உணவு தானியம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயராமல், சமாளிக்கத்தக்க வரம்பில் 2023-24இல் பராமரிக்கப் பார்க்கிறது. அடுத்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் விலைவாசி உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அரசு தனது கண்காணிப்பைத் தளர்த்திவிட முடியாது.
உள்நாட்டுப் பணவீக்கம்: நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ) மூன்றாவது மாதமாகத் தொடர்ந்து 6.0% என்ற அளவில் தொடர்கிறது. நகர்ப்புறங்களில் பணவீக்கம் 5.68%ஆகவும் கிராமப்புறங்களில் 6.09%ஆகவும் 2022 நவம்பரில் இருந்தது.
உலகளாவிய வளர்ச்சி: பொருளாதார ஒத்துழைப்பு, வளர்ச்சிக்கான சர்வதேச அமைப்பு 2023இல் உலகின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 2.2%ஆக இருக்கும் என்று கூறுகிறது. 2022க்கு அது ஊகித்த 3.1% என்பதைவிட, 90 அடிப்படைப் புள்ளிகள் குறைவு. இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 6.6% என்பதிலிருந்து 5.7%ஆகக் குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. (https://www.oecd.org/economic-outlook/ November-2022#gdp).
உலக வர்த்தகம்: உலக வர்த்தக அமைப்பு (டபிள்யு.டி.ஓ) 2022 நவம்பர் 28இல் செய்த சரக்கு வர்த்தக கணிப்புப்படி 2022, 2023 ஆண்டுகளின் இறுதிப்பகுதியில் வர்த்தக வளர்ச்சி மந்தம் அடையும். சரக்கு வர்த்தகம் தொடர்பான இப்போதைய கணக்கெடுப்பு, 96.2ஆக இருக்கிறது. இதற்கு முன்னர் எடுத்த கணக்கெடுப்பு அளவும், அடிப்படை மதிப்புமான 100.0 என்பதைவிட இது குறைவு. வியாபாரம் ஆக வேண்டிய சரக்குகளுக்கு முழு அளவில் கேட்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது. (https://www.wto.org>news_e).
வர்த்தகப் பற்றாக்குறை: இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை (இறக்குமதி மதிப்பைவிட ஏற்றுமதி மதிப்பு மிக மிக அதிகம்) 2022இல் ஏப்ரல் தொடங்கி நவம்பர் வரையிலான 8 மாதங்களுக்கே 198.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 2021-22 முழு ஆண்டுக்கும் கணக்கிட்டால் இது 191.0 பில்லியன் டாலர்கள். சீனத்துடனான வெளிவர்த்தகப் பற்றுவரவு மட்டும் 73 பில்லியன் டாலர்களாகும். (DGCI&S). ஒரு பில்லியன் என்பது நூறு கோடி.
நடப்புக்கணக்குப் பற்றாக்குறை (சிஏடி): நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இந்த ஆண்டு மேலும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியுடன் (ஜிடிபி) ஒப்பிடுகையில் 2022-23இல் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (-) 3.5% ஆகும் என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) மதிப்பிடுகிறது. உலக வங்கி அதுவே (-) 3.2%ஆக இருக்கும் என்கிறது. (நிதியமைச்சகத்தின் மாதாந்திரப் பொருளாதார ஆய்வு, 2022 நவம்பர்).
அரசின் பொதுநிதி பற்றாக்குறை: அரசின் மொத்த வருவாயுடன், செலவை ஒப்பிடும்போது, முந்தைய ஆண்டில் 6.7%ஆக இருந்த நிதி பற்றாக்குறை குறைந்து 6.4% என்ற அளவுக்கு மாற்றம் இருக்கும் என்று 2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உறுதியளித்தது. 2022 டிசம்பரில் அரசு ரூ.3,25,756 கோடிக்கு கூடுதல் செலவு அனுமதி கோரிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது. இந்தச் செலவுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும் என்று கேட்டபோது, வரி வருவாயில் இப்போது நல்ல வளர்ச்சி இருப்பதால் அதிலிருந்தே பெற்றுவிட முடியும் என்று கூறிய அரசு, பொது நிதி பற்றாக்குறை மொத்த பட்ஜெட் மதிப்பில் 6.4%ஆக பராமரிக்கப்படும், மீறப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் நம்பிக்கையோடு கூறியது.
இப்படிச் சொன்னது 2022, டிசம்பர் 21இல். இப்படிக் கூறிய 48 மணி நேரத்துக்கெல்லாம் மத்திய அமைச்சரவை கூடி, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டப்படி, பொது விநியோக அமைப்பு மூலம் ஏழைகளுக்கு மானிய விலையில் வழங்கும் கோதுமை, அரிசி உள்ளிட்ட தானியங்கள் 2023இல் விலையில்லாமல் (இலவசமாக) வழங்கப்படும் என்று அறிவித்தது. இதற்குத் தேவைப்படும் ரூ.2,00,000 கோடி, கூடுதல் செலவு அனுமதி கோரிக்கையில் சேர்க்கப்படவில்லை. ஆனால், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்துக்கு ரூ.60,111 கோடி தரப்படும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது அரசு. என்னுடைய கருத்து: 2023இல் மத்திய அரசின் பொதுநிதி பற்றாக்குறை, அரசே நிர்ணயித்த இலக்கையும் தாண்டிவிடும். (நிதியமைச்சகம், மாநிலங்களவை விவாதம்).
வேலைவாய்ப்பின்மை: இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) வீடுகளில் எடுத்த கணக்கெடுப்பின்படி, 2022 டிசம்பர் 29இல் அனைத்திந்திய அளவில் வேலையில்லாத் திண்டாட்ட அளவு 8.4%. இதில் நகர்ப்புறங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் 10% (சிஎம்ஐஇ).
பொருளாதார மந்தநிலை: பொருளாதார மந்தநிலைக்கான அறிகுறிகள் அதிகமாகத் தெரிகின்றன. அமெரிக்க அரசின் கருவூலத் துறை வெளியிடும் பத்தாண்டு கடன் பத்திரங்கள் மீதான வருமானம் 44 அடிப்படைப் புள்ளிகள் 2022 நவம்பரில் குறைந்தது, இரண்டு ஆண்டு அரசு கடன் பத்திரங்கள் மீதான வட்டி 17 அடிப்படைப் புள்ளிகள் குறைந்தன. (அடிப்படைப் புள்ளி என்பது ஒரு சதவீதத்தில் நூறாவது). வருவாய் வளைவுக்கோடு தலைகீழாகிறது. அதாவது, பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படுவது நிச்சயம் எனவே வருவாய் சரிகிறது என்பதையே இவை காட்டுகின்றன. (பொருளாதார நிலை குறித்த ரிசர்வ் வங்கியின் 2022 டிசம்பர் அறிக்கை).
பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் எந்த அம்சமும் அதனுடைய கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பதை அரசு இன்னமும் உணரவில்லை என்றே அஞ்சுகிறேன். ரஷ்ய - உக்ரைன் போர், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுகள், பெட்ரோலிய எண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட பண்டங்களின் விலை உயர்வு, கரோனா நோய்க்கிருமிகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் ஆகிய அனைத்தும், நிச்சயமற்ற பொருளாதாரச் சூழ்நிலையில்தான் 2023இல் இந்தியா காலடி எடுத்துவைக்கிறது என்பைதக் குறிக்கின்றன.
தொடர்புடைய கட்டுரைகள்
பொருளாதாரம் எப்போது மீளும்?
பொருளாதார வளர்ச்சி: உண்மையும் கனவும்
இந்திய பொருளாதாரம் எப்படிப் போகிறது: ப.சிதம்பரம் உரை
தமிழில்: வ.ரங்காசாரி
3
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Periasamy 2 years ago
காரைக்குடியில் தனது கட்சி பிரச்சனைகளை கூட தீர்க்க முடியாதவர் கார்கில் முதல் பொருளாதாரம் வரை எழுதி குவிக்கிறார்...வெறும் காகித புலி!!
Reply 0 1
Login / Create an account to add a comment / reply.
Duraiswamy.P 2 years ago
வர்த்தகப் பற்றாக்குறை என்ற தலைப்பில் இறக்குமதி மதிப்பை விட ஏற்றுமதி மதிப்பு மிக மிக அதிகம் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இறக்குமதி மதிப்பை விட ஏற்றுமதி மதிப்பு மிக மிக குறைவு என்பதுதான் சரி. அதன் அடுத்த வரிகளில் 8 மாதத்துக்கான பற்றாக்குறை 198 பில்லியன் டாலர் எனக் கூறிவிட்டு முழு ஆண்டுக்கான பற்றாக்குறை 191 பில்லியன் டாலராக இருக்கும் என்பது தவறு.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.