கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 5 நிமிட வாசிப்பு

ரிசர்வ் வங்கியின் சொற்சித்திரமும் உண்மை நிலையும்

ப.சிதம்பரம்
10 Apr 2023, 5:00 am
0

பொருளாதாரம் தொடர்பான எந்தத் திட்டமிடலாக இருந்தாலும், ஆலோசனையாக இருந்தாலும் அரசு நாடுவது இந்திய ரிசர்வ் வங்கியைத்தான் என்றிருந்தது அந்தக் காலம்; மூடிய கோட்டை போன்ற நிறுவனமாகவும் சாமானியர்களால் எளிதில் நெருங்க முடியாத தனி அமைப்பாகவும் - அதேசமயம் சுதந்திரமானதாகவும் அறிவில் சிறந்த அமைப்பாகவும் இருந்தது. 

வியப்பூட்டுகிற வகையில் சில நிதி மோசடிகள் அதன் கண் பார்வையிலேயே நடந்திருந்தாலும் ரிசர்வ் வங்கியின் புகழானது என்றைக்கும் களங்கமில்லாததாகவே தொடர்கிறது; பங்குச் சந்தைத் தரகர்களும் வங்கி அதிகாரிகளும் இணைந்து மிகப் பெரிய நிதி மோசடியை நிகழ்த்தி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொள்ளையடித்ததை (1992) கண்டுபிடிக்கவோ, தடுக்கவோ முடியாமல் தவறியது ரிசர்வ் வங்கி என்றபோதிலும், கறைபடியாத நிறுவனமாகவே தொடர்கிறது. 

அதன் சமீபத்திய மிகப் பெரிய தோல்வி எதுவென்றால் - சற்றும் பொறுப்பில்லாமல் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற சாகச முடிவை ஒன்றிய அரசு (2016) எடுத்து நிறைவேற்றியபோது அதைத் தடுக்காமல் உடந்தையாக இருந்ததுதான். வட்டி வீதத்தை நிர்ணயிப்பதிலும் ரிசர்வ் வங்கி பல முறை தவறு செய்திருக்கிறது என்றாலும் உலகின் பல நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் செய்துவருவதும் அதற்கு இணையான தவறுகள்தான்.

பொறுப்பு துறப்பு

இவ்வளவுக்குப் பிறகும், இந்திய ரிசர்வ் வங்கியை அறிவு - அனுபவம் ஆகியவற்றின் ஆதிக் கருவூலம் என்றே கருதுகிறேன். அதன் பொருளாதார ஆய்வு – கொள்கைத் துறையும், தரவுகள் ஆய்வு – கணினி சேவைத் துறையும் மிக மிக நம்பத்தகுந்த தகவல் களஞ்சியங்கள் ஆகும். அவ்விரு துறைகளிலும் முதல் தரமான ஆடவரும் பெண்டிரும் பணியாற்றுகின்றனர்; மிகச் சிறப்பாக ஆய்வுகளைச் செய்து வலிமையான – திட்டவட்டமான ஆலோசனைகளை அளிக்கும் அளவுக்கு அவர்கள் திறன் பெற்றவர்கள்.

ரிசர்வ் வங்கி மாதந்தோறும் வெளியிடும் அறிக்கையை ஏராளமானோர் படிக்கின்றனர், வங்கித் துறையைச் சேர்ந்தவர்கள், பொருளாதார நிபுணர்கள், கல்விப்புல அறிஞர்கள், அரசுகளின் கொள்கைகளைத் தீர்மானிப்பவர்கள் என்று அனைவருமே புதிய முடிவுகளை எடுக்க, அதில் வெளியாகும் தரவுகளையும் ஆய்வுத் தகவல்களையுமே பெரிதும் நம்புகின்றனர். அறிவார்ந்த சோம்பல் காரணமாகவோ, புற அழுத்தங்கள் காரணமாகவோ தன்னுடைய தனித்துவமான புகழ் மங்கும்படியாக ரிசர்வ் வங்கி நடந்துகொண்டால் அது பரிதாபகரமான நிலைமைக்கே இட்டுச் செல்லும்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

அச்சத்தில் அரசு

ப.சிதம்பரம் 10 Oct 2022

ரிசர்வ் வங்கியின் மார்ச் 2023 மாதாந்திர வெளியீடு, நாட்டின் பொருளாதார நிலை குறித்து வழக்கம் போல ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. “கட்டுரையில் வெளியாகியிருக்கும் கருத்துகள் இதை எழுதியவர்களுடையதே தவிர, இந்திய ரிசர்வ் வங்கியுடையது அல்ல” என்று பொறுப்பு துறப்பு எச்சரிக்கையையும் அத்துடன் சேர்த்தே பிரசுரித்துள்ளனர். இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஆய்வு - கொள்கைத் துறையைச் சேர்ந்தவர்கள், இப்போது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருக்கும் மைக்கேல் பாத்ராதான் அத்துறையின் தலைவர் என்கிற நிலையிலும் இந்தப் பொறுப்பு துறப்பு எச்சரிக்கை இடம்பெற்றிருக்கிறது.

வார்த்தை ஜாலம்

நாட்டின் பொருளாதாரம் குறித்து நன்கு சிந்தித்து, விதந்தோதுதல் – வெறுத்தல் போன்றவை இல்லாமல் நடுநிலையுடன் ஆராய்ந்து எழுதப்பட்டிருக்க வேண்டிய கட்டுரை வழக்கத்துக்கு மாறாக, நாட்டின் பொருளாதாரம் குறித்து மிதமிஞ்சிய அளவுக்குப் பெருமிதத்தோடு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. அவற்றில் சில:

  • பணவீக்க விகிதம் (விலைவாசி உயர்வு) தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே இருப்பது, இப்படி (பொருளாதாரம்) விரிவடைந்துகொண்டே வருவதன் வலிமையைப் பறைசாற்றுகிறது.
  • தொழிலாளர் சந்தையின் வலிமை வியப்புக்குரியதாக இருக்கிறது, அது பல்வேறு துறைகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்களின் கூட்டு விளைவாகவே இருக்கிறது. பொழுதுபோக்குத் துறை, விருந்தோம்பல் துறை (ஹோட்டல்கள், விடுதிகள் உள்ளிட்டவை), சில்லறை வியாபாரத் துறை, சுகாதார நலத் துறை ஆகியவை அதிக எண்ணிக்கையில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளத் தொடங்கியிருப்பதால், உயர் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்படும் வேலையிழப்பு எண்ணிக்கை இவற்றில் புதிய வேலைவாய்ப்புகள் மூலம் ஈடுசெய்யப்படுகிறது.
  • பெருந்தொற்றுக் காலத்தின் மந்தமான வளர்ச்சியிலிருந்து இந்தியா விடுபட்டு, முன்னர் நினைத்திருந்ததைவிட வலிமையுடன் வளர்கிறது. கடந்த ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டு என்று ஒப்பிடும்போது இது தெரிவதில்லை, காரணம் அவை அதற்கும் முந்தைய ஆண்டை மட்டும் அடிப்படையாகக் கொள்பவை.
  • ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள ரூ.35,000 கோடி வரிச் சலுகையில் பாதியளவு (50%) வரி செலுத்துவோரால் இந்த ஆண்டு நுகர்வுக்கு பயன்படுத்தப்பட்டாலோ, தனிநபர் நுகர்வுச் செலவில் அப்படியே சேர்ந்தாலோ அதன் விளைவு என்னவாக இருக்கும்?
  • அரசின் மூலதனச் செலவுக்காக ஒதுக்கியிருக்கும் ரூ.3.2 லட்சம் கோடியில் மூன்றில் ஒரு பங்காவது உண்மையிலேயே மூலதனச் செலவில் சேர்ந்துகொண்டாலோ அல்லது மொத்த நிரந்தர நிதி முதலீடாக ஆனாலோ என்னவாகும்?
  • உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி வீதத்தைப் போல இந்திய வளர்ச்சி வீதம் குறைந்துவிடாது – 2022-23இல் அடைந்த வேகத்தை அப்படியே பராமரிக்கும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

பணமதிப்பிழப்பு: மூன்று பரிமாணங்கள்

ப.சிதம்பரம் 09 Jan 2023

துணிச்சலான வார்த்தைகள்

இந்திய ரிசர்வ் வங்கியின் மாதாந்திர அறிக்கையில் இடம்பெற்றுள்ள இவை அனைத்தும் உண்மையிலேயே துணிச்சலான வார்த்தைகள்தான். அன்றாட வாழ்வில் நாம் என்ன பார்க்கிறோம், எதைக் கேட்கிறோம், பத்திரிகைகளில் எதைப் படிக்கிறோம் என்ற பின்னணியில் ரிசர்வ் வங்கி அறிக்கையின் வாசகங்களை மிகக் கவனமாக ஆராய்வோம். ரிசர்வ் வங்கி அறிக்கையில் வெளியான உற்சாகப் பெருமிதங்களுக்கு முரணானவை:

  • பணவீக்க விகிதம் (விலைவாசி உயர்வு) தொடர்ந்து உயர் அளவிலேயே இருக்கிறது, தனிநபர் நுகர்வை அது கீழே தள்ளிவிட்டது (குறைத்துவிட்டது).
  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் இதர உயர் தொழில்நுட்பத் துறைகளில் வேலையில்லை என்று கூறி விடுவிக்கப்பட்ட பணிகளும், விருந்தோம்பல் மற்றும் சில்லறை வணிகத்தில் தாற்காலிகமாக அமர்த்தப்படும் பணிகளும் ஒரே தன்மையும் ஊதிய விகிதமும் உள்ளவை அல்ல.
  • ஒவ்வொரு காலாண்டிலும் அல்லது தொடர்ச்சியாக எல்லா காலாண்டுகளிலும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது தொடர்ந்து சரிந்துகொண்டேதான் இருக்கிறது. (அறிக்கையின் 12வது அட்டவணை).
  • அரசு அறிவித்துள்ள வரிச் சலுகையை வரி செலுத்துவோர் நுகராமல், அப்படியே முழுத் தொகையையும் வீட்டுக் கடனுக்குத் திருப்பிச் செலுத்திவிட்டால் நுகர்வு எப்படி உயரும்?
  • மூலதனச் செலவுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள கூடுதல் தொகையை, அது விதிக்கும் கடுமையான நிபந்தனைகளால் செலவழிக்க முடியாத நிலை மாநில அரசுகளுக்கு ஏற்பட்டால் அரசு எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சி எப்படி ஏற்படும்? (2022-23 நிதியாண்டில் அப்படித்தான் நடந்தது).
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையாது என்ற திடுக்கிட வைக்கும் தீர்க்கதரிசன வாக்கு, உலகுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பே இல்லாமல் பிரிந்துவிட்டதைப் போலவே ஒலிக்கிறது!

உண்மை நிலை

வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வெவ்வேறு வர்க்க மக்களை அன்றாடம் நானும் சந்தித்து உரையாடுகிறேன். சமீபத்திய நாள்களில் எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், சிகை அலங்கார நிபுணர், கிராமத் தொகுதிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் மாநகரத் தந்தை, தமிழ் அறிஞர், இலக்கியகர்த்தாக்கள், கட்சித் தொண்டர்கள், நடுத்தரத் தொழில் நிறுவன உரிமையாளர், ஊடகத்துறையினர், பள்ளிக்கூடத் தலைமையாசிரியர், தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர், விருந்தோம்பல் துறையைச் சேர்ந்தவர், இளம் மாணவர்கள் என்று அவர்கள் பல ரகம். அவர்களில் ஒருவர்கூட பொருளாதார நிலை குறித்து திருப்திகரமாகப் பேசவே இல்லை. அவர்கள் அனைவருடைய பெருங்கவலையும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வேலையிழப்புகள், பொருள்களுக்கான தேவை மந்தமாகிவருவது (குறிப்பாக ஏற்றுமதி), குறைந்துவிட்ட நுகர்வு ஆகியவைப் பற்றியதாகவே இருந்தது.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

பொருளாதாரம் எப்போது மீளும்?

ப.சிதம்பரம் 06 Jun 2022

அனைத்து தரப்பினருக்குமான பொதுவான துயர அம்சங்களை நீக்கிய பிறகு எனக்குக் கிடைத்த முடிவு என்னவென்றால், தனிநபர் நுகர்வு என்பது சரிந்துகொண்டே வந்து மிகவும் குறைந்த அளவுக்குக் கீழிறங்கிவிட்டது. அரசின் இறுதி மூலதனச் செலவு உயர்ந்திருந்தாலும் - அரசின் இறுதி நுகர்வு குறைந்துவிட்டது.

ஒரு தொழில் நகரத்தில் 21 அறைகளைக் கொண்ட தங்கும் விடுதியுடன் சேர்ந்த ஹோட்டலுக்கு உரிமையாளரைத் தான் சந்தித்திருந்தேன். அன்றாடம் சரி பாதி எண்ணிக்கை (9-10) அறைகளுக்குத்தான் ஆட்கள் வருகிறார்கள், எஞ்சியவை பூட்டியே கிடக்கின்றன.

இன்னொருவர், நடுத்தரத் தொழில் பிரிவின் உரிமையாளர். ஆடை உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் பாதி செய்து முடிக்கப்பட்ட நிலையில் உள்ள சரக்கைத்தான் அவர் தயாரிக்கிறார். அவரிடம் 60 பேர் வேலை செய்கின்றனர். ஆனால், முழு அளவுக்கு ஆர்டர்கள் இல்லாததால் மாதத்தில் சில நாள்களுக்கு உற்பத்தியை நிறுத்திவைக்கிறார். அந்த அளவுக்கு அவருக்கு ஆர்டர்கள் முழுதாகக் கிடைப்பதில்லை. சர்வதேச பிராண்டு பெயரிலான நிறுவனங்களுக்கே ஆடைகளை ஏற்றுமதி செய்யும் அவருக்குத் தெரிந்த பிரபல நிறுவனம் குறித்தும் சில தகவல்களைத் தெரிவித்தார். வாரத்தில் ஏழு நாள்களும் வேலை செய்யும் அந்த நிறுவனம் இப்போது வாரத்தில் ஐந்து நாள்களுக்குத்தான் வேலை செய்கிறது.

அந்தத் தொழில் நகரத்தில் உற்பத்தி செய்து விற்கப்படாமல் கையிருப்பில் உள்ள சரக்குகளின் மதிப்பு பல நூறு கோடி ரூபாய்களாகும். வெளிநாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு நிறைய தள்ளுபடிச் சலுகைகள் அளித்து, வாங்கிக்கொள்ளும்படி அந்த நிறுவனங்கள் கேட்ட பிறகும் கேட்பு அதிகரிக்கவில்லை. அடுத்த ஆண்டு வரையில் அதிக அளவில் பொருள்களை வாங்கிக்கொள்ள முடியாது என்று தொழில்வள நாடான ஜெர்மனியே திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

பொதுவாகவே, வணிகப் பொருள்களை ஏற்றுமதி செய்வதும் இறக்குமதி செய்வதும் குறைந்துவிட்டது. கடனுக்கு வட்டி அதிகமாக இருக்கிறது, இது மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. நகர்ப்புறங்களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை. அனைத்திந்திய அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் 7.4% ஆக இருக்கிறது.

நீங்கள் எதை நம்ப விரும்புகிறீர்கள்?  

புள்ளிவிவரங்களையும் அலங்கார வார்த்தைகளையும் கலந்து ரிசர்வ் வங்கி தயாரித்துள்ள மாதாந்திர திரிபு அறிக்கையையா அல்லது கண்ணால் கண்டது – காதால் கேட்டது – உள்ளுணர்வால் அறிந்துகொண்டது ஆகியவை தெரிவிக்கும் உண்மையையா?

 

தொடர்புடைய கட்டுரைகள்

அச்சத்தில் அரசு
பணமதிப்பிழப்பு: மூன்று பரிமாணங்கள்
பொருளாதாரம் எப்போது மீளும்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3

1





பெரும்பான்மையியம்பழ. நெடுமாறன்பிராமணர் பிராமணரல்லாதோர்கர்ப்பப்பைக் கட்டிகள்தனிப்பாடல் திரட்டுபா.வெங்கடேசன் சிறுகதைகாங்கிரஸ் வளர்ச்சிவரைவுக் குழு தலைவர்நயன்தாரா விக்னேஷ் சிவன்புதிய தொடக்கம்மிங்ஆட்சிமுறைபழங்குடிகள்எல்லாஎம்.ஜி.ராமச்சந்திரன்வஞ்சிக்கப்படும் மாநிலங்கள்பெரும்பான்மைநிதிநிலை அறிக்கை 2023-24ஜெகன்மோகன்பருவகால மாறுதல்கள்அச்சே தின்பி.சி.ஓ.எஸ்.சிகரெட்நாள்காட்டிபால் சக்கரியாநிதீஷ் குமார்சுந்தர ராமசாமி: தந்தை கூற்றுக் கவிதை1232 கி.மீ. அருஞ்சொல்ஒரு தலைவன்மருத்துவக் கட்டுரைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!