கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

கருத்துரிமை தினம்!

பெருமாள்முருகன்
01 Jul 2023, 5:00 am
1

ன்னால் 2016 ஜூலை 5ஆம் நாளை ஒருபோதும் மறக்க முடியாது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் தொடங்கும் முன்பே அந்நாள் நினைவில் ஓடிக்கொண்டே இருக்கும். 2014 டிசம்பரில் தொடங்கிய ‘மாதொருபாகன்’ நாவல் தொடர்பான சர்ச்சையை, எதிர்ப்புப் போராட்டங்களைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் கண்டு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திய நிர்ப்பந்தம் காரணமாக ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது.

அந்த ப்பந்தம் செல்லாது என அறிவிக்கக் கோரித் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க’த்தின் சார்பில் அதன் அப்போதைய தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தொடுத்த வழக்கின் தீர்ப்பைச் சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட நாள் 2016 ஜூலை 5. சென்னை உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், புஷ்பா சத்திய நாராயணா ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. 

கைவிட்ட ஊடகங்கள்

நாவலுக்கு எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்த நாட்களில் ஊடகங்கள் இடைவிடாமல் செய்திகளைப் பரபரப்பாக வெளியிட்டன. கருத்துரிமை தொடர்பான கட்டுரைகள், விவாதங்கள் எனத் தொடர்ந்து செயல்பட்டன. ஆனால், தீர்ப்பு வெளியானபோது அது மிகச் சிறிய செய்தியானது. அச்சு ஊடகங்கள் பலவற்றில் அது செய்தி மதிப்பையும் பெறவில்லை. சமூக ஊடகங்களில் எந்தவிதப் பரபரப்பும் இல்லை. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், பத்திரிகையாளர் எம்.மணி ஆகியோர் தீர்ப்பை வரவேற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் கட்டுரைகள் எழுதினர். தீர்ப்பை எதிர்த்து எஸ்.குருமூர்த்தி எழுதினார்; பேசினார். ஆங்கிலத்தில் சில குறிப்பிடத்தக்க கட்டுரைகள் வெளியாகின. 

இவை போதுமானவை அல்ல. கருத்துரிமையின் பல கூறுகளை எடுத்து விவாதித்து, ‘மாதொருபாகன்’ பிரச்சினையை எல்லாக் கோணத்தில் இருந்தும் ஆராய்ந்து மிக விரிவாக வழங்கிய தீர்ப்பு அது. அதன் ஆங்கில மூல வடிவம் இணையத்தில் பிடிஎப் வடிவில் உடனே கிடைத்தது. தீர்ப்பை முழுமையாகத் தமிழில் வீ.பா.கணேசன் மொழிபெயர்த்தார். ‘வழக்கு எண் 1215/2015, மாதொருபாகன் வழக்குத் தீர்ப்புரை’ என்னும் தலைப்பில் அதைப் பாரதி புத்தகாலயம் டிசம்பர் 2016லேயே நூலாக்கியது.

எனினும் அத்தீர்ப்பு தொடர்பான கவனம் எழுத்துலகில், கலையுலகில் கூடவில்லை. கருத்துரிமைப் பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டுள்ள சூழலில் அவற்றை அணுகுவதற்கு ஏற்ற பல தெளிவுகள், வழிமுறைகள் இத்தீர்ப்பில் உள்ளன. எடுத்துப் பேசுவதற்கான பல்வேறு கோணங்களைத் தீர்ப்பு கொடுக்கிறது. மேலும் விவாதிப்பதற்கான, விமர்சிப்பதற்கான பகுதிகளும் தீர்ப்பில் உள்ளன. 

சட்டம் ஒழுங்கு எனும் கடிவாளம்

எழுத்திலக்கியத்திற்கோ கலைப் படைப்புக்கோ எதிர்ப்பு ஏற்படும்போது அதை அரசு நிர்வாகம் எப்படிக் கையாள்கிறது? உள்ளாட்சி நிர்வாகத்தைப் பொருத்தவரை தொழிலாளர் போராட்டம், மாணவர் போராட்டம், அரசு ஊழியர் போராட்டம், அரசியல் கட்சிகளின் போராட்டம் உள்ளிட்ட எந்தவகைப் போராட்டமாக இருந்தாலும் சரி அதன் கோரிக்கைகள், நியாயம் ஆகியவற்றைப் பற்றிக் கவனம் கொள்வதில்லை. அதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மட்டுமே நிர்வாகம் கவனம் செலுத்தும். போராட்டக்காரர்களிடம் காவல் துறை பேச்சுவார்த்தை நடத்தும். அதன் நோக்கம் போராட்டத்தைக் கலைப்பதே ஆகும். “மனு எழுதிக் கொடுங்கள்; உரிய ஏற்பாடு செய்கிறோம்” என்று காவல் துறையினர் சொல்வார்கள். 

அதை நம்பாமல் போராட்டம் தொடருமானால் நிர்வாக அதிகாரிகளில் ஒருசிலர் வருவார்கள். பேச்சு வார்த்தை நடக்கும். ஒவ்வொரு நிலையிலும் பேசிப் பார்ப்பார்கள். எல்லோருக்கும் ஒரே நோக்கம் போராட்டத்தை உடனடியாகக் கலைத்துவிட வேண்டும் என்பதுதான். அது நடக்காதபோது என்ன நடவடிக்கை எடுத்தால் போராட்டத்தை நிறுத்த முடியும் என்று சிந்திப்பார்கள். போராட்டம் ஒரு தனிநபரைக் குறி வைத்திருக்குமானால், அவர் சாதாரண மனிதர் என்றால் அவர் மேல் நடவடிக்கை மேற்கொள்வது எளிது; உடனே நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வார்கள். அந்தத் தனிநபர் பக்கம் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி உள்ளாட்சி நிர்வாகத்திற்குக் கவலையில்லை. கூட்டம் சேரக் கூடாது; முழக்கம் ஒலிக்கக் கூடாது. முக்கியமாகச் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படவே கூடாது. இதுதான் ஜனநாயக வழிப் போராட்டத்தை உள்ளாட்சி நிர்வாகம் கையாளும் முறை. 

‘மாதொருபாகன்’ எதிர்ப்புப் போராட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் இந்த வழிமுறையையே கையாண்டது. எதிர்ப்பாளர்களிடம் பேசிப் பேசிப் பார்த்தது. ஒன்றும் நடக்கவில்லை. போராட்டத்தின் அரசியல் பின்னணி வலுவானது என்பதும் நிர்வாகத்திற்குத் தெரிந்திருந்தது. எதிர்ப்பக்கம் இருப்பவர் ஒரே ஒருவர்; தனிநபர். அவர் எழுத்தாளர் என்பதும் கருத்துரிமை சார்ந்த பிரச்சினை இது என்பதும் கருத்துரிமைக்கு ஆதரவுக் குரல் எல்லாத் தரப்பிலிருந்தும் உருவாகியுள்ளது என்பதும் மாவட்ட நிர்வாகத்திற்கு இரண்டாம் பட்சமாகவே இருந்தன.

சம்பந்தப்பட்ட ஊரில் எரிப்பு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம், கூட்டம், கடையடைப்பு எனத் தொடர்ந்து சட்டம் ஒழுங்குக்குப் பிரச்சினை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது, அதை நிறுத்த வேண்டும் என்பதே ஒரே நோக்கம். ஆட்சியதிகாரத்தின் உயர்நிலையில் இருந்தும் அதற்கான அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கக்கூடும். ஜனநாயகத்தில் தனிமனித உரிமை பற்றிய கவனம் நிர்வாகத்திற்கு இருப்பதே இல்லை. ‘சட்டம் ஒழுங்கு’ என்னும் கடிவாளப் பார்வை மட்டும்தான் செயல்படும். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நீதிமன்றமே நல்லது

பெருமாள்முருகன் 13 May 2023

என்ன சொல்கிறது தீர்ப்பு?

வழக்கில் மாவட்ட நிர்வாகம் இதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டது என்பது முக்கியம். இதைக் கண்ட நீதிபதிகள் தீர்ப்பில் தம் வியப்பைத் தெரிவித்தனர். “…நகர மக்கள் கொதித்துப் போயிருந்த நிலையில் நூலாசிரியரின் உணர்வுகள் என்ற அம்சத்தைப் பொருத்தவரையில் அந்தச் சமயத்தில் எதையும் செய்ய முடியாத சூழ்நிலையே நிலவியது என வியக்கத்தக்க வகையில் (மாவட்ட நிர்வாகம்) தெரிவித்திருந்தது” (ப.56) என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அப்படியானால் மாவட்ட நிர்வாகம் ஒருபக்கச் சார்பாக நடந்துகொண்டது என்பது அதன் கூற்று வாயிலாகவே நிரூபணமாயிற்று. எல்லாவற்றையும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகவே காணும் மாவட்ட நிர்வாகத்தின் பார்வை சரியல்ல என்பதைத் தீர்ப்பு விரிவாக விவாதத்தின் மூலம் சுட்டிக்காட்டியது. அதன் ஒருபகுதி இது:

“…நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அரசு முயற்சி செய்யலாம்; ஆனால் அதற்காக நூலாசிரியர்கள், கலைஞர்கள், இதில் எந்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருப்பினும் சுற்றியிருக்கும் சூழ்நிலையின் காரணமாக அவர்களின் கருத்துரிமையின் மீது நெருக்கடி தருவதை அது அனுமதிக்கக் கூடாது. மாறாக, கருத்துரிமையை வேறு வழிகளில் காப்பதற்கான முயற்சி செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே, இத்தகைய முயற்சிகள், மாறுபட்ட பழக்க வழக்கங்களைக் கொண்ட வேறொரு பிரிவினரின் கண்ணோட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இத்தகைய முயற்சிகள் தீங்கிழைக்கும் ஒரு நடவடிக்கையாக முடிந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கை நிரம்பிய கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற தேவையும் உள்ளது” (ப.150).

“கருத்துரிமையை வேறு வழிகளில் காப்பதற்கான முயற்சி’கள் எவை? அந்தத் துறை சார்ந்த நிபுணர்களிடம் விட்டுவிட ஏற்பாடு செய்வது ஒரு வழிமுறை எனவும் தேவைப்பட்டால் நீதிமன்றத்திடம் விட்டுவிடுவது இன்னொரு வழி எனவும் தீர்ப்பில் இருவழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அதற்கு அதிகாரிகளுக்குக் கருத்துரிமை தொடர்பான புரிதல்கள் அவசியம். அவ்வகையில் பதிப்பாளர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் வி.சுரேஷ் முன்வைத்த வழிமுறைகள் சிலவற்றை நீதிமன்றம் முக்கியமானது எனக் கருதியது. அவற்றில் ஒன்று: கலை இலக்கியம் ஆகியவற்றை ரசிப்பதில் உருவாகும் இத்தகைய மோதல்களைக் கையாளும் விஷயங்களில் அதிகாரிகளுக்கு முறையான புரிதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்” (ப.151). 

கருத்துரிமைச் சிக்கல்

கருத்துரிமை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் தருணத்தில் அவற்றைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் காணக் கூடாது என்பதில் அரசுக்கும் அரசு சார்ந்த நிர்வாகத்திற்கும் இத்தீர்ப்பு வழிகாட்டியுள்ளது. இது கருத்துரிமை ஆதரவாளர்கள் முக்கியமாகக் கருத வேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன். ப.விடுதலை சிகப்பி எழுதிய கவிதை தொடர்பான விஷயத்தில் தொடக்கத்திலேயே பிரச்சினை நீதிமன்றத்திடம் சென்றதை இவ்வகையில் சரியானது என்று கருதுகிறேன். நீதிமன்றத்தின் மேல் எந்த அளவு நம்பிக்கை கொள்ளலாம் என்னும் கேள்வி இருந்தபோதும் இந்நடவடிக்கை காரணமாகச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை தவிர்க்கப்பட்டு உடனடியாகத் தனிநபர் பாதுகாக்கப்பட்டார் என்பது முக்கியம்.

அதேபோன்று ‘மாதொருபாகன் வழக்குத் தீர்ப்புரை’ கருத்துரிமைப் பிரச்சினையில் வாசகர்களுக்கு உரிய உரிமைகள் பற்றியும் அவற்றை அவர்கள் பயன்படுத்தும் தேவை பற்றியும் குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது. கருத்துரிமை என்றதும் எழுத்தாளர், கலைஞர்கள் தரப்பிலிருந்து மட்டும் பேசுகிறோம். இதில் வாசகர் உரிமையும் முக்கியமான பங்கு வகிக்கிறது.

அதை வலியுறுத்துவது கருத்துரிமைப் பாதுகாப்பிற்கு அரண் ஆகும். “ஒரு புத்தகத்தால் நீங்கள் பாதிப்படையாமல் இருப்பது மிகமிக எளிது. அதற்காக நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை அதை மூடி வைப்பதுதான்” என்னும் சல்மான் ருஷ்டியின் கூற்றை மேற்கோள் காட்டும் தீர்ப்பு ‘அதுதான் இதற்கான தீர்வாக இருக்குமா?’ என்று கேள்வி (ப.19) எழுப்புகிறது. மேற்கொண்டு வாசகர் சுதந்திரம் பற்றிப் பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள் காட்டி விவாதிக்கும் பகுதிகள் இத்தீர்ப்பில் ஆங்காங்கே உள்ளன. 

படைப்பும் வாசிப்பும்

ஒருவரது பார்வையை மட்டும் கணக்கிலெடுத்து விஷயத்தைத் தீர்மானிக்கக் கூடாது என்பதைத் தீர்ப்பு வலியுறுத்துகிறது. பெரும்பாலும் ஒருவருடைய வாசிப்பிலிருந்தே பிரச்சினை தொடங்குகிறது. தம் வாசிப்பைப் பொதுவானதாக ஒருவர் மாற்றுவதற்கு ஏதுவான சூழல் இங்கே நிலவுகிறது. சுயபார்வை இல்லாத, வாசிப்புத் திறனற்ற கும்பல் ஒன்றை ஒருவரது வாசிப்பு சார்ந்தே திரட்டிவிட இயல்கிறது. அவ்வாசிப்பு வெகுஜன மதிப்பீடுகளுக்கு இசைவாக இருந்தால் போதும். கும்பல் எளிதில் கூடிவிடும். தீர்ப்பு இதைச் சரியாகக் கணக்கில் கொண்டுள்ளது. 

“அழகும் கலைத்தன்மையும் நிறைந்த ஒரு படைப்பிலும்கூட ஆபாசத்தை மட்டுமே காண முயல்கின்ற ஒரு மனிதரின் பார்வையிலிருந்தல்ல; ஏனெனில் அவரது கவனம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தோடு அப்படியே சிறைப்பட்டு நின்றுவிடுகிறது” (ப.81) என்று தீர்ப்பு கூறுகிறது. அதாவது ஒரு படைப்பை முழுமைப் பார்வையில் காண வேண்டும் என்கிறது. ஒவ்வொரு வாசகருக்கும் படைப்பின் ஏதேனும் ஒருபகுதி பிடிக்காமல் இருக்கலாம். அதை ஆபாசம் என்றோ சமூகத்திற்கு எதிரானது என்றோ யாரையோ இழிவுபடுத்துகிறது என்றோ கருதலாம். அதற்காக ஒட்டுமொத்தப் படைப்பும் மோசமானது என்று முடிவெடுக்கக் கூடாது. வாசகர்கள் ஒரு படைப்பை எவ்வாறு காண வேண்டும்? “நூலாசிரியர் உண்மையிலேயே என்ன சொல்ல வருகிறார் என்பதை உணர்ந்துகொள்ள அந்தப் படைப்பாளியின் நிலையில் தன்னை முதலில் இருத்திக்கொள்ள வேண்டும்” என்றும் “இந்தப் புத்தகம் சென்றடைய வாய்ப்புள்ள ஒவ்வொரு பிரிவையும் சேர்ந்த வாசகரின் நிலையில் தன்னை இருத்திக்கொண்டு விருப்பு வெறுப்பற்ற ஒரு முடிவுக்கு வர வேண்டும்” என்றும் (ப.81) தீர்ப்பு வாசிப்பு முறைகள் பற்றி எடுத்துக் கூறுகிறது.  

இன்னோரிடத்தில் “என்ன இருந்தாலும் புத்தகத்தை அல்லது திரைப்படத்தைப் படித்தே, பார்த்தே ஆக வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அது பார்வையாளரின், வாசகரின் உணர்வுப்பூர்வமான ஒரு தேர்வாகும்” (ப.142) என்கிறது. வாசிப்பு முறைகள் குறித்துப் பேசும் தீர்ப்பு வாசகர் சுதந்திரம் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறது. 

தமக்குள்ள உரிமை, சுதந்திரத்தைப் பெரும்பாலான வாசகர்கள் பயன்படுத்திக்கொண்டுதான் உள்ளனர். 'இந்தப் புத்தகத்தை நான்கு பக்கம்கூடப் படிக்க முடியவில்லை', 'பாதிக்கு மேல நகரவேயில்லை' என்றெல்லாம் வாசிப்புப் பழக்கம் உடையோர் சொல்வது சாதாரணம். மேலும் எந்த ஒரு நூலிலும் ஒரு வாசகருக்குப் பிடிக்காத பகுதிகள் இருக்கச் சாத்தியம் அதிகம். அதைக் கொண்டு வாசகர் தம் மதிப்பீட்டைச் செய்வதில்லை. ஒட்டுமொத்தப் படைப்பைக் கருத்தில் கொண்டே அதை மதிப்பிடுகின்றனர். அதனால்தான் பெரும்பாலான படைப்புகள் சார்ந்து பிரச்சினை எழுவதில்லை. 

அறிவிக்குமா தமிழ்நாடு அரசு?

ஒரு படைப்பின் மீது பிரச்சினை எழும் சமயத்தில் அது ஒரு வாசகப் பார்வை எனக் கொள்ள வேண்டும் என்பதைத் தீர்ப்பு சொல்கிறது. அது எத்தகைய வாசகப் பார்வை என்பதை எச்சரிக்கையுடன் தீர்மானிக்க வேண்டும் எனத் தெளிவுபடுத்துகிறது. “ஒரு படைப்பை மதிப்பீடு செய்வதற்கான சோதனை என்பது நடைமுறை அறிவுடன், கவனத்தோடு நடக்கின்ற சாதாரண மனிதனுடையதைப் போன்றதாக இருக்க வேண்டுமே தவிர, 'வழக்கத்திற்கு மாறான அல்லது உணர்ச்சிப் பிழம்பான ஒரு மனிதனை அடிப்படையாகக் கொண்டதாக' இருக்கக் கூடாது” (ப.85) என அற்புதமான அளவுகோலில் தருகிறது தீர்ப்பு. 

எல்லாத் தரப்புக்கும் குறிப்பாகப் பிரச்சினை உருவாக்கும் தரப்புக்கு வாசகச் சுதந்திரம் பற்றிய தீர்ப்பின் இப்பகுதிகளைக் கொண்டு செல்ல வேண்டும். கருத்துரிமை விழிப்புணர்வுப் பரப்புரைக்கு இது மிகவும் பயன்படும். 

கருத்துரிமை தொடர்பான புரிதலுக்கு இவ்வாறு தர்க்கரீதியான கருத்துத் தரவுகள் பலவற்றைக் கொண்டுள்ள இத்தீர்ப்பு வெளியான ஜூலை 5ஆம் நாளை ‘கருத்துரிமை தினம்’ என அனுசரிக்க விரும்புகிறேன். இந்நாளில் கருத்துரிமை தொடர்பான கருத்தரங்குகள் நடத்தலாம்; பேசலாம்; எழுதலாம்; விவாதிக்கலாம். தமிழ்நாடு அரசு மனம் வைத்தால் ‘கருத்துரிமை தினம்’ அறிவிக்கலாம். ஏழை சொல் அம்பலம் ஏறுமா? 

பயன்பட்ட நூல்: 

வீ.பா.கணேசன் (மொ.ஆ.), வழக்கு எண் 1215/2015, மாதொருபாகன் வழக்குத் தீர்ப்புரை, 2016, சென்னை, பாரதி புத்தகாலயம். 

 

தொடர்புடைய கட்டுரைகள்

நீதிமன்றமே நல்லது
கருத்துச் சுதந்திரத்தை அணுக இரு பாதைகள் இல்லை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

R.Sisubalan   1 year ago

கருத்துரிமை சார்ந்த இக்கட்டுரை எழுத்தாளர் பெருமாள் முருகன் சந்தித்த பிரச்சனை மட்டுமல்ல. இத்தகைய பிரச்சனைகளை சந்தித்த அனைவருக்கும் பொதுவானது. எனவே கருத்துரிமை தின கோரிக்கையை வழிமொழிகிறேன்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

குற்றச்சாட்டுகள்சோபர்ஸுக்குப் பிறகு ஆல்-ரவுண்டர் யார்?காந்தியர்கள்கனவு விமானம்நிதிச் சீர்திருத்தம்மூன்றாவது மக்களவைத் தேர்தல்மிஸோ தேசிய முன்னணிகே.ஆர்.விக்னேஷ் கார்த்திக் கட்டுரைகேள்வி நீங்கள் - பதில் சமஸ்உயிர்மை நேயமே நம் சிந்தனை மரபுசண்முகம் செட்டிஇசைத்தட்டுகள்நியூயார்க்அருஞ்சொல் வாசகர்கள்நவ்ஜோத் சிங் சித்துஏகாதிபத்தியம்ஈரோடு இடைத்தேர்தல்ராணுவம்இதய வெளியுறைமத்திய மாநில உறவுகலோரிபுறக்கணிப்புஓய்வு வயதுசாப்பாட்டுப் புராணம் புரோட்டாஅமித் ஷா காஷ்மீர் பயணம்தர்மம்மனைவி எனும் சர்வாதிகாரிவிக்கிப்பீடியாஆதிக்கச் சாதிசாமானியர்களின் நண்பர் மது தண்டவடே

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!