கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

நீதிமன்றமே நல்லது

பெருமாள்முருகன்
13 May 2023, 5:00 am
5

விஞர் விடுதலை சிகப்பி, 2023 ஏப்ரல் 30 அன்று ‘நீலம் பண்பாட்டு மையம்’ நடத்திய இலக்கிய நிகழ்வில் வாசித்த ‘மலக்குழி மரணம்’ என்னும் கவிதை இந்து மதக் கடவுளர்களை இழிவுபடுத்துகிறது எனக் கூறி ‘பாரத் இந்து முன்னணி’ என்னும் அமைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் விடுதலை சிகப்பி மீது ஐந்து சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் தம்மைக் கைதுசெய்யாமல் இருப்பதற்காக முன்பிணை பற்றுள்ளார். பல்வேறு இலக்கிய அமைப்புகளும் எழுத்தாளர்கள், கலைஞர்களும் கருத்துரிமைக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். புகார் கொடுத்துள்ள இந்துத்துவ அமைப்புக்கும் வழக்குப் பதிவுசெய்துள்ள காவல் துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

நானும் மாதொருபாகனும்

கருத்துரிமை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்போது இவ்வாறு கூட்டுக் குரல்கள் ஒலிப்பது அவசியம். சில படைப்பாளர்கள் “இது நல்ல கவிதை இல்லை” என்று சொல்லிவிட்டு ஆனாலும் கவிஞருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம், கருத்துரிமையின் பக்கம் நிற்கிறோம் என்று சொல்கிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கவிதைத் திறனாய்வுக்குள் இறங்க வேண்டியதில்லை. அது எதிர்த் தரப்புக்கே சாதகமாகும். மாதொருபாகன் பிரச்சினையின் போதும் “இது நல்ல நாவல் இல்லை, என்றாலும் கருத்துரிமையின் பக்கம் நிற்கிறோம்” என்றோர் உண்டு. நாவலைப் பற்றி அந்தச் சமயத்தில் எதிர்மறையாக விமர்சித்து எழுதியவர்களும் உண்டு. “எழுத்தாளர்களே இது நல்ல நாவல் இல்லை என்றுதான் சொல்கிறார்கள்” என்னும் வாதத்தை எதிர்த்தரப்பு வைத்து தம்மை நியாயப்படுத்திக்கொள்ள அது உதவியது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதானக் கூட்டத்தில் அப்படி ஒரு குரல் எழுந்தது. “அது இலக்கியவாதிகளுக்கு இடையே இருக்கும் சர்ச்சை. அதை இப்போது பேச வேண்டியதில்லை” என்று என்னுடன் வந்த வழக்கறிஞர் சுவாமிநாதன் பதில் கொடுத்தார். “இல்லை, அந்தத் துறை சார்ந்தவர்களே அதை நாவல் என்று ஏற்றுக்கொள்ளவில்லையே” என்று விவாதம் தொடரும் நிலை ஏற்பட்டது. அதைக் கடந்து செல்லச் சில நிமிடங்கள் தேவைப்பட்டது. ஆனால், என்ன செய்வது?  சில படைப்பாளர்கள் எந்தச் சூழலிலும் இலக்கியத்தை மாசு மருவில்லாமல் காப்பாற்ற முனைகிறார்கள். அவர்களால்தான் இலக்கியம் வாழ்கிறது. இருக்கட்டும், நல்லது. அவர்களின் ஆதரவையும் சாதகமாகவே எடுத்துக்கொள்வோம். 

‘மாதொருபாகன்’ பிரச்சினை தொடர்பான வழக்குத் தீர்ப்பு “எழுத்து என்பது தனிப்பட்ட வெளிப்பாடுகளுக்கான ஒரு கருவியாகும். எரிச்சலூட்டக்கூடியதாக அவை இருந்தாலும்கூட நமது செறிவான கலாச்சாரப் பாரம்பரியம் என்ற பின்னணியை மனதில் கொண்டு அவை புரிந்துகொள்ளப்பட வேண்டும்” (ப.154, 155) என்று கூறியுள்ளது. நமது செறிவான கலாச்சாரப் பாரம்பரியத்தில் கடவுளர்களைக் கேலிசெய்தல், கேள்வி கேட்டல், தொன்மமாகப் பயன்படுத்தல் என்பவை தொடர்ந்து வருபவை. காளமேகப் புலவர், அவ்வையார், இரட்டைப் புலவர் உள்ளிட்ட பல புலவர்கள் பாடிய பாடல்கள் இதற்குச் சான்றுகளாக உள்ளன. 

பாடல்களின் சான்றுகள்

திருவிழாவின்போது கருட வாகனத்தில் உற்சவம் செல்லும் பெருமாளைப் பார்த்து “பெருமாள் இருந்த இடத்தில் சும்மா இராமையினால் ஐயோ பருந்தெடுத்துப் போகிறதே பார்” என்று காளமேகப் புலவர் பெருமாளைக் கேலிசெய்கிறார். சும்மா இராமல் பெருமாள் ஏதோ சேட்டை செய்த காரணத்தால் பருந்து அவரைத் தூக்கிச் செல்கிறதாம். என்ன சேட்டை செய்திருப்பார்? நம் ஊகத்திற்கே விட்டுவிட்டார் புலவர். அதேபோலச் சிவபெருமான் உற்சவத்தைப் பார்த்து ‘நச்சரவம் பூண்ட தில்லை நாதரே, தேவரீர்’ என்று விளித்து “பிச்சை எடுத்துண்ணப் புறப்பட்டுச் செல்லும் போது மேள முழக்கங்களும் பரிவாரங்களும் எதற்காக?” என்று ஏளனம் செய்கிறார். 

சிவபெருமான் மனைவியாகிய அங்கயற்கண்ணியின் வாகனம் அன்னப் பறவை. அவ்வாகனத்தில் உற்சவம் செல்வதைக் கண்டு “கணவனாகிய மதுராபுரிச் சொக்கநாதர் பித்தேறினார் என்று அன்னம் இறங்காமல் அலைகின்றாள் அங்கயற்கண்ணி” என்கிறார் புலவர். “வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ எலியிழுத்துப் போகின்றது” என்று பிள்ளையார் உற்சவத்தைக் கேலிசெய்கிறார். திருவிழாவில் கடவுள்கள் உற்சவம் செல்லும் காட்சிகளைக் கண்டு இவ்வாறு அவர் எழுதிய பாடல்களை வாசிக்கும்போது ஒரு மெல்லிய சிரிப்பேனும் வராமல் இருக்காது. 

இன்னொரு பாடல்:

அப்பன் இரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பரிய மாமன் உறிதிருடி – சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத் தானுக்கிங்கு
எண்ணும் பெருமை இவை. 

ஆறுமுகக் கடவுளாகிய முருகனின் அப்பன் பிச்சைக்காரன்; ஆத்தாள் மலைநீலி; மாமனாகிய திருமால் உறிதிருடி; அண்ணனோ சப்பைக்காலும் பெருவயிறும் கொண்டவன். இதுதான் முருகனுக்குரிய பெருமைகளாம். திருமாலைத் திருடன் என்றும் பிள்ளையாரை சப்பைக்கால் பெருவயிறன் என்றும் சரமாரியாகத் திட்டுகிறார் காளமேகப் புலவர். “குதிரை விற்க வந்தவனோடு கூடிப் பிள்ளையாரைப் பெற்றெடுத்தாள் மதுரை மீனாட்சி” என்று ஒருபாடல் சொல்கிறது. குதிரை விற்க வந்தவன் வேறு யாருமல்ல, சிவபெருமான்தான். ‘தங்கைக்கு மேலே நெருப்பை இட்டார்; அக்காளை ஏறினாராம்’ என்று சிவபெருமானைக் குறிப்பிடுகிறது இன்னொரு பாடல். ‘என்னது, அக்காளை ஏறினாரா?’ என்று எவரும் அதிர்ந்துபோக வேண்டாம். அக் + காளை – அந்தக் காளை வாகனத்தில் ஏறி ஊர்வலம் சென்றார் என்று அர்த்தமாம். கடவுளைப் புலவர் என்ன பாடுபடுத்தியிருக்கிறார் பாருங்கள்.

தர்க்கம் அற்ற கேள்விகள்

கடவுளர்களைக் கேலிசெய்தும் இகழ்ந்தும் கோபித்தும் வசையாகவும் பாடுவது தமிழ் இலக்கிய மரபு. தனிப்பாடல்களில் பல பாடல்கள் இவ்விதம் உள்ளன.  சைவ வைணவக் கடவுளர்களைப் பற்றிய புராணக் கதைகள் இப்படியெல்லாம் பாடுவதற்கு வழிவகுத்துள்ளன. இவற்றை யாரும் ‘கடவுளை இழிவுபடுத்துகிறது’, ‘எங்கள் மனம் புண்பட்டுவிட்டது’ என்று சொல்லித் தூக்கி எறிந்துவிடவில்லை. மாறாகப் போற்றிச் சுவைத்து அடுத்தடுத்த காலத்திற்கு எடுத்துவந்து சேர்த்துள்ளனர். இப்பாடல்களுக்குச் சுவையாகப் பொருள் எழுதியுள்ளனர். கற்றலைச் சுவையாக்க இப்பாடல்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

“இந்து மதக் கடவுள்களைப் பேசுவது போலப் பிற மதக் கடவுள்களைப் பேச முடியுமா?” என்னும் கேள்வியைத் திரும்பத் திரும்ப முன்வைக்கின்றனர். இது தர்க்கமற்ற கேள்வி. இந்துக் கடவுள்களை இவ்வாறு உரிமையோடு பேசுவதற்கு நம் இலக்கிய மரபு இடம் கொடுத்துள்ளது. கடவுள்களை இகழ்ந்து பேசுவதை ‘நிந்தாஸ்துதி’ என்று நம் பக்தி மரபும் ஏற்றுக்கொள்கிறது. நிந்தாஸ்துதி என்பதற்கு ‘இகழ்வது போலப் புகழ்தல்’ என்பது தமிழ் லெக்சிகன் கூறும் அகராதிப் பொருள். நிந்தித்தலையும் (இகழ்தல்) ஒருவகைத் துதியாக ஏற்றுக்கொள்வது நம் பக்தி மரபு. ஆகவே, அதைப் பின்பற்றி கடவுள்களை இகழ்ந்து எழுதும் இலக்கிய மரபும் உருவாகியுள்ளது. மூவர் தேவாரத்திலேயே நிந்தாஸ்துதி உள்ளது என்றும் குறிப்பாகச் சுந்தரர் இவ்வகைப் பாடல்களைப் பாடியுள்ளார் என்றும் தனிப்பாடல்களை ஆய்வுசெய்த தமிழன்பன் எழுதியுள்ளார்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

தனிப்பாடல் எனும் தூண்டில் புழு

பெருமாள்முருகன் 04 Mar 2023

இம்மரபு நவீன கவிதைகளிலும் எழுத்துக்களிலும் தொடர்ந்துவருகிறது. ‘அணில் முதுகில் விரல் பட்டதும் மூன்று கோடுகள் விழுந்தன என்றால் சீதையை இராமன் தொட்டதே இல்லையா?’ (கவிதை வரிகளை நினைவிலிருந்து எழுதுகிறேன்) என்று கேட்டுக் கவிதை எழுதியவர் நீலமணி. புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ கதையில் இராமனை ‘அவன் சொன்னானா?’ என ஒருமையில் கோபத்துடன் அகலிகை பேசுகிறாள். குறியீடாகவும் உருவகமாகவும் இந்துக் கடவுளர்களையும் கதைகளையும் நவீன இலக்கியம் பயன்படுத்திக்கொண்டுள்ளது. இந்த மரபில் வைத்தே விடுதலை சிகப்பியின் கவிதையையும் காண வேண்டும்.  

மகிமைப்படுத்திய கவிதை

இத்தனை காலம் மலக்குழிகள் பற்றி நம் இலக்கியம் பேசியதில்லை. இப்போது பேசக் காலம் கனிந்திருக்கிறது. சிவபெருமான் பிச்சாடனர், வெட்டியான், மீனவர், கூலியாள் என்றெல்லாம் வேடம் புனைந்து பல திருவிளையாடல்களை நிகழ்த்தியவர். திருமால் எடுத்த அவதாரங்கள் அநேகம். மீனாகவும் பன்றியாகவும் ஆமையாகவும் அவதரித்துள்ளார். இப்போது ஒரு கவிஞர் மூலமாக மலக்குழி சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளராகியுள்ளார். தூய்மைப் பணியாளர்களைத் தெய்வங்கள் என்றும் வணங்கத் தக்கவர்கள் என்றும்தானே நம் தலைவர்கள் சொல்கின்றனர். அப்படியானால் கடவுளுக்கு என்ன இழிவு? விடுதலை சிகப்பியின் கவிதை கடவுளை மகிமைப்படுத்தியல்லவா இருக்கிறது?

கவிஞர் மீது புகார் அளித்திருப்போர் நம் இலக்கிய மரபு, பக்தி மரபு பற்றிய புரிதல் இல்லாதவர்கள், மத அடிப்படைவாத அரசியலை முன்னெடுப்பவர்கள்தான். சூழலில் தம் அரசியலைப் பரப்பவும் அழுந்தப் பதிக்கவும் இப்படியெல்லாம் செய்வார்கள். அவர்களுக்கு இலக்கிய மரபை எல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது. அந்தப் புரிதலை எல்லாம் கடந்து அரசியல் செய்பவர்கள் அவர்கள். புகாரை ஏற்றுக் காவல் துறை வழக்குப் பதிவுசெய்திருக்கிறது. காவல் துறையும் அரசும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்கே முக்கியத்துவம் தருவார்கள். 

கருத்துரிமையா சட்டம் ஒழுங்கா என்றால் சட்டம் ஒழுங்கின் பக்கமே அரசு நிற்கும். கலை இலக்கியம் சார்ந்த கருத்துரிமைப் பிரச்சினைகள் ஏற்படும்போது அதைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் பார்க்கக் கூடாது; பிரச்சினை ஏற்படுமானால் அதைக் கட்டுப்படுத்துவது அரசின் கடமை. அதைவிடத் தனிநபர் கருத்துரிமை முக்கியம் என ‘மாதொருபாகன்’ வழக்குத் தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்கிறது. காவல் துறையினருக்குக் கருத்துரிமை தொடர்பாகப் பயிலரங்குகள் நடத்த வேண்டும் எனவும் அத்தீர்ப்பு பரிந்துரை செய்திருந்தது. இவையெல்லாம் நடைமுறைக்கு வரவில்லை. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சாதி நோய்க்கு அருமருந்து

பெருமாள்முருகன் 15 Apr 2023

அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுதல்

மத அடிப்படைவாதிகள் தம் புகார் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எடுக்கச் சொல்லி நிர்ப்பந்தம் கொடுக்கப் பலவிதமான முறைகளைக் கையாள்வார்கள். எழுத்தாளரை மன்னிப்புக் கேட்கச் சொல்லி எச்சரிப்பதோடு மிரட்டவும் செய்வார்கள். நடவடிக்கை எடுக்கச் சொல்லி அரசை நிர்ப்பந்திப்பார்கள். அதற்கு ஊர்வலம், ஆர்ப்பாட்டம் முதலிய வழிமுறைகளைக் கையாள்வார்கள். இவையெல்லாம் ஜனநாயக முறையிலான போராட்ட வடிவங்கள்தான் எனினும் அடிப்படைவாதிகள் இவற்றைக் கையாளும் முறையே வேறாக இருக்கும். எழுத்தாளரையும் அவர் சார்ந்தவர்களையும் உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாக்குவார்கள். அடிப்படைவாதிகள் பல பெயர்களில் வருவார்கள்; பல வழிகளைக் கையாள்வார்கள்; பலவிதமான தொனிகளில் பேசுவார்கள். காளியின் கரங்கள் போல எண்ணற்று விரிபவை அவை. அவற்றை எல்லாம் அரசே சரியாகப் புரிந்து கையாளுமா என்பது சந்தேகம்தான்.

இந்நிலையில் நாம் என்ன செய்யலாம்? ‘மாதொருபாகன்’ தீர்ப்பில் “இலக்கியம், கலாச்சாரம் போன்ற விஷயங்களைத் தீர்மானிப்பதற்கு அரசு, காவல் துறை அதிகாரிகள் சிறந்த நபர்களாக இருக்க மாட்டார்கள் என்றும் இத்தகைய விஷயங்களை இந்தத் துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் ஞானத்திற்கும் தேவைப்பட்டால் நீதிமன்றங்களிடமும் விட்டுவிடுவதே சிறந்ததொரு தீர்வாக இருக்கும்” (ப.149) என்று கூறப்பட்டுள்ளது. கருத்துரிமைப் பிரச்சினை ஏற்படும்போது துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் அத்தீர்ப்பு பரிந்துரை செய்திருந்தது. இப்போது அது சாத்தியமில்லை. நீதிமன்றத்திடம் விட்டுவிடுவதே நல்லது என்று நினைக்கிறேன். 

நீதிமன்றத்திற்குப் போய்விட்டால் சட்ட வழிமுறைகளைக் கைக்கொண்டு எதிர்கொள்ளலாம். வழக்குப் பதிய வேண்டாம் என்றோ வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்றோ அரசுக்கு நாம் கோரிக்கை வைக்கலாம். இதற்கு எதிரான கோரிக்கைகளை எதிர்த்தரப்பு வைக்கும். அடிப்படைவாதம் தாக்குதல் தொடுக்கவும் கொலை செய்யவும் தயங்காது. அவர்களின் வழிமுறைகளைப் படைப்பாளர் எதிர்கொள்வது மிகவும் கடினம். அதைவிட நீதிமன்றத்திற்குச் சென்றுவிடுவதே சிறந்தது. விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் முன்பிணை பெற்றுள்ளார். அதன் பின்னும் எங்கெங்கிருந்தோ மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அவரைத் தூக்கிலிட வேண்டும் என்று பேசுகிறார்கள். லட்சம் பேரைத் திரட்டி அவர் வீட்டுக்கு முன் போராட்டம் நடத்துவோம் என்கிறார்கள். கிராமத்தில் வசிக்கும் அவர் பெற்றோரும் உறவினர்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள். இவற்றையெல்லாம் எவ்வாறு எதிர்கொள்வது? 

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது மிரட்ட முடியாது. போராட்டங்களுக்கு அரசு அனுமதி கிடைக்காது. நீதிமன்றமும் இவற்றை எல்லாம் அனுமதிக்காது. ஆகவே, இப்போதைய நிலையில் நீதிமன்றத்திடம் இந்தப் பிரச்சினையைக் கையளித்து விடுவதே கவிஞருக்கு நல்லது என்று நினைக்கிறேன். நீதி கிடைக்கக் கொஞ்ச காலம் ஆகலாம். செலவும் அலைச்சலும் இருக்கும். ஆனாலும் நீதிமன்றமே நல்லது. எனவே, வழக்கைத் திரும்பப் பெறும்படி அரசை வலியுறுத்த வேண்டாம் என்பதே என் எண்ணம். மாதொருபாகன் பிரச்சினையின் தொடக்கத்திலேயே நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தால் என் துன்பங்கள் குறைந்திருக்கும் என்று என் அனுபவத்தில் உணர்ந்து இதைச் சொல்கிறேன். 

 

பயன்பட்ட நூல்கள்: 

1. வீ.பா.கணேசன் (மொ.ஆ.), வழக்கு எண் 1215/2015 (மாதொருபாகன் வழக்குத் தீர்ப்புரை), 2016, சென்னை, பாரதி புத்தகாலயம்.
2. சு.அ.இராமசாமிப் புலவர் (உ.ஆ.), தனிப்பாடல் திரட்டு (முதற் பகுதி), 1963, சென்னை, கழக வெளியீடு.
3. ஈரோடு தமிழன்பன், தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு, 2003, சென்னை, பூம்புகார் பதிப்பகம். 

 

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துச் சுதந்திரத்தை அணுக இரு பாதைகள் இல்லை
சாதி நோய்க்கு அருமருந்து
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்
ராமாயணம் இலக்கியமா; புனித நூலா?
தனிப்பாடல் எனும் தூண்டில் புழு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


2

2





பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

இரா.ப.இராக்கண்ணன்   2 years ago

சரியான பார்வை ‌‌‌. ஆனால் வழக்கு நாதன்களிடம் போகாமல் இருக்க வேண்டும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Parthiban.s   2 years ago

சிறப்பு.... நீதிமன்றங்களுக்கு செல்வதே சரி..

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   2 years ago

இந்து மதக் காவலர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்: தவறு செய்தால் சாமியே கண்ணைக் குத்தி விடும். கடவுள்-எழுத்தாளன் ஆகிய இரு படைப்பாளிகளுக்கு இடையே வந்து கம்யூனிகேஷன் கேப்பை உண்டுபண்ணுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

மீண்டும் அருமையான கட்டுரை PM sir.. பிற மத தூடணம் பற்றி தங்கள் கருத்தை ஆழமாக பதிவு செய்யாமல் விட்டு விட்டீர்கள். தங்களின் இந்த கட்டுரை இலக்கியம் படிக்க தூண்டுகிறது.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Periasamy   2 years ago

தற்போது ராமரின் ஆட்சி இங்கு நடைபெறவில்லை.. அரசியல் சாசனத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இப்போது நடக்கும் சட்ட மீறல்கள் அனைத்திற்கும் காரணம் அம்பேத்கர் தான் காரணம் என்று அவரை மலக்குழி சுத்தம் செய்ய ஒரு கவிதை வடிப்பது எவ்வளவு கேவலமானது....உங்கள் கருத்து சுதந்திரமும் மண்ணாங்கட்டியும்..

Reply 0 4

Login / Create an account to add a comment / reply.

டயாலிஸிஸ்நிவாரணம்போக்குவரத்துத் துறைஜெய்மோகன் பண்டிட் கட்டுரைமாநில வருவாய்நிதா அம்பானிவெள்ளை அறிக்கைபெருநகரங்கள்தனிமனித சுதந்திரம்கள்ளக்குறிச்சி கலவரம்: காவல் துறையின் அம்மணம்பார்ப்பனர்கள்மகளிர் மேம்பாடுரஷ்ய-உக்ரைன் போர்புரதம்சோஷலிஸ்ட்விஜய் அரசியல் பேசினால் என்ன தவறு?ப்ரெய்ன் டம்ப்நீண்ட கால செயல்திட்டம்காஷ்மீர்தேசிய சட்டமன்றம்தமிழ்எலும்புகள்வரி நிர்வாகம்புஜ எலும்பு முனைகள்ஒன்றிய வருவாயில் 30% வருமான வரி!மூட்டுத் தேய்மானம்எந்தச் சட்டம்ஒலிப்பியல்ஆளும் கட்சிபாரம்பரிய விவசாயம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!