கட்டுரை, தொடர், தமிழ் ஒன்றே போதும் 5 நிமிட வாசிப்பு

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்

பெருமாள்முருகன்
01 Apr 2023, 5:00 am
3

ந்தை பெரியாருக்கு ‘வைக்கம் வீரர்’ என்னும் புனைபெயரைத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. சூட்டினார். அவ்வாறு போற்றப்படுவதற்குக் காரணமான வைக்கம் போராட்டம் 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் தொடங்கியது. அதன் நூற்றாண்டு 2023, மார்ச் 30 அன்று தொடங்குகிறது.

இதையொட்டி கேரளத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கத் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அழைப்புக் கடிதம்: 

“சமூக நீதிக்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும் கேரளத்தில் நடைபெற்ற மிக முக்கியமான போராட்டம் வைக்கம் போராட்டம் ஆகும். இங்குள்ள புகழ்பெற்ற மகாதேவர் கோயிலுக்குள்ளும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் நுழைய அன்றைக்கு அனுமதிக்கப்படவில்லை. இக்கொடுமைகளுக்கு எதிராக 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தில் டி.கே.மாதவன், கே.கேளப்பன், மன்னத்து பத்மநாபன், கே.பி.கேசவ மேனன் முதலியோர் முன்னின்று செயல்பட்டனர்.

மகாத்மா காந்தி இப்பகுதிக்கு நேரடியாக வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததும் மறுமலர்ச்சி நாயகர் தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தியதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். இதன் காரணமாகத் தந்தைப் பெரியார் ‘வைக்கம் வீரர்’ என அறியப்பட்டதும் வைக்கத்தில் அவரது நினைவாக சிலை எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அமைதியான முறையில் 603 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வைக்கம் போராட்டம் 1925 நவம்பர் 23ஆம் நாள் வெற்றிகரமாக முடிவுற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை வரும் ஏப்ரல் திங்கள் ஒன்றாம் நாள் (01-04-2023) முதல் 603 நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடக் கேரள அரசு முடிவுசெய்துள்ளது.

வைக்கம் போராட்ட வெற்றிக்குத் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதால் கேரள, தமிழ்நாடு மாநில முதல்வர்கள் இணைந்து வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வைக்கம் போராட்ட வீரர்களுக்குப் புகழ் வணக்கம் செலுத்தி நூற்றாண்டு விழாவைத் தொடங்கி வைக்க வேண்டும்!” (ஆதாரம்: ‘இந்து தமிழ் திசை’, 22.03.23).

நூற்றாண்டு காணும் வைக்கம் போராட்டம்

நூறாண்டு கழித்து நடைபெறும் விழாவில் தந்தை பெரியாரை நினைவுகூர்ந்திருப்பதும் தமிழ்நாட்டு முதல்வருக்கு அழைப்பு விடுத்திருப்பதும் மிகவும் முக்கியமானது. இதையொட்டிக் கேரளத்தில் 603 நாள் கொண்டாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பழ. அதியமான் எழுதிய ‘வைக்கம் போராட்டம்’ நூலின் மலையாள மொழிபெயர்ப்பு இன்று (ஏப்ரல் 1, 2013) கேரளத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் வெளியிடப்படுகிறது.

கேரளத்தில் நடைபெற்ற ஒரு போராட்டத்தின் வரலாறு முதலில் தமிழில் எழுதப்பட்டுப் பின்னர் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படுவது முக்கியமானது. இந்நூல் ஆங்கிலத்திலும் வெளியாக வேண்டும். நூற்றாண்டுக் கொண்டாட்டம் அதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்ப்போம்.  

இத்தருணத்தில் தமிழ்நாட்டிலும் நல்ல முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. வைக்கம் போராட்டம் பற்றியும் அதில் பெரியார் பங்களிப்பு குறித்தும் தொடர்ந்து நடந்துவந்த திரித்தல்களைப் புறந்தள்ளும் வகையில் ஆய்வாளர் பழ.அதியமான் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தீவிர ஆய்வில் ஈடுபட்டு  ‘வைக்கம் போராட்டம்’ என்னும் நூலை 2020இல் எழுதினார். அந்நூலில் சேர்க்க இயலாத செய்திகள், கள ஆய்வுத் தகவல்கள், புத்தக ஆக்க அனுபவங்கள் முதலிய பல்வேறு விஷயங்களை முன்வைக்கும் விதத்தில் காலச்சுவடு இதழில் மார்ச் 2023 முதல் அவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துச் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். அஞ்சல் தலை, அருவிக்குத்து நினைவிடம், ஏற்கெனவே உள்ள நினைவிடச் சீரமைப்பு, பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் போட்டிகள் எனவும் ஓராண்டு முழுவதும் கொண்டாட்டம் எனவும் அவர் அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். 

எனது பாடல்… 

இச்சூழலில் என்னாலான சிறுமுயற்சி ஒன்றைச் செய்யக் கருதினேன். பாபாசாகேப் அம்பேத்கர் பற்றி நான் எழுதிய காவடிச் சிந்துப் பாடலைக் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பாடி 2021 ஏப்ரலில் வெளியிட்டோம். அதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதைக் கேட்டுப் பாராட்டிய நண்பர் ஆ.இரா.வேங்கடாசலபதி “அய்யாவைப் பற்றியும் நீங்கள் இப்படி ஒருபாடல் எழுத வேண்டும். டி.எம்.கிருஷ்ணா குரலில் நாங்கள் அதைக் கேட்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். பெரியாரைப் பற்றி எழுத வேண்டும் என்னும் எண்ணம் எனக்குள்ளும் இருந்தது. 

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. சில இடங்களில் சிலையை உடைக்கவும் முயற்சி நடந்தது. அப்போது கேரளத்தில் நடந்த இலக்கிய விழாவில் பேசிய டி.எம்.கிருஷ்ணா “பெரியார் சிலையை உடைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சிலை என்பது ஒரு கலை வடிவம். கலைஞனாக இதைக் கண்டிக்க வேண்டியது என் கடமை” என்றார். அவர் கருத்தை உள்வாங்கிச் ‘சிலைகள் எல்லாம் கலையின் வடிவம்’ என்றொரு கீர்த்தனை எழுதினேன். அதில் “சாலை நடுவில் முருகுடன் நின்று சரித்திரம் பேசும் பெரியார் எனினும்” எனப் ‘பெரியார்’ பெயரை இருபொருள்படக் குறித்திருந்தேன். பெரியார் பெயர் ஓரிடத்தில் வந்தால் போதாது; அவரைத் தனிப்பட வைத்து முழுப் பாடல் எழுத வேண்டும் என அப்போதே கருத்தில் வைத்திருந்தேன்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

சாதிக்கு எரியூட்டுவோம்

பெருமாள்முருகன் 24 Dec 2022

பட்டால் கொள்ளுங்கள் இல்லையேல் தள்ளுங்கள் 

பெரியார் குறித்து ஏற்கெனவே பல பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. திராவிடர் கழகக் கூட்டங்களில் அவை ஒலித்துக்கொண்டுள்ளன. புஷ்பவனம் குப்புசாமியும் மறைந்த தேனிசை செல்லப்பாவும் தமிழிசை மேடைகளில் பாடிப் பிரபலப்படுத்திய ‘பெரியார் ஒருவர்தான் பெரியார்’ பாடல் சண்முகப்பிரியா ராகத்தில் அமைந்தது. அதை எழுதியவர் காசி ஆனந்தன்.  கவிஞர் பல்லவன் எழுதி புஷ்பவனம் குப்புசாமி பாடிய ‘கிழவனல்ல அவன் கிழக்கு திசை’ பாடலும் கர்நாடக சங்கீத ராகத்தில் அமைந்ததே. இவற்றின் தொடர்ச்சியாக ஒருபாடலை எழுதுவோம் என்று முயன்றேன். பாடலின் முதல் வடிவத்தை 2022 ஜனவரியில் எழுதினேன். பெரியார் தம் உரைகளில் அடிக்கடி குறிப்பிடும் விஷயம் ஒன்று மிகவும் முக்கியமானது. 

“என் அனுபோகத்திற்கும் ஆராய்ச்சிக்கும் உண்மையென்று பட்டதை, நான் உள்ளபடி உணர்வதை உங்களுக்கும் சொல்லுகின்றேன். உங்கள் அறிவிற்கு அது சரியென்று பட்டால் கொள்ளுங்கள். அல்லவென்று பட்டால் தள்ளுங்கள்!” (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், இரண்டாம் வரிசை, தொகுதி 4, மதமும் கடவுளும் 2, ப.3833). 

“நீங்கள் அப்படியே நம்பி ஒப்புக்கொள்ள வேண்டுமென்றோ நான் ஒரு பெரிய அறிவாளி, ஆராய்ச்சிக்காரன் என்றோ சொல்ல வரவில்லை. நான் சொல்வதை நன்காராய்ந்து உங்களுக்குச் சரியெனத் தோன்றுவதை எடுத்துக்கொண்டு சரியல்லவெனத் தோன்றுவதை ஒதுக்கிவிடும்படித்தான் நான் உங்களைக் கேட்டுக்கொள்ளுகின்றேன்!” (மேற்படி, ப.3835).

“நான் சொல்வது உங்கள் அறிவு, ஆராய்ச்சி, புத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள்; ஒத்து வந்தால் காரியத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள்!” (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், முதல் வரிசை, தொகுதி 4, மதமும் கடவுளும் 1, ப.1797). 

“ஆகையால் பொதுஜனங்கள் இனியாவது எக்காரியத்தையும் சுயபுத்தியோடு கூடிய பகுத்தறிவுடன் கவனித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்!” (குடியரசு 1937-2, தொகுதி 25, ப.223).

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

பெரியார் - லோகியா சந்திப்பு: முக்கியமான ஓர் ஆவணம்

30 Nov 2022

இப்படியெல்லாம் அவர் தொடர்ந்து சொல்வதை எழுத்திலும் பார்க்கலாம்; உரைகளிலும் கேட்கலாம். “உங்கள் அறிவிற்குச் சரியென்று பட்டால் கொள்ளுங்கள்; அல்லவென்று பட்டால் தள்ளுங்கள்” என்று சொல்லிச் சொல்லிச் சிந்திக்க தூண்டுகிறாரே, அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தம் கருத்துக்களைத் திணிக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைக்கவில்லை. தன்னை மறுக்கும் உரிமை, விமர்சிக்கும் போக்கு ஆகியவற்றை வரவேற்றார். அப்போதுதான் உரையாடல் நிகழும் என்று நினைத்தார். உரையாடலுக்கு வழி இருக்கும்போதுதான் மாற்றம் சாத்தியப்படும். மாற்றத்தை நோக்கிச் செயல்பட்ட அவர், உரையாடல்களுக்குச் செவிமடுத்தவர். 

சிந்தனை செய் மனமே…

எவரிடத்தும் தம் கருத்துக்களைத் திணிப்பதில் அவருக்கு ஆர்வமில்லை. “உன் சொந்த புத்தியை உபயோகித்து யோசித்துப் பார்” என்றே சொல்வார். இந்தக் கருத்தைப் பல்லவியாக அமைக்கலாம் என முயன்றேன். யோசித்துக்கொண்டே சில நாட்கள் கழிந்தன. தொடர்வண்டிப் பயணம் ஒன்றின்போது திடுமெனச் ‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’ என்னும் வரி மனதில் தோன்றியது.

மனதிற்குள் ஒன்றைப் போட்டு வைத்தால் அது சும்மா இருக்காது. சுழற்றிச் சுழற்றிக் கடைந்து ஏதோ ஒரு கணத்தில் அமுதத்தை மேலெடுத்துக் கொண்டுவந்து தரும். அப்படிக் கிடைத்த அமுதவரி இது. ‘சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’ என்று அடுத்த வரி இயல்பாக வந்து கூடியது.

பல்லவி அமைந்துவிட்டால் அதன் தொடர்ச்சியாக மற்றவை கூடிவந்துவிடும். அப்படித்தான், பல்லவி வரிகளைச் செப்பனிட்டு அதன் தொடர்ச்சியைச் சில நாட்களில் எழுதி முடித்து 2022 ஜனவரியில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அனுப்பிவைத்தேன். 

கச்சேரி, உரை, எழுத்து, பயணம் என எப்போதும் ஓடியபடியே இருப்பவர் டி.எம்.கிருஷ்ணா. அவ்வப்போது “பெரியார் பாட்டு என்ன ஆச்சுங்க?” என்று பேச்சுவாக்கில் நினைவுபடுத்துவேன். “பாத்துக்கிட்டு இருக்கறங்க” என்பார். பாடலின் உணர்வுக்குப் பொருத்தமான ராகத்தில் மெட்டு அமைய வேண்டும். அதிவேக இயக்கம் கொண்டவர் என்றாலும் இசையைப் பொருத்தவரை ‘கலைப் பொறுமை’யை அவர் கடைபிடிப்பார்.

இந்தப் பாடலை வெளியிடலாம் எனச் சில சந்தர்ப்பங்களில் தீர்மானித்தும் சாத்தியமாகவில்லை. டி.எம்.கிருஷ்ணாவுக்குத் திருப்தி தரும் வகையில் மெட்டமையட்டும் எனக் காத்திருந்தேன். இந்த ஓராண்டுக்கு மேலான இடைவெளியில் அவ்வப்போது பாடலை வாசித்துப் பார்த்ததுண்டு. சொற்களிலும் வரிகளிலும் சிற்சில மாற்றங்களைச் செய்துகொண்டே இருந்தேன். 

இதுவே உகந்த நேரம்!

பெரியாரின் ஆளுமையை முழுவதுமாக ஒருபோதும் சொல்லிவிட முடியாது. கிட்டத்தட்ட நூறாண்டு வாழ்ந்தவர். பிறப்பு முதல் இறப்பு வரை அவர் வாழ்க்கை, கொள்கைகள், செயல்பாடுகள், போராட்டங்கள் என்று எதைத் தொட்டாலும் விரிந்துகொண்டே செல்லும் தன்மையுடையவர். ஒரே ஒருநாள்கூட ஓய்வு எடுத்துக்கொண்ட மாதிரி தெரியவில்லை. ஒவ்வொரு நாள் செயல்பாடுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் நிரம்பி வழியும். அப்பேர்ப்பட்டவரை ஒற்றைக் கீர்த்தனைக்குள் பிடிக்க முடியுமா? முதலில் எழுதி முடித்திருந்த ஒரு சரணம் போதாது என்று தோன்றியது.

இரண்டாம் சரணத்தையும் எழுதினேன். எத்தனை சரணங்கள் இருந்தாலும் பாடகர் தமக்கென ஒரு சரணத்தைத் தேர்ந்தெடுத்துப் பாடுவார். எந்தச் சரணம் மெட்டுக்குப் பொருந்துகிறதோ, எதில் அவர் ஆர்வம் செல்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும் என்று இரண்டு சரணங்களுடன் திருத்திய பாடல் வடிவத்தை அவருக்கு அனுப்பிவைத்தேன். 

பிப்ரவரி 2023 தொடக்கத்தில் டி.எம்.கிருஷ்ணா அழைத்தார். “மெட்டு அமஞ்சிருச்சு. நீங்க எப்பச் சொல்றீங்களோ அப்பப் பாட்ட வெளியிடலாம்” என்று சொன்னார். பெரியாரை நினைவுகூர நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை. பார்த்தாலும் எந்த நாளாக இருந்தாலும் ஏதேனும் ஒன்றை நினைவுகூரலாம். சரிதான். ஆனால், பொதுத் தளத்தில் நன்றாகத் தெரிந்த விஷயமாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதினேன்.

திராவிட இயக்க ஆய்வாளர் பழ. அதியமானிடம் இதைப் பற்றிப் பேசும்போது “மார்ச் 30 அன்று வைக்கம் நூற்றாண்டு தொடங்குகிறதே” என்று சட்டெனச் சொன்னார். பாடலை வெளியிட இதைவிடப் பொருத்தமான நாள் அமையாது. டி.எம்.கிருஷ்ணாவிடம் தகவல் தெரிவித்தேன். அவர் சீடர்கள், இசைக் கலைஞர்கள் உதவியுடன் பாடலைத் தயார்செய்துவிட்டார்.

பாடலுக்கு அறிமுகவுரையைப் பழ. அதியமான் வழங்கினார். பாடலை நண்பர் ராஜேஷ் கார்கே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். என் எளிய வரிகள் பாடலாகி இத்தனை பேருடைய பங்களிப்புடன் மார்ச் 30 அன்று மாலையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?

ப.திருமாவேலன் 26 Dec 2021

கிருஷ்ணாவும் பிலஹரி ராகமும்

பாடல் ‘பிலஹரி ராக’த்தில் அமைந்திருக்கிறது. காதலைப் பாட உகந்த ராகம் பிலஹரி என்கிறார்கள். நோய் தீர்க்க வேண்டி இறைவனை இறைஞ்சும் ராகம் என்றும் சொல்கிறார்கள். தியாகையர் இயற்றிய ‘நா ஜீவாதாரா’ என்னும் கீர்த்தனை இந்த ராகத்தில் புகழ்பெற்றது. கே.பாலசந்தரின் ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் வரும் ‘பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை’யும் அப்பாத்திரத்தில் நடித்த ஜெமினி கணேசனும் நினைவில் வந்தார்கள்.

அப்படத்தில் ‘நீ ஒன்றுதானா என் சங்கீதம்’ என்னும் பாடலை இளையராஜா பிலஹரி ராகத்தின் அடிப்படையில் அமைத்துள்ளார். ஜேசுதாஸ் பாடியுள்ளார். பழைய திரைப் பாடல்கள் பல இந்த ராகத்தில் அமைந்துள்ளன என்று கூகுள் தகவல் தருகிறது. ‘அகத்தியர்’ திரைப்படத்தில் வரும் ‘தலைவா தவப்புதல்வா’ பாடலுக்கும் இந்த ராகம்தான் மூலம். 

பிலஹரி ராகத்தில் பெரியார் பற்றிய கீர்த்தனையை டி.எம்.கிருஷ்ணா பாடி அனுப்பினார். ராக நுட்பங்கள் அறியாத என் காதுகளுக்குள் பெரியார் கம்பீரமாக வந்து புகுந்தார். தழைந்துவரும் நாதஸ்வர நாதமெனக் கிருஷ்ணாவின் குரல் நிறைந்தது. ’சிந்தையை நன்றாய்த் தெளிவாக்கிச் சீருடன் பகுத்து ஆராய்ந்து சிந்திக்கச் சொன்ன’ பெரியார் இசையை விரும்பியவர் அல்லர். ஆனால், இசைபட வாழ்ந்தவர். இன்று இசைப்பவர் டி.எம்.கிருஷ்ணா. ‘தந்தை பெரியார் அவர் பெரியார்’ என்று டி.எம்.கிருஷ்ணா விதந்தோதிப் பாடுகிறார். இது வரலாற்றில் முக்கியமான நிகழ்வு. 

முழுப் பாடல்: 

பெரியார் 

சிந்திக்கச் சொன்னவர் பெரியார்
தந்தை பெரியார் தந்தை பெரியார்
சொந்த புத்தியைக் கொண்டே எதையும்
சிந்திக்கச் சொன்னவர் பெரியார்
தந்தை பெரியார் அவர் பெரியார்                  (சிந்திக்கச்)

முந்தைய காலத்தின் முறைகளையே
முழுவதும் புரிந்துகொள்வதற்கே
சிந்தையை நன்றாய்த் தெளிவாக்கிச்
சீருடன் பகுத்து ஆராய்ந்து                                (சிந்திக்கச்)

சாதிப் பிரிவினைகள் ஏன்
சாத்திர விதிமுறைகள் ஏன்
ஆதிக்க நடைமுறை ஏன்
அநீதித் தீண்டாமை ஏன்
பாதிக்கப் படுவோர் யார்
பலனடைந்து வாழ்வோர் யார்
ஏதும் அற்றோர் யார்
ஏமாற்றிப் பிழைப்பவர் யார்
மோதி உடைத்து முழுதாய் இங்கே
மாற்றம் காண முருகாய் எதையும்               (சிந்திக்கச்)

பாடலைக் கேட்க:  

தொடர்புடைய கட்டுரைகள்

புனிதப் பூச்சிலிருந்து விடுபடட்டும் பத்ம விருதுகள்
சாதிக்கு எரியூட்டுவோம்
பெரியார் - லோகியா சந்திப்பு: முக்கியமான ஓர் ஆவணம்
பெரியாரை ஏன் வட இந்தியா வரித்துக்கொள்ளவில்லை?
இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பெருமாள்முருகன்

பெருமாள் முருகன், பேராசிரியர், எழுத்தாளர். ‘அர்த்தநாரி ஆலவாயன்’, ‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


3






பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Prabhu   8 months ago

பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் மட்டுமன்றி பிறகும் ஒரு rebel ஆகவே வாழ்ந்தவர். அவர் ஒரு Dadaist. அப்படியான ஒருவரைப் பற்றி புகழ் பாட, சமகாலத்திய அவரவர் துறையின் rebels ஆக விளங்கும் பெருமாள் முருகன், டி எம் கிருஷ்ணா மற்றும் பழ அதியமான் ஆகியோர் இணைந்திருப்பது காலம் கனிய வைத்திருக்கும் பொருத்தம்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அ.புவியரசு   8 months ago

டி.எம்.கிருஷ்ணாவின் பங்களிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. நம்மோடு தோள்சேர்க்கும் நண்பரை அடையாளங்காட்டிய அருஞ்சொல்லுக்கு நன்றி.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Duraiswamy.P   2 years ago

கர்நாடக இசை பாடகர் டி எம் கிருஷ்ணா பார்ப்பனராகப் பிறந்தாலும் பார்ப்பனிய கொடுமைகளுக்கு எதிரானவர். மிகச் சிறந்த முறையில் பாடலுக்கு இசையமைத்து பாடியுள்ளார். வாழ்த்துவோம்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

விழுமியங்களும் நடைமுறைகளும்தணிக்கைச் சான்றிதழ்திருநெல்வேலிசித்தாந்த முரண்பட்ஜெட்உயிரணு உற்பத்திமொழிபெயர்ப்புஐஎஸ்ஐப்ராஸ்டேட் சுரப்பிபுதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுமா?அறநிலைத் துறைபாஜக அரசியல்அமெரிக்க ஆப்பிள் உற்பத்திகுடிமைப் பணித் தேர்வுஅட்லாண்டிக் பெருங்கடல்ஓரங்கட்டப்படுதல்சுளுக்கிIndia Allianceபொதுவிடம்ஆசிரியர் - மாணவர் பற்றாக்குறைதிறமையின்மைகடலோரப் பகுதி5ஜி அருஞ்சொல்வடிவமைப்புக் கொள்கைநிகில் டே கட்டுரைதமிழ்ச் சமூகம்அணிவதாதினமலர்யி ஷெங் லியான் கட்டுரைஎம்.எஸ்.சுவாமிநாதன்: பசுமைப் புரட்சியின் முகம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!