கட்டுரை, அரசியல், கலாச்சாரம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

சிறுபான்மையினர் ஓட்டுகள் மலிவானவை அல்ல

புதுமடம் ஜாஃபர் அலி
14 Sep 2023, 5:00 am
0

ந்தியா ஒரு முக்கியமான தேர்தலை 2024இல் எதிர்கொள்கிறது. தேர்தல் மேஜையில் பல விஷயங்களும் இருந்தாலும், மதவாதம் எதிர் மதச்சார்பின்மை எனும் இரு கருத்துகளே மேஜையின் மையத்தில் - எதிரெதிரே அமர்ந்திருக்கின்றன. மதவாதம் பேசும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்றால், மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியானது எதிர் வரிசையில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும், சமூகங்களை ஒருங்கிணைப்பதிலும் முதலில் வெற்றி பெற வேண்டும். 

இரட்டைக் குதிரை சவாரி

பாஜகவைப் பொறுத்தவரை அதன் போக்கில் அது மிகத் தெளிவாக இருக்கிறது. இந்து பெரும்பான்மைவாதத்தைக் கை கொள்ளும் பாஜக தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் தன்னுடைய சித்தாந்தப் பிடிமானத்தை வெளிப்படுத்த தவறுவதே இல்லை. பாஜகவைப் பின்பற்றுவோர் இத்தகைய இந்து பெரும்பான்மைவாதச் செயல்பாட்டையே அதனிடம் எதிர்பார்க்கின்றனர். 

எதிரே பாஜகவை எதிர்ப்போர் தாங்கள் ஆதரிக்கும் கட்சிகள் / கூட்டணியிடம் எதை எதிர்பார்க்கின்றனர் என்றால், இதற்கு நேர் எதிரான சிறுபான்மைவாதத்தை அல்ல; மாறாக, உண்மையான மதச்சார்பின்மைப் போக்கை எதிர்பார்க்கின்றனர். ஒரு முஸ்லிம் இன்று இந்திய அரசியல் தளத்தில் தமக்கு ஆதரவான செயல்பாட்டை எதிர்பார்ப்பதைவிடவும், எல்லோருக்கும் பொதுவான செயல்பாட்டையே எதிர்பார்க்கிறார். ஆனால், சென்ற பத்தாண்டுகளில் சூழல் இங்கே எப்படி மாறியிருக்கிறது?  

நாம் மதச்சார்பின்மை பேசும் கட்சிகளிடம் இரு அணுகுமுறைகளைக் காண முடிகிறது. ஒருபுறம் அவர்கள் மேடைகளில் மதச்சார்பின்மை பேசுகிறார்கள்; இன்னொருபுறம் அவர்கள் பேசும் மதச்சார்பின்மையில் அவர்களுக்கே முழு நம்பிக்கை இல்லாததுபோல, ஒரு பாஜக வேட்பாளர் இந்துக்களை ஈர்ப்பதற்காகக் கோயில் கோயிலாக ஏறி இறங்குவது போன்றே இவர்களும் கோயில் கோயிலாக ஏறி இறங்குகின்றனர்; கூடவே கிறிஸ்தவர்களையோ, முஸ்லிம்களையோ ஈர்ப்பதற்காக தேவாலயங்கள், மசூதிகளுக்கும் ஏறி இறங்குகின்றனர். இது தேவை இல்லை.

இன்று சிறுபான்மையினர் ‘கடந்த கால தாஜா போக்கு’ வேண்டாம் என்று நினைக்கின்றனர்.

குல்லா அணிந்துகொண்டு முஸ்லிம்களுடன் நோன்புக் கஞ்சி சாப்பிடும் படம் எடுத்துக்கொள்வதைவிடவும், அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைக் கொடுப்பது பயன் தரும்; மாறாக, இந்த நோன்புக் காலப் புகைப்படங்கள் மாற்று மத மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக திருப்பவே வழிவகுக்கும் என்ற புரிதலை நோக்கி இன்று முஸ்லிம்கள் நகர்ந்திருக்கின்றனர். ‘நீங்கள் எங்களையும் தாஜா செய்ய வேண்டாம்; அவர்களையும் தாஜா செய்ய வேண்டாம்; உங்கள் பணிகளை எல்லோருக்குமானதாகச் செய்தாலே எங்களுக்குப் போதுமானதாக இருக்கும்!’ 

தவிர, பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியை மட்டுமே சொல்லி சிறுபான்மையினர் ஓட்டுகளை வளைத்துவிடலாம் என்ற எண்ணத்துக்கு மதச்சார்பின்மை பேசும் பல கட்சிகள் நகர்ந்துவிட்டனவோ என்ற கேள்வியும் சிறுபான்மை மக்களிடம் எழாமல் இல்லை. சென்ற பத்தாண்டுகளை எடுத்துக்கொண்டால், மதச்சார்பின்மை பேசும் எந்த ஒரு கட்சியிலும் முன்பைக் காட்டிலும் சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்றோ, எந்த ஒரு மாநிலத்திலும் முன்பைக் காட்டிலும் சிறுபான்மையினருக்கான சிறப்பான சமூக நலத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்றோ சொல்லும் சூழல் இல்லை. எனில், வெறும் பேச்சில் மட்டும் வெளிப்படும் அக்கறையால் என்ன பயன்?

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

முஸ்லிம்களுக்கான அநீதி: தோற்கடிக்கும் மௌனம்

சமஸ் | Samas 09 Aug 2023

மக்கள்தொகையைப் பிரதிபலிக்கிறதா ஒட்டுமொத்த குரல்?

பொதுத் தளத்தில் ஒரு தவறான கற்பிதம் இருக்கிறது. சிறுபான்மையினர் ஓட்டுகள் சிந்தாமல் - சிதறாமல் பாஜகவுக்கு எதிர் வரிசையில் உள்ள கட்சிகளுக்குச் செல்கின்றன என்பதே அது. எல்லாத் தேர்தல்களிலும், எல்லா மாநிலங்களிலும் இப்படித்தான் நடக்கிறது என்று சொல்ல முடியாது.

இங்கே உதாரணத்துக்கு முஸ்லிம்கள் ஓட்டுகளை எடுத்துக்கொள்வோம். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சிறுபான்மைத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 கோடி எனக் குறிப்பிட்டார். அதாவது, மொத்த மக்கள்தொகையில் கிட்டதட்ட 15% பேர் முஸ்லிம்கள்.

நாம் சென்ற இரு மக்களவைத் தேர்தல்களை எடுத்துக்கொள்வோம். பாஜக 2014 மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குவீதம் 38%. 2019 மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குவீதம் 37.4%. உண்மையாகவே முஸ்லிம்கள் ஓட்டுகள் சிந்தாமல் சிதறாமல் ஓர் அணிக்குச் சென்றிருந்தால், பல இடங்களில் பாஜக வென்றிருக்க முடியாது என்பதே உண்மை நிலை.

தேசிய அளவில் காங்கிரஸ் மீது சிறுபான்மை மக்களுக்கு நல்லெண்ணம் இருக்கிறது. ஆனால், ஒரு மாநிலத்தில் பாஜகவுக்கு எதிர் வரிசையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் நிற்கும்போது இந்த ஓட்டுகள் சிதறுகின்றன. உத்தர பிரதேசத்தை எடுத்துக்கொள்வோம். இப்போது இந்தியா கூட்டணியில், காங்கிரஸும் சமாஜ்வாதியும் இணைந்து நின்றாலும், பகுஜன் சமாஜ் இன்னமும் அங்கே வெளியே நிற்கிறது. காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணியுமே களத்தில் தொண்டர்கள் இணைந்து நிற்கும் கூட்டணியாக இன்னும் உருப்பெறவில்லை; தேர்தல் நேரக் கூட்டணிபோலத்தான் உருவாகிறது. உத்தர பிரதேச மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 20% பேர் முஸ்லிம்கள். ஆனாலும், எந்த அளவுக்கு முக்கியத்துவத்துடன் இதை எதிர்க்கட்சிகள் கையாளுகின்றனர்?

தமிழ்நாடு, வங்கம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா இந்த ஐந்து மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட 150 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கே உள்ள முஸ்லிம்கள் யாருக்கு ஓட்டளிப்பார்கள்? உதாரணமாக, தெலங்கானாவில் பாஜகவுக்கு எதிர் வரிசையில் நிற்கும் பாரதீய ராஷ்டிர சமீதிக்கு ஓட்டு போடுவார்களா, காங்கிரஸுக்கு ஒட்டு போடுவார்களா? கேரளாவில் மார்க்ஸிஸ்ட்டுகள், காங்கிரஸார் இருவரும் தமக்கு முன்னுள்ள தேர்வுகள் என்று எண்ணும்போது ஒரு முஸ்லிம் இந்த இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் தன்னுடைய வாழ்வை மேம்படுத்த என்ன விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்று தேடுவது சரியா, பிழையா?

இதைக் காட்டிலும் இன்னொரு பெரும் சவால் இருக்கிறது. மஜ்லிஸ், எஸ்டிபிஐ, ஏஐடியூஎப் போன்ற முஸ்லிம் கட்சிகள். இந்தக் கட்சிகளை முழுமையாக இந்தியா கூட்டணி உள்ளிழுக்கவில்லை. எனில், அவர்கள் தனித்துப் போட்டியிடுவார்கள். வாக்குகள் மேலும் சிதறும்! 

சிறுபான்மையினர் வாக்குகளில் பிளவு

இந்தப் பத்தாண்டுகளில் வேறொரு மாற்றமும் நடக்கிறது என்பதற்கும் மதச்சார்பின்மை பேசும் கட்சிகள் முகம் கொடுக்க வேண்டும். மெல்ல இன்று சிறுபான்மையினர் ஓட்டுகளையும் பிரித்து தம்முடன் சேர்க்கும் உத்தியில் பாஜக முன்னகர்ந்து வருகிறது.

உத்தர பிரதேசம், பிஹார், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் ஒரு பிரிவினரை ‘பாஸ்மண்டா முஸ்லிம்கள்’ (Muslim of India origin - PASAMANDA) என்ற பெயரில் அடையாளப்படுத்தி, அவர்களைத் தம் பக்கம் கொண்டுவர அது மேற்கொண்டுவரும் முயற்சிகள் கவனத்துக்குரியன. ஏற்கெனவே  முத்தலாக் சட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் முஸ்லிம் பெண்களுடைய ஓட்டுகளை அது குறிவைத்ததையும் இங்கே நினைவுகூரலாம். வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணி அடிப்படையில் சிறுபான்மையினர் ஓட்டுகளை மடை மாற்றுவதையும் அது செய்துவருகிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

2024: யாருக்கு வெற்றி?

யோகேந்திர யாதவ் 09 Jun 2023

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கான பாடம்

காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பின்மை பேசும் கட்சிகள் சிறுபான்மையினரை அணுகுவதில் இம்முறை மூன்று விஷயங்களில் முக்கிய கவனம் அளிக்க வேண்டும்.

  1. கூடுமானவரை சிறுபான்மையினர் ஓட்டுகள் சிதறாமல் சேகரிக்கப்பட இந்தியா கூட்டணி இன்னும் விரிவாக்கப்பட வேண்டும்; மதச்சார்பின்மைக் கூட்டணியின் அணுகுமுறையானது எல்லா மதங்களுடனும் தம்மை சம தொலைவில் நிறுத்திக்கொள்வதாக இருக்க வேண்டும்.
  2. சிறுபான்மையினரை அடையாளபூர்வமாக தாஜா செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களுடைய மக்கள்தொகைக்கு ஏற்ற பிரதிநிதித்துவத்தை வேட்பாளர் தேர்வில் தர வேண்டும்.
  3. சிறுபான்மையினர் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் வெகுவாகப் பின்தங்கியுள்ள அம்சங்களில் அவர்களை முன்னகர்த்தும் திட்டங்களைத் தேர்தல் அறிக்கையில் கொண்டுவர வேண்டும்.

எளிமையாக ஒரு வரியில் இப்படிச் சொல்லலாம்: சிறுபான்மையினர் ஓட்டுகள் மலிவானவை அல்ல; அப்படியே அவற்றை வாரிச் சுருட்டிப் போட்டுக்கொள்ளலாம் என்று நம்பினால், அது ஏமாற்றத்தையே தரும்!

தொடர்புடைய கட்டுரைகள்

மத மைய அரசியலிலிருந்து முஸ்லிம்கள் விடுபட வேண்டும்
முஸ்லிம்களுக்கான அநீதி: தோற்கடிக்கும் மௌனம்
எதிர்க்கட்சிகளின் கூட்டணி: நல்ல திருப்பம்
2024: யாருக்கு வெற்றி?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
புதுமடம் ஜாஃபர் அலி

புதுமடம் ஜாஃபர் அலி, சென்னையைச் சேர்ந்த தொழில் முனைவர். அரசியல், பண்பாட்டுத் தளங்களில் கட்டுரைகளை எழுதிவருகிறார். தொடர்புக்கு: shacommunication@ymail.com


2






சீரான உணவு முறைவேந்தர் பதவியில் முதல்வர்டேவிட்சன் தேவாசீர்வாதம்சமந்தா நாக சைதன்யாநீதி நிர்வாக முறைமை மீது அச்சுறுத்தல் வேண்டாம்வடக்குக்குப் பரிசும் பாராட்டும்!4ஜி சேவைஅரசியல் எழுச்சிதென்காசிகெவின்டர்ஸ் நிறுவனம்விண்வெளிஜிஎஸ்டிக்கு முற்றுப்புள்ளி எப்போது?கோட்டயம்ஜெயமோகன் ராஜன்குறை கிருஷ்ணன்கொலஸ்ட்டிரால்விஷ்வேஷ் சுந்தர் கட்டுரைரயத்துவாரி முறைசிவகிரி யாத்திரைஉயர்கல்வி நிறுவனங்கள்மூல வடிவிலான பாவம்k.chandruமுனைகள்பிராகிருத மொழிசரியும் ஒட்டகங்களின் சந்தை மதிப்புநவீன காலம்கூடுதல் முக்கியத்துவம்தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம்உலக சுகாதார நிறுவனம்புதிய நுழைவுத் தேர்வுஅருஞ்சொல் கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!