கட்டுரை, அரசியல், கலாச்சாரம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு
இந்துத்துவத்திடம் தடுமாறும் கர்நாடக காங்கிரஸ்
முஸ்லிம்களின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்று அவர்களுடைய மனமும் முகமும் கோணாதபடி நடந்தும் பேசியும் வந்த காங்கிரஸ் கட்சி, கால மாறுதலால் அதே உத்தியை இப்போது இந்துக்களிடமும் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது. கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடைசியாக 2023 மே மாதம் நடந்தது. அந்தத் தேர்தலுக்கும் முன்னதாக கர்நாடக மாநிலச் செய்தித்தாள்கள் அனைத்திலும் நான்கு விஷயங்கள்தான் மாறி மாறி முக்கிய இடத்தைப் பிடித்தன.
முதலாவது, முஸ்லிம் பெண்கள் ‘ஹிஜாப்’புடன் உயர்கல்வி நிலையங்களில் கல்வி பயில தடை கூடாது என்று நடத்திய போராட்டம்; இரண்டாவது, இஸ்லாமியர்கள் நடத்தும் உணவகங்களில் ‘ஹலால்’ செய்த பிறகு பிராணிகளைக் கொன்று சமைப்பதை மற்றவர்கள் சாப்பிடலாமா என்ற கேள்வி; மூன்றாவது, முஸ்லிம் ஆண், இந்துப் பெண்ணைக் காதலிப்பதை ‘லவ்-ஜிகாத்’ என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தது; நான்காவது இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் போரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ராணுவத்தால் கொல்லப்பட்டவரும் இன்றைய கர்நாடகத்தை ஆண்டவருமான ‘திப்பு சுல்தான்’ நல்லவரா என்பது!
இந்த நான்கு விவகாரங்களும் ஹிஜாப், ஹலால், லவ்-ஜிகாத், திப்பு சுல்தான் என்ற நான்கு வார்த்தைகளால் அழைக்கப்பட்டு, கர்நாடக வாக்காளர்களை மத அடிப்படையில் ஒன்று திரளவைக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வேலையில்லாத் திண்டாட்டமோ, விலைவாசி உயர்வோ, கல்வி நிலையங்கள் – மருத்துவமனைகளின் பற்றாக்குறையோ அவற்றின் திறமோ, மாநிலத்தில் ஏற்பட்டுவரும் காற்று மாசு பற்றியோ, தண்ணீர் பற்றாக்குறை குறித்தோ, சாலைகளின் தரமற்ற தன்மையோ பேசப்படவில்லை; இவை போன்ற வாழ்க்கையுடன் தொடர்புள்ளப் பிரச்சினைகள்தான் ஆறு கோடி கர்நாடக மக்களின் முக்கியப் பிரச்சினைகளாகப் பேசப்பட்டிருக்க வேண்டும்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி
முக்கியமற்ற பிரச்சினைகளை முக்கியமானதாக மாற்றியதற்குக் காரணம், அரசியல். அன்றைக்கு ஆட்சியில் இருந்த பாஜக அரசு மக்களிடையே ஆதரவை இழந்துகொண்டிருந்தது. அதனுடைய முதல்வர் செயல்வேகம் அற்றவராக இருந்தார்.
சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோல்வி அடையப்போவதும் ஆட்சியை இழக்கப்போவதும் உறுதி என்பதைத் தெரிந்துகொண்ட பாஜகவின் தில்லித் தலைமை, தேர்தலின் மையக் கருத்தாக முஸ்லிம் எதிர்ப்புணர்வை விசிறிவிட்டு இந்துக்களைத் தங்கள் பக்கம் திரட்டி வென்றுவிட முடிவுசெய்தது. “இந்திய முஸ்லிம்கள் இந்துக்களைப் போல அல்ல, அவர்கள் வித்தியாசமானவர்கள், அவர்களுடைய விசுவாசம் இந்த நாட்டுக்கு அல்ல” என்றெல்லாம் விஷமப் பிரச்சாரம் செய்யத் தீர்மானித்தனர். இதற்காக கட்சியின் சமூக ஊடகங்கள் பல புனைக் கதைகளைத் தயாரித்து வெளியிட்டன. “திப்பு சுல்தானைக் கொன்றது பிரிட்டிஷ் ராணுவ (ஆங்கிலேயே) வீரர்கள் அல்ல, கர்நாடகத்தின் வொக்கலிக சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு தீரர்கள்தான்” என்றுகூட வாட்ஸப் குழுக்களில் பரப்பினர்.
இந்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுவிட்டன. கர்நாடக காங்கிரஸ் கட்சி அசைக்க முடியாத பெரும்பான்மை வலுவுடன் ஆட்சியைப் பிடித்துவிட்டது. இதற்கு இரண்டு அம்சங்கள் பெரிதும் உதவின.
இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு
கர்நாடகம்: இந்துத்துவத்தின் தென்னக ஆய்வுக் கூடம்
04 Apr 2023
வெற்றிகரமான ஆறு மாதங்கள்
முக்கியமானது, இந்தி பேசும் மாநிலங்களில் இருப்பதைப் போல அல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாக அமைப்பு விரிவாகவும் வலிமையாகவும், தலைவர்கள் – தொண்டர்களுடன் கட்டுக்கோப்பாக இருந்தது; முன்னாள் முதல்வர் சித்தராமய்யாவும் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாரும் ஒற்றுமையாகவும் உற்சாகமாகவும் செயல்பட்டு கட்சிக்கு வெற்றி தேடித் தந்தனர் (ராஜஸ்தான், சத்தீஸ்கரில் கட்சியின் முக்கியத் தலைவர்கள் தங்களுக்குள் இருந்த போட்டியால் கட்சியின் வெற்றியைச் சீர்குலைத்தனர்).
முதல்வர் சித்தராமய்யா, துணை முதல்வர் சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த நவம்பரில் ஆறு மாதங்களை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்துவிட்டது. இதனால் மாநில அரசியல் விவாதங்களும் பத்திரிகைச் செய்திகளும் ஹிஜாப், ஹலால், லவ்-ஜிகாத், திப்பு சுல்தான் பிரச்சினைகளிலிருந்து நகர்ந்துவிட்டன.
பருவமழை பெய்யாததால் மாநில விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள், காடுகள் அழிப்பால் ஏற்படும் மழைக்குறைவுப் பிரச்சினை, தலைநகர் பெங்களூருவிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நெடுஞ்சாலைகள் குண்டும் – குழியுமாக போக்குவரத்துக்குத் தகுதியற்ற நிலையில் இருக்கும் அவலம், புதிய அமைச்சர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அரசில் வேலைபோட்டுத் தருவது, அதிகாரிகளின் ஊர் மாற்றங்களுக்கு லஞ்சம் வாங்குவது போன்றவை குறித்து செய்திகள் வந்தன; இந்த மாற்றம் எனக்கு ஒரு வகையில் நிம்மதியைத் தந்தது.
தேர்தலுக்கு முன்னால் கர்நாடக செய்தித்தாள்கள் அரசிடம் இருந்துவந்த நேரடி – மறைமுக நெருக்குதல்களால், இந்து – முஸ்லிம் பிரச்சினைகளையே பெரிதாகப் பிரசுரித்தன. இப்போது அவர்களுக்கு அப்படியொரு கட்டாயமில்லை. 2023ஆம் ஆண்டின் கடைசி வாரங்களில் கர்நாடகப் பத்திரிகைகளின் செய்திகளில் தெரியும் மாற்றங்களை என்னுடைய நண்பர்களுக்குச் சுட்டிக்காட்டினேன், அவர்களும் என்னுடைய ஆய்வு சரிதான் என்று ஆமோதித்தார்கள்.
மீண்டும் தலைதூக்கும் மதம்
என்னுடைய இந்த நிம்மதி வெகு விரைவிலேயே ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. மதம் தொடர்பான செய்திகள் மீண்டும் பத்திரிகைகளின் முதல் பக்கங்களுக்கு வரத் தொடங்கியிருக்கின்றன.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதாலும் கர்நாடகத்தில் உள்ள 28 இடங்களைக் கைப்பற்ற காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி இரண்டுக்கும் உள்ள தீவிரப் போட்டிகளாலும் இப்போது இந்துக்களின் வாக்குகளை மொத்தமாகத் தங்கள் கட்சிக்குத் திருப்பிவிட வேண்டும் என்ற வேகம் இரண்டு கட்சிகளுக்குமே ஏற்பட்டிருக்கிறது.
அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டி திறப்பு விழா நடந்ததை அடுத்து நாடு முழுவதும் இந்து பெருமிதம் தலைதூக்கியபடி இருப்பதால், அதை அப்படியே அரசியலுக்கும் அறுவடைசெய்ய இரு தரப்புமே களம் இறங்கியிருக்கின்றன.
மாண்டியா (மண்டயம்) மாவட்டத்தில் நெடிதுயர்ந்த ஒரு கொடிக் கம்பத்தில் எந்தக் கொடியைப் பறக்கவிடுவது என்பதை பெரிய சர்ச்சையாக்கிவிட்டது கர்நாடக பாஜக. அந்தக் கொடிக் கம்பம் பழைய ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் இருப்பதால் அங்கு காவிக் கொடியைத்தான் பறக்கவிட வேண்டும் என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் வாதிட்டனர்.
கொடிக் கம்பம் இருக்கும் இடம் மாநில அரசுக்குச் சொந்தமானது என்பதால் அங்கு தேசியக் கொடியைப் பறக்கவிடலாம் அருகிலேயே மாநிலத்துக்கான சிவப்பு-மஞ்சள் நிறம் கலந்த கொடியைப் பறக்கவிடலாம் என்று மாநில நிர்வாகம் (காங்கிரஸ் ஆட்சி) வலியுறுத்தியது.
உள்ளூர் அளவில் பேசித் தீர்த்திருக்க வேண்டிய அற்ப சமாச்சாரம், மாநில அளவில் பெரிய விவாதமாக உருவெடுத்திருப்பதுடன் தேசிய அளவில் ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. கர்நாடக மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா உடனே அந்த ஊருக்குச் சென்று, சம்பவ இடத்தையும் கொடிக் கம்பத்தையும் நேரில் பார்த்ததுடன், அதில் காவிக் கொடி பறக்க அனுமதிக்க முடியாது என்று கூறி இந்து சமுதாயத்தையே அவமானப்படுத்திவிட்டது அரசு என்று சாடினார். அங்கே மிகப் பெரிய பொதுக்கூட்டமும் நடந்தது.
அவருக்கு இணையாக ‘மதச்சார்பற்ற’ ஜனதா தளத் தலைவரும் முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசுவாமியும் மேடையில் நின்றார்; சொந்த நலனுக்காக கூட்டணிகளை அடிக்கடி மாற்றிக்கொள்வதில் நிதீஷ் குமாருக்கு இணையானவர் குமாரசுவாமி. கட்சிக்கு ‘மதச்சார்பற்ற ஜனதா தளம்’ என்று பெயர் இருந்தபோதிலும் காவித் துண்டையும் கழுத்தில் அணிந்து நின்றார் குமாரசுவாமி.
இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு
இந்துக்களுக்கு இந்துத்துவம் தருவது வெறுப்பையும் மனநோயையும்தான்!
14 Apr 2022
சி.டி.ரவியின் வாக்குறுதி
ஜனவரி மாத கடைசி வாரம் முழவதும் மாண்டியா கொடிக் கம்ப விவகாரம்தான் கர்நாடக செய்தித்தாள்களில் இடம் பிடித்தது. அரசின் மறுப்பைக் கண்டிக்கும் வகையில் மாநிலத்தின் அனைத்து ஊர்களிலும் - வகுப்பு மோதலுக்கு எப்போதும் தயாராகக் காத்திருக்கும் கடலோர மாவட்டங்கள் உள்பட – பெரிய பெரிய கம்பங்கள் நடப்பட்டு அதில் காவிக் கொடி பறக்கவிடப்படும் என்று பாஜகவும் இந்து அமைப்புகளும் அறிவித்துள்ளன.
கொடிக் கம்பம் மூலம்தான் என்றில்லை மதரீதியாக மக்களைத் திரட்ட பிற வழிகளும் உண்டு என்பது தெரியவருகிறது. கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரான சி.டி.ரவி கட்சித் தொண்டர்களிடம் பேசியதாக ‘டெக்கான் ஹெரால்ட்’ பத்திரிகை பிப்ரவரி 2ஆம் தேதி பிரசுரித்த செய்தி அதை உறுதிப்படுத்துகிறது. “பீதர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசம் இருக்கும் இஸ்லாமியத் துறவிக்கான தர்கா, 12வது நூற்றாண்டில் பசவண்ணர் என்ற இந்துமத சீர்திருத்தவாதியால் மண்டபமாக எழுப்பப்பட்டது. அதைத்தான் தர்காவாக மாற்றியிருக்கிறார்கள், அதை மீட்டு அதன் பெருமையை நிலைநாட்ட வேண்டும். மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது பாஜக இதை நிச்சயம் நிறைவேற்றும்” என்று தொண்டர்களுக்கு உறுதி அளித்திருக்கிறார் ரவி.
பிறகு அடுத்து வரப்போகும் மக்களவைத் தேர்தல் குறித்துப் பேசியிருக்கிறார். அவர் பேசியதன் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘டெக்கான் ஹெரால்ட்’ பத்திரிகையில் வந்திருக்கிறது: “இந்தத் தேர்தல் காசி விசுவநாதருக்கும் ஔரங்கசீப்புக்கும் இடையிலானது, சோமநாதருக்கும் கஜினி முகம்மதுவுக்கும் இடையிலானது, ஆஞ்சநேயருக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையிலானது; காசியிலும் மதுராவிலும் அயோத்தியைப் போலவே பிரம்மாண்டமான ஆலயங்களைக் கட்ட நாட்டில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார். இருபத்தொன்றாவது நூற்றாண்டு பொதுத் தேர்தல், வரலாற்றின் இடைக்காலத்து பகைமை – பூசல்கள் அடிப்படையில் நடக்க வேண்டும் என்கிறார்.
தடம் மாறுகிறார்களா காங்கிரஸ் தலைவர்கள்?
கர்நாடக பாஜக தலைவர்கள் இப்படியெல்லாம் பேசுவது அவர்களுடைய சுபாவம்தான்; நாம் கவனிக்க வேண்டியது எதையென்றால் – அது மிகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கிறது - காங்கிரஸ் தலைவர்களும் இதற்கு இரையாகி, இந்துக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் (தாஜா) பேசத் தொடங்கியிருப்பதுதான்; பெரும்பான்மைச் சமூகத்தின் பாரம்பரியப்படிதான் அரசியலும் அரசு நிர்வாகமும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்றுக்கொண்டுவிட்டவர்களாக காங்கிரஸார் மாறிவிட்டனர்.
கர்நாடக அரசில் இந்து அறநிலையத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் ராமலிங்க ரெட்டி என்ற மூத்த அமைச்சர் இதை முன்னின்று செய்திருக்கிறார். அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட ஜனவரி 22இல் கர்நாடகத்தில் உள்ள எல்லா இந்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகளை நடத்த அதிகாரப்பூர்வமாகவே உத்தரவிட்டிருக்கிறார் (அன்றைக்கு அயோத்தியில் நடந்த பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை நாடே தொலைக்காட்சிகளில் நேரலையாக தரிசித்தது).
இதற்குப் பிறகு கேரளத்துக்குச் சென்றிருந்த மாநிலத் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் கேரள நிருபர்கள், ‘இது ஏன்?’ என்று கேட்டபோது, “பாருங்கள், நாம் எல்லோருமே இந்துக்கள்தானே” என்று பதில் அளித்திருக்கிறார் சிவகுமார். இந்துக்களின் ஆதரவைப் பெறும் முயற்சியாக, இரண்டு வாரங்களுக்குப் பிறகு நிருபர்களைச் சந்தித்த ராமலிங்க ரெட்டி, கர்நாடகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ராமர் கோயில்களில் திருப்பணி செய்ய அனுமதி தந்து நிதியும் ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமய்யாவிடம் கேட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இதுவரையில் முதல்வர் சித்தராமய்யா இதை ஏற்றதாகவோ அனுமதி வழங்கியதாகவோ நான் செய்தி எதையும் படிக்கவில்லை. கடந்த காலங்களில் அரசியலிலும் மதத்திலும் இப்படி எழும் கோரிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்துப் பேசியவர் சித்தராமய்யா. ஆனால், சமீப காலமாக அவர் பேசுவதைப் பார்த்தால் அவரும் மாறிவிட்டாரோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடக்கிறது என்பதற்கு எதிர்வினைபோல, அவருடைய கிராமத்தில் உள்ள ராமர் கோயிலுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார், அத்துடன் நிற்கவில்லை, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தையும் எழுப்பியிருக்கிறார். தானும் தெய்வ நம்பிக்கை உள்ள இந்துதான் என்று காட்டிக்கொண்டிருக்கிறார்.
இதையும் வாசியுங்கள்... 2 நிமிட வாசிப்பு
அயோத்தி புறக்கணிப்பு காங்கிரஸின் வரலாற்று முடிவு
11 Jan 2024
எடுபடுமா காங்கிரஸின் இந்த வியூகம்?
இன்று ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷம் இறைவனுக்கான சரண கோஷமாக இல்லாமல், போரிடத் தூண்டும் ஆவேச முழக்கமாக மாறிவிட்டது; 1980களில் வட இந்தியாவில் இந்துக்கள் ஒருவரை ஒருவர் காலையில் பார்த்துக்கொள்ளும்போது ‘ராம் - ராம்’ என்று கூறுவார்கள் அல்லது ‘ஜெய் சியா ராம்’ (ஜெய் சீதா ராம்) என்பார்கள். ‘ராம் - ராம்’ என்பது மிருதுவான முழுக்கம் என்றால் ‘ஜெய் சீதா ராம்’ என்பது தாய்மை கனிந்த முகமனாக இருக்கும்.
சித்தராமய்யா, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றே கூறியிருப்பது அவருடைய மனதில் ஏற்பட்டுவரும் சலனத்தைக் காட்டுகிறது; அடுத்து நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு அதிக இடங்களைப் பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 28 தொகுதிகளில் ஒன்றில் மட்டும்தான் வென்றது.
வாக்குகளுக்காக இந்துத்துவர்களின் நடவடிக்கைகளைக் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும் பின்பற்றுவது கிட்டத்தட்ட மோசடியான செயலாகும். இவற்றால் அவர்களுக்கு அரசியல் வெற்றியும் நிச்சயமில்லை. சத்தீஸ்கரிலும் மத்திய பிரதேசத்திலும் முன்னாள் முதல்வர்கள் பூபேஷ் பகேலும் கமல்நாத்தும் தேர்தல் சமயத்தில் இந்துக் கோவில்களில் தொடர்ந்து வழிபட்டார்கள், வழியில் தென்பட்ட ராமர் – ஆஞ்சநேயர் கோயில்கள் ஒன்றைக்கூட விடவில்லை.
இந்த விளையாட்டில் பாஜகவைத் தோற்கடிக்க காங்கிரஸ்காரர்களால் முடியவே முடியாது என்பதை மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டன. அப்படியுமா?
தொடர்புடைய கட்டுரைகள்
கர்நாடகம்: இந்துத்துவத்தின் தென்னக ஆய்வுக் கூடம்
ஹிஜாப்: உங்கள் முடிவு என்ன?
அயோத்தி: தேசத்தின் சரிவு
அயோத்தி புறக்கணிப்பு காங்கிரஸின் வரலாற்று முடிவு
வாக்கு வித்தியாசத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்
இந்து சாம்ராஜ்யாதிபதியும் இந்தியாவின் இறக்கமும்
இந்துக்களுக்கு இந்துத்துவம் தருவது வெறுப்பையும் மனநோயையும்தான்!
தமிழில்: வ.ரங்காசாரி
5
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.