கட்டுரை, அரசியல், கலாச்சாரம், வரலாறு, புத்தகங்கள் 5 நிமிட வாசிப்பு
அம்பேத்கரை அறிய புதிய நூல்
ஒவ்வொரு இந்தியரும் அவசியம் படித்தாக வேண்டும் என்று நான் தொகுத்துள்ள புத்தகங்களின் பட்டியலில் நான்கு முதன்மையானவை. பதிப்புக்கப்பட்ட ஆண்டு வரிசைப்படி அவை, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் ‘ஹிந்த் ஸ்வராஜ்’ (1909), ரவீந்திரநாத் தாகூரின் ‘நேஷனலிஸம்’ (1917), பீம்ராவ் அம்பேத்கரின் ‘அன்ஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்’ (1936), ஜவாஹர்லால் நேருவின் ‘தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ (1946).
இந்தப் புத்தகங்கள் யாவும் ‘உரிய கால’த்தில் எழுதப்பட்டவை, ‘எந்தெந்த கால’த்துக்கும் பொருத்தமானவை; எங்கு பிரசுரமானவையோ - அந்த இந்தியாவுடன் நேரடியாகப் பேசும் தன்மை கொண்டவை, எழுதியவர்களுடைய காலத்துக்குப் பிறகும் அடுத்துவரும் இந்தியத் தலைமுறைகளுடனும் பேசக்கூடியவை (தாகூருடைய நூல் தவிர ஏனைய மூன்றும் தமிழில் வந்திருக்கின்றன).
தாகூரின் தேசியவாதம்
இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் – அரசியல் பூசல்களைத் தீர்த்துக்கொள்ள வன்முறையை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என்று காந்தி தன்னுடைய புத்தகத்தில் உணர்ச்சிமயமாக வலியுறுத்துகிறார். ஜப்பானிலும் அமெரிக்காவிலும் அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் - பிற நாட்டவர்கள் என்றாலே வெறுக்கும் - தேசியர்களாக இருந்தது ஆபத்தானது என்று எச்சரிக்கிறார், அவர் எழுதிய நூறாண்டுகளுக்குப் பிறகு, ‘உலகுக்கே தலைமை தாங்கும் வல்லமை இந்தியாவுக்குத்தான் இருக்கிறது’ என்று நவ தேசியர்கள் முழங்கிவரும் இந்நாளில் இன்றைய இளைஞர்கள் வாசிப்பதற்கேற்ற நூல்தான் தாகூருடையது.
இந்தியாவில் உருாவன சமூக நிறுவன அமைப்புகளிலேயே தனித்துவமானதும், மக்களைப் படுமோசமாக பாகுபடுத்துவதுமான சாதி அமைப்பை (வர்ணாஸ்ரமம்) மையமாக வைத்து அம்பேத்கர் தனது புத்தகத்தை எழுதியிருக்கிறார்; மனிதாபிமானத்துடன் இந்தியச் சமூகம் புது வாழ்க்கையைத் தொடங்க, சாதி அமைப்பையும் அதனையொட்டிய பழக்க வழக்கங்களையும் எப்படி அடியோடு தூக்கி எறிய வேண்டும் என்று தர்க்கரீதியாக விளக்கி இருக்கிறார்.
இந்தியக் கலாச்சாரம் காலம் காலமாக உருவாகி வளர்ந்து உரம் பெற்று பல்வேறு அடுக்குகளாலானது, தவிர்க்கவே முடியாதபடிக்கு பன்மைத்துவம் வாய்ந்தது என்பதை நேரு தனது நூலில் அற்புதமாக விவரிக்கிறார்; ‘ஒரே மதம் – ஒரே மொழி’ என்று நாட்டையே ஒரே தேசிய அடையாளமுள்ளதாக மாற்ற நினைக்கும் இப்போதைய சித்தாந்தத்துக்கு நேருவின் பன்மைத்துவ விவரிப்பு மிகுந்த சவால்களை விடுப்பதாகும்.
சக இந்தியர்களுக்கான எழுத்து
இந்த நான்கு புத்தகங்களில் அம்பேத்கருடைய புத்தகம், தான் சொல்ல வந்ததை கோர்வையாகவும் குழப்பமில்லாமலும் புரியும்படியாகவும் நல்ல வடிவத்திலும் எழுதப்பட்டிருக்கிறது.
அகிம்சையையும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் காந்தியின் நூல் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நவீன மனித நாகரீகம் ஆகியவற்றை மிதமிஞ்சி ஆங்காங்கே கண்டிப்பதாக அமைந்திருக்கிறது. நேருவின் புத்தகமோ, சொல்ல வருவதை நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைப்பதாகவோ, சொல்லவந்த கருத்துகளிலிருந்து சற்றே விலகுவதாகவோ இருக்கின்றன. அதற்குக் காரணம் சிறையில் இருந்தபடி எழுதியதால் அவ்வப்போது கிடைக்கும் புறவுலகச் செய்திகளாலோ, சிறைக்குள்ளேயே நடக்கும் விஷயங்களாலோ பாதிக்கப்பட்டு எழுதியதாக இருக்கலாம்.
தேசியம் குறித்து தாகூர் எழுதியதன் நோக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், ஆங்காங்கே அவருடைய கருத்துகள் சற்றே அலங்கோலமாகவும் வெளிப்படுகின்றன. இதற்குக் காரணம் அவர் தன்னுடைய தாய்மொழியான வங்காளியில் எழுதாமல், அதிகப் பயிற்சி இல்லாத ஆங்கிலத்தில் எழுதியதாகக்கூட இருக்கலாம்.
மற்ற மூன்று புத்தகங்களைவிட அம்பேத்கரின் புத்தகம் அளவில் சிறியது; தான் சொல்ல வந்ததைச் சுருக்கமாகவும் நேரடியாகவும் சொல்வதற்கு அது மட்டுமே காரணம் இல்லை. சாதியப் பாகுபாட்டை நேரிலேயே அனுபவித்தவர் என்ற வகையில், சொந்த அனுபவத்திலிருந்து எழுதப்பட்டதால் இந்த நூல் நன்றாக இருக்கிறது என்பதே பொருத்தமானது. அதைவிட முக்கியம் படித்த அறிஞரின் கைவண்ணம் இருப்பதாலும் நூல் சிறப்பிடம் பெறுகிறது.
இளம் வயதிலிருந்தே அம்பேத்கர் எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவராகவும், ஆழ்ந்து வாசிப்பவராகவும் இருந்தார். கொலம்பியாவிலும் லண்டனிலும் அவர் படித்த மேல் படிப்புகளும், டாக்டர் பட்டத்துக்காக அவர் மேற்கொண்ட இரண்டு ஆராய்ச்சிகளும் அவருடைய வாசிப்பனுபவத்தையும், தெரிந்துகொள்ளும் ஆர்வத்தையும் பலமடங்கு பெரிதாக்கிவிட்டன. சமூகவியல், பொருளாதாரம், மெய்யியல், வரலாறு, சட்டம் ஆகிய துறைகளில் ஏராளமான நூல்களைப் படித்தார் அம்பேத்கர்.
இந்தப் பயிற்சிகள் காரணமாக தனது ஆய்வுத்திறனைப் பயன்படுத்தி, வாசித்ததையும் அனுபவித்ததையும் இணைத்து அற்புதமாக இந்த நூலை எழுதியிருக்கிறார். புத்தகம் கோர்வையாக இருப்பதுடன் படிப்பவர்கள் நியாயத்தை உணர்ந்து ஏற்கத்தக்க வகையிலும் இருக்கிறது. கடுமையான கலைச்சொற்களையும் அருஞ்சொற்களையும் பயன்படுத்தும் இன்றைய கல்வியாளர்களைப் போல அல்லாமல், அன்றாடப் பேச்சு மொழியிலேயே இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை சக அறிஞர்கள் படித்துப் பாராட்ட வேண்டும் என்பதற்காக எழுதவில்லை, சாமானிய சக இந்தியர்களுக்காக எழுதியிருக்கிறார்.
காந்தியின் கருத்தே முதன்மை இலக்கு
தில்லி பதிப்பாளர் ஒருவர் வெளியிட்ட அம்பேத்கரின் நூலை 1990களின் தொடக்கத்தில் முதலில் படித்தேன். பிறகு காந்தியை வாசிக்கத் தொடங்கினேன், அம்பேத்கரின் நேரடி அணுகுமுறையும் வார்த்தைகளின் வேகமும் என்னைக் கவர்ந்தன. நூலின் முக்கியமான இடத்தில், காந்தியின் இந்து மதம் பற்றிய கருத்து ஒரு கண்ணோட்டமாகவே குறிப்பிடப்பட்டிருந்தாலும், சாதிகள் பற்றிய காந்தியின் கருத்தைத்தான் முதன்மையான இலக்காக வைத்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் அம்பேத்கர்.
வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் அந்தச் சாதி அபிமானத்தை விட்டுவிட்டு, மற்றவர்களுடைய வீடுகளுக்குப் போய் உரையாடியும், விருந்துண்டும், சேர்ந்து வாழ்ந்தும் சாதிக் கொடுமைகளைப் போக்கிவிடலாம், இந்து மதத்தையும் சீர்திருத்திவிடலாம் என்று கருதினார் காந்தி. இப்படிப்பட்டத் தாற்காலிகத் தீர்வுகளை ஆதரிக்க அம்பேத்கர் தயாரில்லை.
சாதிகளை நியாயப்படுத்தும் சாஸ்திரங்கள், வேதங்கள் எந்த அளவுக்கு ஏற்கத்தக்கவை என்று ஆராய்ந்து, அவற்றை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதன் மூலம்தான் இந்து மெய்யியல் மதத்துக்கே அடிப்படையாகத் தொடரும் சாதி அமைப்பைத் தகர்க்க முடியும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார்.
வியக்க வைத்த விமர்சன நூல்
அம்பேத்கர் நூலைக் கடந்த சில ஆண்டுகளில் பல முறை படித்துவிட்டேன், சில வேளைகளில் நான் கற்றுத்தந்த பல்கலைக்கழக மாணவர்களுடன் சேர்ந்தே வாசித்திருக்கிறேன். அம்பேத்கருடைய சிந்தனைகளிலும் பாரம்பரியத்திலும் ஆர்வம் உள்ள சமூகவியலாளர்கள், வரலாற்று அறிஞர்கள், வாழ்க்கை வரலாற்று நூலாசிரியர்கள், சாதி எதிர்ப்புத் தன்னார்வலர்கள் ஆகியோர் எழுதியுள்ள விமர்சன நூல்களையும் வாசித்திருக்கிறேன்.
அம்பேத்கருடைய புத்தகம், அதன் வாதங்கள், அதற்குக் கிடைத்த வரவேற்புகள் ஆகியவற்றைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டுவிட்டேன் என்றுதான் இருந்தேன் – ஹைதராபாத்தைச் சேர்ந்த மெய்யியல் பேராசிரியர் சையது சய்யீத் என்பவர் அந்தப் புத்தகத்துக்கு சம அளவில் எழுதியிருந்த ஆழ்ந்த விமர்சனத்தைப் படிக்கும் வரையில்! அம்பேத்கர் தன்னுடைய நூலில் எதைச் சொல்ல வருகிறார் என்ற கருத்துக்கு இதுவரையில் கூறப்படாத புதுமையான விளக்கத்தை, ஆழமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது சய்யீதின் நூல்.
சாதிகளை அழிப்போம் நூலை இதற்கு முன்னால் விமர்சித்தவர்கள் நான்கு விதமான கேள்விகளுக்கு பதில்களைக் கேட்டார்கள். முதலாவது, அம்பேத்கர் ஏன் அதை உரையாக நிகழ்த்த முடியாதபோது புத்தகமாக எழுதினார், அதையும் தன்னுடைய செலவிலேயே பதிப்பித்தார்? இரண்டாவது, யாருக்காக அந்தப் புத்தகத்தை எழுதினார்? மூன்றாவது, அந்தப் புத்தகத்தை எழுதியபோது இந்துக்களுக்கு மட்டுமா அல்லது அவர் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த இந்துவான காந்தியை மனதில் கொண்டு அவருடைய கருத்துக்கான விமர்சனமாகவே எழுதினாரா? நாலாவது, அம்பேத்கருடைய வாழ்க்கை வரலாற்றில் இந்தப் புத்தகமும் அதன் பின்விளைவுகளும் பொருத்தமாக இருப்பது எந்த இடத்தில்?
முழுமை அடைந்த கருத்துகள்
துணிச்சலாகவும் புரட்சிகரமாகவும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் முயற்சியில் பேராசிரியர் சய்யீத் இறங்கவில்லை. அந்த நூலைப் பற்றி விரிவாக ஆராய்வதைவிட, அந்த நூலின் உரைநடையையே அவர் நெருங்கி நின்று ஆராய்ந்திருக்கிறார். அவருடைய வார்த்தையிலேயே கூறுவதானால், “அம்பேத்கரின் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் எதைச் சொல்கின்றன – எதைப் பற்றி மட்டும் சொல்கின்றன” என்பதையே தன்னுடைய நூலில் எழுதியிருக்கிறார்.
நூலை எழுதிய நுட்பத்தை சய்யீத் விவரிக்கிறார். “அம்பேத்கர் சொல்வது இதுதான் என்றால், அவருடைய நிலைப்பாடு மீதும் அவருடைய வாதங்கள் மீதுமான விளைவுகள் இப்படிப்பட்டவைதான்” என்கிறார். இந்தப் புத்தகத்துக்கும் அம்பேத்கரின் இதர புத்தகங்களுக்கும் உள்ள உறவை அவர் சுட்டுகிறார். அத்துடன் அவருடைய விரிவான அரசியல் – சமூக சீர்திருத்தப் பணிகளுக்கும், நவீன இந்திய வரலாற்றில் அம்பேத்கருக்கான இடம் – அந்தஸ்து ஆகியவற்றுக்கும்கூட இதில் உறவு இருப்பதாக வரையறுக்கிறார். பேராசிரியர் சய்யீதே கூறுவது என்னவென்றால், “இந்தப் புத்தகத்தை வாசித்தபோது, இதை எழுதியவரின் ஆளுமை நிழல் அதன் மீது படிந்துவிடாமல் படிக்க முயன்றேன்” என்பதுதான்.
இந்த முயற்சியில் சய்யீத் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார். அம்பேத்கருடைய இருப்பிலிருந்து நாம் விலகிவிட முடியாது என்றாலும் இந்த நூலில் இடம் பெற்றுள்ள வாக்கிய அமைப்பு எப்படிப்பட்டது, அது சொல்லவரும் கருத்துகள் எப்படிப்பட்டவை என்பதை நம்மால் முழுதாகப் புரிந்துகொள்ள முடியும். சமூகம் பற்றிய அம்பேத்கரின் கருத்தியல் எந்த அளவுக்கு அசலானது என்பதை இந்த நூலிலிருந்து உணர முடிகிறது; அதிகாரம், செல்வாக்கு, பாகுபாடு என்ற அம்சங்களுள்ள சமூக, அரசியல், பொருளாதார, மதக் கூறுகளின் கண்ணோட்டம் எப்படிப்பட்டவை என்று இதில் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
நிஜ வாழ்க்கையில் இந்தக் கூறுகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தாலும், அவற்றையெல்லாம் எளிதாக ஒரே கலவையாகக் கலந்துவிடவும் முடியாது, அதில் ஒன்றை மட்டும் (உதாரணத்துக்கு பொருளாதாரம்) தனியே பிரித்து, இதுதான் சமூக உறவைத் தீர்மானிக்கிறது என்று எடைபோட்டுவிடவும் முடியாது.
சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வைப் பகுப்பாய்வு செய்ததில் மார்க்சிஸ்ட்டுகளைவிட அம்பேத்கரின் முயற்சி மிகவும் கூர்மையானது; இந்து சமூகத்தை மாற்றியமைக்க (சீர்திருத்த) காந்தியர்கள் முன்வைக்கும் யோசனைகளைவிட அம்பேத்கரின் கருத்துகள் முழுமையானவை.
அடையாள அரசியல் வழிவகுப்பது எதற்கு?
இந்தப் பின்னணியில், இன்றைய ‘அடையாள அரசிய’லையும் பேராசிரியர் சய்யீத் ஊடுருவி விமர்சித்திருக்கிறார். ‘சாதி’ என்ற அடையாளத்தை எல்லா வழிகளிலும் முற்றாக அழித்துவிட வேண்டும் என்றார் அம்பேத்கர்; ஆனால் இன்றைக்கோ, அதை வெளிப்படையாக முன்வைக்கும் செயல்களே இடம்பெறுகின்றன என்கிறார். ‘அடையாள அரசியல்’ என்பது ‘பேரினவாத’ அரசியலுக்கே இறுதியில் வழிவகுக்கும் என்பதையும் அம்பேத்கர் தனது ஆய்வில் கூறியிருக்கிறார். (இருபத்தோராவது நூற்றாண்டில் இந்தியாவிலும் உலக அளவிலும் பேரினவாத அரசியலே கோலோச்சுகிறது). அப்படி செல்வாக்கு பெறும் ‘பேரினவாதம்’, அது எந்த நாட்டைப் பீடிக்கிறதோ அதன் தார்மிக நெறிகளையும், நாகரிக நடத்தையையுமேகூட தாக்கி நோயுறச் செய்துவிடும் என்றிருக்கிறார்.
இந்துக்களுடைய கடந்தகால வரலாறும் கலாச்சாரமும் மிகவும் போற்றும்படியாக இருந்தது என்று இப்போது தொடர்ந்து வலியுறுத்தப்படும்போது, அம்பேத்கர் இருந்திருந்தால் இதை எப்படிப் பார்த்திருப்பார் என்று பேராசிரியர் சய்யீத் எழுதுகிறார். ஒடுக்குமுறை, அடிமைத்தனம், மக்களில் பெரும்பாலானவர்களை பிறப்பினாலேயே தங்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று மேல்சாதி இந்துக்கள் கருதியதே இந்தியக் கலை–கலாச்சாரத்தின் நீண்ட மனிதகுல பாரம்பரியம் என்றால் அதனால் என்ன பலன்?’ என்றே அம்பேத்கர் கேட்டிருப்பார் என்கிறார்.
இதையும் வாசியுங்கள்... 6 நிமிட வாசிப்பு
அம்பேத்கரையும் சண்முகம் செட்டியையும் ஏன் அமைச்சரவைக்கு அழைத்தார் நேரு?
18 Nov 2021
சய்யீதின் இந்த நூல் பங்களிப்பில் முக்கியமான இன்னொரு அம்சம், அம்பேத்கரை சொந்தம் கொண்டாடுவது பற்றியது. ‘அவருடைய ஆதரவாளர்களில் பலர், அவர் சிறந்த சிந்தனையாளர் என்பதால் அவருடைய கருத்துகளைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்காமல் – அவர் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரைத் தலைவராக ஏற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்’ என்கிறார். இந்த அடையாளம் இல்லாமல்கூட, அம்பேத்கர் மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும் நீதிக்காகக் குரல் கொடுப்பவராகவுமே அனைவராலும் ஏற்கப்படுவார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
வெகு விரைவில் பிரசுரமாகவுள்ள சையது சய்யீதின் புத்தகமானது, அம்பேத்கரின் புத்தகத்தை மிக அண்மையிலிருந்து வாசிக்கும் அனுபவத்தைத் தரவல்லது. அது மட்டுமல்ல, அம்பேத்கரின் புத்தகத்தை மீண்டும் ஒருமுறை வாசிக்க வைக்கவல்லது. இந்தியர் ஒருவரால் மிக ஆழ்ந்து வாசித்து, மேதமை பொங்க எழுதப்பட்டுள்ள அசலான ஆக்கம் என்பது இதன் மற்றுமொரு சிறப்பு.
என்னைப் போல அம்பேத்கரின் சாதிகள் அழிப்பு பற்றிய புத்தகத்தை ஏற்கெனவே ஒரு முறையல்ல – பல முறை படித்தவர்களும்கூட, சய்யீதின் நூலில் உள்ள கருத்துகளும் வாதங்களும் மூல நூல் மீது புத்தொளியைப் பாய்ச்சுவதைக் காண்பீர்கள். அம்பேத்கரின் புத்தகத்தை இதுவரை வாசித்ததே இல்லையா, இந்த அற்புதமான விமர்சன நூல், புதிய பார்வையோடும் திறந்த மனதோடும் அதை எப்படி அணுக வேண்டும் என்பதற்குச் சிறப்பாக வழிகாட்டும்.
தொடர்புடைய கட்டுரைகள்
அம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?
அம்பேத்கர் ஓர் எளிய அறிமுகம்: ஏகே பேட்டி
அம்பேத்கரின் 10 கடிதங்கள்
பூர்வ பௌத்தமும் புரட்சி பௌத்தமும்
அம்பேத்கரையும் சண்முகம் செட்டியையும் ஏன் அமைச்சரவைக்கு அழைத்தார் நேரு?
தமிழில்: வ.ரங்காசாரி
1
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.