தமிழில் விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் – அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயவுசெய்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள். கடந்த வாரம் ‘அருஞ்சொல்’ இதழின் நிறுவனரும் முன்னாள் ஆசிரியருமான சமஸ், ‘அருஞ்சொல்’ நிறுவனத்திலிருந்து விலகியது தொடர்பில் ‘வாழ்க அருஞ்சொல்… விடைபெறுகிறேன்!’ எனும் தலைப்பில் அறிவிப்புக் கட்டுரை ஒன்று வெளியாகியது. அதற்கு வாசகர்கள் பலரும் ஆசிரியர் சமஸுடனான தங்கள் அனுபங்களைப் பகிர்ந்துகொண்டனர். அவற்றில் தேர்ந்தெடுத்த சிலவற்றை இங்கே தருகிறோம்.
அருஞ்சொல்: ஓர் அருஞ்சாதனை
‘வாழ்க அருஞ்சொல்… விடைபெறுகிறேன்!’ என்கிற தலைப்பைப் பார்த்ததும் பக்கென்று இருந்தது. ஆனால், இங்கிருந்து கிளம்பி இதைவிட இன்னும் பெரிய தளத்தின் மூலம் தொடர்ந்து செயல்படத்தான் போகிறீர்கள் என்பது ஆறுதல். ‘விகடன்’ காலத்திலிருந்தே உங்கள் எழுத்துகளைப் படித்துவருகிறேன். நீங்கள், பாரதி தம்பி, திருமாவேலன் என ‘விகடன்’ செய்தியாளர்களுடைய கட்டுரைகளை உன்னிப்பாகப் படித்துத்தான் ஒரு செய்தியை எப்படி எழுத்தில் தர வேண்டும், மனத்தில் நினைக்கும் ஒரு கருத்தை எப்படி வரிகளில் கொண்டுவர வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்.
‘இந்து தமிழ்’ நாளிதழிலிருந்து விடைபெற்ற நீங்கள் இன்னோர் அச்சு இதழுக்கோ காட்சி ஊடகத்துக்கோதான் செல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இணைய இதழை நீங்கள் தொடங்கியது திகைக்க வைத்தது! வலைப்பூ எனும் பெயரில் ஆயிரக்கணக்கானோர் எழுதி, படித்து இணையத் தமிழை வளர்த்துவந்த காலம் போய், காட்சி ஊடகத்தின் தாக்கத்தால் இணையத்தில் தமிழைப் படிக்கவும் எழுதவும் தனிக் களங்கள் ஏதும் இல்லாமல் எல்லாரும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் பக்கம் கரை ஒதுங்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் நீங்கள் புதிதாக இணைய இதழைத் தொடங்கியது மிகப் பெரிய ரிஸ்க்!
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
ஆனாலும், அதை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத் திறம்படக் கையாண்டு இன்று ‘அருஞ்சொல்’ இதழை ஒரு முக்கிய ஊடகமாக நீங்கள் நிலைநிறுத்தியிருப்பது ஐயமே இல்லாமல் அருஞ்சாதனை! தான் ஒரு கட்டமைப்பை உருவாக்கினால் என்றென்றும் அது தன் கைப்பிடியிலேயே இருக்க வேண்டும் என நினைக்கும் மனித இயல்புக்கு மாறாக இப்படி ‘இந்து தமிழ்’, ‘அருஞ்சொல்’ என அடுத்தடுத்து நகர்ந்துபோய்க்கொண்டே இருக்கும் உங்களுடைய இந்தத் துறவு மனப்பான்மை, நீங்கள் காந்தியத்தை வெறுமே பேச்சுக்காக முன்னிறுத்துபவர் இல்லை, மாறாக அதையே முழுமையான வாழ்வியலாக உளமார ஏற்றுக்கொண்டவர் என்பதையே காட்டுகிறது!
சென்று வாருங்கள் எனச் சொல்ல நான் ‘அருஞ்சொல்’லில் பணியாற்றுபவன் இல்லை, வாசகன். இந்தப் பக்கம் போய் அந்தப் பக்கம் வாருங்கள்! எந்தப் பக்கம் நீங்கள் இருந்தாலும் உங்கள் தூவல் எப்பொழுதும் தமிழின் பக்கமும் தமிழரின் பக்கமும் மனிதத்தின் பக்கமுமே நிற்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. வாழ்க! வளர்க!! வெல்க!!!
-இ.பு.ஞானப்பிரகாசன்
¶
சமஸ் எனும் புனிதர்
சமஸுக்காகவே ‘அருஞ்சொல்’ வாசித்தேன். சமஸ் ‘இந்து தமிழ்’ நாளிதழில் எழுதும்போது மிகவும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. ‘அருஞ்சொல்’ உருவாகியபோது இன்னும் மதிப்புக் கூடியது. எழுத்தாளர் ஜெயமோகனின் ‘அறம்’ நூலை வாசித்தபோது கேரளாவில் உணவகம் நடத்திய ஒரு இஸ்லாமியரை சமஸுடன் ஒப்பிடத் தோன்றியது.
சமஸுக்கு உன்னதமான இலக்குகள் இருக்கலாம், ஆனால் அவர் எப்படி இருக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக மட்டும் இருக்க முடியாது, அது வாழ்வின் பல சூழல்களைப் பொறுத்தது. வாழ்தலுக்கும் பிழைத்தலுக்கும் இடையே உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் போன்றது, வாழ்வு மிக சவாலானது.
பிழைத்திருத்தல் மிக எளிது, நம் தேசப்பிதா காந்தியை நாம் வாசித்திருக்கலாம் பல ஆயிரக்கணக்கானோர் பிரமித்திருக்கலாம் அதுபோல மகாத்மா பாரதியையும் வாசித்திருக்கலாம் பிரமித்திருக்கலாம் அவர்கள் போல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சித்து இருக்கலாம். இதுபோல காமராஜரையும் கக்கனையும் பகத் சிங்கையும் இன்னும் பல புனிதர்களை நாம் வாழ்வில் அறிந்திருக்கலாம், அவர்களைப் போல வாழ்வில் சிறிதளவாவது வாழ்ந்துவிட முயற்சிப்பவர்கள் எல்லோரும் புனிதர்களே, அன்புக்குரிய சமஸ் நீரும் புனிதமானவரே!
-அழகர்சாமி
¶
சரியான நேரத்தில் சரியான முடிவு
முதன்முதலில் தற்செயலாக சமஸின் ‘சாப்பாடுப் புராணம்’ பதிவுகள் வாசிக்க கிடைத்தது. அன்று முதல் சமஸ் என்று பெயர் இருந்தால் வாசிக்காமல் விட்டதில்லை. அதற்கு ஏற்றாற்போல் சமஸின் தரமும் இன்றுவரை குறையவில்லை. அதனாலேயே ‘இந்து தமிழ்’ நாளிதழை வாசிக்க ஆரம்பித்தேன். மிகச் சிறந்த கட்டுரைகள் ‘இந்து தமிழ்’ நாளிதழில் சமஸ் நடுப்பக்க ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் வந்தன. அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரின் கட்டுரைகள் எல்லாம் அப்போதுதான் வந்தன. அவர் அங்கிருந்து வெளியேறியது பெரிய இழப்பே.
‘அருஞ்சொல்’ இதழ் ஆரம்பித்த காலத்திலிருந்து பெரும்பாலும் தவறவிட்டதில்லை. அதேபோல் எத்தனையோ கட்டுரைகளை நண்பர்கள் பலருக்கும் அனுப்பி படிக்கச் சொல்லி பிறகு அவர்களையும் மற்றவர்களுக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறேன். தினமும் ‘அருஞ்சொல்’ படியுங்கள் என்றெல்லாம் வாட்ஸப் மெசேஜ் அனுப்புவேன். ‘அருஞ்சொல்’ தரமும் அப்படியே உள்ளது. காட்சி ஊடகத்தின் முக்கியத்துவத்தை இனி தடுக்க முடியாது. அதன் வழியாக மட்டுமே இனிப் பெரும்பாலோரைச் சென்றடைய இயலும்.
யூட்யூபில் கொஞ்சமும் தரமற்ற அறமற்ற போலிகள், தற்குறிகள் செல்வாக்குடன் வலம் வருவதற்குக் காரணம் தரமான நம்பகத்தன்மை உள்ளவர்கள் இதுவரை காட்சி ஊடகத்தைப் புறக்கணித்து தவிர்த்ததன் விளைவுதான். அளவிட முடியாத அளவுக்கு வெறுப்பும் பொய்களும் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளன. இதைக் கண்டுகொள்ளாமல் விட்ட நாம் அனைவரும்தான் இதற்கு முற்றிலும் பொறுப்பு. அந்த அபாயத்தை உணர்ந்து சமஸ் அவர்கள் காட்சி ஊடகம் பக்கம் செல்வது முற்றிலும் சரியான முடிவு. சமஸ் எப்போதும்போல் இதையும் தீவிரத்தன்மையுடன் செய்வார் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்!
-ராஜா
தொடர்புடைய கட்டுரைகள்
வாழ்க அருஞ்சொல்… விடைபெறுகிறேன்!
அடுத்த கட்டத்துக்குச் செல்கிறது அருஞ்சொல்
3
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.