கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

பிராந்திய கட்சிகளின் குடையாக வேண்டும் காங்கிரஸ்

சமஸ் | Samas
28 May 2024, 5:00 am
1

ரசியல் கட்சிகள் எதுவாயினும் காலத்துக்கு ஏற்ப தங்களை வடிவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

அமெரிக்காவில் தோன்றிய முதல் கட்சியான கூட்டாட்சி கட்சியோ (1789), ஜனநாயகக் குடியரசுக் கட்சியோ (1792) ஏன் காணாமல் போயின? அல்லது ஜனநாயகக் கட்சியும் (1828), குடியரசுக் கட்சியும் (1854) எப்படி இன்றும் செல்வாக்கோடு திகழ்கின்றன? இரண்டு கேள்விகளுக்கும் ஒரே காரணம்தான் பதில்: சூழலுக்கு ஏற்ற உள்ளடக்க மாற்றம்.

சரத் பவாரின் சமீபத்திய பேட்டி ஒன்றை வாசித்தபோது, இந்தியாவின் மூத்த கட்சியான காங்கிரஸின் உள்ளடக்க மாற்றத்துக்கான சரியான தொடக்கம் என்று தோன்றியது. சுதந்திர இந்தியாவில் உருவெடுத்த உயரமான தலைவர்களில் ஒருவரான பவார், பல வகைகளில் அரிய கலவை என்பதோடு இணைத்தே அவருடைய கருத்தைப் பார்க்க வேண்டும். 

சத்தாராவின் விவசாயச் சங்க அரசியல், மும்பையின் பெருநகர அரசியல் இரண்டின் கூட்டுக் கலவை பவார். இந்தியாவில் பிரதமர் பதவிக்கு அடுத்து, மிகுந்த செல்வாக்கானதாகப் பார்க்கப்படும் மஹாராஷ்டிரத்தின் முதல்வர் பதவியை நான்கு முறை வகித்ததோடு, மத்திய அரசியலிலும் பிரதமர் பதவிக்கான பரிசீலனையில் பல சமயங்களில் பேசப்பட்டவர். பவாரின் அறுபதாண்டு அரசியல் வாழ்க்கையானது, கிட்டத்தட்ட சரிபாதி காலம் காங்கிரஸோடு ஒட்டியும் வெட்டியும் அமைந்தது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் யத்தனத்தோடு மோடியின் பாஜக முன்னகரும் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மட்டும் அல்லாது, பல மாநிலக் கட்சிகளும் இருத்தலுக்கான சவாலை எதிர்கொள்கின்றன.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பலவீனத்துக்கு முகம் கொடுத்தல்

நாடாளுமன்றம் நோக்கி மோடி அடியெடுத்து வைத்த 2014இல் 464 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 2024இல் 330 தொகுதிகளுக்குள் தன்னுடைய களத்தைச் சுருக்கிக்கொண்டிருப்பதும் எஞ்சிய இடங்களை அதன் மாநிலக் கூட்டாளிகளோடு பகிர்ந்துகொண்டிருப்பதும் பல செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது. முக்கியமான ஒரு செய்தி: நாடு தழுவி பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் தங்களுடைய அசலான பலம், பலவீனத்துக்கு இப்போதுதான் முகம் கொடுத்திருக்கின்றன.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்குத் தன்னுடைய தொகுதிகளை காங்கிரஸ் குறைத்துக்கொண்டிருப்பதற்காகக் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் ராகுல் காந்தியைக் குறை கூறுவோர் இருக்கின்றனர். ஆனால், காங்கிரஸாரின் வெட்டிக் கௌரவத்தைத்தான் அவர் முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார். நாட்டின் பெரிய மாநிலம் இதற்கு சரியான உதாரணம். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பெரிய கட்சி எது?

சமஸ் | Samas 29 Mar 2024

சென்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டது. ராய்பரேலியில் சோனியா காந்தி மட்டுமே வென்றார், அமேத்தியில் ராகுல் காந்தியே தோல்வியைத் தழுவினார் என்ற செய்திகளுக்கு அப்பால், பரவலாக இன்று மறக்கப்பட்ட செய்திகள்: அமேத்தி உள்பட மூன்று இடங்களில் மட்டுமே கட்சியால் இரண்டாம் இடத்துக்கு வர முடிந்தது; குறைந்தது 60 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களால் டெபாஸிட் தொகையைக்கூட பெற முடியவில்லை; இத்தனைக்கும் பிரியங்கா காந்தி முன்னின்று பிரச்சாரத்தைப் பார்த்தார். 

2022 சட்டமன்றத் தேர்தலில் கட்சி இன்னமும் கீழே இறங்கியது. 403 இடங்களைக் கொண்ட அவையில் வெறும் 2 இடங்களுக்குள் அது சுருண்டது; 387 தொகுதிகளில் டெபாஸிட் இழந்தது; கட்சியின் வாக்கு வீதம் 2.33%. முதல் குடும்பத்தின் கோட்டையான அமேத்தியில் போட்டியிடும் முடிவை 2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கைவிட இந்த நிதர்சனமும் முக்கியமான காரணம்.

நாட்டின் 543 தொகுதிகளில் 60% தொகுதிகளில்தான் இம்முறை போட்டியிடுகிறது என்றாலும், இந்த 330 தொகுதிகளிலும்கூட குறைந்தபட்சம் மூன்றில் இரு பங்கான 220 இடங்களில் கட்சி வெல்லும் என்று சொல்லும் நிலையில்கூட அதன் தலைவர்கள் இல்லை; சொல்லப்போனால், அமைப்புரீதியாக 110 இடங்களில்தான் இணையான பலத்தில் அது இருக்கிறது எனும் சூழலில் வெறுமனே போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கையை அதிகமாகப் பராமரிப்பதில் என்ன பயன்? 

இந்தச் சூழலை மாற்றுவது அவ்வளவு எளிது அல்ல.

ஆட்சியை இழந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகும், கட்சி அடித்தளத்தில் மேம்பாட்டை ராகுலால் கொண்டுவர முடியவில்லை. 

பெரும்பாலான மாநிலக் கட்சிகளின் நிலை இதிலிருந்து பெரிய அளவில் வேறுபட்டதில்லை.

சரத் பவாரின் யோசனை

காங்கிரஸிலிருந்து பிரிந்து சரத் பவாரால் உருவாக்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி அது எதிர்கொண்ட முதல் தேர்தல்களில், சட்டமன்றத்தில் 58/288 இடங்களையும் மக்களவையில் 9/48 இடங்களையும் வென்றது. கடைசியாக நடந்த தேர்தல்களில் அது பெற்றிருக்கும் இடங்கள் சட்டமன்றத்தில் 6; மக்களவையில் 1. இந்த எண்ணிக்கையானது கட்சியின் அமைப்புப் பலத்தை மட்டுமல்லாது, சமூகத்தில் கட்சிக்கான காலப் பொறுத்தப்பாட்டையும் இணைத்தே காட்டுகிறது. 

பாஜக போன்ற சித்தாந்த அடிப்படையிலான ஒரு கட்சி விசுவரூபம் எடுக்கும் காலத்தில், எதிரே நிர்வாக அடிப்படையிலான மாற்றங்களை மட்டுமே முன்னிறுத்தி  கட்சிகள் நீண்ட காலத்துக்கு நீடிக்க முடியாது. காங்கிரஸ் மட்டும் அல்லாது, பல மாநிலக் கட்சிகளும் இன்று இதே நெருக்கடியை உணர்கின்றன. குறிப்பாக, ஒட்டுமொத்த தேசத்தின் உள்கட்டுமானம், பொருளாதாரம், பாதுகாப்பு, வெளியுறவு, சுற்றுச்சூழலுக்கான கற்பனையானது, மாநிலக் கட்சிகளுடைய அன்றாடத் தேவையிலிருந்து நீண்ட தொலைவில் உள்ளது. சதா சர்வ நேரமும் தேசியவாதத்தைப் பேசும் ஒரு கட்சி, அதன் தலைவர்களை எதிர்கொள்ள எங்கோ ஒரு நாடு தழுவிய குடை மாநிலக் கட்சிகளுக்குத் தேவைப்படுகிறது. 

இந்தத் தேவையைத்தான் சரத் பவாருடைய பேட்டி சுட்டுகிறது. “காங்கிரஸோடு மாநிலக் கட்சிகளின் நெருக்கம் மேலும் அதிகரிக்கும்; சில கட்சிகள் காங்கிரஸோடு இணையும்” என்று அவர் குறிப்பிட்டார். இது அவரது சொந்தக் கட்சிக்குப் பொருந்துமா என்ற கேள்விக்கு சரத் பவார் அளித்த பதில், இன்றைக்கு பாஜகவை எதிர்க்கும் கட்சிகளையும் காங்கிரஸையும் ஒரு குடைக்குள் கொண்டுவரும் இணைப்புச் சக்தியைக் காட்டுகிறது. “காங்கிரஸுக்கும் எங்களுக்கும் எந்த வேறுபாட்டையும் நான் பார்க்கவில்லை… சித்தாந்தரீதியாக, நாங்கள் காந்தி, நேரு சிந்தனைப் போக்கைச் சேர்ந்தவர்கள்!”

இன்று பாஜகவை எதிர்க்கும் எத்தனை கட்சிகள் காந்தி - நேரு சிந்தனைப் போக்குக்கு எதிரானவை? பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் இவற்றுக்கு அப்பால், தீவிரமான தனித்த கருத்தியல் பார்வையோடு சிரோன்மணி அகாலி தளம், திமுக, சிவசேனை போன்று சில மாநிலக் கட்சிகள் மட்டுமே உள்ளன. திமுகவும் சிவசேனையுமே காங்கிரஸின் கூட்டணிக் குடைக்குள் வர முடியும் என்றால், திரிணமூல் காங்கிரஸும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸும் ஏன் காங்கிரஸோடு இணைய முடியாது? முடியும். அதற்கு காங்கிரஸின் பண்பு மாற வேண்டும். 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ராகுல் வசதி மோடிக்குக் கிடையாது: சமஸ் பேட்டி

25 Apr 2024

காங்கிரஸின் குணம் மாற வேண்டும்

மாநிலங்களில் தலைவர்கள் சுயாட்சித்தன்மையுடனும் டெல்லியில் தலைவர்கள் ஒருங்கிணைப்புத்தன்மயுடனும் செயல்படும் கூட்டுத் தலைமைப் பண்புயைப் பிரதிபலிப்பதாக காங்கிரஸ் செயல்பாடு அமைய வேண்டும். கருத்தியல்ரீதியாகச் சொல்வது என்றால், கூட்டாட்சித்தன்மை கொண்ட கட்சியாக காங்கிரஸ் உருவெடுக்க வேண்டும்.

காங்கிரஸில் இந்த 138 ஆண்டுகளில் நடந்திருக்கும் 50க்கும் மேற்பட்ட பிளவுகளில் பெரும்பாலானவை சுதந்திரத்துக்குப் பின்னரே நிகழ்ந்தன. படிப்படியாக மைய அதிகாரத்துக்கு கட்சிக்கு மாறிய பின்னரே காங்கிரஸில் பிளவுகள் அதிகரித்தன. காந்தி காலத்தில் கட்சித் தலைமை ஒருங்கிணைக்கும் தன்மையோடுதான் இருந்தது. அதனால்தான் கூட்டாட்சித்தன்மையிலான ஒரு தேசத்தை அது பிரிவினைக்கு முன் சிந்தித்தது. புதிதாகப் பிறந்த நாடு படிப்படியாக ஒற்றையாட்சித்தன்மை மேலோங்கியதாக மாறியதையும் காங்கிரஸ் கட்சிக்குள் அதிகாரம் மையப்படுத்தப்பட்டதையும் வரலாற்றில் நாம் இணைத்துப்  பார்க்கலாம்.

கூட்டாட்சியின் முக்கியத்துவத்தையும் மாநிலங்களின் உரிமையையும் ராகுல் காந்தி காலத்தில் பேசுவது போன்று அவருடைய கொள்ளுப்பாட்டனார் காலத்தில்கூட காங்கிரஸ் பேசியது இல்லை. இது கட்சித் தலைவர்கள் விரும்பி சிந்தித்து உருவாக்கிவரும் மாற்றம் இல்லை என்றாலும், எதிரேயுள்ள பாஜகவும் காலமும் காங்கிரஸை சரியான இடத்தில்தான் நிறுத்தியிருக்கிறது.

மோடியின் காலத்தில் தீவிர தேசியவாத, ஒற்றையாட்சித்துவ, மைய தலைமை கொண்ட கட்சியாக பாஜக அரசும் கட்சியும் ஆகிவிட்டன. அதாவது, நாட்டை எப்படி நிர்வகிக்கத் தலைப்படுகிறதோ அப்படியே பாஜகவின் நிர்வாகமும் இருக்கிறது. எதிரே போட்டியாளராக நிற்கும் காங்கிரஸ் இனி பாஜகவின் பண்போடு ஓட முடியாது. 

இப்போது காங்கிரஸ் மாற வேண்டிய தருணத்தில் இருக்கிறது. நாட்டை நிர்வகிப்பதில் கூட்டுத் தலைமை, கூட்டாட்சிப் பார்வையைப் பேசுவது போன்றே கட்சியின் பண்பையும் அது மாற்றிக்கொள்ள வேண்டும். மாநிலக் கட்சிகளின் குடையாகப் புத்துரு கொள்வது அதற்குப் பொருத்தமான புதிய வடிவமாக இருக்கும். சரத் பவார் சரியான இடத்தில் புள்ளி வைத்திருக்கிறார்!

- ‘தினமலர்’, மே, 2024

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை
ராகுல் வசதி மோடிக்குக் கிடையாது: சமஸ் பேட்டி
நேரு எப்படி மூன்றாவது முறை பிரதமரானார்?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


5






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ramasubbu   1 month ago

சுதந்திர போராட்ட கால காங்கிரசை இப்போதுள்ள காங்கிரஸ் கட்சியின் தொடர்ச்சியாக நீங்கள் கருத்துவது ஏற்புடையதல்ல. சுதந்திரம் பெற்ற பின்னர் காங்கிரஸ் அமைப்பை கலைக்கசொன்னார். ஜனநாயக அமைப்பு மிகச்சிறந்த வடிவம். திறமையானவர்கள் வாரிசுகளாக இருப்பார்கள் என நம்புவது மூடத்தனம்கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை. திறமையானவர்களாகவே இருந்தாலும் முன்னுரிமை வரிசை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளலாம். தந்தைக்கு பின் மகன், மகனுக்கு பின் பேரன் என்பதற்கும் மன்னராட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மாநில கட்சிகளை கொள்கைஅளவில் ஒருங்கிணைத்து பா. ஜ. வை எதிர்த்து ஆட்சியை பிடிக்கலாம் என்பது, ஒரு பேச்சுக்காக முடியும் என்று வைத்து கொண்டாலும் பிரதமர் பதவி விஷயத்தில் குடுமிபிடி சண்டைகள் வந்து யார் காலை எவர் எப்போது வாருவார் என்ற இரண்டும் கேட்ட நிலைதான் ஏற்படும். இது கடந்த காலங்களில் பார்த்தது தானே. காங்கிரஸ் கட்சியில் இறங்கி வேலை செய்யும் ஆட்கள் மிகவும் குறைந்து விட்டார்கள். ஒரு பெரிய கட்சி, வெகு காலம் நாட்டை ஆண்ட கட்சியின் இந்த நிலைமைக்கு காரணம் நல்ல தலைமை இல்லாததுதான்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

கோட்சேதேனுகாமனனம்தேசத் துரோகச் சட்டம்தான்சானியாமுதலாவது பொதுத் தேர்தல்சம்பா சாகுபடிஅடல் பிஹாரி வாஜ்பாய்இல்லாத தலைமை!மனநிலைராமசந்திர குஹா கட்டுரைக்ரானிக் கிட்னி டிசீஸ்தேர்தல் சீர்திருத்தம்ஆந்திர தலைநகரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டதின் பினமுதலாம் உலகப் போர்அரசு வேலைசர்க்காரியா கமிஷன் காமெல்செயற்கைக்கோள்கசப்பான அனுபவங்கள்ஏவூர்திஅதிருப்திபொன்முடிபழங்குடி இனங்கள்உதயநிதி'வ.ரங்காசாரி கட்டுரைதசைநார் வலிக்குத் தீர்வு என்ன?காந்தப்புலம்அகில இந்திய ஒதுக்கீடுமொழிபெயர்ப்புக் கவிதை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!