கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

எடுபடுமா இந்தியா கூட்டணி?

சமஸ் | Samas
22 Feb 2024, 5:00 am
0

யோத்தியில் ராமர் கோயில் பிராண பிரதிருஷ்டை நடந்த ஒரு வாரத்துக்குள் காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணிக்குள்ளிருந்து வெளிப்பட்ட விரிசல்கள் பாஜகவுக்கு எல்லையில்லா உற்சாகத்தைக் கொடுத்திருப்பது இயல்பானது. டெல்லியின் அரசியல் பண்டிதர்கள் பலரும் அதே குதூகலத்துடன் இந்த விஷயத்தை அணுகுவது ஆச்சரியம் தந்தது.

கூட்டணியின் பெரிய கட்சியான காங்கிரஸ்தான் ‘இந்தியா கூட்டணி’யில் நிகழும் எந்த விஷயத்துக்கும் முதன்மைப் பொறுப்பாளி. கூட்டணியிலிருந்து விலகும் எவரும் காங்கிரஸை நோக்கியே கை நீட்டுகின்றனர். எதற்கெல்லாம் காங்கிரஸ் பொறுப்பு?

டெல்லியிலும் பஞ்சாபிலும் ஆட்சியில் உள்ள ஆம்ஆத்மி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு சுமுகமாக நடக்கும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ் என்றால், பஞ்சாபில் பிரதான எதிர்க்கட்சி எனும் இடத்தில் அது இருக்கிறது. மக்களவையில் 7 தொகுதிகளைக் கொண்டுள்ள டெல்லியைப் பொறுத்த அளவில் இன்னமும் பாஜகதான் அங்கே முன்னே நிற்கிறது. மாநிலத் தேர்தலில் ஒரு விதமாகவும், தேசியத் தேர்தலில் ஒரு விதமாகவும் வாக்களிக்கும் டெல்லி மக்கள் 2019 தேர்தலில் 7 தொகுதிகளையும் பாஜகவுக்கு அளித்தனர்; மொத்த வாக்குகளில் சரிபாதிக்கும் மேல் (56.86%) பாஜக பெற்றது. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பஞ்சாபைப் பொறுத்த அளவில், மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 2019 தேர்தலில் காங்கிரஸுக்கு 8 தொகுதிகளைக் கொடுத்த மாநிலம் அது; 40.12% வாக்குகளை காங்கிரஸ் பெற்றது. கேரளம், தமிழ்நாட்டுக்கு அடுத்து சென்ற தேர்தலில் காங்கிரஸ் அதிகமான தொகுதிகளை இங்கே வென்றது. அப்போது ஒரேயொரு தொகுதியை மட்டுமே வென்றிருந்தாலும், இப்போது அங்கே வலுவாக இருக்கிறது ஆஆக.

இரு மாநிலங்களிலுமே தன்னுடைய கையை உயர்த்திப் பேசுவதோடு, தனக்கு வலுவான தளமே இல்லாத ஹரியாணா போன்ற வேறு சில மாநிலங்களிலும் தொகுதிகளை ஆஆக கேட்பது காங்கிரஸை சங்கடத்தில் தள்ளியது. இதனால்தான் அர்விந்த் கெஜ்ரிவால் தரப்பிலிருந்து அதிருப்தி என்ற தகவல் வெளியானபோது அது யாரையும் அதிர்ச்சியில் தள்ளவில்லை. காங்கிரஸை இதற்காகப் பெரிதாகக் குற்றஞ்சாட்ட முடியாது.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

தன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்

ஆசிரியர் 29 Jan 2024

கூட்டணியிலிருந்து ஒருங்கிணைந்த ஜனதா தளம் வெளியேறிடும் முடிவு நோக்கி நகர்ந்ததற்கும்கூட காங்கிரஸைப் பெரிதாகக் குறை கூறிட முடியாது. பிஹார் தேர்தலில் யார் வென்றாலும் முதல்வர் நாற்காலி தனக்கானது எனும் வியூகத்தோடு காய் நகர்த்துபவர் நிதிஷ் குமார். இன்றைக்கு பிஹாரைப் பொறுத்த அளவில் ராஷ்டிரிய ஜனதா தளம்தான் பிரதான கட்சி. அடுத்த இடம் பாஜகவுக்கானது. இந்த இருவருக்குமே தனிப் பெரும்பான்மைச் சூழல் இல்லாத நிலையில், இருவருக்கும் இடையில் தனக்கேற்ற அனுகூல ஆட்டத்தை ஆடிவருபவர் நிதிஷ் குமார். 

சென்ற பத்தாண்டுகளில் பாஜக, ராஷ்டீரிய ஜனதா தளம் இடையே நான்கு முறை கூட்டணியை மாற்றியிருக்கிறார் நிதிஷ் குமார். பிரதமர் பதவிக்கு மோடி முன்னிறுத்தப்பட்டதை எதிர்த்து 2013இல் பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்தவர் நிதிஷ் குமார் என்பதையும், இனி தன்னுடைய இலக்கு ‘ஆர்எஸ்எஸ் இல்லா பாரதம்’ என்று அறிவித்ததையும் ‘மீண்டும் பாஜக கூட்டணிக்குச் செல்வதைவிடவும் தூள்தூளாக நொறுங்குவேன்’ என்று அவர் முழங்கியதையும் இங்கே நினைவுகூர வேண்டும். 

நிதிஷ் குமாருடைய ஐக்கிய ஜனதா தளம் 2014 மக்களவைத் தேர்தலில் தனித்து நின்றது. பெரும் தோல்வியை அடுத்து, 2015இல் ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தார் நிதிஷ் குமார். 2017இல் அங்கே உறவை முறித்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி கலந்தார். 2022இல் பாஜகவுடனான கூட்டணியை உடைத்துக்கொண்டு ராஷ்டீரிய ஜனதா தளத்துடனான கூட்டணியை அமைத்தார். 2024இல் மீண்டும் வண்டி திசை மாறுகிறது.

இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பிஹாரில் நடத்தியவர் நிதிஷ் குமார். அப்படியிருக்க இப்போது ஏன் பாஜக நோக்கி நகர்கிறார்? பிஹாரில் 2000 முதலாக முதல்வர் பதவியில் இருந்தாலும், படிப்படியாக அவருடைய கட்சி செல்வாக்கை இழந்துவருகிறது. 243 இடங்களைக் கொண்ட பிஹார் சட்டமன்றத்தில் அவருடைய ஐக்கிய ஜனதா தளம் இந்த முறை 43 இடங்களை மட்டுமே வைத்திருக்கிறது. நிதிஷ் குமாருக்கு இப்போது 72 வயதாகிறது. வரவிருக்கும் தேர்தல் அவருடைய வாழ்வில் முக்கியமானது. ஆனால், காற்று தன் பக்கம் வீசும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. தேசிய அரசியல் நோக்கி நகரலாம் என்று எண்ணினார் நிதிஷ் குமார். ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டால், பிரதமர் பதவிக்கான போட்டியில் தன்னுடைய பெயர் முன்வரிசையில் நிற்கும் என்ற கணக்கோடு காய்களையும் நகர்த்தினார். அது நடக்கவில்லை. பிரதமர் முகமாக காங்கிரஸ் தலைவர் கார்கேவின் பெயரை முன்மொழியலாம் என்று பேசப்பட்டபோது, நிதிஷ் குமார் கனவு கலைந்தது. ராஷ்டீரிய ஜனதா தளத்துடனான உறவும் அவருக்குச் சுமுகமாக இல்லை. கடைசி நேரத்தில் எதையும் செய்யக்கூடியவர் எனும் நம்பகமின்மைச் சுழலுக்குள்ளேயே அவர் இருந்தார். நிதிஷ்குமார் முடிவுக்காகவும் காங்கிரஸை விமர்சிக்க முடியாது.

வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்ற மம்தாவின் அறிவிப்பு அதிர்ச்சிகரமான ஓர் ஏவுகணைதான். காங்கிரஸின் பிரச்சினைகளை இங்கிருந்தே நாம் அணுக வேண்டும். மக்களவையில் 42 இடங்களைக் கொண்டுள்ள வங்கத்தில் 2019 தேர்தலில் காங்கிரஸால் இரண்டை மட்டுமே வெல்ல முடிந்தது. அது பெற்றிருந்த வாக்குவீதம் 5.6%. 1998இல் காங்கிரஸிலிருந்து மம்தா பிரிந்து வந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த பிறகான இந்தக் கால் நூற்றாண்டில் ஒரு பெரிய சக்தியாக மீண்டும் காங்கிரஸ் அங்கு எழவே இல்லை. 2024 தேர்தலில் காங்கிரஸுக்கு மூன்று தொகுதிகளை ஒதுக்க மம்தா முன்வந்ததாகத் தெரிகிறது. எனில், காங்கிரஸுக்கு இது நியாயமான ஒதுக்கீடுதான். காங்கிரஸ் கூடுதலாக தொகுதிகளை எதிர்பார்க்கிறது. 

பிரதான பிரச்சினை அதுகூட இல்லை. காங்கிரஸின் மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மாநிலத்தில் மம்தாவை எதிர்ப்பதில் பாஜக அளவுக்குத் தீவிரமாக இருக்கிறார். காங்கிரஸில் மம்தா எழுந்து வளர்ந்த அதே காலகட்டத்தைச் சேர்ந்தவர் சௌத்ரி. அந்தக் காலகட்டத்திலேயே கட்சிக்குள் இருவரும் போட்டியாளர்கள். இந்த எதிர்த்தன்மை சௌத்ரியிடம் இன்றளவும் குறையவில்லை. திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மீது அரசியல் உள்நோக்கங்களுடன் விசாரணை அமைப்புகளை பாஜக அரசு பயன்படுத்துவதைக்கூட நியாயப்படுத்தினார் சௌத்ரி. கட்சியின் மாநிலத் தலைவர் இப்படி இருந்தால், இரு கட்சியினர் இடையே தேர்தல் களத்தில் இணக்கம் எப்படி இருக்கும் என்று திரிணமூல் காங்கிரஸார் எழுப்பும் கேள்வி நியாயமானது. சில மாதங்களுக்கு முன்னரே தேசிய அரசியல் நோக்கி சௌத்ரியை இழுத்துவிட்டு கூட்டணிக்கு இணக்கமான தலைவரை மாநிலப் பொறுப்பில் காங்கிரஸ் அமர்த்தியிருக்க வேண்டும். 

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

வங்கத்தில் இன்றைக்கு பாஜகவுக்கு இணையான இன்னோர் எதிர்க்கட்சி மார்க்ஸிஸ்ட். இந்தியா கூட்டணிக்குள் திரிணமூல் காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் இரு கட்சிகளும் இருந்தாலும், மாநிலத்தில் இரண்டு எதிரெதிரே நிற்கின்றன. திரிணமூல் காங்கிரஸோடு தொகுதி உடன்பாடு கொள்ள விரும்பினாலும், மார்க்ஸிஸ்ட்டுகளோடு களத்தில் நெருக்கமாக நிற்கிறார்கள் காங்கிரஸார். பாஜகவுக்கு எதிரான ஓட்டுகளைத்தான் திரிணமூல் காங்கிரஸ் - மார்க்ஸிஸ்ட் இரு கட்சியினருமே பகிர்ந்துகொள்ள வேண்டும். காங்கிரஸின் இரு பக்க உறவு தன்னுடைய கட்சியைக் குழிக்குள் தள்ளிவிடும் என்று அஞ்சுகிறார் மம்தா. காங்கிரஸ் தலைமை இதுகுறித்தெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை.

இன்னும் தேர்தலுக்கு 100 நாட்கள்கூட இல்லாத சூழலில், இந்தியா கூட்டணியை காங்கிரஸ் நகர்த்தும் நிதான வேகம் கூட்டணியில் உள்ள பல கட்சிகளையும்போல திரிணமூல் காங்கிரஸையும் பதற்றத்தில் தள்ளியிருக்கிறது. காங்கிரஸின் முகமான ராகுல் காந்தி இந்தச் சமயத்தில் தேர்தலுக்கு அப்பாற்பட்ட பாரத் நியாய் யாத்திரையை ஆரம்பித்திருப்பதும், கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலத்துக்குப் பேரணி வரும்போதும்கூட கூட்டணித் தலைவர்களுக்கு அதில் உரிய இடம் திட்டமிடாப்படாததும் மம்தா சுட்டிக்காட்டும் கூடுதல் பிரச்சினைகள். கூட்டணி இல்லை என்றாலும், ‘தேர்தலுக்குப் பின் பார்க்கலாம்’ எனும் மம்தாவின் சமிக்ஞை இங்கே முக்கியமானது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?

சமஸ் | Samas 19 Dec 2023

இன்னமும் காங்கிரஸார் திருத்திக்கொள்ளாத விஷயங்களைத்தான் மம்தா சுட்டிக்காட்டியுள்ளார் என்று சொல்ல வேண்டும். இதையேதான் அகிலேஷ் வேறு வார்த்தைகளில் பேசுகிறார். பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைச் செயல்திட்டத்தை மட்டுமே கொண்டு எல்லாக் கட்சிகளையும் லாயத்தில் அடைத்துவிட முடியாது; இந்தியா கூட்டணியில் எல்லாக் கட்சிகளும் சமப் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படைச் செய்தி. ‘சுல்தான்புரி இடம் மாறிவிட்டாலும், சுல்தான்கள் போக்கு மாறவில்லை’ என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தன்னுடைய கட்சியினரைப் பற்றிக் கூறியதைத்தான் மீண்டும் காங்கிரஸாருக்குச் சொல்ல வேண்டும். 

மற்றபடி, இதன் நிமித்தம் இந்தியா கூட்டணியின் கதை முடிந்தது; பாஜகவுக்கு இனி ராஜபாட்டைதான் என்று பேசுவோரை நினைத்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. தரவுகள் அவ்வளவு சாதகமாக இல்லை. மக்களவையில் உள்ள 543 தொகுதிகளில், ‘மோடி அலை’ தீவிரமாக வீசிய 2014, 2019 இரு பொதுத் தேர்தல்களிலுமேகூட 200 தொகுதிகளில் பாஜகவால் கால் ஊன்ற முடியவில்லை. எப்படி 2019 தேர்தலில் 50%க்கும் அதிகமான வாக்குகளை வாங்கி 224 தொகுதிகளில் பாஜக வலுவான சக்தியுடன் உள்ளது ஓர் உண்மையோ, அதே போன்ற இன்னோரு உண்மை இது. பாஜகவை 200 தொகுதிகளுக்குள் கட்டுப்படுத்துவது எதிர்க்கட்சிகளுக்கு எளிது அல்ல; வேறு 200 தொகுதிகளில் நுழைவது பாஜகவுக்கு எளிது அல்ல; இந்த இரண்டுக்கும் மத்தியில் உள்ள 143 தொகுதிகள்தான் அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கப்போகின்றன. அங்கே தேர்தலை காங்கிரஸோடு இணைந்து சந்தித்தாலும், பிரிந்து சந்தித்தாலும் மாநிலக் கட்சிகள் பாஜகவுக்குக் கடும் சவாலாக நிற்கும்!

-‘குமுதம்’, பிப்ரவரி, 2024

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

தன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்
இந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?
மோடிக்கு சரியான போட்டி கார்கே
காங்கிரஸ் குறிவைக்கும் 255 தொகுதிகள்
14 ஊடகர்களைப் புறக்கணிப்பது ஏன்?
உதயமாகட்டும் கூட்டாட்சி இந்தியா
2024: யாருக்கு வெற்றி?
மாநிலக் கட்சிகளே எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்றன
பாஜக எப்படி வெல்கிறது? முதல்வர்களைக் கவனியுங்கள்!
மோடியை வீழ்த்த வரலாற்றிலிருந்து ஒரு பாடம்
2024 பாஜக வெற்றி நிச்சயமில்லை
அயோத்தி புறக்கணிப்பு காங்கிரஸின் வரலாற்று முடிவு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3

1





அம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?முன் தயார்நிலைகொலையில் பிறந்த கடவுள்கள்பானைபாசிஅய்ஜால்வடக்கு - தெற்குThe Quadஇந்தியப் பெண்கள்முரசொலி மாறன்போர்விவேகானந்தரின் சிந்தனைகளில் வர்ணமும்பெருங்குடிகாக்காய் வலிப்புஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழா ராகுல் பேச்சுtaxationசூத்திரன்பால் தாக்கரேஊசி குத்தும் வலிஉடல்மொழியுனேஸ்கோ வேண்டுகோள்நவீனத் தமிழாசிரியர்தொலைத்தொடர்புஊட்டிமாநில பட்ஜெட் 2022காஞ்ச ஐலய்யா கட்டுரைதெய்ஷிட்சுமனுதர்ம சாஸ்திரம்பாஜக: 20 ஆண்டுகள் ஜிடிபி வரலாறுட்விட்டர் பதிவுகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!