கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை 5 நிமிட வாசிப்பு

பொன்முடியின் வீழ்ச்சி மட்டுமா இது?

சமஸ் | Samas
04 Jan 2024, 5:00 am
1

திமுகவின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான பொன்முடியின் வீழ்ச்சி பல வகைகளிலும் திராவிட இயக்கத்தின் வரலாற்றோடும் அதன் சமகாலப்  போக்கோடும் இணைத்துப் பார்க்க வேண்டியதாகும்.

இயக்கத்தோடு இணைந்த வளர்ச்சி

திமுக தோற்றுவிக்கப்பட்டு மறு ஆண்டான 1950இல், திருக்கோவிலூர் அருகில் உள்ள டி.எடையார் கிராமத்தில் பிறந்தவர் பொன்முடி. கட்சி அப்போதுதான் வேர்விட ஆரம்பித்திருந்தது. சாதாரண விவசாயக் குடும்பத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகப் பின்னணியில் பிறந்து வளர்ந்தவரான பொன்முடியைத் திராவிட இயக்கம் ஈர்த்தது இயல்பானது.  

வரலாற்று மாணவரான பொன்முடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் உக்கிரமான இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்நாடு இறங்கியிருந்தது. மாணவர்களே அதன் மையமாக இருந்தார்கள்.

பொன்முடி வரலாறும் பிற்பாடு அரசியல் மற்றும் பொதுத்துறை நிர்வாகமும் படித்தவர். வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர், இயக்க ஈடுபாடு காரணமாக அரசியல் களத்துக்கு மாறினார். கல்லூரிக் காலத்திலேயே தீவிரமான செயல்பாட்டாளராக இருந்தார் என்று சொல்கிறார்கள்.

திமுகவில் வேகமாகப் படியேறினார் பொன்முடி. தன்னுடைய 38வது வயதில்,  1989இல் சட்டமன்றத் தேர்தலில் வென்றார். எம்.ஜி.ஆர். மறைவையொட்டி கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் முதல்வர் பதவிக்கு வந்திருந்த கலைஞர் மு.கருணாநிதி, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், பொன்முடிக்கு எடுத்த எடுப்பில் அமைச்சர் பதவியை வழங்கினார். சீக்கிரமே அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. 1991 தேர்தல் தோல்விக்குப் பின் கட்சி மீண்டும் 2006இல் ஆட்சி அமைத்தபோது திமுகவின் முன்னணி தளகர்த்தர்களில் ஒருவர் எனும் இடம் நோக்கி பொன்முடி நகர்ந்தார். பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு, 2021இல் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தபோது மூத்த அமைச்சர்களில் ஒருவர் எனும் இடத்தில் பொன்முடி இருந்தார். 

கட்சி செயல்பாடுகளே பொன்முடியின் பெரிய பலமாக இருந்தது. கட்சியின் நிதியாதாரத்தையும் உள்கட்டமைப்பையும் கையாள்பவர்களில் ஒருவராகவும் பொன்முடி இருந்தது கட்சிக்குள் அவரது அதிகாரத்தை நிலைநிறுத்தியது. தன்னுடைய சகாக்கள் பலரையும்போல, மகன் கௌதம சிகாமணியைப் பொன்முடி அரசியலுக்குக் கொண்டுவந்தார்; சிகாமணி  2019இல் மக்களவை உறுப்பினரானார்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பிடிமானமுள்ள சித்தாந்தி

சமூகச் சீர்திருத்த இயக்கத்திலிருந்து கிளைக்கும் ஓர் அரசியல் கட்சி அதிகாரத்துக்கு வரும்போது, சாமானியர்கள் வாழ்வில் எத்தகு மாற்றங்களை அது உண்டாக்குகிறது என்பதையும், நாட்டின் அரசியல் அதிகார அடுக்குகள் எப்படியெல்லாம் மாறுகின்றன என்பதையும் பொன்முடி வழியாகவும் நாம் பார்க்கலாம். 

கட்சியில், ‘கல்வியாளர்’ எனும் அடையாளமும், ‘சித்தாந்தி’ எனும் அடையாளமும் பொன்முடிக்கு  இருந்தது. திமுக வரலாற்றை ஆற்றொழுக்காகப் பேச வல்லவர் அவர். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் மூர்க்கமாக திமுகவை ஒடுக்க முற்பட்டபோது, அசராமல் எதிர்த்து நின்ற தலைவர்களில் ஒருவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.

இந்துத்துவத்தையும் பாஜகவின் ஒற்றை மைய தேசிய அரசியலையும் மேடைகளில் வெளுத்தவர் பொன்முடி. இந்த முறை ஆளுநர் மாளிகை வழியே பாஜக நிழல் யுத்தத்தை நடத்தியபோது, நேரடியாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பொன்முடி மல்லுக்கு நின்றார். மோடி அரசு உயர்கல்வித் துறையை முழுமையாக மத்திய அதிகாரத்துக்குள் வளைக்க முற்படும் நாட்களில் அதற்கு எதிராகப் பேசுபவர்களில் ஒருவராக அவர் இருந்தார். திமுகவினர் பலருக்கு பொன்முடி மீது கொள்கைப் பிடிமானர் எனும் அபிமானம் உண்டு.

மோசமான முகம்

பொன்முடிக்கு மோசமான முகமும் உண்டு. திருச்சியில் செய்தியாளராக இருந்த காலத்தில் அதைக் கேட்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டின் மிகச் சிறந்த கல்வியாளர்களில் ஒருவரான சி.தங்கமுத்து அப்போது பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் பல முன்மாதிரியான செயல்பாடுகளை அப்போது முன்னெடுத்துவந்ததால், மாநில அளவில் கல்வியாளர்களால் கவனிக்கப்படும் இடத்தில் அப்போது இருந்தது.

திடீரென்று தங்கமுத்து தன்னுடைய பதவியிலிருந்து விலகியதாகத் தகவல் வந்தது. அரசுக்கு அவர் அனுப்பிய கடிதம் சென்றடைந்த தருணத்தில், அவர் பல்கலைக்கழகம் தந்த வீட்டை இரவோடு இரவாகக் காலி செய்து சொந்த ஊர் சென்றுவிட்டார் என்றார்கள். ஏன் இப்படியொரு முடிவை எடுத்தார் தங்கமுத்து?

நியமனங்களில் உள்ளூர் அமைச்சரான நேரு பரிந்துரைகளை அவர் ஏற்க மறுத்தார் என்றும் பொன்முடி திருச்சி வந்தபோது, துணைவேந்தரை கல்வி அமைச்சர் எனும் வகையில் அழைத்து மோசமாகப் பேசினார் என்றும் தன்னுடைய நேர்மையான அணுகுமுறையையும் சுயமரியாதையையும் பறிகொடுக்க விரும்பாத தங்கமுத்து மறுநாளே இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்றும் செய்திகள் வெளியாயின.

தங்கமுத்துவும் சாதாரண சமூகப் பின்னணியிலிருந்து எளிய சூழலிருந்து வந்தவர். பொருளியலில் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க நல்லாசிரியர்களில் ஒருவராக அறியப்பட்டவர். தொலைநோக்கர். நேர்மையர். கண்ணியர். பொன்முடி மேடையில் பேசும் சமூகநீதி அவருடைய அதிகார அறையில் என்னவாயிற்று?

இயல்பான ஆண்டைத்தனம்

அரிய சம்பவம் இல்லை இது; திராவிடக் கட்சிகளின் பிராந்திய தளகர்த்தர்கள் பலரிடம் வெளிப்படும் இயல்பான ஆண்டைத்தனத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று. மாறிவரும் காலமோ, இடையில் 2011இல் அடைந்த தோல்வியோ பத்தாண்டு காலம் ஆட்சியிலிருந்து விலக்கிவைத்து மக்கள் அளித்த தண்டனையோ பொன்முடியிடம் எந்த மாற்றத்தையும் உண்டாக்கவில்லை. இந்த முறை உயர்கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றது முதலாக மோசமான அதிருப்தியைத் தன்னுடைய துறைக்குள் அவர் சம்பாதித்தார். 

திமுக அரசு தன்னுடைய முதல் இரண்டாண்டுகளில் தொடக்கக் கல்வித் துறையில் எவ்வளவோ நல்ல மாற்றங்களை முயற்சித்தது; ஊழல் ஓட்டைகள் கூடுமானவரை அடைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர் பணி மாறுதல்களில்கூட தங்களுடைய செல்வாக்கு பலிக்கவில்லை என்று  கட்சிக்காரர்கள் புலம்பியதைப் பொதுமக்கள் சந்தோஷமாக கேட்டார்கள்.

நேர்மாறாக உயர்கல்வித் துறையில், ‘எல்லாவற்றிலும் ஊழல்’ என்று குமுறினார்கள் பேராசிரியர்கள். உயர்கல்வித் துறை ஆலோசனைக் கூட்டங்களில் கல்லூரி முதல்வர்களை ‘நீ, வா, போ’ என்று தான் எள்ளியதோடு, தன்னுடைய அப்போதைய துறைச் செயலர் கார்த்திகேயனையும் அப்படிப் பேச பொன்முடி அனுமதித்ததைக் கல்லூரி முதல்வர்கள் சொல்லக் கேட்டபோது அது அதிர்ச்சியைத் தரவில்லை. 

பொதுமேடைகளில் பல சமயங்களில் மக்களை மோசமாக பொன்முடி விளிக்கும் காணொளிகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன. முதல்வர் ஸ்டாலின் ஒருசமயம் பொன்முடியையும் மேடையில் வைத்துக்கொண்டே "கட்சி முன்னோடிகள் இப்படியான அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும்" என்று பேசியும்கூட இது எதையும் தடுக்க முடியவில்லை. அரசின் நலத் திட்டங்களைக் குறிப்பிட்டு ‘எல்லாமே உங்களுக்கு இப்போது ஓசியாகிவிட்டது’ என்று பொதுமக்களை இழிந்த வகையில் ஒரு கூட்டத்தில் பொன்முடி பேசியது, அவரையெல்லாம் யாராலும் மாற்ற முடியாது என்பதை வெளிக்காட்டியது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

திமுகவை எப்படி வீழ்த்த நினைக்கிறது பாஜக?

சமஸ் | Samas 20 Jul 2023

உயர்கல்வித் துறையின் சீரழிவு

தமிழ்நாட்டு உயர்கல்வித் துறை சென்ற இரு தசாப்தங்களாகவே உறைநிலையில் இருக்கிறது. புதிய கல்வித் திட்டத்தின் வழியாகத் தன்னுடைய சித்தாந்த பிடிமானத்துக்குள் கல்வித் துறையைக் கொண்டுவர முற்படும் பாஜக அரசின் முனைப்புக்கு மத்தியில், அதற்கு எதிராகப் பேசும் மாநில அரசுகள் பெரும் மாற்றுத் திட்டங்களை உருவாக்க வேண்டியது அவசியம்.

பொன்முடி எதிர்ப்பேச்சு பேசினாரே ஒழிய மாற்றுக் கற்பனைகளோ, முயற்சிகளோ அவரிடம் இல்லை. பல மாற்றங்களைக் கோரும் நிலையில் இருந்த துறை மேலும் சீரழிய அவரும் ஒரு காரணமாக இருந்தார். 

முந்தைய திமுக அரசின் 2006-2011 ஆட்சிக் காலகட்டத்தில், உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.73 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட  வழக்கு பொன்முடியின் அரசியலைக் கவ்வியது ஒருவகையில் இத்தகையோர் எவருக்கும் முக்கியமான எச்சரிக்கை.

பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி இருவருமே குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையை விதித்தது. இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின்படி, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும், அமைச்சர் பதவியையும் இழந்தவரானார் பொன்முடி. உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தினால், தண்டனைக் காலம் முடிந்தும், அடுத்த ஆறாண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், கிட்டத்தட்ட அவருடைய அரசியல் வாழ்வின் முட்டுச்சந்தாக்கி இருக்கிறது இந்தத் தீர்ப்பு.

பொக்கிஷம் இந்த நூல்

- தினத்தந்தி

சோழர்கள் இன்று

வீட்டிலிருந்தபடி ரூ.500 ஜிபே செய்து, முகவரியை அனுப்பி, கூரியர் வழியே நூலை வாங்க வாட்ஸப் செய்யுங்கள் 👇

75500 09565

முதல்வரைச் சுற்றும் சுழல்

திமுகவை இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியில் தள்ளியிருக்க வேண்டும். ஆளும் அமைச்சரவையிலிருந்து முறைகேடு குற்றச்சாட்டுகளின் பெயரால் சிறைக்குத் தூக்கப்படும் இரண்டாவது அமைச்சர் பொன்முடி. இன்னும் சுமார் 10 அமைச்சர்கள் மீது முறைகேடு வழக்குகள் உள்ளன. முந்தைய தவறுகளிலிருந்து திமுகவை விடுவிப்பேன் என்று வாக்குறுதி தந்து, அதிமுக அரசின் ஊழல்களைப் பட்டியலிட்டு பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் மீதான மதிப்பை இது வெகுவாகக் குலைக்கும்.     

தீர்ப்பு வெளியான நாளில், உச்ச நீதிமன்ற மேல்முறையீடுக்கு வாய்ப்பிருப்பதைச் சுட்டியும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்ததைச் சுட்டியும், பாஜகவில் இணைந்த பின்னர் ஊழல் வழக்கு விசாரணைகள் இல்லாமலாக்கப்பட்ட தலைவர்களைச் சுட்டியும் பேசிக்கொண்டிருந்தனர் திமுகவினர். ‘பொன்முடியையும் திமுகவையும் விமர்சிக்கும் தார்மிகத் தகுதி எதிர்க்கட்சிகளுக்குக் கிடையாது’, ‘தேர்தல் முடிவுகளை ஊழல் குற்றச்சாட்டுகள் பாதிக்காது’ எனும் வரிசையில் ‘ஊழல் பெரிய பிரச்சினையா?’ எனும் விவாதமும் இதையொட்டி எழுந்தது. ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் என்னிடமும்கூட ஒரு செய்தியாளர் இதைக் கேட்டார்.

நிச்சயம் ஊழல் ஒரு சமூக நோய். நானே எழுதியிருக்கிறேன், ‘ஊழல்களிலேயே பெரிய ஊழல் சாதி!’; ‘ஆட்சியதிகாரத்துக்காக சாதியத்தின் பெயராலும் மதவியத்தின் பெயராலும் நடத்தப்படும் வன்முறைகளின் குற்றத்தன்மையை ஒப்பிட ஊழலின் குற்றத்தன்மை குறைவு!’ அதனால் என்ன? ஊழல் குற்றமே இல்லை என்றாகிவிடுமா? 

ஆம். ‘ஊழலில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக யாரும் விதிவிலக்குகள் கிடையாது. முற்பட்ட சாதி, பிற்பட்ட சாதி வேறுபாடு கிடையாது. ஆனால், தேசிய கட்சிகளைக் காட்டிலும், தேசிய அரசியல் தலைவர்களைக் காட்டிலும் மாநிலக் கட்சிகளும், மாநிலத் தலைவர்களுமே அதிகம் தண்டனைக்குள்ளாக்கப்படுகின்றனர்; முற்பட்ட சாதியினரைக் காட்டிலும் அழுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களே அதிகம் தண்டனைக்குள்ளாக்கப்படுகின்றனர்’ என்றும் நான் எழுதி இருக்கிறேன்.

அதனால் என்ன? விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாகிவிடுமா ஊழல்? ஒன்றிய அரசு ஊழல் வழக்குகளை ஓர் அரசியல் கருவியாகக் கையாள்வதையும்,  எதிர்க்கட்சிகளை ஒடுக்க முற்படும் ஆயுதமாக மத்திய விசாரணை முகமைகளைக் கையாள்வதையும் ஜனநாயக சக்திகள் தொடர்ந்து கண்டிக்கிறோம். அது தனி விவகாரம். எவர் ஊழலில் ஈடுபட்டாலும் கண்டிக்கிறோம். இது தனி விவகாரம். இரண்டுமே குற்றங்கள்.

அரசியல் நடத்துவதற்கான பணத்தை எப்படி சட்டபூர்வமான வகையில் திரட்டுவது என்பது அரசியல் சமூகம் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. அரசியல் செலவுகளை எதிர்கொள்வதன் பெயராலேயே ஊழலை நியாயப்படுத்திவிட முடியாது.

இந்தியா போன்ற ஒரு சமூகச் சூழலில் சமூக அநீதியின் வடிவங்களில் ஒன்றாகவே ஊழலைக் காண்கிறேன். ஊழலால் மோசமாகப் பாதிக்கப்படுவது சமூகத்தின் கடைசி குடிநபர். சமூகநீதியைப் பேசுபவர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் அல்லவா இது?

இன்று முதல்வர் ஸ்டாலின் முன்வைக்கும் 'திராவிட முன்மாதிரி' கோஷத்தின் அடித்தளமே தமிழகத்தின் கடந்த கால கல்விக் கட்டுமானத்தின் மீதுதான் அமைந்திருக்கிறது. அந்தக் கல்வித் துறையைக்கூட களங்கமற்ற, தொலைநோக்குள்ள நிர்வாகிகள் கையில் கொடுக்க  முடியவில்லை என்றால், முதல்வர் ஸ்டாலின் பேசும் 'தூய்மையான ஆட்சி' பெருமைக்கு என்ன அர்த்தம் இருக்கிறது? 

பழைய பெருச்சாளிகளையும் பாழ்பட்ட கலாச்சாரத்தையும் பராமரித்துக்கொண்டே வீட்டின் பாதுகாப்பை ஒருவர் உத்தரவாதப்படுத்த முடியாது.

இந்தியா மிக மோசமான யதேச்சதிகாரச் சூழலை எதிர்கொண்டுவரும் நிலையில், ஜனநாயகத்தைக் காக்கும் தளத்தில் தமிழகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது. இன்று தமிழகத்தின் பிரதிநிதியாக அப்படிச் செயலாற்றும் இடத்தில் உள்ள திமுக அரசு  தொடர்ந்து இப்படி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இரையாவதை மிகுந்த கவலையோடு பார்க்கிறேன். 

பொன்முடியின் வீழ்ச்சி மட்டுமா இது?

- ‘குமுதம்’, டிசம்பர், 2023

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரை

திமுகவை எப்படி வீழ்த்த நினைக்கிறது பாஜக?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


4

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

U Lakshmikantan    11 months ago

எதற்கு ஊழல் செய்ய வேண்டும். பிறகு பழி வாங்குகிறார் என்று புலம்ப வேண்டும். ஊழல் செய்வதென்பது அதிகார மமதை. இதற்கு கட்சி வேறுபாடுகள் கிடையாது. இவர் குற்றம் இழைத்து தனக்குத் தானே குழி தோண்டிக் கொண்டார். ஆனால் ஒரு மாத காலம் ஒரு பெரிய வாய்ப்பு. ஒரு பெரிய வக்கீலை நியமித்து வெளிவர வழிவகை செய்துகொள்ள முடியும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: ராமனை பின்பற்றுமாசித்தராமையாநெட்பிளிக்ஸ் தொடர்வன்முறைதேர்தல் களம்ப.சிதம்பரம் சமஸ் அருஞ்சொல்குற்றச்செயல்வேளாண்மைபத்திரிகையாளர் கலைஞர்இதழியல்ராதே ஷியாம் ஷாஇடைநுழைப்பு நியமனங்கள் தீர்வாகிவிடாதுஎருமைப் பொங்கல்தங்க.ஜெயராமன்பல் வலிமோடி ஷாதமிழக அரசியல்கருணாநிதியின் முன்னெடுப்பு‘வளமான’ பாரத பட்ஜெட் இதுவல்ல!இதய நோய்சமையல் எண்ணெய்சிறந்த நடிகர்பிடிஆர் பேட்டிதொடர்ந்து மறுக்குது அரசாங்கம்மொழி மீட்புப் பணிகள்சாவர்க்கர் அருஞ்சொல்சிறுகதைகள்குடிமைப் பணி தேர்வுதிராவிட இயக்கத்தின் கூட்டாட்சி கொள்கைஇந்த வேலையும் சம்பளமும் நிச்சயம்தானா?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!