கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, ஆளுமைகள் 4 நிமிட வாசிப்பு
மோடி ஏன் எம்ஜிஆர் புகழ் பாடுகிறார்?
பத்தாண்டுகள் ஆட்சிக்குப் பின் மூன்றாவது முறை பிரதமர் கனவோடு 2024 பொதுத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நரேந்திர மோடி இந்த முறை தமிழ்நாட்டுக்கு வந்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் என்றே சொல்ல வேண்டும். முன்பு அவருக்கிருந்த எதிர்ப்பின் கூர்மை மட்டுப்பட்டிருப்பதோடு, அவருடைய பேச்சைக் கேட்க ஒரு கூட்டம் உருவாகியிருப்பதையும் பார்க்க முடிந்தது. பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆரை மோடி புகழ்ந்தபோது கூட்டம் கை தட்டியது. மேடையில் இருந்த அவருடைய சொந்தக் கட்சி தலைவர்களும் சரி, வெளியில் இருந்த பார்த்த ஏனைய தரப்பினரும் சரி, பெரும்பாலானோர் குழம்பித்தான் போயினர்.
காங்கிரஸ், சமாஜ்வாதி, கம்யூனிஸ்ட், திமுக, ஆஆக இவர்களையெல்லாம்போல இந்த மக்களவைத் தேர்தலை நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வழியாக மட்டும் பார்க்கவில்லை. நாடு தழுவிய அதனுடைய இந்துத்துவ இலக்கை அடையும் நுழைவாயில்கள் போன்றுதான் அது எந்தத் தேர்தலையும் நீண்ட கால நோக்கோடு அணுகுகிறது.
மாநிலத்துக்கு மாநிலம் பாஜகவின் இலக்குகள் வேறுபடுகின்றன. உத்தர பிரதேசத்தில் தன்னுடைய முதன்மை இடத்தை மேலும் வலுப்படுத்த்திக்கொள்வது பாஜகவின் இலக்கு என்றால், பிஹாரில் கூட்டணியில் தன்னுடைய பங்கை அதிகமாக்கிக்கொள்வது அதனுடைய இலக்கு. வங்கத்திலும் ஒடிஷாவிலும் பிரதான எதிர்க்கட்சி எனும் இடத்தில் இருந்து முதலிடத்தை நோக்கி நகர்வது அதன் இலக்கு என்றால், கேரளத்திலும் தமிழகத்திலும் பிரதான எதிர்க்கட்சி எனும் இடத்துக்குத் தாவுவது அதன் இலக்கு.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
சென்ற பத்தாண்டுகளில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையே காங்கிரஸால் பெற முடியாதாகிவிட்ட நிலையில், நாடு தழுவி தனக்குக் கடுமையான சவால் தரும் தேசிய கட்சி என்ற இடத்தையே இல்லாமல் ஆக்கிவிட்டது பாஜக. மாநிலக் கட்சிகளே இன்று அதன் முன்னே உறுமி நிற்கின்றன.
காங்கிரஸ் தன்னுடைய தலைமையில் உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியைக் காங்கிரஸ் ஒருங்கிணைத்திருக்கும் மாநிலங்களின் கூட்டணி என்றே சொல்ல வேண்டும். சித்தாந்தரீதியாகவே மாநிலங்களை அதிக அதிகாரமற்ற நிர்வாக அலகாக பார்க்கும் பாஜகவுக்குத் தன்னுடைய இலக்கை அடைவதற்கு மாநிலக் கட்சிகள் இரட்டைச் சவால். ஆக, மாநிலங்களில் முதல் இரு இடங்களில் ஒன்றைத் தனதாக்குவதன் மூலம் ஏற்கெனவே உள்ள அரசியல் அதிகார அடுக்குகளை மாற்றியமைக்கவும் மாநிலக் கட்சிகளை மட்டுப்படுத்தவும் பாஜக விரும்புகிறது.
தமிழ்நாட்டில் அப்படிப் பார்த்தால், ஆளுங்கட்சியான திமுகவை பாஜக கடுமையாக எதிர்த்தாலும், அதன் முதன்மை இலக்கு இன்று பிரதான எதிர்க்கட்சியாக உள்ள எம்ஜிஆரின் அதிமுகதான். அதிமுக சார்ந்த மக்கள் திரட்சியை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, எம்ஜிஆர் மீதான அபிமானமும் அடித்தட்டு மக்கள் நலனை முன்னிறுத்திய அவருடைய அரசியல் மீதான அபிமானமும். இரண்டு, திமுக மீதான வெறுப்பும் அதன் ஆட்சி மீதான வெறுப்பும்.
அதிமுகவின் இடத்துக்கு பாஜக வர வேண்டும் என்றால் இந்த இரண்டு புள்ளிகளிலும் அது செயலாற்ற வேண்டும். நேரடியான வார்த்தைகளில் சொல்வதென்றால், அதிமுகவின் இடத்தை அபகரிக்காமல், தமிழ்நாட்டில் பாஜக வளர வாய்ப்பே இல்லை. இரு தரப்புத் தொண்டர்களுக்குமே இது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டதால்தான் இரு கட்சிகளும் சேர்ந்து பயணப்பட முடியாது எனும் முடிவுக்கு அதிமுக வந்தது. தனித்து நின்றால் திமுக, அதிமுக இரு மலைகளுக்கு மத்தியில் ஒரு தொகுதியில் வெல்வதுகூட உறுதி கிடையாது என்ற நிலையிலும்கூட பாஜகவும் அந்த முடிவுக்குத் துணிந்தது.
திமுகவுக்கு எதிராகவும், அதேசமயம் அதே பண்பைக் கொண்ட அதிமுகவுக்கு மாற்றாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இந்த முடிவு உதவும் என்று பாஜக நம்புகிறது. அப்படி இருக்க தமிழ்நாட்டுக்கு வந்த மோடி அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆரை விமர்சிக்கத்தானே வேண்டும்? ஏன் புகழ்கிறார்? விஷயாதிகளான டெல்லியின் அரசியல் விமர்சகர்களையும்கூட இந்தக் கேள்வி விட்டுவைக்கவில்லை. ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றையோ அல்லது சென்ற ஐம்பதாண்டு தேர்தல் புள்ளிவிவரங்களையோ கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இதன் அர்த்தப்பாடு எளிதாக விளங்கும். நவீன தமிழ்நாட்டின் வரலாற்றில் பரிச்சயம் இல்லாவிட்டாலும் இந்தியாவில் மாபெரும் தேர்தல் வித்தகர் என்ற வகையில் பிரதமர் மோடி எம்ஜிஆரின் பலத்தைச் சரியாகவே கணித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
இந்தக் கட்டுரையை நான் எழுதும் நாளில் சென்னை நகரின் மையத்தில் உள்ள அசோக் நகர் உதயம் திரையரங்கில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரையிடப்பட்டிருக்கிறது. எம்ஜிஆரின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்று. இயக்கமும் எம்ஜிஆர்தான். படம் வெளியாகி அரை நூற்றாண்டு காலம் ஆகிறது. எம்ஜிஆர் மறைந்து நாற்பதாண்டுகள் நெருங்கும் நிலையிலும், ஏதோ புதிய படம் போல அவருக்குப் பிரமாண்ட மாலை சூடி ஆரவாரத்துடன் ஆராதிக்கிறது ஒரு கூட்டம். எம்ஜிஆரின் பிரமாண்டமான செல்வாக்கு வட்டத்துக்குள் இந்த வட்டமெல்லாம் ஒரு சிறுபுள்ளி. தமிழ்த் திரையுலகில் அடுத்தடுத்து அவருடைய சூப்பர் ஸ்டார் இடத்துக்கு வரும் ரஜினி, விஜய் எல்லோருக்குமே அவர்களுடைய படங்களுக்கான சட்டகமும் பெருநட்சத்திர பிம்ப உருவாக்கமும் இன்றும் எம்ஜிஆர் சமன்பாட்டிலிருந்தே தோற்றம் கொள்வதை நாம் கவனிக்க வேண்டும்.
தமிழ்ச் சமூகம் தனக்கான உளமாற உழைத்தவர்களை எங்கோ தன் வாழ்வின் ஒரு பகுதியாக உருவாக்கிக்கொள்வதை மரபாக வைத்திருக்கிறது. நெடிய வேர்களைக் கொண்ட பழங்குடிச் சமூகங்களில் வெளிப்படும் மூத்தோர் வழிபாட்டுடன் இணைத்து நாம் இதைக் காணலாம். அதாவது, தமக்காக உழைத்தவர்களைக் குலச்சாமி போன்று ஆக்கிக்கொள்ளுதல். பெரியார் எப்படியோ, காமராஜர் எப்படியோ, அண்ணா எப்படியோ, எம்ஜிஆரும் அப்படி இந்த மண்ணில் ஊன்றியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களிடத்தில் பெரியாரின் செல்வாக்கை திராவிடர் கழகத்தினர் எண்ணிகையுடனும், காமராஜர் செல்வாக்கை காங்கிஸார் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுக் கணக்கிடுபவர்களால் இதைப் புரிந்துகொள்ள முடியாது.
எம்ஜிஆர், ஜெயலலிதா எனும் பெரும் கவர்ச்சி கொண்ட தலைவர்கள் வழிப் பயணப்பட்ட அதிமுக 2016க்குப் பின்னர் பெரும் செல்வாக்கற்ற தலைவர்களின் தலைமை, ஏராளமான கோஷ்டி சண்டைகள், அடுத்தடுத்த தேர்தல் தோல்விகள் என்று அடுத்தடுத்து ஏராளமான இக்கட்டுகளுக்குள் சிக்கினாலும், கட்சியாக இன்னமும் சிதறாமல் வலுவாக நிற்கிறதே எப்படி? எவ்வளவு அடி வாங்கினாலும் அதன் கட்சித் தொண்டர்கள் பாஜக பக்கமோ திமுக பக்கமோ போகாமல் உறுதிபட தம் கட்சியில் நிற்கிறார்களே எப்படி? இன்னமும் தேர்தல் களத்தில் 30% வாக்குகளைத் தன் வசம் அதிமுக ஈர்த்திழுத்து வைத்திருக்கிறதே எப்படி? எம்ஜிஆர் கூடுவிட்டுக் கூடுமாறிய ‘இரட்டை இலை’ அவர்களை ஒருங்கிணைத்திருக்கிறது.
எம்ஜிஆரை விமர்சித்துப் பேசி அவருடைய வாக்குகளை வெல்ல முடியாது என்பது மோடிக்குத் தெரியும். அதனால்தான், அவர் எம்ஜிஆர் புகழ் பாடி அவர்களை ஈர்க்க நினைக்கிறார். பல்லடம் கூட்டத்தில் எம்ஜிஆர் கட்அவுட்டுக்கு அருகிலேயே காமராஜர் கட்அவுட்டையும் பாஜக வைத்திருந்ததையும், தமிழ்நாட்டு அரசியலில் மோடி கவனம் செலுத்தலான பின்னர் பெரியாரை இழிந்துரைப்பதையும்கூட அக்கட்சியினர் நிறுத்திக்கொண்டிருப்பதையும்கூட நாம் இங்கே கவனிக்க வேண்டும். டெல்லியில் காமராஜர் வீடு பாஜகவின் முன்னோர்களால் தீயிடப்பட்டது. காந்தி + அண்ணா அரசியல் கலவையான எம்ஜிஆரும் பாஜக பக்கம் நின்ற வரலாறு கிடையாது. பெரியார் எப்போதும் பாஜக சித்தாந்தத்துக்கு நேரெதிர் மையம். அதனால் என்ன? வாய்ப்பிருந்தால் பாஜக யாரையும் விழுங்கும்!
- ‘குமுதம்’, மார்ச், 2024
தொடர்புடைய கட்டுரைகள்
எம்ஜிஆரும் ரஜினி, கமல், விஜயும் ஒன்றா?
மீண்டெழட்டும் அதிமுக
கலைஞர் தோற்கக் கூடாதுன்னு நெனைச்சார் எம்ஜிஆர்: ஹண்டே பேட்டி
அதிமுகவும் பாஜகவும் ஒன்றா?
ஜெயலலிதாவாதல்!
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேட்டி
4
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.