கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி, இந்தியாவின் குரல்கள் 4 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பின்மை, வருமானச் சரிவு… பாஜகவைப் பின்னுக்கு இழுக்கும் சரிவுகள்

சமஸ் | Samas
18 May 2024, 5:00 am
0

நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ச்சியாகப் பேட்டிகளும் அளித்துவருகிறார். இந்திய அரசியல் களத்தைப் பற்றி விரிந்த பார்வையைத் தரும் இந்தத் தொடரின் எந்தப் பதிவையும் தனித்தும் வாசிக்கலாம்; தொடர்ந்தும் வாசிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

ன்னமும் பிரதமர் மோடியின் முகத்துக்கு இணையாக எதிரே ஒரு முகம் மேல் எழுந்திராத சூழலில், பாஜக ஆட்சியைப் பின்னுக்கு இழுக்கும் பிரதான சக்திகள் எவை? மக்கள் எந்தெந்த பிரச்சினைகளைப் பிரதானமாகப் பேசுகிறார்கள்? 

பயணத்தில் நான் கலந்துரையாடியவர்களில் ஆகப் பெரும்பாலானவர்கள் குறிப்பிட்ட 3 பிரச்சினைகள் இவைதான்: இளையோருக்கான வேலைவாய்ப்பின்மை, விலைவாசியோடு ஒப்பிட வீட்டின் வருமானச் சரிவு, சேமிப்பு கரைய அதிகரிக்கும் கடன். இன்னும் ஒவ்வொருவரும் தனித்தனியே சுட்டிய பல பிரச்சினைகள் உண்டு. சாமானியர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் சார்ந்து பேசுகையில், எதிர்காலம் குறித்த கவலை வலுவாக அவர்களைச் சூழ்ந்திருப்பதைக் கவனிக்க முடிகிறது.

பஞ்சாபின் அமிர்தசரஸில் சாலையோர உணவகம் வைத்திருக்கும் பெண்மணி ஒருவர் சொன்னார், “இன்றைக்குத் தேவைக்கு வருமானம் வருகிறதா? வருகிறது! இன்றைக்கு சாப்பாடு இருக்கிறதா? இருக்கிறது! சரி, எனக்கு ஏதாவது உடலுக்கு முடியாமல் போய் நான்கு நாட்கள் ஆஸ்பத்திரியில் படுத்தால் குடும்பம் என்னவாகும்? இந்தக் கேள்விக்குப் பதில் இல்லை. வீட்டில் வேலைக்குச் செல்ல வேண்டிய வயதில் பையன் இருக்கிறான். அவன் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை. மோடி சர்க்காரிடம் கேட்டால், பக்கோடா போடச் சொல்வார்கள்! அதற்கு நான் அவனைப் படிக்க வைத்திருக்க வேண்டியதே இல்லையே! பத்தாண்டுகளில் ஊரில் எங்கு பார்த்தாலும் சின்ன உணவுக் கடைகள், தள்ளுவண்டி காய்கறிக் கடைகள் முளைத்திருக்கின்றன. என்ன அர்த்தம்? அத்தனை பேருக்கு வேலை கிடைக்கவில்லை!”

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இளைஞர்களிடம் பேசுகையில் வேலைவாய்ப்பின்மையைப் பெரும் மனச்சுமையோடு பேசுகிறார்கள். “வீட்டில் சாப்பாடு போட்டுவிடுகிறார்கள்; கடிந்து பேசுவதில்லை என்றாலும், நமக்கே ஒரு மன அழுத்தம் உருவாகிவிடுகிறது. படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், பல கேள்விகள் எழுகின்றன. நாம் தேர்ந்தெடுத்த படிப்பு சரியான படிப்பு இல்லையோ; நாம் தேர்ந்தெடுத்த கல்லூரி சரியான கல்லூரி இல்லையோ; இப்படி ஆரம்பித்து நாம்தான் சரியாக இல்லையோ என்றுகூட தோன்ற ஆரம்பித்துவிடுகிறது” என்று சொன்னார் பிஹாரின் பாட்னாவில் சந்தித்த இளைஞர் ஒருவர். “வேலை பெறுபவராக முயற்சிப்பதற்குப் பதிலாக வேலை கொடுப்பவராக முயற்சியுங்கள்” என்று பாஜக சொல்கிறது. எல்லோருக்குமே எல்லாத் திறன்களும் கைகூடிவிடுவதில்லை. அடிப்படையில் முதலீட்டுக்கு எங்கே போவது?” என்று கேட்டார் அவருடன் அருகில் இருந்த அவருடைய நண்பர்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்

சமஸ் | Samas 03 May 2024

சரியாகவே, எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையைப் பேசுகின்றன. பிஹாரி தேஜஸ்வி யாதவ் போன்ற இளம் தலைவர்கள் இன்றைய தலைமுறையின் மொழியில் பேசுகையில் அது கூடுதலான தாக்கத்தை உண்டாக்குகிறது. “தேஜஸ்வி பிஹார் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், ‘ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவோம்’ என்று சொன்னார். அதுபோலவே அவர் துணை முதல்வராக இருந்த 17 மாத காலத்தில் 5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட காரணமாக இருந்தார். மோடி அரசாங்கத்திடமும் இப்படியான வெளிப்பாட்டைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்” என்று சொன்னார் இன்னோர் இளைஞர்.

பிரதமர் மோடி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினையை அரசும் மக்களும் எப்படி மாறுபட்ட இரு கோணங்களிலிருந்து அணுகுகிறார்கள் என்பதை நமக்கு உணர்த்த வல்லது.

மோடி சொல்கிறார், “இந்தியா 10 ஆண்டுகளுக்குள் 248 கிமீ நீள மெட்ரோ பாதைகளை 905 கிமீ நீளத்திற்கு விரித்திருக்கிறது. 74 ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கையை 149 ஆக உயர்த்தியிருக்கிறது. 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 706 ஆக அதிகரித்திருக்கிறது. இதெல்லாம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்காதா? சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறதே, அது அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்காதா?  பத்தாண்டுகளில் மூலதன முதலீட்டு செலவினம் ரூ.1.9 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாகி உள்ளது. இது எவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கும்?”

உண்மைதான். நிச்சயம் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. ஆனால், பெருமளவில் அவை அன்றாடப்பாட்டைத் தாண்டி பலனளிக்கும் வேலைவாய்ப்புகளாக இல்லை. ஒரு மெட்ரோ ரயில் நிலையம் எத்தனை பேருக்கு நிரந்தரப் பணி வாய்ப்பை உருவாக்குகிறது; எத்தனை பேரை அன்றாடக் கூலிகளாக வைத்திருக்கிறது என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டால் இதற்கான விடை துல்லியமாகிவிடும். 

அன்றாடங்காய்ச்சி வேலைகள் எங்கும் சூழ்ந்திருக்கின்றன. “எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. உங்களுக்கு எவ்வளவு வேலை கொடுக்கப்பட்டாலும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வெளியேற வேண்டியதுதான். எந்த நிச்சயமும் நாளைக்குக் கிடையாது. இதுதான் மனதைப் பெரிதாக அச்சுறுத்துகிறது!” என்று பலரும் சொல்கிறார்கள்.

இந்த நிச்சயமற்றத்தன்மைதான் அரசு வேலைவாய்ப்புகளை நோக்கி இளையோரை அலைமோத வைக்கின்றன. 

“உத்தர பிரதேசத்தின் கான்பூரில் சில ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சித் துப்புறவுப் பணியாளர் வேலைக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பித்த சூழலை நினைத்துப் பாருங்கள். எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்ற வேலைக்குப் பொறியியல் படித்தவர்கள் எல்லாம் விண்ணப்பித்திருந்தார்கள். காரணம் என்ன? அரசுப் பணியில் கிடைக்கும் பணிப் பாதுகாப்புதான். ஆனால், அரசு வேலைவாய்ப்புகள் மோடி சர்க்காரில் குறைந்துவிட்டன” என்று ரயிலில் என்னோடு பயணித்த ஓர் இளம்பெண் கூறினார்.

அரசியல் ஸ்திரத்தன்மை, தேசியப் பாதுகாப்பு, வல்லரசுக் கனவு என்று பாஜக தன்னுடைய மேடைகளை வெவ்வேறு விஷயங்கள் நோக்கி நகர்த்த இது முக்கியமான காரணம். புதிய முதலீடுகள், ஸ்டார்ட் அப்கள் வளர்ச்சி, யூனிகார்ன்கள் பெருக்கம் என்று பாஜக முன்வைக்கும் வாதங்கள் எதுவும் நிரந்தர வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையைப் பெரிய அளவுக்கு வளர்த்திடவில்லை என்பதே உண்மை. ஐந்தில் ஒருவர்தான் முறையான வேலையில் இருக்கிறார்.

2024 மக்களவைத் தேர்தல் வியூகத்தில் நான்கு தரப்பினரை பாஜக தன்னுடைய கவனத்துக்குரிய முக்கிய தூண்களாகக் கூறுகிறது: ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள். இந்த நான்கு தரப்பிடம்தான் அதிகமான மனக் கவலையை நான் பார்க்க நேரிட்டது. கணிசமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை பெரும் கவலையைத் தருகிறது என்றால், கணிசமான ஏழைகளுக்கு வருமானச் சரிவு பெரும் கவலையைத் தருகிறது. கணிசமான பெண்கள் வீட்டின் சேமிப்பு கரைந்து கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டனர். விவசாயிகளைப் பொறுத்த அளவில், வேறு வழியில்லாமல் இத்தொழிலில் ஈடுபடும் நிலையில் இருப்பதாகவே கூறினர்.

மோடி அரசுக்கு களத்தில் உள்ள ஒரு சாதகமான அம்சம் என்னவென்றால், இந்தக் கவலைகள் எதுவும் இன்னும் அரசு மீதான கடும் அதிருப்தியாக மக்களிடம் உருவெடுக்கவில்லை. அதாவது, எதிர்ப்பு உலை இப்போதுதான் சூடேற ஆரம்பித்திருக்கிறது. உண்மையில் மக்கள் நலத் திட்டங்கள்தான் பெரிய அளவிலான எதிர்ப்பாக இந்தக் குரல்கள் உருவெடுக்காமல் பாஜக அரசைக் காக்கின்றன என்று எண்ணுகிறேன். 

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

சமஸ் | Samas 15 Apr 2024

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள், பிரதமரின் வீடு திட்டம், தூய்மை பாரத கழிப்பறைகள் கட்டுமானத் திட்டம், குடிநீர்க் குழாய் இணைப்புத் திட்டம், வீட்டுக்கு எரிவாயு இணைப்புகள் கொடுக்கும் திட்டம், விலையில்லா கோதுமை / அரிசி வழங்கும் திட்டம் இவையெல்லாம் பல கோடி மக்களைச் சென்றடைந்துள்ளதால், ஏதோ ஒரு வகையில் இந்த அரசால் பயன் பெற்றுள்ளதாகக் கணிசமானோர் எண்ணுகிறார்கள். அதேபோல, குறைந்தபட்ச வருமானத்துக்கான வேலைவாய்ப்புகள் கிடைப்பதாலும், ரேஷன் தானியம் கிடைப்பதாலும் அன்றாட சாப்பாட்டுக்கான பிரச்சினை இல்லை. இது மக்களுடைய பொறுமையின் கனத்தைக் கூட்டியிருக்கிறது. அதேசமயம், இந்தச் சலிப்பு தேர்தலில் எவ்வளவு தீவிரமாக எதிரொலிக்கும்; எவ்வளவு காலம் சலிப்பாகவே நீடிக்கும் என்பது தெரியவில்லை. ஏனென்றால், தீவிரமான விரக்தியும் அச்சமும் பலரிடம் வெளிப்படுகிறது. “சேமிப்பே இல்லை. அடுத்த சில வருஷங்களில் பெண்ணுக்குக் கல்யாணம் செய்ய வேண்டும். என்ன செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை. ஏற்கெனவே கையில் இருந்த நகைகளும் கரோனா காலத்தில் போய்விட்டன. இப்போது வரும் வருமானம் அன்றாடப்பாட்டுக்கே காணவில்லை” என்று ஒடிஷாவின் புவனேஸ்வரத்தில் ஒரு பெண்மணி கூறினார்.

பாஜகவைக் கீழே இழுப்பதோடு மட்டும் அல்லாமல், அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலுமே, அவர்களுக்கு இது பெரும் தலைவலியாக உருவெடுக்கும் என்பதையே சாமானிய இந்தியக் குடும்பங்களின் பொருளாதாரக் கவலைகள் உணர்த்துகின்றன!

-‘குமுதம் ரிப்போர்ட்டர்’, மே, 2024

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள் 

வடக்கு: மோடியை முந்தும் யோகி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
தேர்தலை அச்சத்துடன் பார்க்கிறேன்: பால் சக்கரியா பேட்டி
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


4






இயம்அங்கீகாரம்தனிப் பெரும்பான்மைஈரான் - ஈராக்மனுதர்ம சாஸ்திரம்பசுமை கட்டிடங்கள்பெரியார் சிந்தனைகளை இந்தியில் எழுதிய லலாய் சிங்preparing interviewsஜப்பான்வனப்பகுதிஅற்புதம் அம்மாள் பேட்டிதாமஸ் எல். ப்ரீட்மேன் கட்டுரைதான்சானியாவின் முக்கிய நகரங்கள்மதுப் பழக்கம்சமூக சீர்திருத்தம்மத்திய உள்துறைச் செயலர்‘அமுத கால’ கேள்விகள்திராவிடக் கட்சிகள்Gandhi’s Assassinஇழிவான பேச்சுகள்பெரியார் சொன்ன ‘சீவக்கட்டை’ஹெம்லிதம்பி வா! தலைமையேற்க வா!மஹாராஷ்டிரம்இடஒதுக்கீட்டுதெற்கிலிருந்து ஒரு சூரியன் சமஸ்சம்ஸ்கிருதமயமாகும் தமிழ்ச் சமூகம்விஜயும் ஒன்றா?சார்லி சாப்ளின் பேட்டிசியாமா சாஸ்திரிகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!