கட்டுரை, கலை, சினிமா, கலாச்சாரம், சமஸ் கட்டுரை 4 நிமிட வாசிப்பு

காந்தாரா: பேசுவது தெய்வமா, வேஷதாரியா?

சமஸ் | Samas
13 Dec 2022, 5:00 am
5

காட்டுக்குள் செல்வது காடோடு நம்மைக் கரைத்துக்கொள்வது, அன்றாட வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விடுவித்துக்கொள்வது என்பதால், கூட்டமாகச் சேர்ந்துகொண்டு செல்வது என் வழக்கம் இல்லை. காட்டோடு ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் நண்பர்களில் யாரையேனும் அழைத்துக்கொண்டு சென்று அவர்கள் சொல்லும் இடத்தில் தங்குவேன் அல்லது காட்டிலேயே வாழும் பழங்குடியின நண்பர் எவர் வீட்டுக்கேனும் சென்று அங்கு தங்குவேன்.

தெரியாத்தனமாக ரொம்பவும் பிரியப்பட்டார் என்று அந்த முறை வெளிநண்பர் ஒருவரை உடன் அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன். வண்டி மலை ஏறும்போதே நெருக்கமான மரங்களுக்கு இடையே மான்கள் ஏதும் தென்படுகிறதா என்று பார்த்தபடி நசநசக்கலானார். “எப்படியாச்சும் நல்ல சாப்பாடு ஒண்ணு போட்ருங்க நண்பா!”

எனக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்தது. காட்டுக்குப் போனால், சிங்கத்தையே அடித்துச் சாப்பிட்டு வர வேண்டும் என்று மூடக்கனவு நம்மூரில் சகஜம். “புலிகள் நடமாடும் பகுதி. நாம எதுக்கும் சாப்பாடு ஆகிடக் கூடாதுங்கிற நெனைப்புல வாங்க நண்பா” என்றேன். அமைதியானார்.

அரசுக்குச் சொந்தமான ஒரு விடுதியில் நாங்கள் தங்க ஏற்பாடு ஆகியிருந்தது. அங்கு இருந்த சிப்பந்தி ஏற்கெனவே எனக்குப் பரிச்சயம் ஆனவர். நான் குளித்துவிட்டு வரும் நேரத்துக்குள் சிப்பந்தியை நட்பாக்கிக்கொண்ட நண்பர் அவரிடம் நேரடியாகவே கேட்டுவிடுட்டார். “காட்டு ருசி தனி ருசிம்பாங்க. நீங்க காட்டு முயலையாச்சும் எனக்கு ஆக்கிப்போட்டுடணும்!”

இப்படியான அரசாங்க விடுதிக்குச் சென்று தங்கும்போது, பெரும்பாலும் சாம்பார், ஒரு காய்கறிக் கூட்டோடு சோறு கிடைத்தால் நல்ல உணவு. பழங்குடி கிராமங்களில் தங்க நேர்ந்தால் அவர்கள் கோழியோ, மீனோ சமைத்துக் கொடுப்பார்கள். அதிலும் மீன் எல்லா காலங்களிலும் கிடைக்காது. வீடுகளில் மக்கள் வளர்ப்பதால் கோழி கிடைக்கும். காட்டுக்கோழி இல்லை; நாட்டுக்கோழி. குழம்பு நல்ல ருசியாக இருந்தாலும், நல்ல நீர்ப்பாக ரசம்போல இருக்கும். விடுதியில் அசைவம் கேட்டால், ஒரே உடனடி வழி கோழிதான். கீழே போய் வாங்கி வருவார்கள், பிராய்லர் கோழி.

சிப்பந்தி சொன்னார், “நல்ல விருந்து ராத்திரிக்கு இருக்கும்.” நான் புரியாமல் விழித்தேன். சிப்பந்தி சிரித்தார்.

சின்ன பயணம். இரு நாட்கள். கிளம்பும் அன்று நல்ல மசாலாவுடன் பிரட்டப்பட முழுக் கொழுத்த கோழியை சிப்பந்தி பரிமாறினார். “காட்டுக்கோழி சார். ஆள் வெச்சுப் புடிச்சது.” நண்பருக்குப் பரமானந்தம். இன்றைக்கும்கூட “அந்த மாதிரி காட்டுக்கோழி ருசி எங்கே கிடைக்கும் சொல்லுங்க!” என்பார்.

நடந்தது என்னவென்றால், சிப்பந்தி கீழே சென்று வாங்கி வந்த பிராய்லர் கோழி, கடை மசாலாவைப் போட்டு நல்ல காரத்தோடு சமைக்கப்பட்டிருந்தது. பொடியாக வெட்டித் தூவப்பட்ட மிளகாய், தக்காளி, வெங்காயத்தோடு காட்டில் சில இலைகளையும் சேர்ந்திருந்தது இவருக்கு நல்ல காட்சியாக இருந்தது. சிப்பந்தி சொன்னார், “வீட்டுல வளக்குற கோழி இங்கே கிடைக்காது. அப்படியே வாங்கிட்டு வந்து இங்கே சமைக்கிற மாதிரி சமைச்சுக் கொடுத்தாலும் எலும்பும் கடிசுமா இருக்குற கோழியும் ரசம் மாதிரி வைக்கிற அந்தக் குழம்போட ருசியும் இவங்களுக்குப் பிடிக்காது. இப்போ அவங்க எண்ணத்துக்கு ஏத்த மாதிரி சமைச்சாச்சு. அவங்க சந்தோஷம்தானே முக்கியம்!”

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ படத்தின் வெற்றியைப் பார்த்தபோது எனக்கு அந்த நண்பர் சாப்பிட்ட ‘காட்டுக்கோழி’ நினைவுக்கு வந்தது. 

இதுவரை பழங்குடி மக்கள் வாழ்வைப் பேசும் வகையில் எடுக்கப்பட்ட எந்தப் படமும் அடையாத பெரிய வெற்றியை ‘காந்தாரா’ அடைந்திருக்கிறது. சொல்லப்போனால், சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பிரம்மாண்ட வசூலை எடுத்திருக்கும் படங்களின் வரிசையில் அது முன்னணியில் நிற்கிறது. கன்னடத்தில் மட்டும் அல்லாது, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் வசூலோடு பெரிய விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. படத்தின் இயக்குநரும் நாயகருமான ரிஷப் ஷெட்டியை அழைத்துப் பாராட்டியதோடு, அதன் தொடர்ச்சியாக இரு தசாப்தங்களுக்கு முன் வெளியாகித் தோல்வி அடைந்த தன்னுடைய ‘பாபா’ படத்தை மறுவெளியிட ரஜினி முடிவெடுத்தது, திரையுலகில் ‘காந்தாரா’ ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்துக்குச் சான்று.

உள்ளூர் படமாகக் கர்நாடகத்தில் உருவாக்கப்பட்ட ‘காந்தாரா’ எப்படி கன்னடத்தைத் தாண்டியும் எல்லோரையும் வசீகரிக்கிறது என்றால், வனத்தையோ, பழங்குடிகளை அறிந்திராத சமவெளி மக்களுக்கு, ‘வனப் பழங்குடிகள் இப்படித்தான் இருப்பார்கள்’ என்று முன் கட்டமைக்கப்பட்ட கற்பனைச் சட்டகத்துக்குள் அது கச்சிதமாக உட்கார்ந்திருக்கிறது. அதை நல்ல கவுச்சி வாசத்துடன் பரிமாறுகிறது. இந்த வரியை வாசிக்கும்போது, பின்புறத்தில் அடுப்புத் தீ எரியும் மங்கலான ஒளியில் குளித்த தலைமுடியில் ஈரம் சொட்ட, மாநிற தேகத்தில் மெல்ல கசியும் வியர்வையோடு, கதாநாயகி சப்தமி கௌடா முட்டி வரை சேலையைச் சுருட்டிக்கொண்டு, செழித்த கால்களையும் இடுப்பையும் காட்டியபடி மீனை அறுத்தவாறு நாயகனைப் பார்க்கும் சரசப் பார்வையும், பார்க்கும்போதெல்லாம் காட்டுக்கோழி, காட்டுப்பன்றி, மீன் என்று எதாவது இறைச்சியைச் சுடச்சுட வறுத்து மதுவோடு சாப்பிட்டபடி கண்ணில் போதையோ காமமோ தெறிக்க நாயகன் ரிஷப் ஷெட்டி பேசும் தெனாவட்டான வசனங்களோ உங்களுக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தால், படத்தின் கென்னியை நாம் இருவரும் பிடித்துவிட்டோம் என்று அர்த்தம்!

படத்தின் மையக் கதை பெரும்பாலான பழங்குடி தெய்வங்கள், தொன்மங்களின் அடிப்படையோடு பிணைந்திருக்கிறது. பஞ்சுர்லி, குலிகா என்று இரு தெய்வங்கள். பஞ்சுர்லி செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தரும் தெய்வம். குலிகா காவலையும் பாதுகாப்பையும் தரும் தெய்வம். இந்தத் தெய்வங்களின் இருப்பிலும், பழங்குடிகளின் வாழ்விலும் குறுக்கிடும் வெளியாட்கள் என்ன ஆகிறார்கள்? இப்படியும் ‘காந்தாரா’வின் கதையைச் சொல்லலாம். ஒரு கிராமம். சுவாரஸ்யமான வாழ்க்கை. வெளியாட்கள் நிலத்தை ஆக்கிரமிக்க முற்படுகிறார்கள்; மக்களை நில ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதுகிறது அரசு. நாயகன் தடுத்து நிற்கிறான். பழங்குடிப் பின்னணிச் சட்டகம். இப்படியும் ‘காந்தாரா’வின் கதையைச் சொல்லலாம்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

லவ் டுடே: அநாகரீகம், ஆபாசம்

ராஜன் குறை கிருஷ்ணன் 14 Dec 2022

காட்டுக்குச் சில முறையேனும் சென்றவர்கள், பழங்குடி மக்களுடன் சில நாட்களேனும் தங்கியவர்கள் ‘காந்தாரா’ காட்டும் பழங்குடிகள் வாழ்க்கை போலி – அபத்தம் என்பார்கள். என் அனுபவத்தில் படத்தில் காட்டப்படுவதுபோல பழங்குடி மக்களில் காவி கட்டி இப்படிக் கொழுத்த உடலுடன் நாளெல்லாம் வெட்டியாக ஊர் சுற்றி, குடித்துவிட்டும் கஞ்சா அடித்துவிட்டும் சீட்டாடிக்கொண்டு திரியும் சிலரையேனும் நான் பார்த்தது இல்லை. அசலான பழங்குடிகளும் வாழ்க்கையும் ‘ஜெய்பீம்’ படத்தில் நமக்குக் காணக் கிடைத்தார்கள். அவர்கள் நம் சுவாரஸ்ய கற்பனைகளைக் கலைத்துப்போட்டு தூக்கத்தைக் குலைத்தார்கள். இந்த அமைப்போடும், அரசோடும் அவர்கள் நடத்தும் போராட்டங்கள் ‘காந்தாரா’வில் காட்டப்படுவதுபோல, கணத்தில் ஒரு ‘ஓவ் தீர்வு’ சொல்லி முடிவுக்கு வருவன இல்லை!

ரிஷப் ஷெட்டிக்குப் படத்தின் மூலக்கதை உள்ளபடியே ஒரு நல்ல படத்துக்கான வாய்ப்பை இயல்பாக வழங்கியிருக்கிறது. அவருக்கு அப்படி ஒரு படத்தைக் கொடுக்கும் ஆற்றலும் இருப்பதாகவே தோன்றுகிறது. படத்தின் சில காட்சிகளில் வந்திருக்கும் பிரமாதமான சித்திரிப்பும் வசனங்களும் இந்த நம்பிக்கையை அளிக்கின்றன.

மகிழ்ச்சியற்ற ராஜா தன்னுடைய வீட்டிலிருந்து வெளியேறி காட்டுக்குச் செல்வதும், மழை நாளில் வனாந்திரத்தில் கல்லாக உறைந்திருக்கும் ‘பஞ்சுர்லி’ தெய்வத்தைக் காண்பதும், அதைக் கண்ட மாத்திரத்தில் தாயின் அளவில்லாத அன்பு - தாய்மாமனின் ஞானம் தோய்ந்த அரவணைப்பை உணர்வதும், தெய்வத்தைத் தன் வீட்டுக்குக் கொண்டுசெல்ல ராஜா அனுமதி கேட்பதும், ‘நான் இந்த மக்களைச் சேர்ந்தவன்; நான் உன்னோடு வந்தால் உனக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும்; நான் வருகிறேன்; பதிலுக்கு நீ என் குரல் எதுவரை கேட்கிறதோ அதுவரையிலான இடத்தை என் மக்களுக்குக் கொடுக்க வேண்டும்’ என்று தெய்வம் சப்தமிடுவதுமான ஆரம்பக் காட்சியே அருமையான எடுப்பைத் தருகிறது. படத்தில் எதையெல்லாம் எப்படி சுவாரஸ்யமாகக் கொண்டுவர வேண்டும் என்பதற்கு ‘கம்பாலா’வையும் ‘பூதகோலா’வையும் ரிஷப் ஷெட்டி நுழைத்திருக்கும் விதம் உதாரணம். படத்தின் கதையும் மக்களின் வாழ்வும் பல விஷயங்களைத் தன்னியல்பில் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. இதையெல்லாம் மீறியும் படம் பள்ளத்தில் வீழ்ந்ததற்கு ரிஷப் ஷெட்டி உருவாக்க முற்பட்டிருக்கிற அரசியல் கதையாடலே காரணம். 

படத்தின் மையமானது, பழங்குடிகள் எதிர்கொள்ளும் நிலவுரிமையில் நிலைகொண்டிருக்கிறது.  

இந்தியப் பழங்குடிகள் எதிர்கொள்ளும் ஆதாரமான பிரச்சினைகளில் ஒன்றும் நாட்டின் பல இடங்களிலும் பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் துயரமும் இது. படத்திலேயே ஓர் இடத்தில் ரிஷப் ஷெட்டி பேசுவதுபோல, அரசு என்று ஒன்று உருவாகும் முன்பிலிருந்தே வனத்தில் வசிப்பவர்கள் அவர்கள். யாரிடம், எதற்கு, ஏன் அவர்கள் அனுமதி வாங்க வேண்டும்? அவர்களுடைய வீடுகள், நிலம் மட்டும் பிரச்சினையாகவில்லை; காட்டுக்குள் பழங்குடிகள் சுள்ளி பொறுக்கி வருவது தொடங்கி அவர்களுடைய திருவிழாவின் ஒரு பகுதியாக வேட்டு போடுவது வரை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. முழு மசாலா படமாக எடுக்கப்பட்டாலும், இந்த மோதல் படத்தில் இயல்பாக வந்து நின்றிருக்கிறது.

ஆக, இந்த விவகாரம் இயக்குநரின் கற்பனை எல்லைக்கு உள்ளே அல்லாமல் நிதர்சனத்தில் இருக்கிறது. இந்த இடத்தில் ஒரு பொறுப்புள்ள படைப்பாளியாக ரிஷப் ஷெட்டி என்ன செய்திருக்க வேண்டும்? நாடு முழுக்க உள்ள பழங்குடிகள் களத்தில் இந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற நிதர்சனத்துக்கு முகம் கொடுத்திருக்க வேண்டும். அரசின் கொடுங்கோன்மையைப் பழங்குடிகள் எந்த வழியில் எதிர்கொள்கிறார்கள்; அரசு அதிகாரிகளுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர எத்தகைய உரையாடல்களை மேற்கொள்கிறார்கள் என்ற இடத்துக்குள் நுழைந்திருக்க வேண்டும். சாதாரண விவகாரம் இல்லையே இது; இத்தகு போராட்டங்களின் வழியில்தானே இந்தியக் காடுகளுக்குள் தம் சொந்த அரசுடன் ஒரு போரைப் பழங்குடி மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது! 

படத்தில் பழங்குடி இளைஞராக வரும் ரிஷப் ஷெட்டிக்கும் வனத் துறை அதிகாரியாக வரும் கிஷோருக்கும் இடையில் வரும் மோதல் இரு தனிநபர்களுக்கு இடையிலானதா அல்லது இரு தரப்புகளுக்கு இடையிலானதா?

பழங்குடிகளுடன் மூர்க்கமாக மோத தனிப்பட்ட நோக்கம் எதுவுமே கிஷோருக்கு இல்லை. பழங்குடி மக்களின் குடியிருப்புப் பகுதியை ஆக்கிரமிப்பாகக் கருதும் அரசு அவர்களை வெளியேற்ற அவருக்கு இட்ட பணியை கிஷோர் செய்ய முற்படுகிறார். அரசின் பிரதிநிதி அவர். சொல்லப்போனால், கிஷோர்தான் இங்கே அரசு. கிஷோருக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் பல கிராமங்களில் இன்றும் இயல்பானவை. 

ரிஷப் ஷெட்டி இந்த உண்மைக்கு முகம் கொடுத்திருந்தால், அங்கே ஒரு பிர்ஸா முண்டாவை அவர் சந்தித்திருக்க முடியும்;  ஒரு மேதா பட்கரைச் சந்தித்திருக்க முடியும்; ஒரு கல்யாணியை அவர் சந்தித்திருக்க முடியும்; ஒரு குணசேகரனைச் சந்தித்திருக்க முடியும்; ஒரு ராதை தன்ராஜைச் சந்தித்திருக்க முடியும். இப்படித் தனி மனிதர்களாகவும் அமைப்புகளாகவும் அவர்கள் முன்னெடுக்கும் இயக்கங்களாகவும் செயல்பாடுகளாகவும் பல நிதர்சனங்களை ரிஷப் ஷெட்டி கண்டிருக்க முடியும். அதன் வழி இந்தப் பிரச்சினையைப் பொதுச் சமூகத்தை நோக்கி வீசுவதோடு அரசிடமும் இது தொடர்பில் ஒரு கவன அழுத்தத்தை உருவாக்கியிருக்க முடியும்.

ரிஷப் ஷெட்டி பிரச்சினைக்கான தீர்வை வெளியிலிருந்து படத்துக்குள் கொண்டுசென்றிருக்கிறார். எந்த வகையிலும் தன்னை மாற்றிக்கொள்ளாத அரச பிரதிநிதி கிஷோரை நம்பி, தங்கள் போராட்டத்தை மக்கள் கைவிட்டு நிலங்களை ஒப்படைக்க வேண்டும்; பின்னர் அரசிடம் நிலத்துக்காக விண்ணப்பிக்க வேண்டும் என்ற முடிவை மக்களை ஏற்கச் சொல்கிறார்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன்: தமிழ்ச் சன்னதம்

சமஸ் | Samas 11 Oct 2022

வெறும் மனித ரூபத்தில் வரும் ஒருவர் படத்தில் இதை வெளிப்படுத்த முடியாது என்ற நிலையிலிருந்தே பூதக்கோலா சடங்கில், தன்னுடம்பை பஞ்சுர்லி தெய்வத்தின் ரூபத்தில் அடைத்துக்கொண்டு ரிஷப் ஷெட்டி சொல்வதாகக் கருத வேண்டியிருக்கிறது. திட்டவட்டமாக அது பழங்குடி மக்களுக்கான துரோகம்; ஏனெனில் அது அரசியத்தின் குரல். அப்போதும்கூட படத்தின் இயல்பான பழங்குடி கதையின் இயல்பு அவருக்குக் கை கொடுக்க மறுக்கிறது. அதனால்தான் வாய்வழி வசனங்கள் வழியே ரிஷப் ஷெட்டியால் இதைச் சொல்ல முடியாது போகிறது. படத்தின் ஆரம்பத்தில் மக்கள் தரப்பிலிருந்து பூதகோலாவில் உரத்த குரலில் கம்பீரமான உடல்மொழியில் பேசும் ‘தெய்வம்’ படத்தின் இறுதியில் குலைந்த உடல்மொழியில் யார் தரப்பு என்றே தெரியாதபடி ஓங்காரமான இசையின் பின்னணியில் வாய் அடைத்து, கிஷோருடைய கைகளையும் மக்களுடைய கைகளையும் இணைக்க சைகை மொழியில் குலைந்து கூப்பிட வேண்டியது ஆகிறது.

ஆக, வணிகரீதியாக பெருவெற்றியைப் பெற்ற, பல கோடி மக்களைச் சென்றடைந்த ஒரு படத்தால் ஏன் அது மையமாகக் கொண்டிருக்கும் பழங்குடி மக்களின் நிலவுரிமை தொடர்பில் சமூகத்தில் சின்ன பேச்சைக்கூட ஏற்படுத்த முடியவில்லை என்றால், பார்வையாளருக்குப்  படைப்பாளி, படம் இரண்டின் உள்முகத்தையும் ரிஷப் ஷெட்டியின் அரசியல் காட்டிக்கொடுத்துவிடுகிறது. விளைவாக, பெரும்பான்மைப் பார்வையாளர்கள் பழங்குடிகளைப் பற்றிப் பேசுவதை மறந்துவிட்டு, படத்தின் மசாலா ஐட்டங்களில் ஆழ்கிறார்கள். கூறுள்ள பார்வையாளர்கள் ரிஷப் ஷெட்டியை நோக்கியே கேள்வியை எழுப்புகிறார்கள்: மக்களிடம் நிலங்களை ஒப்படைக்கச் சொல்லிப் பேசியது தெய்வமா, தெய்வம் வேஷம் போட்டவரா? அப்படியென்றால், இப்படி பேசச் சொல்பவர் யார்? 

-‘குமுதம்’, டிசம்பர், 2022

 

தொடர்புடைய கட்டுரைகள்

பொன்னியின் செல்வன்: தமிழ்ச் சன்னதம்
அட்டன்பரோவின் காந்தி: எப்படிப் பார்த்தது உலகம்?
லவ் டுடே: அநாகரீகம், ஆபாசம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


9

3





பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

Karthikeyan M   2 years ago

ஐயா எனக்கு படத்தில் பஞ்சுறிலி மட்டுமே நினைவுக்கு வருகிறது. நீங்கள் கூறுவது போல் சப்தமி கவுடாவின் கால்களோ இடுப்போ நினைவுக்கு வரவில்லை. தாங்கள் இவ்வாறு பொதுமை படுத்தி கூறுவது தவறு. தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரமிது.

Reply 5 1

Login / Create an account to add a comment / reply.

Subramani Sivasankaran   2 years ago

தாங்களின் இந்த பதிவு எதை நோக்கி எடுத்து செல்கிறது விமர்சன தலைப்பை நோக்கியா.... விமர்சன தலைப்பில் தங்களின் நாத்தீக அழுத்தம் தெரிந்தது. ஏனெனில் கதையின் மைய்ய கருவே அந்த "தெய்வம்" தான். முதலில் பேசியது கடைசியில் பேசவில்லையே என்று கேட்பது "என்" மனம் உடன்படவில்லை. எப்பொழுதுமே ஆரம்பத்தில் குரல் ஓங்கி ஓலிக்கும் இறுதியில் மகிழ்ச்சியான நிறைவில் அமைதியே மேலோங்கும். அதை அழகாகவே செய்திருக்கிறார் இயக்குனர். பழங்குடி மக்களின் வாழ்வு நிலை பற்றியோ அவர்களின் இன்னல்கள் பற்றியான கதையே அல்ல இப்படம். ஒரு வியாபார நோக்கில் எடுக்கபட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர். நிற்க.... தங்களின் விமர்சனத்திற்கு முன் எழுதிய வன பிரயாணத்தில் உங்களோடு ஒட்டிக்கொண்டவரின் வினை இப்படிபட்ட மனிதர்கள் ஒவ்வொருவர் அருகிலும் இருப்பார்கள் என்பது நிதர்சனம். அதே போல சிப்பந்திகளும் நிறைய உண்டு. தங்களின் விமர்சனம் இயக்குனரின் சமுதாய பொறுப்பை சுட்டி (வெட்டி) காட்டுகிறது. கருத்து சுதந்திரத்தில் எழுதிவிட்டேன். கருத்து திணிப்பை கைவிடுங்கள். நல்லதும் நன்மைகளும் எங்கிருந்து வந்தாலும் நன்மைதானே.

Reply 6 1

Login / Create an account to add a comment / reply.

Rajendra kumar   2 years ago

அருமையான விமர்சனம்... இந்த படத்தைப் பற்றிய அற்புதமான பதிவு... நாம் காந்தாரா படத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது... உண்மையில் கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்ட இடங்களை இந்த படம் நிறைவு செய்திருந்தால், இந்தப்படத்தின் வீச்சு இன்னும் அதிகம் நீண்டிருக்கும்... ஜெய்பீம் படத்தை எவ்வளவு முறை பார்த்தாலும், கண்ணீரை வரவழைப்பதற்குக் காரணம், அப்படம் உண்மையின் உரைகல்லாக இருப்பதைக் காட்டிலும் வேறொரு பதம் தேவையில்லை...

Reply 4 5

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

உண்மைதான். இது மசாலா படம் என்பதால்தான் விரும்பிப் பார்த்தேன். ஜெய்பீம் ஆஸ்கார் தரம் என்பதால்தான் OTTயில் கூட இன்னும் பார்க்கவில்லை. ஏனெனில் நம்முடைய நிகழ்கால சோகங்களை மறக்கவோ அல்லது மறைக்கவோ தான் திரைப்படங்களை பார்க்கிறேன். இதில் தரமான படம் என்ற போர்வையில் bonus சோகத்தை அனுபவிக்க தயாரில்லை.

Reply 2 4

Login / Create an account to add a comment / reply.

Raja   2 years ago

படத்தை பற்றிய உண்மையான விமர்சனம் இதுதான்! இந்த படத்தை பற்றிய முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் அலசல். நான் படத்தை புகழாத இடமே இல்லை. இப்போது இதன் இன்னொரு கோணம் தெரிகிறது. எனக்கு தெரிந்த அனைவருக்கும் இந்த பதிவை அனுப்பினேன். அவர்களும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். பொதுவாக மேம்போக்காக பேசும் யூடியூபர்கள் சொல்வதுதான் மக்களின் கவனத்திற்கு போய் சேர்கிறது. மக்கள் இது போன்ற பதிவுகளை படித்தால்தான் எதை ஆதரிக்கிறோம் என்று அவர்களுக்கு புரியும். 

Reply 4 4

Login / Create an account to add a comment / reply.

கர்ப்ப காலம்சுவைமிகு தொப்புள்கொடிகு.செந்தமிழ் செல்வன் கட்டுரைபனிப்பொழிவுபஜாஜ் கதைஉண்மைக்கு அப்பாற்பட்டதுவெங்கய்ய நாயுடுராகம்நகரங்களுக்காகக் கிராமங்கள் வேண்டும்காலிபேஃட்காஷ்மீரிமுலாயம் சிங் யாதவ்கி. ராஜாநாராயணன்தமிழ் தெய்வங்கள்355வது கூறுஉடல் அசதிவேலைவாய்ப்பின்மைகுடும்பச் சூழல்காளியாஓபிஎஸ்அறிவியல் தமிழ்த் தந்தைசுவாமிநாத உடையார்: மக்கள் நேசர்புலம்பெயர் தொழிலாளர்களும்காலம் மாறிப்போச்சு காங்கிரஸ்காரரே!சிலப்பதிகாரம்சமஸ் உதயநிதி ஸ்டாலின் அருஞ்சொல் கட்டுரைஜாக்ஸன் கொலைமுழக்கங்கள்சாரு சமஸ் பேட்டிமுதல்வர் கடிதம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!