கட்டுரை, அரசியல், வரலாறு, சமஸ் கட்டுரை, ஆளுமைகள் 4 நிமிட வாசிப்பு

வரலாறு உங்களை வாழ்த்தும் சோனியா!

சமஸ் | Samas
05 Apr 2023, 5:00 am
1

வெக்கை நிறைந்த கோடையில், மறக்க முடியாத ஒரு நள்ளிரவு மழைபோல, இந்திய அரசியலுக்கு அபாரமான பங்களிப்பை ஆற்றியிருக்கும் சோனியா காந்தி தன்னுடைய பணி முடிவுக்கு வருவதைச் சூசகமாக அறிவித்திருக்கிறார். ராய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில், அரசியலில் தன்னுடைய அத்தியாயம் நிறைவுக்கு வருகிறது என்று சோனியா குறிப்பிட்டதை ‘அரசியலுக்கு முழு முழுக்கு’ என்று அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது என்றாலும், அன்றாட தீவிர அரசியலிலிருந்து விடுபட அவர் மனம் இறைஞ்சுவதை அந்தப் பேச்சு வெளிப்படுத்தியது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நிகழ்ந்த காலகட்டத்தில்தான் காங்கிரஸின் எதிர்காலத் தலைமைக்கான ஓர் ஏற்பாட்டை அவர் உருவாக்கினார். முடங்கியிருந்த காங்கிரஸுக்கு துடிப்பெழுச்சியை ராகுலின் இந்த யாத்திரை உண்டாக்கி இருக்கிறது. அந்த நிறைவு தந்த ஆசுவாசத்தையும் சோனியாவின் குரலில் உணர முடிந்தது.

இன்றைக்குக் கொஞ்சம் பெரிய வார்த்தையாகக்கூட தெரியலாம்; எதிர்வரும் காலத்தில் ஒரு தேவதையின் வருகைபோலவே சோனியா இந்திய வரலாற்றில் நினைவுகூரப்படுவார் என்று எண்ணுகிறேன். இந்தியா ஒரு தாவலுக்குத் தயாராகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் சோனியா இந்த நாட்டில் காலடி எடுத்துவைத்தார். 1968இல் ராஜீவுக்கும் சோனியாவுக்கும் திருமணம் ஆனது. அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் 1964இல் நேரு இறந்திருந்தார். அடுத்து பிரதமரான சாஸ்திரியின் மறைவுக்குப் பின் 1966இல் இந்திரா பிரதமர் பதவியை ஏற்க வேண்டும். இதன் இடையே 1965இல் தன் மகனின் காதலை அறிந்துகொண்ட இந்திரா, சோனியாவைச் சந்திக்க விரும்புகிறார். பிற்பாடும் மிரட்சியோடுதான் அந்தச் சந்திப்பை நினைவுகூர்ந்தார் சோனியா. அந்த நினைகூரலின் வழியாகத்தான் சோனியாவின் ஆளுமையை நாம் புரிந்துகொள்ள முடியும் என்று எண்ணுகிறேன்.

இத்தாலியில் ஒரு கட்டிடத் தொழிலாளியாகத் தன் வாழ்வை ஆரம்பித்து, பிற்பாடு ஒரு சின்ன கட்டுமான நிறுவனத்தை நிர்வகிப்பவராக உயர்ந்தவர் சோனியாவின் தந்தை ஸ்டெஃபனோ. லண்டனுக்கு ஆங்கிலம் படிக்க வந்த சோனியா பகுதிநேர வேலைக்கு வந்த வர்சிட்டி உணவகத்தில் ராஜீவைச் சந்தித்தார். அப்போது ராஜீவ் பொறியியல் படித்துவந்தார். இருவர் இடையிலும் காதல் மலர்ந்தது.

அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியை முடித்து திரும்பும்போது, லண்டன் வந்தார் இந்திரா. ராஜீவ் மூலம் சோனியாவைச் சந்திக்க அழைத்தபோது முதல் முறை அச்சத்தில் அந்தச் சந்திப்பையே தவிர்த்திருக்கிறார் சோனியா. பெரும் தயக்கத்துடன் அடுத்து அவர் சென்றபோது சோனியாவுடன் பிரெஞ்சில் உரையாடலை ஆரம்பித்திருக்கிறார் இந்திரா. சோனியாவை ஆற்றுப்படுத்த இந்திரா கூறியிருக்கிறார் “நானும் இளவயதைக் கடந்தே வந்திருக்கிறேன், நானும் காதலித்திருக்கிறேன்.”

ராஜீவ் காந்தியுடன் சோனியா

தன்னுடைய 22 வயதில் இந்தியாவின் மருமகளாக சோனியா அடியெடுத்துவைத்தபோது, இந்திரா பிரதமர் பதவியில் அமர்ந்திருந்தார். காங்கிரஸுக்குள்ளேயே கடும் மோதல் – பிளவு; வங்கிகள் தேசியமயமாக்கம்; 1971 தேர்தல் வெற்றி; அடுத்து இந்திய – பாகிஸ்தான் போர், வங்கதேச உருவாக்கம்; நெருக்கடிநிலை அறிவிப்பு; எதிர்க்கட்சிகளின் பேரெதிர்ப்பு; 1977 தேர்தல் தோல்வி; வீட்டைவிட்டே வெளியேற்றம்; 1980 தேர்தல் வெற்றி; அதே ஆண்டில் மகன் சஞ்சய் காந்தியின் மரணம்; அடுத்து பஞ்சாப்பில் நீல நட்சத்திர நடவடிக்கை; உச்சகட்டமாக 1984இல் படுகொலை என்று இந்திராவின் அதிவேக மாற்ற வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்த சோனியா, அரசியலை அச்சத்தோடு பார்த்ததும் வெறுத்ததும் இயல்பானதாகவே தோன்றுகிறது.

ராஜீவை அரசியல் நோக்கி நகர்த்த இந்திரா முடிவெடுத்தபோது, வீட்டில் மிகத் தீவிரமாக அதை சோனியா எதிர்த்தார். இந்திராவைப் பின்னின்று இயக்குகிறார் என்று சொல்லும் அளவுக்கு, ராஜீவின் சகோதரர் சஞ்சயுடைய செல்வாக்கு உச்சம் தொட்டிருந்ததோ, அவருடைய மனைவி மேனகாவும் ஓர் அதிகார மையமாக உருவெடுத்திருந்ததோ சோனியாவைச் சிறிதும் சலனப்படுத்தவில்லை. அதேசமயம், சஞ்சய் மரணத்துக்குப் பின் ராஜீவ் நோக்கி அரசியல் நகர்ந்தபோது வேறு வழியின்றி சோனியா அதை அனுமதித்தார்.

இந்திரா மறைவுக்குப் பின் ராஜீவ் பிரதமரான பின் எதிர்கொண்ட 1984 தேர்தலில் கணவருக்குத் துணையாக தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா பங்கேற்றார். இந்தத் தேர்தலில் அமேத்தியில் ராஜீவை எதிர்த்து நின்றவர்களில் முக்கியமானவர் மேனகா. ராஜீவுக்காக அமேதியில் ஓட்டு சேகரிக்கச் சென்றார் சோனியா. இந்திய வரலாற்றில் யாரும் பெறாத பிரம்மாண்டமான வெற்றியைத் தன்னுடைய கணவரின் தலைமையில் காங்கிரஸ் 1984இல் பெற்றதை சோனியா பார்த்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளிலேயே அவருடைய தோல்வியையும் பார்த்தார். 1991 தேர்தல் பிரச்சாரத்தின்போது நடத்தப்பட்ட ராஜீவ் படுகொலை சோனியாவை நிலைகுலைத்தது. இந்திரா சுடப்பட்டு ரத்தம் பெருகிய உடலோடு வீழ்ந்தபோது, காரில் சோனியாதான் அவரைத் தாங்கியபடி சென்றார். குண்டுவெடிப்பில் சிதறடிக்கப்பட்டிருந்த ராஜீவின் உடல் அவர் பார்க்க முழுமையாகக்கூட கிடைக்கவில்லை.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள்

சமஸ் | Samas 04 Mar 2014

பிரதமர் நாற்காலி சோனியாவைத் தேடி வந்தது. நிராகரித்தார். முற்றிலுமாக அரசியலிலிருந்து விலகியவராக நின்றார். பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் என்பதேகூட அப்போது ரகசியம் காக்கப்பட்டது. காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தன் கைக்குள் கொண்டுவந்திருந்த நரசிம்ம ராவ் சோனியாவைச் சந்தேகத்துடனும் அச்சத்துடனும் பார்த்தார். சோனியாவை மரியாதைபூர்வமாகச் சந்தித்தவர்கள்கூட ராவின் கோபத்துக்கு ஆளாக நேர்ந்தது. கட்சிக்குள் நடந்த குளறுபடிகள் காதுக்கு வந்தபோது வெறும் கவனராக மட்டும் சோனியா இருந்தார். 1996 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. தேர்தல் தோல்வியோடு தூக்கி வீசப்பட்டார் நரசிம்ம ராவ்.

அரசியல் களத்தில் பாஜக வேகமாக முன்னகர்ந்தது. பாஜகவுக்கு முட்டுக்கட்டை போட மூன்றாவது அணிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தது காங்கிரஸ். இடைப்பட்ட காலத்திலேயே முக்கியமான பல தலைவர்கள் வெளியேறி புதிய கட்சிகளை ஆரம்பித்திருந்தார்கள். கட்சி வேகமாகக் கரைந்துகொண்டிருந்தது. மிக மோசமான சூழலில், ராஜீவின் சகாக்கள் பலருடைய தொடர் வற்புறுத்தலின் விளைவாக 1998இல் காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்றார் சோனியா. 22 ஆண்டுகள் காங்கிரஸின் தலைவர் பொறுப்பில் அவர் இருந்திருக்கிறார். அவரே இந்தப் பதவியில் அதிக ஆண்டு காலம் இருந்தவர்.

சோனியாவின் 22 ஆண்டு காலத் தலைமையில் 1999, 2004, 2009, 2014 என்று நான்கு தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது (2019 தேர்தலின்போது தலைவராக இருந்தவர் ராகுல்). இவற்றில் 2004, 2009 இரண்டு தேர்தல்களை அது வென்றது. 1999 தேர்தலை அது வெல்ல முடியாவிட்டாலும் கட்சிக்கு சின்ன முன்னகர்வை அந்தத் தேர்தல் தந்தது. 2014 தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை காங்கிரஸ் அடைந்தது. உண்மையில் 2012இல் சோனியா உடல் நலம் பாதிக்கப்பட்டதோடு கட்சி சரியலானது. இந்த 22 ஆண்டுகளில் இரண்டு முறை பிரதமர் வாய்ப்பை மீண்டும் சோனியா உதறினார்.

சோனியா பல வகைகளில் இந்திய ஜனநாயகத்துக்கு சிறந்த பங்களித்திருக்கிறார் என்று சொல்ல முடியும். ஊழல் குற்றச்சாட்டுகள் மலிந்த ஆட்சி என்றாலும், இந்தியாவில் நேருவுக்குப் பின் தலைசிறந்த பிரதமர் என்று போற்றத்தக்க மன்மோகன் சிங் ஆட்சியின் பின்பலமாக சோனியா இருந்தார். சொல்லப்போனால், இந்தியாவில் உண்மையான கூட்டணியாட்சியின் எழுச்சிக் காலம் 2004-2014 பத்தாண்டுகள். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை எனும் வெற்றிகரமான முன்னுதாரணத்தை சோனியா செயல்படுத்திக் காட்டினார். கூட்டணியில் எப்படி பல பிராந்தியங்களின் தலைவர்களுக்கும் சரியான பிரதிநிதித்துவம் அளித்தாரோ அதேபோல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அமைச்சரவையிலும் முக்கியமான துறைகளில் சமூக – பிராந்திய பிரதிநித்துவம் பேணப்பட்டது.

ஆட்சிக்கு வெளியிலிருந்து அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவாகச் செயல்பட்ட அவர் தலைமையிலான தேசிய ஆலோசனை ஆணையம் மக்கள் இயக்கங்களின் குரலுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் அமைப்பாக இருந்தது. ‘கடைசி மனிதரை அதிகாரப்படுத்துவது’ எனும் முழக்கத்தோடு செயல்பட்ட இந்தக் குழு கொண்டுவந்த அரும்பெரும் சட்டங்கள்தான் வேலை உறுதிச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், தகவல் உரிமைச் சட்டம், வனவுரிமைச் சட்டம். பல கோடி விவசாயிகள், தொழிலாளர்களைப் பசியிலிருந்து வெளியே தூக்கிய திட்டமான வேலை உறுதித் திட்டம் சோனியாவின் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த மிகச் சிறந்த சமூகப் பங்களிப்புத் திட்டம் ஆகும். தன்னுடைய அரசே பாதிக்கப்படும் என்று அறிந்திருந்தும் அவர்கள் கொண்டுவந்த தகவல் உரிமைச் சட்டமானது வெளிப்படையான ஆட்சி நிர்வாகத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இருந்த அக்கறைக்கான வெளிப்பாடு.

பெரும் வெறுப்பை அரசியலில் எதிர்கொண்டார் சோனியா. வெளிநாட்டவர் என்று திரும்பத் திரும்ப ஏசப்பட்டார். அதிகார வெறி பிடித்தவராகவும், நிழல் அதிகார மையமாகவும் சித்திரிக்கப்பட்டார். பிரதமர் மன்மோகன் சிங்கைக் கோழையாகவும் அதிகாரமற்றவராகவும் பிம்பப்படுத்தினார்கள். பொதுவாகவே அமைதியாகவும், மென்பேச்சுகளுக்கும் அறியப்பட்டவரான சோனியா இதற்கெல்லாம் மிகக் கடுமையாக ஏதும் எதிர்வினை ஆற்றியதில்லை. ஏதோ விதிக்கப்பட்ட கடமைபோல இந்த நாட்டுக்காகத் தன்னுடைய பணிகளை ஏற்றவர் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தன் கடமை முடித்து ஓய்வு நோக்கி நகர்கிறார்.

வரலாறு உங்களை வாழ்த்தும் சோனியா! 

-‘குமுதம்’, மார்ச், 2023

 

தொடர்புடைய கட்டுரைகள்

ராஜீவ்: சிதைக்கப்பட்ட பெரும் கனவு
தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


5


1




உணவு தானியங்கள்பாபர் மசூதி பூட்டைத் திறந்தது யார்?ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: காலம் வெளி கடந்த மனிதன்பாலிவுட் நட்சத்திரங்கள்இஸ்லாமியர்களின் கல்லறைஜப்பான் புதிய திட்டம்மெய்தி‘ஸ்மார்ட்போன்’ தடையால் மேம்பட்டது படிப்பு!நகைச்சுவைமோகன் பாகவத்நிலக்கரிச் சுரங்க ஒப்பந்தம்மணவிலக்குஇஸ்லாமிய வெறுப்புகாலத்தின் கப்பல்அந்தணர்கள்புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுமா?வெறுப்புகாலந்தவறாமைபெரியார் - லோகியா சந்திப்பு: முக்கியமான ஓர் ஆவணம்தத்துவம்குஜராத் கலவரம்அம்பானிலும்பன்டாடா குழுமம்வீட்டோமு.இராமநாதன் அருஞ்சொல்வெற்றிமாறன்அரசியல் உரையாடல்சாதி முறைஇந்திரா என்ன நினைத்தார்?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!