கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு
பழைய குடியரசும் புதிய குடியரசும்
பிரிட்டனில் புழங்கிய, ‘மன்னர் இறந்துவிட்டார்; மன்னர் நீடூழி வாழ்க’ என்ற சொலவடையைப் போல இந்தியாவிலும் நாம் கூற ஆரம்பிப்போம். 1950 ஜனவரி 26இல் ஏற்பட்ட நம் குடியரசு 2024 ஜனவரி 22இல் மறைந்துவிட்டது. இதற்கான நடைமுறை நீண்ட நாள்களாக மேற்கொள்ளப்பட்டது.
குடியரசின் அந்திமக் காலம் பற்றி சில காலமாக பேசிவந்தேன். இப்போது அதைத் தேதியுடன் அறுதியிட்டுக் கூறிவிட முடியும். இப்போது நாம் ‘புதிய அரசியல் முறைமை’ கீழ் வாழ்கிறோம். புதிய முறைமையில் தங்களுக்குள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்கள், அதன் விதிகளுக்கேற்பத் தங்களைத் தயார்செய்துகொண்டுவிடுவார்கள் – இதுவரையில் அப்படி இல்லாவிட்டால்!
நமக்குக் கிடைத்த ‘முதல் குடியர’சை மீட்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தவர்கள் நம்முடைய அரசியல் வழிகள் குறித்துப் புதிதாகச் சிந்திக்கத் தொடங்க வேண்டும். குடியரசின் விழுமியங்களுக்கு ஆதரவாகப் பேச, வலிமையான மொழியை உருவாக்க வேண்டும். நம்முடைய அரசியல் உத்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும், அரசியல் அணி சேர்க்கைக்குப் புதிதாக உழைக்க வேண்டும்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
நடந்திருக்கும் தலைகீழாக்கம்
அயோத்தியில் நடந்தது ராமர் சிலையை நிறுவும் சடங்கோ, தொண்டோ அல்ல; அதை அப்படியே நம்பிவிடும் தவறை யாரும் செய்ய வேண்டாம். அங்கு நடந்த சடங்குகள் - நியதிகள் (மர்யாதா) நம்பிக்கை (ஆஸ்தா) அல்லது தர்மம் - ஆகியவை தொடர்பானதே அல்ல. அரசமைப்புச் சட்டம், ஜனநாயக அரசியல், தார்மிக நியதிகள் என்று அனைத்தையும் மீறும் கூட்டு நடவடிக்கையாகும்.
அரசுக்கும் தர்மத்துக்கும் உள்ள உறவைத் தலைகீழாக மாற்றுவது. இந்துத்துவத்துக்கு, ஏனைய அனைத்தையும் கீழ்ப்படியச் செய்யும் அரசியல் காலனியாதிக்கமே அது. அதன் சாரம் எதுவென்றால் ‘இந்து ராஷ்டிர’த்தை அரியணையில் ஏற்றுவது. அதிலே இந்து மதப் பண்புகளுக்கேற்ற செய்கையும் இல்லை, இந்திய தேசியர்கள் விவரித்த ராஷ்டிரமும் (அரசு) இல்லை.
புதிய முறைமை அமலில்
இப்போது ‘புதிய அரசமைப்புச் சட்டம்’ அமலுக்கு வந்திருக்கிறது - புதிய ஆவணங்கள் வடிவில் அல்ல; கடந்த பத்தாண்டுகளாக நாம் பார்த்துவரும் ‘மாற்றங்களால் உருவாகியுள்ள அரசியல் அதிகாரம்’ தொடர்பானது அது.
அசல் அரசமைப்புச் சட்டமானது சிறுபான்மைச் சமூகத்தவரின் உரிமைகளை வரம்பாக அங்கீகரித்தது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதையெல்லாம் செய்யக் கூடாது என்று கூறியது. புதிய அரசமைப்புச் சட்டம் பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்தை நிறுவுகிறது, அசல் அரசமைப்புச் சட்டம் என்ன சொன்னாலும் சரி, அரசின் எந்த அங்கமும் பெரும்பான்மைச் சமூகத்தின் விருப்பத்துக்கு குறுக்கே வரக் கூடாது என்கிறது.
நாம் இப்போது ‘இரட்டை அடுக்கு’ குடியுரிமை நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்துக்களும் அவர்களுடைய சகபாடிகளும் ‘ஆண்டைகள்’, முஸ்லிம்களும் பிற மதச் சிறுபான்மையினரும் ‘குடிவாரதாரர்கள்’. ‘மாநிலங்களின் கூட்டரசு’ என்ற மூல ஏற்பாடு தகர்ந்து, ‘ஒற்றை அரசு’ என்ற நடைமுறை வந்துவிட்டது, மாநிலங்களுக்கு இனி சில நிர்வாக அதிகாரங்கள் மட்டும்தான்; அரசு நிர்வாகம், சட்டமியற்றும் மக்கள் பிரதிநிதிகள் அவை, நீதித் துறை ஆகியவற்றுக்கென்று தனித்தனிப் பொறுப்புகளும் அதிகாரங்களும் பிரித்தளிக்கப்பட்ட ஏற்பாடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, அனைத்து அதிகாரங்களையும் பெற்றுள்ள ‘தலைமை ஆட்சியாளர்’ அதிகாரத்துக்கு மட்டுமே கட்டுப்படும் ஏற்பாடு, அமலுக்கு வந்துவிட்டது; நாடாளுமன்றச் சடங்குகளையும், நீதித் துறை எதையெல்லாம் விசாரித்து தீர்ப்பு வழங்கலாம் என்பதையும் அந்தத் ‘தலைமைதான்’ தீர்மானிக்கிறது.
‘நாடாளுமன்ற ஜனநாயகம்’ என்ற முறை, ‘அதிபர் பாணி’ ஆட்சிமுறைக்கு வழிவிட்டுவிட்டது, ஆனால் ஒரு விதிக்குக் கட்டுப்பட்டு – அதாவது ‘தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பாணி’ – தங்களை ஆள வேண்டிய தலைமை நிர்வாகியை மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்கள் பிறகு அனைத்தையும் அவரிடமே ஒப்படைத்துவிடுகிறார்கள்.
இப்படித் திணிக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்புச் சட்டத்துக்கு, அரசமைப்புச் சட்டப்பேரவையின் சட்ட அங்கீகாரம் இல்லை. ‘ஜனவரி 22இல் இந்தியாவின் ஆன்மா விடுதலை பெற்றது’ என்று ஒன்றிய அரசின் அமைச்சரவைத் தீர்மானம் கூறிக்கொள்ளலாம், இரண்டாவது குடியரசின் அதிகாரப்பூர்வ ஜென்ம தினம் அதுவல்ல.
அரசமைப்புச் சட்டத்தை நடைமுறையில் கைவிடும் அரசின் போக்குக்கு எதிராகப் போராட வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அடுத்து நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தல்தான் அதற்கான முதல் மோதல் களம். தேர்தல் முடிவு எப்படியாக இருந்தாலும் புதிய அரசியல் அதிகாரத்தின் ஆதிக்க நிலை என்ற யதார்த்தம் இல்லாமல் போய்விடாது. புரட்சிகரமாக சிந்தித்து இதற்கு மாற்று காண வேண்டிய கடமையை நாம் இனியும் ஒத்திப்போட முடியாது.
இதையும் வாசியுங்கள்... 2 நிமிட வாசிப்பு
அயோத்தி புறக்கணிப்பு காங்கிரஸின் வரலாற்று முடிவு
11 Jan 2024
நம்முடைய பங்கு என்ன?
முதல் குடியரசின் ‘மறைவில்’ நமக்கும் பங்கு இருந்தது என்ற உண்மையை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஆர்எஸ்எஸ் – பாஜக தோன்றியது எதற்காகவோ, அதைத்தான் அவை செய்துவருகின்றன. முதல் குடியரசின் அரசமைப்புச் சட்டத்துக்கு விசுவாசமாக நடப்பேன் என்று உறுதியெடுத்த மற்றவர்களுக்குத்தான் அதை மீட்பதில் முக்கியப் பொறுப்பு இருக்கிறது. மதச்சார்பின்மை என்பதை உண்மையான வகையில் கடைப்பிடிக்காமல், அரசியல் லாபத்துக்காக படிப்படியாக சிதைத்ததன் விளைவுதான் பழைய அரசமைப்புச் சட்டத்தையே அக்கு அக்காகப் பிரித்துப்போடக் காரணமாகிவிட்டது.
மதச்சார்பற்ற சித்தாந்தத்தைப் பேசியவர்களின் அகந்தை, மக்களிடமிருந்து வெகுவாக விலகிச் சென்றது, மக்களுக்குப் புரியும் மொழியில் அதன் தன்மை குறித்துப் பேசத் தவறியது ஆகியவற்றால் மதச்சார்பின்மை என்ற கருத்தே முறையற்றதாகிவிட்டது. பாபர் மசூதி இடிப்பு என்ற எச்சரிக்கைக்கு முழுதாக 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் முதல் குடியரசுக்கு இப்படியொரு முடிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை மறக்க முடியாது. பேரினவாதம் தானாகவே மறைந்துவிடும் என்ற சோம்பலான முடிவாலும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியும் செயல்பட்டும் மதச்சார்பின்மை என்ற கருத்தியல் மீதே மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியதாலும்தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
மதச்சார்பற்ற அரசியல் இன்றைக்குக் குப்பைமேடு போல நிலைகுலைந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அதை வலியுறுத்தியவர்கள் செய்த பாவங்களும், செய்யத் தவறிய கடமைகளும்தான். அரசியலால் இழந்ததை அரசியலால்தான் பெற முடியும். இப்போது நமக்குப் பல வழிகள் இல்லை. மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தைக் காக்க வேண்டும் என்று கருதுவோர் முற்றுகையிடப்பட்ட சித்தாந்த சிறுபான்மையினரைப் போல, ஒப்புக்கு அவ்வப்போது எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டு ஒரு மூலையில் வாழலாம் அல்லது துணிவான, சக்தியூட்டப்பட்ட குடியரசுக்கான அரசியலை மேற்கொள்ளலாம்.
இருமுனைச் செயல்பாடு
இந்தக் குடியரசு அரசியலானது இரட்டை முனை விவகாரமாகும். முதலாவதாக, அடுத்த சில பத்தாண்டுகளுக்கு பண்பாட்டு – சித்தாந்த களத்தில் மோதியாக வேண்டும். இந்தியாவின் தேசியத்தையும் நமது நாகரிகத்தின் பாரம்பரியத்தையும் நம்முடைய மொழிகளையும் மதவழி மரபுகளையும் – இந்து மதத்துக்கு உரியன உள்பட - நாம் மீட்டெடுக்க வேண்டும்.
இந்தியாவுக்குப் புதிய பாதையை வகுக்க வேண்டும், புதிய சமத்துவ சித்தாந்தத்தை வளர்த்தெடுக்க வேண்டும், சமூக அடுக்கின் அடிநிலையில் இருப்பவரின் விருப்பங்களையும் நிறைவேற்றும் வகையில் அதைச் செய்ய வேண்டும்.
இருபதாவது நூற்றாண்டில் கம்யூனிஸ்ட்டுகள், சோஷலிஸ்ட்டுகள், காந்தியர்கள் இடையே ஏற்பட்ட சித்தாந்த மோதல்கள் இன்றைக்குப் பொருத்தமற்றவை. நாம் இப்போது அனைத்து சுதந்திர சிந்தனையுள்ள, சமத்துவம் விரும்பும், காலனியாதிக்கத்தை எதிர்த்த கொள்கைகளிலிருந்து முக்கிய அம்சங்களை எடுத்து புதிய சித்தாந்தத்தை – ‘சுயராஜ்யம் 2.0’ – போன்று உருவாக்க வேண்டும்,
இந்தச் சித்தாந்தத்துடன் புதிய அரசியலையும் முன்னெடுக்க வேண்டும். குடியரசைக் காக்க நினைப்போர் புதிய குடியரசு உத்தி குறித்தும் சிந்தித்தாக வேண்டும்!
தொடர்புடைய கட்டுரைகள்
2024 பாஜக வெற்றி நிச்சயமில்லை
அயோத்தி: தேசத்தின் சரிவு
அயோத்தி புறக்கணிப்பு காங்கிரஸின் வரலாற்று முடிவு
மோடி மந்திர்
இந்து சாம்ராஜ்யாதிபதியும் இந்தியாவின் இறக்கமும்
தன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்
தமிழில்: வ.ரங்காசாரி
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.