கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

பாஜகவுக்கு இப்போதே 272 நிச்சயமில்லை

யோகேந்திர யாதவ் ஸ்ரேயஸ் சர்தேசாய் ராகுல் சாஸ்த்ரி
08 May 2024, 5:00 am
0

2024 பொதுத் தேர்தலில், மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு முடிந்திருக்கிறது. இந்த மூன்று கட்டங்களும் இணைந்து 283 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால், மக்களவையில் சரிபாதி இடத்துக்கான தேர்தல் முடிந்துவிட்டிருக்கிறது. தேர்தல் போக்கு பாஜகவுக்கு எதிராக உருக்கொண்டிருப்பதால், அடுத்து ஆட்சியமைப்பதற்கான எண்களை இந்தச் சூழலிலேயே அது இழந்துவிட்டது எனலாம்.

முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு

2019 தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டால், 2024இல் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளிலேயே, தான் வென்ற 111 தொகுதிகளிலேயே சுமார் 20 தொகுதிகளை பாஜக கூட்டணி இழந்துவிட்டது. இப்போது முடிந்திருக்கும் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவில் மேலும் 20 தொகுதிகளை நிச்சயம் இழக்கும்.

ஆக, தனிப் பெரும்பான்மைக்கான 272 எனும் எண்ணிக்கையோடு ஒப்பிட முந்தைய மக்களவையில் அது பெற்ற 303 எனும் எண்ணிக்கை 31 எண்கள்தான் அதிகம் என்பதால், இப்போது நான் குறிப்பிடும் இழப்பு (40 தொகுதிகள்) ஒட்டுமொத்தத் தேர்தல் முடிவையுமே மாற்றிவிடும்; பாஜகவால் தனிப் பெரும்பான்மை பெற முடியாது. பாஜகவும் அதன் தோழமைக் கட்சிகளும் இனி அசாதாரணமான வெற்றியைப் பெற்றால்தான், வெல்ல முடியாத முன்னிலையை எட்ட முடியும்.

முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளைப் போன்றே இந்த மூன்றாவது கட்ட வாக்குப்பதிவிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) பெரும் சவாலாக இருந்தது, அது ஏற்கெனவே வென்ற தொகுதிகளைத் தக்கவைப்பதுதான். அப்படிப் பார்த்தால் இந்த மூன்றாவது கட்டத்தில் 80/94 இடங்களை அது தக்கவைக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளுக்குச் சற்றே தெம்பூட்டக்கூடிய அம்சம் எதுவென்றால், முதல் மூன்று கட்டங்களிலும் தேர்தல் நடந்த 10 மாநிலங்களில் பாஜக ஆளும் 8 மாநிலங்களிலும் சேர்ந்தே வாக்குப்பதிவு நடந்துள்ளது. எனவே, அங்கேயே இந்த அளவுக்குச் சரிவென்றால், எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமான மாநிலங்களில், பாஜகவும் இன்னும் பெருத்த போட்டி காத்திருக்கிறது. இந்தியா கூட்டணியில் இப்போதுள்ள கட்சிகளுக்குக் கடந்த தேர்தலில் மொத்தமே 12/94 தொகுதிகள்தான் கிடைத்தன, இம்முறை கூடுதலாக பல தொகுதிகள் கிடைப்பது நிச்சயம். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

சில மாதங்களுக்கு முன்னால் மாநில சட்டப்பேரவைகளுக்கு நடந்த பொதுத் தேர்தல் முடிவுகளை மனதில் கொண்டால், எதிர்க்கட்சி கூட்டணிக்கு, குறைந்தது மேலும் 15 தொகுதிகள் கிடைப்பது நிச்சயம். 80:12 என்று கடந்த பொதுத் தேர்தலில் வென்ற பாஜக அணி, இந்த முறை 65:27 என்று குறைந்துவிடும்.  

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

சமூகத்தின் முன்னத்தி ஏர் பிரதமர்: சமஸ் பேட்டி

07 May 2024

கர்நாடகத்தில் பலத்த அடி

இந்த முறை பாஜகவுக்குப் பெரிய சவாலாக இருக்கப்போவது காங்கிரஸ் ஆளும் கர்நாடகம்தான்.

கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் நேற்றைய வாக்குப்பதிவில் 14 தொகுதிகள் இடம்பெற்றன. இந்த 14இல் அனைத்துத் தொகுதிகளையும் 2019லும், 11 தொகுதிகளை 2014லும், 12 தொகுதிகளை 2009லும் பாஜக வென்றது.

2023 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸுக்கு இவற்றில் 7 மக்களவைத் தொகுதியில்தான் அதிக வாக்குகள் கிடைத்தன. ஆக, பாஜகவுக்குப் பலமான களம் இது.

ஆனால், இந்த முறை வரலாற்றுத் திருப்பம் ஏற்படப்போகிறது.

முதல் காரணம், சித்தராமய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு பேரவைத் தேர்தலின்போது மக்களுக்கு அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவருகிறது. அதனால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பயனாளர் நிச்சயம் இருக்கிறார்.

இரண்டாவது காரணம், மாநில காங்கிரஸ் தலைவர்கள் தேசியத் தேர்தல் என்றால் மூலைக்கு ஒருவராக திரும்பிக்கொண்டு ஒற்றுமையாக வேலை பார்க்காமல் இருப்பார்கள். இந்த முறை அனைவரும் பேரவைத் தேர்தலைப் போலவே தீவிரமாகச் செயல்படுகின்றனர். அது மட்டுமின்றி வேட்பாளர்களில் பாதிப் பேர் மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்களின் உறவினர்கள்.

மூன்றாவது, காங்கிரஸில் ஒற்றுமை நிலவுகிறது என்றால், பாஜக கூட்டணியில் பூசல்தான் நிலவுகிறது. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் தேர்தல் பணியைக் கட்சித் தலைமை ஒப்படைத்திருக்கிறது, அவரைப் பிடிக்காதவர்கள் ஒதுங்கி நிற்கிறார்கள். முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கு வாய்ப்பு தரப்படாததால் அவர் சுயேச்சையாக பாஜகவுக்கு எதிராக களத்தில் இருக்கிறார். எடியூரப்பாவின் லிங்காயத்து சமூகத்தவரே இந்த முறை எதிராகக் கிளம்பிவிட்டார்கள். ஒரு சாமியாரே பாஜகவுக்கு எதிராகத் தேர்தலில் இறங்கியிருக்கிறார்.

நான்காவது காரணம், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் எச்.டி.ரேவண்ணா, அவருடைய மகனும் ஹாசன் தொகுதி எம்.பியுமான பிரஜ்வால் மீதான பாலியல் குற்ற வழக்குகள் வாக்காளர்களிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ரேவண்ணா கைது வாக்குப்பதிவுக்கு முன்னரே நடந்துவிட்டது. இந்த அவமானங்களிலிருந்து மீள பாஜகவால் முடியாது. ரேவண்ணாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடியே பிரச்சாரம் செய்ததால் பெருத்த பின்னடைவை ஏற்படுத்துவது நிச்சயம். கர்நாடகத்தில் 23 வயது மாணவியை அவருடைய வகுப்புத் தோழர் கத்தியால் குத்திக் கொலை செய்ததால் காங்கிரஸுக்கு ஏற்பட்ட பின்னடைவு மாறிவிட்டது, மக்கள் அதை மறந்து பிரஜ்வால், ரேவண்ணா பற்றித்தான் பேசுகின்றனர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கிய இடத்தை முஸ்லிம்களுக்கு வழங்கி, அவர்களுக்கான இடத்தைக் குறைத்துவிட்டது காங்கிரஸ் என்ற மோடியின் பிரச்சாரம் கர்நாடகத்தில் எடுபடவில்லை.

மஹாராஷ்டிரத்தில் லாபம்

கர்நாடகத்திலிருந்து மேலே போனால் மஹாராஷ்டிரத்தில் வளமான தொகுதிகள், மிகவும் பின்தங்கிய தொகுதிகள் என்ற இரு பிரிவிலும் மூன்றாவது கட்டத்தில் வாக்குப்பதிவு முடிந்தது. கடந்த தேர்தலில் இங்கு 11 தொகுதிகளில் பாஜக - சிவசேனை (பிளவுபடாதது) 7 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸுக்கு அது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

இம்முறை சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் இரண்டுமே பிளவுபட்டுவிட்டன. ஆனால் தலைவர்களுடன் கூடிய மூல கட்சிகள், காங்கிரஸுடன் கூட்டுவைத்துள்ளன. பிரிந்து சென்றவர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார் தலைமையில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். இழந்த செல்வாக்கை மீட்கவும் வெற்றியைப் பெறவும் சரத்பவார் தனது அரசியல் அனுபவம், திறமை இரண்டையும் பயன்படுத்தியிருக்கிறார். அஜீத் பவார் தன் மனைவி போட்டியிடும் பாராமதி தொகுதியுடன் தனது பிரச்சாரத்தைச் சுருக்கிக்கொண்டுவிட்டார்.

பாஜகவால் எதிர்காலத்தை இழந்துவிடக் கூடாது என்ற முனைப்பில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை (உத்தவ் பிரிவு) மூன்றும் இணைந்தும் தீவிரமாகவும் களத்தில் வேலை செய்தன. பாஜக அணியில் அப்படி இணக்கம் இருக்கவில்லை. எனவே, இந்தியா கூட்டணிக்கு மகாராஷ்டிரத்தில் கடந்த முறையைவிட அதிக தொகுதிகள் கிடைக்கும்.

இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு

அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

சமஸ் | Samas 15 Apr 2024

மத்திய பிரதேசத்தில் கடும் போட்டி

மத்திய பிரதேசத்தில் சம்பல் – குவாலியர் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அடையாளம் இன்றி அழிந்துவிடவில்லை. 2023 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பெரிய அலை அடித்தபோதும்கூட 3 தொகுதிகளில் பாஜகவைவிட காங்கிரஸே அதிகம் பெற்று வென்றது. 26 பேரவைத் தொகுதிகள் அடங்கிய பகுதிகளில் பாஜகவுக்கு வாக்குச் சதவீதம் 8.5% குறைந்துவிட்டது நிச்சயம் கவலை தரும், காரணம் கடந்த முறை 10% வித்தியாசத்தில்தான் அது இங்கெல்லாம் வென்றது.

உத்தர பிரதேச சாதகம்

உத்தர பிரதேசத்தில் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு நடந்த 10 தொகுதிகளில் 6, தோப்-பிராஜ் பிரதேசத்தில் உள்ளன. இவை அனைத்தும் சமாஜ்வாதி கோட்டைகளாகும். ஆயினும், 2 தொகுதிகளைத்தான் கடந்த முறை சமாஜ்வாதி பெற்றது; ரோஹில் கண்ட் பகுதியில் எஞ்சிய 4 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.

ஆனால், எட்டு முறை எம்.பி.யாக இருந்த சந்தோஷ் கங்வாருக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு தரவில்லை என்பதால் குர்மி சமூகத்தவர் அதிருப்தியில் இருக்கின்றனர். அது நிச்சயம் தேர்தல் முடிவில் எதிரொலிக்கும். அதேசமயம், பகுஜன் சமாஜ் கட்சி 5 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது இந்தியா கூட்டணிக்கு சவாலாக இருக்கும்.

குஜராத் பெரிய சவால்

இந்தியா கூட்டணிக்குக் குஜராத் மாநிலம் பெரிய சவாலாகும். கடந்த 2 மக்களவை பொதுத் தேர்தல்களில் ஒரு தொகுதிகூட எதிர்க்கட்சிகளுக்குக் கிடைக்கவில்லை. மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் பழங்குடிகள் அதிகம் வாழும் தொகுதிகளில் காங்கிரஸ் தீவிரமாக தேர்தல் வேலைகளைச் செய்துள்ளது. ஆஆகவுடன் அது அமைத்துள்ள கூட்டணி மேலும் 3 தொகுதிகளில் அதற்கு வலு சேர்த்திருக்கிறது.

பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் சத்திரியர்களை அவமதித்துவிட்டார், அவருக்குப் போட்டியிட வாய்ப்பு தரக் கூடாது என்ற வெளிப்படையான எதிர்ப்பும், ஏற்கெனவே எம்.பி.யாக இருந்தவர்களில் சரிபாதிப் பேருக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்ற அதிருப்தியும் முடிவுகளில் எதிரொலிக்கும்.

வங்கம் பெரிய மாற்றம் இல்லை 

வங்கத்தில் பாஜக ஒருபுறம், திரிணமூல் மறுபுறம், காங்கிரஸ் -இடதுசாரி கூட்டணி மற்றொருபுறம் என்று மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள் அதிகமுள்ள மால்டா, மூர்ஷிதாபாத் மாவட்டங்களில் 4 மக்களவைத் தொகுதிகளில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. பேரவைத் தொகுதி முடிவுகள் அடிப்படையில் பார்த்தால் திரிணமூலே அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றிவிடும். முஸ்லிம் வாக்குகள் திரிணமூல், காங்கிரஸ் – இடதுசாரி கூட்டணி என்று இரண்டாகப் பிரிவது பாஜகவுக்குச் சாதகமாக மாறக்கூடும்.

அசாமில் அடுத்த சோதனை 

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் மோதுவது மட்டுமல்லாமல், தனித்துப் போட்டியிடும் மார்க்சிஸ்ட், திரிணமூல் ஆகிய கட்சிகளையும் சமாளிக்க வேண்டும்.

பிஹார், சத்தீஸ்கர், கோவா மாநிலத் தொகுதிகளில் பெரிய அளவுக்கு இந்தியா கூட்டணிக்குத் தோல்விகள் இருக்காது. பிஹாரில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் ஒரே அணியாக இருந்தாலும் அவர்களிடையே பழைய ஒற்றுமையும் ஒத்துழைப்பும் இல்லை. ஐக்கிய ஜனதா தளத் தொண்டர்கள் பாஜகவுக்கு ஆதரவு தர விரும்பவில்லை. அத்துடன் கட்சியின் செல்வாக்கும் தேய்ந்துவருகிறது.

மிகவும் பின்தங்கிய வகுப்பினர் முன்பைப் போல ஐக்கிய ஜனதா தளத்தை ஆதரிப்பார்களா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் துடிப்பாகத் தேர்தல் வேலைகளைச் செய்கிறது. எனவே, ஒன்றிரண்டு தொகுதிகளை பாஜக வசமிருந்து இந்தியா கூட்டணி பறித்தாலும் அது நிச்சயம் பெரிய வரவாகவே இருக்கும். கோவாவில் இழுபறியாகவே நீடிக்கும், வடக்கு கோவா பாஜகவையும் தெற்கு கோவா இந்தியா கூட்டணியையும் ஆதரிக்கும்.

இவ்வாறாக மூன்றாவது கட்டத்தில் பாஜக கூட்டணி இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை மேலும் இழக்கவே வாய்ப்புகள் அதிகம். இதுவரை யாரும் எதிர்பார்த்திராத வகையில், பாஜக கூட்டணி 272 என்ற எண்ணையே எட்ட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

முதல் கட்டம்: ‘இந்தியா’ அணிக்கே ஆதாயம்
இரண்டாம் கட்டம்: பாஜகவுக்குப் பிரச்சினைகள்
மீண்டும் மோடி: மக்களிடையே அச்சம், விரக்தி
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை
சமூகத்தின் முன்னத்தி ஏர் பிரதமர்: சமஸ் பேட்டி

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3






சட்ட மாணவர்கள்வழுக்கைக்குச் சிகிச்சைகே. ஆறுமுகநயினார் கட்டுரைமதப் பெரும்பான்மைமம்மூட்டிசங்கப் பரிவாரங்கள்நீதி போதனை வகுப்புகளை மீட்டெடுப்பது அவசியம். ஏன்?பேரியியல் பொருளாதாரம்டெல்லிஎருமை மாட்டைக் குறிப்பிட்டு மோடி பேசியது ஏன்? சமஸ்மேட்டுக்குடிகள்உபைத் சித்திகிபாரம்பரிய உணவுநந்தினிபார்டர் அண்ட் பௌண்டரீஸ்சிரமப்படுத்தும் சிறுநீர்க் கசிவு!அவதூறான பிரச்சாரங்கள்சிறுபான்மைச் சமூகம்அணையின் ஆயுள்சண்முகநாதன் சமஸ் பேட்டிசாதிவாரி கணக்கெடுப்புபழங்குடிக் குழுக்கள்கொடிக் கம்பம்ஒன்றிய நிறுவனங்கள்சி.கே.டிbalasubramaniam muthusamy articleஉள்ளூர் மொழிசாவர்க்கர் விடுதலைக்கு காந்தி எழுதிய கட்டுரைஊடுகொழுப்பு உணவுகள்மீன் வளர்ப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!