கட்டுரை, தொடர், வரலாறு, ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு
நைரேரே: நவீன தான்சானியாவின் சிற்பி
நைரேரே திருமணம் செய்துகொண்டு டார் எஸ் ஸலாம் என்னும் ஊரில் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். அதன் பிறகு விரைவிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபடலானார். அவரது உழைப்பும், பேச்சாற்றலும் சமூகத்தின் மிக முக்கியமான மனிதராக அவரை மாற்றிக்கொண்டிருந்தது. தொடக்கத்தில், அரசியல் அமைப்புகளில் சேர்ந்து விடுதலைக்காகப் போராட பெரும்பாலான தாங்கினிக்கர்கள் தயக்கம் காட்டினர். அதற்கு ஒரு முக்கியக் காரணம் இருந்தது. அது 1905ஆம் ஆண்டு ஜெர்மானியக் காலனியாளர்களுக்கு எதிராக நடந்த ஆயுதப் போர். அதன் பெயர் மாஜி மாஜி (தண்ணீர்! தண்ணீர்!).
நீர் மருந்து
தாங்கினிக்காவை 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மானியர்கள் ஆக்கிரமித்தார்கள். தலைவரி (ஒவ்வொரு மனிதருக்கும் வரி) என்னும் கட்டாய வரியை வசூலித்தார்கள். தங்களுக்குத் தேவையான பருத்தியை விவசாயிகள் உற்பத்தி செய்ய வேண்டும் என மக்களைக் கட்டாயப்படுத்தினார்கள். இந்த அடக்குமுறைகளால், மிக இயல்பாகவே ஜெர்மானியர்களுக்கு எதிரான ஒரு மனநிலை கனன்று எழுந்தது. ஆனால், அதைத் துப்பாக்கி, பீரங்கி வலிமையால் அடக்கி ஆண்டுவந்தார்கள்.
இந்தக் காலகட்டத்தில், கிஞ்சிகிட்லே ங்வாலே என்னும் இஸ்லாமியப் பெரியவர் ஒருவர், ஜெர்மானியர்களின் துப்பாக்கிக் குண்டுகளை நீராக மாற்றும் ஒரு மருந்தை உருவாக்கியதாகச் சொல்லி அதை மக்களுக்குக் கொடுத்தார். நீர், ஆமணக்கெண்ணெய் மற்றும் தானிய விதைகள் கலந்த அந்த மருந்துக்கு மந்திர சக்தி உள்ளது எனச் சொன்னார். அது ஜெர்மானியர்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருந்த கிளர்ச்சியாளர்கள், தங்களிடம் இருந்த வில்களையும், ஈட்டிகளையும் எடுத்துக்கொண்டு, தற்காப்புக்காக ங்வாலே கொடுத்த மாஜியையும் (நீர் மருந்து) எடுத்துக்கொண்டு போருக்குச் சென்றனர்.
சரியான தலைமையும், ஆயுதங்களும் இல்லாமல், எழுந்த இந்தக் கிளர்ச்சியை ஜெர்மானியர்கள் ஆயுதங்களின் துணை கொண்டு அடக்கினர். கிஞ்சிகிட்லே ங்வாலே கைதுசெய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். ஜெர்மானியர்கள் மக்களின் வீடுகளை, வயல்களை எரித்து பெரும் வன்முறைத் தாண்டவத்தை நிகழ்த்தினர். இதனால் ஏற்பட்ட அழிவில், 1.5 லட்சத்துக்கும் அதிகமான தாங்கினிக்கர்கள் உயிரிழந்தனர். இந்த அடக்குமுறை, தாங்கினிக்கர்கள் மனதில் பெரும் பயத்தை உண்டாக்கியிருந்தது.
காலப்போக்கில், அந்த வன்முறையின் சுவடுகள் மறைந்து, மீண்டும் மக்களிடையே விடுதலைக்கான வேட்கை துளிர்விடத் தொடங்கியது. இந்திய வரலாற்றிலும் நாம் இதுபோன்ற ஒரு நிகழ்வைக் காண முடிகிறது.
காலனிய எதிர்ப்பு
சிப்பாய் கலகம் என்று அழைக்கப்பட்ட முதலாம் இந்திய சுதந்திரப் போர் 1857ஆம் ஆண்டு நடந்தது. அதை ஆயுதங்களின் உதவியோடு ஆங்கிலேயர்கள் அடக்கினர். அதையடுத்து பல பத்தாண்டுகள் இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்க்கும் குரல் எழவில்லை. 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போதுதான் அடுத்த மக்கள் எழுச்சியை இந்தியா கண்டது.
தாங்கினிக்காவிலும், 1940கள் தொடங்கி மெல்ல மெல்ல காலனியாதிக்கத்துக்கு எதிரான மனநிலை வலுவடையத் தொடங்கியது.
தாயகம் திரும்பிய நைரேரே, 1953ஆம் ஆண்டு தாங்கினிக்கா ஆப்பிரிக்கன் கூட்டமைப்பின் (Tanzania African Association – TAA) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிறுவனத்தின் முன்னோடி என்பது ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு (African Association). எப்படி இந்திய தேசிய காங்கிரஸ், ஆங்கிலேய மிதவாதிகளால் தொடங்கப்பட்டதோ, அதேபோல இந்த நிறுவனமும் க்ளெய்ஸ்ட் ஸைக்ஸ் என்னும் ஜெர்மானியர் மற்றும் அவர் நண்பர்களால் தொடங்கப்பட்டது. அரசியலில் ஈடுபடக் கூடாது என்னும் நிபந்தனையின் பேரில், ஆப்பிரிக்கக் கூட்டமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலப்போக்கில், தாங்கினிக்கா எங்கும் பரவிய இதன் கிளைகளில், பெரும்பாலும் மத்திய வர்க்கத்தினரே உறுப்பினர்களாக இருந்தனர்.
டானுவில் இணைந்த முதல் ஆண்டிலேயே, நைரேரே, தன் நண்பர் ஆஸ்கர் கம்போனாவின் உதவியுடன், அந்தக் கூட்டமைப்பை, தாங்கினிக்க ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் - டானு (Tangynika African National Union – TANU) என்னும் அரசியல் இயக்கமாக மாற்றியமைத்தார்.
டானு இயக்கக் கூட்டங்களில், தாங்கினிக்க விடுதலையின் அவசியத்தைப் பேசத் தொடங்கினார் நைரேரே. காந்தியின் அகிம்சை வழியினால் பெரிதும் ஈர்க்கப்பட்ட நைரேரே, தாங்கினிக்காவின் விடுதலை அகிம்சை வழிப் போராட்டம்தான் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், ஆங்கிலேயே அரசு அவரை நம்பவில்லை. நைரேரே எந்த நேரமும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என அஞ்சியது. அவரை மிகவும் நெருக்கமாகக் கண்காணித்துவந்தது.
நைரேரேவின் மீதான ஒவ்வாமை
ஐக்கிய நாடுகள் சபை, 1954ஆம் ஆண்டு தாங்கினிக்காவின் விடுதலை தொடர்பாக ஒரு குழுவை அனுப்பியது. அடுத்த 25 ஆண்டுகளில் தாங்கினிக்காவுக்கு விடுதலை தரும் ஒரு திட்டத்தை முன்வைத்தது. அதை மேலும் விவாதிக்க அமெரிக்கா வருமாறு ஜூலியஸ் நைரேரே அமெரிக்கா அழைக்கப்பட்டார். அங்கே பேசிய நைரேரே, ஐ.நா சபை மற்றும் ஆங்கிலேயே அரசின் உதவியினால் மிக விரைவில் எங்களை நாங்களே நிர்வகிக்கும் உரிமையைப் பெற்றுவிடுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். அதைப் பலரும் நடக்காத விஷயம் என்று நினைத்தனர். ஆனால், அடுத்த 7 ஆண்டுகளில், தாங்கினிக்கா விடுதலை பெற்றது, நைரேரேவின் கணிப்பு சரியென நிரூபித்தது.
தாயகம் திரும்பிய நைரேரே, தாங்கினிக்கா விடுதலை பெறும் காலம் வரை தொடர்ந்து மக்களிடையே பயணித்து, அவர்களுடன் உரையாடிய வண்ணம் இருந்தார். அப்போதைய தாங்கினிக்காவின் பிரிட்டிஷ் கவர்னரான எட்வர்ட் ட்வைனிங் என்பவருக்கு நைரேரேவின் மீது ஒவ்வாமை இருந்தது. வெள்ளையின மற்றும் ஆசிய மக்கள் மீது ஆப்பிரிக்க மேலாதிக்கத்தை நைரேரே சுமத்த நினைக்கிறார் என ட்வைனிங் நினைத்தார். எனவே, நைரேரேவின் முயற்சிகளுக்கு எதிராக ஆப்பிரிக்கர்கள், வெள்ளையர்கள், ஆசியர்களை உறுப்பினராகக் கொண்ட ஐக்கிய தாங்கினிக்கா கட்சி (United Tangynika Party) என்னும் புதிய அரசியல் கட்சியை உருவாக்கினார்.
ட்வைனிங், 1958ஆம் ஆண்டு ஒரு புதிய சட்டமன்றத்தை உருவாக்கினார். தாங்கினிக்கா பத்து பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிராந்தியத்தில் இருந்தும் மூன்று பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனச் சொல்லப்பட்டது. ஒர் ஆப்பிரிக்கர், ஓர் ஐரோப்பியர் மற்றும் ஒரு தெற்காசியர் என மூன்று இன மக்களுக்கும் தலா ஒரு பிரதிநிதி எனச் சொல்லப்பட்டது. இதனால், ஐரோப்பியர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிடும் எனவும் சொல்லப்பட்டது.
அனைத்திலும் டானு வேட்பாளர்கள்
தாங்கினிக்காவின் மக்கள்தொகையில் 98% இருக்கும் ஆப்பிரிக்கர்களுக்கு 33%மும், 2% மட்டுமே இருக்கும் வெள்ளை மற்றும் தெற்காசிய மக்களுக்கு 66% பிரதிநிதித்துவமும் தரப்படுவது அநீதி என அனைவரும் கருதினர். தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என ‘டானு’வின் தலைவர்கள் அனைவரும் கருதினர். வெளிப்படையாகப் பேசினர்.
ஆனால், நைரேரே பெரும்பான்மையானவர்களின் கருத்திலிருந்து மாறுபட்டார். ‘டானு’ தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், எதிர்க்கட்சியான ஐக்கிய தாங்கினிக்கா கட்சி தேர்தலில் எளிதாக வென்றுவிடும். ஆட்சி அதிகாரத்தில் ‘டானு’ பங்குபெறாமல், வெளியில் நின்றால், தாங்கினிக்கா விடுதலை பெறுவது தாமதப்படும் என்பது நைரேரேவின் கருத்து.
டபோரா நகரில் நடைபெற்ற ‘டானு’ கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய நைரேரே, தனது கருத்துக்கு அனைவரையும் சம்மதிக்க வைத்தார். ‘டானு’ கட்சிக்கு ஆதரவாக இருந்த ஐரோப்பியர்கள், தெற்காசியர்களுக்கு தேர்தலில் பங்கேற்க வாய்ப்பளித்தார். 1958ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் ‘டானு’வின் வேட்பாளர்கள் வென்றனர்.
தலைமை ஏற்க அழைப்பு
புதிய கவர்னர் டர்ன்புல் 1959ஆம் ஆண்டு காலனிய அரசின் 12 மந்திரி சபை இலாக்காக்களில் ஐந்தை ‘டானு’வுக்குக் கொடுத்தார். தாங்கினிக்காவின் ஆட்சி அதிகாரத்தை தாங்கினிக்கர்களுக்கு மாற்றிக்கொடுக்க டர்ன்புல் தயாரான மனநிலையில் இருந்தார்.
ஆனால், நைரேரேவுக்கு வேறு எண்ணங்கள் இருந்தன. அண்டை நாடுகளான கென்யாவும், உகாண்டாவும் தான்சானியாவுடன் இணைந்து, ஒரு கிழக்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பை உருவாக்கும் கனவில் இருந்தார். மூன்று நாடுகளும் ஒரே சமயத்தில் விடுதலை பெற்றால், இந்தக் கனவு சாத்தியப்படும் என நினைத்தார். 1960ஆம் ஆண்டு, எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபாபாவில் நடந்த ஓர் அரசியல் மாநாட்டில் தன் கனவை முன்வைத்தார்.
ஆனால், ‘டானு’வின் தொண்டர்களும், தலைவர்களும் காத்திருக்கும் மனநிலையில் இல்லை. நாட்டின் 10% மக்கள் ‘டானு’வில் உறுப்பினர்களாக இருந்தனர். 1960ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், மொத்தம் இருந்த 71 இடங்களில், 70 இடங்களை ‘டானு’ வென்றது. ‘டானு’வின் தலைவரான நைரேரே, முதல் மந்திரியாகப் பதவியேற்க அழைக்கப்பட்டார்.
கிடைத்தது விடுதலை
இதில் 1961ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் பிரதமர் ஹெரால்ட் மேக்மில்லனின் ‘விண்ட்ஸ் ஆஃப் சேஞ்ச்’ (winds of Change) என்னும் புகழ்பெற்ற உரையில், பிரிட்டிஷ் அரசு ஆப்பிரிக்காவில் தன் காலனியாதிக்கத்தை விலக்கிக்கொள்ள முடிவெடுத்ததை அறிவித்தார். தாங்கினிக்காவுக்கான ஒரு அரசியல் சட்ட அமைப்பை விவாதிக்க ஒரு அரசியல் சட்ட அமைப்பு மாநாடு கூட்டப்பட்டது. விடுதலை பெற்று ஒரு குடியரசாகத் தன்னை மாற்றிக்கொள்ளும் வரையில் (ஓர் ஆண்டு), தாங்கினிக்கா, பிரிட்டிஷ் அரசியைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள ‘டானு’ சம்மதித்தது. 1961ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி, தாங்கினிக்கா விடுதலை பெற்றது.
விடுதலை பெற்ற சில நாட்களிலேயே நாடாளுமன்றத்தில், ஆப்பிரிக்க மக்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கும் ஒரு சட்ட வரைவு முன்வைக்கப்பட்டது. நைரேரே, அந்தச் சட்ட வடிவை மிகக் கடுமையாக எதிர்த்தார். இன அடிப்படையில் குடியுரிமை வழங்கும் இச்சட்ட வடிவம், ஹிட்லரின் நாஜிக் கொள்கைகள் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக் கொள்கைகளைப் போன்றது என வாதிட்டார். இந்தச் சட்டம் நிறைவேறினால், தான் பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை எனச் சொன்னார்.
தாங்கினிக்காவின் பிரதமராகப் பதவியேற்ற ஆறே வாரங்களில், பதவியில் இருந்தது விலகி, தன் நெருங்கிய அரசியல் தோழரான ரஷீது கவாவா என்பவரைப் புதிய தலைவராக நியமித்தார். ‘டானு’ அமைப்பைச் சீர்திருத்தவும், கிராமப்புறத் தன்னிறைவை நோக்கி மக்களை செலுத்தவும் தனது நேரத்தைச் செலவிட முடிவுசெய்தார். தாங்கினிக்கா நாடெங்கிலும் பயணித்தார்.
விடுதலை பெற்ற முதலாம் ஆண்டில், தாங்கினிக்கா, உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதில் முனைப்புக் காட்டியது. ஊரக மக்கள், வாரத்தில் ஒருநாள் சமூகக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். சாலைகளை உருவாக்குவதில், பொதுக் கிணறு வெட்டுதல், பள்ளிகள், மருத்துவமனைகளைக் கட்டுதல் போன்ற பணிகள் மக்களின் பங்களிப்போடு முன்னெடுக்கப்பட்டன.
உஜாமா அணுகுமுறை
தனிமனித நில உரிமைகள் 1962ஆம் ஆண்டு நீக்கப்பட்டு, அனைத்து நிலங்களும் குத்தகைதார நிலங்களாக மாற்றப்பட்டன. இது ஆப்பிரிக்க அணுகுமுறையான சமூக உடமை என்னும் கருத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது. தனிமனிதன், குடும்பம் என்னும் அமைப்பைப் போலவே சிறு சமூகம் / கிராமம் என்னும் அலகும் ஆப்பிரிக்க சமூகத்தில் முக்கியமானது.
இந்த அணுகுமுறையை நைரேரே ‘உஜாமா’ என அழைத்தார். சோஷலிசத்தின் ஆப்பிரிக்க வடிவம் எனச் சொல்லலாம். இதன் வழியே, காலனிய ஆதிக்க அணுகுமுறையிலிருந்து வேறுபட்ட தனித்துவமான தேசிய விழுமியங்களை தாங்கினிக்கா வளர்த்தெடுக்க முடியும் என அவர் நம்பினார்.
அதே ஆண்டு, தாங்கினிக்காவில் இருந்த பல்வேறு இனக்குழுத் தலைவர்கள் பதவிகளை ஒழித்தார். அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதியமும் நிறுத்தப்பட்டது. இதன் முக்கியக் காரணம், நவீன தாங்கினிக்காவின் நிர்வாக, நீதி பரிபாலன அமைப்புடன், இந்தப் பாரம்பரிய குழுத் தலைவர்களின் செயல்பாடுகள் முரண்பட்டதும், அவர்களில் பலர் பிரிட்டிஷ் அரசின் ரகசிய ஆதரவாளர்களாக இருந்ததும்தான். இந்த நடவடிக்கையை நாம் இந்திரா காந்தி முன்னெடுத்த ‘மன்னர் மானிய ஒழிப்பு’ நடவடிக்கையுடன் இணைத்துப் பார்க்க முடியும்.
அதேபோல, தாங்கினிக்கா நிர்வாக அமைப்பில் இருந்த ஐரோப்பிய மற்றும் தெற்காசிய அதிகாரிகள் பலரின் பதவிகளும் பறிக்கப்பட்டன. இது வெள்ளையர்களுக்கும், தெற்காசிய மக்களுக்கும் எதிரானதுதான் என்றாலும், விடுதலை பெற்ற தாங்கினிக்காவில், தாங்கினிக்காவின் ஆதிக் குடிமக்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்களுக்குமான உரிமையை வழங்கும் நேர்நிலைச் செயல்பாடு என இச்செயலை ஆதரித்தார் நைரேரே. 1963ஆம் ஆண்டு இறுதியில், நிர்வாக அமைப்பில் 98% மக்களான உள்ளூர் தாங்கினிக்கர்கள். 50% இடங்களைப் பிடித்திருந்தனர்.
தான்சானியக் குடியரசு
தாங்கினிக்கா விடுதலை பெற்ற பின்னரும், ஐரோப்பியர்கள் தாங்கினிக்கர்களை இன வேறுபாடு காரணமாக அவமதிப்பது தொடர்ந்துவந்தது. எனவே, இன வேறுபாடு அணுகுமுறையைக் கொண்டிருந்த ஐரோப்பியர்கள் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக, பலரும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டார்கள். ஆனால், நைரேரே “இத்தனை ஆண்டுகள் ஆப்பிரிக்கர்கள் அவமதிக்கப்பட்டது போதும். இனியும் இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.
விடுதலை பெற்ற முதலாம் ஆண்டில், தாங்கினிக்கா தனக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் முனைந்தது. அடுத்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி, தாங்கினிக்கா ஒரு குடியரசாக மாறியது. தாங்கினிக்காவின் அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
தேர்தலில் ‘டானு’வின் சார்பில் போட்டியிடப்போவது யார் என்பது பற்றிய கேள்வியே எழவில்லை. அந்தத் தேர்தலில், 98.1% வாக்குகளைப் பெற்று, தாங்கினிக்கக் குடியரசின் முதல் அதிபராகப் பதவியேற்றார் ம்வாலிமு ஜூலியஸ் கம்பாரகே நைரேரே. அத்தோடு நவீன தாங்கினிக்காவின் வரலாறு தொடங்கியது.
(தொடரும்…)
தொடர்புடைய கட்டுரைகள்
ஜூலியஸ் நைரேரே: தான்சானியாவின் தேசத் தந்தை
தான்சானியாவை அண்மையில் அறிதல்!
தான்சானியா: வரி நிர்வாகத்தின் முன்னோடி
தான்சானியாவின் வணிக அமைப்பு
1
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.