கட்டுரை, அரசியல், நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு

‘மோடி - ஷா’ இணை செய்யும் தவறு!

டி.கே.சிங்
13 Oct 2024, 5:00 am
0

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்பதற்கும் முன்னால் (2019 மார்ச்), பாஜகவின் ‘நலன் விரும்பியைப் போல’ கட்டுரை எழுதியிருந்தேன்; ‘வாஜ்பாய் – அத்வானி’ தலைமை, மாநிலங்களில் இளம் தலைவர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்து வளர்த்ததைப் போல ‘மோடி – ஷா’ இணை செய்யாமலிருப்பது கட்சிக்கு நல்லதல்ல என்று எச்சரித்திருந்தேன். 

நரேந்திர மோடி, அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், சுஷ்மா ஸ்வராஜ், ராஜ்நாத் சிங், பிரமோத் மகாஜன், வசுந்தரா, சிவராஜ் சிங் சௌகான் இன்னும் பலர் அத்வானி – வாஜ்பாயால் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர். 

மோடி – ஷா இணையர் 2014 – 2019 காலத்தில், ஊக்குவித்த சிலர் மக்களிடையே செல்வாக்கில்லாமல் தேய்ந்ததையும் அதில் குறிப்பிட்டிருந்தேன். ‘ஏன் அவ்வளவு அவசரப்பட்டு எழுதினாய்’ என்று சிலர் என்னைக் கடிந்துகொள்ளக்கூடும். அந்தக் கட்டுரை எழுதிய ஐந்தரை ஆண்டுகளில் நிலைமையில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பத்தாண்டுக் காலம் போதும்

மோடி – ஷா இணையரால் ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று மதிப்பிட, பத்தாண்டுக் காலம் போதும். அப்போதைவிட மேலும் பலர் இந்தப் பட்டியலுக்குள் வந்துவிட்டனர். பாஜகவின் ஊதுகுழல்கள் எவ்வளவுதான் தூக்கிவைத்து எழுதினாலும் மோடியின் பதவிக்காலம் இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டது. அவர் வளர்த்தவர்களின் நிலையை ஆராய்வது இப்போது மிகவும் நியாயமானது.

மோடி – ஷா இணை 2014இல் ஹரியாணாவில் மனோகர் லால் கட்டார், மஹாராஷ்டிரத்தில் தேவேந்திர பட்நவீஸ், ஜார்க்கண்டில் ரகுவர் தாஸ் ஆகியோரை முதல்வர்களாக்கியது.

மனோகர் லால் கட்டார்

சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியாணா சட்டமன்ற பொதுத் தேரதல் பிரச்சாரத்தின்போது, ஒன்பதரை ஆண்டுக்காலம் முதல்வராக இருந்த கட்டாரை மேடையிலேயே ஏற்றாமல் மறைத்துவைத்தது கட்சித் தலைமை! அவர் தனது மக்களவைத் தொகுதியான கர்நாலில் மட்டும் பிரச்சாரம் செய்தார். ஹிஸ்ஸார் பொதுக்கூட்டத்துக்கு வந்த அவரைப் பேசுமாறு கட்சி நிர்வாகிகள் அழைத்தபோது, மறுத்துவிட்டார். சட்டமன்றத்துக்குப் போட்டியிட்ட மிகச் சில பாஜக வேட்பாளர்கள்தான் கட்டார் தங்களுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று விரும்பினர்.

ஹரியாணா முதல்வராக கட்டார் நீடித்தால் கட்சிக்குப் படுதோல்விதான் என்று தெரிந்த பிறகு, தலைமை அவரைப் பதவியிலிருந்து நீக்கியது. அவரோ தன்னுடைய ஆதரவாளரான நயாப் சிங் சைனியை அந்தப் பதவியில் அமர்த்தினார். ஒன்றிய அமைச்சரவையில் கட்டாருக்குப் பதவி தந்த மோடி, சட்டமன்ற தேர்தலில் அவர் பரிந்துரைத்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பும் தந்தார். இருவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் தோழர்களாக இருந்ததற்காக மோடி இதைச் செய்தார். ஹரியாணா தேர்தல் முடிவு எல்லோரும் அறிந்ததுதான்.

ரகுவர் தாஸ்

ஜார்க்கண்டில் ரகுவர் தாஸ் முதல்வராக்கப்பட்டார். அவரும் செல்வாக்கிழந்து, கட்சியும் ஆட்சியை இழந்தது. முதல்வராக இருந்தவரால் அவருடைய சட்டமன்ற தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை.

கட்டாருக்கு மறுவாழ்வு தந்ததைப் போல ரகுவர் தாஸுக்கு ஒடிஷா ஆளுநர் பதவி தந்து காப்பாற்றினார் மோடி. ரகுவர் தாஸின் மகன், ஆளுநர் மாளிகை அதிகாரியை அடித்ததாக சொல்லப்படும் விவகாரம் இப்போது பெரிதாகிவிட்டது. வெளியே சுற்றிப் பார்ப்பதற்குச் சொகுசுக் காரை வாடகைக்கு அமர்த்தித் தரவில்லை என்ற கோபத்தில் அதிகாரியை அடித்தாராம் ஆளுநரின் மகன். ஒடிஷாவை ஆள்வதும் பாஜக அரசு என்பதாலும் டெல்லியின் ஆதரவாலும் ரகுவர் தாஸ் இந்த விவகாரத்திலிருந்து ஓரளவு மீண்டார்.

பரிதாபத்துக்குரிய பட்நவீஸ்

மஹாராஷ்டிரத்தில் முதல்வராக நியமிக்கப்பட்ட தேவேந்திர பட்நவீஸ் நல்ல நிர்வாகி என்று பெயரெடுத்தார். ஆனால், இரண்டாவது முறையாக அவரால் முதல்வராக முடியாதபடிக்குத் தோழமைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே குறுக்கிட்டார். பிறகு அங்கே கூட்டணி உடைந்து சிவசேனை, காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸுடன் இணைந்தது தனிக்கதை.

கர்நாடகத்தில் பி.எஸ்.எடியூரப்பாவும் மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌகானும் செய்ததைப் போல ஆட்சியை இழந்த பட்நவீஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசை அவர்களுடைய கட்சிகளை உடைத்தே கவிழ்த்தார். தனக்கு அரசியல் சாமர்த்தியமும் உண்டு என்று இதில் நிரூபித்தார். ஆனால், அதற்குப் பரிசாக அவருக்கு முதல்வர் பதவியைத் தராமல், சிவசேனை உடைசல் பிரிவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கினார் அமித் ஷா. துணை முதல்வர் பதவி வகிக்கும்படி பட்நவீஸ் கட்டாயப்படுத்தப்பட்டார். கூட்டணியைக் காப்பாற்றும் சாக்கில் ஷிண்டேவை எல்லாக் கட்டங்களிலும் தாங்கிப்பிடிக்கும் மோடி – ஷா இணை, பட்நவீஸைத் தொடர்ந்து மட்டம் தட்டிக்கொண்டிருக்கிறது.

அடுத்த பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்ட நிலையிலேயே பட்நவீஸுக்குத்தான் பெருத்த அரசியல் இழப்பு என்பது வெளிப்படையாகிவிட்டது. அவருடைய புகழும் செல்வாக்கும் மங்கிவிட்டது. பட்நவீஸை வளர்த்துவிட்டால் அவர் பிரதமர் பதவிக்கே நாளை போட்டியாளராக மாறிவிடலாம் என்பதுதான் இதற்குக் காரணம் என்று கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இப்படியாக 2014இல் மோடி – ஷா இணை அறிமுகப்படுத்திய மூன்று முதல்வர்களின் அரசியல், முடிவுக்கு வந்துவிட்டது. மற்றவர்களைப் பற்றியும் பார்ப்போம்.

சோனோவால்

அசாம் முதல்வராக சர்வானந்த சோனோவாலை 2016இல் தேர்ந்தெடுத்தது மோடி – ஷா இணை. ஆனால், அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதால் அவருக்குப் பிறகு ஹிமந்த விஸ்வ சர்மாவை முதல்வராக்கியது. (சோனோவால் இப்போது ஒன்றிய அமைச்சர்).

உத்தராகண்டில் திரிவேந்திர சிங் ரவாத்தை 2017இல் முதல்வராக்கியது மோடி – ஷா இணை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தீரத் சிங் ரவாத்தை அந்தப் பதவியில் அமர்த்த நேர்ந்தது. அவரும் செல்வாக்கிழந்ததால் நான்கு மாதங்களுக்குள் புஷ்கர் சிங் தாமி முதல்வராக்கப்பட்டார். ஆறு மாதங்களுக்குப் பிறகு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றாலும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அவருடைய தொகுதியிலேயே தோற்றார். இருந்தாலும் மோடி – ஷா இணை பெரிய மனது வைத்து அவரையே முதல்வராக்கியது.

ஜெய்ராம் தாக்கூர்

இமாச்சலத்தில் முதல்வராக இருந்த பிரேம் குமார் தூமல் மோடிக்கு நெருக்கமான நண்பர் அல்ல. எனவே, அவர் சட்டமன்ற தேர்தலில் தோற்றதும் அவருக்குப் பதிலாக ஜெய்ராம் தாக்கூரை முதல்வராக்கினர் மோடியும் ஷாவும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை இழந்தது பாஜக. தூமலின் மகன் அனுராக் தாக்கூர் இப்போதைய ஒன்றிய அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. ஆனால், மக்களவையில் அவர்தான் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக துடிப்பாகச் செயல்படுகிறார்.

விஜய் ரூபானி, பூபேந்திர படேல்

குஜராத்தில் முதல்வராக இருந்த ஆனந்திபென் படேலுக்குப் பதிலாக விஜய் ரூபானியை 2016இல் முதல்வராக்கினர். 14 மாதங்கள் கழித்து அவரை நீக்கிவிட்டு பூபேந்திர படேலை 2022 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக முதல்வராக்கினர். ஆனந்திபென் அல்லது ரூபானி யார் சிறந்த முதல்வர் என்பதெல்லாம் கேள்வியில்லை. குஜராத்தில் முதல்வர் பதவி என்பது அடையாளத்துக்கான அலங்கார பதவிதான். எல்லாம் டெல்லியிலிருந்து இயக்கப்படுகிறது. மோடி – ஷா இணையரின் நம்பிக்கைக்குரிய தலைமைச் செயலாளர் கே.கைலாசநாதன் முன்பு குஜராத் அரசை நிர்வகித்தார், இப்போது ஹஸ்முக் ஆதியா அந்த வேலையைச் செய்கிறார்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

மோடி - ஷாவுக்கு அடுத்து பாஜகவில் யார்?

டி.கே.சிங் 04 Jan 2023

விப்லவ தேவ், பிரேன் சிங்

திரிபுராவில் விப்லவ தேவ், மணிப்பூரில் பிரேன் சிங் ஆகியோர் மோடி – ஷா இணையரால் முதல்வர்களாக்கப்பட்டனர். (விப்லவ் என்றால் புரட்சி). மார்க்சிஸ்டுகள் ஆண்ட திரிபுராவில் முதல் முறையாக பாஜகவை ஆட்சிக்குக் கொண்டுவந்தவர் என்று பாராட்டப்பட்ட விப்லவ தேவ் (பிப்லவ தேவ்) 2023 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்னால் கட்டாயப்படுத்தப்பட்டு, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவர் ஏன் நீக்கப்பட்டார் என்பது அவருக்கும் கட்சித் தலைமைக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். மணிப்பூரில் இவ்வளவு சேதங்களுக்குப் பிறகும் முதல்வராக நீடிக்கிறார் பிரேன் சிங். மாநிலத்துக்கு எவ்வளவு சேதம் ஏற்பட்டாலும் சரி, தங்களுடைய தேர்வான முதல்வரை மாற்ற மாட்டோம் என்று இருவரும் உறுதியாக இருக்கின்றனர்.

இருவர் மட்டுமே எஞ்சினர்

மோடி – ஷா தலைமை தேர்ந்தெடுத்தவர்களில் இரண்டு பேர் மட்டுமே முதல்வர்களாக நன்கு செயல்பட்டனர். மஹாராஷ்டிரத்தில் பட்நவீஸ், உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத். பட்நவீஸின் அரசியல் வீழ்ச்சியை ஏற்கெனவே பார்த்துவிட்டோம். யோகி மட்டுமே முதல்வர் பதவியில் நீடிக்கிறார். அசாமின் ஹிமந்த சர்மாவை, மோடி - ஷாவின் கண்டுபிடிப்பு என்று கூறிவிட முடியாது. அவர் ஏற்கெனவே காங்கிரஸில் புகழ்பெற்றவர், நிர்வாக அனுபவம் மிக்கவர், மக்கள் ஆதரவு உள்ளவர்.

மோடிக்கு அடுத்து பிரதமர் பதவிக்குப் போட்டி போடக்கூடியவர் யோகி ஆதித்ய நாத். அவரை வளரவிடாமல் தடுக்கும் முயற்சிகளும் கட்சிக்குள் நடப்பதாகப் பேசப்படுகிறது. மக்களவை பொதுத் தேர்தலின்போது நடந்த உள்ளடி வேலைகளால்தான் உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு அதிக இடங்களில் தோல்வி ஏற்பட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அது சதியோ – விதியோ, யோகி ஆதித்யநாத் அதைச் சமாளித்துவிட்டார். அடுத்த ஓராண்டுக்குள் உத்தர பிரதேசத்தை வறுமையிலிருந்து மீட்பேன் என்று சபதம் செய்துவிட்டு அதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார். தனக்கென்று தனி திட்டம் வைத்துள்ள அவருக்கு, கட்சிக்குள் பெரிய ஆதரவு திரண்டுவருகிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

நெருக்கடியில் பாஜக முதல்வர்

நீலம் பாண்டே 06 Oct 2024

ஸ்மிருதி இராணி

மோடி – ஷா இணை ஊக்குவித்த இளம் தலைவர்கள் பலர் உண்டு. அவர்கள் இந்த இருவரின் ஒளி வெள்ளத்தில் தாங்களும் வெளிப்பட்டு மினுக்கினர், இப்போது அந்தகாரம் சூழ அகன்றுவிட்டனர். அவர்களில் முதலாமவர் ஸ்மிருதி இராணி. ஆணாதிக்கம் மிக்க அரசியல் உலகில் தனக்கென தனியிடம் பிடித்தார் ஸ்மிருதி. கடந்த பொதுத் தேர்தலில் தோற்ற பிறகு எங்கோ ஒதுங்கிவிட்டார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவந்த பெரிய குடும்ப அரசியல் வாரிசான கிரண் சௌதுரிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தந்த மோடி – ஷா இணை, ஸ்மிருதி இராணிக்கு ஏன் தரவில்லை என்று கட்சி வட்டாரங்களே வியக்கின்றன.

தர்மேந்திர பிரதான்

ஒடிஷாவில் பாஜகவை ஆட்சிக்குக் கொண்டுவர அல்லும் பகலும் பாடுபட்ட தர்மேந்திர பிரதானுக்கு முதல்வர் பதவி தரப்படாமல் மோகன் மாஜிக்கு தரப்பட்டிருப்பதும் கட்சிக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தின.

ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவை ஓரங்கட்டுவதற்காக, முதல் முறையாகத்தான் சட்டமன்றத்துக்கு வந்திருக்கிறார் என்றாலும் அனுபவம் இல்லாத பஜன்லால் சர்மாவை முதல்வராக்கினர் மோடி – ஷா இணையர். அவர் தனக்குத் திறமை இல்லை என்பதை 9 மாத கால நிர்வாகத்தில் பறைசாற்றியதுடன் டெல்லி நட்சத்திர ஹோட்டலில் ரஷ்ய இளம் பெண்ணுடன் ஏற்பட்ட விவகாரத்தால் பெயரையும் கெடுத்துக்கொண்டுவிட்டார். அவருடைய அமைச்சரவையிலிருந்து விலகிய கிரோடிலால், ராஜிநாமா ஏற்கப்படாவிட்டாலும் துறை வேலைகளைச் செய்யாமல் முதல்வருக்கே பெருத்த சவாலாக இருக்கிறார். ராஜஸ்தான் மாநில நிர்வாகத்தை அதிகாரிகள்தான் நடத்துகின்றனர்.

தலைமையின் தன்மையா?

இதுவரையில் மோடி – ஷா இணையரால் மாநிலங்களில் உருவாக்கப்பட்ட தலைவர்களைப் பற்றி மட்டுமே பார்த்தோம், ஒன்றிய அரசில் இருப்பவர்கள் பற்றி இப்போதைக்கு ஏதும் கூறவில்லை. வாஜ்பாய் – அத்வானி காலம் பொற்காலம் என்று கூறத்தக்க விதத்தில் ஏராளமான இளம் தலைவர்கள் இரண்டாவது தலைமுறையாக கட்சிக்குள் வளர்க்கப்பட்டனர். திறமையும் அர்ப்பணிப்பு உணர்வும் உள்ளவர்கள் நிறைய வெளிப்பட்டனர். இப்போது மோடி – ஷா ஊக்குவிப்போர் அப்படி நல்ல பெயர் வாங்கத் தவறுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

வாஜ்பாயும் அத்வானியும் கட்சியைவிட தாங்கள் பெரியவர்கள் என்று ஒருநாளும் அகந்தை கொண்டதில்லை. கட்சியின் எதிர்கால நன்மைக்காக உழைத்தனரே தவிர தங்களுடைய தனிப்பட்ட நன்மை, புகழுக்காக பாடுபடவில்லை. நல்லவரா வல்லவரா என்று பார்த்தனரே தவிர, தங்களுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பாரா என்று தேர்ந்தெடுக்கவில்லை. எதிர்காலத்தில் தங்களுடைய தலைமைப் பதவிக்குப் போட்டி வந்துவிடுமோ என்றும் இருவரும் அஞ்சவில்லை.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

வடக்கு: மோடியை முந்தும் யோகி

சமஸ் | Samas 12 May 2024

ஒருவேளை மோடி – ஷா இணையருக்கு உண்மையிலேயே திறமைசாலிகளை அடையாளம் காணும் திறமையில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

அத்வானியும் வாஜ்பாயும் முதுமையாலும் அரசியலில் செல்வாக்குக் குறைந்ததாலும் ஒளிமங்கத் தொடங்கியபோது கட்சியை வழிநடத்த நரேந்திர மோடி, சிவராஜ் சிங் சௌஹான், வசுந்தரா ராஜே சிந்தியா, ரமண் சிங், பி.எஸ்.எடியூரப்பா, பிரேம் குமார் தூமல், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் என்று பலர் இருந்தனர். மோடி – ஷா இணைக்குப் பிறகு தலைமைக்கு நல்ல தலைவர்கள் இல்லை என்றால் கட்சியின் எதிர்காலம் என்னாவது என்று ஆதரவாளர்கள் கவலைப்படுகின்றனர். அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவது கட்சியின் உடனடி வேலையாக இருக்க வேண்டும்.

© த பிரிண்ட்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

மோடி அரசுக்கு கவலை தரும் மூன்று!
வாஜ்பாய் போன்று தோற்றிருக்க வேண்டியவர் மோடி
தான் வைத்த கண்ணியில் தானே சிக்கிய மஹாராஷ்டிர பாஜக
மோடி - ஷாவுக்கு அடுத்து பாஜகவில் யார்?
நெருக்கடியில் பாஜக முதல்வர்
மபி: என்ன செய்வார் மாமாஜி?
மோடி அரசின் தோல்விக்குச் சான்று அமித் ஷாவின் காஷ்மீர் பயணம்
மணிப்பூர்: அமைதியின்மை தொடர யார் பொறுப்பு?
ராகுலைப் பாராட்டுகிறார் இராணி
வடக்கு: மோடியை முந்தும் யோகி

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

1






விடுதலைச் சிறுத்தைகள்ராகுல் சமஸ்பா.வெங்கடேசன்கிபுட்ஸ்தடுப்பாற்றல்பகவத் கீதைசேவைத் துறைஉள்ளூர் மொழி‘அதேதான்’ – ‘மேலும் கொஞ்சம் அதிகமாக’!காங்கிரஸ்: 255 மக்களவைத் தொகுதிகளில் கவனக்குவிப்புடர்பன்ஜெய்பீம் ஞானவேல்இந்தி மொழிபூணூல்மூன்றாவது மக்களவைத் தேர்தல்ஆரியவர்த்தம்ஆன்லைன் வகுப்புபுதிய தலைமைசுயமரியாதை இயக்கம்இந்தியர் கல்விசமையல் சங்கம்ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் அளித்த பேட்டி!ஆளுந(ரி)யின் அநாகரீக செயல்பாடுகள் முற்றுப் பெறுமா?இயற்பியல்ரோபோட்கோட்ஸேதலைமயிர்ஒளிமானம்மோர்பிஎஸ்.வி.ராஜதுரை ஸரமாகோ

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!