கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 4 நிமிட வாசிப்பு
இரவுத் தூக்கம் குறைவது ஏன்?
முதுமையில் பெரும்பாலோருக்கு ஏற்படும் ஆரோக்கியப் பிரச்சினைகளில் தூக்கமின்மை முன்னிலை வகிக்கிறது. அறுபது வயதுக்குப் பிறகு அனைவருக்குமே தூக்கம் சற்றுக் குறைவது இயல்பானதுதான். இந்த வயதில் ஐந்து மணி நேரத் தூக்கம்கூடப் போதுமானதுதான். ஆனால், தூங்கும் நேரத்தின் அளவைவிட எவ்வளவு நேரம் ஒருவர் தொடர்ந்து ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுகிறார் என்பதுதான் முக்கியம்.
தூக்கத்தின் அவசியம்
தூக்கம் என்பது உடலுக்கு ஓய்வு கொடுத்து மீண்டும் மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளையானது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஓர் இயற்கை வழி. ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும்விதம், சுற்றுச்சூழல், உடல் நலம் மற்றும் மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது. முதுமை காரணமாகவோ, உடல்நிலை காரணமாகவோ தூங்கும் நேரம் குறைந்தாலும் தூக்கத்தின் அவசியம் குறைவதில்லை. பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்,
தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன. இளவயதில் தேவையான அளவுக்குத் தூங்காதவர்களுக்கு நாற்பது வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடுகிறது. தேவையில்லாமல் கோபம் வருகிறது. எதிர்ப்படுபவர்களிடம் எல்லாம் எரிந்துவிழுந்து அவர்களின் தூக்கத்தையும் கெடுத்துவிடுகிறார்கள்.
ஒருவருக்குத் தொடர்ந்து தூக்கம் கெடும்போது பசி குறையும். அஜீரணம் தலைகாட்டும். உணவின் அளவு குறையும். உடல் எடை குறையும். பணியில் ஆர்வம் குறையும். பகல் முழுவதிலும் தூக்கக் கலக்கத்தில் இருப்பார்கள். அடுக்குக் கொட்டாவி வரும். சோர்வும் தலைவலியும் நிரந்தரமாகிவிடும். மாதக்கணக்கில் நல்ல தூக்கம் இல்லாதவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
தூக்கம் குறைவது ஏன்?
1900களில் எட்டு மணி நேரமாக இருந்த தூக்கமானது, இன்றைய அவசர உலகில், அரக்கப்பறக்க அதிகாலையில் எழுந்து பணிக்குச் செல்வதில் தொடங்கி இரவில் படுக்கையில் சாயும்வரை ஓய்வில்லாத ஓட்டக்களமாக உள்ள பரபரப்பான வாழ்க்கைமுறையில் ஆறு மணி நேரத்துக்கும் கீழாகக் குறைந்துவிட்டது என்கிறது ஓர் ஆராய்ச்சி முடிவு.
பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகிறவர்களில் அநேகருக்கு அலுவலக வேலை காரணமாக, இரவில் வரவேண்டிய உறக்கம், நள்ளிரவு தாண்டி இளங்காலைக்குத் தள்ளிப்போகிறது. அத்தோடு செல்போன் பார்ப்பது, தொலைக்காட்சி பார்ப்பது எனப் பல வழிகளில் இப்போது இரவுத் தூக்கம் தொலைகிறது.
கூட்டுக் குடும்பம் என்ற கலாச்சாரம் ஒழிந்துபோய் தனிக்குடித்தனம் என்ற கலாச்சாரம் வந்த பிறகு முதுமையில் பெரும்பாலானவர்களுக்குத் தனிமை என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது, இந்தத் தனிமை அவர்கள் தூக்கத்துக்கு வேட்டுவைக்கிறது.
‘வயதாகிவிட்டது, இனி உடற்பயிற்சி தேவையில்லை’ என நினைத்து முதுமையில் பலரும் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது தூக்கமின்மைக்குப் பாதை போடுகிறது.
இழப்பு, சோகம், கடன், நிதி வசதிக் குறைவு போன்றவற்றால் ஏற்படுகிற மனக்கவலை, மன அழுத்தம் போன்றவை இரவுத் தூக்கத்தைக் குறைக்கும். முதுமையில் ஏற்படுகிற மூட்டுவலி, ஆஸ்துமா, இதயநோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய், நெஞ்செரிச்சல், இரைப்பைப் புண், புராஸ்டேட் வீக்கம், குறட்டை போன்றவற்றாலும் தூக்கம் கெடும்.
பகலில் அதிக நேரம் தூங்கிவிட்டால் இரவில் தூக்கம் வருவது தாமதமாகும். இரவு நேரத்தில் அறை விளக்குகளை அணைத்துவிட்டு, டி.வி. பார்ப்பது, கணினியில் வேலை செய்வது போன்றவை கண்களைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் தூக்கத்தையும் பாதிக்கும்.
சில நோய்களுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகளாலும் தூக்கம் கெடுவதுண்டு. உதாரணத்துக்கு நீர் பிரியும் மாத்திரைகள். இரவில் காபி. தேநீர் அல்லது மது அருந்துவதும் தூக்கத்தைக் கெடுக்கும்.
இன்னும் சிலர் தூக்க மாத்திரைளை அவர்களாகவே மருந்துக் கடைகளில் வாங்கிச் சாப்பிடுவார்கள். ஒரு கட்டத்தில் அந்த மாத்திரையின் பக்கவிளைவால் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள்.
பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற ரத்தச்சோகை மற்றும் கெண்டைக்கால் தசைகள் இழுத்துக்கொள்வது ஆகியவற்றால் தூக்கம் கெடலாம். இதுபோல் ‘மெனோபாஸ்’ எனும் மாதவிலக்கு நின்றுபோன காலகட்டத்தில் தூக்கம் பாதிக்கப்படும். இவர்களுக்கு இந்தச் சமயத்தில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களால் தொடர்ச்சியாகத் தூங்க முடியாமல் இடையிடையே விழிப்பு உண்டாகி தூக்கம் கெடும்.
நல்ல தூக்கத்துக்கு என்ன செய்வது?
காலையில் விழித்தெழுவதும் இரவில் படுக்கப்போவதும் தினமும் அதேநேரத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பகல் தூக்கத்துக்கு அரை மணி நேரம் போதும். தூக்கப் பிரச்சினை உள்ளவர்கள் மாலையிலும் உடற்பயிற்சி செய்தால் இரவில் நல்ல தூக்கம் வரும். சீக்கிரமே தூங்கி, சீக்கிரமே விழிக்கின்ற பழக்கம் நல்ல தூக்கத்துக்கு வழிகொடுக்கும்.
தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை முடித்துக்கொண்டால் ஆழ்ந்த தூக்கம் வரும். இரவில் கொழுப்பு, மசாலா, காரம் மிகுந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கோக், காபி, தேநீர் மற்றும் குளிர்பானங்களைக் குடிக்க வேண்டாம். இவற்றில் விழிப்பைத் தூண்டுகிற ‘காஃபீன்’ எனும் வேதிப்பொருள் உள்ளது. இவற்றுக்குப் பதிலாக பால் சாப்பிடலாம்.
தூங்கச் செல்வதற்கு முன்பு சிறுநீர் கழித்துவிட வேண்டும். இரவு எட்டு மணிக்குப் பிறகு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டாம். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது, தியானம், யோகா செய்வது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது, ஓவியம் வரைவது, தோட்டம் வளர்ப்பது போன்றவற்றில் ஈடுபட்டால் மனம் அமைதி அடைந்து, தேவையில்லாத சிந்தனைகள் ஒழிந்து, நல்ல தூக்கத்துக்கு வழி செய்யும்.
குடும்பப் பிரச்சினை காரணமாக மன அழுத்தம் இருந்தால் நெருங்கிய நண்பர்களுடன் அடிக்கடி பேசும் பழக்கத்தைக் மேற்கொள்ளுங்கள். இப்படிப் பேசிவிட்டுத் தூங்கச் சென்றால் இரவுத் தூக்கம் அவ்வளவாக குறையாது. குளித்துவிட்டு உடனே தூங்கப் போனால் உறக்கம் நன்றாக வரும் என்று சிலர் நம்புகிறார்கள். இதில் சிறிய மாற்றம். தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு குளித்துவிடுவது நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
குறட்டைத் தொல்லை உள்ளவர்கள் அதற்குரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் ‘சிலீப் ஆப்னியா’ எனும் உறக்கத்தடை வந்து பொது ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
வேலை வேலை என்று எப்போதும் உழைப்பே கதி என்று இருப்பவர்கள் வாரத்தில் ஒரு நாளாவது மனதுக்கு இதம் தருகின்ற ஆரோக்கியப் பொழுதுபோக்குகளில் நேரத்தைச் செலவிட வேண்டும்.
முதிய வயதில் பலதரப்பட்ட நோய்கள் ஒரேநேரத்தில் பாதிப்பதால் பல்வேறு மாத்திரைகளைச் சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது அந்த மாத்திரைகளால் தூக்கம் கெடுமா என்பதைக் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்துக்கொள்வது நல்லது.
புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்தப் பழக்கத்துக்கு விடை கொடுப்பது மிக நல்லது. முடியாதவர்கள் இரவில் எட்டு மணிக்குப் பிறகாவது புகைபிடிக்காமல் இருப்பது நல்லது. மதுப்பழக்கமும் வேண்டாமே!
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் புராஸ்டேட் வீக்கம் உள்ள ஆண்களுக்கும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழியும். இதனால் தூக்கம் கெடும். இதைத் தவிர்க்க சர்க்கரை நோயை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். புராஸ்டேட் வீக்கத்துக்குத் தகுந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தூக்க மாத்திரை நல்லதா?
நன்றாக தூங்கி எழுவதற்குத் தினமும் தூக்க மாத்திரையைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், இது ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல. மாத்திரையின் வீரியம் குறையக் குறைய அதன் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். அதனால் உடலில் வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். தூக்க மாத்திரையைப் சாப்பிட்டுப் பழகிவிட்டால் தீடீரென அதை நிறுத்தவும் முடியாது. அப்படி நிறுத்தினால் தூக்கம் பாதிக்கப்படும்.
அதிக காலம் தூக்க மாத்திரையைப் பயன்படுத்தினால் ஞாபக மறதி ஏற்படும். பகலில் மயக்கநிலையை ஏற்படுத்தும் நடை தடுமாறும். மனக்குழப்பம் தலைகாட்டும். எனவே, முடிந்த அளவுக்குத் தூக்க மாத்திரையைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. அவசியம் தேவைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். பக்கவிளைவுகள் அதிகமில்லாத மாத்திரைகளை மருத்துவர்கள் தருவார்கள். அப்போது தூக்க மாத்திரைகளால் கெடுதல் அதிகம் ஏற்படுவதில்லை.
தொடர்புடைய கட்டுரைகள்
களைப்பு ஏற்படுவது ஏன்?
சிறுநீரகமும் சர்க்கரையும் ரத்த அழுத்தமும்!
சிறுநீரகக் கல் வலி: தப்பிப்பது எப்படி?
மூட்டுவலிக்கு முழுமையான தீர்வு
ஆண்களுக்கே உண்டான அவதி!
3
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.