கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

பக்கவாதம் வந்த பிறகு என்ன செய்வது?

கு.கணேசன்
04 Aug 2024, 5:00 am
0

‘அருஞ்சொல்’ வாசகர் ஒருவர் சென்ற வாரம் அலைபேசினார். ஊர், பெயர் வேண்டாம். அவருக்கு வயது 66. சென்ற மாதம் அவருக்குப் பக்கவாதம் வந்திருக்கிறது. நரம்புநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று ஓரளவு குணமடைந்துவருகிறார். அவருக்கு வலது கை, கால்கள் செயலிழந்துவிட்டன. பேச்சு குழறுகிறது. தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் உணவு விழுங்குவதில் சிரமம் இருக்கிறது. அவருக்கு ரத்தக்கொதிப்பும் சர்க்கரை நோயும் உண்டு. மாத்திரைகள் சாப்பிட்டுவருகிறார். அவருக்குப் புகைபிடிக்கும் வழக்கம் உண்டு. இப்போது மலச்சிக்கலும் உள்ளது; மன உளைச்சலும் உள்ளது. இனிமேல், அவர் எந்த மாதிரியான தற்காப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று என்னிடம் ஆலோசனை கேட்டார். 

இந்த வாசகரைப் போன்று இன்னும் பலர் பக்கவாதம் ஏற்பட்ட பின்னர் என்ன செய்வது என்ற கேள்வியுடன் இருப்பார்கள். ஆகவே, எல்லோருக்கும் பயன்படுகிற மாதிரி, அவருக்கு நான் சொன்ன ஆலோசனைகளையே இந்த வாரத்துக்குரிய விஷயமாக எடுத்துக்கொண்டேன்.

இதோ நான் சொன்ன பதில்:

முதுமையில் மக்களை அதிகமாக ஊனமாக்கும் நோய், பக்கவாதம். இதன் பாதிப்பால் செயலிழந்த கைகால்களை மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு மன உறுதி தேவை; தசைப்பயிற்சி உள்ளிட்ட தொடர் சிகிச்சைகள் தேவை. நோயாளிகள் நம்பிக்கையுடன் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால், நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஆனால், யானை வாங்கிவிட்டு அங்குசம் வாங்க யோசிக்கிறவர்கள்தான் இங்கே அதிகம்.

மருத்துவமனையில் இருக்கிறவரை நோயாளியைக் கவனிக்கின்றனர். வீட்டுக்கு வந்தபிறகு இந்தப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்ய யோசிக்கின்றனர். இதில்தான் தவறுசெய்கின்றனர். பெரும்பாலானோர் அவற்றுக்கு வழிசெய்யாமலும், அருகிலிருந்து கவனிக்க வசதி செய்யாமலும் பாதிக்கப்பட்டவரைத் தனிமையில் விட்டுவிடுகின்றனர். அந்தத் தனிமையே அவர்களுக்குப் பெரும் தண்டனையாகிவிடுகிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தசைப் பயிற்சிகள் முக்கியம்!

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு, வீட்டில் தசைப் பயிற்சிகள் மேற்கொள்ள ஓர் இயன்முறை மருத்துவரை ஏற்பாடு செய்ய வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் இதற்கு ஒதுக்க வேண்டும். பக்கவாதம் வந்தவர்களுக்குப் படுக்கைப் புண்கள் வரவாய்ப்பிருக்கிறது. இதை முதலில் தவிர்க்க வேண்டும். அதற்குப் படுக்கை நிலையில் கவனம் செலுத்த வேண்டும். மெலிதான தலையணையைத் தலைக்கு அடியில் வைத்துக்கொள்ளலாம். முழங்கை வரையிலும் கைக்குத் தலையணை வைத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் காலுக்கும் தலையணை வைத்துக்கொள்ளலாம். தோள்களும் தலையணையில் இருக்க வேண்டும்.

படுக்கைப் புண் வராமல் தடுக்க! 

ஒரே நிலையில் 2 மணி நேரத்துக்கு மேல் படுக்கக் கூடாது. படுக்கை விரிப்பைச் சுத்தமாகவும் சுருக்கங்கள் இல்லாமலும் வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை படுக்கை விரிப்புகளை மாற்றிவிட வேண்டும். ‘தண்ணீர்ப் படுக்கை’ (Water bed) நல்லது. சருமம் சிவப்பாகிறதா, சருமத்தில் புண் இருக்கிறதா எனத் தினமும் சோதித்துக்கொள்ள வேண்டும். எழுந்திருக்கும்போதும், உட்காரும்போதும், மற்றவர் உதவியுடன் மேற்கொள்வதே நல்லது. அல்லது படுக்கைக்கு அருகில் சுவரில் கைப்பிடிகளைப் பொருத்திக்கொண்டு, அவற்றைப் பிடித்து எழுந்து உட்காரலாம்.

தோள், முழங்கை, மணிக்கட்டு, விரல்கள், தொடை, முழங்கால், பாதங்கள் என வரிசையாக தசைப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் சில வாரங்களுக்கு இயன்முறை மருத்துவர் வீட்டிற்கே வந்து பயிற்சிகளை மேற்கொள்ள உதவலாம். அதன் பிறகு, நீங்களே அவற்றை மேற்கொள்ள முடியும். அல்லது வீட்டில் உள்ளவர்கள் இதற்கு உதவலாம்.

‘வாக்கர்’ உதவும்! 

பக்கவாதம் வந்தவர்களுக்கு உடல் சமன்பாட்டில் பிரச்சினை ஏற்படுவது வழக்கம். உதாரணமாக, படுக்கையைவிட்டு எழுந்திருக்கும்போது, உடல் ஒரு திசையில் இழுப்பதுபோன்று இருக்கும். இந்த நிலைமையைத் தவிர்க்கவும் தனிப்பயிற்சிகள் உண்டு. இயன்முறை மருத்துவர் உதவியுடன் இவற்றையும் மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து இந்தப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், சில வாரங்களில் ‘வாக்கர்’ கொண்டு நடக்கப் பழகிவிடலாம்.

பேச்சுப் பயிற்சி தேவை!

உணவை விழுங்குவதிலும் பேசுவதிலும் சிரமம் இருக்கிறது என்றால், இவற்றுக்கும் தனிப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இயன்முறை மருத்துவர் தொண்டை தசைகள் வலிமை பெற பயிற்சிகளைக் கற்றுக்கொடுப்பார். சாப்பிடும்போது உணவு புரையேறிவிடாமல் இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கேற்ப உணவுகளைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். மெல்வதற்கு எளிதான உணவுகளை சிறிதளவில் அடிக்கடி உண்ணலாம். பேச்சு - மொழி பயிற்றுநர் சுலபமாக உணவை விழுங்க வழி சொல்லுவார். பேச்சு தொடர்பான பிரச்சினைகளுக்கும் பயிற்சிகள் தருவார்.

பயனாளிக்குச் சிறுநீர் போக ரப்பர் குழாய் பொருத்தியிருந்தால், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அதை மாற்றிவிட வேண்டும். இல்லையென்றால், தொற்று ஏற்பட்டு, குளிர் காய்ச்சல் வர வாய்ப்பிருக்கிறது. ரப்பர் குழாய் இல்லாமல் இருந்தால், சிறுநீர்க்கசிவு ஏற்பட வழி உண்டு. இதற்குப் பெரியவர்களுக்கான டயாபர் மற்றும் பேன்டி பேடுகளை அணிந்துகொள்ளலாம். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பார்க்கின்சன் நோய்க்கு நவீன சிகிச்சை!

கு.கணேசன் 21 Jul 2024

எளிய உணவுகள் முக்கியம்! 

விழுங்குவதில் சிரமம் உள்ளவர்கள் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். முழுத்தானியக் கஞ்சி, பருப்புக் குழம்பு, அரைக்கப்பட்ட காய்கறி, கறி, பழம், நசுக்கப்பட்ட கிழங்கு, அரைவேக்காடு முட்டை, பிரக்கோலி, முட்டைக்கோஸ், சோயாபீன்ஸ், அவரை, பச்சை தேநீர், இலையுள்ள காய்கறிகள், ஓட்ஸ், தயிர், கிரில் செய்த மீன், பாலாடைக்கட்டி ஆகியவை சிறந்த உணவுகள். இவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.

மலச்சிக்கல் இருந்தால்? 

மலச்சிக்கல் இருந்தால், நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். நார்ச்சத்துள்ள முழுத்தானியங்கள், சிறுதானியங்கள், காய், பழம் தினமும் சாப்பிடுங்கள். மலச்சிக்கலை லகுவாக்கும் மாத்திரைகளையும் பயன்படுத்தலாம். மலம் கழிப்பதற்கு பெட்பேன் அல்லது கழிப்பறை நாற்காலி பயன்படுத்துங்கள். சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதற்கு கழிப்பறைக்குச் செல்வதாக இருந்தால், சுவரில் கைப்பிடிகளைப் பொருத்திக்கொள்வது நல்லது.

மனச்சோர்வை விரட்டுங்கள்!

மூலிகை மருந்துகள் மற்றும் மூலிகை தேநீர் வேண்டாம். இவை நீங்கள் சாப்பிட்டுவரும் சில மருந்துகளைச் செயலிழக்கச் செய்ய வாய்ப்பிருக்கிறது. பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு முக்கியப் பிரச்சினை மனச்சோர்வாகத்தான் இருக்கிறது. குளிப்பது, உடை உடுத்துவது, உணவு உண்பது போன்ற அன்றாடத் தேவைகளுக்குக்கூட மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியதிருக்கிறதே என்று நினைத்து வருத்தம் ஏற்படுவது இயல்புதான்.

இதையும் கடந்துவிடலாம். ‘நான் மறுபடியும் நடக்க ஆரம்பித்துவிடுவேன்’ என்று மன உறுதிகொள்ள வேண்டும். தினமும் தியானம் செய்வது மன உளைச்சலைக் குறைக்க உதவும். நண்பர்களுடன் அடிக்கடி பேசுங்கள். இசை கேளுங்கள். புத்தகம் படியுங்கள். முடிந்த பொழுதுபோக்குக் கலைகளில் ஈடுபட வேண்டியதும் முக்கியம்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சிரமப்படுத்தும் சிறுநீர்க் கசிவு

கு.கணேசன் 24 Apr 2022

மீண்டும் பக்கவாதம் ஏற்படாமல் இருக்க வழிகள்:

  • ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அளவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.
  • மருத்துவர் கூறும் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுங்கள். சுயமாக, அவற்றை நிறுத்துவதோ, குறைப்பதோ கூடாது.
  • புகைபிடிக்க வேண்டாம். மது அருந்த வேண்டாம்.
  • உப்பு, இனிப்பு, கொழுப்பு குறைந்த உணவுகளையே சாப்பிடுங்கள்.
  • உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ளுங்கள்.

நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை!

பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் நவீன சிகிச்சையாக தற்போது வந்திருக்கிறது, ‘ஸ்டென்ட் மீள் சிகிச்சை’ (Stent retriever therapy). ‘ஸ்டென்ட்’ என்பது பால்பாய்ண்ட் பேனாவில் இருக்கும் ஸ்பிரிங் மாதிரியான சிறிய வலைச்சுருள். மூளையில் ரத்தக்குழாய் அடைப்பு மிகவும் கடுமையாக இருந்தால், அதை மருந்துகளால் மட்டும் கரைக்க முடியாது. அப்போது ‘ஸ்டென்ட் சிகிச்சை’ தோள் கொடுக்கிறது.

நோயாளியின் தொடையில் இருக்கும் ரத்தக்குழாய் வழியாக ஒரு வளைகுழாய் இணைந்த ‘ஸ்டென்ட்’டை மூளைக்கு அனுப்பி, அடைப்புள்ள இடத்தை அடைந்ததும் ஸ்டென்டை விரியச்செய்து, ரத்தக்கட்டியைக் கவ்வி எடுத்து, ஸ்டென்டை உறுவிவிடுகிறார்கள். இதனால் அங்கே ரத்த ஓட்டம் மீள்கிறது. மூளையின் செல்கள் புத்துயிர் பெற, பாதிக்கப்பட்ட கை, கால்கள் முன்புபோல் இயங்குகின்றன.

இதையும் வாசியுங்கள்... 9 நிமிட வாசிப்பு

மலச் சிக்கலுக்குத் தீர்வு

கு.கணேசன் 06 Mar 2022

பக்கவாதம் வந்த 6 மணி நேரத்துக்குள் இதைச் செய்துவிட வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும். ஆனாலும், மூளையில் ரத்தக்கசிவால் பக்கவாதம் வந்தவர்களுக்கு இந்தச் சிகிச்சை பலன் தராது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

ரஅ பாதித்தால் பக்கவாதம் வரலாம்: சமாளிப்பது எப்படி?
பார்க்கின்சன் நோய்க்கு நவீன சிகிச்சை!
இரவுத் தூக்கம் குறைவது ஏன்?
சிரமப்படுத்தும் சிறுநீர்க் கசிவு
மலச் சிக்கலுக்குத் தீர்வு
களைப்பு ஏற்படுவது ஏன்?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


1






சமஸ் காமராஜர்காவல் துறைதத்தளிக்கும் சென்னை: அரசின் தவறு என்ன?மீன்பிடி கிராமம்பொதுவுடைமைவாசிப்புமதவெறிஅதீத வேலைபோராட்ட முறைமோடிகாலச்சுவடுஅசோகர் கல்வெட்டுகள்தமிழக காங்கிரஸ்மக்களவை தேர்தல்யோகி அதித்யநாத்அமுல் பொது மேலாளர் எஸ்.ஆர்.சோதி நேர்காணல்ஷாங்காய் நகரம்அசோக்வர்த்தன் ஷெட்டி ஐஏஎஸ் பேட்டிமதுரை வீரன் கதைஃபருக்காபாத்அண்ணன் பெயர்நகரமாதனிநபர் வருவாய்இலங்கைக்கு இவ்வளவு பொருளாதார நெருக்கடி ஏன்?பாரப் பாதைகுண்டர் அரசியல்தெலங்கானா ராஷ்ட்ர சமிதிஒன்றிய நிறுவனங்கள்தே. தாமஸ் பிராங்கோஉம்மன் சாண்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!