கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 7 நிமிட வாசிப்பு
ஹரியாணா: ஒடுக்கப்படும் பட்டியலினத் தலைவர்கள்
குமாரி செல்ஜா
இந்தியாவின் பன்மைத்துவ ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகளையும் சமூக இயக்கவியலையும் தீர்ப்பதில் சாதி முக்கியப் பங்கு வகிக்கிறது. சாதியப் படிநிலையில் தீவிரமாக ஊறியிருக்கும் இந்த வேளாண் மாநிலத்தில், இது தொடர்ந்து வெளிப்படுகிறது. மக்கள்தொகையில் பட்டியலினத்தவர் 20%. மக்கள் எண்ணிக்கையில் 25% இருக்கும் ஜாட் சமூகத்துக்கு அடுத்து இவர்கள்தான்.
இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக போன்ற தேசியக் கட்சிகளாலும் மாநிலக் கட்சிகளாலும் விழுங்கப்பட்டு உட்செரிக்கப்படுகிறவர்களும் பட்டியல் இனத்தவர்கள்தான். தனித்து வளரமுடியாமல் இந்தக் கட்சிகளுக்குள், பெரும் சோதனைகளுக்கு ஆளாகின்றனர் பட்டியலின மக்கள்.
பட்டியலினம் போன்ற சமூகங்களுக்கு ஏன் இந்த நிலைமை, விளிம்புநிலை சமுதாயங்களும் அரசியலில் தலைமைக்கு வருவதற்கு வேறென்னதான் வழிகள் என்ற கேள்விகள் எழுகின்றன. குமாரி செல்ஜா, அசோக் தன்வர் என்ற நன்கு அறிமுகமான பட்டியலினத் தலைவர்களின் அரசியல் பயணங்கள் ஓரளவுக்கு இந்தச் சிக்கல்களையும் இவர்களின் போராட்டங்களையும் வெளிக்கொண்டுவருகின்றன. ஹரியாணாவில் மட்டுமல்ல நாட்டின் எந்த மாநிலத்திலும் பட்டியலினத் தலைவர்களால் தலைமைப் பதவிக்கு இயல்பாக வருவது இயலாததாகவே தொடர்கிறது.
செல்ஜாவுக்கு சாதியத் தடைகள்
மிகவும் மதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சௌத்ரி தல்பீர் சிங்கின் புதல்வியான குமாரி செல்ஜா, காங்கிரஸ் கட்சியில் ராஜீவ் காந்தியின் தலைமையில் வளர்ந்தார். தந்தையின் புகழால் மட்டுமல்ல, சுயமான உழைப்பாலும் முக்கிய இடத்தைப் பிடித்தார். 1991இல் தேர்தலில் போட்டியிட்டதிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒன்றிய அமைச்சராகவும் பல்வேறு பதவிகளைத் திறம்பட வகித்தார். இவ்வளவுத் திறமையும் அர்ப்பணிப்பும் இருந்தும் கட்சியில், ஜாட் சமூகத்தவரின் தன்னிகரில்லாத் தலைவரான பூபிந்தர் சிங் ஹூடாவால் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்படுகிறார்.
ஹரியாணா சட்டமன்றத்துக்கு 2024இல் நடைபெறும் இந்தப் பொதுத் தேர்தலில் முதல் பட்டியலின முதல்வராகிவிட வேண்டும் என்ற அவருடைய ஆசை, காங்கிரஸ் கட்சிக்குள் மிகப் பெரிய சாதிப் பிளவையே தோற்றுவித்துவிட்டது. மொத்தமுள்ள 80 சட்டமன்ற இடங்களில் செல்ஜா ஆதரவாளர்களுக்கு 8 இடங்களும் ஹூடாவின் ஆதரவாளர்களுக்கு 72 இடங்களும் போட்டியிடத் தரப்பட்டுள்ளன. பட்டியலினத் தலைவர்களை மிகப் பெரிய சாதி கட்சிகளின் தலைவர்கள் எப்படித் தொடர்ந்து ஒடுக்குகின்றனர் என்பதற்கு இது நேரடி உதாரணம்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
அசோக் தன்வர்
அசோக் தன்வரின் அரசியல் பயணம், இந்த நெருக்குதல்கள் எவ்வளவு வலிமையானவை என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. சிர்ஸா மக்களவைத் தொகுதியிலிருந்து மிகவும் இளவயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் ஆன இவருடைய அரசியல் தொடக்கம், மிகப் பெரிய நம்பிக்கையைப் பட்டியலினத்தவருக்கு ஊட்டியது. ஆனால், ஹூடா போன்ற தலைவர்கள் இவரை வளரவிடாமல் தடுக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்து வெறுப்பூட்டினார்கள். கட்சியில் தொடர்ந்து அவமதிக்கப்படுவதாகவும் ஒதுக்கப்படுவதாகவும் மனம் வெதும்பிய தன்வர் 2022இல் காங்கிரஸிலிருந்து விலகினார்.
சிறிது காலம் ஆம்ஆத்மி கட்சியில் இருந்தார். அங்கும் பெரிய வரவேற்பு இல்லாததால் 2024 ஜனவரியில் பாஜகவில் சேர்ந்தார். 2024 மக்களவை பொதுத் தேர்தலில் செல்ஜாவுக்கு எதிராக பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டார் தன்வர். ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறியதாலும், பட்டியலினத்தவர் வெற்றிபெற அவர்களுடைய சமூகத்தவர் ஆதரவு மட்டும் போதாது என்பதாலும் தோல்வியைத் தழுவினார்.
தன்வர் இப்படி அடிக்கடிக் கட்சி மாறியதற்கு இன்னொரு காரணம் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவர்கள் மதிக்கப்படுவதில்லை, தங்களுடைய தகுதிக்கேற்ப உயர வேண்டும் என்ற முயற்சியை முறியடிப்பதில் சொந்தக் கட்சிக்காரர்களே முயல்வது முக்கிய காரணம்.
நில உடைமை மறுப்பு
ஹரியாணாவில் பட்டியலினத்தவர்களுக்கு அதிகாரம் மறுக்கப்படுவதற்கு அடிப்படையான சமூகத் தடை எது என்றால், பொருளாதாரரீதியாக அவர்கள் காலூன்றிவிடக் கூடாது என்பதற்காக நில உடைமையாளர்களாக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட வரலாறுதான். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பட்டியலினத்தவர்கள் நில உடைமையாளர்களாகக் கூடாது என்று ‘பஞ்சாப் நில உடைமை பராதீன சட்டம் - 1900’ இயற்றப்பட்டது. அது பட்டியலினத்தவரின் நில உரிமையைப் பறிப்பதைச் சட்டப்பூர்வமாக்கியது.
அந்தச் சட்டம் மக்களை ‘வேளாண் குடிகள்’ என்றும், ‘வேளாண்மை சாராத குடிகள்’ என்றும் இரண்டாகப் பிரித்தது. வேளாண் குடிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள் மட்டுமே நிலங்களுக்கு உரிமையாளர்களாக இருக்கலாம் என்று அறிவித்தது. இதனால் பட்டியலின மக்களால் கையில் பண வசதி இருந்தாலும் நிலங்களை வாங்க முடியவில்லை. நிலங்களை வைத்திருந்தவர்களாலும் அதை லாபகரமான விலைக்கு விற்க முடியவில்லை. இதனால் சமூகரீதியாக மட்டுமல்லாமல் பொருளாதாரரீதியாகவும் மேலும் விளிம்புநிலைக்குப் பட்டியலின மக்கள் தள்ளப்பட்டார்கள்.
இதன் விளைவாக, வலிமையான ஜாட் சமூகத்தவருடைய நிலங்களில், தொடர்ந்து குடிவாரதாரர்களாக (குத்தகை விவசாயிகள்) விவசாய வேலைகளைச் செய்ய நேர்ந்தது. ஜாட் சமூகத்தவரையே அண்டிப் பிழைத்ததால் தொடர்ந்து வறுமையில் ஆழ நேர்ந்தது. இந்த அநீதியைப் போக்க, ‘பீர் சுனர்வாலா நில உரிமை மீட்பு இயக்கம்’ 1973இல் சௌத்ரி சந்த் ராம் என்பவரால் தொடங்கப்பட்டது.
ஜஜ்ஜார் மாவட்டத்தின் பீர் சுனர்வாலா என்ற கிராமத்தில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் - ஹரியாணா, பஞ்சாப், கிழக்கு உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் - ஆயிரக்கணக்கான பட்டியலின மக்களைத் தன்பால் ஈர்த்தது. பட்டியலினத்தவர் அனைவரும் 113 நாள்களுக்குத் தொடர் நடைப்பயணம் மேற்கொண்டு டெல்லி தீன்மூர்த்தி பவனை அடைந்தனர். பட்டியலினத்தவரை இப்படித் தொடர்ந்து திட்டமிட்டு ஒடுக்குவதைக் கண்டித்த அவர்கள், பட்டியலின மக்களிடையே நில உடைமையின் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
நடைப்பயணம் மேற்கொண்ட 25,000க்கும் மேற்பட்ட பட்டியலினத்தவர்கள் திஹார், அலிகட், அம்பாலா சிறைகளில் அன்றைய ஆட்சியாளர்களால் அடைக்கப்பட்டனர். இந்தப் போராட்டம் இழந்த நிலங்களைப் பட்டியலின மக்கள் மீண்டும் பெற வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, பட்டியலின மக்களுக்கு அரசியல் ஈடுபாட்டை வளர்க்கவும், தங்களுடைய சமூக – பொருளாதார உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற உணர்வையும் ஊட்டத்தான்.
முதல் துணை முதல்வர்
இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு சௌத்ரி சந்த் ராம் முக்கியத்துவம் பெற்றார். ஹரியாணா அரசில் முதல் முறையாக துணை முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார். அவர் தன்னுடைய அரசியல் செல்வாக்காலும், அவர் நடத்திவந்த ‘நயா சமாஜ் கமாவ்’, ‘ஜகதா இன்சான்’ ஆகிய பத்திரிகைகள் வாயிலாகவும் பட்டியலின மக்களுக்குத் தொடர்ந்து அரசியல் விழிப்புணர்வு ஊட்டிவந்தார். பட்டியலின மக்களுக்கு நில உரிமையை ஓரளவுக்கு மீட்டித் தந்தாலும் அரசியலில் நிலவிய அதிகாரமிக்கவர்களின் வலிமையான கூட்டணியாலும் - சட்டத் தடைகளாலும் அவர் விரும்பிய அளவுக்கு ஹரியாணாவில் நிலச் சீர்திருத்தங்களைச் செய்ய முடியாமல் போனது.
‘பஞ்சாப் நில உடைமை பறிப்பு சட்டம் – 1900’ ஏற்படுத்திய விளைவு ஹரியாணாவில் இன்றளவும் பட்டியலின மக்களைப் பாதித்துக்கொண்டிருக்கிறது. ஆங்கில ஆட்சியின் சட்டமும் கொள்கைகளும் விளிம்புநிலை மக்களை இன்றளவும் முன்னேறவிடாமல் தடுக்கின்றன.
சமூக – அரசியல் களம்
ஹரியாணாவில் அரசியல் செல்வாக்கு மிக்க ஜாட்டுகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), முற்பட்ட சாதியினர் ஆகியோருடன் பட்டியலினத்தவரும் சமூக – அரசியல் பலன்களைப் பெற வேண்டி போட்டியிட வேண்டியிருக்கிறது. ஜாட்டுகள் நில உடைமைச் சமுதாயம் என்பதாலும் மக்கள்தொகையிலும் வாக்காளர் பட்டியலிலும் உள்ள எண்ணிக்கை காரணமாகவும் ஆதிகாலம் தொட்டே பொருளாதார, அரசியல் வலிமையுடன் தொடர்கின்றனர்; 1960களிலும் 1970களிலும் ஏற்பட்ட ‘பசுமைப் புரட்சி’ அவர்களுடைய இந்த வலிமையை மேலும் பல மடங்காக உயர்த்திவிட்டது. இந்தப் பொருளாதார வளர்ச்சியையே அவர்கள் தங்களுடைய சமூக – பொருளாதார நிலை மேலும் உயர பயன்படுத்திக்கொண்டதுடன், நிரந்தர அரசியல் அதிகாரத்துக்கும் வழிசெய்துகொண்டனர்.
பட்டியலின மக்கள் வளர்ச்சிக்காக பிற சமுதாயங்களை அண்டி நிற்பவர்களாகவும் அவர்களால் புறக்கணிக்கப்படும் நிலையில் விளிம்புநிலை சமுதாயமாகவும், வரம்புக்குள்பட்ட அரசியல் முக்கியத்துவத்துடன் வாழ்கின்றனர். பிற சமூகத்தவருடன் பட்டியலினத்தவர்கள் கடந்த காலத்தில் ஏற்படுத்திக்கொண்ட அரசியல் கூட்டுகளால் அதிகாரத்தை ஓரளவுக்குப் பகிர்ந்துகொள்ள முடிந்தது; சட்டமன்றத்திலும் மக்களவையிலும் உள்ளாட்சி மன்றங்களிலும் பிரதிநிதித்துவ எண்ணிக்கையைச் சற்றே உயர்த்திக்கொள்ள மட்டுமே முடிந்தது.
காங்கிரஸ் முயற்சி
பட்டியலினத்தவருடன் முழு அளவில் கூட்டுவைக்க காங்கிரஸ் தலைமை முயன்றது. பட்டியலின மக்களுடைய நல்வாழ்வுக்குக் கொள்கைகளை வகுத்தது, பிரதிநிதித்துவத்தை அதிகரித்தது. ஆனால், அதையெல்லாம் கட்சிக்குள் செல்வாக்குப் பெற்றிருந்த ஜாட் சமூகத்தவர் நீர்த்துப்போகச் செய்தனர். சமூக – பொருளாதாரக் கட்டமைப்பில் பட்டியலினத்தவருக்கும் மற்றவர்களுக்கும் இடையிலிருந்த அசமத்துவத்தை நீக்க காங்கிரஸ் தலைமையால் நேர்மையான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் போனது.
பட்டியலினத்தவருக்கும் பிற சமூகங்களுக்கும் இடையிலான உறவு சிக்கலானது. ஜாட் சமூகத்தவர் தங்களுடைய மேலாதிக்கத்தை எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதால், இரு சமூகங்களுக்கும் இடையே உறவில் உரசல்கள் இருந்துகொண்டேவருகின்றன. ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ (ஓபிசி) மக்கள்தொகையில் 30% இருக்கின்றனர், அவர்களும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அரசியல் பிரதிநிதித்துவத்துக்காகவும் ஜாட் மற்றும் பட்டியலின மக்களுடன் தொடர்ந்து போட்டி போடுகின்றனர். சிடுக்கான இந்தச் சமூக இழைப் பின்னலால் அரசியல் அதிகாரம் பெற நம்பகமான தோழமைச் சமூகத்தைத் தேர்ந்தெடுக்க முடியாமல் பட்டியலின மக்கள் தடுமாறுகின்றனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
பட்டியலின மக்களை அரசியல் அதிகாரத்துக்காக ஒட்டுமொத்தமாகத் திரட்ட முடியாமல் அவர்களின் வெவ்வேறு பிரிவினரிடையே நிலவும் பிளவுகளும், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள சமீபத்திய தீர்ப்பும் தடுக்கின்றன. பட்டியலின மக்களிலேயே ‘உயர் வருவாய்ப் பிரிவின’ரை அடையாளம் காணவும், இதுவரை அதிக பயன்களைப் பிரியாத உட்பிரிவினருக்குக் கூடுதல் கவனம் செலுத்தவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ள ஆலோசனை, புதிய பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் நோக்கம், இதுவரை பயன்களைப் பெறாத பட்டியலின சமூகத்து மக்களுக்கும் அது கிடைக்க வேண்டும் என்பதாக இருந்தாலும், அது பட்டியலின சமூகத்துக்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்திவருகிறது. ஓரளவுக்கு வசதியும் முன்னேற்றமும் அடைந்துள்ள பட்டியலினத்தவர்கள் அவற்றையெல்லாம் இழந்துவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர். இதனால் பட்டியல் சமூகத்துக்குள்ளே ஒற்றுமையும் குலைந்துவருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அமல்செய்ய ஹரியாணா மாநில பாஜக அரசு தீர்மானித்ததும் இந்தப் பிளவுகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள பட்டியலின மக்கள் இதில் தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோள், பட்டியலின மக்களிடையே அரசியல் விழிப்புணர்விலேயே வேறுபாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்படிப் பட்டியலினத்தவர்கள், சலுகை பெற்றவர்கள் – பெறாதவர்கள் என்று பிரிவது அவர்களுடைய கூட்டுபேர வலிமையைத்தான் மேலும் குறைக்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 21இல் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நடத்தப்பட்ட ‘பாரத் பந்த்’ போராட்டத்துக்குப் பட்டியலின மக்களிடையே ஓரளவுக்குத்தான் ஆதரவு கிடைத்தது என்பது அவர்களிடையே பிளவு ஏற்பட்டுவிட்டது என்பதைக் காட்டும் அடையாளம். பெரிய அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டங்களுக்கு ஒட்டுமொத்தமான ஆதரவை வழங்கவில்லை; எங்கு தேர்தல்கள் அறிவிக்கப்பட்டனவோ - எங்கு உடனடியாக அரசியல் தேவை இருக்கிறதோ அங்கு மட்டும் ஆதரவை உரத்து அறிவித்தன.
பீம் ஆர்மி
சந்திரசேகர் ஆஸாதின் ‘பீம் ஆர்மி’ (பீம்ராவ் அம்பேத்கர் சேனை) இப்போது பட்டியலின மக்களிடையே ஆதரவைப் பெற்று வளர்கிறது. பட்டியலின மக்களை ஒற்றுமைப்படுத்துவதில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் பட்டியலின மக்களுடைய வாக்குகளையும் ஆதரவையும் குறிவைத்து இப்படி ஒரே சமயத்தில் பலர் கிளம்புவது அந்த சமூக மக்களுக்குக் குழப்பத்தை ஊட்டுவதல்லாமல், வலுவான இயக்கமாக உருவெடுக்க முடியால் தடுக்கிறது.
‘விளிம்புநிலை மக்களைத் திரட்டுவது’ (Mobilizing the Marginalized) என்ற தலைப்பில் அமித் அஹுஜா ஒரு புத்தகம் எழுதியுள்ளார். ஒற்றுமை மிக்க அரசியல் இயக்கங்களை நடத்த முடியாமல் பட்டியலினச் சமூகங்களுக்குள்ளேயே பிரிவுகளும் பொருளாதாரரீதியிலான பிரச்சினைகளும் தடுக்கின்றன என்று அதில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அரசியல் அதிகாரத்தைப் பட்டியல் சமூகங்கள் கைப்பற்ற வேண்டுமென்றால் இந்தக் குறையை கண்டிப்பாக சரிசெய்துகொள்ள வேண்டும்.
காங்கிரஸில் என்ன நிலை?
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வெகு காலமாகவே பட்டியலின மக்களின் ஆதரவில்தான் அதிக வெற்றிகளைப் பெற்றுவருகிறது. ஆனால், கட்சியிலும் ஆட்சியிலும் ஜாட் சமூகத்தவர்களுக்குத்தான் செல்வாக்கு அதிகம். இதனால் பட்டியலின மக்களுக்குப் பிரதிநிதித்துவமும் முக்கியத்துவமும் குறைந்துவிடுகிறது. ‘பாரத் ஜோடோ’ யாத்திரையாலும், சாதிகளையும் சேர்த்தே மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையாலும் பட்டியலின மக்களிடையே ஆதரவை அதிகரித்துக்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. சாதி அடிப்படையிலான அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு இது தனிச் செல்வாக்கையும் பெற்றுத்தந்திருக்கிறது.
சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து வலியுறுத்துவதன் மூலம் பட்டியலின மக்கள் உள்பட அனைத்து விளிம்புநிலை மக்களும் சமூகநீதி, பொருளாதார சமத்துவம் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ராகுல். சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் எந்தெந்தச் சாதியினர் எந்த அளவுக்குப் பின்தங்கியிருக்கிறார்கள் என்று தெரியும், அதைக் கொண்டு அவர்களுடைய முன்னேற்றத்துக்கு உரிய வகையில் திட்டமிடவும் கொள்கைகளை வகுக்கவும் முடியும்.
ராகுல் காந்தியின் சமூகநீதி ஆதரவுக் கொள்கையும் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் முழக்கமும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஜாட் சமூகத்தவரின் மனங்களை இளகவைக்கும், பட்டியல் இனத்தவர்கள் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற உதவும்.
தேசிய அரசியலில் ஜாட் போன்ற வலிமைமிக்க சமுதாயங்களுக்கு அதிக வாய்ப்புகளைத் தருவதன் மூலம், ஹரியாணாவில் பட்டியலினத் தலைவர்களுக்கு உரிய மாற்று வாய்ப்புகளைக் காங்கிரஸ் கட்சியால் அளிக்க முடியும். பொருளாதார தாராளமயக் கொள்கையால் தங்களுக்குப் பொருளாதாரரீதியாக வீழ்ச்சி ஏற்பட்டதாலும் மண்டல் பரிந்துரைப்படி இடஒதுக்கீடுகளை அமல்படுத்தியதால் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வளர்ச்சி அதிகரித்ததாலும்தான் ஜாட் சமூகத்தவர்கள் தங்களுக்கும் ‘இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்’ என்ற அந்தஸ்து தேவை என்று போராடினர் என்று ஜாப்ரலோட்டு, ஆறுமுகம் ஆகியோர் தங்களுடைய ஆய்வுகள் மூலம் தெரிவித்துள்ளனர்.
ஜாட்டுகள் தங்களுடைய வேலைவாய்ப்புகளுக்கும் வருமானத்துக்கும் நிலங்களைத்தான் அதிகம் நம்பியிருக்கின்றனர். இப்போது விவசாயத்தில் வருமானம் குறைந்துவருகிறது. கையிலிருக்கும் செல்வத்தைப் புதிய வீடுகள், வாகனங்கள் என்று முதலீடு செய்வதாலும் சமூகத்தின் புதிய போக்கு காரணமாகவும் தங்களுடைய குழந்தைகளுக்கும் நல்ல கல்வி, பாதுகாப்பான உயர் வருமான வேலை ஆகியவை அவசியம் என்று ஜாட்டுகள் கருதுகின்றனர்.
ஜாட்டுகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பட்டியலினத்தவர் ஆகியோர் தங்களுக்குள் மோதிக்கொள்வதாலும் எதிர்த்து அரசியல் செய்வதாலும் தேர்தல் வெற்றிகளைக் குவித்துவிட முடியாது. விளிம்புநிலையில் உள்ள மக்கள் நல்ல கல்வியறிவையும் வேலைவாய்ப்பையும் பெறுவதன் மூலம் சமூக பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண முடியும்.
பாஜகவின் ஓபிசி உத்தி
ஹரியாணாவில் ஜாட்டுகள், பாஜக எதிர்ப்பில் தீவிரமாக இருப்பதால் ஜாட்டுகள் அல்லாத இதர பிரிவினர் குறிப்பாக ஓபிசிகளை வளைத்திருக்கிறது பாஜக. ஜாட் அல்லாத சமூகத் தலைவர்களைக் கட்சிக்கும் ஆட்சிக்கும் தேர்வுசெய்வது அதனால்தான். மனோகர் லால் கட்டாரை 2014இல் முதல்வராக்கியதன் மூலம் ஜாட்டுகளின் மேலாதிக்கத்தைக் குறைத்தது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவரிடையே சமூக கூட்டணியை உருவாக்கியது.
‘நோ பார்ச்சி – நோ கார்ச்சி’ (வேண்டியவர்களுக்கு சலுகையும் இல்லை – லஞ்சமும் இல்லை) என்று சொல்லி அரசு வேலைவாய்ப்புகளை வழங்கியது. ஜாட்டுகளின் மேலாதிக்கத்தால் மனம் வெதும்பியிருந்த வாக்காளர்களைக் கவரும் வகையில், அரசு வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் ஜாட்டுகளே அதிகம் பெறும் முறையை முடிவுக்குக் கொண்டுவந்தது.
பட்டியலின மக்களிடையே ஓரளவுக்கு பாஜக செல்வாக்குப் பெற்றிருந்தாலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீது அது செலுத்தும் கூடுதல் கவனத்தால் பட்டியலின மக்கள் தொடர்ந்து சந்தித்துவரும் சமூக – பொருளாதார சவால்களுக்கு அதனால் இதுவரை தீர்வு காண முடியவில்லை. ஆனால், ஜாட்டுகளுக்கு எதிரான உணர்வு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – பட்டியலினத்தவரிடையே அரசியல் ஒற்றுமைக்கு ஓரளவு வழிவகுத்திருக்கிறது.
நயாப் சைனி என்ற ஓபிசி தலைவரை முதல்வராக பாஜக நியமித்திருப்பது, அந்தப்பிரிவு வாக்குகளை அப்படியே முழுதாக கவர்ந்துவிடத்தான். அசோக் தன்வரை கட்சியில் சேர்த்து அவர் விலகிவிட்டாலும் நன்கு பிரபலமான பட்டியலினத் தலைவர் எவரும் பாஜகவில் இப்போது இல்லை.
வழி என்ன?
வரலாற்றுரீதியிலான பின்னடைவுகள், சமூகக் கட்டுமானம் ஏற்படுத்தியுள்ள தடைகள், நிகழ்கால சவால்கள் என்று வெவ்வேறு பிரச்சினைகள் பட்டியலின மக்களிடையே வலிமையான தலைமை உருவாகாமல் தடுத்துவருகிறது. பட்டியல் இன மக்களுடைய பொருளாதார உரிமைகள் பறிப்பு, உள்சமூகப் பிளவுகள் ஆகியவற்றுக்குத் தீர்வு கண்டாக வேண்டும், நன்கு ஒருங்கிணைந்து செயல்படும் இயக்கமாக தலித் மக்கள் ஒன்று திரள வேண்டும், அரசியலில் தங்களுக்குரிய இடத்தை அவர்கள் உரிமையுடன் கேட்டுப் பெற வேண்டும்.
தலித் சமூகத்தின் கவலைகளைப் போக்க பெரிய அரசியல் கட்சிகள் தவறிவிட்டன. தலித் சமூகத் தலைவர்களுடன் காங்கிரஸும் பாஜகவும் சிலவற்றுக்கு மட்டும் இணைந்து செயல்படுவதால் அந்தச் சமூகத்தவரின் நலன்கள் முழுதாக காக்கப்படப்போவதில்லை.
பட்டியலினத்தவருக்குள் உள்ஒதுக்கீடு தேவை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்தும், பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாகவும் பெரிய கட்சிகள் கள்ள மௌனம் சாதிக்கின்றன. தலித்துகள் தங்களுக்குள் ஒற்றுமைப்பட்டு வலுவான இயக்கத்தை உருவாக்கினால்தான் அவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். ‘வெற்றிக்காகவோ வேறு எதற்காகவோ அடுத்தவர்களை நம்பியிருந்தால் அவர்கள் சொல்வதை எல்லாம் செய்ய வேண்டியிருக்கும்’ என்று கூறினார் கான்சி ராம். அரசியலில் பட்டியலினத்தவர் வெற்றிபெற வேண்டுமென்றால் சுய வலிமை பெற்றாக வேண்டும். அதன் பிறகே வெற்றிக் கூட்டணியை ஏற்படுத்த முடியும்.
பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுத்துக்கொண்டே இதர விளிம்புநிலை சமூகத்தவருடன் கூட்டணி அமைக்க வேண்டும். பொருளாதார அதிகாரம், அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை வலியுறுத்தியபடியே நீண்ட கால சமூக, பொருளாதார மாற்றங்களை உருவாக்கவல்ல அரசியல் இயக்கத்தை வளர்க்க முடியும்.
பட்டியலினத் தலைவர்கள் தங்களுடைய மக்கள்தொகை எண்ணிக்கையை அரசியல் அதிகாரமாக மாற்ற, தங்களுக்குள் இருக்கும் பிளவுகளைச் சரிசெய்ய வேண்டும். சரியான அரசியல் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பொருளாதார முன்னேற்றம், நிலச் சீர்திருத்தம், கல்வி ஆகியவற்றை வலியுறுத்தி அரசியல் இயக்கத்தை உருவாக்கிவிட முடியும். வரலாற்றுரீதியாக ஏற்பட்ட தடைகளை அதன் மூலம்தான் உடைக்க முடியும், ஹரியாணாவில் அரசியல் இருப்பை வலிமையானதாக மாற்ற முடியும்.
சுருக்கமாகத் தமிழில்: வ.ரங்காசாரி
© த வயர்
தொடர்புடைய கட்டுரைகள்
‘தற்செய’லாகப் பீறிடும் சாதிவெறி!
மேட்டிமை குடிகளுக்கு மட்டுமானதா இடஒதுக்கீடு?
கார்கே: காங்கிரஸின் நம்பிக்கை எடுபடுமா?
விளிம்புநிலை: ஆழப் பார்வை தேவை
சாதியத்தை ஒழிக்க நினைத்த லோகியா
சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்
பொருளாதார நிபுணர்களும் உண்மை போன்ற தகவல்களும்
வி.பி.சிங்: காலம் போடும் கோல்
ஜாட் சமூகத்தின் செல்வாக்கு என்ன?
தமிழில்: வ.ரங்காசாரி
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.