கட்டுரை, அரசியல், பொருளாதாரம், தொழில் 4 நிமிட வாசிப்பு

முதலீடுகளைத் தடுப்பது எது?

ப.சிதம்பரம்
06 Oct 2024, 5:00 am
0

செய்தித் தொலைக்காட்சிகளில் ‘பிரேக்கிங் நியூஸ்’ என்று பரபரப்பான செய்திக்கு முக்கியத்துவம் தருவார்கள். நான் சொல்வதும் ‘பிரேக்கிங் நியூஸ்’தான், ஆனால் வித்தியாசமானது; சட்டத்தைக் கைகளில் எடுக்கும் செய்தியோ, போராடும் மக்களின் மண்டைகளை உடைக்கும் செய்தியோ, வீடுகளை புல்டோசர்களால் இடிக்கும் செய்தியோ அல்ல. கடந்த காலங்களில் பல முறை வெளியிடப்பட்ட - பழைய செய்தியும் அல்ல.

வன்முறை சார்ந்த குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்று ‘தேசிய குற்றப்பதிவேடு அலுவலகம்’ (என்சிஆர்பி) அதிகரித்துவரும் எண்ணிக்கைகளைத் தெரிவிக்கும்போது, அது சட்டம் மீறப்படுவது பற்றிய புதிய தரவாகும். தங்களைத் தாங்களே சட்டக் காவலர்களாகக் கருதிக்கொள்ளும் ‘குண்டர்கள் சேனை’ மதம் கடந்த காதலில் ஈடுபடும் ஜோடியையோ – சந்தேகத்தின் பேரில் அப்பாவியையோ அடித்துத் துவைப்பது, தலைகளையும் எலும்புகளையும் உடைத்து நொறுக்கும் ‘பிரேக்கிங்’ செய்தியாகும். ‘சட்ட விரோத ஆக்கிரமிப்புகள்’ என்று சில குடியிருப்புகளையும் வணிக நிறுவனங்களையும் அறிவித்து, புல்டோசர்களால் இடித்துத் தரைமட்டமாக்குவது வீடுகளை உடைக்கும் செய்தியாகும். 

மாண்புமிகு பிரதமர், எதிர்க்கட்சிகளை – குறிப்பாக காங்கிரஸ் கட்சியை – ‘நாட்டைத் துண்டு துண்டாக பிளக்க நினைக்கும் கும்பல்கள்’ என்றும் ‘நகர்ப்புற நக்ஸல்கள்’ என்றும் அழைக்கும்போது அந்தச் செய்தி - கேட்போரிடமிருந்து பெரிய கொட்டாவியையே எதிர்வினையாகப் பெறுகிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

நம்பிக்கைகளையும் இதயங்களையும் நொறுக்கும் செய்தி

நான் இப்போது உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகும் முக்கியச் செய்தி, உங்களுடைய நம்பிக்கைகளையும் இதயங்களையும் பிளப்பதாக இருக்கக்கூடும். கே.வி.காமத் மிகச் சிறந்த தனித்துவமான வங்கித் துறை நிபுணர். ஐசிஐசிஐ வங்கியை இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியாக உருவாக்கியவர். ‘பிரிக்ஸ்’ அமைப்பு உருவாக்கிய ‘புது வளர்ச்சி வங்கி’ - முதல் தலைவர். 2047இல் முன்னேறிய பாரதமாக (விக்சித் பாரத்) திகழ, இந்தியா செல்ல வேண்டிய பாதை எது என்பதை சமீபத்திய புத்தக விமர்சனக் கட்டுரையில் அவர் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

புத்தகத்தை எழுதியுள்ள கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனை அன்போடு பாராட்டி, முன்னணி நாளிதழில் அந்த விமர்சனக் கட்டுரையை எழுதியிருக்கிறார். “அவநம்பிக்கைகள் மிகுந்த பழைய தளைகளை உடைத்துக்கொண்டு இந்தியா மீள வேண்டும், எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் துணிச்சலுடன் இலக்குகளைப் பெரிதாக நிர்ணயிக்க வேண்டும், இதற்கு ஆழமான சிந்தனை அவசியம்” என்று நூலாசிரியர் எழுதியிருப்பதை வரவேற்றுள்ளார். 

“ஆண்டுக்கு 12.5% என்ற விகிதத்தில் இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பு – ஜிடிபி (அமெரிக்க டாலர் மதிப்பில்) இருக்க வேண்டும், ஒவ்வொரு ஆறு ஆண்டுகளிலும் அந்த வளர்ச்சியும் இரட்டிப்பாக வேண்டும், அப்படியிருந்தால் 2023இல் 3.28 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களாக இருக்கும் ஜிடிபி, 2047இல் 55 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களாக உயரும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். இது நிச்சயம் இந்தியாவால் அடையக்கூடிய இலக்குதான்” என்று நூலாசிரியரின் கருத்தை வழிமொழிந்திருக்கிறார் காமத். அந்தக் கருத்தை நானும் முழுமனதாக ஏற்கிறேன், அப்படி உயர் அளவு வளர்ச்சியைப் பெறுவது சாத்தியமே என்று நானும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு பெருக எதையுமே செய்யவில்லை

ப.சிதம்பரம் 08 Sep 2024

கொடுக்கில் இருக்குது விஷம்

அப்படி அசுர வளர்ச்சி பெறுவது இயலும் என்றால் அதைச் சாதிக்க முடியாமல் இருப்பவை எவை என்பதை காமத் அந்தக் கட்டுரையின் கடைசி ஆறு பாராக்களில் சொல்லிவிட்டார். இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய ‘நான்கு தூண்க’ளை அவர் பட்டியலிட்டிருக்கிறார். பொருளாதார வளர்ச்சியில் பேரியியல் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம், அனைவருக்கும் பயன்கள் கிடைக்கும் வகையிலான சமூக - பொருளாதார அரவணைப்பு, தனியார் துறையினர் நேர்மையான வகையில் செல்வ வளக் குவிப்பில் ஈடுபடல், தனியார் முதலீட்டால் சொடுக்கப்படும் தொழில் வர்த்தக வளர்ச்சியின் சுழற்சி ஆகியவையே அவை. காமத் சுட்டிக்காட்டும் நான்கு தூண்கள் இந்த ஆட்சியில் எப்படி இருக்கின்றன என்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

வளர்ச்சியில் அக்கறை காட்டும் பேரியியல் பொருளாதாரம்: பேரியியல் பொருளாதார வளர்ச்சி நன்றாக பராமரிக்கப்படுவதைக் காட்டும் அடையாளங்கள் அரசின் வரவு – செலவு பற்றாக்குறை, பணவீக்க விகிதம், வங்கிகள் தரும் கடனுக்கான வட்டி வீதம், நடப்புக்கணக்கு பற்றாக்குறை (ஏற்றுமதி - இறக்குமதி), கடனுக்கும் மொத்த உற்பத்தி மதிப்புக்கும் இடையிலான விகிதம். மொத்த உற்பத்தி மதிப்பில் 3% அளவுக்கு நிரந்தர வைப்புத்தொகை என்ற இலக்கை எட்ட அரசு நிறைய தொலைவு பயணித்தாக வேண்டும், பணவீக்க விகிதம் இப்போதும் 4% என்ற அளவுக்கு மேல் இருக்கிறது, ரிசர்வ் வங்கியின் ‘ரெபோ’ வட்டி விகிதம் 2022 மே மாதத்திலிருந்தே 6.5% ஆக இருக்கிறது.

நடப்புக்கணக்கு பற்றாக்குறை (ஏற்றுமதி மதிப்பைவிட இறக்குமதி மதிப்பு அதிகம்) 2023 - 2024லும் 23.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் மிகப் பெரிதாகவே இருக்கிறது. இருப்பினும் வெளிநாடுகளிலிருந்து இந்தியர்கள் அனுப்பும் தொகை ஓரளவுக்கு நம்மை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. கடனுக்கும் மொத்த உற்பத்தி மதிப்புக்கும் இடையிலான விகிதம் 18.7% - ‘அதாவது சமாளிக்கலாம்’ என்ற நிலை. இதில் அரசின் நிர்வாகம் சிலதில் நன்றாகவும் சிலவற்றில் மோசமாகவும் இருக்கிறது.

சமூக – பொருளாதார அரவணைப்பு: மோடி அரசின் மிகப் பெரிய தோல்வி, மக்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் போக்கத் தவறுவதே ஆகும். சலுகைசார் முதலாளியம் (ஒட்டுண்ணி முதலாளியம்), அதிக முதலீடு தேவைப்படும் மூலதனத் துறைகளில் மட்டுமே அரசின் அதிக முதலீடு, தொழில் நிறுவனங்கள் மீதான (கார்போரேட்) வரி விகிதக் குறைப்பு, மக்கள் அதிகம் நுகரும் பொருள்கள் மீது அதிக வரி, எரிபொருள்களின் அதிக விற்பனை விலை, மக்களுடைய வாழ்க்கைத் தரத்தைப் பராமரிக்க முடியாத குறைந்தபட்ச ஊதியம், குத்தகை விவசாயிகள் (பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்கள்) புறக்கணிப்பு, ஏழைகள் நுகரும் சேவைகளைக்கூட குறைவாகவே செய்துதரும் அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை (உதாரணத்துக்கு நடுத்தர, பணக்கார பயணிகளின் வசதிகளுக்கு ‘வந்தே பாரத்’ ரயில்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, ஏழைப் பயணிகள் செல்லும் முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து குறைப்பது), அரசின் இதரக் கொள்கைகளும் மக்களிடையேயான ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கவே உதவுகிறது; இதனால் இந்திய சமூகத்தில் உச்சியில் உள்ள 1% பெரும் பணக்காரர்களுடைய வருமானத்துக்கும் – சொத்து மதிப்புக்கும், கடைநிலையில் உள்ள 20% பரம ஏழைகளின் மொத்த வருமானம், சொத்து மதிப்பு ஆகியவற்றுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு பெரிதாகிக்கொண்டேவருகிறது.

ஆள்வோரின் வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளாலும் நடவடிக்கைகளாலும் மக்களிடையே வகுப்புவாத மோதல்கள் அதிகரித்து, சமூக ஒற்றுமையும் அரவணைப்பும்கூட மோசமாக பாதிக்கப்பட்டுவருகின்றன. காமத் அடையாளம் காட்டும் இரண்டாவது தூண், உறுதியிழந்து, ஆடிக்கொண்டிருக்கிறது.

தனியார் துறையில் நெறிமுறைக்குட்பட்ட செல்வக் குவிப்பு: வங்கிகளில் கடன் மோசடிகளும் பெரிய தொழில் நிறுவனங்கள் திவாலாவதும் கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துவிட்டன. வங்கிகள் திவால் – நொடிப்பு நடைமுறை நடவடிக்கையானது வங்கிகளில் வாங்கி திருப்பி அடைக்காமல் விட்ட பெருந்தொகைக் கடன்களை வஜா (ரத்து) செய்வதற்கும், அப்படி நிர்வாகத்தில் தோற்ற நிறுவனங்களை வேறு நிறுவனங்கள் எளிதாக கைப்பற்றவுமே கருவியாகப் பயன்படுகிறது. திவால் நடைமுறை நடவடிக்கை மூலம், வாராக் கடன்களில் 32% மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த வாராக் கடன்களை வசூலிக்கும் பொறுப்பை தங்கள் வசம் எடுத்துக்கொண்டவர்கள், நல்ல லாபமும் சம்பாதித்துள்ளனர்.

நாள்தோறும் அதிகரித்துக்கொண்டேவரும் அரசின் கட்டுப்பாடுகள், அடிக்கடி தலையிடும் அரசின் நடைமுறைகள், மிகவும் கொடூரமான வரி வசூலிப்பு நிர்வாகம் ஆகியவை, நேர்மையாகச் செயல்பட நினைக்கும் தொழில்முனைவோர்களை மனம் கலங்கச் செய்துவிடுகின்றன. இளம் தொழில்முனைவோர்கள் இங்கிருந்தே வெளிநாடுகளில் முதலீடுசெய்கின்றனர் அல்லது இந்தியாவைவிட்டே வெளியேறுகின்றனர். இந்தியாவிலிருந்து 4,300 கோடீஸ்வரர்கள் சமீப காலங்களில் வெளியேறியுள்ளனர் (ருசிர் சர்மா – ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’). தொழில் நிறுவனங்களிடையே போட்டியை ஊக்குவிக்க நியமிக்கப்பட்ட ஆணையம், ஏகபோக முதலாளிகளும் சில்லோர் முதலாளிகளும் (ஆலிகாபொலி) உருவாகவே ஊக்கமளித்துக்கொண்டிருக்கிறது.

விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொலைத்தகவல் தொடர்பு, எண்ணெய் சுத்திகரிப்பு, சூரியஒளி மின்னுற்பத்தி ஆகிய துறைகளில் மிகச் சில நிறுவனங்கள்தான் போட்டியாளர்களாக களத்தில் இருக்கின்றன. சிமென்ட், உருக்கு, மின்னுற்பத்தி, சில்லறை வணிகம் ஆகியவற்றிலும் போட்டி நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டு, ஏகபோகமாகவோ சில்லோர் முதலாளியமாகவோ மாறிக்கொண்டிருக்கின்றன. உற்பத்தி, விற்பனையில் ஆரோக்கியமான போட்டிகள் நிலவும் சந்தைக்கு இந்தப் போக்குகள் சாதகமானவை அல்ல, அப்படிப்பட்ட துடிப்புமிக்க பொதுச் சந்தையே நேர்மையான முறையில் தனியார் துறை செல்வம் குவிக்க தகுதியானது என்பது அனுபவம்.  

தனியார் முதலீட்டில் தொய்வு – மெய்நிகர் சுழற்சி: அரசு பலவகைகளிலும் வேண்டியும், சலுகைகள் அளித்தும், கெஞ்சியும் – கொஞ்சியும், சில வகைகளில் எச்சரித்தும்கூட தொழில் துறையில் தனியார் முதலீடு அரசின் முதலீட்டைவிட பின்தங்கியே இருக்கிறது. தொழில்முனைவோரை இந்த அரசு நம்பவில்லை என்பதால் - இந்த அரசையும் தொழில்முனைவோர் நம்ப மறுக்கின்றனர்.

துப்பாக்கி முனைத் திருமணம் என்பதைப் போல, சில நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களால் மிரட்டியே சேர்த்துக்கொள்ளப்படுகின்றன; கேள்விக்குரிய வழிகளில் சிறு நிறுவனங்களை பெரிய நிறுவனங்கள் கையகப்படுத்துகின்றன என்பதால் தொழில் துறை சூழல் கெட்டிருக்கிறது. 2000வது ஆண்டுக்குப் பிறகு 8,000க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரில் பதிவுசெய்துகொண்டுள்ளன.

அரசின் புலனாய்வு முகமைகள் அன்றாடம் ஏதேனும் ஒரு தொழில் நிறுவனத்தில் நுழைந்து திடீர் சோதனைகளை நடத்துவதால் தொழில்முனைவோர் அனைவருமே அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியப் பொருளாதாரம் சிறக்க, முதலீட்டை அதிகரிப்பதில் உங்களுக்குள்ள தடைகள் என்ன என்று நிதியமைச்சர் 2022 செப்டம்பரில் தொழில்முனைவோர்களிடம் நேரிலேயே கேட்டார்.

இந்த விவகாரங்கள் குறித்து நமக்கு விளக்க மிகவும் தகுதியானவர் காமத்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

பெரும் பணக்காரர்கள் மீது கூடுதல் வரியா?
‘வளமான’ பாரத பட்ஜெட் இதுவல்ல!
நவதாராளமயத்தால் அதானி குழுமம் அசுர வளர்ச்சி!
அரசியல் அகராதிக்குப் புதுவரவு ‘மோதானி’
ஜிடிபி - வேலைவாய்ப்பு: எது நமது தேவை?
வேலைவாய்ப்பு பெருக எதையுமே செய்யவில்லை

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






ஆற்றல்ஆசிரியர் தலையங்கம்முதல் தியாகி நடராசன்இரைப்பைப் புற்றுநோய்காந்தி - அம்பேத்கர்பேருந்துஅம்பேத்கரின் நினைவை எப்படிப் போற்றுவது?ராஜாஜி அண்ணாவிவிபாட் இயந்திரம்பிற்போக்குத்தனம்இன ஒதுக்கல்சீனத்தின் சதுரங்கப் பாய்ச்சல்வேளாண் சட்டங்கள்முத்தலாக்ஜோ பைடன்குடியரசுஅத்தியாவசிய கனிமங்கள் தேடல் எப்படி இருக்கிறது?ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்: காலம் வெளி கடந்த மனிதன்thiruma interviewதன்னாட்சிமகுடேசுவரன் கட்டுரைசர்வாதிகார நாடாகிறதா இந்தியா?இயக்கக் கோட்பாடுமுதல் பதிப்பாளர்வானவியல்லட்சியவாதம்பேரறிவாளனுக்கான கொண்டாட்டம்: அபாயகரமான தமிழகத்தின்ஐசோடோப்மதுக் கொள்கைஆயிரம் ஆண்டு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!